Updates from December, 2012 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • என். சொக்கன் 1:51 pm on December 31, 2012 Permalink | Reply  

  தும்பு துலக்குதல் 

  • படம்: சத்தம் போடாதே
  • பாடல்: அழகுக் குட்டிச் செல்லம்
  • எழுதியவர்: நா. முத்துக்குமார்
  • இசை: யுவன் ஷங்கர் ராஜா
  • பாடியவர்: ஷங்கர் மகாதேவன்
  • Link: http://www.youtube.com/watch?v=GOc05aY_OWs

  நீ சிணுங்கும் மொழி கேட்டால், சங்கீதம் கற்றிடலாம்!

  தண்டவாளம் இல்லாத ரயிலை,

  தவழ்ந்தபடி நீ ஓட்டிப் போவாய்!

  வம்பு தும்பு செய்கின்ற பொல்லாதவன்!

  ’என்கிட்ட வம்பு, தும்பு வெச்சுக்காதே’ என்று அடிக்கடி சொல்கிறோம். அதற்கு என்ன அர்த்தம்?

  ‘வம்பு’ என்றால் வீண் சண்டை என்று பொருள், அது நமக்குத் தெரியும். அதென்ன தும்பு? ’காசு, கீசு’, ‘காப்பி, கீப்பி’ என்று சும்மா இணைத்துச் சொல்வதுபோல் பொருளற்ற ஒரு சொல்லா அது?

  தமிழில் சும்மா ஓசை நயத்துக்காகச் சேர்க்கப்படும் இதுபோன்ற பொருளற்ற சொற்கள் ‘கிகர’ வரிசையில் அமைவதுதான் வழக்கம். குழந்தை, கிழந்தை, கல்யாணம், கில்யாணம், கம்ப்யூட்டர், கிம்ப்யூட்டர், பாட்டு, கீட்டு…

  அந்த வழக்கத்தின்படி, வம்புக்குத் துணையாகக் கிம்புதானே வரணும்? ஏன் தும்பு? அப்படியானால் ‘தும்பு’வுக்கு வேறு அர்த்தம் இருக்கிறதோ?

  என்னிடம் உள்ள தமிழ் அகராதியில் தும்புக்கு இரண்டு பொருள்கள் தந்துள்ளார்கள்: கயிறு / நார்.

  உதாரணமாக, ‘தும்பை விட்டு வாலைப் பிடி’ என்று நம் ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதன் அர்த்தம், மாட்டைப் பிடிக்க விரும்புகிறவர்கள் அதன் கழுத்தில் உள்ள கயிறை(தும்பு)தான் பிடிக்கவேண்டும், அதை விட்டுவிட்டு வாலைப் பிடித்தால் பலன் இருக்காது.

  வீட்டைச் சுத்தப்படுத்தும்போது, ‘ஒரு தூசு தும்பு இல்லாம க்ளீன் பண்ணிட்டேன்’ என்கிறோம். இங்கே ’தும்பு’வின் பொருள் நார், அல்லது அதுபோன்ற ஏதோ ஒரு சின்னஞ்சிறிய குப்பை.

  ஒரே பிரச்னை, கயிறு, நார் என்ற இந்த இரண்டு விளக்கங்களும் ’வம்பு தும்பு’வுக்குப் பொருந்தாது. மூன்றாவதாக இன்னோர் அர்த்தம் இருக்கிறதா? கொஞ்சம் துப்(ம்)பு துலக்க முயற்சி செய்தேன்.

  ’தும்பு’ என்று நேரடியாக இல்லாவிட்டாலும், ‘தும்பு பிடுங்குதல்’ என்று ஒரு பயன்பாடு இருக்கிறதாம். அதன் பொருள் ஒருவர்மீது குற்றம் சொல்லுதல், Accusing, போட்டுக்கொடுத்தல்.

  இந்தத் தும்பு அந்த வம்புவுடன் அழகாகப் பொருந்துகிறது. ‘அவன்கிட்ட வம்பு தும்பு வெச்சுக்காதே’ என்றால், அவனை வீண் சண்டைக்கு அழைக்காதே, அவனாக ஏதாவது தப்புச் செய்தாலும் இன்னொருவரிடம் சென்று போட்டுக்கொடுக்காதே’ என்று அர்த்தம் என ஊகிக்கிறேன்.

  சரிதானா? உங்களுடைய விளக்கங்களைப் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்!

  ***

  என். சொக்கன் …

  31 12 2012

  030/365

   
  • Rie 2:40 pm on December 31, 2012 Permalink | Reply

   சீவக சிந்தாமணியில் இருக்குதாம் இந்த வார்த்தை. “தும்பறப் புத்தி சேன சொல்லிது குரவற் கென்ன”. தும்பு அற இது சொல், அதாவது குழப்பாமல் தெளிவாகச் சொல்.

  • elavasam 11:40 am on January 1, 2013 Permalink | Reply

   ஐயா

   என்னிடம் உள்ள அகராதியில் தும்பு என்ற சொல்லுக்குப் பொருளாக இப்படி இருக்கிறது.

   தும்பு (p. 536) [ tumpu ] , s. fibre of vegetables; stings, நார்; 2. a rope to tie beasts with கயிறு; 3. a button; 4. dust, தும்; 5. a fringe to a shawl; 6. blemish, a fault, குற்றம்.

   தூசு தும்பில்லாது எனச் சொல்லும் பொழுது 4. dust என்பது பொருத்தமாக இருக்கிறது. வம்பு தும்பு எனும் பொழுது கடைசி பொருளான குற்றம் என்பது சரியாக வருகிறது.

 • mokrish 11:36 am on December 30, 2012 Permalink | Reply  

  பாடல் வரிகள் Remix 

  பழைய பாடல்களின் இசை ரீமிக்ஸ் கேட்டிருக்கிறோம் (அது பிடிக்குமா இல்லையா என்பது வேறு விஷயம்). பாடல் வரிகளின் ரீமிக்ஸ் பார்த்திருக்கிறீர்களா?
  தூக்கு தூக்கி படத்தில் ஒரு பாடல். உடுமலை நாராயண கவி இயற்றியது. “கண் வழி புகுந்து கருத்தினில் வளர்ந்த மின்னொளியே ஏன் மௌனம்”  இதை வைரமுத்து எப்படி ரீமிக்ஸ் செய்கிறார்? “விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே” என்று வார்த்தைகளை சீராட்டி அலங்கரித்து ஒரு இலக்கிய வேஷம் கட்டி  … அழகாக இருக்கிறதே!
  அடுத்து பாசம் படத்தில் வரும் பாடல். கவியரசு கண்ணதாசன் கற்பனையில் “மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில்,மயங்கிய ஒளியினைப் போலே மன மயக்கத்தை தந்தவள் நீயே”. இதையும் வைரமுத்து அவரது வார்த்தைகளில் ரசவாதம் செய்கிறார். எப்படி? “இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்திப்பொழுதில் வந்துவிடு”
  இரண்டு வேறு பாடல்களில் இருந்து இரண்டு வரிகளை இரவல் வாங்கி
  விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
  இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்திப்பொழுதில் வந்துவிடு
  கருமாறாமல் உருமாற்றி  மெட்டுக்குள் உட்காரவைக்கிறார். https://www.youtube.com/watch?v=pY8WyzuCXr0
  ஆசை முகம் என்ற படத்தில் ஒரு பாடல். காதலனும் காதலியும் உரையாடுவது போல அமைந்த வரிகள்

  நீயா இல்லை நானா நீயா இல்லை நானா

  நெஞ்சக் கதவைக் கொஞ்சம் திறந்தது

  நீயா இல்லை நானா

  https://www.youtube.com/watch?v=XVOpBghkkiQ

  இருவரும் அமர்ந்து காதல் எப்படி மலர்ந்தது என்று யோசித்து பல சம்பவங்களை நினைத்து இதை செய்தது நீயா இல்லை நானா என்று பேசுவது போல ஒரு அமைப்பு. கொஞ்சம் உண்மை கொஞ்சம் பொய் கொஞ்சம் கிண்டல் கொஞ்சம் சீண்டல் என்று வாலி அட்டகாசம் செய்யும் பாடல். எல்லா வரிகளும் நீயா இல்லை நானா என்றே முடியும்.

  ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது,

  ஊர்வலமாக பார்வையில் வந்தது

  ஒரு மேடையில்லாமல் நாடகம் நடித்தது

  இளம் பருவத்தின் வாசலில் உருவத்தைப் பார்த்தது

  ஒரு நாள் வந்தது உள்ளத்தைக் கேட்டது

  இன்று மறு முறை வரும் வரை மயக்கத்தில் இருப்பது

  பூவிதழோரம் புன்னகை வைத்தது

  இன்று உள்ளத் திரையில் ஓவியம் வரைந்தது

  இந்த பாடல் வைரமுத்துவை inspire செய்திருக்கவேண்டும். பஞ்சதந்திரம் படத்தில் சரியான காட்சியமைப்பு கிடைத்தவுடன் வாலியின் இந்த வரிகளை அடித்தளமாக வைத்துக்கொண்டு எழுதிகிறார். இதுவும் காதலன் காதலி பேசிக்கொள்ளும் காட்சிதான். காதல் இளவரசனும்  கனவுக்கன்னியும் பாடும்  பாடல்  கடற்கரை நிலவொளி எல்லாம் இல்லை. ஜஸ்ட் லைக் தட் நடந்துகொண்டு பாடும் பாடல். கொஞ்சம் Blame game போல கட்டமைப்பு. கூர்ந்து பார்த்தால் காதல் பொங்கும்  வரிகள்

  என்னோடு காதல் என்று பேச வைத்தது  நீயா இல்லை நானா

  ஊரெங்கும் வதந்தி காற்று வீச வைத்து நீயா இல்லை நானா

  https://www.youtube.com/watch?v=tAjGFrWW3V4

  சட்டை பொத்தான், கூந்தல், கண்ணில் தூசி ஊதும் சாக்கு, லிப்டின் நீள அகலம் என்று ஒரு  contemporary காதல் உரையாடலை முன் வைக்கிறார். நக்கல் இருந்தாலும் ‘உன்னோடு லவ் என்று ஊர் சொன்னது, நீ வேறு நான் வேறு யார் சொன்னது என்று சமரசம் செய்துகொள்ளும் யதார்த்தம்

  கவாஸ்கர் போலவே  சச்சின்  straight டிரைவ்  அடித்தால் கொண்டாடுகிறோம் அதை  பாராட்டுவது  போல், இதையும் பாராட்டலாம்.

  மோகன கிருஷ்ணன்

  029/365

   
  • kamala chandramani 12:03 pm on December 30, 2012 Permalink | Reply

   ஆம் திருவெம்பாவை, ”காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
   கோதை குழலாட வண்டின் குழாமாட” பாடல். பெரிய இடத்துப் பெண் படத்தில் ”கட்டோடு குழல் ஆட ஆட,” என்ற கண்ணதாசன் பாடல் அப்படியே ரீமிக்ஸ்தான். விஸ்வனாதன் -ராமமூர்த்தி இசையில் பிரபலமான பாடல் அது.

  • பிழை 8:38 am on January 1, 2013 Permalink | Reply

   தினமலர் வாரமலரில் “எங்கிருந்து எடுக்கபட்டது” என்று ஒரு தொடர்… வைரமுத்துவின் பல படைப்புகள் மற்றவரின் பாடல் வரிகளின் ரீமிக்ஸ் செய்யபட்டது என்று உதாரணங்களோடு.. கடந்த 9-10 வாரங்களாக படித்து பாருங்கள் முடிந்தால்

   • என். சொக்கன் 11:34 am on January 1, 2013 Permalink | Reply

    அது திருச்சி பகுதியில்மட்டும் வருவதாகக் கேள்வி

    • பிழை 1:33 pm on January 1, 2013 Permalink

     தெரியவில்லை நான் வந்தவாசியில் படித்தேன்.. அது வேலுர் திருவண்ணாமலை பதிப்பில் வரும்…..

 • G.Ra ஜிரா 11:15 am on December 29, 2012 Permalink | Reply
  Tags: எஸ்.ஜானகி, ஏ.ஆர்.ரஹ்மான், குமரகுருபரர், முருகன்,   

  முதல்வனின் முத்தம் 

  முதல்வனே என்னைக் கண் பாராய்
  முந்தானைக் கொடியேற்ற நேரமில்லையா
  காதல் பஞ்சம் வந்து நொந்தேனே
  முத்த நிவாரணம் எனக்கில்லையா
  படம் – முதல்வன்
  பாடல் – வைரமுத்து
  பாடியவர் – எஸ்.ஜானகி
  இசை – ஏ.ஆர்.ரகுமான்
  ஆண்டு – 1999

  இந்தப் பாடலின் காட்சியமைப்பே சிறப்பானது. இயக்குனர் ஷங்கர் கம்ப்யூட்டர் கிராபிக்சில் புகுந்து விளையாண்டிருப்பார்.

  காதலனாக இருப்பவன் நாட்டுக்குக் காவலனாகவும் இருந்தாலே தொல்லைதான். வேளைக்கொரு ஊடலும் நாளுக்கொரு கூடலும் கிடைக்கவே கிடைக்காது. பசிக்குச் சாப்பிடாமல் கிடைத்த போது மட்டும் சாப்பிடும் காதல் பிச்சைக்காரி நிலை.

  அப்படியாக காதல் பஞ்சத்தில் அடிபட்டுக் கிடப்பவளுக்கு ஒரு முத்த நிவாரணம் கிடைக்காதா என்றொரு ஏக்கம். அந்த ஏக்கத்தின் தாக்கத்தில் பாடுவதுதான் இந்தப் பாடல்.

  பின்னே… முதல்வன் முத்தம் எளிதாகக் கிடைத்து விடுமா?

  முதல்வனிடம் முத்தம் வேண்டுமென்று அந்தப் படத்தின் நாயகி மட்டும் கேட்கவில்லை. குமரகுருபரரும் கேட்கிறார்.

  ஆனால் அவர் கேட்கும் முதல்வன் நாட்டுக்கு முதல்வனல்ல. எத்தனை அண்டங்களுண்டோ அத்தனை அண்டங்களுக்கும் முதல்வன்.

  மதியு நதியு மரவும் விரவு மவுலி யொருவன் முக்கணும்
  வனச முகமு மகமு மலர மழலை யொழுகு சொற்சொலும்
  புதல்வ விமய முதல்வி யருள்செய் புனித வமரர் கொற்றவன்
  புதல்வி தழுவு கொழுந குறவர் சிறுமி குடிகொள் பொற்புய
  கதிரு மதியு மொளிர வொளிரும் ஒளிய வளிய கற்பகக்
  கனியி னினிய வுருவ பருவ மழையி னுதவு கைத்தல
  முதிரு மறிவி லறிஞ ருணரு முதல்வ தருக முத்தமே
  முனிவர் பரவு பருதி புரியின் முருக தருக முத்தமே

  என்னடா… குமரகுருபரசுவாமிகள் முருகனிடம் முத்தம் கேட்கிறார் என்று பார்க்கின்றீர்களா? ஆம். கேட்கிறார். முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் நூலில் அல்லவா கேட்கிறார்!

  முருகனைத் தவிர பிற பந்தங்களை நீங்கிய ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய பிரபந்தங்களில் ஒன்றுதான் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ். கந்தர் கலிவெண்பாவும் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழும் கூட அவர் எழுதிய பிரபந்தங்களில் அடங்கம்.

  பிரபந்தம் என்று சிறுகாப்பிய வகையில் அடங்கும். தமிழறிவும் இறையருளும் இருந்தால் நாமும் பிரபந்தம் எழுதலாம். ஆனால் அவை ஆழ்வார் அருளியது போலவோ குமரகுருபரசுவாமி அருளியது போலவோ இருக்குமா!

  உலகத்தைப் படைத்து – அதில்
  உயிர்களைப் படைத்து – அவைகட்கு
  உணர்வைப் படைத்து – அது தணிக்க
  உணவைப் படைத்து – அவற்றிலெல்லாம்
  உள்ளிருக்கும் உயர்வான பொருளைக்
  குழந்தையென்றும்
  மழலையென்றும்
  சின்னஞ் சிறுவனென்றும்
  எண்ணி எண்ணிக்
  கொஞ்சிக் கொஞ்சி உருகும் போது
  திருச்செந்தூர்க் குழந்தையாம்
  முத்துக்குமரன் முத்தமும் முக்தியன்றோ!

  அந்த வீடுபேற்றுக்காகத்தானே குமரகுருபரன் தமிழ்க்கடவுளைக் குழந்தையாக்கிப் பிள்ளைத்தமிழ் பாடியிருக்கிறார். பிறப்பிலே ஊமையாய்ப் பேசாத அவரைத் திருச்செந்தூரிலே பேச வைத்ததும் அந்த முருகக்குழந்தைதானே!

  காதல் பஞ்சத்துக் கதாநாயகி முத்த நிவாரணம் கேட்டால், அருள் நிறைந்த குமரகுருபரரோ முத்த முக்தி கேட்கிறார். அது சரி. கேட்பதையும் கேட்கும் இடத்தில்தானே கேட்க வேண்டும்.

  அன்புடன்,
  ஜிரா

  028/365

   
  • Arun Rajendran 12:50 pm on December 29, 2012 Permalink | Reply

   முதல்வனின் முத்தம் இனித்தது..:-)

   • GiRa ஜிரா 9:09 pm on December 29, 2012 Permalink | Reply

    நன்றி அருண். முத்தமிழ் முதல்வன் முத்தம் இனிப்பதோடு எல்லாமுமாய் இருக்கும்.

 • என். சொக்கன் 10:57 am on December 28, 2012 Permalink | Reply  

  ’இச்’ உண்டா? இல்லையா? 

  • படம்: வருஷம் 16
  • பாடல்: பழமுதிர்ச் சோலை
  • எழுதியவர்: வாலி
  • இசை: இளையராஜா
  • பாடியவர்: கே. ஜே. யேசுதாஸ்
  • Link: http://www.youtube.com/watch?v=nql-xtxyvHI

  பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்,

  படைத்தவன் படைத்தான், அதற்காகத்தான்!

  நான்தான் அதன் ராகம், தாளமும், கேட்பேன், தினம் காலை மாலையும்

  கோலம், அதன் ஜாலம், இங்கு ஓராயிரம்!

  இந்தப் பாட்டைக் கவனித்துக் கேளுங்கள், ‘பழமுதிர்ச் சோலை’ என்றுதான் யேசுதாஸ் பாடுகிறார். ஆனால் உண்மையில் அங்கே ‘ச்’ வருமா? வராதா?

  பள்ளி இலக்கணப் பாடத்தில் ’வினைத்தொகை’ என்று படித்திருக்கிறோம். அதாவது, கடந்த / நிகழ் / எதிர்காலம் மூன்றுக்கும் பொருந்தக்கூடிய வகையில் அமைந்த சொற்றொடர்கள்.

  இதற்கு மிகப் பிரபலமான உதாரணம், ‘ஊறுகாய்’,

  இங்கே ஊறுதல் என்பது Verb, காய் என்பது Noun, அந்தக் காய் ஊறியது, ஊறுகிறது, ஊறிக்கொண்டிருக்கிறது, இனிமேலும் ஊறும், இப்படி எல்லாவற்றுக்கும் அந்த வாக்கியம் பொருந்தும்.

  இன்னோர் உதாரணம், ‘சிதறு தேங்காய்’. சிதறிய / சிதறுகின்ற / சிதறப்போகும் தேங்காய்.

  வினைத்தொகை தொடர்பான ஒரு முக்கியமான இலக்கண விதி, Verb, Noun இடையே ஒற்று மிகாது. அதாவது ‘ஊறுக்காய்’, ‘சிதறுத் தேங்காய்’ என்று எழுதக்கூடாது, ‘ஊறுகாய்’தான், ‘சிதறு தேங்காய்’தான்.

  ஆச்சா, இப்போது இந்தப் பாடலின் முதல் மூன்று வார்த்தைகளைக் கவனிப்போம் : பழம் + முதிர் + சோலை = பழமுதிர்ச் சோலை? அல்லது பழமுதிர் சோலை?

  இங்கே முதிர்தல் என்பது Verb, பழம், சோலை என்பவை Noun, ஆக, பழம் விளைந்து முதிர்ந்த சோலை, விளைந்து முதிர்ந்துகொண்டிருக்கும் சோலை, இனியும் விளைந்து முதிரப்போகும் சோலை, அந்த அர்த்தத்தில் எடுத்துக்கொண்டால் இது ஒரு வினைத்தொகை, ஒற்று மிகாது, ஆக ‘பழமுதிர் சோலை’தான் சரி. ‘ச்’ வராது.

  இதனை வேறுவிதமாகவும் பிரிக்கலாம்: பழம் + உதிர் + சோலை = பழமுதிர் சோலை. பழங்கள் எங்கும் உதிர்ந்து கிடந்த, உதிர்ந்து கிடக்கிற, இனிமேலும் உதிர்ந்துகொண்டே இருக்கப்போகும் ஒரு சோலை.

  ’முதிர்தல்’ என்ற Verbக்குப் பதில் ‘உதிர்தல்’ என்ற Verb வந்துள்ளது, மற்றபடி இதுவும் வினைத்தொகைதான். ’ச்’ வராது. ‘பழமுதிர் சோலை’தான் சரி.

  அதெல்லாம் முடியாது, வாலி ‘ச்’ போட்டுதான் எழுதியிருக்கிறார், யேசுதாஸும் ‘ச்’ போட்டுதான் பாடியிருக்கிறார், நான் அவர்களைதான் நம்புவேன் என்றால், அதற்கும் ஒரு விளக்கம் உண்டு.

  ஒற்று (அதாவது ‘ச்’) மிகுந்திருப்பதால், இது வினைத்தொகை அல்ல என்று நாம் எடுத்துக்கொள்ளவேண்டும். ‘பழமுதிர்ச் சோலை’, அதாவது முதிர்ந்த பழங்கள் நிறைந்த சோலை என்று (ஒரே ஒரு tenseல்) அர்த்தம் எடுத்துக்கொள்ளலாம்.

  சரி விடுங்கள், சோலை என்றால் அவ்வப்போது ‘இச்’ சத்தம் கேட்பது சகஜம்தானே!

  ***

  என். சொக்கன் …

  28 12 2012

  027/365

   
  • BaalHanuman 11:08 am on December 28, 2012 Permalink | Reply

   >>சரி விடுங்கள், சோலை என்றால் அவ்வப்போது ‘இச்’ சத்தம் கேட்பது சகஜம்தானே!

   குறும்புக்காரர் அய்யா நீங்கள் 🙂

   பதிவுக்கு சுண்டி இழுக்கும்படி கவர்ச்சிகரமான தலைப்பு வைப்பதாகட்டும்… நச்சென்று சுஜாதா ஸ்டைலில் கடைசியில் ஒரு பஞ்ச் லைன் ஆகட்டும்…

   முடியலே 🙂

   • Niranjan 1:16 pm on December 28, 2012 Permalink | Reply

    அழகான பாட்டு. அற்புதமான விளக்கம். ஒரு தமிழ் வகுப்பில் இருப்பது போல் இருந்தது. பள்ளிப் பருவத்தில் ஒழுங்காக கவனிக்கவில்லை. இப்பொழுது முழு மனதோடு, ஈடுபாடோடு படிக்கும் போது பொருள் விளங்கி பேரின்பம் சுரக்கிறது. கடைசி வரியில் ஒரு “இச்” வைத்து , ஒரு “டச்” வைத்தீர்களே !! நீங்கள் “சொக்க” நாதர் தான்!!

  • Arun Rajendran 11:35 am on December 28, 2012 Permalink | Reply

   பழமுதிர்ச் சோலை -> முதிர்ந்த பழங்கள் நிறைந்த சோலை
   —–மேலே உள்ள பயண்பாட்டில் வினைத்தொகை அன்மொழியாய் வந்தது என கொள்ளலாமா?

  • தேவா.. 11:52 am on December 28, 2012 Permalink | Reply

   இந்த பட பாடல்தான், என் கவனத்தை பாடல்கள் மீது திருப்பியது, என்னை பாடல்களை தேடி தேடி கேட்க்க செய்தது….

   இந்த படத்தில், இச்..சான பாடல் பூ பூக்கும் மாசம்தானே…..

   • தேவா.. 11:54 am on December 28, 2012 Permalink | Reply

    நான் தமிழ் இலக்கணம் படித்தது இல்லை…அதனால் எனக்கு இந்த தகவல்கள் எல்லாம் படிப்பினையாக உள்ளது…

  • psankar 7:20 pm on December 28, 2012 Permalink | Reply

   அது solai அல்ல சோலை (sokkan அல்ல chokkan என்பது போல) ஆதலால் அது ச் அல்ல 🙂

  • Saba 7:21 pm on January 15, 2013 Permalink | Reply

   மேல் விளக்கத்தை படித்தவுடன் மனதில் ஒரு கேள்வி எழுகிறது

   தை பொங்கல் / தைப்பொங்கல் ‘ப்” உண்டா? இல்லையா ? இரு வகையாகவும் எழுதுவது வழக்கதில் உள்ளது.

  • Anand Raj 7:37 pm on January 15, 2013 Permalink | Reply

   ஆஹாஹா.. அருமையான படலை பிடித்துகொண்டுவந்தீர்கள்… வாலி எழுதி விட்டார் .. யேசு தாசும் பாடியாகி விட்டது. இப்ப நம்ம நாலு வரியிலும் வந்து விட்டது.

   இதுவும் பேச்சுத் தமிழில் வந்துவிடும் ஒரு சிறு தவறுதான்.

   சேர்த்து வாசிக்கும்…. சாரி…… பாடும் போது தானாக ஒற்று மிகுதியாகி.. நீங்கள் சொன்ன “இச்” வந்துவிடுகிறது..

   நீங்களே பாடிப் பாடுங்களேன்..!! “இச்” வரும். ஆனால் எழுதும் போது நீங்கள் சொன்னது போல் பழமுதிர் சோலை சரிதான்.

   #தொலை காட்சி…… தொலைக்காட்சி /// தொலை பேசி.. தொலைப்பேசி ..!

  • amas32 9:28 pm on September 10, 2013 Permalink | Reply

   பழமுதிர் சோலை தான் சரி. பாட்டுக்காக விதிவிலக்கு பழமுதிர்ச்சோலை இல்லையா?

   amas32

 • mokrish 12:12 pm on December 27, 2012 Permalink | Reply  

  இறைவன் இருக்கின்றானா? 

  இறைவன் இருக்கின்றானா என்பது மிகவும் பழைய கேள்வி.  ஆத்திக நாத்திக நண்பர்கள் காலம் காலமாக செய்யும் முடிவில்லா விவாதம். சமீபத்தில் கமலஹாசன் தசாவதாரம் படத்தில் சொன்ன ‘நான் எங்கே இல்லன்னு சொன்னேன், இருந்தா  நல்ல இருக்கும்னுதானே சொன்னேன்’ என்ற வசனம் சுவாரஸ்யமானது. ‘Thank God, I am an  Atheist’ போன்ற இந்த  unresolved conflict விவாதத்திற்கு அழகு சேர்க்கிறது.

  தமிழகத்தில் ‘ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்’ என்ற வரிகள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒரு கடவுள் மறுப்பு அரசியல் கட்சி வளர்வதற்கு அடித்தளமாய் அமைந்த பிரபல வாசகம். தமிழ் திரைப்பாடல்களில் இந்த கேள்விக்கு விடை கிடைக்குமா? இறைவனும் கடவுளும் ஆண்டவனும் தெய்வமும் சாமியும் எத்தனையோ பாடல்களின் கருப்பொருளாய் வந்திருக்கும்போது நிச்சயம் விடை கிடைக்கும்.

  முதலில் கண்ணதாசன்

  இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கிறான் – அவன்

   இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான் ? எங்கே வாழ்கிறான்?
  நான் ஆத்திகனானேன் அவன் அகப்படவில்லை
  நான் நாத்திகனானேன் அவன் பயப்படவில்லை (அவன் பித்தனா)

  என்று விவாதத்தை ஆரம்பிக்கிறார். மற்றொரு பாடலில் முதல் கட்ட விடை கண்டு கொள்கிறார்

  கடவுள் இருக்கின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா

    காற்றில் தவழுகின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா (ஆனந்த ஜோதி)

  இது இறைவன் கண்ணுக்கு தெரிய வேண்டியதில்லை என்று உணர்ந்தது போல் வரிகள். இப்போது இறைவன் இருக்கின்றானா என்பது கேள்வியில்லை. எங்கே என்ற கேள்வி மட்டும் இன்னும் இருக்கிறது. தொடர்ந்த தேடலில் எங்கே என்றும் அறிந்து சொல்கிறார்.

  தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே

     தெளிந்த நினைவும் திறந்த நெஞ்சும் நிறைந்ததுண்டோ அங்கே
     எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சம் இறைவன் திகழும் வீடு

  இசையில் கலையில் கவியில் மழலை மொழியில் இறைவன் உண்டு (சரஸ்வதி சபதம்)

  வாலியும் இந்த தேடலில் சளைக்கவில்லை. இதயத்தை திற இறைவன் வரட்டும் என்று சொல்கிறார்

  மனம் என்னும் கோவில் திறக்கின்ற நேரம்

  அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும் (சந்திரோதயம்)

  தினசரி வாழ்க்கையில் நாம் வாழும் முறையில் இறைவனை காண்பதே இனிது என்பது வாலியின் வாதம். கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம் கடவுள் இருக்கிறார். இதோ எந்தன் தெய்வம் முன்னாலே என்று சட்டென்று அடையாளம் கண்ட அவர் கோணத்தில் பாசமுள்ள பார்வையும் கருணையுள்ள  நெஞ்சும் இறைவன் வாழும் இடம். இயற்கையின்  பூவிரியும் சோலை, பூங்குயிலின் தேன்குரல், குளிர் மேகம், கொடி விளையும் கனிகள் எல்லாமே   தெய்வம் வாழும் வீடுதான்.

  முடிவாக

  பல நூல் படித்து நீ அறியும் கல்வி

  பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்

  பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்

  இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம் (பாபு)

  எவ்வளவு தெளிவான பார்வை. நயமான வரிகள். கல்வி கற்று நல்ல நிலைக்கு வந்து, பொது நலத்திற்கு செல்வம் வழங்கி, அடுத்தவர் உயர்வில் இன்பம் காண்பவர் வாழ்க்கைதான் சொர்க்கம் போன்றது. அந்த நிலைதான் தெய்வம் என்றால் யார் மறுப்பு சொல்வார்?

  மோகன கிருஷ்ணன்

  026/365

   
  • Niranjan 2:49 pm on December 27, 2012 Permalink | Reply

   Very well explained 🙂 🙂

  • padma 6:21 pm on December 27, 2012 Permalink | Reply

   தெய்வம் என்றால் அது தெய்வம், வெறும் சிலை என்றால் அது சிலைதான், உண்டென்றால் அவன் உண்டு இல்லை என்றால் அவன் இல்லை என்றும் தொடரும் விவாதம்.

   பாபு திரைப்படபாடல், இதோ எந்தன் தெய்வம் பாடல் எழுதியது கண்ணதாசநன்தானே.

 • G.Ra ஜிரா 10:51 am on December 26, 2012 Permalink | Reply  

  இஞ்சி 

  “என்னடா படிக்கிற? அமைதியா உக்காந்திருக்க. வாய் விட்டுப் படிச்சாத்தான் மண்டைல ஏறும்”

  நான் சொன்னதும் வாய் விட்டுப் படிக்கத் தொடங்கினான் மகன்.

  ”செம்பிட்டுச் செய்த இஞ்சித் திருநகர்ச் செல்வந் தேறி
  வம்பிட்ட தெரிய லெம்மு னுயிர்கொண்ட பகையை வாழ்த்தி”

  ”என்னடா இது?”

  “மனப்பாடச் செய்யுள். கம்பராமாயணம்.”

  ”சரி. படி. படி”

  ”அப்பா ஒரு சந்தேகம். இஞ்சித் திருநகர்னு போட்டிருக்கே. இலங்கைல இஞ்சி நெறைய வெளயுமா?”

  ”இலங்கையில் இஞ்சி வெளையும். ஆனா அந்த இஞ்சி வேற. இந்தப் பாட்டுல வர்ர இஞ்சி வேற. இந்த இடத்துல இஞ்சின்னா மதில். செம்பிட்டுச் செய்த இஞ்சின்னா செம்பு கலந்து கட்டப்பட்ட மதிற்சுவர்னு பொருள். படி. படி.”

  மதியம் சாப்பிடும் போது தயிர் ஊற்றிக் கொள்ளும் போது தட்டில் மாங்காய் இஞ்சி ஊறுகாய் விழுந்தது. மிக எளிதான ஊறுகாய். உடனடி ஊறுகாயும் கூட. கழுவிப் பொடிப்பொடியாய் நறுக்கிக் கொள்ள வேண்டும். மிளகாய்ப் பொடி கலந்து லேசாய்த் தாளித்து எலுமிச்சம்பழம் பிழிந்தால் தீடீர் ஊறுகாய் தயாராகிவிடும்.

  சாப்பிட்டுக் கையைக் கழுவிய பின்னரும் இஞ்சியை மனதிலிருந்து கழுவ முடியவில்லை. தமிழ் இலக்கியத்தில் இஞ்சி எத்தனை இடங்களில் வருகிறது என்று யோசித்தேன். பொதுவாகவே வளமையைக் குறிக்கும் இடங்களில் எல்லாம் இஞ்சி விளையும் என்று சொல்வார்கள்.

  சிலப்பதிகாரத்திலும் இஞ்சி இருக்கிறது. “மஞ்சளு மிஞ்சியு மயங்கரில் வலயத்து” என்கிறார் இளங்கோவடிகள். மிக அழகான வரி இது. பிரித்துச் சொல்கிறேன். எளிதாகப் புரியும்.

  மஞ்சளு மிஞ்சியு மயங்கரில் வலயத்து = மஞ்சளும் இஞ்சியும் மயங்கு அலரில் வலயத்து
  மயங்கு = மயக்கம் (பின்னிக்கொண்டு)
  அலர் = பெருமளவில் விரிந்து (நிறைந்து)
  வலயம் = வரப்பு

  மயக்கம் என்பது கலத்தலைக் குறிக்கும். பிரிக்க முடிந்த சேர்க்கை கலப்பு எனப்படும். பிரிக்க முடியாத சேர்ப்பு மயக்கம் எனப்படும். அரிசியும் கல்லும் கலக்கும். இன்பத்திலோ துன்பத்திலோ மனது மயங்கும். அப்படி நிலத்துக்கடியில் இஞ்சியும் மஞ்சளும் ஒன்றோடொன்று பிண்ணைப் பிணைந்து நிறைந்து வளம் கொளிக்கும் வரப்பு என்று பொருள்.

  இதில் ஒரு தகவல் உள்ளது. இஞ்சியும் மஞ்சளும் நிலத்துக்கடியில் விளைகின்றவை என்றாலும் இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது. மஞ்சள் கிழங்கு வகை. ஆனால் இஞ்சியோ வேர். திடீர் ஊறுகாய் மாங்காய் இஞ்சியும் வேர்தான்.

  இஞ்சியானது நிலத்திலிருக்கும் நீரை உறிஞ்சி உள்ளிழுத்து தன்னுடய செடிக்குக் கொடுக்கிறது. அப்படிச் செய்வதால்தான் அதற்கு இஞ்சி என்றே பெயர். இஞ்சுதல் என்றால் உறிஞ்சுதல் அல்லது உள்ளிழுத்தல். இப்போது புரிந்திருக்குமோ இஞ்சிக்கு அந்தப் பெயர் வந்த காரணம். இந்த இஞ்சி சுள்ளெனக் காய்ந்தால் சுள்+கு = சுட்கு. அதாவது இன்றைய சுக்கு.

  இந்த இஞ்சிவேர்தான் லத்தீனில் Gingiber ஆகி கிரேக்கத்தில் Gingibers ஆகி இப்போதைய Ginger ஆகியிருக்கிறது.

  நீரை உள்ளே உறிஞ்சி இழுக்கும் வேருக்கு இஞ்சி என்று பேர் வைத்தவன் அறிவை என் மனம் அசை போட்டது.

  ”அப்பா படிச்சிட்டேம்ப்பா… டீவி போடப் போறேன்” என்று கத்திக் கொண்டே தொலைக்காட்சியிடம் ஓடினான் மகன்.

  இஞ்சி இடுப்பழகி மஞ்சச் செவப்பழகி (படம்-தேவர்மகன், பாடல்-வாலி, இசை-இளையராஜா) என்று கமலஹாசன் பாடிக் கொண்டிருந்தார்.

  அட முருகா!

  அன்புடன்,
  ஜிரா

  025/365

   
  • @RRSLM 11:49 am on December 26, 2012 Permalink | Reply

   அருமை! வெகு அழகா சொல்லிருகீங்க GiRa! நிறைய புது தகவல்! தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.

   • niranjanbharathi 10:13 pm on December 26, 2012 Permalink | Reply

    அருமை ஜீரா. விளக்கம் ரொம்ப பிரமாதம். எப்பேர்ப்பட்ட மொழி நம் தமிழ்மொழி ?

    • GiRa ஜிரா 9:11 pm on December 29, 2012 Permalink

     தமிழை எடுத்து விளையாட விளையாட.. ஆகா.

  • தேவா.. 12:38 pm on December 26, 2012 Permalink | Reply

   வாலி, இஞ்சி இடுப்பழகி என்று மதில் என்ற அர்த்ததில் உபயோகித்தாரா? வாலியின் ஒரு சில வார்த்தை பிரயோகம் அவருக்கு மட்டுமே தெரியும்… மற்றும் ஒரு பாடல் எனக்கு விளங்காத அர்த்ததுடன், லவ்னா..லவ்வு மண்ணெண்னெய் ஸ்டவு……. 🙂

   • mokrish 1:07 pm on December 26, 2012 Permalink | Reply

    மண்ணெண்ணெய் ஸ்டவ் மாதிரி லவ்வும் பத்திக்கிச்சு என்று சொல்கிறாரோ?

  • BaalHanuman 1:27 am on December 27, 2012 Permalink | Reply

   இஞ்சி இடுப்பழகு என்றால் என்ன?

   இடுப்பு இஞ்சி போன்று இருக்குமா? அப்படியென்றால் கிளை கிளையாக அல்லவா இடுப்பு கிளைத்திருக்க வேண்டும்! பின் ஏன் இஞ்சியிடுப்பழகு என்கின்றனர்?

   இஞ்சி நம் உடல் நலம் காக்கும் உன்னத உணவுப் பொருள். இஞ்சிச்சாற்றை, காலையில் தினந்தோறும் பருகிவந்தால் வயிற்றில் உள்ள தேவையில்லாத கொழுப்புச் சதையைக் குறைத்துவிடும். இடுப்பிலுள்ள தேவையற்ற சதைகள் குறையும்போது இடுப்பு அழகாக இருக்கும். தோள்பகுதி அகன்றும் இடுப்புப் பகுதி சுருங்கியும் இருப்பதுதான் உடல் நலத்தின் அடையாளம்; உடல் அழகின் அடையாளம். அதை இஞ்சி செய்வதால், இஞ்சி இடுப்பழகு என்றனர்.

   –http://www.periyarpinju.com/new/mar-2011/100-2011-05-31-09-16-09.html

  • mokrish 9:48 am on December 27, 2012 Permalink | Reply

   /இஞ்சியோ வேர்/ – அப்படியா வேருக்கும் வாசம் வந்தது வெட்டி வேர் மட்டும் இல்லையா?

   • GiRa ஜிரா 9:10 pm on December 29, 2012 Permalink | Reply

    இல்லை. இஞ்சிக்கும் உண்டு வாசம். அத்தோடு ரோசம் (காரம்). 🙂

 • என். சொக்கன் 12:00 pm on December 25, 2012 Permalink | Reply  

  சேலை வாசம் 

  • படம்: கொடி பறக்குது
  • பாடல்: சேலை கட்டும் பெண்ணுக்கொரு
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: ஹம்சலேகா
  • பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், கே. எஸ். சித்ரா
  • Link: http://www.youtube.com/watch?v=a6sDS0zZV8o

  சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு,

  கண்டதுண்டா? கண்டவர்கள் சொன்னதுண்டா?

  கிராமத்து மக்கள் ’சேலை’யைச் ‘சீலை’ என்று அழைப்பார்கள். அவர்கள் சரியான சொல் தெரியாமல் கொச்சையாகப் பேசுவதாக நாம் நினைத்துக்கொள்வோம்.

  ஆனால் நாம் Window Curtainsஐத் ‘திரைச்சீலை’ என்று சொல்கிறோம், ‘திரைச்சேலை’ என்று சொல்வதில்லை. அப்படியானால் எது சரி? எது கொச்சை?

  இவை அனைத்துக்கும் வேர்ச்சொல்லாக நம்பப்படுவது, ‘சீரை’.

  உதாரணமாக, தேவாரத்தில் சிவபெருமானைக் குறிப்பிடும் திருநாவுக்கரசர் இப்படி எழுதுகிறார்: ‘உடையும் சீரை, உறைவது காட்டிடை.’

  அதாவது, சிவன் அணிவது சீரை என்ற ஆடை, அதன் அர்த்தம், மரப்பட்டையை எடுத்துப் பதப்படுத்தி உருவாக்கப்பட்ட துணி. ‘மரவுரி’ என்று சொல்வார்கள்.

  ராமாயணத்தில் ராமனைக் காட்டுக்கு அனுப்ப வரம் கேட்டதோடு கைகேயி நிற்கவில்லை, அவன் காடு செல்லக் கிளம்புகிறான் என்று தெரிந்ததும், அவனுக்கு இந்தச் சீரையைதான் கொடுத்தனுப்புகிறாள். இதைப் பரதன் பின்னர் ஆதங்கத்துடன் சுட்டிக்காட்டுகிறான்.

  சீரையை உடுத்தியது ராமன்மட்டுமல்ல, லட்சுமணனும், சீதையும்தான். இதைக் குறிப்பிடும் கம்பர் வாசகம், ‘சீரை சுற்றித் திருமகள் பின் செல…’

  ஆக, சீரை என்பது மரவுரி, அதை ஆண்களும் பெண்களும் உடலைச் சுற்றி அணிந்திருக்கிறார்கள். பின்னர் இதுதான் ‘சீலை’யாகத் திரிந்திருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது. நாம் இப்போது அதைச் ‘சேலை’ என்கிறோம். கன்னடர்கள் இன்னும் ‘சீரெ’ என்றுதான் சொல்கிறார்கள்.

  ’சேலை கட்டிய பெண்ணை நம்பாதே’ என்று ஒரு பழமொழி உண்டு, அதைக் கொஞ்சம் சமத்காரமாக, ‘சேல கட்டிய பெண்ணை நம்பாதே’ என்று மாற்றி, இப்படி ஒரு விளக்கம் சொல்வார்கள்:

  சேல கட்டிய பெண் : சேல் + அகட்டிய பெண் : சேல் (ஒருவகை மீன்) போன்ற வழிகளை அளவுக்கதிகமாக விரித்துப் பேசும் பெண் பொய் சொல்கிறாள், நம்பாதே!

  அது சரி ,’புடவை’க்கு விளக்கம் என்ன?

  முதலில், ‘புடவை’ என்று எழுதுவது தவறு, அது ‘புடைவை’ என்று இருக்கவேண்டும்.

  ‘புடை’ என்றால் பக்கம், ‘மந்திரிகள் புடை சூழ முதலமைச்சர் வருகை தந்தார்’ என்று செய்திகளில் வருகிறதே, அதுதான்.

  ஆக, ஒரு பெண்ணின் உடலை எல்லாப் பக்கங்களிலும் சுற்றி அணியப்படுகிற ஆடை என்பதால், அதற்குப் ‘புடைவை’ என்று பெயர் வந்தது. பின்னர் அது எப்படியோ ‘புடவை’ என்று திரிந்துவிட்டது.

  அதேபோல், ‘துணி’ப்பதால் (துண்டித்து / கத்தரித்து) விற்பனை செய்வதால், அது ‘துணி’. இதே காரணத்தால் ஆடைக்கு ‘அறுவை’ என்றும் பெயர் உண்டு (அறுத்துப் பயன்படுத்துவதால்).

  அறுவை போதும் என்கிறீர்களா? சரி, இதோடு நிறுத்திக்கொள்கிறேன், வேட்டி, சட்டை போன்றவற்றை இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்!

  ***

  என். சொக்கன் …

  25 12 2012

  024/365

   
  • amas32 (@amas32) 12:45 pm on December 25, 2012 Permalink | Reply

   சேலை/சீலை/சீரை நல்ல விளக்கம் 🙂

   //சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு,// இதை பற்றி விளக்கவில்லையே 🙂
   எல்லா பெண்களுக்கும் தனி வாசம் உண்டு. சுடிதார் அணியும் பெண்களுக்கும் தான். கைக்குழந்தைகள் அறிந்து கொள்ளும் தாயின் வாசம். ஏன் வைரமுத்து சேலை கட்டும் பெண்ணுக்கு மட்டும் வாசம் உண்டு என்று சொல்லியிருக்கிறார்? தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் 🙂

   amas32

   • GiRa ஜிரா 7:15 pm on December 25, 2012 Permalink | Reply

    அதான் சேல்னா ஒரு வகை மீன் என்று நாகா சொல்லியிருக்காரே. அந்த சேலை கட்டிய பெண் மீது மீன் வாசம் இருக்கத்தானே செய்யும் 🙂

   • niranjanbharathi 10:15 am on December 26, 2012 Permalink | Reply

    @amas32 இந்தப் பாடலுக்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது. அதை வைரமுத்து ஒரு முறை வானொலியில் சொல்லியிருக்கிறார். வைரமுத்துவுக்கு ஒரு நண்பர். அந்த நண்பர் தன் மனைவி மீது அளவிறந்த காதல் கொண்டவர். அவர், தன் மனைவி இறந்த பின் அவளின் நினைவாக அவளணிந்த சேலையை தலைப்பாக வைத்துக் கொண்டு தூங்குவாராம். இதை ஒருமுறை அவர் வைரமுத்துவிடம் சொல்லியிருக்கிறார். ஏன் சேலை கட்டிக் கொண்டு தூங்குகிறீர்கள்(சிலேடை இல்லை !!!) என்று வைரமுத்து கேட்டதற்கு , சேலை அவளின் வாசனையைத் தருவதால் அப்படித் தூங்குகிறேன் என்றாராம். இதை மனத்தில் வைத்து தான் சேலை கட்டிய பெண்ணை நம்பாதே என்று வைரமுத்து எழுதியிருக்கிறார்.

  • Rie 8:46 pm on December 25, 2012 Permalink | Reply

   ஒரு வேளை ”சேலை கட்டும் பெண் தங்குவதற்கு இங்கே ஒரு இடம் உண்டு” ன்னு பாடுறாங்களோ?

 • G.Ra ஜிரா 11:37 am on December 24, 2012 Permalink | Reply
  Tags: அப்பர், சரக்கறை, சரக்கு, திருமுறை, தேவாரம்   

  சரக்கு வெச்சிருக்கேன் 

  ”சரக்கு இரயில் தடம் புரண்டு விட்டது” என்ற செய்தியைப் படிக்கும் போது “சரக்கு இரயிலுக்கு டீசலுக்குப் பதிலா சரக்கு ஊத்திட்டாங்களோ” என்று எனக்குத் தோன்றியதில் வியப்பில்லை.

  தொலைக்காட்சிகளில் “நாட்டுச் சரக்கு நச்சுன்னுதான் இருக்கு” என்று ஒரு பாடகர் பாடிக் கொண்டிருந்தார். படம் புதுக்கோட்டையிலிருந்து சரவணன் என்று போட்டிருந்தது. பாடலை எழுதியவர் பெயர் பா.விஜய்.

  காலையில் எழுந்து இந்தச் சரக்கைத்தான் கேட்க வேண்டுமா என்று சேனலை மாற்றினேன். “சிங்காரிச் சரக்கு நல்ல சரக்கு” என்று கமல்ஹாசன் ஒய்.விஜயாவோடு சேர்ந்து ஆடிக் கொண்டிருந்தார். வாலியின் வரிகளுக்கு இளையராஜாவின் இசை.

  இந்தப் பாடல்களைக் கேட்டாலே சரக்கு ஏற்றியது போலத்தான் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். சரக்கு என்றாலே குடி என்று தமிழன் இன்று புரிந்து கொண்டிருக்கிறான்.

  காலையில் வீட்டுக்கு டிபன் வாங்க பக்கத்து ஓட்டலுக்குச் சென்றேன். சிறிய ஓட்டலாக இருந்தாலும் இட்லி தோசையெல்லாம் நன்றாக இருக்கும். ஓட்டல் ஓனரும் நல்ல பழக்கம்.

  ”வாங்க சார். இன்னைக்கு இட்லி தோசை மட்டுந்தான் போட்டிருக்கு. சரக்கு மாஸ்டருக்கு ஒடம்புக்கு முடியலை. அதான். என்ன கட்டச் சொல்லட்டும்?” என்று கேட்டார்.

  ஆகா சரக்குக்கு இடத்துக்கு ஒரு பொருள் இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டேன். குடிப்பதும் சரக்கு. உண்பதும் சரக்கு.

  இட்லி பார்சல் வாங்கிக் கொண்டு வரும் போது வழியில் பலசரக்குக் கடையில் பால் வாங்கச் சென்றேன்.

  “சரக்கெல்லாம் பத்திரமா எறக்கி வைங்கப்பா” என்று அண்ணாச்சி சரக்கு கொண்டு வந்திருந்த பையனிடம் கத்திக் கொண்டிருந்தார்.

  குடிக்கும் சரக்கு சாப்பாட்டுச் சரக்காகி  பிறகு அண்ணாச்சி கடை மளிகைப் பொருளாகி விட்டது. சரக்கு எத்தனை சரக்குகளோ என்று எண்ணிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

  மனமெனுந் தோணி பற்றி மதியெனுங் கோலை யூன்றிச்
  சினமெனுஞ் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது
  மதனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா(து)
  உனையுனும் உணர்வை நல்காய் ஒற்றியூ ருடய கோவே

  வழியில் ஓதுவார் வீட்டிலிருந்து தேவாரம் தெளிவாகக் கேட்டது. அப்பர் பாடிய தேவாரம். திருவொற்றியூரில் பாடியது. அந்தக் காலத்து சென்னை. ஆக அப்பர் காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கும் வந்திருக்கிறார்.

  அப்பர் கூட சரக்கு பற்றி பாடலில் ஏதோ சொல்லியிருக்கிறார் என்று மனம் நினைவூட்டியது. ஆமாம்.

  மனம் என்னும் தோணியில்
  மதி என்னும் கோலை ஊன்றி
  சினம் என்னும் சரக்கை ஏற்றி
  வாழ்க்கை என்னும் கடலில் பயணம் சென்றால்
  மதம் என்னும் பாறை தாக்கும்!

  நெஞ்சில் எழும் சினத்தைக் கப்பலில் ஏற்றும் பண்டங்களோடு ஒப்பிட்டு அப்பர் பாடியிருந்தாலும், கப்பலை ஓட்டும் போது சரக்கை ஏற்றினால் பாறை தாக்க வாய்ப்பிருக்கிறது என்று நெஞ்சம் குதர்க்கமாக நினைத்தது.

  இப்படி நினைத்ததற்கு அப்பர் என்னை மன்னித்து விடுவார். ஈசனாரும் என்னை அருள் செய்து மன்னித்தால் நன்று. அப்பரும் ஈசனையே சரக்கு என்று சரக்கறை என்ற தலைப்பில் பல பாடல்கள் பாடியவராயிற்றே.

  விடையும் விடைப் பெரும் பாகா! என் விண்ணப்பம்: வெம்மழுவாள்-
  படையும், படை ஆய் நிரைத்த பல் பூதமும், பாய்புலித்தோல்-
  உடையும், முடைத்தலைமாலையும், மாலைப் பிறை ஒதுங்கும்
  சடையும், இருக்கும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!

  குடிப்பவர்களுக்கு குடியே மனமெங்கும் நிறைந்திருப்பது போன்று அப்பரடிகளுக்கு நெஞ்செல்லாம் ஈசனார் நிறைந்திருக்கிறார்.

  ஈசனே
  உலகுக்கெல்லாம் நேசனே
  பகைவரைப் பொருதும் திறமும்
  உலகைச் சுமக்கும் உன்னைச் சுமக்கும் எருதும்
  கொண்டவனே!
  என் விண்ணப்பம் கேள்!
  உன்னுடைய
  வாளும் வெம்மழுவும்
  உனைப் பணிந்து வாழும் பூதக்குழுவும்
  பாயும் புலியை உரித்து உடுத்த பாயும்
  வெண்டலை மாலையும்
  நறுக்கிய பிறையும்
  பிறை தாங்கும் சடைமுடியும்
  எந்நாளும் வைத்துப் பார்க்கும்
  சரக்கு அறையாய் என் நெஞ்சம் ஆக்குவாய்!

  இது போல எத்தனையெத்தனை சரக்குகளோ!

  அன்புடன்,
  ஜிரா

  023/365

   
  • தேவா.. 11:59 am on December 24, 2012 Permalink | Reply

   super observations GIRA

  • கானா பிரபா 4:08 pm on December 24, 2012 Permalink | Reply

   சரக்கு உள்ளவர் சரக்குப் பற்றிப் பேசும் போது சும்மா நச்சுன்னு இருக்குபா 😉 கலக்கல், ரசித்தேன்

  • Niranjan 10:34 pm on December 24, 2012 Permalink | Reply

   இப்போது தான் ஒரு நல்ல சரக்கு அடித்த உணர்வு வருகிறது. வாழ்க உங்கள் தொண்டு :):)

  • BaalHanuman 1:32 am on December 27, 2012 Permalink | Reply

   சரக்கு தத்துவங்கள்!

   நன்றியும் மன்னிப்பும் நட்பிற்கு தேவையில்லை – சரக்கு மட்டும் போதும்.

   சரக்கிருந்து முறுக்கு இல்லேன்னா அது சோதனை;
   முறுக்கிருந்து சரக்கு இல்லேன்னா அது வேதனை!

   • GiRa ஜிரா 9:11 pm on December 29, 2012 Permalink | Reply

    அருமை. அருமை. ஒப்புக் கொள்ள வேண்டிய கருத்து 🙂

 • என். சொக்கன் 9:32 am on December 23, 2012 Permalink | Reply  

  கண்ணனின் நிறம் 

  கண்ணனின் நிறம்.

  காதலின் நிறம் பார்த்தோம். கண்ணனின் நிறம் என்ன? பாசுரம் முதல் திரைப்பாடல் வரை கண்ணன் வண்ணம் சொல்லும் வரிகள் ஏராளம். அவன் நீல மேக சியாமள வண்ணன். கருநீலம். கருமை நிறக்கண்ணன். இருட்டின் நிறம். நிலவின்  தேய்கின்ற பருவம் கிருஷ்ண  பட்சம் எனப்படுகிறது.

  தொண்டரடிப்பொடி ஆழ்வாரின், மனதை உருக வைக்கும் பாசுரத்தில்

  காரொளி வண்ணனே

  கண்ணனே கதறுகின்றேன்

  என்று பாடுகிறார். கரிய மேகத்தை போல் வண்ணமா?  கார் முகில் வண்ணன். பாரதியார்  காக்கையின் கரிய நிறம் பார்த்து கண்ணன் நினைவு வந்ததாக பாடுகிறார்.  கண்ணதாசனும் இந்த கரிய நிறத்தையே வழிமொழிகிறார். கோபியர் கொஞ்சும் ரமணனை

  மாபாரதத்தின் கண்ணா மாயக்கலையின் மன்னா

  மாதவா கார்மேக வண்ணா – மதுசூதனா

  வேறு ஒரு பாடலிலும் கரிய நிறத்தையே தொடர்கிறார்

  கண்ணா கருமை நிறக் கண்ணா – உன்னை

  காணாத கண்ணில்லையே
  ஒரு பழைய அழகான தாலாட்டு பாடலில் மருதகாசி நீலத்தை கண்ணன் வண்ணமாக கொள்கிறார். கருப்பு வண்ணம் குழந்தையை மிரளவைக்கும் என்று நினைத்து அவர்  நீலத்தை மட்டும் வைத்துக்கொண்டு மேகத்தை தள்ளிவைக்கிறார்.
  நீல வண்ண கண்ணா வாடா !
  நீ ஒரு முத்தம் தாடா
  வாலி இந்த கருப்பா  நீலமா கருநீலமா என்ற கேள்விக்கு  பட்டிமன்ற நடுவரை போல் ஒரு தீர்ப்பு சொல்கிறார்
  கங்கை கரை மன்னனடி கண்ணன் மலர் கண்ணனடி
  வங்கக்கடல் வண்ணனடி உள்ளம் கவர் கள்வனடி
  வங்கக்கடல் போல் கண்ணன் நிறம் என்றால் வாலி எல்லா தரப்பையும் ஏற்றுக்கொள்கிறார் என்று நினைக்கிறேன்.
  வைரமுத்து கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்பவர். . ஆனாலும் கண்ணன் வண்ணம் பாடாமல் இருக்க முடியுமா? வகையாக கிடைத்தார் ரஜினிகாந்த் – கரு வண்ணம் பற்றி பாடல் எழுத. தில்லானா தில்லானா பாடலில் எழுதிய வரிகள் கண்ணன் நிறம் கூறும்.

  கடல் வண்ணம் வானின் வண்ணம் கருவண்ணம் தானே

  கடல் வானம் காணும்போது உனைக்கண்டேன் நானே

  இன்னொரு பாடலில் அவர் வரிகள்

  வான் போலே வண்ணம் கொண்டு

  வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே

  கடல் வண்ணம், கார்மேக வண்ணம் நீல வண்ணம் என்ற பலரும் சொன்னாலும் வைரமுத்துவின் இன்னொரு கற்பனை அபாரம். கண்ணாமூச்சி ஏனடா என்ற பாடலில்

  பாற்கடலில் ஆடிய பின்னும் உன் வண்ணம் மாறவில்லை இன்னும்

  என் நெஞ்சில் கூடியே நிறம் மாறவா

  என்ற கற்பனை அற்புதம். இதை ராதையும் ஆண்டாளும் மீராவும் பாடிய வரிகளாகவே பார்க்கிறேன்!
  ***
  மோகன கிருஷ்ணன்
  022/365
   
  • தேவா.. 1:40 pm on December 23, 2012 Permalink | Reply

   வண்ணமயாமான ஆராய்ச்சி.

  • niranjanbharathi 3:25 pm on December 23, 2012 Permalink | Reply

   அருமையான பதிவு இது. நம் கவிஞர்களும் எண்ண மயமானவர்கள் மட்டுமல்லர். வண்ணமயமானவர்களும் கூட. ஏனோ இதையெல்லாம் படிக்கும் போது எனக்கு தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ , மனசுல என்ற வாலி அய்யா பாடல் நினைவுக்கு வருகிறது.

  • amas32 (@amas32) 4:53 pm on December 23, 2012 Permalink | Reply

   மோகன கிருஷ்ணன் 🙂 நீங்கள் உங்கள் பெயருக்கு ஏற்ப பாடல் வரிகள் தேர்ந்தெடுத்து அலசி உள்ளீர்கள் 🙂

   கருத்த மேகமே நாடு செழிக்க மழை பொழியும். கார்முகில் வண்ணனே நாம் செழிக்கக் கருணை மழை பொழிவான். கருப்புக்கு நகை போட்டு அழகு பார்க்க வேண்டும் என்பார்கள். அவர்களுக்கு தான் நகை எடுப்பாகத் தெரியும். கருப்பே அழகு காந்தலே ருசி என்ற வசனமும் உண்டு.

   பூணித் தொழுவினில் புக்கு புழுதி அளைந்த பொன்-மேனி என்று பெரியாழ்வார் (நிராட்டல் ) பாடியுள்ளார். மண்ணில் விழுந்து விளையாடி புழுதி படிந்து கண்ணனின் கரிய மேனி தக தகவென மின்னுவது போல தோற்றத்தைத் தருகிறது. அதனால் கருப்புக்கும் ஒரு அழகு உண்டு, நாம் கரிய நிறத்தவரை அன்போடு நோக்கும்பொழுது 🙂

   amas32

  • ஸ்ரீதர் நாராயணன் 8:48 pm on December 27, 2012 Permalink | Reply

   சினிமாப் பாட்டுககளை விடுங்கள். கண்ணன் நிறம் என்று நேரடியாகவே பார்த்துவிடலாம்.

   கருநன் (கருமை நிறத்தவன்) – என்பதே கண்ணனாக மாறியதாக ஒரு வழக்கு உண்டு.

   கிருஷ்ண, ஷ்யாமள, நீளா – எல்லாமே வடமொழியில் கருப்பையே குறிக்கும். குறிப்பாக ‘நீள’ம் என்பது வெளிச்சம் இல்லாமையை, சூண்யத்தைக் கூட உருவகமாக சொல்லலாம்.

   தமிழில் ‘நீளத்தில்’ ள-விற்கு பதிலாக ‘ல’ போலியாக வந்து ‘நீல’மாக மாறி நாம் அதை தனி நிறமாக வழக்கில் கொண்டிருக்கிறோம். உண்மையில் நீலம் என்பது கருமையின் ஒரு கவசம்தான். இன்றும் கூட திரைப்படங்களில் ‘நைட் எஃபெக்ட்’ எடுக்க வேண்டும் என்றால் நீல வடிகட்டிகளைத்தான் (Filters) பயன்படுத்துகிறோம்.

   கதிரவனை வழிபடுவது போலவே நாம் இருளையும் தொடர்ந்து வழிபட்டுக் கொண்டு வந்திருக்கிறோம். கண்ணனும் கருப்பு. இராமனும் கருப்பு. ஏன் நம் தமிழர் பாரம்பரியமான திரௌபதி வழிபாட்டில் கூட திரௌபதி கருப்புதான். மகாபாரதத்தில் அவள் பெயரும் கிருஷ்ணா தான்.

  • Sethuraman 9:16 pm on December 27, 2012 Permalink | Reply

   beautiful 🙂 🙂

  • Kumar tp 9:23 pm on December 27, 2012 Permalink | Reply

   Well written mate. Recent book read abt Kannan is Krishna Key .

 • என். சொக்கன் 11:53 am on December 22, 2012 Permalink | Reply  

  கண்ணம்மா! 

  • படம்: வண்ண வண்ணப் பூக்கள்
  • பாடல்: கண்ணம்மா, காதல் எனும் கவிதை சொல்லடி
  • எழுதியவர்: இளையராஜா
  • இசை: இளையராஜா
  • பாடியவர்கள்: இளையராஜா & எஸ். ஜானகி
  • Link: http://www.youtube.com/watch?v=Vx-ylI5mHm0

  புன்னை மரத் தோப்போரம், உன்னை நினைந்து

  முன்னம் சொன்ன குயில் பாட்டு சொல்லி மகிழ்ந்தேன்!

  பொன்னி நதிக் கரையோரம் மன்னன் நினைவில்

  கண்ணிமைகள் மூடாது கன்னி இருந்தேன்!

  பாரதியாருக்கு மிகவும் பிடித்த ‘கண்ணம்மா’ என்கிற பாத்திரத்தின் பெயரைச் சொல்லித் தொடங்குகிற இந்தப் பாடல்முழுவதுமே, பாரதிக்கு ஒரு tributeபோல இருக்கும். அவர் அடிக்கடி பயன்படுத்திய வார்த்தைகள் மற்றும் அவரது ஞாபகத்தைக் கொண்டுவரும் சொற்களை நிரப்பி எழுதியிருப்பார் இளையராஜா.

  இங்கே ‘முன்னம் சொன்ன குயில் பாட்டு’ என்ற பதத்துக்கு நேரடியாக எல்லாரும் எடுத்துக்கொள்ளும் பொருள், ‘நீ முன்பு ஒருநாள் சொன்ன குயில் பாட்டை நான் இப்போது ஞாபகப்படுத்திக்கொண்டேன், அதைச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தேன்.’

  கொஞ்சம் யோசித்தால், இதற்கு இன்னோர் அழகான பொருளும் தோன்றும். பாரதியாரிடமே உதாரணம் கேட்கலாம்:

  இருமை அழிந்தபின் எங்கிருப்பாய் அற்ப மாயையே? தெளிந்து

  ஒருமை கண்டோர்முன்னம் ஓடாது நிற்பையோ?

  ஆக, ‘முன்னம்’ என்றால் in front, ஒருவருக்கு முன்பாக இருப்பது, physical presence!

  இந்த அர்த்தத்தில், மேற்சொன்ன வரிக்குப் பொருள், ’நீ என் முன்னே குயில் பாட்டைச் சொன்னாய், இப்போது நீ என் எதிரே இல்லாவிட்டாலும்கூட, அந்தப் பாடலைப் பாடுவதன்மூலம் நான் உன்னை உணர்கிறேன்.’

  இலக்கணத் தமிழிலும் ‘முன்னம்’ என்று ஒரு வார்த்தை இருக்கிறது. அதன் அர்த்தம், ஒரு செய்தியை யார் யாரிடம் பேசினார்கள் என்று சொல்லாமல் சொல்வது.

  உதாரணமாக, ஒரு மாதிரி வாக்கியம்: கட்டபொம்மன் ஜாக்ஸன் துரையிடம் “வரியெல்லாம் கட்டமுடியாது, சர்த்தான் போய்யா” என்றான்.

  இந்த வாக்கியத்தில் சொல்லப்பட்ட செய்திமட்டுமல்ல, அதை யார் சொன்னார்கள், யாரிடம் சொன்னார்கள் என்று எல்லாமே நேரடியாக உள்ளது.

  இன்னோர் உதாரணம்: ”அவனை நினைச்சா சந்தோஷமா இருக்குடி, ஆனா எங்க கல்யாணத்துக்கு அப்பா, அம்மா ஒத்துக்குவாங்களோன்னுதான் கவலைப்படறேன்!”

  இங்கே சொன்னவர் யார் என்கிற விவரம் இல்லை, அதைக் கேட்டவர் யார் என்றும் தெரியவில்லை, ஆனால் சொல்லப்பட்ட விஷயத்தை வைத்து, ஒரு காதலி தன் தோழியிடம் பேசுகிறாள் என்று நாம் ஊகிக்கலாம். அதைதான் ‘முன்னம்’ என்று அழைக்கிறது செய்யுள் இலக்கணம்.

  ***

  என். சொக்கன் …

  22 12 2012

  021/365

   
  • தேவா.. 12:44 pm on December 22, 2012 Permalink | Reply

   முதல் முறையாக முன்னம் பற்றி அறிந்து கொண்டேன்.

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel