கவலைப்படாதே சகோதரா!

  • படம்: ஆனந்த ஜோதி
  • பாடல்: காலமகள் கண் திறப்பாள் சின்னையா
  • எழுதியவர்: கண்ணதாசன்
  • இசை: விஸ்வநாதன், ராமமூர்த்தி
  • பாடியவர்: பி. சுசீலா
  • Link: http://www.youtube.com/watch?v=lYKYBy6Qzfs

சின்னச் சின்ன துன்பமெல்லாம்

எண்ண எண்ணக் கூடுமடா!

ஆவதெல்லாம் ஆகட்டுமே,

அமைதி கொள்ளடா!

கண்ணதாசனின் பல பாடல்களைப் படிக்கும்போது அல்லது கேட்கும்போது, இவர் ஒரு மனோதத்துவ நிபுணராக இருப்பாரோ என்று சந்தேகம் வரும். இந்தப் பாடல் அந்த வகைதான்.

ஒரு சின்னக் கல்லைச் சிறிது நேரம் கையில் வைத்திருந்தால் வலி ஏற்படாது, அதையே அதே நிலையில் சில மணி நேரங்கள் வைத்திருந்தால் கஷ்டம்தான்.

’நாம் சந்திக்கிற துன்பங்களெல்லாம் அப்படிதான்’ என்று ஒரே போடாகப் போட்டுவிடுகிறார் கண்ணதாசன். ’சிறிய கல்லைக்கூடப் பெரிய பாறையாக்குவது நம் எண்ணங்கள்தான், என்ன நடந்தாலும் சமாளிக்கலாம் என்று அமைதியாக இருப்போம்!’ என்று எளிய சொற்களில் தெளிவாகச் சொல்லிவிடுகிறார்.

ஒரு சிறுவனைப் பார்த்து நாயகி பாடுவதாக வரும் இந்தப் பாடலில் பாதி தன்னம்பிக்கை, மீதி கடவுள் நம்பிக்கை. ‘கல்லிருக்கும் தேரைக்கெல்லாம் கருணை தந்த தெய்வம், கனி இருக்கும் வண்டுக்கெல்லாம் துணை இருந்த தெய்வம், நெல்லுக்குள்ளே மணியை, நெருப்பினிலே ஒளியை உள்ளுக்குள்ளே வைத்த தெய்வம் உனக்கு இல்லையா? தம்பி, நமக்கு இல்லையா?’ என்கிற வரிகளைக் கேட்டு நம்பிக்கை பெறும் அந்தச் சிறுவர், பி(இ)ன்னாள் நா(த்தி)யகர் கமலஹாசன்!

அதனால் என்ன? கண்ணதாசனும் முன்னாள் நாத்திகர்தானே!

***

என். சொக்கன் …

24 11 2013

357/365