உத்தரவின்றி உள்ளே வா 

  • படம்: ஜில்லுன்னு ஒரு காதல்
  • பாடல்: முன்பே வா
  • எழுதியவர்: வாலி
  • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
  • பாடியவர்கள்: நரேஷ் ஐயர், ஷ்ரேயா கோஷல்
  • Link: http://www.youtube.com/watch?v=OHA_ATdgw_g

நீ நீ மழையில் ஆட,

நான் நான் நனைந்தே வாட,

என் நாளத்தில் உன் ரத்தம்,

நாடிக்குள் உன் சத்தம்!

பள்ளியில் தமிழ் மீடியத்தில் அறிவியல் (அல்லது உயிரியல்) படித்தவர்களுக்கு இந்த வரிகளைப் படித்தவுடன் சட்டென்று அந்த ‘நாளம்’ என்ற சொல்லில் மனம் சென்று நிற்கும்.

’ரத்தக் குழாய்’ என்று நாம் பரவலாகச் சொல்லும் அதே வார்த்தைதான். ’ரத்த நாளம்’ என்று சொன்னால் இன்னும் அழகாக இருக்கிறது. நாளத்திற்கும் குழாய்க்கும் ஏதேனும் நுட்பமான வேறுபாடு உண்டா என்று தெரியவில்லை.

அப்புறம் அந்த நாளமில்லாச் சுரப்பிகள்? தமனி? சிரை? தந்துகி? இந்த வார்த்தைகளையெல்லாம் கேட்கும்போது, மறுபடி ஒன்பதாங்கிளாஸுக்குத் திரும்பிவிடமாட்டோமா என்றிருக்கிறது!

விஷயத்துக்கு வருவோம். நம் உடம்பு நிறைய இருக்கும் ரத்த நாளங்கள் பேச்சிலோ, சினிமாப் பாடல்களிலோ அதிகம் வருவதில்லை என்று நினைத்தேன். கொஞ்சம் தேடினால் ஒரு சில நல்ல உதாரணங்கள் சிக்கின:

உயிர் உருகிய அந்த நாள் சுகம்,

அதை நினைக்கையில்,

ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும் (வாலி)

***

நாளங்கள் ஊடே

உனதன்பின் பெருவெள்ளம் (மதன் கார்க்கி)

***

ரத்த நாளங்களில் போடும் தாளங்களில்

புதுத் தாலாட்டுதான் பாடுமா? (பொன்னியின் செல்வன்)

***

மேளங்கள் முழங்குதுங்க, ரத்த

நாளங்கள் துடிக்குதுங்க (டி. ராஜேந்தர்)

***

ஒரே ஒரு ஆச்சர்யம், ”அறிவியல் கவிஞர்” வைரமுத்து இந்தச் சொல்லை இதுவரை பயன்படுத்தவில்லையோ?

***

என். சொக்கன் …

18 11 2013

351/365