Updates from November, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • என். சொக்கன் 9:22 pm on November 30, 2013 Permalink | Reply  

    இசைத் தமிழ் நீர் செய்த அருஞ்சாதனை 

    • படம்: காதல் மன்னன்
    • பாடல்: மெட்டுத் தேடி
    • எழுதியவர்: வைரமுத்து
    • இசை: எம். எஸ். விஸ்வநாதன்
    • பாடியவர்: எம். எஸ். விஸ்வநாதன்
    • Link: http://www.youtube.com/watch?v=N0XuO3alLV8
    மெட்டுத் தேடித் தவிக்குது ஒரு பாட்டு
    அந்தப் பாட்டுக்குள்ளே துடிக்குது ஒரு மெட்டு
    அதைக் கண்ணதாசன் கண்டு சொன்னா ரசிக்காதா?
    இல்லை விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா?

    மெட்டுக்குப் பாட்டா அல்லது பாட்டுக்கு மெட்டா?

    இசைக்கு வரிகள் மேன்மை தருகின்றனவா? அல்லது வரிகளுக்கு இசையால் பெருமையா?

    தமிழின் மிகச் சிறந்த இசையமைப்பாளர் : கவிஞர் இணையை முன்வைத்துக் கேட்டால், கண்ணதாசனுக்கு விஸ்வநாதன் ஆதாரமா? அல்லது விஸ்வநாதனுக்குக் கண்ணதாசனா?

    இக்கேள்விக்கு ஒரு பதில்தான் இருக்கவேண்டுமா? பட்டிமன்றம் பாணியில் “இரண்டும்” என்று சொல்லமுடியாதா?

    தமிழில் இசை கொண்டாடப்பட்ட அளவு கவிதை கொண்டாடப்படவில்லை என்பது என் ஆதங்கம். குறிப்பாக திரைப்பாடல் வரிகள்!

    மானே, தேனே மீட்டர் வரிகளைத் தாண்டியும், சொல்லப்போனால் அந்தக் கட்டாயங்களுக்குள்ளாகவே படச் சூழலுக்கு இசைந்தபடி நம் திரைக் கவிஞர்கள் பெருஞ்சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். அவற்றைக் கம்பனோடும் இளங்கோவோடும் ஒப்பிட்டுத் தரக்குறைவாகப் பேசுவதைவிட, இதுவும் ஒரு கலை வடிவம் என ஏற்பதில் என்ன தயக்கம்?

    மற்ற கலைகளைப்போலவே இங்கும் பொழுதுபோக்கு உண்டு, உன்னதம் உண்டு, மொக்கைகளும் உண்டு. எல்லாவற்றையும் ரசிக்கும் மனம் இருக்கவேண்டுவதில்லை, வடிகட்டி வேண்டியதை எடுத்துக்கொள்ளலாம், எடுத்துக்கொள்ளவேண்டும்.

    ஏனெனில், மெட்டில்லாத பாட்டு, பாட்டில்லாத மெட்டு இரண்டையும்விட, மெட்டுடன் பாட்டு தனி சுகம். புரிந்தவர்கள் பாக்கியவான்கள்!

    தமிழின் அத்துணை திரைப் பாடலாசிரியர்களுக்கும் மனப்பூர்வமான நன்றி சொல்லி நாலு வரி நோட்டிலிருந்து விடை பெறுகிறேன் 🙂

    ***

    என். சொக்கன் …

    30 11 2013

    363/365

     
    • rajinirams 11:00 am on December 1, 2013 Permalink | Reply

      அருமை.”மானே,தேனே மீட்டர் வரிகளைத் தாண்டியும், சொல்லப்போனால் அந்தக் கட்டாயங்களுக்குள்ளாகவே படச் சூழலுக்கு இசைந்தபடி நம் திரைக் கவிஞர்கள் பெருஞ்சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். அவற்றைக் கம்பனோடும் இளங்கோவோடும் ஒப்பிட்டுத் தரக்குறைவாகப் பேசுவதைவிட, இதுவும் ஒரு கலை வடிவம் என ஏற்பதில் என்ன தயக்கம்?” -உண்மையான வரிகள்.
      தமிழ் திரையுலகில் மெட்டுக்கு பாட்டும் சரி,பாட்டுக்கு மெட்டும் சரி பாடல் வரிகளை விழுங்காத இசைக்கு எப்போதும் வெற்றி தான்.இதை தான் வாலி ஓரிரு முறை மேடையில் “தங்க தட்டில் வைத்த சிங்க பால்”என்று சொல்லியிருக்கிறார்.மெட்டுக்கு பாட்டு இல்ல துட்டுக்கு தான் பாட்டு என்று நகைச்சுவையாகவும் கூறியுள்ளார்.ஆனால் இது வரை என்னை ஆச்சர்யப்படுத்தியது கப்பலோட்டிய தமிழன் படத்திற்காக பாரதியாரின் பாடல்களுக்கு (“மெட்டுக்கு எழுதியது போலவே தோன்ற வைக்கும் “) இசையமைத்த திரு ஜி.ராமநாதன் அவர்கள் தான்.உண்மையிலேயே இசை மேதை. மேலும் பல இசையமைப்பாளர்களும் பாடல் வரிகள் வரும்போது அடக்கி வாசித்து பாடலுக்கும் கவிஞருக்கும் பெருமை தேடி தந்திருக்கிறார்கள்.
      பல நல்ல நல்ல பாடல்களை “நாலு வரி நோட்டில்” கொண்டு வந்து பரவசப்படுத்திய தங்களுக்கும் திரு ஜி.ராகவன்,திரு மோகனகிருஷ்ணன் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடன் தங்கள் அருமையான கருத்துக்களை பகிர்ந்து கொண்ட amas32, Uma Chelvan இருவருக்கும் பாராட்டுக்கள். நன்றி.

    • amas32 7:06 pm on December 2, 2013 Permalink | Reply

      //ஏனெனில், மெட்டில்லாத பாட்டு, பாட்டில்லாத மெட்டு இரண்டையும்விட, மெட்டுடன் பாட்டு தனி சுகம். புரிந்தவர்கள் பாக்கியவான்கள்!//

      This is the crux of 4varinote!

      தினம் ஒரு பா #365 முடிந்தபோது ஒரு வெற்றிடம் தோன்றியது. நீங்கள் #4varinote ஆரம்பித்தப் பொழுதும் முதலில் எனக்கு அவ்வளவு ஈடுபாடு வரவில்லை. ஆனால் நீங்கள் செய்த இந்தப் பணி மகத்தானது. இப்பொழுது இருக்கும் கவிஞர்களை ரசிக்க சொல்லி கொடுத்தீர்கள். சங்ககாலப் பாடல்கள் ஒரு வகை என்றால் இன்றைய திரைப்பாடல்கள் இன்னொரு வகை.

      மேலும் மேலும் புகழ் பெற வாழ்த்துகள் 🙂

      amas32

  • என். சொக்கன் 11:59 pm on November 27, 2013 Permalink | Reply  

    வானவில் ஆடை 

    • படம்: ரோஜா
    • பாடல்: சின்னச் சின்ன ஆசை
    • எழுதியவர்: வைரமுத்து
    • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
    • பாடியவர்கள்: மின்மினி, ஏ. ஆர். ரஹ்மான்
    • Link: http://www.youtube.com/watch?v=YpMK2UYmgw8

    சேற்று வயல் ஆடி, நாற்று நட ஆசை,

    மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை,

    வானவில்லைக் கொஞ்சம் உடுத்திக்கொள்ள ஆசை,

    பனித்துளிக்குள் நானும் படுத்துக்கொள்ள ஆசை!

    ’உடை’ என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்தது ‘உடுத்தல்’ என்ற செயல். இதே வரிசையில் வரும் ‘உடுப்பு’ என்பதும் மிக அழகான சொல். ஆனால் ஆடை சார்ந்த மற்ற சொற்களோடு ஒப்பிடும்போது இவற்றை நாம் பேச்சில் குறைவாகவே பயன்படுத்துகிறோம்.

    உண்மையில் ‘உடுப்பு’ என்பது ‘உடுபு’ என்ற கன்னடச் சொல்லில் இருந்து வந்தது என்கிறார் பாவாணர். அப்படியானால் ‘உடுத்தல்’ என்ற பெயர்ச்சொல்லும் அதன்பிறகுதான் வந்திருக்கவேண்டும்.

    பழந்தமிழ்ப் பாடல்களில் ‘உடுத்தல்’க்கு நிறைய மரியாதை இருக்கிறது. உதாரணமாக: நீர் ஆரும் கடல் உடுத்த நில மடந்தை, உண்பது நாழி, உடுப்பது இரண்டே!

    சினிமாப் பாடல்களைப் பொறுத்தவரை, ’பட்டுடுத்தி’ என்ற சொல் மிகப் பிரபலம் (பட்டு உடுத்தி), மற்றபடி இடுப்புக்கு எதுகையாக இருந்தும் உடுப்பைக் கவிஞர்கள் அதிகம் விரும்பாதது பெருவிநோதம்.

    முந்தின வரியில் இரட்டை அர்த்தம் ஏதுமில்லை என்பதையும் சொல்லிவிடுகிறேன் 😉

    ***

    என். சொக்கன் …

    27 11 2013

    360/365

     
    • Uma Chelvan 12:51 am on November 28, 2013 Permalink | Reply

      “காஞ்சி பட்டுடுத்தி கஸ்துரி பொட்டும் வைத்து ”

    • amas32 3:33 pm on November 28, 2013 Permalink | Reply

      உடுப்பு என்ற சொல் எனக்கு ஏனோ uniformஐ நினைவுப் படுத்தும். உடுத்தி என்பது அழகிய பிரயோகம். ஆனால் புடைவை கட்டிக் கொண்டு வருகிறேன் என்றும் வேட்டி சட்டைப் போட்டுக் கொண்டு வருகிறேன் என்றே பேச்சு வழக்கில் வந்து விட்டது. உடுத்தி என்ற சொல்ல ஆரம்பிக்க வேண்டும் 🙂

      உப்புமா கன ஜோர்!

      amas32

    • Saba-Thambi 10:17 pm on November 28, 2013 Permalink | Reply

      உடுப்பு, உடுத்தல் என்பன யாழ்ப்பாணைத்தில் தாராளமாக பாவிக்கப்படும் சொற்கள்.

      அப்போ திருக்குறளில் வரும் உடுக்கை என்ற சொல் ?

    • rajinirams 3:11 am on November 29, 2013 Permalink | Reply

      ஆம்.நீங்கள் சொன்னது போல் உடுத்தி என்ற வார்த்தையை பயன்படுத்தியது இல்லை.சேலை”கட்டும்”பெண்ணுக்கொரு,நீ பட்டுப்புடவை”கட்டிக்கொண்டால்”ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்.சேலை”மூடும்”இளஞ்சோலை,நீலச்சேலை கட்டிக்கொண்ட சமுத்திரப்பொண்ணு, இப்படி பல.

  • என். சொக்கன் 11:19 pm on November 24, 2013 Permalink | Reply  

    கவலைப்படாதே சகோதரா! 

    • படம்: ஆனந்த ஜோதி
    • பாடல்: காலமகள் கண் திறப்பாள் சின்னையா
    • எழுதியவர்: கண்ணதாசன்
    • இசை: விஸ்வநாதன், ராமமூர்த்தி
    • பாடியவர்: பி. சுசீலா
    • Link: http://www.youtube.com/watch?v=lYKYBy6Qzfs

    சின்னச் சின்ன துன்பமெல்லாம்

    எண்ண எண்ணக் கூடுமடா!

    ஆவதெல்லாம் ஆகட்டுமே,

    அமைதி கொள்ளடா!

    கண்ணதாசனின் பல பாடல்களைப் படிக்கும்போது அல்லது கேட்கும்போது, இவர் ஒரு மனோதத்துவ நிபுணராக இருப்பாரோ என்று சந்தேகம் வரும். இந்தப் பாடல் அந்த வகைதான்.

    ஒரு சின்னக் கல்லைச் சிறிது நேரம் கையில் வைத்திருந்தால் வலி ஏற்படாது, அதையே அதே நிலையில் சில மணி நேரங்கள் வைத்திருந்தால் கஷ்டம்தான்.

    ’நாம் சந்திக்கிற துன்பங்களெல்லாம் அப்படிதான்’ என்று ஒரே போடாகப் போட்டுவிடுகிறார் கண்ணதாசன். ’சிறிய கல்லைக்கூடப் பெரிய பாறையாக்குவது நம் எண்ணங்கள்தான், என்ன நடந்தாலும் சமாளிக்கலாம் என்று அமைதியாக இருப்போம்!’ என்று எளிய சொற்களில் தெளிவாகச் சொல்லிவிடுகிறார்.

    ஒரு சிறுவனைப் பார்த்து நாயகி பாடுவதாக வரும் இந்தப் பாடலில் பாதி தன்னம்பிக்கை, மீதி கடவுள் நம்பிக்கை. ‘கல்லிருக்கும் தேரைக்கெல்லாம் கருணை தந்த தெய்வம், கனி இருக்கும் வண்டுக்கெல்லாம் துணை இருந்த தெய்வம், நெல்லுக்குள்ளே மணியை, நெருப்பினிலே ஒளியை உள்ளுக்குள்ளே வைத்த தெய்வம் உனக்கு இல்லையா? தம்பி, நமக்கு இல்லையா?’ என்கிற வரிகளைக் கேட்டு நம்பிக்கை பெறும் அந்தச் சிறுவர், பி(இ)ன்னாள் நா(த்தி)யகர் கமலஹாசன்!

    அதனால் என்ன? கண்ணதாசனும் முன்னாள் நாத்திகர்தானே!

    ***

    என். சொக்கன் …

    24 11 2013

    357/365

     
    • uma chelvan 2:22 am on November 25, 2013 Permalink | Reply

      அந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்து விடும்
      அன்பு மொழி கேட்டு விட்டால் துன்ப நிலை மாறிவிடும்…………அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்……………

      இந்த அன்பு மொழிக்குதான் எவ்வளவு சக்தி. ஆறாத வருத்தத்துக்கு, மாறாத கோபத்துக்கு, தீராத நோயிக்கு ” நான் எப்பொழுதும் உன்னுடன் இருக்கிறேன்/ இருப்பேன் என்ற ஒரு சொல்லே உறவுகளின் மீதும் வாழ்கையின் மீதும் மீண்டும் நம்பிக்கை துளிர்க்க செய்கிறது.
      “எவ்வளவு கோபம் இருந்தாலும் ஒரு மீன் இன்னொரு மீனை தூக்கி தரையில் போடுவதில்லை” இதை இப்பொழுதுதான் வேறு ஒரு இடத்தில் படித்தேன். Humans are the only species go out of their way to hurt others.

    • rajinirams 6:16 pm on November 25, 2013 Permalink | Reply

      அருமையான பதிவு. கவியரசரின் “ஆறுதல் தரும்” வரிகள்.எம்ஜியாரை திரையுலகில் “சின்னவர்” என்று தான் சொல்லுவார்கள். அதனாலும் “சின்னையா”என்று கவியரசர் எழுதியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.

    • amas32 7:40 pm on November 25, 2013 Permalink | Reply

      //சின்னச் சின்ன துன்பமெல்லாம்

      எண்ண எண்ணக் கூடுமடா!//

      முற்றிலும் உண்மை. பிறர் நம்மை தவறாகவோ கொபமகாகவோ பேசியதை அந்தக் கணத்தில் நாம் feel பண்ணியதை விட நினைத்து நினைத்து மருகும் போது தான் கனக்கிறது மனம். இதைத் தவிர நாம் இப்படி பதில் சொல்லியிருக்கணும் அப்படி பதில் சொல்லியிருக்கணும் என்று லேட்டாக ஞானோதயம் வேறு ஏற்பட்டு மனத்தை கலங்கவைக்கும்.

      எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் சிலர் இருப்பார். ஒன்றுமே அவர்கள் மேல் ஒட்டாது toughlan மாதிரி. கொடுத்து வைத்தவர்கள் 🙂

      கமல் நாத்திகர் என்று தன்னை பிரகடனப் படுத்திக் கொண்டாலும் என்னால் அவரை நாத்திகர் என்று சொல்ல முடியாது 🙂

      amas32

  • என். சொக்கன் 9:36 pm on November 20, 2013 Permalink | Reply  

    மலரும் அன்பு 

    • படம்: பாண்டிய நாடு
    • பாடல்: ஒத்தைக்கடை
    • எழுதியவர்: வைரமுத்து
    • இசை: டி. இமான்
    • பாடியவர்கள்: சுராஜ் சந்தோஷ், ஹரிஹரசுதன்
    • Link: http://www.youtube.com/watch?v=BaG0wq-23lQ

    ஜெயிச்சா இன்பம் வரும், தோத்தா ஞானம் வரும்,

    இதான் மச்சி லவ்வு! இது இல்லா வாழ்க்கை ஜவ்வு!

    நாரும் பூ ஆகும்டா, மச்சி

    மோரும் பீர் ஆகும்டா!

    ’பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்’ என்பது நம் எல்லாருக்கும் தெரிந்த பழமொழி. வாசனை எதுவும் இல்லாத நாரில்கூட, அதனால் கட்டப்பட்டுள்ள பூக்களின் வாசனை சேர்ந்துவிடும் என்பதுதான் இதன் அர்த்தம்.

    அங்கிருந்து அப்படியே ஒரு டைவ் அடித்துத் திருக்குறளுக்குச் செல்வோம். இந்தப் பாடலைப் பாருங்கள்:

    நாணாமை, நாடாமை, நார் இன்மை யாது ஒன்றும்

    பேணாமை பேதை தொழில்

    அதாகப்பட்டது, பேதைங்களோட வேலைகள் என்னென்ன தெரியுமா?

    1. கெட்டதைச் செய்யறமேன்னு வெட்கப்படமாட்டாங்க : நாணாமை

    2. நல்லதைத் தேடமாட்டாங்க : நாடாமை

    3. அவங்ககிட்ட நார் இருக்காது : நார் இன்மை

    4. நல்லபடியாப் பார்த்துக்கவேண்டிய நல்ல குணங்களைப் பராமரிக்கமாட்டாங்க : பேணாமை

    மற்றதெல்லாம் புரிகிறது. அதென்ன ‘நார் இன்மை’? நார் இல்லாமல் எப்படி பூவைக் கட்டுவார்கள்? அது என்ன வயர்லெஸ் பூமாலையா?

    தமிழில் ‘நார்’ என்ற சொல்லுக்கு அன்பு என்றும் அர்த்தம் உண்டு. அதைதான் திருவள்ளுவர் இங்கே பயன்படுத்துகிறார். ‘நார் இன்மை’ என்றால், அன்பு இல்லாத மனம் என்று அர்த்தம்.

    இன்னொரு ரிவர்ஸ் ஜம்ப் அடித்து பழமொழிக்குத் திரும்பி வாருங்கள். இப்போது ‘பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும்’ என்றால் என்ன அர்த்தம்?

    காதலிக்குப் பூ வாங்கிக் கொடுத்தால், அவளுக்கு உன்மேல் அன்பு பிறக்கும், அதுவும் அந்த பூவைபோலவே, அந்தப் பூவைப்போலவே மணம் வீசும்!

    அப்புறமென்ன? உடனே ஓடுங்க பூக்கடைக்கு!

    ***

    என். சொக்கன் …

    20 11 2013

    353/365

     
    • kekkepikkuni 9:47 pm on November 20, 2013 Permalink | Reply

      நாரும் பூ ஆகுமடா. அருஞ்சொற்பொருள் [எனக்குப் புரிந்த அளவில்:-] அன்பும் ஃப்ப்ப்பூன்னு போயிடும். அல்லது, அன்பூ ஆகிடும். 🙂

    • amas32 10:00 pm on November 20, 2013 Permalink | Reply

      இன்று தான் பாண்டிய நாடு பார்த்தேன் 🙂

      நார்=அன்பு இன்று புதிதாகக் கற்றுக் கொண்டேன், நன்றி 🙂

      மோர் எப்படி பீர் ஆகும், ரொம்ப நாள் சந்தேகம்.

      amas32

    • rajinirams 10:38 am on November 21, 2013 Permalink | Reply

      ஆஹா,பிரமாதம் சார். “நார்”கலந்த நன்றி:-))

    • Chandsethu 7:59 pm on November 21, 2013 Permalink | Reply

      “அப்புறமென்ன? உடனே ஓடுங்க பூக்கடைக்கு!” சொக்கன் ஸ்டைல் :))))

  • என். சொக்கன் 10:50 pm on November 18, 2013 Permalink | Reply  

    உத்தரவின்றி உள்ளே வா 

    • படம்: ஜில்லுன்னு ஒரு காதல்
    • பாடல்: முன்பே வா
    • எழுதியவர்: வாலி
    • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
    • பாடியவர்கள்: நரேஷ் ஐயர், ஷ்ரேயா கோஷல்
    • Link: http://www.youtube.com/watch?v=OHA_ATdgw_g

    நீ நீ மழையில் ஆட,

    நான் நான் நனைந்தே வாட,

    என் நாளத்தில் உன் ரத்தம்,

    நாடிக்குள் உன் சத்தம்!

    பள்ளியில் தமிழ் மீடியத்தில் அறிவியல் (அல்லது உயிரியல்) படித்தவர்களுக்கு இந்த வரிகளைப் படித்தவுடன் சட்டென்று அந்த ‘நாளம்’ என்ற சொல்லில் மனம் சென்று நிற்கும்.

    ’ரத்தக் குழாய்’ என்று நாம் பரவலாகச் சொல்லும் அதே வார்த்தைதான். ’ரத்த நாளம்’ என்று சொன்னால் இன்னும் அழகாக இருக்கிறது. நாளத்திற்கும் குழாய்க்கும் ஏதேனும் நுட்பமான வேறுபாடு உண்டா என்று தெரியவில்லை.

    அப்புறம் அந்த நாளமில்லாச் சுரப்பிகள்? தமனி? சிரை? தந்துகி? இந்த வார்த்தைகளையெல்லாம் கேட்கும்போது, மறுபடி ஒன்பதாங்கிளாஸுக்குத் திரும்பிவிடமாட்டோமா என்றிருக்கிறது!

    விஷயத்துக்கு வருவோம். நம் உடம்பு நிறைய இருக்கும் ரத்த நாளங்கள் பேச்சிலோ, சினிமாப் பாடல்களிலோ அதிகம் வருவதில்லை என்று நினைத்தேன். கொஞ்சம் தேடினால் ஒரு சில நல்ல உதாரணங்கள் சிக்கின:

    உயிர் உருகிய அந்த நாள் சுகம்,

    அதை நினைக்கையில்,

    ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும் (வாலி)

    ***

    நாளங்கள் ஊடே

    உனதன்பின் பெருவெள்ளம் (மதன் கார்க்கி)

    ***

    ரத்த நாளங்களில் போடும் தாளங்களில்

    புதுத் தாலாட்டுதான் பாடுமா? (பொன்னியின் செல்வன்)

    ***

    மேளங்கள் முழங்குதுங்க, ரத்த

    நாளங்கள் துடிக்குதுங்க (டி. ராஜேந்தர்)

    ***

    ஒரே ஒரு ஆச்சர்யம், ”அறிவியல் கவிஞர்” வைரமுத்து இந்தச் சொல்லை இதுவரை பயன்படுத்தவில்லையோ?

    ***

    என். சொக்கன் …

    18 11 2013

    351/365

     

     
    • Uma Chelvan 6:52 am on November 19, 2013 Permalink | Reply

      நாளமில்லாச் சுரப்பிகள்……..endocrine glands ….that’s what I taught my students today. What a coincident….

      அஞ்சு நாள் வரை அவள் பொழிந்தது ஆசையின் மழை!!
      அதில் நனைந்தது நூறு ஜென்மங்கள் நினைவினில் இருக்கும் -அது போல்
      இந்த நாள் வரும் உயிர் உருகிய அந்த நாள் சுகம். – அதை நினைக்கையில்
      ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும் ………ஒரு நிமிஷம் கூட என்னை பிரியவில்லை

      மிக மிக அருமையான பாடல். இதை தான் முதல் பாடலாக நீங்க சொல்லி இருக்கீங்க!!! still I want to post this song again !!!

    • amas32 8:37 pm on November 19, 2013 Permalink | Reply

      எவ்வளவு ஆராய்ச்சிப் பண்ணியிருக்கீங்க ஒரு பதிவுக்கு! வைரமுத்து இந்த சொல்லை பயன்படுத்தவில்லை என்னும் அளவுக்கு research!

      //என் நாளத்தில் உன் ரத்தம்,// very romantic!

      ரொம்பப் பிடிச்சிருக்கு இந்த போஸ்ட் 🙂

      amas32

    • rajinirams 11:28 am on November 20, 2013 Permalink | Reply

      நல்ல பதிவு. என்ன அருமையான வாலியின் வரிகள் -உயிர் உருகிய அந்த நாள் சுகம்,அதை நினைக்கையில்,ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும்,நீங்கள் சொன்னது போல வைரமுத்து அந்த வார்த்தையை உபயோகிக்காதது ஆச்சர்யமே.

    • நவநீதன் 9:34 pm on January 29, 2014 Permalink | Reply

      ”வந்து தூறல் போடு… இல்லை சாரல் போடு… எந்தன் நாளம் நனையட்டுமே…”

      வைரமுத்து

      படம்: க.கொ.க.கொ
      பாடல்: ஸ்மை யாயி..

  • என். சொக்கன் 10:53 pm on November 16, 2013 Permalink | Reply  

    யாவும் நீ 

    • படம்: கரகாட்டக்காரன்
    • பாடல்: மாரியம்மா, மாரியம்மா
    • எழுதியவர்: கங்கை அமரன்
    • இசை: இளையராஜா
    • பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், கே. எஸ். சித்ரா
    • Link: http://www.youtube.com/watch?v=tOUyOklDqkY

    மண்ணுக்குள் நீ நல்ல நீரம்மா,

    காத்தும், கனலும் நீயம்மா,

    வானத்தப் போல் நின்னு பாரம்மா,

    வந்தேன் தேடி நானம்மா!

    நிலம், நீர், காற்று, நெருப்பு, வானம் என்கிற ஐம்பூதங்களும் நீயாக இருக்கிறாய் என்று பாடுவது பக்தி இலக்கியத்தில் அடிக்கடி வெளிப்படும் அம்சங்களில் ஒன்று.

    உதாரணமாக, ‘நிலம், நீரொடு ஆகாசம், அனல், கால் ஆகி நின்று’ என்று சிவனைக் குறிப்பிடுவார் திருஞானசம்பந்தர். ’நிலம், கால், தீ, நீர், விண் பூதம் ஐந்தாய்’ என்று பெருமாளை அழைப்பார் திருமங்கையாழ்வார். இப்படி இன்னும் ஏராளமான உதாரணங்களைச் சொல்லமுடியும்.

    அதே மரபை மாரியம்மனுக்கும் எளிய சொற்களில் பொருத்தி சினிமாப் பாடலாகத் தருகிறார் கங்கை அமரன். ’மண் தொடங்கி விண்வரை அனைத்தும் நீயே’ என்று அந்தக் கிராமத்துக் காதலர்கள் அவளது கருணையைக் கோரி நிற்கின்றனர்.

    இன்னொரு கிராமத்துப் பாட்டில் வாலியும் இதே மரபைப் பின்பற்றி எழுதியிருப்பார், அங்கேயும் போற்றப்படுகிறவள் தேரில் உலா வரும் கருமாரி, மகமாயி, உமைதான்!

    நீர், வானம், நிலம், காற்று, நெருப்பான ஐம்பூதம்

    உனதாணைதனை ஏற்றுப் பணியாற்றுதே,

    பார்போற்றும் தேவாரம், ஆழ்வார்கள் தமிழாரம்,

    இவை யாவும் எழிலே உன் பதம் போற்றுதே!

    ***
    என். சொக்கன் …

    16 11 2013

    349/365

     
    • Uma Chelvan 4:03 am on November 17, 2013 Permalink | Reply

      எங்கும் அவள், எதிலும் அவள் உமையவள் !!!

      மலரும் வான் நிலவும் சிந்தும் அழகெல்லாம் உன் எழில் வண்ணமே!
      குழலும் யாழ் இசையும் கொஞ்சும் மொழி எல்லாம் உன் குரல் வண்ணமே !

    • amas32 9:31 pm on November 17, 2013 Permalink | Reply

      ஐம்பூதங்களிலும் நீயே உறைகிறாய் என்ற கங்கை அமரனின் பாடல் வரிகள் போற்றிப் பாடப்படும் அம்மனைப் போல் எளிமை நிறைந்தவை.

      நாலே வரியில் வாலி சொல்லும் கருத்தும் அற்புதம். அமரன் சொன்னதை தான் சொல்கிறார் ஆனால் இன்னும் கொஞ்சம் high funda வாக உள்ளது.

      இரு பாடல்களும் அருமை!

      amas32

  • என். சொக்கன் 9:09 pm on November 13, 2013 Permalink | Reply  

    ஆடும் கிளி 

    • படம்: அமுதவல்லி
    • பாடல்: ஆடைகட்டி வந்த நிலவோ
    • எழுதியவர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
    • இசை: விஸ்வநாதன், ராமமூர்த்தி
    • பாடியவர்கள்: டி. ஆர். மகாலிங்கம், பி. சுசீலா
    • Link: http://www.youtube.com/watch?v=G8QcPKPYc2Y

    கிளைதான் இருந்தும், கனியே சுமந்து

    தனியே கிடந்த கொடிதானே,

    கண்ணாளனுடன் கலந்து ஆனந்தம்தான் பெறக்

    காவினில் ஆடும் கிளிதானே!

    பட்டுக்கோட்டையார் கிளை, கனி, கொடி என்று எதையெல்லாம் வர்ணிக்கிறார் என்று யோசித்தபடி அடுத்த வரிக்கு வாருங்கள், அதென்ன ‘காவினில்’ ஆடும் கிளி?

    தமிழில் ‘கா’ என்ற சொல்லுக்குச் சோலை அல்லது தோட்டம் என்று பொருள், காக்கப்படும் (வேலி போட்ட) தோட்டம் என்று விவரிக்கிறவர்களும் உண்டு.

    இந்தச் சொல் நமக்கு அதிகப் பழக்கமில்லாததாக இருக்கலாம். ஆனால், ‘காவிரி’ என்ற நதியின் பெயருக்கே ‘கா + விரி’, அதாவது, சோலைகளை விரித்துச் செல்லும் நீர்வளம் நிறைந்த ஆறு, அல்லது சோலைகளுக்குள் விரிந்து பரவும் ஆறு என்றெல்லாம் பொருள் சொல்கிறார்கள்.

    அப்போ காவேரி?

    அதுவும் மக்கள் பயன்பாட்டில் உள்ளது. கவேர முனிவரின் மகள் என்பதால் அவளுக்குக் ‘காவேரி’ என்று பெயர் வந்ததாம். ஜனகன் மகள் ஜானகி, கேகயன் மகள் கைகேயி என்பதுபோல!

    பெயர் / அதற்கான காரணம் எதுவானால் என்ன? ஆற்றில் தண்ணீர் வந்தால் சரி. நீரால் அமையும் உலகு!

    ***

    என். சொக்கன் …

    13 11 2013

    346/365

     
    • amas32 7:43 pm on November 15, 2013 Permalink | Reply

      பூங்கா என்பத்தும் பூஞ்சோலை தான். ஒரே எழுத்தில் எத்தனை அழகியப் பொருளைத் தரும் ஒரு சொல்லைத் தமிழ் தருகிறது! தமிழ் வாழ்க 🙂

      amas32

  • என். சொக்கன் 9:17 pm on November 10, 2013 Permalink | Reply  

    யானோ கவிஞன்? 

    • படம்: நினைத்தாலே இனிக்கும்
    • பாடல்: பாரதி கண்ணம்மா
    • எழுதியவர்: கண்ணதாசன்
    • இசை: எம். எஸ். விஸ்வநாதன்
    • பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்
    • Link: http://www.youtube.com/watch?v=Q9XrLMK8nbM

    பாரதி கண்ணம்மா, நீயடி சின்னம்மா, கேளடி பொன்னம்மா,

    அதிசய மலர் முகம், தினசரி பல ரகம்,

    ஆயினும் என்னம்மா? தேன்மொழி சொல்லம்மா!

    கண்ணதாசன் அவர்களின் உதவியாளராக இருந்த இராம. கண்ணப்பன் எழுதிய ‘அர்த்தமுள்ள அநுபவங்கள்’ (’அநுபவம்’ என்றுதான் எழுதியிருக்கிறார்கள், ’அனுபவம்’ என்றல்ல) என்ற நூலை வாசித்துக்கொண்டிருந்தேன்.  அதில் கண்ணதாசன் பாரதியைப்பற்றிச் சொல்லும் பகுதி மிகவும் உணர்ச்சிகரமானது:

    ‘ஆறு தொகுதிகள் கவிதைகள் எழுதி இருக்கிறேன், ஏராளமா சினிமா பாட்டெழுதி இருக்கிறேன், உரை நடை எழுதி இருக்கிறேன்… பன்றி குட்டி போட்டமாதிரி இவ்வளவு எழுதி என்ன பிரயோசனம்? பாரதி இந்தக் கவிதைத் தொகுதி ஒன்றினால்மட்டும் உலகத்தை ஜெயிச்சுட்டானே!’

    ‘அவன்தான் மகாகவி, என்னைப்பத்தியெல்லாம் பேசப்படாது!’

    கண்ணதாசன் சொன்னால் ஆச்சா? நாம் இப்போதும் அவரைப்பற்றிப் பேசிக்கொண்டுதானே இருக்கிறோம்!

    ***

    என். சொக்கன் …

    10 11 2013

    343/365

     

     
    • bganesh55 6:59 am on November 11, 2013 Permalink | Reply

      அதானே… கண்ணதாசனின் வரிகளின் எளிமை திரைத் துறைக்கும், கருப்பொருளின் அடரத்தி அவர் கவிதைகளிலும் வெளிப்பட்டதை மற(று)க்க முடியுமா என்ன? பாரதி ஒரு சிகரம் எனில் கண்ணதாசனும்…!

    • amas32 8:47 am on November 11, 2013 Permalink | Reply

      சூப்பர்! எனக்குக் கண்ணதாசனை மிஞ்சி எவரும் இல்லை என்று தோன்றும். தனிப்பட்ட டேஸ்ட், ஈர்ப்பு என்று நினைக்கிறேன் 🙂

      amas32

    • Uma Chelvan 9:45 am on November 11, 2013 Permalink | Reply

      என்ன ஒரு அருமையான பாடல். அதிசய மலர் முகம் என்றது போல், பாரதி ஒரு ரோஜா என்றால் ( மலர்களின் ராஜா அழகிய ரோஜா ) கண்ணதாசனும் ஒரு மல்லிகைதான். இரு வேறு நிறம், இரு வேறு மணம். இரண்டுமே சிறந்தது அதனதன் குணத்தில் !!!இங்கே MSV யையும் மறந்து விடக்கூடாது . நிஜமாகவே நினைத்தாலே இனிக்கும் பாடல்கள். இந்த பாடலை தந்தற்கு MSV குதான் உண்மையில் கோவில் கட்டி இருக்க வேண்டும் !!!

    • rajinirams 10:09 am on November 11, 2013 Permalink | Reply

      தன்னடக்கம் காரணமாக கண்ணதாசன் அவ்வாறு கூறியிருந்தாலும் அவர் பல காவிய பாடல்கள் படைத்த கவியரசர் ஆயிற்றே-அதனால் தான் “நீ தாடியில்லாத தாகூர் -மீசையில்லாத “பாரதி”என்று கவிஞர் வாலி அவருக்கு இரங்கற்பா பாடினார்.

  • என். சொக்கன் 8:20 pm on November 8, 2013 Permalink | Reply  

    பெரு வெள்ளம் 

    • படம்: அவதாரம்
    • பாடல்: ஒரு குண்டுமணி
    • எழுதியவர்: முத்துக்கூத்தன்
    • இசை: இளையராஜா
    • பாடியவர்: இளையராஜா
    • Link: http://www.youtube.com/watch?v=C45yKkdLFi4

    ஒரு குண்டுமணி குலுங்குதடி கண்ணம்மா காதுல காதுல,

    ரெண்டு சிந்தாமணி சிந்துதடி சின்னம்மா சொல்லுல சொல்லுல!

    இந்தப் பாடலில் வரும் ‘குண்டு மணி’க்கு அர்த்தம், குண்டான மணி என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். அதாவது, காதில் ஒரு கனமான மணியைத் தொங்கவிட்டிருக்கும் பெண் தலையை ஆட்ட, அந்தக் குண்டான மணி குலுங்குகிறது.

    வேறோர் இடத்தில் “குண்டு மணி தங்கம் வாங்கி வெச்சிருக்கேன்” என்று வாசித்தேன். அங்கேயும் குண்டான மணி அளவு தங்கம் என்றுதான் அர்த்தம் புரிந்துகொண்டேன்.

    பிறகு ஒரு நண்பர் சொன்னார், அது ‘குன்றி மணி’யாம். சிவப்பு, கருப்பு நிறத்தில் உள்ள ‘குன்றி’ என்ற தாவரத்தின் விதைக்குதான் அந்தப் பெயர். தங்கத்தைக் குறைவாக வாங்கும்போது அதை அளவிடப் பயன்படுத்தப்படும் மிகச் சிறிய எடைக்கல் அது!

    இந்தக் ‘குன்றி மணி’ என்ற பெயர்தான் பின்னர் பேச்சு வழக்கில் ‘குந்து மணி’, ‘குண்டு மணி’ என்று பலவிதமாக மாறிவிட்டதாம். இந்தப் பாடலில் வரும் கண்ணம்மாவின் காதில் குலுங்குவதும், குன்றி மணி அளவு (குறைவான) தங்கம்தான், அல்லது, குன்றி மணி போன்ற சிவப்பான ஏதோ ஒரு கல்லால் செய்யப்பட்ட தோடு!

    ***

    என். சொக்கன் …

    08 11 2013

    341/365

     
    • amas32 7:34 pm on November 9, 2013 Permalink | Reply

      இதே குந்து மணி தானே பிள்ளையார் சதுர்த்தியின் போது களிமண் பிள்ளையாரின் கண்களாகத் திகழும்?

      குந்து மணித் தங்க கூடப் பெண்ணுக்குச் சேர்த்து வைக்கவில்லை என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கேன், அதாவது சிறிதளவு கூட சேர்த்து வைக்கவில்லை என்ற பொருளில்.

      நிற்க! நான் சிறுமியாக இருந்த போது ஒரு பொற்கொல்லர் எடைக்கல்லில் இதைப் பயன்படுத்தியதைப் பார்த்தது இப்பொழுது நினைவிற்கு வருகிறது :-))

      amas32

  • என். சொக்கன் 6:54 pm on November 6, 2013 Permalink | Reply  

    வல் ஆடை, மெல் ஆடை 

    • படம்: ஜீன்ஸ்
    • பாடல்: கொலம்பஸ் கொலம்பஸ்
    • எழுதியவர்: வைரமுத்து
    • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
    • பாடியவர்: ஏ. ஆர். ரஹ்மான்
    • Link: http://www.youtube.com/watch?v=LNl44GG7gts

    ரெட்டைக் கால் பூக்கள் கொஞ்சம் பாரு,

    இன்றேனும் அவசரமாக லவ்வராக மாறு!

    அலை நுரையை அள்ளி அவள் ஆடை செய்யலாகாதா!

    விண்மீன்களைக் கிள்ளி அதில் கொக்கி வைக்கலாகாதா!

    ’ஜீன்ஸ்’ என்கிற ‘வன்’ ஆடையின் பெயரில் ஒரு படம், அதற்குள் அலை நுரையை அள்ளிச் செய்த ‘மென்’ ஆடையைப்பற்றிய ஒரு கற்பனை!

    அலை நுரையை அள்ளி ஆடை செய்தால் எப்படி இருக்கும்? மிக மெல்லியதாக, உடல் வண்ணம் வெளியே தெரியும்படி Transparentடாக இருக்கும்.

    ‘ச்சீ, இந்த ஆடையெல்லாம் நம் ஊருக்குப் பொருந்தாதே’ என்று யோசிக்கிறீர்களா?

    நுரை போன்ற ஆடைகளெல்லாம் நம் ஊரில் எப்போதோ இருந்திருக்கின்றன. பெண்களுக்குமட்டுமல்ல, ஆண்களுக்கும்!

    நம்பமாட்டீர்களா? சீவக சிந்தாமணியில் ஒரு காட்சி. ஹீரோ சீவகன் தன்னை அலங்கரித்துக்கொள்வதை வர்ணிக்கும் திருத்தக்க தேவர், ‘இன் நுரைக் கலிங்கம் ஏற்ப மருங்குலுக்கு எழுதி வைத்தான்’ என்கிறார்.

    அதாவது, இனிய நுரை போன்ற ஆடையைத் தன் இடுப்பில் எழுதிவைத்தானாம்… உடுத்தினான் இல்லை, எழுதினான்… அவன் உடம்பில் ஆடையை வரைந்தாற்போல அப்படிச் சிக்கென்று பிடித்துக்கொண்டிருந்ததாம் அந்த ஆடை.

    இப்போது சொல்லுங்கள், லெக்கின்ஸ் எந்த ஊர்க் கலாசாரம்?

    ***

    என். சொக்கன் …

    06 11 2013

    339/365

     
    • amas32 7:29 pm on November 6, 2013 Permalink | Reply

      நான் இந்தப் பாடலை கேட்டபோது கற்பனை செய்தது foam மாதிரி லேசான எடை உடைய ஆடையை. பெண்களுக்குத் தான் தெரியும் கனமான புடைவைகளை அணியும் சிரமம் 🙂 அலை நுரை அவ்வளவாக transparent ஆக இருக்காதே. நுரை கலையும் போது தான் அடி மணல் தெரியும். ஆனாலும் நீங்க சொன்னா சரியாகத் தான் இருக்கும் 🙂

      amas32

    • rajinirams 11:22 pm on November 6, 2013 Permalink | Reply

      சூப்பர்.கவிஞர் வைரமுத்து அவர்களின் அழகான கற்பனையை -அலை நுரையை அள்ளி அவள் ஆடல் செய்யலாகாதா- சீவக சிந்தாமணி பாடலுடன் ஒப்பிட்டு அருமையான “ஜீன்ஸ்-லெக்கின்ஸ்” பதிவை தந்திருக்கிறீர்கள்.

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel