Updates from September, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • mokrish 5:55 pm on September 7, 2013 Permalink | Reply  

  ஆயுத எழுத்து 

  நேற்று சென்னையில் நடந்த ஆசிரியர் தின விழாவில் இந்தியாவின் பெருமை வாய்ந்த கலாசாரம்,  குருவை மதிக்கும் பண்பு என்ற வழக்கமான cliche சொற்பொழிவுகள்தான். ஒருவர் தினமும் காலையில் நாளிதழ்களில் செய்திகளைப் பார்த்தால் இது இந்தியாவா என்று சந்தேகம் என்றார். இன்னொருவர் ஊடகங்கள் விதிவிலக்குகள் மேல்தான் வெளிச்சம் போடும், ஆனால் இந்தியா ஒரு உன்னத தேசம் என்றார்.

  நிகழ்ச்சியின் இடையில் பாரதியின் வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் பாடலை ஒலிபரப்பினார்கள். இந்தியா ஒரு மகத்தான தேசம் என்பதை பாரதியார் நம்பிய அளவுக்கு வேறு யாருமே நம்பவில்லை என்று தோன்றுகிறது. எங்கள் பாரத தேசமென்று தோள்கொட்டுவோம் என்று நம் நாட்டின் பெருமை சொல்கிறார்

  வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் – அடி

  மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்

  பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம், எங்கள்

  பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

  திரையில் கப்பலோட்டிய தமிழன் படத்தில் ஜி ராமநாதன் இசையில் திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடல்.  https://www.youtube.com/watch?v=eYJFwd85SDk

  உழவு, நெசவு, தொழிற்சாலைகள், நதி நீர் பங்கீடு, infrastructure, நிலத்தடியில் இருக்கும் வளம், கலை, ஓவியம் என்று  உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம் என்று சொல்லும் அற்புதமான வரிகள்.

  ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்

  ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்

  ஒயுதல்செய் யோம்தலை சாயுதல் செய்யோம்

  உண்மைகள்சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

  இந்திய அமைதி விரும்பும் நாடல்லவா? ஏன் மகாகவி ஆயுதம் செய்வோம் என்கிறார்? மாலன் ஒரு சிறுகதையில் இதற்கு ஒரு சுவாரசியமான twist தருகிறார். வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பும் நாயகன் சில நிகழ்வுகளை கண்டு மனம் வருந்தி மாற்றம் தேவை, அதற்கு ஆயுதம் ஏந்திய புரட்சி வேண்டும் என்றும் ஆனால் இதற்கு எழுத்துதான் சரியான ஆயுதம் என்றும் நினைக்கிறான். Pen is mightier than sword. மகாகவி ஆயுதம் செய்வோம் என்று சொல்லி உடனே நல்ல காகிதம் செய்வோம் என்று அதை qualify செய்கிறார் என்று ஒரு interpretation தருவான். பாரதி நினைத்தது வேறாக இருக்கலாம். ஆனால் எனக்கு மாலன் சொல்லும் கோணம் பிடித்திருக்கிறது.

  திரைப்பாடல்களில் ஆயுதம் காதல் கணைகளாகவும் அடித்தட்டு மக்களின் குரலாகவும் அடிக்கடி வரும். வேறு கோணம் இருக்கிறதா என்று தேடினால் ஆயுத எழுத்து படத்தில் வைரமுத்து ஜன கன மன என்ற பாடலில் (இசை / பாடியவர் ஏ ஆர் ரஹ்மான் )

  http://www.youtube.com/watch?v=nbUPFfxQzHA

   ஆயுதம் எடு ஆணவம் சுடு

  தீப்பந்தம் எடு தீமையை சுடு

  இருளை எரித்துவிடு

  என்று எழுதுகிறார். இதில் அறியாமை என்ற இருள் அழிக்க என்று பொருள் கொண்டால் அதற்கான ஆயுதம் எழுத்தறிவித்தல் தானே?  நல்ல காகிதம் என்பது நாளிதழ்கள்  மட்டுமல்ல நல்ல கல்வி முறையும் தானே?

  மோகனகிருஷ்ணன்

  280/365

   
  • rajinirams 1:21 am on September 8, 2013 Permalink | Reply

   என் அண்ணன் படத்தின் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு பாடலில் “ரெண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து அதில் நீதி வரவில்லையெனில் வா வாளை எடுத்து என்று எழுதி அது ஏற்கப்படாமல் “வெற்றி உன்னை தேடி வரும் பூ மாலை தொடுத்து என்று மாற்றினார்.நீங்கள் மனிதா மனிதா பாடலில் வைரமுத்துவும் “சாட்டைகளே”இனி தீர்வுகள் என்பது சூசகமானதடா”என்று எழுதியிருப்பார் என்றாளும் நீங்கள் சொன்னது போல் அறியாமையை விலக்க கல்வியே சிறந்த ஆயுதம்.நன்றி.

  • uma chelvan 6:01 pm on September 8, 2013 Permalink | Reply

   சிறந்த கல்வி ஒருவரை மிகவும் உயர்வான இடத்திருக்கு கொண்டு செல்லும். வைரமுத்து பாடலில் ” ஆயுதம் எடு ஆணவம் சுடு ” என்பது வேறு ஒரு விஷயம் அவர் மனதில் எப்பவும் கனன்று கொண்டே இருக்குமோ என்று நினைக தோன்றுகிறது.????

  • amas32 1:58 pm on September 10, 2013 Permalink | Reply

   சூப்பர் போஸ்ட் மோகன்

   //ஆயுதம் எடு ஆணவம் சுடு

   தீப்பந்தம் எடு தீமையை சுடு

   இருளை எரித்துவிடு//

   Lovely lines!

   முன்பெல்லாம் அவதாரங்கள் ஒரு அரக்கனை அழிக்க வடிவெடுத்தன. இன்றோ நம்முள்ளே தான் நல்லதும் தீயதும் அடங்கி இருக்கின்றது. இன்று தேடிப் பார்த்தால் ஒரு முழு நல்லவனும் இல்லை, ஒரு கேட்டவநிடமும் சில நற்குணங்கள் ஒளிந்துள்ளன. அதனால் நம்முள் இருக்கும் தீமையை அழிக்க கல்வி என்னும் ஆயுதத்தைக் கொண்டு தான் நிறைவேற்ற முடியும். அறிவுச் சுடர் கொண்டு தான் இருளை அகற்ற முடியும் 🙂

   amas32

 • G.Ra ஜிரா 4:28 pm on August 27, 2013 Permalink | Reply  

  தீக்கனவும் நற்கனவும் 

  ஆணை விட பெண்ணுக்கு உள்ளுணர்வு அதிகம் என்று பெண்கள் பெருமையாக சொல்லிக் கொள்வார்கள். ஆம்.

  “ஒங்க நண்பரோட முழியே சரியில்ல. அவரோட பழகாதிங்க” என்று சொல்லி சண்டையைக் கிளப்பும் மனைவியரும் உண்டு. பெரும்பாலும் அவர்கள் சொல்வது உண்மையாக இருந்துவிடும். அதற்குப் பிறகு “அன்னைக்கே சொன்னேன்ல” என்று இன்னொரு சண்டை கிளம்பும்.

  உப்பை சிந்தி விட்டாலோ கண்ணாடிப் பாத்திரத்தை உடைத்து விட்டாலோ தயிர் உறையாவிட்டாலோ பதறிப் போவதென்னவோ பெண்கள்தான். அதீத பயம் என்று எளிதாக அந்தப் பதட்டத்தைப் புறந்தள்ள முடியாது. ஏனென்றால் அந்தப் பதட்டங்களுக்குப் பின்னால் இருப்பது குடும்ப அக்கறை.

  இதையெல்லாம் விட கனவுகள் அவர்களைப் பாடாய்ப் படுத்திவிடும். கனவு நல்லவிதமாக இல்லாவிட்டால் அடுத்து ஒரு செயலைச் செய்யவே அச்சப்படுவார்கள்.

  இந்த அச்சத்தை வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் ஒரு பாடலாக கவிஞர் கு.மா.பாலசுப்ரமணியன் கொடுத்திருந்தார்.

  கட்டபொம்மனை அழிக்க வேண்டுமென்று வெள்ளைக்காரன் படையெடுத்து வருகிறான். போர் முரசு கொட்டி விட்டார்கள். பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் எல்லாம் போருக்குப் புறப்படுகிறார்கள். வெள்ளையத்தேவனும் புறப்படுகிறான். அவனுடைய மனைவி வெள்ளையம்மான் அவனைப் போகவிடாமல் தடுக்கிறாள். ஏனென்றால் அவள் கண்டது பொல்லாத சொப்பனம்.

  போகாதே போகாதே என் கணவா
  பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்
  கூந்தல் அவிழ்ந்து விழவும் கண்டேன் – அய்யோ
  கொண்டையில் பூவும் கருகிடக் கண்டேன்
  கொண்டையில் பூவும் கருகிடக் கண்டேன்
  ஆந்தை இருந்து அலறக் கண்டேன்
  யானையும் மண்ணிலே சாயக் கண்டேன் – பட்டத்து
  யானையும் மண்ணிலே சாயக்கண்டேன்

  இப்படி வரிசையாகச் சொல்கிறாள் வெள்ளையம்மாள். கண்ணீர் விட்டுத் தடுக்கிறாள். ஆனாலும் கேட்காமல் போகிறான் வெள்ளையத்தேவன். போரின் முடிவு தமிழ் மண்ணுக்கு எதிராகவே அமைந்து விடுகிறது. வெள்ளையத்தேவன் வீரசுவர்க்கம் போகிறான். அவன் வழியே வெள்ளையம்மாளும் போய்விடுகிறாள்.

  தமிழ் பெண்கள் இன்று நேற்றல்ல… ஆயிரமாயிரம் ஆண்டுகளாகவே கனவு கண்டுகொண்டுதான் இருக்கிறார்கள். அதையும் ஒரு சங்கப் பாடல் சொல்லும். சங்க காலத்தில் அமங்கலங்களாகக் கருதப்பட்ட கனவுகள் எவையெவை என்று பார்க்கலாமா?

  திசையிரு நான்கு முற்க முற்கவும்
  பெருமரத், திலையி னெடுங்கோடு வற்றல் பற்றவும்
  வெங்கதிர்க் கனலி துற்றவும் பிறவும்
  அஞ்சுவரத் தகுந புள்ளுக்குர லியம்பவும்
  எயிறுநிலத்து வீழவு மெண்ணெ யாடவும்
  களிறுமேல் கொள்ளவுங் காழக நீப்பவும்
  வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும்
  திணை – வஞ்சி; துறை – கொற்றவள்ளை.
  பாடல் – காலனுங் காலம் பார்க்கும்
  நூல் – புறனானூறு
  பாடியவர் – கோவூர்கிழார் பாடியது

  பாட்டின் ஆழமான பொருளுக்குப் போகாமல் பாட்டில் தீய கனவுகளாக சொல்லப்படுகின்றவைகளை இங்கு விவரிக்கிறேன்.

  திசை இரு நான்கு முற்க முற்கவும் – இரு நான்கு என்பது எட்டு. எட்டுத் திசைகளிலும் கொள்ளி விழுந்து பற்றியதாம்
  பெருமரத்திலையின் நெடுங்கோடு வற்றல் பற்றவும் – ஓங்கி வளர்ந்து இலைகளை உதிர்த்து விட்டு வற்றலாய் நிற்கும் மரம் தீப்பற்றி எரிந்தது
  வெங்கதிர்க் கனலி துற்றவும் – பகலவன் சுடர் விட்டு நெருப்பாய்க் கொளுத்தியது
  பிறவும் அஞ்சுவரத் தகுந புள்ளுக்குரலியம்பவும் – மற்றும் அஞ்சுகின்ற பறவைகள் அந்த அச்சத்தை வெளிப்படுத்தி ஓலியெழுப்பின
  எயிறு நிலத்து வீழவும் – பல் உடைந்து நிலத்தில் வீழ்ந்தது
  எண்ணெய் ஆடவும் – கனவில் தலையை விரித்து எண்ணெய் தேய்த்து தலை முழுகுவது போலவும்
  களிறுமேல் கொள்ளவும் – பன்றி சிங்கத்தைப் புணரவும்
  காழக நீப்பவும் – ஆடைகள் அவிழ்த்து அம்மணமாய் இருப்பதும்
  வெள்ளி நோன்படை கட்டிலொரு கவிழவும் – சிறந்த படைக்கலன்கள் அவைகள் அடுக்கப்பட்டிருந்த கட்டிலோடு (அலமாரி) கவிழ்ந்து விழுந்தது.

  மேலே உள்ளவை அந்தக் காலத்தில் தீய கனவுகளாகக் கருதப்பட்டன. இப்படி பழந்தமிழரின் நம்பிக்கைகளை தெரிந்து கொள்வதும் சுவையாகத்தான் இருக்கிறது.

  பதிவில் இடம் பெற்ற பாடல்
  பாடல் – போகாதே போகாதே என் கணவா
  வரிகள் – கவிஞர் கு.மா.பாலசுப்ரமணியம்
  பாடியவர் – ரத்னமாலா
  இசை – ஜி.இராமநாதன்
  படம் – வீரபாண்டிய கட்டபொம்மன்
  பாடலின் சுட்டி – https://www.youtube.com/watch?v=a861UAQfX0w

  அன்புடன்,
  ஜிரா

  269/365

   
  • amas32 4:42 pm on August 27, 2013 Permalink | Reply

   பெண்களுக்கே intuition அதிகம். உள்ளுணர்வு சொல்லும் எதோ தீங்கு நடக்கப் போகிறது என்று. அதே போல் ஒரு பரபரப்பும் தொற்றிக் கொள்ளும் நல்லதை எதிர்பார்த்தும். எனக்கே நடந்திருக்கு. அமெரிக்காவில் ஒரு பெரிய விபத்து ஆன போது அந்த விவரம் ஒன்றுமே தெரியாமல் இங்கே இந்தியாவில் அன்று நிலைகொள்ளாமல் இருந்தேன். விரதமும் இருந்தேன். அதனால் இந்த மாதிரி சிச்சுவேஷன்களை படங்களிலும் கதைகளிலும் சித்தரிப்பது உண்மை தான். பெண்ணின் இந்த அரிய குணத்தையும் கவிஞர்கள் போற்றுகின்றனர்!

   amas32

  • MumbaiRamki 9:57 pm on August 27, 2013 Permalink | Reply

   Nothing about women . In general , people who observe the environment & others can make sub conscious intuitions which works – because the mind can make so many combinations, calculations beneath the conscious 🙂

   “களிறுமேல் கொள்ளவும் – பன்றி சிங்கத்தைப் புணரவு” – wow !! What an imagination .

  • rajinirams 3:16 pm on August 29, 2013 Permalink | Reply

   கு.மா.பா.அவர்களின் வரிகளையும் சங்க கால பாடலையும் விளக்கிய “கனவு பதிவு”மிக மிக வித்தியாசமான பதிவு.அப்பப்பா-எப்படியெல்லாம் யோசித்திருக்கிறீர்கள்-சூப்பர் சார்.சிவகங்கை சீமையில்-கனவு கண்டேன் என்று சந்தோஷமான சோகமான இரண்டு பாடல்களும் நன்றாக இருக்கும். நன்றி.

 • mokrish 11:30 am on June 18, 2013 Permalink | Reply  

  வேப்பமரம் புளியமரம்… 

  வசந்த் டிவியில் தினமும் மாலையில் வெவ்வேறு முருகன் கோவில்களின் படத்தொகுப்பை கந்தர் சஷ்டி கவசம் ஒலிக்க  ஒளிபரப்புகிறார்கள். பலமுறை கேட்டதுதான். ஆனால் அன்று அந்த பட்டியலைக்  கூர்ந்து கவனித்தேன்.

  வல்லபூதம் வலாஷ்டிக பேய்கள்
  அல்லல் படுத்தும் அடங்கா முனியும்,
  பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்
  கொள்ளிவாய் பேய்களும் குறளை பேய்களும்
  பெண்களை தொடரும் பிரம்ம ராட்சதரும் ்,
  அடியனைக்  கண்டால் அலறி கலங்கிட

  ‘வலிமையுடைய பூதங்களும், மிகவும் வலிமையுடைய பேய்களும்,உன் அடியவனான என்னைக் கண்டவுடன் அலறிக் கலங்கிட வேண்டும், என் பெயரைச் சொன்னவுடனேயே இடி விழுந்தது போல் பயந்து ஓடிட வேண்டும்’ என்ற வேண்டுதல். http://muruganarul.blogspot.in/2012/10/8.html

  பேய்களில் பூதங்களில் இவ்வளவு variety யா? அதிலும் ‘கொள்ளிவாய் பேய்’ என்ற பிரயோகம் சுவாரஸ்யமாக இருந்தது. கொஞ்சம் கூகிளினால் கிடைத்த தகவல் ஆச்சரியம்.  Marshlands எனப்படும் வயல் நிலங்களில் நடக்கும் ஒருவரை இது நெருப்பாகப் பின்தொடரும், ஓட முற்பட்டால் இதுவும் ஓடும் என்று நம்பினர். நிலத்தின் கீழ் அழுகும் தாவரப் பாகங்களிலிருந்து உயிரிவாயு எனப்படும் மெதேன் வாயு கசிவதாகவும் சதுப்பில் புதையும் கால் வெளியில் எடுக்கப்படும் போது வாயு வெளியேறி காற்றில் தீப்பற்றிக் கொள்ளுவதாகவும் ஒரு விளக்கம் .மெதேன் வாயுவுக்கு ‘கொள்ளிவாயு’ என்ற பெயர் வழங்கப்படுகிறது. இதுதான் கொள்ளிவாய் ஆனதா? ஆங்கிலத்திலும் Swamp Gas பற்றி இதே போல் படித்திருக்கிறேன்.

  பேய்கள் பூதங்கள் என்றால் எனக்கு உடனே ஒரு பழைய திரைப்பாடல் நினைவுக்கு வரும். அரசிளங்குமரி படத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய சின்னப் பயலே, சின்னப் பயலே சேதி கேளடா என்ற பாடல்.(இசை ஜி ராமநாதன், பாடியவர் டி எம் எஸ்) அதில் அவர் சொல்வது என்ன?   http://www.youtube.com/watch?v=7tlp04NBTM8

  வேப்ப மர உச்சியில் நின்னு பேய் ஒண்ணு ஆடுதுன்னு

  விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க – உந்தன்

  வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க – அந்த

  வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை

  வேடிக்கை யாகக் கூட நம்பி விடாதே -உந்தன்

  வீட்டுக் குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே – நீ

  அதிரடியான அறிவுரை. மகாகவி பாரதி நெஞ்சு பொறுக்குதில்லையே என்று சொன்னதும் இதுதான்

  வஞ்சனைப் பேய்கள் என்பார் –இந்த

  மரத்தில் என்பார் அந்தக் குளத்தில் என்பார்;

  அஞ்சுது முகட்டில் என்பார்—மிகத்

  துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார்

  மகாநதி படத்தில் வாலியும் பேய்கள நம்பாத பிஞ்சுல வெம்பாதே என்று சொல்கிறார் http://www.youtube.com/watch?v=465RsI5PNOo ஆத்தங்கரையிலே  அரசமரத்தில, கோயில் குளத்துல, கோபுர உச்சியிலே பேய் இருக்குன்னு சொன்னாங்க அதை நம்பாதே என்கிறார் தொடர்ந்து எது பேய் எது பூதம் என்று definition சொல்கிறார்

  அச்சங்கள் என்னும் பூதம்

  உழைக்காம வம்பு பேசி அலைவானே அவன் பேய்

  பணம் சேர்க்க பாதை மாறி பறப்பானே  அவன் பூதம்

  என்கிறார். பயம்தான் பேய் என்பது  பாரதி சொன்னதுதான்

  பயம் எனும் பேய்தனை அடித்தோம்—பொய்மைப்

  பாம்பைப் பிளந்துயிர் குடித்தோம்;

  ஆதாரங்களைக் காட்டி இதுதான் உண்மை என்று தெளிவாகக் கூறப்படுகிற ஒன்றை, வேண்டுமென்றே இல்லை என மறுத்துரைப்பவரைப் பேய்’களின் பட்டியலின்தான் வைக்க வேண்டும் என்று வள்ளுவர் சொல்கிறார்.

  இது எல்லா மதங்களிலும் இருக்கும் நம்பிக்கை. வேறு வேறு பெயர்கள். அவ்வளவுதான் ஆனால் கொஞ்சம் யோசித்தால் தீய எண்ணங்கள், பேராசை என்று மனிதனை தவறான பாதையில் செலுத்தும் உணர்வுகளுக்கு ஒரு வடிவம் கொடுத்து அதை சாத்தான் / பேய் என்று பல பெயர்களில் அழைத்தார்கள் என்று தோன்றுகிறது. அவற்றிலிருந்து விடுபட இறைவனை நோக்கி வேண்டுதல் வழக்கமாகியிருக்கும். கந்தர் சஷ்டி கவசம் சொல்வதும் அதுதான் கண்ணதாசன்

  ஆரவார பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா

  ஆலய மணியோசை நெஞ்சில் கூடிவிட்டதடா

  என்று சொல்வதும் அதையேதான்.

  மோகனகிருஷ்ணன்

  199/365

   
  • Sakthivel 11:48 am on June 18, 2013 Permalink | Reply

   நீங்கள் சொல்லும் சதுப்பு நில கொள்ளிவாய் பேய்களுக்கான விளக்கம். ,பொன்னியின் செல்வன் 2ஆம் பாகம் முதல் அத்தியாயத்தில் பூங்குழலி சொல்வது போல் கல்கி கூட சொல்லுவார். 🙂

  • rajnirams 11:14 pm on June 18, 2013 Permalink | Reply

   பதிவு அருமை. தமிழ்ல பேய்ப்பாட்டுன்னா “யார் நீ”ல வர்ற நானே வருவேன்,”ஆயிரம் ஜென்மங்கள்”படத்தில் வரும் வெண்மேகமே,”காற்றினிலே வரும் கீதம்”படத்தில் வரும் கண்டேன் எங்கும், சந்திரமுகியில் வரும் ரா ரா ,துணிவே துணை படத்தில் வரும் ஆகாயத்தில் தொட்டில் கட்டும் போன்றவை தான்.நன்றி.

  • amas32 (@amas32) 12:47 pm on June 19, 2013 Permalink | Reply

   In Pranic healing, which is one type of alternate medicine these evil qualities are considered as entities. Clairvoyants have seen them as dark cloud or dark reddish clouds in the aura of a person who is consumed with anger or jealousy. So yes, nothing but bad elements leading us to pitfalls.

   ரொம்ப வித்தியாசமான பதிவு மோகன், talking about an esoteric topic! கந்த சஷ்டி கவசம் படிக்கும் பொழுது வரிசையாக இறைவனிடம் பட்டியலிட்டு ஒவ்வொன்றிலிருந்தும் என்னைக் காப்பாற்று என்று ஏன் வேண்ட வேண்டும், blanket request ஆக எல்லாத் துன்பத்தில் இருந்தும் என்னைக் காப்பாற்று என்று சொல்லிவிட்டுப் போகலாமே என்று எண்ணுவேன். ஆனால் அதிலும் ஒரு காரணம் இருக்கும். ஒவ்வொன்றையும் பட்டியலிடும் பொழுது அதைப் பற்றி மனம் சிந்தித்து இறைவனிடம் அதிலிருந்து விலக்கி வைக்க வேண்டும் பொழுது நாமே நம்மை அதிலிருந்து விலக்கிக் கொள்ள subconscious ஆக நடவடிக்கை எடுக்கிறோம்.

   பட்டுக்கோட்டையார் எழுதிய பாடல் காலத்தைக் கடந்து நிற்கும் ஒரு பாடல்!

   எப்பவும் போல நல்ல பதிவு 🙂

   amas32

  • pvramaswamy 12:37 pm on November 18, 2013 Permalink | Reply

   அட்டகாசமான பதிவு, ஆரவாரமில்லாமல் அழகாக வந்திருக்கு. Super.

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel