கிளகிளவி 

இளையராஜா பாட்டுக்கு மெட்டு போட்டாரா? மெட்டுக்குப் பாட்டெழுதி வாங்குனாரான்னு தெரியலையே” என்று எத்தனையெத்தனையோ படங்களுக்கு இசையமைத்த மெல்லிசை மன்னரே வியந்து பாராட்டிய பாடல் இது.

வளையோசை கலகலகலவெனக் கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது
சில நேரம் சிலுசிலுசிலு எனச் சிறகுகள் படபட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது
சின்னப் பெண் பெண்ணல்ல வண்ணப் பூந்தோட்டம்
கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம்
படம் – சத்யா
பாடல் – வாலி
பாடியவர்கள் – எஸ்.பி.பாலசுப்ரமணியம், லதா மங்கேஷ்கர்
இசை – இசைஞானி இளையராஜா
பாடலின் சுட்டி – http://youtu.be/DDyA2_Grjp4

அருமையான இந்தப் பாடலை வைத்து ஒரு இலக்கண வகுப்பே நடத்தி விடலாம். அப்படிக் கிடைத்த வாய்ப்பை நழுவ விடலாமா?

இந்தப் பாட்டின் பல்லவியில் நிறைந்திருப்பது இரட்டைக் கிளவிகள். முதலில் என்னென்ன சொற்கள் இரட்டைக்கிளவியாக வந்திருக்கின்றன என்று பார்க்கலாம்.

கலகலகலவென
குளுகுளு
சிலுசிலுசிலு

வரிக்கு ஒன்றாக பல்லவியில் மூன்று இரட்டைக் கிளவிகள் வந்துள்ளன.

கிளவி என்பதற்குச் சொல் என்ற பொருள் உண்டு. கிளைத்து வருவதால் கிளவி. இரண்டிரண்டு சொற்களாகக் கிளைத்து வருவதால் அது இரட்டைக் கிளவி.

இந்த இரட்டைக் கிளவிக்கு இலக்கணம் என்னவென்று தொல்காப்பியம் தெளிவாகச் சொல்கிறது.

இரட்டைக் கிளவி இரட்டிற்பிரிந் திசையா
அதிகாரம் – சொல்லதிகாரத்தில் கிளவியாக்கம்
நூல் – தொல்காப்பியம்

பொருள் இல்லாத சொல் இரட்டையாகக் கிளைத்து வந்து பொருள் கொடுப்பதுதான் இரட்டைக்கிளவி. அவைகளைப் பிரித்தால் பொருள் கிடைக்காது.

குளுகுளு தென்றல் காற்று” என்ற வரியை எடுத்துக் கொண்டால், குளுகுளு என்ற இரட்டைக் கிளவி தென்றலின் குளுமையைப் பற்றிச் சொல்கிறது.

அதையே ”குளு தென்றல் காற்று” என்று சொன்னால் அதே பொருள் வராது. ”குளுமையான தென்றல் காற்று” என்று சொல்ல வேண்டும். ஆனால் குளுமையான தென்றல் காற்றை விட குளுகுளு தென்றல் காற்று மிகப் பொருத்தமாக இருக்கிறது.

அதனால்தான் இரட்டைக் கிளவியை இலக்கணப்படுத்தி வைத்திருக்கிறது தமிழ். சொல்ல வந்த கருத்தை எளிமையாகச் சொல்ல இரட்டைக் கிளவி மிகவும் பயன்படும். கீழே ஒரே பொருளைத் தரும் இரண்டு விதமான வரிகளைக் கீழே கொடுத்துள்ளேன். நீங்களே பார்த்துப் படித்து எது சொல்ல வந்த பொருளை அழுத்தமாகச் சொல்லிப் புரியவைக்கிறது என்று முடிவு செய்யுங்கள்.

வேகமாக ஓடினான் – விடுவிடுவென ஓடினான்
அளவுக்கு அதிகமாகப் பேசினான் – வளவளவெனப் பேசினான்
அவளுக்கு நிறைய கோவம் வந்தது – கடுகடுவென கோவப்பட்டாள்
அழகாகச் சிரித்தாள் – கலகலவெனச் சிரித்தாள்
அறை சூடாக இருந்தது – அறை கதகதப்பாக இருந்தது

இப்போது இரட்டைக் கிளவியின் அருமையைப் பற்றி நீங்களே முடிவுக்கு வந்திருப்பீர்கள் என நம்புகிறேன். இப்படி நாம் பேசும் ஒவ்வொரு சொல்லுக்கும் பின்னால் ஒரு இலக்கணம் இருக்கிறது என்பது நாம் பேசும் தமிழுக்குப் பெருமைதான்.

சரி. வேறெந்த பாடல்களில் எல்லாம் இப்படி இரட்டைக் கிளவிகள் வருகின்றன? உங்களுக்குத் தெரிந்த பாடல்களைப் பட்டியல் இடுங்களேன்.

அன்புடன்,
ஜிரா

148/365