Updates from November, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • என். சொக்கன் 10:50 pm on November 18, 2013 Permalink | Reply  

  உத்தரவின்றி உள்ளே வா 

  • படம்: ஜில்லுன்னு ஒரு காதல்
  • பாடல்: முன்பே வா
  • எழுதியவர்: வாலி
  • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
  • பாடியவர்கள்: நரேஷ் ஐயர், ஷ்ரேயா கோஷல்
  • Link: http://www.youtube.com/watch?v=OHA_ATdgw_g

  நீ நீ மழையில் ஆட,

  நான் நான் நனைந்தே வாட,

  என் நாளத்தில் உன் ரத்தம்,

  நாடிக்குள் உன் சத்தம்!

  பள்ளியில் தமிழ் மீடியத்தில் அறிவியல் (அல்லது உயிரியல்) படித்தவர்களுக்கு இந்த வரிகளைப் படித்தவுடன் சட்டென்று அந்த ‘நாளம்’ என்ற சொல்லில் மனம் சென்று நிற்கும்.

  ’ரத்தக் குழாய்’ என்று நாம் பரவலாகச் சொல்லும் அதே வார்த்தைதான். ’ரத்த நாளம்’ என்று சொன்னால் இன்னும் அழகாக இருக்கிறது. நாளத்திற்கும் குழாய்க்கும் ஏதேனும் நுட்பமான வேறுபாடு உண்டா என்று தெரியவில்லை.

  அப்புறம் அந்த நாளமில்லாச் சுரப்பிகள்? தமனி? சிரை? தந்துகி? இந்த வார்த்தைகளையெல்லாம் கேட்கும்போது, மறுபடி ஒன்பதாங்கிளாஸுக்குத் திரும்பிவிடமாட்டோமா என்றிருக்கிறது!

  விஷயத்துக்கு வருவோம். நம் உடம்பு நிறைய இருக்கும் ரத்த நாளங்கள் பேச்சிலோ, சினிமாப் பாடல்களிலோ அதிகம் வருவதில்லை என்று நினைத்தேன். கொஞ்சம் தேடினால் ஒரு சில நல்ல உதாரணங்கள் சிக்கின:

  உயிர் உருகிய அந்த நாள் சுகம்,

  அதை நினைக்கையில்,

  ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும் (வாலி)

  ***

  நாளங்கள் ஊடே

  உனதன்பின் பெருவெள்ளம் (மதன் கார்க்கி)

  ***

  ரத்த நாளங்களில் போடும் தாளங்களில்

  புதுத் தாலாட்டுதான் பாடுமா? (பொன்னியின் செல்வன்)

  ***

  மேளங்கள் முழங்குதுங்க, ரத்த

  நாளங்கள் துடிக்குதுங்க (டி. ராஜேந்தர்)

  ***

  ஒரே ஒரு ஆச்சர்யம், ”அறிவியல் கவிஞர்” வைரமுத்து இந்தச் சொல்லை இதுவரை பயன்படுத்தவில்லையோ?

  ***

  என். சொக்கன் …

  18 11 2013

  351/365

   

   
  • Uma Chelvan 6:52 am on November 19, 2013 Permalink | Reply

   நாளமில்லாச் சுரப்பிகள்……..endocrine glands ….that’s what I taught my students today. What a coincident….

   அஞ்சு நாள் வரை அவள் பொழிந்தது ஆசையின் மழை!!
   அதில் நனைந்தது நூறு ஜென்மங்கள் நினைவினில் இருக்கும் -அது போல்
   இந்த நாள் வரும் உயிர் உருகிய அந்த நாள் சுகம். – அதை நினைக்கையில்
   ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும் ………ஒரு நிமிஷம் கூட என்னை பிரியவில்லை

   மிக மிக அருமையான பாடல். இதை தான் முதல் பாடலாக நீங்க சொல்லி இருக்கீங்க!!! still I want to post this song again !!!

  • amas32 8:37 pm on November 19, 2013 Permalink | Reply

   எவ்வளவு ஆராய்ச்சிப் பண்ணியிருக்கீங்க ஒரு பதிவுக்கு! வைரமுத்து இந்த சொல்லை பயன்படுத்தவில்லை என்னும் அளவுக்கு research!

   //என் நாளத்தில் உன் ரத்தம்,// very romantic!

   ரொம்பப் பிடிச்சிருக்கு இந்த போஸ்ட் 🙂

   amas32

  • rajinirams 11:28 am on November 20, 2013 Permalink | Reply

   நல்ல பதிவு. என்ன அருமையான வாலியின் வரிகள் -உயிர் உருகிய அந்த நாள் சுகம்,அதை நினைக்கையில்,ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும்,நீங்கள் சொன்னது போல வைரமுத்து அந்த வார்த்தையை உபயோகிக்காதது ஆச்சர்யமே.

  • நவநீதன் 9:34 pm on January 29, 2014 Permalink | Reply

   ”வந்து தூறல் போடு… இல்லை சாரல் போடு… எந்தன் நாளம் நனையட்டுமே…”

   வைரமுத்து

   படம்: க.கொ.க.கொ
   பாடல்: ஸ்மை யாயி..

 • என். சொக்கன் 1:34 pm on April 17, 2013 Permalink | Reply  

  விருந்தினர் பதிவு : முன்னோர்கள் 

  வைகைப்புயலார் வடிவேலுவின் மேனேஜ்மெண்ட் தத்துவங்களில் ஒன்று “வரலாறு மிக முக்கியம் அமைச்சரே”. 

   

  நமக்கு முந்தையக் காலத்தில் வாழ்ந்தவர்களைப்  பற்றி நாம் அறிந்துக் கொள்ள, அவர்களைப் பற்றிய பதிவுகள் அவசியம். 

   

  அந்தந்தத் துறையில் சிறந்து விளங்கிய தங்கள் முன்னோர்களை,அடுத்தடுத்த தலைமுறையினர் பதிவு செய்வது கலை,அறிவியல்,விளையாட்டுக்களில் பரவலாக இருப்பதுதான்.

   

  நாம் இப்பொழுது பார்க்கப்போவது பதிவுகள் என்பதை விட குறிப்புகள் எனச் சொல்லாம் 🙂 

   

  தமிழ்சினிமா பாடல்வரிகளில் , ஒரு கவிஞர்,தான் எழுதியப் பாடல்களில் வேறு கவிஞரின் பெயரை உபயோகப்படுத்தியப் பாடல்களைப் பார்க்கலாம்.

   

  ரொம்ப பின்னோக்கிப் போனால், வள்ளுவர்,கம்பன்,பாரதி – இவர்களது பெயர் அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளது என நினைக்கிறேன். 

   

  “கம்பன் ஏமாந்தான் “

  ”கம்பனை வம்புக்கிழுத்தேன்”

  “கம்பன் காணாத கற்பனை”

  “பாரதியை படிச்சுப்புட்டா பெண்களுக்கும் வீரம் வரும்”

   

  என இவர்கள் பெயர் உள்ள பாடல்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும். அதனால் இவர்களை விட்டுவிடலாம்.

   

  Immediate முன்னோர்களைப் பற்றி மட்டும் பார்க்கலாம்.

   

  இதில் சட்டென நினைவுக்கு வரும் பாடல்கள் இவை. 

   

  “கண்ணதாசனே ,எந்தன் காதல் வரிகளை கொஞ்சம் திருத்திக் கொடு”      எழுதியவர்- காமகோடியான் –

   படம் – மரிக்கொழுந்து

   

  “காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ”

  எழுதியவர் – வாலி

  படம்  – சூரக்கோட்டை சிங்கக்குட்டி

   

  சொன்னான் அந்தக் கண்ணதாசன் பாட்டுல 

  ( யார் எழுதியதெனத் தெரியவில்லை.) 

  படம் – “வரவு எட்டண்ணா செலவு எட்டண்ணா

   

  எந்த தொழில் செய்தாலென்ன செய்யும் தொழில் தெய்வமென்று பட்டுக்கோட்டை பாட்டில் சொன்னானே!! –  

  எழுதியவர்-வாலி – 

  படம் “சந்திரமுகி”

   

  பட்டுக்கோட்டை வார்த்தைகளை போட்டு
  நம்ப புரட்ச்சியாரு பாடி வெச்ச பாட்டு – 
  எழுதியவர்- வாலி 
  படம் – ”தூங்காதே தம்பி தூங்காதே தம்பி”

   

  “வாலி போல பாட்டெழுத எனக்குத் தெரியலயே”  – 

  எழுதியவர் – சிம்பு 

  படம் -வல்லவன்

  ”வாலி, வைரமுத்து… உன்போல யாரு கவிதை யோசிச்சா?”

  எழுதியவர் : கார்க்கி

  படம்: ரெண்டாவது படம்

  மேற்கண்ட வரிகளை எழுதிய கார்க்கியிடம் இதுபற்றிக் கேட்டபோது, ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைச் சொன்னார், இந்தப் பாடல் வரியில் இடம்பெற்ற வாலி, வைரமுத்து இருவருமே, தங்களது சொந்தப் பெயரையே தங்களுடைய பாடல்களில் இடம்பெறச் செய்துள்ளார்கள். இப்படி:

  • ”எதிர் நீச்சலடி, அட ஜாலியா வாலி சொன்னபடி” (படம்: எதிர்நீச்சல், எழுதியவர்: வாலி)
  • “பாட்டு கட்டும் நம்ம வைரமுத்தைக் கேட்டு, பாரதிராசா சொன்ன கிராமத்தைக் காட்டு” (படம்: தமிழ்ச்செல்வன், எழுதியவர்: வைரமுத்து)

  காளீஸ்

  (http://www.twitter.com/eestweets)

   
  • rajinirams 11:05 pm on April 17, 2013 Permalink | Reply

   சூப்பர் சார். வரவு எட்டணா பட பாடல் வாலி எழுதியது,அஞ்சாதே படத்தில் (மக்கள் கவிஞர்:-))?)கபிலன் எழுதிய பாடல் கண்ணதாசன் காரைக்குடி பேரை சொல்லி ஊத்தி குடி பாடலுக்கு -ஆரம்பத்தில் இந்த பாடலுக்கு லேசான எதிர்ப்பு தோன்றி மறைந்தது. ஒரு படத்தின் நாயகனே பாடலை பாடுவதற்கு முன் எழுதியவர் பெயரை சொன்ன பெருமை வாலிக்கு மட்டுமே-நேற்று இன்று நாளை படத்தில் எம்ஜியார் பாடல்-வாலி என்று சொல்லிவிட்டு “தம்பி நான் படிச்சேன் காஞ்சியிலே நேற்று”என்று பாடுவார்.திமுகவின் நகராட்சி ஊழல்கள் பற்றிஎல்லாம் அமைந்த அந்த பாடல் பட்டி தொட்டியெல்லாம் முழங்கி அதிமுகவின் வெற்றிக்கு ஒரு காரணமாகவும் அமைந்தது. நன்றி.

   • GiRa ஜிரா 2:22 pm on April 19, 2013 Permalink | Reply

    அதே போல இளமை ஊஞ்சலாடுகிறது திரைப்படத்திலும் பாடல்-வாலி, இசை-இளையராஜான்னு வரும். ஒரே நாள் உனை நான் பாட்டுக்கு முன்னாடி

   • GiRa ஜிரா 2:46 pm on April 19, 2013 Permalink | Reply

    மிக நல்ல பதிவு. உண்மையிலேயே வரலாறு முக்கியம். இந்த மாதிரி பெயர்களைப் பயன்படுத்தும் போது இலக்கியங்களின் காலத்தையும் கணிக்க பின்னாளில் உதவும்.

  • amas32 6:16 pm on April 18, 2013 Permalink | Reply

   இது ஒரு ஜாலி போச்ட்! ரொம்ப நன்றாக உள்ளது 🙂 முந்தய தலை முறையினறை நல்ல முறையில் போற்றி குறிப்பிடுவது, அட்லீச்ட் குறிப்பிடுவத்உ வரலாறுக்கு முக்கியம் தான்!

   amas32

 • G.Ra ஜிரா 11:24 am on March 25, 2013 Permalink | Reply
  Tags: ஆர்.சுதர்சனம், உடுமலை நாராயணகவி, என்.எஸ்.கிருஷ்ணன், எஸ்.வி.வெங்கட்ராமன், கா.மு.ஷெரிப், சிதம்பரம் சி.எஸ்.ஜெயராமன், ஜெரார்டு, ஜேம்ஸ் வசந்தன், திருச்சி லோகநாதன், மாயா   

  காசு மேலே, காசு வந்து… 

  ஒருவன் ஒரு பிறப்பில் கற்ற கல்வி ஏழுபிறப்பிலும் தொடர்ந்து வரும் என்று ஐயன் வள்ளுவர் கூறியிருக்கிறார். கல்வியும் பாவபுண்ணியங்களும் தொடர்ந்து வரும். ஆனால் செல்வம்?

  ஒரு பிறப்பில் பெற்ற செல்வம் அந்தப் பிறப்பு முழுதும் தொடர்ந்து வந்தாலே அது பெரும் பேறு. ஓரிடத்தில் நில்லாமல் ”செல் செல்” செல்வதால் அதற்குச் செல்வம் என்று பெயர் வந்ததோ! இன்றைக்கு செல்வம் என்பது பணம் என்றாகி விட்டது.

  அந்தப் பணம்(பொருள்) இல்லாதவர்க்கு இவ்வுலக வாழ்க்கை இல்லை என்றும் ஐயன் வள்ளுவர்தான் கூறியிருக்கிறார். இந்த உலகத்தில் பணம் இல்லையென்றால் எதுவும் செய்ய முடியாது. அந்தப் பணத்தை வைத்து பழைய படங்களில் நிறைய பாடல்கள் வந்திருக்கின்றன. ஏனென்றால் அந்த படங்களில் இயல்பான மனிதர்களின் எளிய பிரச்சனைகள் சிறிதேனும் அலசப்பட்டன.

  பணம் என்றே ஒரு திரைப்படம். அதற்கு முன் எம்.எஸ்.விசுவநாதன் தனியாக இசையமைத்திருந்தாலும் மெல்லிசை மன்னர்கள் இருவருமாக இணைந்து இசையமைத்த முதற்படம் பணம். அவர்கள் இசையில் இந்தப் படத்தில் ஒரு பாடல். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனே எழுதிப் பாடிய பாடலிது.

  எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்
  பணத்தை எங்கே தேடுவேன்
  உலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்
  அரசன் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை எங்கே தேடுவேன்
  கருப்பு மார்க்கெட்டில் கலங்குகின்றாயோ
  கஞ்சன் கையிலே சிக்கிக் கொண்டாயோ
  கிண்டி ரேசில் சுத்திக் கிறுகிறுத்தாயோ
  திருப்பதி உண்டியலில் சேர்ந்து விட்டாயோ
  திருவண்ணாமலை குகை புகுந்தாயோ
  தேர்தலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ
  தேக சுகத்துக்காக ஊட்டி சென்றாயோ

  நகைச்சுவையாக வரிகள் இருப்பது போலத் தோன்றினாலும் பாடலில் பணம் பதுங்கியிருக்கும் இடங்கள் தெள்ளத் தெளிவாகத் தெரியும். கலைவாணர் என்ற பெயர் பாடலை எழுதியவருக்குப் பொருத்தமே.

  இப்படிப் பட்ட பணம் அனைத்தையும் ஆட்டி வைக்கும். எதுவும் அதன் முன் வாலாட்ட முடியாது என்பதை அதே காலகட்டத்தில் வந்த பராசக்தி திரைப்படத்தில் ஆர்.சுதர்சனம் இசையில் உடுமலை நாராயணகவி எழுதினார்.

  தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம்
  காசு முன் செல்லாதடி குதம்பாய் காசு முன் செல்லாதடி
  ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
  காசுக்குப் பின்னாலே குதம்பாய் காசுக்குப் பின்னாலே

  அப்படி பணத்தின் திறமையைச் சொல்லும் போது “ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசு பணம் காரியத்தில் கண்ணாய் இருக்கனும்” என்று நமக்கெல்லாம் அறிவுரையும் சொல்கிறார் உடுமலை நாராயணகவி. சிதம்பரம் சி.எஸ்.ஜெயராமன் இந்தப் பாடலை மிக அருமையாகப் பாடியிருக்கிறார்.

  இப்படி ஆரியக் கூத்தோ காரியக் கூத்தோ ஆடிச் சம்பாதிக்கும் பணம் எப்படியெல்லாம் செலவாகிறது என்பது தெரியாமலேயே செல்வாகிவிடும். இன்றுதான் வங்கிக் கணக்கில் சம்பளம் வந்தது போல இருக்கும். சில நாட்களிலேயே பழைய நிலைதான். இதையும் பாட்டில் சொல்ல பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கு எஸ்.வி.வெங்கட்ராமன் இசையில் வாய்ப்பளித்தது இரும்புத்திரை திரைப்படம். பாடலுக்குக் குரலால் உயிர் கொடுத்தவர் திருச்சி லோகனாதன்.

  கையில வாங்கினேன்
  பையில போடல
  காசு போன எடம் தெரியல்லே
  என் காதலி பாப்பா காரணம் கேப்பா
  ஏது சொல்லுவதென்றும் புரியல்லே
  ஏழைக்கு காலம் சரியில்லே

  இப்படியான நிலையில் பணம் இருப்பவனைத்தான் உலகம் மதிக்கிறது. அவனே வல்லான். அவன் வகுத்ததே வாய்க்கால். எவ்வளவு நல்ல குணமுடையவனாக இருந்தாலும் பணத்தைப் பார்த்துதான் உற்றாரும் ஊராரும் மதிப்பார்கள் என்பதை கா.மு.ஷெரிப் ஒரு பாடலில் அழகாகக் காட்டியிருப்பார். பணம் பந்தியிலே என்ற திரைப்படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடலது.

  பணம் பந்தியிலே குணம் குப்பையிலே
  அதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே

  இந்த உலகத்தையே இன்பவுலகமாக்கும் அந்தப் பணம் வந்தால் கொண்டாட்டங்களும் குதியாட்டங்களுக்கும் குறைவேது. பணம் வந்தால் அதைத் திருப்புவேன் இதைப் புரட்டுவேன் என்று கனவு காணும் மக்கள்தான் எத்தனையெத்தனை பேர். அத்தனை கனவுகளையும் கவிஞர் ஆலங்குடி சோமு ஒரு பாட்டில் வைத்தார். சொர்க்கம் திரைப்படத்தில் இடம் பெற்ற அந்தப் பாடலை எம்.எஸ்.விசுவநாதன் இசையில் டி.எம்.சௌந்தரராஜன் பாடினார்.

  பொன்மகள் வந்தாள் பொருள் கோடிதந்தாள்
  பூமேடை வாசல் பொங்கும் தேனாக
  ………………………………………………
  செல்வத்தின் அணைப்பில் கிடப்பேன்
  வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன் ராஜனாக
  இன்பத்தின் மனதில் குளிப்பேன்
  என்றென்றும் சுகத்தில் மிதப்பேன் வீரனாக

  இப்படியெல்லாம் கனவு கண்ட ஏழையிடம் காசு உண்மையிலே வந்து விடுகிறது. சும்மாயிருப்பானா? அதற்கும் திரைப்படத்தில் ஒரு பாடல் உண்டு. கார்த்திக்ராஜா இசையில் வாலி எழுதி கமலும் உதித்நாராயணனும் பாடினார்கள்.

  காசு மேலே காசு வந்து கொட்டுகிற நேரமிது
  வாசக்கதவ ராசலெச்சுமி தட்டுகிற நேரமிது
  அட சுக்கிரன் உச்சத்தில்
  லக்குதான் மச்சத்தில்
  வந்தது கைக்காசுதான்

  காசு என்று சொல்லிவிட்டாலும் ஒவ்வொரு ஊரிலும் அதற்கு ஒவ்வொரு பெயர். இந்தியாவில் இன்று ரூபாய். அமெரிக்காவில் டாலர். ஐரோப்பாவில் யூரோ. ரஷ்யாவில் ரூபிள் என்று எத்தனை வகையான பணங்கள். அந்தப் பண வகைகளை மதன் கார்க்கி புத்தகம் திரைப்படப் பாடலில் ஜேம்ஸ் வசந்தன் இசையில் அடுக்கியுள்ளார். அப்படிப் பட்டியல் போடுவதோடு நிற்காமல் பணம் இல்லாவிட்டாலும் தூக்கமில்லை இருந்தாலும் தூக்கமில்லை என்றொரு உண்மையையும் சொல்லியிருக்கிறார். ஜெரார்டும் மாயாவும் இணைந்து இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார்கள்.

  டாலர் யூரோ ரூபா ரூபிள் பெசோ டாகா
  ரியல் புலா தினார் ரிங்கிட் குனா கினா
  யுவான் லிரா க்ரோனி பவுண்ட் யென் ராண்ட் ஆஃப்கானி
  கோலன் ஃப்ரான்க் சொமோனி Money is so funny!
  ……………………………………….
  கையில் வரும் வரைக்கும் கண்ணில் இல்ல உறக்கம்
  கையில் அது கெடச்சும் கண்ணில் இல்லடா உறக்கம்

  என்னதான் சொல்லுங்கள். காசு எல்லா இடங்களிலும் வேலை செய்வதில்லை. காசு குடுத்து அன்பை வாங்க முடியாது. சாப்பாட்டை வாங்கலாம். பசியை வாங்க முடியாது. மிகப் பெரிய கோயிலையே கட்டலாம். ஆனால் காசு குடுத்து அருளை ஒருபோதும் வாங்கவே முடியாது. அனைத்துக்கும் மேலாக பணம் மட்டுமே நிம்மதியைக் கொடுக்காது. இப்படியாக பணத்தால் செய்ய முடியாததை இன்னொன்று செய்யும். அது என்னவென்று மெல்லிசை மன்னர் இசையில் கவியரசர் கண்ணதாசன் எழுதி டி.எம்.சௌந்தரராஜன் அந்தமான் காதலி திரைப்படத்துகாக பாடியிருக்கிறார்.

  பணம் என்னடா பணம் பணம்
  குணம் தானடா நிரந்தரம்

  பதிவில் இடம் பெற்ற பாடல்களின் சுட்டிகள்.

  பணம் என்னடா பணம் பணம் – http://youtu.be/xgUCFhNpOhY
  எங்கே தேடுவேன் பணத்தை – http://youtu.be/4cX12Szgsyc
  தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை – http://youtu.be/eCVQAzG8_14
  கையில வாங்குனேன் பையில போடல – http://youtu.be/UDhOVDUouhc
  பணம் பந்தியிலே குணம் குப்பையிலே – http://youtu.be/1VKqj92W73k
  பொன்மகள் வந்தாள் பொருள் கோடி – http://youtu.be/XGr0vonzcjE
  காசுமேல காசு வந்து – http://youtu.be/iMu_QWzjoW4
  டாலர் யூரோ ரூபா ரூபிள் – http://youtu.be/MA-_OfqUl_0

  அன்புடன்,
  ஜிரா

  114/365

   
  • மழை!! 4:10 pm on March 25, 2013 Permalink | Reply

   wow.. super.. thanks geeraa.. :)))))))

   • GiRa ஜிரா 9:06 am on April 1, 2013 Permalink | Reply

    நன்றி 🙂

  • rajnirams 5:09 pm on March 25, 2013 Permalink | Reply

   ஆஹா ஓஹோ…கலக்கிட்டீங்க சார்.வாழ்த்துக்கள்.

   • GiRa ஜிரா 9:06 am on April 1, 2013 Permalink | Reply

    நன்றி நண்பரே 🙂

  • Saba-Thambi 8:25 pm on March 25, 2013 Permalink | Reply

   காசே தான் கடவுளடா ! அந் தகடவுளுக்கும் இது தெரியுமடா!!

   • GiRa ஜிரா 9:07 am on April 1, 2013 Permalink | Reply

    ஆமா ஆமா.

    ஆண்டவன் தொடங்கி ஆண்டிகள் வரைக்கும் காசேதான் கடவுளடா!

  • amas32 8:28 pm on March 25, 2013 Permalink | Reply

   போறுமா? டக டகவென்று எத்தனைப் பாடல்களை எடுத்துவிட்டிருக்கிறீர்கள்! 🙂 சினிமாவில் சென்டிமென்ட் அதிகம். சரோஜா படத்தில் கங்கை அமரன எழுதிய பாடல் “கோடான கோடி” என்று ஆரம்பிக்கும். படமும் தயாரிப்பாளருக்குப் பணத்தை ஈட்டித் தந்தது. சிம்பு நடித்த வானம் படத்தில் no money no money no money da என்று ஒரு பாடல் வரும். படம் பிளாப் ஆகி விட்டது 🙂

   amas32

   • GiRa ஜிரா 9:08 am on April 1, 2013 Permalink | Reply

    அருமையாச் சொன்னிங்க. எப்பவுமே நேர்மறையான கருத்துகளும் சிந்தனைகளும் நல்ல பலனையே தரும். உண்மை.

 • G.Ra ஜிரா 11:38 am on March 13, 2013 Permalink | Reply  

  வழவழா, கொழகொழா 

  ஏலே கீச்சான் வந்தாச்சு
  நம்ம சூச பொண்ணும் வந்தாச்சு
  ஏஏஏ ஈசா வரம் பொழிஞ்சாச்சு

  ரேடியோவில் இந்தப் பாடல் ஓடிக் கொண்டிருந்தது. சென்னையின் விளக்கெண்ணெய்த்தனமான நெருக்கடியில் காரோட்டும் போது பாடல்கள்தான் துணை. கடல் படத்திற்காக மதன் கார்க்கி எழுதிய பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துப் பாடிக் கொண்டிருந்தார்.

  ஒனக்காக வலையொன்னு வலையொன்னு விரிச்சிருக்கேன்
  நான் தவமிருக்கேன்
  நீ விழுவேன்னு விளக்கெண்ண ஊத்திக்கிட்டு முழிச்சிருக்கேன்
  நான் அரக்கிறுக்கேன்

  அட! பாட்டிலும் விளக்கெண்ணெய். சென்னையின் வாகன நெருக்கடியை விளக்கெண்ணெய் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே பாட்டிலும் விளக்கெண்ணெய்.

  அந்தக் கடற்கரைக் காதலன் காதலியின் வருகைக்காக கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு காத்திருக்கின்றானாம்.

  கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றினால் பார்வை தெளிவாகும் என்றொரு நம்பிக்கை இருக்கிறது. இது பழமொழிகளிலும் பல பாடல்களிலும் வந்துள்ளது.

  சரி. விளக்கெண்ணெய் என்றால் என்ன? இது எத்தனை பேருக்குத் தெரியும்? விளக்கெண்ணெய் குடித்தால் வயிறு சுத்தமாகும் என்பதையும் விளக்குக்கு ஊற்றும் எண்ணெய் என்பதையும் தவிர மேலதிகத் தகவல்கள் பெரும்பாலானோர்க்குத் தெரிந்திருக்காது.

  சிறுவயதில் பட்டிக்காட்டுத் தொடர்பு நிறைய இருந்ததால் விளக்கெண்ணெய் மிகமிகப் பழக்கமான ஒன்றாக எனக்கு இருந்தது. விளக்கெண்ணெய் பற்றி ஒரு குறுந்தகவலைச் சொல்லி விட்டு விளக்கெண்ணெயில் மூழ்குவோம்.

  வண்டி மசி என்று சொல்வார்கள். அதாவது மாட்டு வண்டியில் சக்கரத்தை மாட்டி கடையாணி இட்டிருப்பார்கள் அல்லவா, அங்கு உயவுப் பொருளாகப் பயன்படுவதுதான் வண்டி மசி. இன்றைக்கு Grease எப்படிப் பயன்படுத்தப்படுகிறதோ அது போலப் பயன்பட்டதுதான் வண்டி மசி.

  வைக்கோலைத் தீயிட்டுக் கொளுத்திய சாம்பலில் விளக்கெண்ணெய்யைக் கலந்தால் கிடைப்பதுதான் வண்டி மசி. இது மிகச்சிறந்த இயற்கையான உயவுப்பொருள். எந்த விதத்திலும் சுற்றுப்புறச் சூழலுக்குத் தீங்கிழைக்காத உயவுப் பொருள்.

  சரி. விளக்கெண்ணெய்க்கு வருவோம். ஆமணக்கு விதைகளிலிருந்து எடுக்கப்படுவதுதான் விளக்கெண்ணெய். நல்லெண்ணெய் கடலெண்ணெய் போல ஆட்டி எடுக்கப்படுவதல்ல விளக்கெண்ணெய். அதைச் செய்யும் முறையே வேறு.

  என்னுடைய சிறுவயதில் எங்கள் தோட்டங்களில் ஆமணக்குச் செடிகள் நிறைய இருந்தன. அவைகளில் முட்களைக் கொண்ட கொத்துக் கொத்தான காய்கள் நிறைய தொங்கும். பச்சையாக இருக்கும் போது காய்கள் தொடுவதற்கு மெத்தென்று இருக்கும். ஆனால் அவை காய்ந்ததும் முள்ளாய்க் குத்தும்.

  என்னுடைய அத்தைப் பாட்டியிடம் ஒருமுறை ஆமணக்கு எண்ணெய் எடுப்பதைப் பார்க்க வேண்டும் என்று சொன்னேன். உடனே அவர் அதற்கு ஏற்பாடு செய்து விட்டார்.

  வீட்டின் முற்றத்தில் (காரைவீடு என்று எங்கள் பக்கம் சொல்வோம்) ஆமணக்கு நெற்றுகள் கொட்டப்பட்டன. ஆட்களை வைத்து நெற்றுகளிலிருந்து ஆமணக்கு முத்துகள் எடுக்கப்பட்டன. இந்த முத்துகள் சிறியதாக முட்டை வடிவத்தில் பழுப்பு நிறத்தில் இருக்கும். அதன் மேல் கருப்பு நிறத்தில் கோடுகளும் புள்ளிகளும் நிறைய இருக்கும்.

  அதற்குப் பிறகு ஒரு அம்மியில் ஆமணக்கு முத்துகள் வைத்து நசுக்கப்பட்டன. இப்படி நசுக்கப்பட்ட முத்துகளைச் சேகரித்து ஒரு பெரிய பானையில் நீரோடு சேர்த்து கொதிக்க வைத்தார்கள். அது கொதிக்கக் கொதிக்க ஆமணக்கு எண்ணெய் மேலாக மிதந்து வந்தது. அதை அப்படியே தெளிவாக அகப்பையில் எடுத்து இன்னொரு பானையில் ஊற்றி வைத்துக் கொண்டார்கள்.

  இப்படிக் காய்ச்சி எடுக்கப்படும் ஆமணக்கு எண்ணெய்தான் விளக்கெண்ணெய் எனப்படுகிறது. இது அந்தக் காலத்தில் விளக்கெரிக்க மட்டுமல்லாமல் கண்மை தயாரிக்கவும் பயன்பட்டது.

  வெறும் ஆமணக்கு முத்து நஞ்சு. ஆனால் அதை நசுக்கிக் காய்ச்சி எடுக்கப்படும் எண்ணெய் மருந்தாகிறது. எங்கேயாவது கையைக் காலை இடித்துக் கொண்டு வந்தால் ஆமணக்கு இலையை வதக்கி அதை அடிபட்ட இடத்தில் சூட்டோடு சூடாக வைத்து வெள்ளைத்துணி வைத்து கட்டி விடுவார்கள். வயலில் நடக்கும் போது எங்கேயாவது விரலை இடித்துக் கொண்டு வந்த எனக்கும் ஆமணக்கு இலை வதக்கிய கட்டு போடப்பட்டிருக்கிறது.

  ஆமணக்கைப் பற்றியும் விளக்கெண்ணெயைப் பற்றியும் இன்னும் எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம். இப்படித்தால் எதோ ஒரு பாடலைக் கேட்டு விட்டு அதிலுள்ள ஒரு சொல்லைப் பிடித்துக் கொண்டு மனம் எங்கெங்கோ சுற்றியலைந்து விட்டு வருகிறது.

  அதற்குப் பிறகு ஆமணக்கைப் பார்க்க மனம் விரும்பியது. இணையத்தில் தேடி அதன் புகைப்படங்களைப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டேன். இப்போதைக்கு அவ்வளவுதான் முடியும். 🙂

  ஆமணக்கே போற்றி போற்றி
  விளக்கெண்ணெய்யே போற்றி போற்றி

  ஆமணக்கு பற்றிய விக்கி சுட்டி – http://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
  ஏலே கிச்சான் பாடலின் ஒளிச்சுட்டி – http://youtu.be/f-tbXVrPJZ0

  அன்புடன்,
  ஜிரா

  102/365

   
  • anuatma 12:34 pm on March 13, 2013 Permalink | Reply

   அம்மா வேலை பார்த்தது ஒரு கிராமம். அங்கு முக்கியப் பயிர்கள் ஆமணக்கும், கடலையும். ஆமணக்கை கொட்டமுத்து என்று சொல்வார்கள். வீட்டின் பின்புறம் வயலில் ஆமணக்கு பயிரிட்டிருப்பார்கள். அதனால் வீட்டில் கம்பளிப் பூச்சி எக்கசக்கமாக வரும். இட்லி பஞ்சு போல வர ஆமணக்கையும் சேர்த்து அரைப்பார்கள்.

   வண்டி மசி பார்த்திருக்கிறேன். நீங்க சொல்லிதான் அது என்னன்னு தெரிஞ்சது.முதலில் கட்டை சக்கரம் பூட்டிய மாட்டு வண்டியிலும், பின்னர் ரோடு தார் ரோடானவுடன் டயர் பூட்டிய மாட்டு வண்டியிலும் ஓசி சவாரி போயிருக்கிறேன்.

   உங்கள் இந்தப் பதிவு ஞாபகங்களைக் கிளறி விட்டது.நன்றி.

   • GiRa ஜிரா 11:19 am on March 14, 2013 Permalink | Reply

    கம்பளிப்பூச்சி நீங்களும் பாத்திருக்கிங்களா. எங்கூர்ல அரிப்புழுன்னு அதுக்குப் பேரு. மேல்ல பட்டா சொறிஞ்சு சொறிஞ்சே பொழுது போயிரும். கம்புல துணியச் சுத்தி பந்தமாக்கி பொசுக்குவோம்.

    கட்டைச் சக்கரம் டயர் சக்கரம்… எங்கயோ போயிட்டிங்க. நான் கால் நூற்றாண்டு பின்னாடி போயிட்டு வந்துட்டேன் 🙂

  • நளினி சாஸ்திரி 1:18 pm on March 13, 2013 Permalink | Reply

   சின்னவயசு கிராமத்து வி.எ நினைவு
   பெரிய அகல் விளக்கில் வி.எண்ணெய்(முழுசா எழுத கொழகொப்பு)
   ஊற்றி எரிக்க, அதிலிருந்து வரும் புகை ஷெல்ப் அடியில்
   படியும்.நிறைய படிந்த புகைபடிமத்தை collect செய்து
   அதில் சிறிதளவு வி.எ விட்டு குழைக்க கண்மை ரெட்டரெடி.குளிர்ச்சியானது.எரியாதது
   (செய்முறை ..காபிரைட்-நளினி சாஸ்திரி )

   • GiRa ஜிரா 11:21 am on March 14, 2013 Permalink | Reply

    கண்மை செய்ற முறைய தெளிவா சொல்லிட்டிங்க. அந்தக் கண்மைதான் நல்லது. குளிர்ச்சியும் கூட. இப்பல்லாம் கெமிக்கல் கண்மை. பாவம் பெண்கள்.

  • amas32 (@amas32) 6:35 pm on March 13, 2013 Permalink | Reply

   இப்பொழுது தான் பார்த்தேன். இந்தப் பாடல் இந்த வார சார்ட்டில் முதல் இடம் பிடித்து இருக்கிறது என்று ரஹ்மான் ட்விட்டரில் ட்வீட்டியுள்ளார்.

   நிற்க.

   இப்பாடலில் இதற்கு மேல் விளக்க ஒன்றும் இல்லை என்று விளக்கெண்ணெய்க்குப் போய் விட்டீர்கள் என்று தெரிகிறது. உண்மையிலேயே மிகவும் சுவாரசியமாக ஆமணக்கில் இருந்து விளக்கெண்ணெய் தயாரிக்கும் முறையை கூறியுள்ளீர்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது? ஒரு கசப்பான பொருளைப் பற்றிக் கூட இனிமையாக எழுத முடியும் என்று தெரிகிறது. நன்றி 🙂

   amas32

   • GiRa ஜிரா 11:22 am on March 14, 2013 Permalink | Reply

    ஹிஹிஹி உண்மையக் கண்டுபிடிச்சிட்டிங்களே. 🙂

    நாலு வரி நோட்டில் புதுப்பாடல்களும் நிறைய குடுக்கனும்னு ஆசைதான். ஆனா புதுப்பாட்டுகளை எடுத்து என்ன எழுதுறது?! அதான் இப்பிடி 🙂 ஆகா… தொழில் ரகசியத்தைச் சொல்லிட்டேனே!!!

  • Saba-Thambi 8:04 pm on March 13, 2013 Permalink | Reply

   மறக்க நினைத்ததை நினைப்பூட்டி விட்டீர்களே 🙂
   “விளக்கெண்ணெய் குடித்தால் வயிறு சுத்தமாகும்” – ஒருகாலத்தில் யாழ்ப்பணத்தில் பேதி மருந்தாக பயன்படுதப் பட்டது. ஐயோ அதை ஏன் கேக்கிறியள்….

   Half a glass of castor oil + half a glass of sugary plain tea (no milk) mixed together and the emulsion were given to young ones(and old) to drink, to clear the system- oh my God it was an agony and the result, you guessed it – marathon between the house and the toilet (don’t laugh 🙂 )

   Many Jaffna-ites over forty years old would attach this ritual to their bitter memories of their childhood. Later on castor oil was replaced (with the advise of Medical doctors) with கோரோசனை and then by Milk of Magnesia (aka Magnesium Sulphate) and nowadays probably a tablet.

   “விளக்கெண்ணை குடித்த மந்தி” என்றொரு பழமொழி நினைவுக்கு வருகிறது

   another link on castor oil
   http://en.wikipedia.org/wiki/Castor_oil

   • GiRa ஜிரா 11:24 am on March 14, 2013 Permalink | Reply

    நான் சிரிக்க மாட்டேனே. சிரிக்கவே மாட்டேனே 🙂 நான் விளக்கெண்ணெய் சாப்பிட்டதில்லை. நான் சொன்ன காலத்திலேயே வீட்டில் விளக்கெண்ணெய் காய்ச்சுவது மிகக்குறைந்து விட்டது. நான் கேட்டதால் சிறிது காய்ச்சினார்கள்.

    இப்பல்லாம் ஒரு மாத்திரை. சின்னக் கொழந்தைங்கன்னா கொஞ்சம் ஏதோவொரு பொடி.

  • anonymous 9:00 pm on March 17, 2013 Permalink | Reply

   சட்டுனு-ன்னு பெரிய அத்தை ஞாபகம் வந்துருச்சி;
   காட்டாமணக்கு கல்யாணத்துக்கு.. வீட்டாமணக்கு விளக்கு புடிக்கப் போவுதோ? -ன்னு அவங்க நீட்டி நீட்டிப் பேசும் பேச்சு/ பழமொழி 🙂 பொருள் கேக்காதீங்க, Adults Only:)

   “ஆமணங்கு” -ன்னு சீவக சிந்தாமணி சொல்லும்…
   அணங்கு -ன்னா துன்பம்;
   ஆம்(ஆகும்) + அணங்கு; துன்பம் விளைக்கும் ஒரு வகை நச்சுச் செடி;

   ஆமணங்கு->ஆமணக்கு ஆயிருச்சி!
   கிராமத்தில், இன்னிக்கும், “ஏன்டா அணக்குற?” -ன்னு கேக்கும் வழக்கம் உண்டு; அணங்கல்/ அணக்கல் = துன்பம் தருதல்!

   மருங்கு->மருகு -ன்னு ஆனாப் போலத் தான்; ஆமணங்கு->ஆமணக்கு

   மருங்கு – ஒரே பக்கமாச் செடிகொடி மருங்கும்/ பாரம் தாங்காம வளையும்; மனசு கெடந்து மருகுது -ன்னு சொல்லுறோம்-ல்ல?
   அப்படி மருங்குதல் -> மருகுதல் போல்,
   ஆமணங்கு -> ஆமணக்கு!

   • anonymous 9:47 pm on March 17, 2013 Permalink | Reply

    நச்சுச் செடி-ன்னாலும், அதன் விதையில் மருந்தை வச்சான் ஆண்டவன்!

    கட்டபொம்மன் கோட்டையை இடிச்ச வெள்ளைக்காரனுங்க, அந்த இடத்தில் ஒன்னுமே முளைக்கக் கூடாது-ன்னு, ஆமணக்கு போட்டு உழுதாங்களாம்!

    இன்னிக்கும் கிராமத்தில், ஆமணக்கை, வரப்போரமா போடுவாங்க; அதன் இலையே பயிரைக் காத்துக் குடுக்கும்!
    குறிப்பா, மிளகாய்ப் பயிருக்கு, ரொம்ப வெயிலு ஆகாது; இந்த ஆமணக்கு இலை தான் நிழல்;
    சுருள் பூச்சி (கம்பிளிப் பூச்சி) நெறைய வரும்; ஆமணக்கு இலை சொர சொரப்பு அப்படி; ஆனா வயலில் உள்ள மிளகாய்ப் பயிருக்குப் பூச்சி பரவாது;
    —-

    //இந்த முத்துகள் சிறியதாக முட்டை வடிவத்தில் பழுப்பு நிறத்தில் இருக்கும். அதன் மேல் கருப்பு நிறத்தில் கோடுகளும் புள்ளிகளும் நிறைய இருக்கும்//

    அய்யோ!

    அந்தக் கொட்டைகளின் அழகே அழகு! “கொட்டைமுத்து”-ன்னே பேரு!
    வரி வரியாப் பாக்கவே என்னமோ போல இருக்கும்!
    இந்த Design கொட்டைகளை collect செய்வதே, எங்க சிறு பிள்ளை விளையாட்டு! வீட்டுல திட்டு விழுகும்; விஷச் செடில என்ன வெளயாட்டு? -ன்னு:)

    ஆனா நெறயப் பசங்க, கொட்டை சேகரிக்க வருவதில்லை; சுருள் பூச்சியைப் பந்தம் கொளுத்தவே வருவானுங்க;

    அப்பவே சத்தம் போட்டு அழுவேன்; அந்தப் பூச்சி ஒங்கள என்னடாப் பண்ணுச்சி? இப்புடி வலிக்க வலிக்க நெருப்பு வைக்கறீங்களே-ன்னு;
    எனக்காக, பசங்க விட்டுருவானுங்க:) ஆனா, நான் இல்லாத போது வந்து கொளுத்துவானுங்க; Male Arrogance:))

    அதுல ஒரு பையன் = ராமு;
    சின்ன வயசில், என் கிட்ட கொஞ்சம் நெருங்கி வந்தவன்; அத்தை-மாமா என்னைச் செல்லமாக் கூப்புடற பேரு, அவனுக்கு மட்டும் தான் தெரியும்;

    ஒருமுறை, அவன் திருட்டுத்தனமாக் கொளுத்தறதைப் பாத்துட்டேன்; அவன் கூட நான் பேசவே இல்ல!
    வலிய வந்து வந்து கெஞ்சுவான்; இன்னும் ஞாபகம் இருக்கு:) வரப்புக்குப் போயி, அஞ்சாறு சுருள் பூச்சிகளை எடுத்து அவன் கை மேல போட்டுக்கிட்டான்;

    அதைக் கொளுத்துன பாவத்துக்கு, அது என் இரத்தம் உறிஞ்சட்டும்; போதுமா? இப்பவாச்சும் என் கூடப் பேசுவியா பேசுவியா?
    -ன்னு அவன் நீர் மல்கக் கேட்ட முகம் இன்னும் ஞாபகம் இருக்கு!:)

    இப்போ, கல்யாணம் ஆகி, குழந்தை-குட்டி ன்னு இருக்கான்; இப்போ ஊருக்குப் போனாலும், என்னைய வந்து சீண்டுவான்:) flashback of ஆமணக்கு:)

   • anonymous 10:09 pm on March 17, 2013 Permalink | Reply

    வறண்ட மண்ணுல வெளஞ்சாலும், ஆமணக்கு ஒரு பணப் பயிர்;
    எண்ணெய் எடுக்க-ன்னே வளர்ப்பாங்க;
    கொட்டைமுத்து உடைக்க… இப்பல்லாம் Machine வந்துருச்சி..
    என்ன…, வயல்-ல்ல தான் வளர்க்கணும்… வீட்டுல வளர்த்தா, அம்புட்டு தேன்..

    தெரியாத்தனமா, எங்க கொல்லைல நான் ஒன்னு நட்டு வைக்க…

    கொல்லையில் தான் Toilet இருக்கும்.. அதுல ஒரே சுருள் பூச்சி ஊர்வலம்.. சின்ன வயசில், Toilet இல் இருக்கும் நேரம் முழுக்க ஒரே பயமா இருக்கும்:)) முருகா!

    சித்தப்பா தான், நான் ஆமணக்கு வெதச்சதைக் கண்டுபுடிச்சி, மடையா-ன்னு வெளாசுனாரு:)

    ஆமணக்கு பத்தி, காளமேகம் எழுதுன பாட்டு ஒன்னு இருக்கு; சட்-ன்னு ஞாபகம் வரலை;
    பெருமாளும் ஆமணக்கும் ஒன்னு -ன்னு சிலேடைப் பாட்டு; என்னவோ, பெருமாளை “விளக்கெண்ணெய்” -ன்னு பாடி இருக்காரு போல:))

    ஆனா, வெளக்கெண்ணெய் எரிக்கும் போது வரும் வாசம் நல்லா இருக்கும்;
    உண்ணா முலை அம்மன் ஊர்கோலம் வரும் போது,
    அந்தத் திருநீறு + தீப் பந்த வாசனை; ராவு நேரத்துல ஒரு சுகமான மணம்! என்னமோ பண்ணும்!

    இப்பல்லாம், குழந்தைகளுக்கு விளக்கெண்ணெய் குடுக்கக் கூடாது, கண்ணுல விடக் கூடாது -ன்னு மருத்துவர்கள் advice; Even my sister!
    ஆனா, புது மாட்டுக்கு, காம்புல தடவிட்டுத் தான் பால் கறப்பாங்க; விரல்-நகம் பட்டு, காம்பு புண் ஆகாது; வலிக்காது!

    ஆ-மணக்கு, ஆ என்று மணக்குது நினைவுகளில்:)
    நன்றி, இந்த அழகார் பதிவுக்கு; just saw;
    shd disconnect before they switch off phone tethering; there will be no net;

  • BALAJI 12:28 am on January 15, 2017 Permalink | Reply

   VERY GOOD INFORMATION AND SHARING…

  • jayaprakash 9:46 pm on March 13, 2017 Permalink | Reply

   அருமையான தகவல்

 • என். சொக்கன் 6:15 pm on March 8, 2013 Permalink | Reply  

  விருந்தினர் பதிவு : இளமை இதோ இதோ 

  இளமை இதோ இதோ..

  ஓ நோ… நான் இந்தப் பாடலைச் சொல்லப்போவதில்லை.. பொதுவாக இளமை..

  ஒரு முறை தான் வரும் கதைசொல்லக்கூடும் உல்லாசம் எல்லாவும் காட்டும் எனப் பாட்டாக வந்த இளமை அப்பாவிற்கும் வரும்.. பிள்ளைக்கும் வரும் பேரனுக்கும் வரும்…

  என்னாபா எய்தறான் இந்த ஆளு என நினைக்க வேண்டாம்..

  அப்பா தனது இளமைக்காலத்தில் ஒரு பாடல் எழுதியிருக்கிறார்..

  சலசலவென நீரோடையின் சத்தத்தைப் போல அழகாய் வேகமாய்ப் போகும் இசை.. இடங்களோ அழகுகொஞ்சியிருக்கும் இலங்கை நகரம்.. ஆடிப் பாடும் இருவரோ யங் யங் ஹீரோ ஹீரோயின்.. வெகு வெகு இளமையானவர்கள்..இருவருக்கும் காதல்.. எனில் துள்ளலும் துடிப்பு உண்டு.. எனவே துள்ளல் இசை.. துள்ளல் இசைக்கு துடிப்பாய் எழுதவேண்டும்.. எழுதிவிட்டார்

  ..

  புதியதல்ல முத்தங்கள்
  இனி பொய்யாய் வேஷம் போடாதே
  உள்ளம் எல்லாம் என் சொந்தம் அதை உள்ளங்கையால் மூடாதே
  காதல் வந்தால் கட்டில் மேல் கண்ணீரா கூடாதே
  கண்கள் பார்த்து ஐ லவ் யு சொல்லிப்பார் ஓடாதே

  பாடல் தெரிந்திருக்குமே ஜூலை மாதம் வந்தால் ஜோடி சேரும் வயசைச் சொன்னவர் வைரமுத்து..பாடியவர்கள் எஸ்பிபி அனுபமா..ஆடியவர்கள் வினீத், நிருபமா(க்யூட் பொண்ணு என்ன ஆனார்..தெரியவில்லை)

  பையன் அப்பாவை விடப் பழமை வாதி..ஓ எப்படி..

  இளமைத்துடிப்பு இருக்கிறது..அதே சமயத்தில் அழகுதமிழ் வார்த்தைகளப் பயன் படுத்த வேண்டும் என்ற அக்கறை ஓடுகிறது.. அப்பா எழுதிய கவிதை வரி போல ரத்தம் புத்தம் புதுசு.

  .

  அது சரி ஈஈ என்ன பாட்டா.?

  .

  அந்தப் பெண். கொஞ்சம்  நெடு நாள் ஊறியகுலோப் ஜாமூனைப் போல அழகானவள் இனிமையானவள்.. அந்த ஹீரோ இளைஞன்.. அவன் சிரிப்பில் க்ளோஸப் மின்னல்.. பளீர் ரின் வெண்மை..

  ..காதலிக்கவும் மாட்டேன் என்கிறான்.. ஆனால் அந்தப் பெண்ணின் மீது  சின்னதாய் ஈர்ப்பு வருகிறது..எனில் பாடலும் வருகிறது

  ..

  சந்திக்காத கண்களில் இன்பங்கள்
  செய்ய போகிறேன்
  சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்
  பெய்ய போகிறேன்

  அன்பின் ஆலை ஆனாய்
  ஏங்கும் ஏழை நானாய்
  தண்ணீரை தேடும் மீனாய்

  ஹை.. பாட்டு நல்லாயிருக்கே எனக் கேட்டதோடு மறந்து விடுவோம்.. ஆனால் ஒரு வார்த்தை நிரடும்

  சுண்டல் தெரியும்..அது என்ன கொண்டல்?

  ..

  கொண்டல் பழந்தமிழ் வார்த்தையாம்.. அதன் அர்த்தம் மேகம்.

  .எனில் யோசிக்காது மழையைப் பொழியும் மேகமாய் அவள் மீது பெய்யப் போகிறானாம் அன்பை..சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய் எனப் பாடல் வரும்போது ஹீரோ எடுத்துச்செல்லும் டீ கிளாஸ்கள் சற்றே சரிந்து டீ விழுவது டைரக்டோரியல் டச்

  ..

  அவளுக்கோ கண்களின் வழியாகத் தெரியும் ஏக்கத்தை வார்த்தைகளில் காட்டுகிறாள்..அன்பின் ஆலை ஆனாய்

  ..

  ம்ம் மதன் கார்க்கி.. அருமை…. வைரமுத்து பெற்ற வயிற்றில் ப்ரலைன்ஸ் ஐஸ்க்ரீம் கட்டிக் கொள்ளலாம்.. இல்லை.. சாப்பிட்டுக் கொள்ளலாம்!

  பாடல் பாடிய உன்னி மேனன், சித்ரா செளமியா அண்ட் இசை சரத்.நடித்திருப்பவர்கள் சித்தார்த் முழியும் முழியுமான நித்யா மேனன்..படம் 180 டிகிரி..

  .இது அப்பா அளவுக்கு வேகப்பாடல் இல்லையானாலும் இனிமையாக இருக்கும்..ஏன்.. ராகம் அப்படி.. கரகரப் ப்ரியா.. அப்பா எழுதிய பாடலின் ராகம்.. ம்ம்ம் நீங்கள் சொல்லத்தானே போகிறீர்கள்

  சின்னக் கண்ணன்

  என்னைப் பற்றி முன்னுரையா? குட்டி பத்து பைசா ஸ்டாம்ப்பின்னால் எழுதிவிடலாம்.. பிறந்து வளர்ந்து நான்கு கழுதைகள் வயதாகிறது.. சின்னதாகத் தமிழ்மீது ஆசை.. எழுதி எழுதிப் பார்க்க, வருவேனா என கோபித்துக்கொண்டிருக்கிறது தமிழ்!

  இருபத்தைந்து வருடங்களாக இருந்தது, இருப்பது அன்னிய தேசம்தான், தற்சமயம் ஜாகை மஸ்கட்!

  http://brindavanam.blogspot.com

   
 • G.Ra ஜிரா 9:43 am on December 7, 2012 Permalink | Reply
  Tags: அருணகிரிநாதர், , கந்தர் அநுபூதி, மதன் கார்க்கி   

  சும்மா எனும் சுமை 

  பெங்களூருக்குப் போன புதிதில் தமிழ் நண்பர்களோடு பேசும் போது “சும்மா” என்ற சொல்லைப் பயன்படுத்தினால் வடக்கத்திய நண்பர்கள் “சும்மா” என்றால் என்ன என்று கேட்பார்கள். இந்தியில் சும்மா என்றால் முத்தம். தமிழர்கள் அடிக்கடி முத்தத்தைப் பற்றிப் பேசுகிறார்களே என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.

  ஒரு நாளில் நாம் எத்தனை முறை “சும்மா” சொல்கிறோம் என்பதும் எதற்கெல்லாம் “சும்மா” சொல்கிறோம் என்பது ஒரு ஆச்சரியமான புள்ளிவிவரமாக இருக்கக்கூடும்.

  பேச்சில் இத்தனை சும்மா வரும் போது திரைப்படப் பாடல்களில் வராமல் இருக்குமா? இன்றைய மதன் கார்க்கி வரை திடைப்பாடல்களில் “சும்மா” இருக்கிறது.

  பாடல்-1
  படம் – தூங்காதே தம்பி தூங்காதே
  இசை – இளையராஜா
  பாடல் – வாலி
  பாடியவர் – எஸ்.ஜானகி
  பாடலின் சுட்டி – https://www.youtube.com/watch?v=xwtip74JdXk
  சும்மா நிக்காதிங்க
  நான் சொல்லும்படி வெக்காதிங்க
  சின்ன மனசு தாங்காது
  தன்னந்தனியா தூங்காது

  பாடல்-2
  படம் – முகமூடி
  இசை – கிருஷ்ணகுமார்
  பாடியவர் – ஆலப் ராஜு
  பாடல் – மதன் கார்க்கி
  பாடலின் சுட்டி – http://www.tamilpaa.com/596-vaayamoodi-summa-tamil-songs-lyrics
  வாயை மூடி சும்மா இருடா
  ரோட்டப் பாத்து நேரா நடடா
  கண்ணைக் கட்டி காட்டுல விட்டுடும்டா
  காதல் ஒரு வம்புடா!

  சும்மா இருக்க முடியுமா என்று நகைச்சுவை நடிகர் வடிவேலு எல்லாரையும் ஒரு படத்தில் கேள்வி கேட்டு சும்மா இருப்பது எவ்வளவு கடினம் என்று நிரூபிப்பார். படத்தின் பெயர் தெரியவில்லை.

  அந்தப் படத்தில் நடித்த வடிவேலுக்கு முன்னால் யாராவது சும்மா இருந்திருக்கின்றார்களா?

  ஒருவர் இருந்திருக்கிறார். இன்னொருவர் அவரை சும்மா இருக்கச் சொன்னதால் இருந்திருக்கிறார்.

  இருந்தவர் அருணகிரிநாதர். சொன்னவர் முருகன்.

  காமக் கலவி என்னும் கள்ளை மொண்டு மொண்டு உண்டவர் அருணகிரி. தொழுநோய் அவரைப் பிடித்ததால் அவரை யாருக்கும் பிடிக்காமல் போனது. கோபுரத்தின் உச்சியில் ஏறி அங்கிருந்து குதிக்கும் போது தடுத்தான் முருகன். தடுத்த முருகன் அருணகிரிக்குச் சொன்னது “சும்மா இரு”.

  நம்மால் சும்மா இருக்க முடியும? மனம் எதையாவது நினைக்கும். நாக்கு எதையாவது சாப்பிடச் சொல்லும். காதில் ஏதாவது ஒன்று விழுந்து மூளையை சிந்திக்கத் தூண்டும். உடம்பு ஒரே நிலையில் இருந்ததால் வலித்து நகரச் சொல்லும். இப்படி எல்லா வகையிலும் சும்மா இருக்க நம்மால் இருக்க முடியாது.

  ஆனால் அருணகிரி சும்மா இருந்தார். இரவு, பகல், இன்பம், துன்பம், பசி, தாகம், வலி, வேதனை, வாசனை, சுவை, நினைவு, கனவு என்று எதுவும் தொல்லை கொடுக்காமல் சும்மா இருந்தார். அதனால் கிடைத்தது ஞானம்.

  கிடைத்ததை இலக்கியத்திலும்(கந்தர் அநுபூதி) எழுதி வைத்தார்.
  செம்மான் மகளைத் திருடும் திருடன்
  பெம்மான் முருகன் பிறவான் இறவான்
  சும்மா இரு சொல்லற என்றலுமே
  அம்மா பொருளன்றும் அறிந்திலனே

  முருகன் சும்மா இரு என்று சொன்னதும் சும்மா இருந்ததால் இது வரையிலும் மிகப்பெரிய பொருளாகத் தெரிந்த உலக இன்பங்கள் ஒன்றுமில்லாமல் போனதை மிக அழகாகக் கந்தர் அநுபூதிப் பாட்டில் எழுதி வைத்தார் அருணகிரி.

  அதெல்லாம் சரி. ஒரு போட்டி.

  சுடச்சுட ஒரு டம்ளரில் ஃபில்டர் காப்பி. இன்னொரு தட்டில் மிளகு காரச்சேவும் திருநெல்வேலி அல்வாவும். இன்னொரு பக்கம் தொலைக்காட்சி. இன்னொரு பக்கம் மொபைல் ஃபோன்.

  சுற்றிலும் இதையெல்லாம் வைத்துக் கொண்டு உங்களில் யாரெல்லாம் சும்மா இருக்க முடியும்? 😉

  அன்புடன்,
  ஜிரா

  006/365

   
  • NIRANJAN 9:56 am on December 7, 2012 Permalink | Reply

   அருமையான பதிவு.
   சார்லி சாப்ளின் படம் என்று நினைக்கிறேன். அதில் சும்மா என்ற வார்த்தையைப் பிரதானமாக வைத்து ஒரு டூயட் பாடலே எழுதினார்கள். யார் எழுதினார்கள் என்று தெரியவில்லை. அதில் மொத்தம் 133 சும்மாக்கள் வரும் என்று நினைக்கிறேன்.

   பிரபுதேவாவும், காயத்ரி ரகுராமும் இதில் நடித்திருப்பார்கள். இசை பரணி.

   –>இது தான் அந்தச் சுட்டி.

   சும்மா எழுதறது ஒண்ணும் சும்மா இல்ல 🙂 🙂

   • ரிஷி 10:00 am on December 7, 2012 Permalink | Reply

    Same pinch, NIRANJAN !! 🙂

   • GiRa ஜிரா 12:53 pm on December 7, 2012 Permalink | Reply

    அடா அடா அடா! இதுவல்லவோ சும்மா பாட்டு. உதித் நாராயணன் சும்மா என்ற சொல்லை மிக அழகாக உச்சரித்திருக்கிறார். சும்மா பிச்சி உதறிட்டாரு 🙂

  • ரிஷி 9:59 am on December 7, 2012 Permalink | Reply

   http://www.youtube.com/watch?v=m2UJk7JpVa8 சும்மா சும்மானு ஒரு பிரபு தேவா பாடல் இருக்கு…. http://www.thiraipaadal.com/Lyrics.asp?lyrid=4230&sngid=SNGBHA0023 சும்மாவுக்கு இவ்வளவு
   அர்த்தங்களா ?? 🙂

   //சுடச்சுட ஒரு டம்ளரில் ஃபில்டர் காப்பி. இன்னொரு தட்டில் மிளகு காரச்சேவும் திருநெல்வேலி அல்வாவும். இன்னொரு பக்கம் தொலைக்காட்சி. இன்னொரு பக்கம் மொபைல் ஃபோன்.
   சுற்றிலும் இதையெல்லாம் வைத்துக் கொண்டு உங்களில் யாரெல்லாம் சும்மா இருக்க முடியும்? //

   முடியும் ஆனா முடியாது 😉

   • GiRa ஜிரா 12:56 pm on December 7, 2012 Permalink | Reply

    // முடியும் ஆனா முடியாது 😉 //

    புரியுது புரியுது. சும்மாதானே இருக்கு காராச்சேவு. அதச் சும்மா ஒரு கடி கடிச்சுக்கிட்டு… சும்மா கொஞ்சம் அல்வாவை விழுங்கிட்டு.. சும்மா ஒரு மடக்கு காப்பி சாப்பிட்டு… பிரண்ட்ஸ் கிட்ட சும்மா பேசிக்கிட்டிருக்கும் ஆட்களாச்சே நாமள்ளாம் 🙂

  • BaalHanuman 10:06 am on December 7, 2012 Permalink | Reply

   பாடல்-3
   படம் – கிரி
   இசை – டி.இமான்
   பாடியவர் – தேவன், அனுராதா ஸ்ரீராம்
   பாடல் – டேய் கைய வச்சுக்கிட்டு சும்மா இருடா…
   பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=k0Ap-xc0BzM

   • GiRa ஜிரா 1:57 pm on December 7, 2012 Permalink | Reply

    அட்டகாசமான பாட்டு சார். இந்தப் பாட்டை யார் சொல்வாங்கன்னு நெனச்சேன். நீங்க சொல்லிட்டிங்க 🙂

  • amas32 (@amas32) 11:23 am on December 7, 2012 Permalink | Reply

   சும்மா இருக்கும் சாமிக்கு சோத்து பட்டை இரண்டு கொடுங்க என்று ஒரு கோவிலில் இருந்த சித்தருக்கு, அவர் மௌனியாக சும்மா இருந்த செயலுக்கு இன்னும் ஒரு சாப்பாடு கிடைத்ததாக நான் படித்துள்ளேன். சும்மா இருப்பதே இன்றைக்கு பிரபலமாக இருக்கும் ஜென் நிலை! 🙂

   amas32

   • GiRa ஜிரா 2:03 pm on December 7, 2012 Permalink | Reply

    செம கத அது. சரியா எடுத்துச் சொல்லிட்டிங்க. சும்மா இருப்பதே சுகம். 🙂

  • @rmdeva 2:32 pm on December 7, 2012 Permalink | Reply

   அம்மான்னா சும்மா இல்லடா..அவ இல்லைனா யாரும் இல்லைடா

   ஜிரானா சும்மாவாஜென் தடத்துவம் மாதிரி சும்மா தத்துவம் சொன்ன ஜிரவுக்கு ஜெ

  • anonymous 2:48 pm on December 7, 2012 Permalink | Reply

   “சும்மா” -ன்னா “அம்மா” தான்:)
   பிழை பல செய்தாலும், சும்மா இருக்க அம்மாவால் மட்டுமே முடியும்!

   அதான்…கந்த சட்டிக் கவசத்தில்…

   எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
   எத்தனை அடியேன் எத்தனை செயினும்
   “பெற்றவன்” நீ குரு, பொறுப்பது உன் கடன்
   – ன்னு பாடுவாரு!

   அதான் போலும், கவச காலத்துக்கெல்லாம் முன்னாடியே, அருணகிரியும்…
   சும்மா இரு = “அம்மா” பொருள்…. -ன்னு பாடினாரோ?

   சும்மா இருப்பது = அம் – மா – பொருள்
   எளிது அன்று; பெரிது, மா, மாபெரும் ;
   அதனால் “அம் மா” பொருள் ஒன்றும் அறிந்திலனே என்றும் பரவிய அருணகிரி;

   • anonymous 3:01 pm on December 7, 2012 Permalink | Reply

    சும்மா பற்றிய பாடல் பதிவு சும்மா இல்லை;
    சும்மா நச்:)

    வேறு சில “சும்மா” பாடல்கள்:

    • நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு

    “சும்மா” கும்மு -ன்னு ஏறுது கிக்கு எனக்கு:))
    (படம்: காக்கிச் சட்டை, பாடல்: வாலி)

    • சின்னப் பொண்ணு தான் வெட்கப் படுது – அம்மா அம்மாடி

    அவ கண்ணுக்குள்ள தான் மின்னல் அடிக்குது – “சும்மா சும்மாடி”
    (படம்: வைகாசி பொறந்தாச்சு; பாடல் – ?)

    • சோலைக்குள்ளே குயிலுக் குஞ்சு – சும்மாச் சும்மாக் கூவுது

    ன்னு வரும் -ன்னு நினைக்கிறேன்;
    old is gold; சுசீலாம்மா பாடும் வித்தியாசமான பாட்டு – படம் பேரு சரியா ஞாபகம் இல்ல

  • BaalHanuman 6:42 am on December 8, 2012 Permalink | Reply

   படம் – கேடி (2006)
   நடிகர்கள்: ரவி கிருஷ்ணா – தமன்னா
   இயக்குனர்: ஜோதி கிருஷ்ணா
   இசை – யுவன் ஷங்கர் ராஜா
   பாடியவர் – சுனிதா சாரதி
   பாடல் – சும்மா சும்மா நீ பார்க்காதே… சும்மா சும்மா நீ சொக்காதே…
   பூக்காத பூவெல்லாம் முள்ளாகுமே…
   எனைக் காணாத கண்ணெல்லாம் கல்லாகுமே….

   பாடல் ஆசிரியர்: பா.விஜய்
   பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=8K39DNbFUlM

  • BaalHanuman 7:33 am on December 8, 2012 Permalink | Reply

   சுஜாதா பதில்கள் – பாகம் 1
   ? ‘சும்மா’வுக்கு அருஞ்சொற்பொருள் கண்டுபிடித்தாகிவிட்டதா ?

   ! சுகமா என்பதன் மரூஉ என்கிறார்கள். சும்மென என்கிற பிரயோகம் பிரபந்த காலத்தில் இருக்கிறது. சும்மாச் சும்மா இதையே கேட்டுக் கொண்டிருந்தால் அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன். ஆமாம்! அருஞ்சொற்பொருள் தெரியாவிட்டாலும் என்ன! சும்மா பயன்படுத்துங்கள்.

   • GiRa ஜிரா 7:00 pm on December 8, 2012 Permalink | Reply

    அருமையான தகவலுக்கு நன்றி 🙂

    சும்மென என்பதிலிருந்து சும்மா உண்டாகியிருக்கக்கூடும். கன்னடத்தில் சும்னே இரு என்றால் சும்மா இரு என்று பொருள்.

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel