Updates from September, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • என். சொக்கன் 10:30 pm on September 30, 2013 Permalink | Reply  

    காதல் கரம் 

    • படம்: இருவர்
    • பாடல்: ஹல்லோ மிஸ்டர் எதிர்க்கட்சி
    • எழுதியவர்: வைரமுத்து
    • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
    • பாடியவர்: ஹரிணி
    • Link: http://www.youtube.com/watch?v=JqgwTxDeOa8

    காதலா, காதலா, உனை நான் விடமாட்டேன்,

    கைத்தலம் பற்றுவேன், பிரிய விடமாட்டேன்,

    கண்கள் மீதாணை, அழகு மீதாணை, விடவே விடமாட்டேன்!

    ’கைத்தலம்’ என்ற சொல்லை நம்மிடையே மிகவும் பிரபலப்படுத்தியவர்கள், இரண்டு கவிஞர்கள். ஒன்று ஆண்டாள், இன்னொன்று அருணகிரிநாதர்.

    ’வாரணமாயிரம் சூழ வலம் செய்து நாரண நம்பி நடக்கின்றான்’ என்று கல்யாணக் கனவைச் சொல்லத் தொடங்கிய ஆண்டாள், ‘கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன்’ என்கிறாள்.

    ஆண்டாள் இப்படிக் காதலோடு பாட, அருணகிரிநாதர் பக்தி நெறி நிற்கிறார். ‘கைத்தல நிறை கனி, அப்பமோடு அவல் பொரி’ என்று பட்டியல் போட்டுப் பிள்ளையாரை அழைத்து வழிபடுகிறார்.

    உண்மையில் ‘கைத்தலம்’ என்றால் என்ன?

    இந்த இரண்டு பாடல்களிலும், வைரமுத்துவின் இந்தத் திரைப்படப் பாடலிலும் கைத்தலம் என்றால் உள்ளங்கை என்றுதான் அர்த்தம் தோன்றுகிறது. உள்ளங்கையைப் பற்றுவேன், உள்ளங்கையைப் பற்றக் கனாக்கண்டேன், உள்ளங்கையில் கனிகளை நிறைத்துவைத்தேன்’…

    ஆனால் ‘கைத்தலம்’ என்பது கையாகிய தலம், அதாவது முழுக் கையையும் குறிக்கும். உள்ளங்கையும் அதன் பகுதி என்பதால், அதையும் குறிக்கும்.

    கம்ப ராமாயணத்தில் ஒரு பாடல்.

    ஓர் இளம் பெண். இவளுக்கு இடை இருக்கிறதா, அல்லது பொய்யான தோற்றமா என்று மயக்கமே ஏற்படும் அளவுக்குச் ‘சிக்’கென்ற பேரழகி.

    அவளுடைய காதலன், அவளை நெருங்குகிறான், கட்டித் தழுவுகிறான்.

    ஆனால் அவளோ, ஏதோ ஞாபகத்தில் மூழ்கியிருக்கிறாள். இப்போது அவளுக்குக் காதல் விளையாட்டுகளில் ஆர்வம் இல்லை. அவனுடைய கைகளை விலக்கிவிடுகிறாள்.

    உடனே, அந்தக் காதலன் அதிர்ந்துபோகிறான், அவள் அவனுடைய கையை ஒதுக்கிவிட்ட செயல், அவன் நெஞ்சில் கூர்வாள் பாய்ந்ததைப்போல் இருந்தது என்கிறார் கம்பர்.

    ஓர் ஆணின் நெஞ்சம் இப்படிப் புண்ணாவதை அவர் விரும்புவாரா? ‘கைத்தலம் நீக்கினள், கருத்தின் நீக்கலள்’ என்று சமாதானப்படுத்துகிறார். அதாவது, கையைதான் விலக்கினாள், கருத்திலிருந்து அவனை நீக்கவில்லை.

    புரியலையா? அவ ஏதோ வேலை விஷயத்தை யோசிச்சுகிட்டிருக்காய்யா, டிஸ்டர்ப் பண்ணாதே, கொஞ்ச நேரம் டிவி பார்த்துட்டு வா, அப்புறமா ரொமான்ஸ் பண்ணலாம்!

    ***

    என். சொக்கன் …

    30 09 2013

    303/365

     
    • rajinirams 12:26 pm on October 1, 2013 Permalink | Reply

      கைத்தலம் என்றவுடனே நினைவுக்கு வருவது கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ்க என்ற கவியரசரின் பூ முடித்தாள் இந்த பூங்குழலி என்ற நெஞ்சிருக்கும் வரை படப்பாடல் தான்.கைத்தலம் பற்றி உள்ளங்கை நெல்லிக்கனியாய் விளக்கிய நல்ல பதிவு.நன்றி.

    • amas32 3:55 pm on October 1, 2013 Permalink | Reply

      கைத்தலம் என்பது அழகிய ஒரு சொல். வெறும் கைபிடித்துச் செல்லுதலைக் குறிக்காது தன்னையே ஒப்படைப்பதை/ஊன்றுகோலாகப் பற்றுவதைக் குறிப்பது போல தொனிக்கும். ஆண்டாள் பாசுரத்தின் பாதிப்போ என்னவோ? இந்தக் காதல் பாட்டில் கூட அப்படித் தான் வருகிறது. ஆனால் கைத்தல நிறை கனி என்று விநாயகரை நோக்கி அவ்வையார் சொல்லும்போது கை நிறைய என்று தான் தோன்றுகிறது.

      amas32

      • lotusmoonbell 4:17 pm on October 1, 2013 Permalink | Reply

        ‘கைத்தலநிறைகனி’ அருணகிரிநாதரின் திருப்புகழில் வருவது. அவ்வையின் பாட்டல்ல.

        • amas32 9:31 pm on October 1, 2013 Permalink

          ஆமாம் தவறு தான், அனைவரும் மன்னிக்க.

          amas32

        • என். சொக்கன் 8:50 pm on October 2, 2013 Permalink

          நான் செஞ்ச தப்புக்கு நீங்க ஏனுங்க மன்னிப்புக் கேட்கறீங்க? 🙂

    • Uma Chelvan 5:52 pm on October 1, 2013 Permalink | Reply

      புரியலையா? அவ ஏதோ வேலை விஷயத்தை யோசிச்சுகிட்டிருக்காய்யா, டிஸ்டர்ப் பண்ணாதே, கொஞ்ச நேரம் டிவி பார்த்துட்டு வா, அப்புறமா ரொமான்ஸ் பண்ணலாம்!…..::::))))டிவி பார்த்து டைம் ஏன் waste பண்ணனும்??? சமையலறைக்கு போய் எதாவது சமைக்கலாம் இல்ல?. வீட்லில் கூடமாட ஒத்தாசை பண்ணனும்னு எண்ணமே வராதே!!!!!!:::::))))

      • என். சொக்கன் 8:50 pm on October 2, 2013 Permalink | Reply

        அது வந்துட்டா நாங்க ஏன் இப்படி இருக்கோம்? :)))

  • G.Ra ஜிரா 1:24 pm on September 29, 2013 Permalink | Reply  

    ஒரு துளி தேன்! 

    ஒரு மிகப்பிரபலாமான கதை. கண்டிப்பாக எல்லாருக்கும் தெரிந்திருக்கும்.

    ஒருவன் காட்டு வழியே சென்றான். திடீரென்று பெண் சிங்கமொன்று துரத்தியது. தப்பிக்க ஓடினான். ஆலமரம் ஒன்று வழியில் வந்தது. அதன் விழுதைப் பிடித்து ஏறினான். பாதி விழுது ஏறும் போதுதான் மரத்திலிருந்த மலைப்பாம்பைக் கவனித்தான். மேலே போனால் பாம்பு. கீழே இறங்கிலாம் பெண் சிங்கம்.

    தப்பிக்க வழியில்லாமல் அந்த விழுதில் தொங்கினான். அப்போது ஆலமரத்திலிருந்த தேன்கூட்டிலிருந்து தேன் சொட்டியது. அந்தத் துளி நாக்கில் விழுந்ததும் அவன் அதை ரசித்து ருசித்தான்.

    அந்த மனிதனின் நிலமைக்குப் பெயர்தான் வாழ்க்கை. பிறப்பும் எளிதில்லை. வாழ்வும் எளிதில்லை.

    ஆனால் அந்த ஒரு துளி தேனைச் சுவைக்கும் போது மலைப்பாம்பையும் பெண்சிங்கத்தையும் அவன் மறந்தது போல சிற்சில இன்பங்களில் வாழ்வியல் துன்பங்களை நாம் மறந்திருக்கிறோம்.

    இந்த உண்மை நமக்குப் புரிந்தால் நாம் அமைதியாவோம். முடிந்தவரை நல்லவராவோம்.

    புரியாதவர்கள் ஆடித் தீர்த்து விடுவார்கள். எதெற்கெடுத்தாலும் பிரச்சனை. எல்லாவற்றிலும் தவறு. அடுத்தவருக்கு முடிந்த வரை நேரடியாகவும் மறைமுகமாகவும் தொல்லை கொடுத்தல். கொள்ளையடித்தல். கொலை செய்தல். அரசியல் பிழைத்தல். வஞ்சகம் செய்தல். இன்னா செய்தல். நாவினால் சுடுதல். அமைதியைக் குலைத்தல். நீர்நிலைகளைக் கெடுத்தல். இயற்கையை அழித்தல். குழந்தைகளைத் துன்புறுத்துதல். இன்னும் எத்தனையெத்தனையோ தவறுகள்.

    ஆடித் தீர்த்துவிடுகிறது மக்கள் கூட்டம். ஆனால் எதுவும் தொடர்வதில்லை. ஒரு நாளில்.. ஒரு நிமிடத்தில்… அல்ல அல்ல. ஒரு நொடியில் அந்த ஆட்டம் அமைதியாகி விடுகிறது.

    ஆடி அடங்கும் வாழ்க்கையடா” என்று எழுதினார் உவமைக் கவிஞர் சுரதா. அத்தனை ஆட்டங்களும் அடங்குவதற்குத் தேவை ஒரேயொரு நொடிதான் என்பது மனிதனின் மிகப்பெரிய பலவீனம்.

    அந்த பலவீனத்தினால் உண்டாவது அச்சம். இறப்பின் மீதான அச்சம். அந்த அச்சம் ஏழைகளுக்கு மட்டும் வருவதல்ல. வேறுபாடே இல்லாமல் அரசன் முதல் ஆண்டி வரைக்கும் வியாபாரி முதல் விவசாயி வரைக்கும் வருவதுதான்.

    யோகிக்கும் உண்டு அந்த அச்சம். அச்சத்தைப் போக்கவும் மறைக்கவும் அவன் செய்வதுதான் யோகம். அதையே போகி வேறுவிதமாகச் செய்கிறான். போகத்தில் தன்னை மறைத்து இறப்பின் அச்சத்தைத் தள்ளிப் போடுகிறான்.

    அந்த அச்சம் இறப்பின் மீது மட்டுமல்ல… அது தொடர்பான அனைத்தின் மீதும் உண்டாகிறது.

    உலகத்திலேயே மிக மிக அமைதியான இடம் ஒன்று உண்டு. அங்கு சண்டை இல்லை. சச்சரவு இல்லை. மேலோர் இல்லை. கீழோர் இல்லை. செல்வந்தன் இல்லை. ஏழை இல்லை. எந்தப் பிரச்சனையுமே இல்லாத அமைதியான இடம் அது.

    ஆம். இடு/சுடுகாடுதான் அது. அங்கு யாரையாவது தனியாகப் போகச் சொல்லுங்கள். போகவே மாட்டார்கள். அந்த இடத்தைப் பற்றி கவிஞர் மருதகாசி அழகாக எழுதினார் ரம்பையின் காதலுக்காக படத்தில். பாடலுக்கு இசையமைத்தவர் டி.ஆர்.பாப்பா.

    சமரசம் உலாவும் இடமே
    நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே

    அமைதியே இல்லாமல் ஓயாமல் சிந்தித்துச் சிந்தித்துக் குழப்பிக் கொண்ட எத்தனையோ உள்ளங்கள் அமைதியானது அங்குதான்.

    ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் தீயோரென்றும் பேதமில்லாது
    எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
    தொல்லையின்றினே தூங்கிடும் வீடு
    ஆண்டி எங்கே அரசனும் எங்கே ஆண்டி எங்கே அரசனும் எங்கே
    அறிஞன் எங்கே அசடனும் எங்கே அறிஞன் எங்கே அசடனும் எங்கே
    ஆவி போன பின் கூடுவார் இங்கே ஆவி போன பின் கூடுவார் இங்கே
    சேவை செய்யும் தியாகி ஸ்ருங்கார போகி
    ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
    எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே
    நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே

    மனித வாழ்வில் இல்லாத அமைதியும் ஒற்றுமையும் பாகுபாடின்மையும் நிலவுவது அந்த ஒரு இடத்தில்தான்.

    சரி. இந்தப் பதிவைப் படிக்கும் போதே மனம் இவ்வளவு அமைதியாகிறதே… ஒரு மெல்லிய சோகம் மனதில் படிகிறதே. அப்படியிருக்க இந்த அச்சத்தை எப்படி வெல்வது? வெற்றி கொள்வது?

    புத்தபிக்குகள் எப்போதும் சோகமாக இருப்பார்களாம். ஏன்? பின்னால் நிகழப் போவதுக்கு முன்னாலேயே சோகம் அனுபவிப்பார்கள். துறவிகள் அனைத்தையும் துறந்து தவம் செய்யப் போய்விடுவார்கள்.

    நாமும் அப்படிச் சோகமாக இருக்கத்தான் வேண்டுமா? துறவு கொள்ளத்தான் வேண்டுமா? வேறுவழியே கிடையாதா? ஆண்டவனுடைய திருவடியைப் பற்ற வேண்டும் என்று எல்லா மதங்களும் சொல்கின்றன.

    காலக்கணக்கை முடிப்பதற்கு காலன் வந்தால் தானே அச்சம் வரும். ஆண்டவனே வந்தால்?

    எத்தனையோ யோகிகளும் சித்தர்களும் முனிவர்களும் காணக்கிடைக்காத அந்த அருட்பெருஞ்சோதியே வந்தால்?

    அப்படி ஒரு வழியைத்தான் அருணகிரியும் சொல்லிக் கொடுக்கிறார்.

    பாதி மதிநதி போது மணிசடை
    நாத ரருளிய குமரேசா
    பாகு கனிமொழி மாது குறமகள்
    பாதம் வருடிய மணவாளா
    காலன் எனை அணுகாமல் உனதிரு
    காலில் வழிபட அருள்வாயே

    அன்புடன்,
    ஜிரா

    302/365

     
    • rajinirams 2:55 pm on September 29, 2013 Permalink | Reply

      வாழ்வியல் தத்துவத்தை எளிமையாகவும் அழகாகவும் எடுத்து “காட்டு”ம் அருமையான பதிவு. “சமரசம் உலாவும் இடமே”-மருதகாசியின் என்ன அறுபுதமான வரிகள்.முகராசி படத்தில் இடம்பெறும் கவியரசரின் வரிகளும் அருமையாக இருக்கும்-பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான்,அந்த பட்டயத்தில் கண்டது போல் வேலி எடுத்தான்,அதில் எட்டடுக்கு மாடி வைத்து கட்டிடத்தை எட்டடி நின்று படுத்தான்,மண்ணை கொட்டியவன் வேலி எடுத்தான்-உண்டாக்கி வெச்சவங்க ரெண்டு பேரு-இங்கே கொண்டு வந்து போட்டவங்க நாலு பேரு. கவிஞர் வைரமுத்துவின் “கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளே தங்கபஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே-இந்த வாழ்க்கை வாழ தான்,கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல”வரிகளும் சிந்தனையை தூண்டுபவை.”இறைவனின் திருவடியை பற்றுவதே சரி”என்ற அருணகிரியாரின் பாடலை சொன்னது முத்தாய்ப்பு.

    • Uma Chelvan 5:06 pm on September 29, 2013 Permalink | Reply

      ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் கீழோர் என்றும் பேதமில்லாது
      எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு…………..எனக்கு மிகவும் பிடித்த பாடல் “பட்தீப்” ராகத்தில் !! மரணம் என்பது எல்லோருக்கும் பொது!! ஆனால் “எங்கே” ” எப்படி” என்பதுதான் பெரிய கேள்விகுறி? அதில் தான் இறைவனும் இருக்கிறான்!!!!! .

    • amas32 4:00 pm on October 1, 2013 Permalink | Reply

      ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா என்ற பாட்டும் வாழ்வு முடிந்ததும் எல்லோருக்கும் ஒரே நிலை தான் என்று சொல்ல வருகிறது. அதற்காக முதலில் இருந்தே வாழ்க்கையை அனுபவிக்காமல் இருக்க முடியாது. தலை கால் புரியாமல் ஆடாமல், நல்ல எண்ணங்களையும் செயல்களையும் செய்து வந்தால் முடிவும் அமைதியானதாக இருக்கும்.

      amas32

  • என். சொக்கன் 8:39 pm on June 26, 2013 Permalink | Reply  

    மீனாக் கண்ணு! 

    • படம்: பூந்தோட்டக் காவல்காரன்
    • பாடல்: சிந்திய வெண்மணி
    • எழுதியவர்: கங்கை அமரன்
    • இசை: இளையராஜா
    • பாடியவர்கள்: கே. ஜே. யேசுதாஸ், பி. சுசீலா
    • Link: http://www.youtube.com/watch?v=e_fCjI0YTX0

    சேலாடும் கண்ணில், பாலூறும் நேரம்,

    செவ்வானம் எங்கும், பொன் தூவும் கோலம்!

    ’சேல்’ என்ற வார்த்தையைப் பழைய (அதாவது, கருப்பு வெள்ளைப்) பாடல்களில் நிறைய கேட்கலாம். தமிழ் மொழி கொஞ்சம் நவீன வடிவத்தைப் பெற்றபிறகு, பேச்சுவழக்கில் இல்லாத காரணத்தாலோ என்னவோ, திரைக் கவிஞர்கள் இந்த வார்த்தையை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டார்கள்.

    அபூர்வமாக, கங்கை அமரன் இதைப் பயன்படுத்தியிருக்கிறார், மிக அழகான உவமையாக!

    ‘சேல்’ என்றால் கெண்டை மீன். அந்த மீனைப்போன்ற பெரிய, அகன்று விரிந்த கண்களைக் கொண்ட பெண்ணைச் ‘சேல்விழியாள்’ என்று சொல்வார்கள்.

    உதாரணமாக, திருப்புகழ் பாடல் ஒன்றில் அருணகிரிநாதர் வள்ளியை இப்படி வர்ணிக்கிறார்: கொஞ்சு வார்த்தை கிளி, தண் கண் சேல், குன்ற வேட்டிச்சி!

    அதாவது, கிளிபோல் கொஞ்சுகிற வார்த்தைகளையும், தண்ணீரில் எந்நேரமும் மிதப்பதால் குளிர்ந்திருக்கும் கெண்டை மீனைப்போன்ற கண்களையும் கொண்ட, குன்றில் வாழ்கிற வேடுவப் பெண்!

    கங்கை அமரனின் சொல்லாட்சி ஒருபுறமிருக்க, இந்தப் பாடலில் எனக்கு மிகவும் பிடித்த வரி, ‘பெண் என்னும் வீட்டில் நீ செய்த யாகம்’. கர்ப்பம் தாங்குதலை இதைவிட எளிமையாகவும் சுருக்கமாகவும் உயர்வாகவும் சொல்லிவிடமுடியுமா என்ன!

    ***

    என். சொக்கன் …

    26 06 2013

    207/365

     
    • amas32 8:55 pm on June 26, 2013 Permalink | Reply

      //‘பெண் என்னும் வீட்டில் நீ செய்த யாகம்’. கர்ப்பம் தாங்குதலை இதைவிடச் சுருக்கமாகவும் உயர்வாகவும் சொல்லிவிடமுடியுமா என்ன!// எடுத்துக் காண்பித்ததற்கு நன்றி 🙂

      //சேலாடும் கண்ணில், பாலூறும் நேரம்,// சேலின் அர்த்தம் புரிந்தது ஆனால் இந்த வரியின் பொருள் புரியவில்லை. கண் கிறங்குகிறது என்ற பொருளோ?

      amas32

    • என். சொக்கன் 9:54 pm on June 26, 2013 Permalink | Reply

      //கண்ணில் பாலூறும்// விழிகளில் தாய்மை உணர்வு ததும்பும் என்று சொல்வதாக நான் புரிந்துகொள்கிறேன், அர்த்தம் அதுதானா என்று தெரியவில்லை

    • rajnirams 7:51 pm on June 27, 2013 Permalink | Reply

      sale, சேலை என்று அறிந்திருந்த எனக்கு “சேல்” வார்த்தையின் “மீனி”ங்கை சொன்னதற்கு நன்றி. இவ்வளவு நாள் “வாலி”எழுதியது என்றே நினைத்திருந்தேன்.அந்த படத்தின் எல்லா பாடல்களும் கங்கை அமரன் என்று இப்போது தான் தெரிந்தது. அற்புதமான வரிகள் கொண்ட பாடல். நன்றி.

  • G.Ra ஜிரா 11:36 am on June 19, 2013 Permalink | Reply  

    திருப்புகழ்! 

    திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்
    எதிர்ப்புகளை முருகா, உன் வேல் தடுக்கும்
    முருகா…… உன் வேல் தடுக்கும்!

    பூவை செங்குட்டுவன் எழுதிய அற்புதமான பாடல் வரிகள் இவை. கௌரி கல்யாணம் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் இது.

    திருப்புகழின் திருப்புகழை இதை விட எளிமையாகச் சொல்ல முடியுமா என்று நம்மையும் சிந்திக்க வைக்கும் வரிகள் இவை.

    திருப்புகழுக்கு அப்படி என்ன பெருமை? அதைப் புரிந்து கொள்ள சிலபல தகவல்களை நாமும் தெரிந்து கொள்ள வேண்டும்.

    தமிழுக்குக் கிடைத்த அற்புத மாமணி அருணகிரிநாதர். முருகன் திருவருளால் அருணகிரியின் வாக்கில் வந்த பாடல்கள்தான் திருப்புகழ் என்று தொகுக்கப்பட்டன. திருப்புகழ் என்ற பெயரைப் பின்னால் யாரும் வைக்கவில்லை. அருணகிரியே ஒரு பாடலில் திருப்புகழ் என்று குறிப்பிடுகிறார்.

    பக்கரை விசித்ரமணி பொற்கலனை இட்ட நடை
    பட்சியெனும் உக்ர துரகமும் நீபப்
    பக்குவ மலர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
    பட்டுருவ விட்டருள்கை வடிவேலும்
    திக்கது மதிக்கவரு குக்குடமும் ரட்சைதரு
    சிற்றடியு முற்றிய பனிருதோளும்
    செய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு
    செப்பென எனக்கருள்கை மறவேனே

    குற்றமற்ற மணிகள் பொருந்திய பொன்னணிகளை அணிந்து கொண்டு அழகு நடை போடும் மாமயிலையும்,
    கடம்ப மலர் மாலையையும்,
    கிரவுஞ்ச மலையானது மறைந்து போகும் படி திருக்கையால் ஏவித் துளைத்த வேலையும்,
    எட்டுத் திசையும் கிடுகிடுக்க வரும் சேவலையும்,
    அருள் தருகின்ற சிற்றடிகளையும்,
    பன்னிரண்டு தோள்களையும்,
    இருந்து அருள் செய்யும் ஒவ்வொரு திருப்பதிகளையும் வைத்து உயர்ந்த வகையில் திருப்புகழை உள்ளம் விரும்பிப் பாடு என்று அருள் சொன்ன கருணையை நான் என்றும் மறவேனே!

    ஆக.. இந்தப் பாட்டில் இருந்து தெரிவது என்ன? திருப்புகழ் என்ற பெயரை அருணகிரிநாதர் வைக்கவில்லை. முத்தமிழ்த் தெய்வமான முருகப் பெருமானின் திருவாயால் பெயரிடப்பட்ட நூல் திருப்புகழ் என்ற சிறப்பை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    திருப்புகழில் இப்போது கிடைத்திருப்பது 1307 பாடல்கள்தான். இன்னும் பல்லாயிரம் பாடல்கள் இருந்ததாகவும் அவை மறைந்து போனதாகவும் கூறுகிறார்கள்.

    திருப்புகழைப் பாடிய அருணகிரி அந்தப் பாடல்களை ஓலையில் எழுதி வைக்கவில்லை. அவர் பாடிய கோயில்களில் இருக்கும் அன்பர்கள் அந்தப் பாடல்களை ரசித்து எழுதி வைத்தார்கள். அப்படி எழுதி வைத்த பாடல்கள்தான் இன்று தப்பிப் பிழைத்து நமக்குக் கிடைத்திருக்கின்றன.

    திருப்புகழை அருணகிரி அறிவால் பாடவில்லை. முருகன் அருளால் பாடினார். அதாவது முருகன் அருணகிரியைப் பாட வைத்தான். அந்தப் பாடல்களில் எத்தனையெத்தனை சந்தநயம்! எத்தனை தாள வகைகள் உண்டோ அத்தனையும் திருப்புகழ் பாடல்களில் உள்ளனவாம். அத்தோடு அளவிட முடியாத கவிச்சுவை வேறு.

    அப்படிப்பட்ட திருப்புகழ் பாடல்களை அருணகிரியே ரசித்திருக்கிறார். கேட்டவர்கள் ரசித்ததையும் கண்டிருக்கிறார்.

    பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு
    பட்சிந டத்திய குகபூர்வ
    பச்சிம தட்சிண வுத்தர திக்குள
    பத்தர்க ளற்புத மெனவோதுஞ்
    சித்ரக வித்துவ சத்தமி குத்ததி
    ருப்புக ழைச்
    சிறி தடியேனுஞ்
    செப்பென வைத்துல கிற்பர வத்தெரி
    சித்தவ நுக்ரக மறவேனே

    அடியவர்களுக்கு அருளும் இறைவனே
    ஆடும் மயில் ஏறி விளையாடும் குகனே
    கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு
    ஆகிய திசைகளில் உள்ள அன்பர்கள் எல்லாரும்
    அற்புதம் அற்புதம் என்று ரசித்து ஓதுகின்ற
    அழகு கவிநயமும் சந்தநயமும் மிகுந்து இருக்கும்
    திருப்புகழை கொஞ்சமாவது நானும்
    சொல்லும் படி செய்து உலகில் பரவுவதற்கு
    வகை செய்த உன்னருளை மறக்க மாட்டேன் முருகனே!

    இந்த வரிகளிலும் அருணகிரி முருகனுக்கு நன்றி கூறுகிறார். திருப்புகழ் என்ற பெயர் நிலைபெறும் வகையில் இந்தப் பாடலிலும் இடம் பெறுகிறது.

    சரி. திருப்புகழ் பாடல்களிலேயே முதலில் பாடப்பட்டது எந்தப் பாடல் என்று தெரியுமா? எங்கு பாடப்பட்டது என்று தெரியுமா?

    முத்தைத் தரு பத்தித் திருநகை” என்ற பாடல்தான் முதலில் பாடப்பட்டது. பாடப்பட்ட இடம் திருவண்ணாமலை கோயில்.

    திருப்புகழ் பாடு என்று முருகன் பணித்த பின் “என்ன பாடுவது எப்படிப் பாடுவது” என்று புரியாமல் தவித்த அருணகிரிக்கு “முத்து முத்தாகப் பாடு” என்று முருகனே எடுத்துக் கொடுக்க பாடப்பட்டதுதான் “முத்தைத் தரு பத்தித் திருநகை” என்ற திருப்புகழ்.

    இதில் முத்து என்பது அருணகிரியைப் பெற்ற அன்னை என்றொரு கருத்தும் உண்டு.

    திரைப்படங்களிலும் திருப்புகழ் பாடல்கள் வந்துள்ளன. குறிப்பாக அருணகிரிநாதர் திரைப்படத்தில் மூன்று திருப்புகழ் பாடல்கள் வந்துள்ளன.

    1. முத்தைத் தரு பத்தித் திருநகை
    2. பக்கரை விசித்ரமணி பொற்கலனை இட்ட நடை
    3. தண்டையணி வெண்டயம் கிண்கிணி சதங்கையும்

    அதற்குப் பல ஆண்டுகள் கழித்து இறையருட் கலைச்செல்வர் இயக்கத்தில் வெளிவந்த “யாமிருக்க பயமேன்” என்ற திரைப்படத்தில் ”பாதிமதி நதி போது மணிசடை” என்ற திருவேரகத்(சுவாமிமலை) திருப்புகழ் மெல்லிசை மன்னர் இசையமைப்பில் வெளிவந்தது. அதற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு இளையராஜா இசையில் “ஏறுமயில் ஏறிவிளையாடும்” என்ற திருப்புகழ் ”தம்பி பொண்டாட்டி” என்ற திரைப்படத்தில் இடம் பெற்றது.

    நாமும் திருப்புகழை ஓதி முருகனருளால் நல்லறிவும் நல்லருளும் பெற்று வளமோடு வாழ்வோம்.

    பதிவில் இடம் பெற்ற திருப்புகழ் பாடல்கள்
    திருப்புகழை/பி.சுசீலா,சூலமங்கலம் ராஜலட்சுமி/கௌரிகல்யாணம்/எம்.எஸ்.வி – http://youtu.be/awxORiSnHig
    முத்தைத்தரு/டி.எம்.சௌந்தரராஜன்/அருணகிரிநாதர்/டி.ஆர்.பாப்பா – http://youtu.be/2vRkCV3symk
    பக்கரை/டி.எம்.சௌந்தரராஜன்/அருணகிரிநாதர்/டி.ஆர்.பாப்பா – http://youtu.be/AfZ3UoT4pFw
    தண்டையணி/டி.எம்.சௌந்தரராஜன்/அருணகிரிநாதர்/டி.ஆர்.பாப்பா – http://youtu.be/QyZi7oEUtGI
    பாதிமதிநதி/வாணி ஜெயராம், எல்.ஆர்.அஞ்சலி/யாமிருக்க பயமேன்/எம்.எஸ்.வி – http://youtu.be/FDMcv6CjglI
    ஏறுமயில்/சுவர்ணலதா,மின்மினி,கல்பனா,பிரசன்னா/தம்பிபொண்டாட்டி/இளையராஜா – http://youtu.be/ju0VhKQHQ3c

    பி.கு. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளிவந்த “என் வீட்டுத் தோட்டத்தில்” பாடல் “நாதவிந்து கலாதீ நமோநம” என்ற திருப்புகழின் சாயலிலும் “வெற்றிக் கொடி கட்டு” என்ற பாடல் “முத்தைத் தரு பத்தி” என்ற திருப்புகழின் சாயலிலும் வந்துள்ளது.

    அன்புடன்,
    ஜிரா

    200/365

     
    • kamala chandramani 12:14 pm on June 19, 2013 Permalink | Reply

      திருப்புகழ் ஓதுவதன் சிறப்பை அருணகிரிநாதர் திருத்தணிகைத் திருப்புகழில் அருமையாகக் கூறுகிறார்.
      ”சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ் செகுத்தவ ருயிர்க்குஞ் சினமாக,
      சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பென் றறிவோம்யாம்;
      நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும் நிசிக்கருவறுக்கும் பிறவாமல்
      நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும் நிறைப்புக ழுரைக்குஞ் செயல்தாராய்.”

      வள்ளலாரோ”உய்யும் பொருட்டுன் திருப்புகழை உரையே னந்தோ வுரைக்கடங்காய்” எனத் தணிகைச் செஞ்சுடரிடம் வருந்துகிறார். மேலும்,”அருணகிரி பாடும் நின்னருள்தோய் புகழைப் படியேன் பதைத் துருகேன் பணியேன் மனப்பந்தம் எல்லாம் கடியேன் என் செய்வேன் என் காதலனே” என உருகுகிறார். திருப்புகழும் அருட்பாவும் இரு கண்கள்.

    • Arun Rajendran 12:24 pm on June 19, 2013 Permalink | Reply

      ஜிரா சார்,

      அருணகிரிநாதர் காரணப் பெயர் மாதிரி தெரியுதுங்க.. சுருக்கமா ஒரு குறிப்பும் முடிந்தால் கொடுங்க..படிக்கிற ஆர்வத்தத் தூண்டி இருக்கீங்க… திருப்புகழையும் என்னோட அட்டவனைல சேர்த்திக்கிறேன்

      இவண்,
      அருண்

    • amas32 (@amas32) 12:53 pm on June 19, 2013 Permalink | Reply

      //திருப்புகழில் இப்போது கிடைத்திருப்பது 1307 பாடல்கள்தான். இன்னும் பல்லாயிரம் பாடல்கள் இருந்ததாகவும் அவை மறைந்து போனதாகவும் கூறுகிறார்கள்.//

      நீங்கள் இங்கே நாலு வரி நோட்டில் இந்த இருநூறு நாட்களில் பதிந்த பாடல்கள் நாளை ஒரு ரெபரன்சுக்கு நிச்சயம் பலருக்கு உதவப் போகிறது.

      உங்கள் டாபிக் ஜிரா! சூப்பர் பதிவு 🙂 அனுபவித்துப் படித்தேன் 🙂 நன்றி.

      amas32

    • rajnirams 10:07 pm on June 19, 2013 Permalink | Reply

      முதலில் உங்களுக்கெல்லாம் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
      சூப்பரான பதிவு. இதுவரை நான் அறியாத அரிய தகவல்கள்.அருணகிரிநாதரின் பெருமைகளையும் திருப்புகழின் சிறப்புகளையும் அருமையாக “சுட்டி”காட்டியதற்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்.

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel