Updates from February, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • mokrish 10:15 am on February 28, 2013 Permalink | Reply  

  இரு வரிக் கவிதை 

  பெண்ணை வர்ணிக்கும் பாடல்கள்  காதல் ரச பாடல்கள் முத்தம் தரும் / கேட்கும் பாடல்கள் … எவ்வளவு பாடல்கள் இதழ் பற்றி! விதிவிலக்கின்றி அத்தனை கவிஞர்களும் இது பற்றி பாடல் எழுதியிருக்க, எதைப்பற்றி நான் பதிவெழுத?

  கண்ணதாசன் முதல் இன்று காலை ட்விட்டரில் உதித்த புது கவிஞன் வரை அனைவரும் இதழின் சிவப்புக்கு / சிறப்புக்கு ஒரு கவிதையாவது டெடிகேட்  செய்கிறார்கள்.

  • சிப்பி போல இதழ்கள், மாதுளை செம்பவளம் மருதாணி போல என்று ஓராயிரம் பாடல்கள்.

  • தித்திக்கும் இதழ் உனக்கு , இதழே இதழே தேன் வேண்ட குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை உறிஞ்ச துடிக்கும் உதடு -தேன் பழரசம் மது என்று போதையில் இன்னொரு ஆயிரம்.

  • தவிர ஆரிய உதடுகள் திராவிட உதடுகள் , இதழில் கவிதை எழுதும் நேரம், , எந்த பெண்ணிலும் இல்லாத உதட்டின் மேல் மச்சம், , bubble gum ஐ இதழ் மாற்றி – டூ மச்!

  சரி வித்தியாசமாய் ஏதாவது? பார்க்கலாம். முதலில் பழைய பாடல். தங்க ரங்கன் என்ற படத்தில் ஒரு பாடல். MSV இசையில் நா. காமராசன் எழுதியது.

  உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது
  அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது

  கவனியுங்கள். அவள் பெயர்தான் ஒட்டிக்கொண்டது. உச்சரிப்பதுதான் தித்திக்கிறது. கண்ணியமான வரிகள்.

  அந்நியன் படத்தில் ஐயங்காரு வீட்டு அழகே என்ற பாடலில்

  உன் உதடு சேர்ந்தால் பூப்படையும் வார்த்தை

  நம் உதடு சேர்ந்தால் பூப்படையும் வாழ்க்கை

  தம்பி படத்தில் சுடும் நிலவு சுடாத சூரியன் என்ற பாடலில் ‘நான்கு உதடு பேசும் வார்த்தை முத்தமாகும்’ என்ற வரி

  ஐஸ்வர்யா ராய் என்றாலே வைரமுத்துவின் கற்பனை உற்சாகமாய் இருக்கும்

  ராவணன் படத்தில் ஒரு பாடல்.

  உசுரே போகுதே உசுரே போகுதே

  உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கையிலே

  மேஜர் சந்திரகாந்த் படத்தில் ஒரு நாள் யாரோ என்ற பாடலில் இதழின் நிறம் பற்றி வாலியின் கற்பனை ஒரு அழகிய கவிதை.

  செக்கச் சிவந்தன விழிகள் கொஞ்சம்

  வெளுத்தன செந்நிற இதழ்கள்

  வெள்ளை விழிகளும் செந்நிற இதழ்களும் நிறம் மாறி நிற்கும் பெண்ணின் நிலை. இலக்கியத்தில் இதன் equivalent பற்றி சொக்கனும் ராகவனும் தான் சொல்லவேண்டும்.

  அடுத்து இவன் படத்தில் அப்படி பாக்குறதுன்னா வேணாம் என்ற பாடலில் பழனிபாரதி சொல்லும் கற்பனை இனிமை

  சுற்றி சுழன்றிடும் கண்ணில் இசை தட்டு ரெண்டு பார்த்தேனே
  பற்றி இழுத்தென்னை அள்ளும் பட்டு குழிகளில் வீழ்ந்தேனே
  ரெண்டு இதழ் மட்டும் கொண்டிருக்கும்

  உந்தன் புத்தகத்தில் அச்சானேன்

  கண்களால் கைது செய் என்ற படத்தில் பா விஜய் எழுதிய என்னுயிர் தோழியே என்று ஒரு பாடல்

  மூச்சு முட்ட கவிதைகள் குடித்துவிட்டு

  எந்தன் செவியில் சிணுங்குகிறாய்

  ரெண்டு இதழ் மட்டும் கொண்ட அதிசய பூ

  நீ அல்லவோ சிலுப்புகிறாய்

  அவளை இரண்டு இதழ் கொண்ட அதிசய பூவாய் பார்க்கும் கற்பனை.

  ஆயிரம் தான் இருந்தாலும் காதல் சொல்வது உதடுகள் அல்ல கண்கள்தான் என்பது என் எண்ணம். பழனிபாரதியும் அதைத்தான் சொல்கிறார்.

  இன்னும் நிறைய இருக்கும். நீங்களும் சொல்லுங்களேன்

  மோகனகிருஷ்ணன்

  089/365

   
  • என். சொக்கன் 10:23 am on February 28, 2013 Permalink | Reply

   //சிவந்தன விழிகள், வெளுத்தன இதழ்கள்//

   இதே வரி ‘1000 நிலவே வா’ பாட்டிலும் வரும் (புலமைப்பித்தன்?), அக்னி நட்சத்திரம் ‘நின்னுக்கோரி வர்ணம்’ பாடலில் வாலியே இதே வரிகளை மீண்டும் எழுதியிருப்பார்,

   அனைத்துக்கும் Source ஒன்றே : கந்த புராணம் : ’வெளுத்தன சேயிதழ், விழி சிவந்தன’ 🙂

 • என். சொக்கன் 2:36 pm on February 27, 2013 Permalink | Reply  

  விருந்தினர் பதிவு : கேளாமல் 

  பாடல்: கேளாமல் கையிலே …

  படம்: அழகிய தமிழ்மகன்

  பாடலாசிரியர்: தாமரை

  இசை: இரகுமான்

  இயக்கம்: பரதன்

   

  ஆண்டாள், வெள்ளிவீதியார், வெண்ணிக்குயத்தியார் என்று பல்வேறு பெண்பாற் புலவர்களைக் கொண்ட நம் தமிழ் மொழியில்,திரைப்பாடல் என்னும் துறையில் மட்டும் ஏனோ பெண்கள் பங்களிப்பு அதிகம் இருந்ததில்லை. இந்த குறையை நீக்க மலர்ந்தவர்தான் தாமரை. கொங்கு தமிழும், குளிரும் மாற்றி மாற்றி கொஞ்சும் கோவை நகரில் பிறந்து வளர்ந்த்தாலோ என்னவோ இவருடைய வரிகள் சிறுவாணி நீராய் இனிக்கும்.

   

  தமிழகத்தின் வருங்கால முதல்வர் என்பதற்குரிய தகுதி உடையவராக அவரது இரசிகர்களால் கருதப்படும் இளைய தளபதி விசய் அவர்களும், உடுக்கை உடலால் உளத்தை உருக்கும், உத்தராகந்து உதிர்த்த உத்தமி சிரேயா அவர்களும், அழகிய நியூசிலாந்து கிராமங்களில் நடனமாடும்படி படமாக்கப்பட்ட பாடல் இது.

   

  இந்த பாடலின் ஒவ்வொரு அடியுமே குறிப்பிடும்படி அமைந்திருந்தாலும், நீள-நேர காரணங்களால் இரண்டு இடங்களைப் பற்றி மட்டும் இப்பதிவில் பார்ப்போம்.

   

  1)

   

  பார்த்தும் பாராமலே ஓடும் மேகங்களே,

  ஏதோ நடக்கின்றதே குதித்துப் போவதேன் ? நில்லுங்களேன்.

  பார்த்தும் பாராமலே ஓடும் மேகங்களே !

   

  தலைவனும் தலைவியும் ஏதோ செய்துகொண்டிருக்கிறார்கள். மேலே வானத்தில் செல்லும் மேகங்கள் இதனை கண்டும் காணாமலும் ஓடிக் கொண்டிருக்கின்றன.  தமிழ் இலக்கணத்தில், இயல்பாய் நிகழும் ஒரு நிகழ்ச்சியின் மேல் கவிஞர் தன் கற்பனையை ஏற்றிப் பாடுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும். (தமிழ் இலக்கணம் பற்றி மேலும் ஆழமாக அறிய வாங்கிப் படியுங்கள் கொத்தனார் நோட்ஸ், கொத்தனார் நோட்ஸ், கொத்தனார் நோட்ஸ்,  டிடிங்) .

   

  இந்த அழகான வரிகளை மெட்டில் உட்கார வைப்பதற்காக இரகுமான் உச்சரிப்பில் கொஞ்சம் சிதைத்து விட்டார். ஆனால் இயக்குனரோ, பாடலாசிரியரின் கற்பனையை தெளிவாக உள்வாங்கிக் கொண்டு, மிகப் பொருத்தமாக இங்கு ஒரு முத்தக்காட்சியை வைக்கிறார்.  அதாவது காதலன் காதலியை முத்தமிட முயல்கிறான், இதனை கண்டும் காணாமலும் மேகங்கள் ஓடுகின்றன. காதலி வெட்கத்துடன் மேகங்களை ஓடாமல் நிற்கச் சொல்லுகின்றாள். அப்படி நின்றாலாவது காதலன் முத்தமிடுவதை தவிர்க்கலாம் என்று நினைக்கிறாள். ஆனால் மேகங்கள் ஓடி விடுகின்றன. அதனால் காதலியும், “நனைந்த பிறகு நாணம் எதற்கு” என்று, மேகங்களும் நின்று பார்க்கப்போவதில்லை என்று உணர்ந்து, முத்தமிட்டு வைக்கிறாள். கதைக்கு தேவைப்பட்டால் கவர்ச்சி /முத்தம் என்று நடிக்க எந்த தயக்கமும் இல்லை என சிரேயாவும் தாராளமாக வெட்கப்புன்னகையுடன் நடித்து கொடுத்திருக்கிறார்.

   

   

  2)

   

  மேற்கு திசையை நோக்கி நடந்தால்

  இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமா ?

   

  இந்த வரியை முதன் முதலில் கேட்ட போதே, மிகவும் ஈர்த்து விட்டது. கிழக்கில் கதிரவன் உதிப்பதால், கிழக்கு நோக்கி நடந்தால் காலையும், மேற்கு நோக்கி நடந்தால் இரவும் சீக்கிரம் வருமா, என்று தலைவி கவித்துவமாய் ஏங்குகிறார். ஆனால் மீண்டும் மீண்டும் கேட்டு யோசித்த போது, இதில் பிழை உள்ளதாகவே தெரிகிறது.

   

  இரவு வர வேண்டும் என்று பெண் ஏங்குகிறாள் எனில், அங்கு இருப்பது  பகல் பொழுது என்று அறிந்து கொள்ளலாம். நாள் என்பது கிழக்கில் தொடங்குவதால், நாம் சப்பான் நாட்டை Land of Rising Sun என்கிறோம். நம்மூரில் காலை/மாலை என்றால் சப்பானில் (கிழக்கில்) மாலை/இரவு இருக்கும். ஆதலால் இந்த வரியில் நயம் மிகுந்திருந்தாலும் பொருட்பிழை உள்ளது. இது,

   

  கிழக்கு திசையை நோக்கி நடந்தால்

  இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமா ?

   

  என்று இருக்க வேண்டும். இல்லையேல்,

   

  மேற்கு திசையை நோக்கி நடந்தால்

  இனிக்கும் இரவு இன்னும் நீளுமா ?

   

  என்று இருக்கலாம். ஆனால் இரவு நேரத்தில் நடன காட்சி அமைப்பது சிரமமாகியிருக்கும்.

   

  Video Link : http://www.youtube.com/watch?v=WCekqEGzeTM

  சங்கர்

  சங்கர் சேமிப்பியல் பொறியாளராக (File Systems Engineer) பணியாற்றி வருகிறார். இறை நம்பிக்கை அற்றவர். தேவதைகள் (அமலா, சுருதிகாசன் முதலானோர்) நம்பிக்கை உற்றவர். கிரந்தம்தவிர் கூட்டத்தில் ஒரு சிறுவன். கட்டற்ற மென்பொருட்கள் (Free Software), கவிதைகள், திரைப்பாடல்கள் மற்றும் தமிழ் இலக்கண ஆர்வலர். பின்னொருநாளில் தமிழ் வழியில் அறிவியலில் முனைவர் பட்டம் பெற கனவு காண்பவர்.

  டுவிட்டர்: twitter.com/psankar
  வலைப்பூ: psankar.blogspot.com

   
  • amas32 (@amas32) 2:46 pm on February 27, 2013 Permalink | Reply

   நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு 🙂
   பாடலைப் பற்றிய பதிவை விட உங்களைப் பற்றிய தொகுப்பு இன்னும் அதிகமாக ஈர்த்தது 🙂

   amas32

   • psankar 4:02 pm on February 27, 2013 Permalink | Reply

    நன்றி 🙂 இதில் அந்த “இறை-தேவதை” கருத்துக்கு சொந்தக்காரர் கார்க்கி அவர்கள். நான் கொஞ்சம் திருத்தம் செய்து பயன்படுத்திக் கொண்டேன் 🙂

  • karki 5:18 pm on February 27, 2013 Permalink | Reply

   brilliant..

   மேற்கு திசையை நோக்கி நடப்பதை விட, கிழக்கு திசை நோக்கி நடந்தால் சீக்கிரம் இரவு வரும்தான்.

   இதை கவனிச்ச நீங்க முக்கியமான விஷயத்த கவனிக்கல. இத நாயகி ஒரு கேள்வியாதான் கேட்பாங்க. அதுக்கு பதில் சொல்லும் விதமாக விஜய் “ம்ஹூம்” என தலையாட்டுவார். நாயகி ஆசை காரணமாக ஒரு தவறான விஷயத்தை செய்ய தயாராகிறார். காதலில் விழுந்திருந்தாலும் நாயகன், இல்லை. அது நடக்காது என தெளிவாக எடுத்துரைக்கிறார்.

   இதனால்தான் விஜயை முதலமைச்சர் ஆக்க வேண்டுமென்கிறோம் அவர்தம் ரசிகர்கள் சொல்றோம்.

   பழகுவதில் கனிவு. முடிவில் தெளிவு.
   வாழ்க இளைய தளபதி

   :))))

   • Pradeep 12:25 pm on June 17, 2015 Permalink | Reply

    என் ஐயப்பாடு தீர்ந்தது , நன்றி !

 • என். சொக்கன் 11:22 am on February 27, 2013 Permalink | Reply  

  24 நிமிடங்கள் 

  • படம்: மே மாதம்
  • பாடல்: மின்னலே, நீ வந்ததேனடி
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
  • பாடியவர்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
  • Link: http://www.youtube.com/watch?v=e4cgBHU26DQ

  சில நாழிகை, நீ வந்து போனது,

  என் மாளிகை, அது வெந்து போனது,

  மின்னலே, என் வானம் உன்னைத் தேடுதே!

  ’நாழிகை’ என்பது பழந்தமிழர் பயன்படுத்திய நேர அளவுகளில் ஒன்று. இன்றைய கணக்குப்படி 24 நிமிடங்களுக்குச் சமம்.

  ஆக, ஒரு நாளில் 24 மணி நேரங்கள், 24 * 60 நிமிடங்கள், 24 * 60 / 24 = 60 நாழிகைகள். இதைப் பகலுக்கு 30, இரவுக்கு 30 என்று பிரித்துள்ளார்கள்.

  நம்முடைய மணிக்கணக்கின்படி, அதிகாலை 6 AMக்கு, முதல் நாழிகை தொடங்குகிறது, 6:25க்கு இரண்டாம் நாழிகை, 6:49க்கு மூன்றாம் நாழிகை, and so on.

  இதனைக் கணக்கிடுவதற்காக, ‘நாழிகை வட்டில்’ என்ற ஒரு கருவியையும் தமிழர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். Hour Glass போன்ற அமைப்பு, அதில் நீர் அல்லது மணலை நிரப்பியிருப்பார்கள், அது முழுவதும் வடிந்து கீழே வந்து சேர்வதற்கு ஆகும் நேரம், ஒரு நாழிகை, 24 நிமிடங்கள்.

  கம்ப ராமாயணத்தில் பிரதான வில்லனாகிய ராவணனைவிட அதிகம் பேசப்பட்ட ஓர் எதிர்மறைப் பாத்திரம் உண்டு: அந்த ராவணனின் மகன் இந்திரஜித் என்கிற மேகநாதன்.

  இந்திரஜித்தின் வில்வன்மையைச் சொல்ல வரும் கம்பர், ‘நாழிகை ஒன்று, வளையும் மண்டலப் பிறை என நின்றது அவ்வரிவில்’ என்கிறார். இந்த அட்டகாசமான வர்ணனையைப் புரிந்துகொள்வதற்கு, நாம் கம்பரின் கண்களில் நின்று கற்பனை செய்யவேண்டும்.

  வில்லை எடுக்கிறான் இந்திரஜித், அதில் அம்பு தொடுக்கிறான், அதனால் வில் வளைகிறது, அந்த அம்பை எய்கிறான்.

  இப்போது, அவனுடைய கை தோளுக்குப் பின்னே செல்கிறது, இன்னோர் அம்பை எடுக்கிறான், அதே வில்லில் தொடுக்கிறான், எய்கிறான்.

  ஆனால், இந்திரஜித் அடுத்த அம்பை எடுத்துத் தொடுப்பதற்குள் வளைந்த வில் நிமிர்ந்து நேராகிவிடுமல்லவா?

  அதுதான் இல்லை, முதல் அம்பு வில்லில் இருந்து விடுபட்டுச் சென்ற அதே வேகத்தில் அடுத்த அம்பை எடுத்துத் தொடுத்துவிடுகிறான், ஆகவே, வளைந்த வில் அப்படியே வளைந்தே நிற்கிறது. அதிலேயே தொடர்ந்து மூன்றாவது, நான்காவது அம்புகளைச் செலுத்திக்கொண்டே இருக்கிறான்.

  இடைவெளியில்லாமல் இப்படி அம்புகளைத் தொடர்ந்து எய்த காரணத்தால், இந்திரஜித்தின் வில் ஒரு நாழிகைப் பொழுதுக்கு, அதாவது 24 நிமிடங்களுக்கு நிமிராமல் வளைந்தே காணப்பட்டதாம், அதைப் பார்ப்பதற்குப் பிறைச் சந்திரன்போல் தோன்றியதாம்.

  சர்வதேச அளவில் 60 நிமிட ‘மணி’யை நாம் பயன்படுத்தத் தொடங்கிவிட்டதால், 24 நிமிட ‘நாழிகை’ நம்முடைய தினசரிப் பேச்சில் அதிகம் இடம்பெறுவதில்லை. ஆனால், தமிழர்கள் நாளை 24 நிமிடக் கூறுகளாகப் பிரித்ததில் ஏதோ ஒரு காரணம் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

  Time Managementபற்றிப் பேசும் நிபுணர்கள் நமது நேரத்தைச் சரியானபடி பயன்படுத்திக்கொண்டு வேலைகளைச் செய்வதற்குப் பல உத்திகளை முன்வைக்கிறார்கள். அதில் பிரபலமான ஒன்று, Pomodoro Technique.

  இந்த உத்தியைப்பற்றி விரிவாகப் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் உண்டு, இங்கே அது அவசியமில்லை என்பதால் சுருக்கமாகச் சொல்கிறேன்: ஒரே வேலையைத் தொடர்ந்து நெடுநேரம் செய்தால் சோர்வாகும், அதற்காக அடிக்கடி வேலைகளை மாற்றிக்கொண்டிருந்தால் எதையும் உருப்படியாகச் செய்யமாட்டோம். ஆகவே, ஒரு குறிப்பிட்ட நேர இடைவெளியில், எந்த இடையூறும் இல்லாமல் ஒரே வேலையைச் செய்வது, அதன்பிறகு சிறு ஓய்வு எடுத்துக்கொண்டு, மீண்டும் அதே நேர இடைவெளியில் அதே வேலையைத் தொடர்வது, அல்லது அடுத்த வேலையைச் செய்வது…

  இப்படி ஒவ்வொரு நாளையும் அந்தக் குறிப்பிட்ட நேர இடைவெளிகளாகப் பிரித்துக்கொண்டு வேலை செய்தால், எல்லாவற்றையும் சிறப்பாகச் செய்துமுடித்துவிடலாம் என்பதே இந்த உத்தியின் அடிப்படை. பல பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களில் இந்த முறை பயன்படுத்தப்பட்டுப் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. பல லட்சம் பேர் இதனால் பயன் பெற்றுள்ளதாகச் சொல்கிறார்கள்.

  Pomodoro Technique சொல்லும் அந்த ”Perfect” நேர இடைவெளி, 25 நிமிடம். கிட்டத்தட்ட ஒரு நாழிகை 🙂

  ***

  என். சொக்கன் …

  27 02 2013

  088/365

   
  • Ananth 12:55 pm on February 27, 2013 Permalink | Reply

   I knew about நாழிகை as well as Pomodoro Technique, but never connected them 🙂 Good one

  • amas32 (@amas32) 2:13 pm on March 1, 2013 Permalink | Reply

   நம்முடைய பழைய பெருமைகளை பாதுகாத்து நடைமுறை வழக்கத்தில் கொண்டு வந்தாலே நாம் பெரிய சாதனைகளை நிகழ்த்த முடியும். நடுவில் வந்த ஆங்கிலேயர ஆதிக்கம் நம் பண்பாட்டினையும் தொன்று தொட்டு வந்த பழக்க வழக்கங்களையும் சீர் குலைத்து விட்டன.

   காதல் தாபத்தை நாழிகை வந்து சென்ற காதலியின் தாக்கத்தைப் பாடலில் அழகாகச் சொல்கிறார் வைரமுத்து. நாழிகையின் நுணுக்கத்தை அறிந்தவர் தானே இந்தப் பாடலை இரசிக்க முடியும்?

   amas32

 • G.Ra ஜிரா 10:11 am on February 26, 2013 Permalink | Reply  

  புதுப்புது அர்த்தங்கள் 

  இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போவது கவுண்டர் பாட்டு. சாதியைக் குறிக்கும் கவுண்டர் அல்ல. இது ஆங்கில Counter.

  கவி பாடலாம்” என்று ஒரு மிக அருமையான நூலை கி.வா.ஜ அவர்கள் எழுதியிருக்கிறார். பாட்டெழுதுவதற்குத் தமிழில் இலக்கணங்களையும் வகைகளையும் எளிய தமிழில் விளக்கங்களோடும் எடுத்துக்காட்டுகளோடும் சொல்லியிருக்கிறார். தமிழ் ஆர்வலர்களுக்கு அந்த நூல் ஒரு வரம்.

  இலக்கணங்கள் ஆண்டாண்டு காலமாக இருக்க புதுமைகள் புகுந்த வண்ணம் இருக்கிறது. இலக்கணம் என்பதையே விட்டு விட்டு புதுக்கவிதை பழக்கத்துக்கு வந்தது. மரபுக்கவிதையையே மறக்க வைத்து விட்டு புதுக்கவிதை பிரபலமாயிருக்கிறது என்றால் அதன் எளிமையைப் புரிந்து கொள்ள முடிகிறது.

  பிறகு ஹைக்கூ என்றொரு வகை. இப்படியாக வகை வகையாக வந்த வகைகளில் ஒன்றுதான் Counter வகை. இது பெரும்பாலும் புதுக்கவிதை முறையிலேயே எழுதப்படுகிறது.

  மரபில் தெளிவான இலக்கணங்களோடு கவுண்டர் வகை பாடல்கள் விளக்கப்பட்டிருக்காவிட்டாலும் மரபுக்கவிதையிலும் இந்த வகைப் பாடல்களை எழுத முடியும்.

  சரி. பாடலின் இலக்கணத்தைப் பார்ப்போம்.

  கவுண்டர் முறையில் ஒரு பாடலை எழுதினாலும் அதை இரண்டு பாடல்களாகப் பிரித்து விடலாம். ஒவ்வொரு பாடலும் தனித்தனியாகவும் பொருள் கொடுக்கும். சேர்ந்தும் பொருள் கொடுக்கும். புரியவில்லையா? ஒரு திரைப்படப் பாடலையே எடுத்துக்காட்டாக வைத்து விளக்குகிறேன். புரியும்.

  இதுவரையில் தமிழ்த் திரையிசையில் Counter முறையில் ஒரேயொரு பாடல்தான் வந்திருக்கிறது. அந்தப் புதுமையைப் புகுத்திய பெருமை இசைஞானி இளையராஜாவையே சேரும். அவர் அப்படிப் புகுத்திய புதுமைக்குச் சொற்களைப் புகுத்தி கவி சமைத்த பெருமை கவிஞர் வாலியையே சேரும்.

  கவுண்டர் முறைப் பாடல்களில் வரிகளைச் சீர்களாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். ஒற்றைப்படைச் சீர்களையும் இரட்டைப்படைச் சீர்களையும் தனித்தனியாக பிரித்தால் இரண்டு பாடல்கள் கிடைத்துவிடும். இதுதான் Counter.

  நான் குறிப்பிடப் போகும் திரைப்படப்பாடலில் பல்லவி முழுக்க முழுக்க கவுண்டர் முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த முறையில் பாடல்களைப் படம் பிடிப்பதிலும் சிரமம். அதற்கான தக்க சூழ்நிலை வேண்டும். ஆகையால் எளிமையாக ஒரு காதல் பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

  என் கண்மணி உன் காதலி
  இள மாங்கனிஉனைப் பார்த்ததும்
  சிரிக்கின்றதே சிரிக்கின்றதே
  நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நானமோ
  நீ நகைச்சுவை மன்னனில்லையோ

  என் மன்னவன் உன் காதலன்
  எனைப் பார்த்ததும் ஓராயிரம்
  கதை சொல்கிறான் கதை சொல்கிறான்
  அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோ
  நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ

  இது பாடலின் முதற்பகுதி. அதாவது ஆணும் பெண்ணுமாகப் பாடும் பல்லவியும் அனுபல்லவியும். இதில் பல்லவியை மட்டும் எடுத்துக் கொண்டு ஆராய்வோம்.

  ஆண்
  என் கண்மணி உன் காதலி
  இள மாங்கனிஉனைப் பார்த்ததும்
  சிரிக்கின்றதேன் சிரிக்கின்றதேன்

  பெண்
  என் மன்னவன் உன் காதலன்
  எனைப் பார்த்ததும் ஓராயிரம்
  கதை சொல்கிறான் கதை சொல்கிறான்

  இந்த வரிகள் முழுதாகச் சேர்ந்து பொருள் தருகின்றன. சரி. இப்போது நாம் சொன்ன சீர் பிரிப்பு வேலைக்கு வருவோம். ஓற்றைப்படைச் சீர்களையும் இரட்டைப்படைச் சீர்களையும் பிரித்து இரண்டு பாடல்களாகத் தந்திருக்கிறேன்.

  பாடல்-1

  ஆண்: என் கண்மணி இளமாங்கனி சிரிக்கின்றதேன்
  பெண்: என் மன்னவன் எனைப் பார்த்ததும் கதை சொல்கிறான்

  பாடல்-2

  ஆண்: உன் காதலி உனைப் பார்த்ததும் சிரிக்கின்றதேன்
  பெண்: உன் காதலன் ஓராயிரம் கதை சொல்கிறான்

  இந்த இரண்டு பாடல்களையும் அப்படியே எடுத்துக் கொண்டாலும் பொருள் கிடைக்கும். இதுதான் Counter முறையில் எழுதப்படும் முறை. இந்தப் பாடலைப் பார்க்கும் போது பல்லவியைப் படமாக்குவதற்குப் பட்ட சிரமம் புரியும்.

  சரி. இப்பிடியெல்லாம் பாடல் எழுதச் சொல்லி இசையமைக்கத்தான் வேண்டுமா? இந்த மெட்டிலேயே மிக எளிமையாக ஒரு காதல் பாடலை எழுதச் சொல்லிப் படமாக்கியிருக்கலாமே! வெகுசில இசையமைப்பாளர்கள்தான் புதுமையை விரும்பி முயற்சி செய்கின்றவர்கள். அந்த வகையில் இளையராஜாவும் சேர்த்திதான்.

  பாடலின் சுட்டி – http://youtu.be/cLJluxRG9g0
  பாடியவர்கள் – இசையரசி பி.சுசீலா & பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம்
  படம் – சிட்டுக்குருவி

  அன்புடன்,
  ஜிரா

  087/365

   
  • Arun Rajendran 12:49 pm on February 26, 2013 Permalink | Reply

   வணக்கம் ஜிரா,

   பத்தாவது இலக்கணத்துல பொருள்கோள் படிச்சத ஞாபகப்படுத்துது…

  • PVR 1:10 pm on February 26, 2013 Permalink | Reply

   Loved it. Brilliant.

  • Saba-Thambi 3:22 pm on February 26, 2013 Permalink | Reply

   Never heard it before, Thank you for shedding “இலக்கண வெளிச்சம்”

  • rajinirams 4:12 pm on February 26, 2013 Permalink | Reply

   பிரமாதம். இந்த மாதிரி ஒரு பாடல் இன்னமும் வரவில்லை.பாராட்டுக்கள்.

  • Balasubramanian V 4:49 pm on February 26, 2013 Permalink | Reply

   அருமையான பதிவு. Counter பாடல்கள் பற்றிய விளக்கம் மற்றும் மேலதிகத் தகவல்களுக்கு இதுவம் பாருங்க சார் . http://isaignanibakthan.blogspot.in/search?updated-min=2010-01-01T00:00:00-08:00&updated-max=2011-01-01T00:00:00-08:00&max-results=26

  • amas32 4:56 pm on February 26, 2013 Permalink | Reply

   பாடலையும் உங்கள் பதிவையும் மிகவும் ரசித்தேன். எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடல். படமாக்கியிருக்கும் விதமும் அந்தக் காலத்துக்கு ஒரு வித்தியாசமான முயற்சி தான். இந்தப் பாடலில் இவ்வளவு இலக்கண நுணுக்கம் இருப்பது நீங்கள் சொல்லித் தான் தெரிந்து கொள்கிறேன். நன்றி 🙂

   amas32

  • Mohanakrishnan 9:26 pm on February 26, 2013 Permalink | Reply

   சூப்பர். தேவராஜ் மோகனோ வாலியோ இதைப்பற்றி அளித்த பேட்டியை படித்த நினைவு. அறிமுகப்படுத்திய இயக்குனர் என்பதால் தேவராஜ் மோகன் ஸ்பெஷல்தான். அவர் படங்களுக்கு ராஜாவின் இசை அருமையாக / வித்தியாசமாக இருக்கும்.

   இதில் இசை Counterpoint புரிகிறது. கவிதை counterpoint க்கு தமிழில் என்ன பெயர்?

 • mokrish 10:35 am on February 25, 2013 Permalink | Reply  

  நிஜம் நிழலாகிறது 

  அபூர்வ சகோதரர்கள் படத்தின் பாடல்கள் பற்றி ட்விட்டரில் பேச ஆரம்பித்தபோது நண்பர் @prabhukala  ‘ராஜா கைய வெச்சா’ பாடல் இளையராஜாவை மனதில் வைத்து எழுதியது என்று சொன்னார். பாடல்களில் இது போல் வேறு வரிகள் உண்டா ?

  திரைப்பாடல் வரிகள் திரையில் வரும் கதை நாயகன் நாயகி அல்லது மற்ற பாத்திரங்களின் குரலாகவே அமையும். ஆனால் சில நேரங்களில் கவிஞன் தன் கருத்தை முன் வைத்தும் படத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு Larger-than-life கலைஞனை முன்னிலைப்படுத்தியும் பாடல் வரிகள் அமைப்பது உண்டு. கவிஞர்கள் விரும்பி செய்ததா அல்லது ஒரு வேறு காரணங்களால் திணிக்கப்பட்டதா என்ற விவாதம் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும். அதை விடுங்கள்

  ‘பாடல் பெற்ற மேன்மக்கள்’ என்றால் நினைவுக்கு வரும் பெயர்கள்

  • மக்கள் திலகம் MGR முன் தீர்மானிக்கப்பட்ட பாதையில் செல்ல பல பாடல் வரிகளை ஒரு vehicle ஆக்கினார். இதை கண்ணதாசன் வாலி தவிர வேறு சிலரும் எழுதினர்

  • பின்னாளில் ரஜினிகாந்த் / கமல்ஹாசன் பிம்பம் பற்றி பல வரிகள்.- வாலி வைரமுத்து கைவண்ணத்தில்.

  • இளையராஜா இசையமைத்த பல படங்களின் தலைப்பில் ஆரம்பித்து பாடல்கள் வரை அவர் பெயரை ஆராதனை செய்த ஒரு காலம் உண்டு. எல்லாமே ராசாதான். கவிஞர்கள் தவிர அவரே தன்னை முன்னிலைப்படுத்தி பாடல்கள் எழுதினார்.

  முதலில் கவியரசு. தன்னை காவியத்தாயின் இளையமகன் என்று சொல்லிகொள்ளும் கவிஞர் தன்னைப்பற்றி சொல்லும் வரிகள்.

  ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு

  ஒரு கோலமயில் என் துணையிருப்பு
  இசை பாடலிலே என் உயிர் துடிப்பு

  நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு

  என்று தள்ளி நின்று தன்னையே விமர்சனம் செய்யும் வார்த்தைகள். கர்வத்துடன் சொன்ன வரிகள்

  நான் நிரந்தரமானவன் அழிவதில்லை –

  எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை

  அவர் பாடல் வரிகளில் சில செய்திகள் மறைந்திருக்கும் என்று சொல்வார்கள். நான் படித்த கேள்விப்பட்ட சில உதாரணங்கள்

  • அறிஞர் அண்ணா 1968 ல் உடல் நலமின்றி இருந்தபோது ‘ நலந்தானா உடலும் உள்ளமும் நலந்தானா’ என்ற காட்சியோடு பொருந்திய பாடல்
  • காமராஜருடன் நெருங்கிப்பழகியவர். அரசியலில் அவருடன் இணைய முயற்சி செய்தபோது ‘அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி சேரும் நாள் பார்க்க சொல்லடி’ என்று பாடலில் தூது அனுப்பிய திறமை.
  • அரங்கேற்றம் படத்தின் ‘மூத்தவள் நீ கொடுத்தாய்’ என்ற பாடலின் வரிகள் காமராஜரை பற்றி அவர் எழுதியது பின் கதையில் வரும் பெண் பாத்திரத்துக்கு மாற்றப்பட்டது
  • தன் சகோதரர் A L சீனிவாசனுடன் ஏதோ சண்டை. அன்று அவர் எழுதிய பாட்டுதான் அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே
  • ஜெயலலிதா கேம்ப் மாறி சிவாஜியின் கலாட்டா கல்யாணம் படத்தில் நடித்த போது ‘நல்ல இடம் நீ வந்த இடம் வரவேண்டும் காதல் மகராணி’ என்று எழுதியது

  கண்ணதாசன் ரஜினிகாந்துக்கு பொருத்தமாக ஒரு பாட்டு எழுதியிருக்கிறார் தெரியுமா? சில சிக்கல்களிலிருந்து மீண்டு வந்து ரஜினி நடித்த பில்லா படத்தில் நாட்டுக்குள்ளே எனக்கொரு ஊர் உண்டு பாடலை பாருங்கள்.

   என்னப்பத்தி ஆயிரம் பேரு என்னென்ன

  சொன்னாங்க இப்பென்ன செய்வாங்க

  நாலு படி மேலே போனா நல்லவனா உடமாட்டாங்க

  பாடுபட்டு பேர சேத்தா பல கதைகள் சொல்லுவாங்க

  வாலி எம் ஜி ஆருக்கு எழுதிய பல பாடல்கள் இந்த வகை. நாயகனுக்கு பாடல் என்ற template இவருக்கு பொம்மை விளையாட்டு. சின்னத்தாயவள் தந்த ராசாவே என்றும் சொல்வார் . எல்லாம் புகழும் ஒருவன் ஒருவனுக்கே என்று ARR பெருமை சொல்வார் அவர் தன்னை பற்றி எழுதிய வரிகள் தசாவதாரம் படத்தில்

  நாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜன்தான்
  ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன்தான்

  வைரமுத்து ரஜினிகாந்துக்கு எழுதிய பல வரிகள் மிக பிரபலமானவை. கருப்பு நிறத்தையும் காந்தம் போல் கண்கள் பற்றியும் அரசியல் திட்டம் பற்றியும் இமயமலை போவது பற்றியும் சலிக்காமல் எழுதிக்கொண்டிருக்கிறார். அவ்வப்போது ஆழ்வார்பேட்டை ஆண்டவனைப்பற்றியும் எழுதுவார். உலக நாயகனே என்பார். தடைகளை வென்று சரித்திரம் படைத்த கதை சொல்வார்

  ‘சமுத்திரம் பெரிதா தேன் துளி பெரிதா

  தேன்தான் அது நான்தான்

  என்று மாஸ் vs கிளாஸ் சொல்வார்.

  வைரமுத்து அண்ணாமலை படத்தில் எழுதிய பாடல் ஒன்று. http://www.youtube.com/watch?v=_iaQ3e0Vm5M   அந்த படம் வெளிவந்த காலகட்டத்தில் திரையுலகில் ஒரு மௌனமான மாற்றம்

  வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்
  கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்
  என்னை மதித்தால் என்னுயிர் தந்து காப்பேன்
  என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன்

  அடே நண்பா……..உண்மை சொல்வேன்……….
  சவால் வேண்டாம்….உன்னை வெல்வேன்…..

  ஒவ்வொரு விதையிலும்… விருட்சம் ஒளிந்துள்ளதே…
  ஒவ்வொரு விடியலும்…. எனது பெயர் சொல்லுதே…
  பணமும் புகழும் உனது கண்ணை மறைக்கிறதே….

  இன்று கண்ட அவமானம் வென்று தரும் வெகுமானம்
  வானமே தாழலாம் தாழ்வதில்லை தன்மானம்
  மேடுபள்ளம் இல்லாமல் வாழ்வில் என்ன சந்தோஷம்
  பாறைகள் நீங்கினால் ஓடைக்கில்லை சங்கீதம்
  எனது நடையில் உனது படைகள் பொடிபடுமே….

  அண்ணாமலைக்கும் ரஜினிக்கும் மட்டுமில்லை கவிஞருக்கும்  பொருந்தும் வார்த்தைகள்.

  பாடல் வரிகளுக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் அர்த்தங்களை தேடுவது ஒரு சுவாரஸ்யம்.

  மோகனகிருஷ்ணன்

  86/365

   
  • rajnirams 5:48 pm on February 25, 2013 Permalink | Reply

   எல்லாமே சூப்பர்.பாராட்டுக்கள்.குறிப்பாக வாலி “நேற்று இன்று நாளை”படத்தில் தம்பி நான் படிச்சேன் காஞ்சியிலே நேத்து பாடல் உச்சம் என்று சொல்லலாம்.அன்றைய திமுக ஆட்சியின் ஊழல்,நகராட்சியின் சீர்கேடு போன்றவற்றை எல்லாம் எளிமையாக கலக்கியிருப்பார்.அந்த பாடல் ஒலிக்காத அதிமுக மேடையே இன்று வரை கிடையாது.கமலுக்கும் உச்சம்-“இந்தியிலும் பாடுவேன்,ஏக் துஜே கேலியே”சகலகலா வல்லவன் பாடல்.வைரமுத்துவின் “சூப்பர் ஸ்டாரு யாருன்னு”-கேட்கவே வேண்டாம்:-))

  • Rajan 6:18 am on February 26, 2013 Permalink | Reply

   ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா
   நேற்று இல்லை நாளை இல்லை
   எப்பவும் நான் ராஜா ‍

   –வெற்றியின் உச்சத்தில் இளையராஜா (சின்னதம்பி பாடல்கள் கூட)

   ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
   எனக்கொரு கவலை இல்ல

   –(எம்.ஜி.ஆர் வெற்றிபெற்றபோது கண்ணதாசன்)

   அண்ணன் காட்டிய வழியம்மா
   இது அன்பால் விழைந்த பழியம்மா
   (தி.மு.க விலிருந்து கண்ணதாசன் பிரியும் போது)

   ….இன்னும் நிறைய………………..

  • amas32 4:22 pm on February 26, 2013 Permalink | Reply

   “என்னோடு காதல் என்று பேச வைத்தது நீயா இல்லை நானா? உன்னோடு லவ் என்று ஊர் சொன்னது,” சிம்ரனும் கமலும் காதலிக்கிறார்கள் என்ற வதந்தி பறந்த சமயத்தில் அதையே சாமர்த்தியமாகப் பாடலகாக அமைத்துவிட்டார் கவிஞர் வைரமுத்து பஞ்சதந்திம் படத்தில்!:-)

   amas32

  • psankar 1:34 pm on February 27, 2013 Permalink | Reply

   “காதல் ஹாசன் உதட்டில் முத்தம் என்ன புதுசா” என்று கமலை கிண்டல் செய்து பஞ்ச தந்திரத்தில் ஒரு பாட்டு.

 • என். சொக்கன் 9:26 am on February 24, 2013 Permalink | Reply  

  24 காரட் 

  • படம்: இளமை ஊஞ்சலாடுகிறது
  • பாடல்: கிண்ணத்தில் தேன் வடித்து
  • எழுதியவர்: வாலி
  • இசை: இளையராஜா
  • பாடியவர்கள்: கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி
  • Link: http://www.youtube.com/watch?v=472O53yVXvw

  ஆணிப்பொன் கட்டில் உண்டு, கட்டில்மேல் மெத்தை உண்டு,

  மெத்தைமேல் வித்தை உண்டு, வித்தைக்கோர் தத்தை உண்டு,

  தத்தைக்கோர் முத்தம் உண்டு, முத்தங்கள் நித்தம் உண்டு!

  வாலிக்கு ‘ஆணிப்பொன்’ என்ற பதம் மிகவும் பிடித்ததாக இருக்கவேண்டும். எம்ஜிஆருக்கு ‘அழகிய தமிழ் மகள் இவள்’ என்று எழுதும்போது, தொகையறாவை ‘ஆணிப்பொன் தேர் கொண்டு மாணிக்கச் சிலையென்று வந்தாய்’ என்று தொடங்குகிறார். இங்கே கமலஹாசனுக்கு ஆணிப்பொன்னால் கட்டில் போடுகிறார், அப்புறம் ரஜினிகாந்த் குரலில் ‘ஆணிப்பொன்னு, ஐயர் ஆத்துப்பொண்ணு’ என்று நாயகியை வர்ணிக்கிறார்.

  காதல்மட்டுமல்ல, ‘பூங்காவியம் பேசும் ஓவியம்’ என்று தாய், மகள் உறவைச் சொல்ல வரும்போதும்கூட, ‘ஆணிப்பொன் தேரோ’ என்றுதான் நெகிழ்கிறார் வாலி.

  ஆரம்பத்தில் நான் இதை ‘ஆனிப்பொன்’ என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். அப்புறம் ஒரு நண்பர்தான் ‘ஆணிப்பொன்’ என்று திருத்தினார்.

  அதென்ன ‘ஆணிப்பொன்’?

  எந்தக் கலப்படமும் இல்லாத, சுத்தமான 24 காரட் தங்கத்தைதான் ‘ஆணிப்பொன்’ என்று அழைக்கிறோம்.

  பொதுவாகவே தமிழில் ‘ஆணி’ என்ற வார்த்தை உயர்வைக் குறிக்கிறது. ‘ஆணிமுத்து வாங்கிவந்தேன் ஆவணி வீதியிலே’ என்று கண்ணதாசன் எழுதிய பாடலைக் கேட்டிருப்பீர்கள்.

  இன்றைக்கு நம்மிடம் ‘ஆணி’ என்று யாராவது சொன்னால், சுத்தியலால் அடித்துப் பிணைக்கும் ஓர் இரும்புத் துண்டுதான் மனத்தில் தோன்றும். ஆனால், நம்மையும் அறியாமல் இந்த ‘ஆணி’யை, உயர்வு என்ற பொருளிலும் நாம் பயன்படுத்திவருகிறோம் என்று சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள்.

  ‘ஆணித்தரமாகப் பேசினான்’ என்று சொல்கிறோம் அல்லவா? எந்தப் பிழையும் இல்லாமல், குழப்பம் இல்லாமல், தடுமாற்றம் இல்லாமல், தெளிவாகவும் அழுத்தமாகவும் அடித்துப் பேசினான் என்று நீட்டி முழக்காமல் ‘ஆணி’த்தரம் என்று ஒரே வார்த்தையில் அதைச் சொல்லிவிடுகிறது தமிழ்.

  இந்தப் பாடலில் வாலி சொல்லும் ‘ஆணிப்பொன் கட்டில்’ என்பது, ஆழ்வார் பாடலின் சாயல்தான். பெரியாழ்வார் குழந்தைக் கண்ணனுக்கு ஆணிப்பொன்னால் தொட்டில் போட்டார்:

  மாணிக்கம் கட்டி, வைரம் இடை கட்டி,

  ஆணிப்பொன்னால் செய்த வண்ணச் சிறு தொட்டில்,

  பேணி உனக்கு பிரம்மன் விடுதந்தான்,

  மாணிக் குறளனே, தாலேலோ! வையம் அளந்தானே, தாலேலோ!

  ரொம்ப சீரியஸாகப் பேசிவிட்டோம், கொஞ்சம் ஜாலியாக ஒரு விளக்கம் பார்ப்போமா?

  இப்போதெல்லாம் அலுவலகத்தில் வேலை செய்கிறோம் என்பதை வேடிக்கையாக ‘ஆணி பிடுங்குகிறோம்’ என்று சொல்வார்கள். அது இழிவான கேலி வார்த்தை என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

  ஆனால் அங்கே இரும்பு ஆணிக்குப் பதில் இந்த 24 காரட் ஆணியைப் பொருத்தினால், உயர்வான வேலையைச் செய்கிறோம் என்கிற அர்த்தம் வந்துவிடுகிறது 😉

  ***

  என். சொக்கன் …

  24 02 2013

  85/365

   
  • rajinirams 9:40 am on February 24, 2013 Permalink | Reply

   “ஆணி”த்தரமான விளக்கம். சூப்பர்.நன்றி.

  • amas32 (@amas32) 10:27 am on February 24, 2013 Permalink | Reply

   ஆணிப்பொன் – இன்று நான் கற்றுக் கொண்ட புதுப் பதம். சொக்கத் தங்கம் தான் ஆணிப்பொன்!

   amas32

  • penathal suresh (@penathal) 10:47 am on February 24, 2013 Permalink | Reply

   அப்ப, உயர்வான விஷயத்தைப் பிடுங்கி எறிந்துவிட்டு, சாதா மேட்டரைச் செய்கிறோம் என்று சொல்கிறீரா?

   நோ.. நான் ஆணி பிடுங்குவதில்லை. அமைக்கிறேன்!

   • என். சொக்கன் 1:28 pm on February 24, 2013 Permalink | Reply

    கடலை பிடுங்குதல் என்றால் உங்க ஊரில் என்ன அர்த்தம்ய்யா??? :))

  • வடுவூர் குமார் 11:01 am on February 24, 2013 Permalink | Reply

   ஆணி – இப்படிப்பட்ட விளக்கம் இப்போது தான் கேள்விப்படுகிறேன்.

  • Arun Rajendran 11:33 am on February 24, 2013 Permalink | Reply

   அருமை…மிக்க நன்றி சொக்கன் சார்…

  • Mohanakrishnan 11:41 am on February 24, 2013 Permalink | Reply

   மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சிக்கு என்ற பாடலிலும் ‘ஆணிப்பொன் ஊஞ்சலில் ஆடிக்கொண்டாடிட ஆனியிலே முகூர்த்த நாள் என்று கண்ணதாசன் வரிகள்

  • Eswar (@w0ven) 2:55 pm on February 25, 2013 Permalink | Reply

   //இரும்பு ஆணிக்குப் பதில் இந்த 24 காரட் ஆணியைப் பொருத்தினால்// பலே

  • elavasam 5:40 pm on February 25, 2013 Permalink | Reply

   வேற ஒரு ஆணி பத்தி நான் முன்னாடி எழுதினது.

   http://elavasam.blogspot.com/2010/12/blog-post.html

  • GiRa ஜிரா 9:16 am on February 26, 2013 Permalink | Reply

   ஆணிமுத்து, ஆணிப்பொன், ஆணித்தரம்… ஆணி அட்டகாசம் 🙂

 • mokrish 12:01 pm on February 23, 2013 Permalink | Reply  

  சொல் சொல் சொல் 

  திரைப்பாடல்கள் உருவாகும் விதம் நம்மை வியக்க வைக்கும். மெட்டுக்கு பாட்டு, மீட்டருக்கு மேட்டர் என்பதுதான்  பொது விதி. மெட்டு தேடி தவிக்குது ஒரு பாட்டு என்பது விதிவிலக்கு . முதலில் இசைதான்.

  ஆனால் ஒரு பாடலின் முழு வடிவம் என்பது Black Box Solution போல் அவ்வளவு சுலபமில்லை. இசையமைப்பாளரும் கவிஞரும் சேர்ந்து அங்கங்கே சில பல நகாசு வேலை செய்து அழகு சேர்த்தே முழு பாடல் கிடைக்கும். இந்த அலங்காரத்தை கவிஞரோ இசையமைத்தவரோ யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

  மெட்டமைக்கும்போது dummy வார்த்தைகள் போட்டு விட்டு பின்னர் கவிஞர் மாற்றுவதும் நடக்கும். நீதி படத்தில் வரும் பாடல் ஒன்று. MSV ‘இன்று முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்’ என்று வைத்த  வரிகளை தொடர்ந்து கண்ணதாசன் பாடல் எழுதி முடித்துவிட்டு, முதல் வரியை ‘நாளை முதல்’ என்று மாற்றினார் என்று படித்திருக்கிறேன்.

  சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ பாடலில் ‘செந்தாமரை இரு கண்ணானதோ’ என்ற வரியில் செந்தா….மரை என்று வார்த்தையை பூ மலர்வது போல் விரித்து அழகு செய்தது இசை. இதுபோல் இசை ஒரு பாடலின் வரிகளில் என்னவெல்லாம் செய்ய முடியும்?

  வாழ்க்கை படகு என்ற படத்தில் வரும் ‘ஆயிரம் பெண்மை மலரட்டுமே’ என்ற http://www.inbaminge.com/t/v/Vazhkai%20Padagu/Ayiram%20Penmai%20Malarattume.eng.html
  பாடலில்

  ஆயிரம் பெண்மை மலரட்டுமே

  ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே

  ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே

  சொல் சொல் சொல்.. தோழி சொல் சொல் சொல்

  அந்த சொல் என்ற வார்த்தையை மூன்று முறை – இல்லை ஆறு முறை பாட வைத்து வாக்கியத்திற்கு ஒரு Force கொடுக்கிறது இசை. இது சரணத்திலும் தொடர்கிறது.

  இன்னொரு பாடல். நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் வரும் ஒரு எவர்க்ரீன் பாடல் http://www.inbaminge.com/t/n/Nenjil%20Oor%20Aalayam/Sonnathu%20Nethana.eng.html

  சொன்னது நீதானா,

  சொல், சொல், சொல் என்னுயிரே .

  என்ற வரிகளில் வரும் சொல் , வலியுடன் வேதனையுடன் வெளிப்படும் ஒரு ஆதங்கத்தை உள்வாங்கி எதிரொலிக்கிறது.

  மூன்றாவது கலங்கரை விளக்கம் என்ற படத்தில் வரும் பொன்னெழில் பூத்தது புதுவானில் என்ற பாடல். http://www.inbaminge.com/t/k/Kalangarai%20Vilakkam/Ponnezil%20Poothathu.eng.html
  இதில் ஒரு வரி

  என் மனத் தோட்டத்து வண்ணப்பறவை

  சென்றது எங்கே சொல் சொல் சொல்.

  இதில் வரும் சொல் சொல், தேடலின் துடிப்பை பிரதிபலிக்கும்.

  இது பாடலில் முதலில் எழுதப்பட்டதா ? அல்லது பாடல் உருவாகும்போது செய்த மாற்றமா ? தெரியாது.முதல் இரண்டு கண்ணதாசன் எழுதிய பாடல்கள்   மூன்றாவது பஞ்சு அருணாசலம் எழுதியது. மூன்றுக்கும் இசை MSV அதனால்  கண்டிப்பாக இசையமைத்தவரின் பங்கு கணிசமானது என்றே தோன்றுகிறது.

  கொசுறாக ஒரு உதாரணம். கண்மணி ராஜா என்ற படத்தில் ‘ஓடம் கடலோடும் என்ற பாடலில் வரும் வரிகள். பாடலில் SPB இணையும் இடம்

  ஏதோ அது ஏதோ அதை நானும் நினைக்கின்றேன்
  ஏதோ அது ஏதோ அதை நானும் நினைக்கின்றேன்
  ஏனோஅது ஏனோ அதை நானும் ரசிக்கின்றேன்
  ஏதோ அது ஏதோ அதை நானும் நினைக்கின்றேன்
  ஏனோ அது ஏனோ அதை நானும் ரசிக்கின்றேன்

  இப்போது இந்த பாடலை கேளுங்கள். http://www.inbaminge.com/t/k/Kanmani%20Raja/Odam%20Kadalodum.eng.html
  Subtle மியூசிக் மாற்றம் இருந்தும் ஒரே வரியை உபயோகித்து பாடல் அமைத்து பின்னர் வரிகளிலும் சிறு மாற்றம் செய்தது போல் இருக்கிறது.  என்ன நடந்திருக்கும்? கவிஞர் ஒரு வரியை எழுதிக்கொடுத்து MSV பல விதமாக இசையமைததாரா ? அல்லது மெல்லிசை மன்னர் போட்ட மெட்டுக்கு இவர் ஒரே வரியை எழுதினாரா ? புரியாத புதிர்

  மோகன கிருஷ்ணன்

  084/365

   
  • Gopi Krishnan 2:03 pm on February 23, 2013 Permalink | Reply

   இது “போங்கு” ஆட்டம் !!!!

   இளையராஜாவின் “நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே” இந்த
   லிஸ்டில் இடம் பெறாதது மன்னிக்க முடியாத குற்றம் !!!!!

  • amas32 (@amas32) 2:56 pm on February 23, 2013 Permalink | Reply

   இந்த மாதிரி கேள்விகளைத் தான் இசையமைப்பாளர்களையும் பாடலாசிரியர்களையும் கேள்வி பதில் பகுதியில் கேட்கவேண்டும். எப்படி அவர்களுக்கு அந்த இன்ஸ்பிரேஷன் வருகிறது (அ) வந்தது என்று. இயக்குனர் பங்கும் இதில் இருக்கும் என்று நினைக்கிறேன். மக்கள் திலகம் எப்பொழுதும் இசையைமைக்கும் பொழுது ரிகார்டிங் ஸ்டூடியோவில் இருப்பார் என்று சொல்லக் கேள்வி. அவருக்கும் நல்ல இசை ஞானம் இருந்ததால் அவரும் பல கருத்துக்களைக் கொடுத்திருப்பார். ஏன் சில சமயம் பாடகர் கூட சில மாற்றங்களைச் சொல்லியிருக்கலாம். ஒவ்வொரு பாடலும் ஒரு கல்யாண சாப்பாடு தான்!

   amas32

  • rajinirams 5:46 pm on February 23, 2013 Permalink | Reply

   அருமையான பதிவு,கவிஞர்களின் அழுத்ததை அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்.
   இதே போன்று பலே பாண்டியாவில் நான் என்ன சொல்லிவிட்டேன் பாடலில் “என்ன என்ன என்ன”என்று பாடுவது நினைவிற்கு வருகிறது.குடும்ப தலைவனில் முதல் இரண்டு வரிகள்-ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம் -அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும் :-))

  • GiRa ஜிரா 9:52 am on February 26, 2013 Permalink | Reply

   மிக அருமையான பதிவு.

   பலருக்குத் தெரிந்த பலருக்குத் தெரியாத ஒரு ரகசியம் சொல்றேன்.

   மெல்லிசை மன்னர் கொண்டு வந்த பலபுதுமைகளில் ஒரு புதுமையைப் பத்திச் சொல்லப் போறேன். கவனமாக் குறிச்சுக்கோங்க. எடுத்துக்காட்டோட தொடங்கி கருத்தில் முடிக்கிறேன்.

   பொதுவா டூயட் பாடலில் ஒரு பல்லவியை ஆணும் பெண்ணும் பாடுவார்கள். இரண்டும் ஒரே மாதிரி வரிகளாக இருக்கும். மெட்டும் ஒரே மாதிரி இருக்கும்.

   ”ஒரு ராஜா ராணியிடம் வெகுநாளாக ஆசை கொண்டான்” என்ற வரியை பாடகரும் பாடகியும் ஒரே மெட்டில் பாடுவார்கள்.

   ஆனால் பல பாடல்களில் மெல்லிசை மன்னர் அப்படிச் செய்திருக்க மாட்டார். ஒரே மீட்டர்தான். ஆனால் ஆண் பாடும் மெட்டு ஒரு மாதிரியும் பெண் பாடும் மெட்டு இன்னொரு மாதிரியும் இருக்கும்.

   தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து என்று ஒரு டூயட் பாடல். இதில் வரிகள் ஒன்றுதான். ஆனால் ஏசுதாஸ் பாடும் மெட்டும் வாணி ஜெயராம் பாடும் மெட்டும் வெவ்வேறாக இருக்கும்.

   கிட்டத்தட்ட இரண்டு பாடல்களை ஒரே பாட்டுக்குள் அடக்கிய முயற்சி அது. இன்னொரு மெட்டை இன்னொரு பாட்டாகப் பயன்படுத்திக் கொள்ளலாமே என்றெல்லாம் யோசிக்காமல் பல பாடல்களுக்கு இப்படிச் செய்திருக்கிறார் மெல்லிசை மன்னர். இந்தப் புதுமையைப் பின்னால் பல இசையமைப்பாளர்கள் பின்பற்றினார்கள்.

   கண்மணி ராஜா படத்தில் வரும் ஏதோ அது ஏதோவும் அப்படித்தான். ஒரே வரிதான். ஆனால் ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவிதமாக ஒலிக்கும்.

   ஓடம் கடலோடும் பாடல் எனக்கு மிகமிகப் பிடித்த பாடல்.

   • Mohanakrishnan 9:12 pm on February 26, 2013 Permalink | Reply

    ரொம்ப சரி. அருமையான உதாரணம். நீரோடும் வைகையிலே பாடலின் துவக்கத்திலேயே TMS – சுசீலா இருவரும் இணைந்து பாடியது, மலர்களைப்போல் தங்கை பாடலில் கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் என்ற மூன்றாவது வரியை முதல் வரி போல அமைத்தது. பூமாலையில் ஓர் மல்லிகை பாடலில் TMS பாடும்போது ஒரு தாளமும் தொடர்ந்து சுசீலா பாடும்போது வேறு தாளமும் – இன்னும் இன்னும் MSV பற்றி பேச நிறைய உண்டு

 • G.Ra ஜிரா 10:36 am on February 22, 2013 Permalink | Reply  

  வென்றார் உண்டோ? 

  பெண் ஜென்மம் படம் எத்தனை பேருக்குத் தெரியும்? 1977ம் ஆண்டு ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தில் வந்த படம். பத்ரகாளி எடுத்து வெற்றி பெற்ற கையோடு எடுத்த படம் பெண் ஜென்மம். இந்தப் படத்துக்கும் இசை அப்போதைய புதியமுகமான இளையராஜாதான். ஆனால் படம் தோல்வியடைந்தது.

  பத்ரகாளி படத்தில் வாலி எழுதிய “கண்ணன் ஒரு கைக்குழந்தை” பாடல் இன்றும் மிகப் பிரபலம். ஒரு கணவன் மனைவிக்குள் இருக்கும் உரிமை நெருக்கம் அணைப்பு அனைத்தையும் அழகாகக் காட்டிய பாடல்.

  அதே போலவொரு பாடலை பெண் ஜென்மம் படத்திலும் வைக்க விரும்பினார் அதே ஏ.சி.திருலோகச்சந்தர். அதே இளையராஜா. அதே வாலி. அதே பி.சுசீலா. அதே கே.ஜே.ஏசுதாஸ். பாடலிலும் அதே இனிமை. ஆனால் அதே கண்ணன் அல்ல. இந்த முறை முருகன்.

  ஆனால் படத்தின் தோல்வி பாடலைப் பின்னடைய வைத்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

  சரி. பதிவின் கருத்துக்கு வருவோம். அந்தப் பாடலின் தகவல்களைக் கீழே கொடுத்துள்ளேன்

  செல்லப்பிள்ளை சரவணன்
  திருச்செந்தூர் வாழும் சுந்தரன்
  கோபத்தில் மனத்தாபத்தில்
  குன்றம் ஏறி நின்றவன் (செல்லப்பிள்ளை
  படம் – பெண் ஜென்மம்
  பாடல் – கவிஞர் வாலி
  பாடியவர்கள் – பி.சுசீலா, கே.ஜே.ஏசுதாஸ்
  இசை – இசைஞானி இளையராஜா
  ஆண்டு – 1977

  இந்தப் பாடலை இப்போது ஏன் எடுத்துப் பார்க்கிறோம்? இந்தப் பாடலின் நடுவில் வரும் ஒர் வரி என்னைச் சிந்திக்க வைத்தது. மனைவியின் புன்னகையை வியந்து கணவன் பாடுகிறான் இப்படி.

  மன்மதன் கணை ஐவகை
  அதில் ஓர் வகை உந்தன் புன்னகை

  இந்த வரிகளில் இருந்து மன்மதனின் கணைகள் ஐந்து வகையானவை என்று தெரிகிறது. பொதுவாக மன்மதனுக்குக் கரும்பு வில் என்றும் மலர்க்கணைகள் என்றும் நாம் அறிவோம். இதென்ன ஐந்து வகைக் கணைகள்?

  இந்த ஐந்து கணைகளையும் விளக்க நான் இன்னொரு கவிஞரை துணைக்கு அழைக்கிறேன். அவர்தான் கே.டி.சந்தானம். கண்காட்சி திரைப்படத்தில் அவர் எழுதிய வரிகளை ஏ.பி.நாகராஜன் வசனநடையில் மெதுவாகச் சொல்ல அதன்பின் எல்.ஆர்.ஈசுவரி மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் பாடல் தொடரும்.

  வெண்ணிலவை குடை பிடித்து வீசு தென்றல் தேரேறி
  மென் குயில்தான் இசை முழங்க மீன் வரைந்த கொடியசைய
  கண்கவரும் பேரழகி கனகமணிப் பொற்பாவை
  அன்ன நடை ரதியுடனே அழகுமதன் வில்லேந்தி
  தண்முல்லை, தாமரை, மா, தனி நீலம், அசோகமெனும்
  வண்ண மலர்க் கணை தொடுத்தான்
  வையமெல்லாம் வாழ்கவென்றே!

  அடடா! என்ன அழகான வரிகள். வாசிக்கவே சுவையாக இருக்கிறது. ஒரு நடையில் வாய்விட்டு சொல்லிப்பாருங்கள். கவிஞரின் எழுத்து நடையின் சிறப்பு புரியும். கே.டி.சந்தானம் ஒரு நடிகரும் கூட. ஏ.பி.நாகராஜன் படங்களில் எல்லாம் தவறாமல் இருப்பார். “என்ன பொருத்தம் நமக்குள் என்ன பொருத்தம்” பாடலில் ஜெயலலைதாவின் தந்தையாக வருவார்.

  மன்மதன் வைத்திருப்பது மலர்க்கணை என்றாலும் அதில் ஐவகை மலர்கள் உண்டு. அந்த ஐந்து மலர்களாவன முல்லை, தாமரை, மாம்பூ, நீலம் மற்றும் அசோகம். இந்த ஐந்து மலர்களில் ஒரு மலரைப் போல முந்தைய பாடலின் கதாநாயகியின் புன்னகை இருந்ததாம். அது எந்த மலரைப் போல என்று இப்போது ஊகிக்க எளிமையாக இருக்குமே!

  காமதேவாய வித்மஹே புஷ்பபாணாய தீமஹி
  தன்னோ அனங்க ப்ரசோதயா

  பாடலின் சுட்டிகள்.
  செல்லப்பிள்ளை சரவணன் (பெண் ஜென்மம்) – http://isaiaruvi.net/downloads/download.php?d=/Ilayaraja/Ilayaraja%20A-Z%20Songs/Part-11&filename=UGVuX0plbm1hbSBfLV9DaGVsbGFfUGlsbGFpX1NhcmF2YW5hbi0oSXNhaWFydXZpLk5ldCkubXAz&sort=0&p=0
  அனங்கன் அங்கதன் (கண்காட்சி) – http://youtu.be/Z_UG7cmU6Do

  அன்புடன்,
  ஜிரா

  083/365

   
  • amas32 2:21 pm on February 22, 2013 Permalink | Reply

   Super Post! அற்புதமாக எழுதறீங்க 🙂 அது என்னமோ கண்ணனைத் தான் நமக்குக் குழந்தையாகக் கொஞ்சத் தோன்றுகிறது. எனக்கு முருகன் என்றுமே குமரன், பாலகன், கோபித்துக் கொண்டு போய் பேசாமல் தனித்து நிற்கும் சிறுவன். அம்மா போய் தாஜா பண்ணி அழைத்து வர எதிர்பார்க்கும் அழகன். ஆனால் கண்ணனோ அன்னைக் கோபித்துக் கொண்டாலும் அவள் பின் முதுகில் சாய்ந்து கைகளை வளையமாக்கி அம்மா கழுத்தில் மாலையாக்கி அவள் கோபத்தைத் தீர்ப்பவன்.

   நம் இந்து மதத்தில் தான் அனைத்தும் போற்றத்தக்க வழிபடத்தக்கவை. காமமும் inclusive.
   “காமதேவாய வித்மஹே புஷ்பபாணாய தீமஹி
   தன்னோ அனங்க ப்ரசோதயா”

   amas32

  • Mohanakrishnan 9:39 pm on February 22, 2013 Permalink | Reply

   மன்மதன் கணை ல மல்லிப்பூ இல்லையா? நம்பவே முடியலே. அதனால்தான் முன் வரியில் ‘மாலையில் ஒரு மல்லிகை என மலர்ந்தவள் இந்த கன்னிகை’ வாலி வாலிதான்

 • என். சொக்கன் 12:18 pm on February 21, 2013 Permalink | Reply  

  எண்ணிப் பார்க்கவேண்டிய விஷயம் 

  • படம்: அபூர்வ ராகங்கள்
  • பாடல்: ஏழு ஸ்வரங்களுக்குள்
  • எழுதியவர்: கண்ணதாசன்
  • இசை: எம். எஸ். விஸ்வநாதன்
  • பாடியவர்: வாணி ஜெயராம்
  • Link: http://www.youtube.com/watch?v=51YPPoBKllg

  ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்!

  இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி!

  காணும் மனிதருக்குள் எத்தனை சலனம், வெறும்

  கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்!

  இந்தப் பாடலின் முதல் வரியில் ‘எத்தனை’ என்கிற வினாச்சொல் இருப்பினும், அது உண்மையில் கேள்வி அல்ல. ‘இருப்பவை ஏழு ஸ்வரங்கள்தாம். அதற்குள் எத்தனை எத்தனையோ பாடல்கள் அடங்கியுள்ளனவே!’ என்கிற வியப்பைக் குறிப்பிடும் வாக்கியம்தான்.

  ஆக, ‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்’ என்ற வரிக்கு, நாம் ‘1792 பாடல்கள்’ என்பதுபோல் ஓர் எண்ணிக்கையைக் குறிப்பிட்டு பதில் சொல்லவேண்டியதில்லை. அது கவிஞரின் நோக்கமும் இல்லை.

  ஒரு பேச்சுக்கு, நாம் இதை ஒரு கேள்வி வாக்கியமாகவே எடுத்துக்கொள்வோம். இதனுடன் அடிப்படைத் தொடர்பு கொண்ட, ஆனால் சற்றே வேறுபட்ட இன்னும் இரு சொற்களைப் புரிந்துகொள்வோம் : எத்துணை & எவ்வளவு.

  ‘எத்தனை’க்கும் ‘எத்துணை’க்கும் ’எவ்வளவு’க்கும் என்ன வித்தியாசம்?

  • ‘எத்தனை?’ என்று கேட்டால், அதற்குப் பதிலாக ஒன்று, இரண்டு, மூன்று, தொண்ணூற்றெட்டு, ஆறு லட்சத்துப் பதினாறு என்பதுபோல் ஓர் எண்ணை(Number)தான் பதிலாகச் சொல்லவேண்டும்
  • ‘எத்துணை?’ என்று கேட்டால், எண் + அதனுடன் அளவு (Unit) ஒன்றையும் சேர்த்து பதிலாகச் சொல்லவேண்டும்
  • ‘எவ்வளவு?’ம் ’எத்துணை’மாதிரியேதான்

  உதாரணமாக, ‘உனக்கு எத்தனை வயது?’ என்று ஒருவர் கேட்டால், ‘19’ என்று எண்ணிக்கையைப் பதிலாகச் சொல்லலாம். ’உன் வீட்டில் எத்தனை பேர் வசிக்கிறார்கள்?’ என்று கேட்டால், ‘6’ என்று எண்ணிக்கையைப் பதிலாகச் சொல்லலாம்.

  ஆனால் அதே நபர் ‘உன் சம்பளம் எத்தனை?’ என்று கேட்டால், அதற்கு என்ன பதில் சொல்வது?

  சம்பளம் என்பது வெறும் எண் அல்ல, ‘10’ என்று பதில் சொன்னால், அது பத்து ரூபாயா, பத்து பைசாவா, பத்து டாலரா, பத்து யூரோவா, பத்து தங்கக்கட்டிகளா?

  ஆக, ‘சம்பளம் எத்தனை?’ என்ற கேள்வி தவறு, ‘சம்பளம் எவ்வளவு?’ அல்லது ‘சம்பளம் எத்துணை?’ என்றுதான் கேட்கவேண்டும். அப்போது பதில் ‘10 ரூபாய்’ என்று (அளவோடு சேர்ந்து) வரும்.

  அதெல்லாம் முடியாது, நான் ’எத்தனை’யைதான் பயன்படுத்துவேன் என்று நீங்கள் பிடிவாதம் பிடித்தால், பிரச்னையில்லை, ‘உன்னுடைய சம்பளம் எத்தனை ரூபாய்?’ என்று சற்றே மாற்றிக் கேட்கலாம். அப்போது ‘10’ என்று (வெறும் எண்ணாக) பதில் கிடைக்கும்.

  இன்னும் சில உதாரணங்கள்:

  • உங்கள் வீட்டில் தினமும் எத்துணை பால் வாங்குகிறீர்கள்? (சரி)
  • உங்கள் வீட்டில் தினமும் எத்தனை லிட்டர் பால் வாங்குகிறீர்கள்? (சரி)
  • உன் உயரம் எத்தனை? (தவறு)
  • +2வில் நீ எத்தனை மார்க் வாங்கினாய்? (சரி)
  • இந்த மேட்ச்சில் சச்சின் டெண்டுல்கர் எத்தனை ரன் எடுத்தார்? (சரி)
  • இந்தக் கட்டுரையைப் படித்து முடிக்க எத்தனை நேரம் ஆகும்? (தவறு)
  • இந்தக் கட்டுரையைப் படித்து முடிக்க எத்தனை நிமிடங்கள் ஆகும்? (சரி)
  • இந்தக் கட்டுரையைப் படித்து முடிக்க எத்துணை நேரம் ஆகும்? (சரி)

  ‘எத்துணை’யின் இன்னொரு பயன்பாடு, அளவிடமுடியாத விஷயங்களைச் சொல்வது. உதாரணமாக, ‘இந்த ஓவியம்தான் எத்துணை அழகு!’

  இங்கே ‘எத்தனை’யைப் பயன்படுத்தினால் (’இந்த ஓவியம் எத்தனை அழகு!’) பதில் ஓர் எண்ணாக இருக்கவேண்டும். ஓவியத்தின் அழகை 10,  20 என்று நம்மால் அளவிட்டுச் சொல்லமுடியாதல்லவா?

  ’என்ன அழகு, எத்தனை அழகு!’ என்று ஒரு பிரபலமான பாட்டுக் கேட்டிருப்பீர்கள். அது ‘என்ன அழகு, எத்துணை அழகு!’ என்றுதான் இருக்கவேண்டும். காதலிக்கு ஐஸ் வைப்பதென்றாலும், இலக்கணப்படி ‘உன் முகம் எத்துணை அழகாக உள்ளது’ என்றுதான் கொஞ்சவேண்டும் :>

  அது நிற்க. இந்த நான்கு வரிகளில் கண்ணதாசன் மூன்றுமுறை ‘எத்தனை’யைப் பயன்படுத்துகிறார். அவை மூன்றும் சரிதானா? நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள் 🙂

  ***

  என். சொக்கன் …

  21 02 2013

  082/365

   
  • rajinirams 1:40 pm on February 21, 2013 Permalink | Reply

   எவ்வளவு அருமையாக எழுதியிருக்கிறீர்கள். எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது என்ற சிவகாமியின் செல்வன் பாடல் மிக பிரபலம்.

  • elavasam 1:51 pm on February 21, 2013 Permalink | Reply

   சொக்கன்.

   எனக்கு ஒரு குழப்பம்.

   நீங்கள் சொல்வதின் படி எத்துணை எவ்வளவு ரெண்டும் interchangeable என்பது போல தோன்றுகிறது. அது சரியா?

   எத்தனை என்பதற்கு விடையாக ஒரு எண்ணும், எவ்வளவு என்பதற்கு விடையாக ஒரு எண் + அதன் அளவையும், எத்துணை என்பதை அளவிட முடியாததற்கும் பயன்படுத்தி வருகிறேன்.

   உதாரணமாக

   இந்த இடுகையை எத்தனை பேர் படிப்பார்கள்? (100 / 1000 / 10000 என ஒரு எண்ணை விடையாகச் சொல்லி விடலாம்)

   இதை எழுத எவ்வளவு நேரம் ஆயிற்று? (ஒரு மணி நேரம், 45 நிமிடங்கள் என எண்ணையும் அதற்கான அளவையும் சேர்த்து விடையாகத் தரலாம்)

   இது போன்ற குழப்பங்களினால்தான் எத்துணை துன்பம்? (இதற்கு அளவாக ஒன்றும் சொல்ல முடியாது.)

   இப்படித்தான் நான் புரிந்து கொள்கிறேன். இந்த கேள்விகளை

   இதை எழுத எத்துணை நேரம் ஆயிற்று? இதனால்தான் எவ்வளவு துன்பம்? என்று எழுதுவது சரியா? எத்தனை பேர்? எத்தனை லிட்டர்? என்று வினவும் பொழுது பதிலுக்கான அளவை கேள்வியில் சொல்லி விடுகிறோம்.

   எவ்வளவு நேரம்? எவ்வளவு தூரம்? என்று வினவுகையில் பதிலில் அதற்கான அளவையும் சேர்த்து சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

   எத்துணை என்று போகும் பொழுது வெறும் எண்ணிக்கையால் பதில் சொல்ல முடியாது என்று தெளிவுபடுத்தி விடுகிறோம்.

   என் புரிதல் தவறா?

   • என். சொக்கன் 1:57 pm on February 21, 2013 Permalink | Reply

    //எத்தனை என்பதற்கு விடையாக ஒரு எண்ணும், எவ்வளவு என்பதற்கு விடையாக ஒரு எண் + அதன் அளவையும், எத்துணை என்பதை அளவிட முடியாததற்கும் பயன்படுத்தி வருகிறேன்//

    நானும் என் எழுத்தில் இப்படியேதான் பயன்படுத்துகிறேன். குழப்பம் இல்லாமல் உள்ளது.

    ஆனால், ‘எத்துணை சம்பளம்’ என்பது தவறு என்பதற்கான சான்றுகள் என்னிடம் இல்லை. ஆகவே, அப்படி இந்தக் கட்டுரையில் எழுதவில்லை.

    இதுபற்றி உறுதியான ஒரு விடையை (நன்னூல் / தொல்காப்பிய சூத்திரம்?) யாரேனும் சொன்னால், அப்டேட் செய்துவிடலாம்

  • elavasam 2:44 pm on February 21, 2013 Permalink | Reply

   ‘எத்துணை சம்பளம்’

   எத்தனை பேர், எத்துணை உழைப்பு, எவ்வளவு சம்பளம் – இதான் எனக்குப் பிடிச்சு இருக்கு 🙂

  • amas32 3:10 pm on February 21, 2013 Permalink | Reply

   மூன்று வரிகளிலும் he is making a rhetorical statement or just asking a rhetorical question. அப்போ மூன்று இடங்களிலும் எத்துணை என்று தானே வரவேண்டும்? This is not a rhetorical question, so please clarify my doubt 🙂

   amas32

  • Saba-Thambi 8:43 pm on February 21, 2013 Permalink | Reply

   உங்கள் பதிவை படிக்கும் பொழுது கீழ்வரும் பாடல் நினைவுக்கு வந்தது, அதில் வரும் “எத்துணை” இன்று தான் புரிந்தது. இதுவரை காலமும் ‘எத்துணை’ என்பது ‘எத்தனை’ என்பதின் மருவிய சொல் என்று நினத்திருந்தேன். உங்கள் விளக்கத்திற்கு மிக நன்றி.

   இப்பழைய கிறிஸ்தவப்பாடல் 1955- 65 தில் வெளியாகி இருக்க முடியும். திரைப்படத்தில் வந்த பாடல் அல்ல என்று ஊகிக்கிறேன். (I believe it is one of the old devotional song)

   பாட்டு : சகாய தாயின் சித்திரம் நோக்கு…
   குரல்: L.R.ஈஸ்வரி , P.B ஸ்ரீ நிவாஸ்
   படலாசிரியர் : ??

   சகாய தாயின் சித்திரம்(சரித்திரம்??) நோக்கு
   அபாயம் நீக்கும் அன்னையின் வாக்கு
   எத்துணை கனிவு எத்துணை தெளிவு
   ஏங்கிடும் மனதுக்கு வரும் நிறைவு

   (http://www.myspace.com/lreswarimusic/music/songs/sahathayin-sarithiram-78824360)

   மற்றைய திரைப்பாடல்கள் நினைவில் வருபவை:

   1. ராமன் எத்தனை ராமனடி..
   2. எத்தனை மலர்கள் தாவும் பட்டாம் பூச்சி.. ( இப் பாடலில் பல ‘எத்தனை’
   பயன்படுத்தி பாடலாசிரியர் வார்தைகளில் விளையாடியுள்ளார். கவியரசு ?

   Please keep writing, I am thoroughly enjoying this blog. Many thanks
   Saba

 • என். சொக்கன் 1:15 pm on February 20, 2013 Permalink | Reply  

  விருந்தினர் பதிவு : எந்த அவதாரம் 

  • படம்: தசாவதாரம்
  • பாடல்: முகுந்தா முகுந்தா
  • எழுதியவர்: வாலி
  • இசை: ஹிமேஷ் ராஷ்மியா
  • பாடியவர்: சாதனா சர்கம், கமலஹாசன்
  • Link: http://www.youtube.com/watch?v=ahKeeQrhVXg
  அமெரிக்காவில் ,தன் ஆராய்ச்சியில் உருவான ,உலகை அழிக்கவல்ல கிருமி ஒன்று தவறுதலாக இந்தியாவுக்கு பார்சலாகிவிட , அதைத் தேடி அழிக்க/பாதுகாக்க அந்த விஞ்ஞானியும், அவரைத் தேடி ஒரு கொலைக்கார ஏஜண்ட்டும்(அமெரிக்கன்) இந்தியா வருகிறார்கள். அந்தப் பார்சல் சிதம்பரத்தில் இருக்கும் ஒரு பாட்டியிடம் வந்து சேர்கிறது. அதைத் தெரிந்துக்கொண்டு விஞ்ஞானி,ஏஜண்ட் மற்றும் இவர்களை பின் தொடர்ந்து ஒரு ரா அதிகாரியும் சிதம்பரத்துக்குப் புறப்படும் இடத்தில் இந்தப் பாடல் அந்தப் பாட்டி இருக்கும் மடத்தில் கதாநாயகியால் பாடப்படுவதாக வருகிறது. இவ்வளவு பரபரப்பானக் கதையில் சரியான இடத்தில் இந்தப் பாடல் அமைந்திருக்கும். 
   
  பாடலில் 2 சரணங்கள் உண்டு. ஆனால் இந்த 2வது சரணம் மட்டும் தான் படத்தில் வந்தது என நினைக்கிறேன்.

  மச்சமாக நீரில் தோன்றி மறைகள் தன்னைக் காத்தாய்
  கூர்மமாக மண்ணில் தோன்றி பூமி தன்னை மீட்டாய்
  வாமனன் போல் தோற்றம் கொண்டு வானளந்து நின்றாய்
  நரன் கலந்த சிம்மமாகி ஹிரணியனைக் கொன்றாய்
  ராவணன் தன் தலையைக் கொய்ய ராமனாக வந்தாய்
  கண்ணனாக நீயே வந்து காதலும் தந்தாய் 

  கூர்மம் – ஆமை. தேவர்களுக்கு அசுரர்களுக்கும் நடக்கும் சண்டையில் ஆமையாக அவதாரமெடுத்து உதவி செய்தார்.

  வராக அவதாரத்தில் தான் பூமியைக் காத்தார்.

  என் மனைவிதான் இதை முதலில் கவனித்து என்னிடம் சொன்னது.ஆனா இரண்டு பேருக்கும் கூர்மம்,வராகத்தில் குழப்பமிருந்தது. எது ஆமை, எது பன்றி என.. அப்போது நான் சொன்னது “ பாட்டு எழுதினது வாலி. இந்த டாப்பிக்கில் அவர் தப்பு செய்ய வாய்ப்பே இல்லை”…

  அவருக்கு மிகவும் பிடித்த ஏரியா இது. அதனால் கண்டிப்பாகத் கூர்மம்/வராகம் குழப்பத்தில் இப்படி எழுதியிருக்கமாட்டார் என நம்புகிறேன்.

  அப்படியென்றால் வேறு என்ன சாத்தியங்கள் இருக்கலாம்!

  • ’வராகமாக மண்ணில் தோன்றி பூமி தன்னை மீட்டாய்’ என்றே அவர் எழுதியிருக்கலாம். “வராகமாஹ” ட்யுன் சே பைட்டியே நஹிஜின்னு இசையமைப்பாளர் நச்சரித்து,இவர் கடுப்பில் ”போய்யா கூர்மமாகன்னு போட்டுக்கோ,சரியா வரும் என சொல்லியிருக்கலாம் :))
  • சரி. “கூர்மமாக” என மாத்தியாச்சு. அப்படியே பின்னால் உள்ள வரியை மாத்திருக்கலாமே. இந்தக் கதையே உலகத்தை ஒரு கிருமியில் இருந்துக் காக்க முயல்பவனின் கதை தான். அதை இந்தப் பாடலில் தொட்டுவிடலாம் என நினைத்திருக்கலாம்

  ஒருவேளை ஏதோ ஞாபகத்தில் வாலியே மாத்தி எழுதிருந்தால் , அவர் எழுதிய பேப்பரில் இருந்து நம் காதுகளுக்கு வந்து சேர 7 கடல் 7 மலை தாண்டித்தான் வந்திருக்கும். ஒருவர் கூடவா கவனிக்கவில்லை!?

  இசையமைப்பாளருக்கும் பாடலைப் பாடியவருக்கும் அர்த்தம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

  படத்தில் கூட இந்த வரிக்கு வராகவதாரத்தைத் தான் காட்டுவார்கள்.

  சூட்டிங்கில் கமல் கவனிக்கவில்லையா!! அது சரி! அவர் பாவம் ஏதாவது மூலையில் வாயைக்கூட அசைக்கமுடியாதபடி மேக்கப் போட்டிட்டிருந்திருப்பாரு.

  யாராவது ஒரு உதவியாளர் கவனித்துச் சொல்லிருந்தால் கூட ” பாட்டு எழுதினது வாலி. இந்த டாப்பிக்கில் அவர் தப்பு செய்ய வாய்ப்பே இல்லை” என அவருக்கு மேல் உள்ளவரால் அமைதியாக்கப்பட்டிருப்பார் 🙂

  காளீஸ் 

   
  • LakshmiNarayanan 5:40 pm on February 20, 2013 Permalink | Reply

   Super da..!!! Paadal varigalai …..ivvalavu nunukama aaraya mudiyum nnu …ippo thaan
   theriyudhu ///

  • amas32 3:16 pm on February 21, 2013 Permalink | Reply

   ஆராயக் கூடாது அனுபவிக்கணம் என்று கமல் பேசும் கிரேசி மோகனின் ஒரு பேமஸ் டயலாக் உண்டு. அனுபவி ஆனால் கூடவே ஆராய்ச்சியும் பண்ணு என்கிறது #4varinote ! Super 🙂

   amas32

  • Mohanakrishnan 6:28 pm on February 21, 2013 Permalink | Reply

   Super. I have heard this song so many times but missed this point.
   கண்ணதாசன் திருமால் பெருமையில் தெளிவாக சொன்னது

   அசுரர்கள் கொடுமைக்கு முடிவாகும் எங்கள்
   அச்சுதனே உந்தன் அவதாரம் கூர்ம அவதாரம்
   பூமியை காத்திட ஒரு காலம் நீ
   புனைந்தது மற்றொரு அவதாரம் வராக அவதாரம்

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel