Updates from October, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • G.Ra ஜிரா 9:47 pm on October 27, 2013 Permalink | Reply  

  உரசிவிட்டேன் சந்தனத்தை! 

  மேகத்த தூது விட்டா
  தெச மாறிப் போகுமோன்னு
  தண்ணிய நான் தூது விட்டேன்
  தண்ணிக்கு இந்தக் கன்னி
  சொல்லி விட்ட சேதியெல்லாம்
  எப்ப வந்து தரப்போற
  எப்ப வந்து தரப்போற

  இசையரசி பி.சுசீலாவின் குரல் தேனாறாய் ஓடிக் கொண்டிருந்தது. எல்லாருக்கும் தெரிந்த பாட்டுதான். அச்சமில்லை அச்சமில்லை திரைப்படத்தில் வி.எஸ்.நரசிம்மன் இசையில் வைரமுத்துவின் வைரவரிகள்.

  மேகம் வானத்தில் மிதந்து போகும். காற்றடித்து திசை மாறிப் போய் விட்டால் அத்தானுக்கு அனுப்பிய சேதியும் திசை மாறிப் போய்விடுமல்லவா! அதுதான் அவளது கவலை. அதனால்தான் மேகத்துக்கு பதிலாக பழகிய வழியில் ஓடிக் கொண்டிருக்கும் ஆற்று நீரை தூதாக அனுப்பினாள் அந்தப் பெண்.

  ஆனால் இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போகும் ஒரு யட்சனுக்கு அந்தக் கவலை எல்லாம் இல்லை. மோகங்களைத் தூதனுப்ப அவன் நம்பியது தாகங்கள் கொண்டு நீர் குடித்த மேகங்களைத்தான்.

  யார் இந்த யட்சன்?

  செல்வத்துக்கெல்லாம் அதிபதி குபேரன். அந்தக் குபேரன் இருப்பது இமயமலையில் உள்ள அளகாபுரி. அந்த அளகாபுரியில் ஒரு ஏரி. அதற்கு மானச ஏரி (மானசரோவர்) என்று பெயர். செல்வத் திருநாட்டின் ஏரி என்பதாலோ என்னவோ… அந்த ஏரியில் பூக்கும் தாமரை மலர்கள் கூட தங்கத் தாமரைகளா இருக்கின்றன. பறவைகளும் பொற்பறவைகளே!

  அந்த ஏரியைக் காவல் காக்க வேண்டிய பொறுப்பில் இருந்தவன் தான் நாம் பார்க்கும் யட்சன். அன்றொரு நாள் அவன் காவல் காத்துக்கொண்டுதான் இருந்தான். இரவு வந்தது. மனதில் உறவின் நினைவு வந்தது. முதலில் உடம்பை விட்டுவிட்டு மனம் மட்டும் மனைவியிடம் சென்றது. பின்னர் மனம் போன வழியிலேயே உடம்பும் போனது.

  அவன் போன நேரம் பார்த்து அந்தப் பக்கம் வந்தன சில யானைகள். ஏரிக்குள் இறங்கி விளையாடின. அந்த விளையாட்டில் தங்கத் தாமரைகள் சிதைந்து போயின. பொற்பறவைகள் பறந்து போயின. அத்தோடு ஏரி சிதைந்த சேதியும் குபேரனுக்குப் பறந்தது.

  அந்த யட்சனை அழைத்தான்.

  “கடமை தவறிய யட்சனே! உன்னால் அல்லவோ ஏரி கலங்கியது. தாமரைகள் அழிந்தன. எதை நினைத்து நீ கடமையை மறந்தாயோ அதைப் பிரிந்து ஓராண்டுகாலம் ராமகிரி காட்டுக்குள் வசிப்பாயாக. இதுவே உனக்குத் தண்டனை”

  அந்த சாபத்தினால் காட்டுக்கு வந்தவனே நாம் முன்னம் சொன்ன யட்சன். அது ஆடி மாதம் வேறு.

  காட்டுக்கு வந்தாலும் வீட்டு நினைப்புதான் அவனுக்கு. மெல்லியலாள் இன்சொல்லாள் தேனிதழாள் நினைப்பு அவனை வாட்டி வதைத்தது. அந்த வேதனையில் அவன் உள்ளத்தில் பிறந்த ஏக்கங்களையெல்லாம் மனைவிக்குச் சொல்ல விரும்பினான்.

  யாரிடம் சொல்லி அனுப்புவது. அந்தரங்கமான ஏக்கங்கள் அல்லவா? ஜிமெயிலோ மொபைல் போனோ இல்லாத காலம் அது. மனிதர்களிடம் சொல்லியனுப்ப முடியாது. அப்போது அவன் கண்ணில் பட்டவைதான் மேகங்கள்.

  அவன் இருந்த அதே மனநிலையில்தான் அவன் மனைவியும் இருந்தாள். அந்தப் பெண்ணின் மனநிலையை நினைக்கும் போது எனக்கு கவிஞர் தாமரை எழுதிய பாடல் நினைவுக்கு வருகிறது.

  தூது வருமா தூது வருமா
  காற்றில் வருமா கரைந்து விடுமா
  கனவில் வருமா கலைந்து விடுமா
  …………….
  கருப்பிலே உடைகள் அணிந்தேன்
  இருட்டிலே காத்துக்கிடந்தேன்
  யட்சன் போலே நீயும் வந்தாய்
  ………………
  மறுபடி வருவாய் என்று துடித்தேன்
  நடந்ததை எண்ணி உறங்க மறுத்தேன்
  பிரிய மனமில்லை
  இன்னும் ஒரு முறை வா…..

  தன்னுடைய மனைவியின் ஏக்கங்களைப் புரிந்த கணவனால்தான் தன்னுடைய ஏக்கங்களை வெளிக்காட்ட முடியும். நாம் பார்த்துக் கொண்டிருக்கும் யட்சனும் அந்த வகைதான். காட்டில் இருந்த போது அந்த வழியாக வந்த மேகங்களை அழைத்து தன் ஏக்கங்களை தூது விடுகிறான். ஒருவேளை அந்த மேகங்கள் வழி மாறிப் போய்விட்டால்?

  அதற்காகத்தான் அவன் போகும் வழியையும்… போவது சரியான வழிதானா என்பதை உறுதி செய்யும் அடையாளங்களையும் சொல்லியே மேகங்களை தூதனுப்புகிறான்.

  இதுதான் காளிதாசர் எழுதிய மேகதூதத்தின் கதை.

  ஒவ்வொரு பாடலும் அதன் பொருளும் மிக அழகானவை. ஒரு சிறு பகுதியை உங்களுக்காக ஆங்கில மொழிபெயர்ப்பின் உதவியோடு தமிழாக்கம் செய்து தருகிறேன்.

  “மேகங்களே, கடம்ப மலர்கள் பூத்த நிச்ச மலையில் சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு வடக்கே செல்க. அங்கே நாகநதி வரும். ஓட்டத்தில் அது வேகநதி. அங்கிருக்கும் வெயிலுக்கு அது தாகநதி.

  அந்த நதிக்கரையிலே, அல்லி மலர்களைக் கிள்ளி மெல்லிய செவித்துளையில் தள்ளி கம்மலாக அணிந்து கொண்டு துளித்துளியாய் வியர்வை வழிய துள்ளித் துள்ளி ஓடுகிறாள் பூ விற்கும் இளம்பெண். நீ போகும் வழியில் அவளுக்கும் சற்று நிழல் தந்து களைப்பை நீக்குவாயாக!”

  பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
  பாடல் – ஓடுகிற தண்ணியிலே ஒரசி விட்டேன் சந்தனத்த
  வரிகள் – கவிஞர் வைரமுத்து
  பாடியவர்கள் – இசையரசி பி.சுசீலா, மலேசியா வாசுதேவன்
  இசை – வி.எஸ்.நரசிம்மன்
  படம் – அச்சமில்லை அச்சமில்லை
  பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=w_obVXcywTo

  பாடல் – தூது வருமா தூது வருமா
  வரிகள் – கவிஞர் தாமரை
  பாடியவர் – சுனிதா சாரதி
  இசை – ஹாரிஸ் ஜெயராஜ்
  படம் – காக்க காக்க
  பாடலின் சுட்டி – http://youtu.be/BFv9wo4s4jw

  அன்புடன்,
  ஜிரா

  329/365

   
  • Uma Chelvan 10:28 pm on October 27, 2013 Permalink | Reply

   நீரும் மாறும் நிலமும் மாறும்
   அறிவோம் கண்ணா !!!!
   மாறும் உலகில் மாறா இளமை
   அடைவோம் கண்ணா !!!!

   மேகத்தையும் நீரையும் போல எண்ணங்களையும் தூது விடலாம். In fact, thoughts travel faster then clouds and water !!!!!

   ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே ……ஓடோடி சென்று காதல் பெண்ணின் உறவை சொல்லுங்களே !

  • rajinirams 4:41 pm on October 28, 2013 Permalink | Reply

   யட்சனின் கதையை விளக்கி காளிதாசனின் மேகதூதத்தோடு கூடிய அருமையான “தூது”பதிவு. கிழக்கே போகும் ரயிலின் தூது போ ரயிலே பாடலும் உயிருள்ள வரை உஷாவின் வைகை கரை காற்றே நில்லு வஞ்சிதனை பார்த்தால் சொல்லு மன்னன் மனம் வாடுதென்று மங்கை தனை தேடுதென்று காற்றே பூங்காற்றே அவள் காதோரம் போய் சொல்லு வரிகளும் தூது சொல்ல ஒரு தோழி பாடலும் நினைவிற்கு வருகின்றன.நன்றி.

  • Saba-Thambi 12:56 pm on October 29, 2013 Permalink | Reply

   உங்கள் பதிவு வைரமுத் து எழுதிய ஓர் பாடலையும் நினைவுக்கு தருகிறது.
   இங்கு முகவரியை தொலைத்து விட்ட மேகமாக……

   முகிலினங்கள் அலைகிறதே
   முகவரிகள் தொலைந்தனவோ
   முகவரிகள் தவறியதால்
   அழுதிடுமோ அது மழையோ

   @2.5 நிமிடம்

   சுட்டி:

 • G.Ra ஜிரா 5:02 pm on July 28, 2013 Permalink | Reply  

  சின்னச் சின்ன தோசை 

  அச்சமில்லை அச்சமில்லை படத்துக்காக ஈரோடு தமிழன்பன் எழுதிய “கையில காசு வாயில தோசை” பாட்டைக் கேட்டால் எனக்குச் சிரிப்பு வரும்.

  பின்னே. போயும் போயும் காசோடு தோசையை இணை வைத்து எழுதி விட்டாரே. கொட்டிக் கொடுத்தாலும் நல்ல தோசை எல்லா இடத்திலும் கிடைக்குமா?

  கங்கை எப்படி விண்ணுலகத்தில் தோன்றி மண்ணுலகத்துக்கு வந்ததோ, அதே போல தோசைக்கும் கி.ரா பாணியில் ஒரு கதை உண்டு.

  தோசை ஒரு தெய்விகப் பண்டம். இந்திரனோட அமராவதியில் மட்டும் முன்னொரு காலத்துல சுட்டுச் சுட்டு தின்னுக்கிட்டிருந்தாங்க.

  கூட்டம் பெரிய கூட்டம். முப்பத்து முக்கோடி தேவர்கள் ஆச்சே… இந்தப் பயகளுக்காகவே இருபத்துநாலு மணி நேரமும் தோசையச் சுட்டு சுட்டு காமதேனுக்கும் நந்தினிக்கும் குறுக்கு விட்டுப் போச்சு.

  சட்டியில மாவ ஊத்தி அரைகுறையா வெந்ததும் தோசையச் சுத்தி தெளிச்சாப்புல எண்ணெய் விடனும். அப்ப கெளம்பும் ஒரு மணம். அந்த வாசத்துக்கே பத்து தோசை உள்ள போகும். மொதல்ல இந்த வாடை இந்திரன் அரமனைக்குள்ளதான் சுத்திக்கிட்டிருந்துச்சு. தொடர்ந்து தோசையச் சுட்டுக் கிட்டேயிருந்ததால அரண்மனைக்குள்ள வாசன நெரிசல் வந்துருச்சு. கொஞ்சம் வெளிய போகட்டும்னு ஒத்த சன்னல மட்டும் தெறந்து விட்டாக.

  அமராவதிக்குப் பக்கத்தூரு சத்தியலோகம். தோச வாட மொதல்ல அங்கதான் போச்சு. நாலு மூக்குலயும் தோச வாடைய இழுத்து ரசிச்சான் பிரம்மன். இப்பிடி ஒரு தின்பண்டம் செஞ்சு தந்ததில்லையேன்னு சரசுவதியோட சண்டை. அந்தம்மாவும் வாடை பிடிச்சிக்கிட்டே தேவலோகத்துக்கு வந்து தோசை ரகசியத்தை தெரிஞ்சுக்குச்சு. தோசையால பிரச்சனை வந்துறக்கூடாதேன்னு தேவேந்திரன் ஒரு ஒப்பந்தம் போட்டான்.

  ஒப்பந்தப்படி தெனமும் தோசை பிரம்மலோகம் வந்துரும். ஆனா தோச ரகசியத்த மகாவிஷ்ணுவுக்கும் சிவனுக்கும் சொல்லக் கூடாது.

  சொன்னபடி தெனமும் தோசையும் கெட்டிச் சட்டினியும் தவறாம வந்தது. சத்தியலோகம் முழுக்க தோச வாட. கொஞ்சம் கொஞ்சமா அது பரவி பாற்கடலுக்குப் போயிருச்சு. அங்கயும் ஒரே சண்டை. தெனமும் வெண்ணெயக் குடுத்து ஏமாத்துறியேன்னு மகாவிஷ்ணு லச்சுமிகிட்ட சடச்சாரு. அந்தம்மாளும் தோசை வாடையின் ஆதிமூலத்தைக் கண்டுபிடிக்க சத்தியலோகம் வரைக்கும் வந்துருச்சு. மருமக அப்படி என்னதான் சமைக்கிறான்னு லச்சுமிக்கு ஒரு பொறாமை. படிச்ச பொம்பளைக எங்க சமைச்சாகன்னு அந்தம்மாளுக்குப் புரியல.

  தோசை ரகசியம் லச்சுமிக்கும் தெரிஞ்சு போச்சு. ஆனா தோசை சுடுறது எப்படின்னு மட்டும் கேட்டுக்கிட்டு லச்சுமிதேவியே பாற்கடல்ல தோசை சுட்டாங்க. பாற்கடல்ல வெண்ணெய் நெறைய இருக்கே. எண்ணெய்க்கு பதிலா வெண்ணெய்ய ஊத்தி புதுசா தோசை சுட்டாங்க. வெண்ண தோசைய மொதமொதக் கண்டுபிடிச்சது லச்சுமிதான்.

  வெண்ண தோசையோட வாசம் கைலாசத்துக்கே போயிருச்சு. ஆறு மூக்கால ஆறுமுகன் வாட புடிச்சான். வந்த வாடையெல்லாம் தும்பிக்கையாலயே உறிஞ்சிட்டாரு பிள்ளையாரு. பிள்ளைக ரெண்டும் பார்வதியைப் படுத்தி எடுக்குதுக. பிள்ளைப் பாசத்துல பார்வதியும் தோசை சுடக் கத்துக்குறாங்க.

  அப்படிச் சுடும் போது பிச்சையெடுக்கப் போயிருந்த சிவன் வந்துர்ராரு. அவரு மூக்குலயும் வாடை ஏறுது. எத்தனையோ வீடுகள்ள பிச்சை எடுத்தும் இப்பிடியொரு வாசனை வந்ததில்லையேன்னு சிவனுக்கு கோவம்.“இது வரைக்கு இந்தப் பண்டத்த ஒங்களுக்குச் சுட்டுக் கொடுத்திருப்பாளா சக்களத்தி? பிள்ளைகளுக்கு மட்டும் இம்புட்டு வாசனையா சுட்டுக்குடுக்குறா”ன்னு கங்கை சிவனோட தலைல உக்காந்துக்கிட்டு ஏத்திவிடுறா.

  அந்தக் கோவத்துல சிவனாரு தாண்டவம் ஆடுறாரு. ஆடுறாரு ஆடுறாரு. ஒலகமே ஆடுற மாதிரி ஆடுறாரு. பார்வதியும் பதிலுக்கு பதில் நல்லா ஆடுது. அப்போ சுட்டு வெச்சிருந்த ஒரு தோசை கீழ விழுந்துருது. சிவனார் தன்னோட திறமையக் காட்டுறதுக்காக கால் விரலால தோசைய எடுத்து சாப்பிடுறாரு. அரோகரா அரோகரான்னு கைலாசம் முழுக்க ஒரே பரவசச் சத்தம். அந்தப் பரவசத்துல சண்டை முடிஞ்சு சமாதானம் ஆயாச்சு.

  சிவனார் தாண்டவம் ஆடும் போது ரெண்டு தோசை பூமியில் விழுந்துருச்சாம். அத எடுத்துப் பாத்து தமிழ்நாட்டுப் பெண்கள் விதவிதமா தோசை சுடக் கத்துக்கிட்டாங்களாம்.

  இதுதான் தோசை பூமிக்கு வந்த கதை. 🙂

  பதிவில் இடம் பெற்ற பாடல்
  பாடல் – கையில காசு வாயில தோச
  வரிகள் – ஈரோடு தமிழன்பன்
  பாடியவர் – எஸ்.பி.பாலசுப்ரமணியம்
  இசை – வி.எஸ்.நரசிம்மன்
  படம் – அச்சமில்லை அச்சமில்லை
  பாடலின் சுட்டி – http://youtu.be/iHeAB0LHr28

  அன்புடன்,
  ஜிரா

  239/365

   
  • ranjani135 6:56 pm on July 28, 2013 Permalink | Reply

   தோசை கதை நல்லா இருக்கு!
   ஒரு சந்தேகம் இது கிரா பாணியில் ஜீரா எழுதிய கதையா?

  • kamala chandramani 6:52 pm on July 29, 2013 Permalink | Reply

   சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகிப் போச்சு ஜீரா!

  • amas32 9:31 pm on July 30, 2013 Permalink | Reply

   யப்பாடி! வட தான் சுடுவீங்கன்னு நினச்சேன், அத விட தோசையை சூப்பரா சுடுறீங்களே 😉 எங்க ஆரம்பிச்சு எங்க முடியுது கதை! இதுக்கே ஒரு புலிட்சர் ப்ரைஸ் உண்டு உங்களுக்கு :-))

   காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரம் இது – காதலா காதலா பாடலிலும் கையில காசு வாயில தோசை என்று வரும் 🙂

   amas32

  • Saba-Thambi 11:22 am on August 1, 2013 Permalink | Reply

   நகைச்சுவையான பதிவு!

   Just wondering whether you heard about the up coming American movie ” Dosa Hunt” a short film by Amrit Singh

   check
   http://dosahunt.com/

   Generally North Indian food is internationally known and here is a chance to publisize our good old thosai!

   Hence timely post.

 • G.Ra ஜிரா 9:51 am on June 16, 2013 Permalink | Reply  

  ’தூள்’தர்ஷன் 

  இன்றைக்கு எத்தனை தமிழ் தொலைக்காட்சிகள் இருக்கின்றன என்று கேட்டால் விடை சொல்வது மிகக்கடினம். அத்தனை தொலைக்காட்சிகள். பட்டியல் போட்டால் எப்படியும் சிலவற்றை சொல்லாமல் விட்டுவிடுவோம்.

  ஆனால் இன்றைக்கு இருபத்துமூன்று ஆண்டுகளுக்கு முன்னால் (1990) ஒரேயொரு தமிழ் தொலைக்காட்சிதான் இருந்தது என்பது இன்றைய தலைமுறைக்கு வியப்பாக இருக்கும். அதற்கும் பத்து ஆண்டுகளுக்கு முன்(1980) தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமே தொலைக்காட்சி இருந்தது என்பது இன்னும் அதிர்ச்சி கலந்த வியப்பான செய்தியாக இருக்கும்.

  சென்னை தொலைக்காட்சி மட்டும் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் அதில் வரும் நிகழ்ச்சிகள் அனைவருக்கும் நன்றாக நினைவில் இருந்தன. இத்தனைக்கும் மாலை ஐந்து மணி முதல் இரவு ஒன்பது மணி வரைக்கும்தான் தமிழ் நிகழ்ச்சிகள். அதற்குப் பிறகு தேசிய நீரோட்டத்தில் இந்தி நிகழ்ச்சிகள் தொடரும்.

  வயலும் வாழ்வும் என்றொரு நிகழ்ச்சி இருந்தது. உழவு பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி அது. அந்த நிகழ்ச்சி தொடங்கும் போது வரும் “தாய் நிலம் தந்த வரம் தாவரம், அது தழைக்கத் தழைக்க மகிழ்வார்கள் யாவரும்” என்ற பாடல் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதனால் இசையமைத்து பாடப்பட்டது.

  இன்னும் எத்தனையோ நிகழ்ச்சிகள். இவைகளையெல்லாம் வைத்து ஒரு திரைப்படப் பாடல் வந்தது. பாடல் என்னவோ காதல் பாடல்தான். ஆனால் அந்தக் காதலைப் பாடும் போது புதுமையாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் சேர்த்துப் பொருத்தமாகப் பாடுவார்கள்.

  என்ன பாடல் என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன். கல்யாண அகதிகள் என்றொரு படம் பாலச்சந்தர் இயக்கத்தில் வந்ததே.. அதுவேதான்.

  படத்துக்கு இசை வி.எஸ்.நரசிம்மன். அவருடைய இசையில் இசையரசி பி.சுசீலாவும் ராஜ் சீத்தாராமனும் இணைந்து பாடிய பாடல்தான் நான் சொல்லும் பாடல். அதைவிட முக்கியமானவர் பாடலை எழுதிய வைரமுத்து அவர்கள்.

  பாடலைக் கண்டுபிடித்து விட்டீர்களா?

  மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்
  என் மௌனத்தை இசையாக்கி மொழிபெயர்த்தாய்
  இளகாத என் நெஞ்சில் இடம் பிடித்தாய்
  இன்று என் காதல் தேருக்கு வடம் பிடித்தாய்

  அதே பாட்டுதான். நல்ல இனிய பாடல். சரி. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வரும் சரணத்துக்கு நேராகப் போகலாம்.

  கண்களில் காதலின் முன்னோட்டம் பார்த்த பின்
  இதயம் முழுதும் எதிரொலி கேட்டேன்
  மாலையில் சோலையில் இளம் தென்றல் வேளையில்
  காண்போம் கற்போம் என்றுனைக் கேட்டேன்
  கண்மணிப் பூங்காவில் காத்திருந்தேன்
  கண்ணில் தடங்கலுக்கு வருத்தம் சொன்னேன்
  விழியில் ஒலியும் ஒளியும் கண்டேன்

  இந்தச் சரணத்தில் வருகின்ற நிகழ்ச்சிகளுக்கு ஒரு சிறு அறிமுகம் தருகிறேன்.

  முன்னோட்டம் – இந்த நிகழ்ச்சியில் வரும் வாரம் வரப்போகும் நிகழ்ச்சிகளை நாள் வாரியாகச் சொல்வார்கள். ஞாயிற்றுக் கிழமை மாலையில் என்ன படம் போடுவார்கள் என்பதை அறிந்து கொள்ள எல்லாரும் ஆவலாகக் காத்திருப்பார்கள். ஆனால் “தமிழ்த் திரைப்படம்” என்று மட்டும் சொல்லி கடுப்படிப்பார்கள். என்றைக்காவது ஒரு முறை தப்பித் தவறி படத்தின் பெயரைச் சொல்லி மக்களை இன்பக் கடலில் மூழ்கடிப்பார்கள்.

  எதிரொலி – இந்த நிகழ்ச்சியில் வாசகர் அனுப்பும் விமர்சனக் கடிதங்கள் படிக்கப்படும். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விளக்கங்களும் கொடுக்கப்படும். ஆனாலும் மக்கள் விளம்பர இடைவேளையே இல்லாத இந்த முப்பது நிமிட நிகழ்ச்சியையும் ரசிக்கத்தான் செய்தார்கள். அந்த முப்பது நிமிடங்களும் கேமராவின் கோணம் மாறவே மாறாது என்பது சிறப்பு. முன்னோட்டத்தில் ஞாயிறு திரைப்படத்தின் பெயர் சொல்லப்படுவதில்லை என்று சில குறும்பர்கள் எதிரொலிக்குக் கடிதம் எழுதிக் கேட்டு ஏமாந்த கதைகளும் உண்டு.

  இளந்தென்றல் – இது இளைஞர்களுக்கான நிகழ்ச்சி. இளைஞர்களுக்கு உண்மையிலேயே பயனுள்ள நிகழ்ச்சியாக இது இருந்தது என்னவோ உண்மைதான்.

  காண்போம் கற்போம் – இது கல்வி நிகழ்ச்சி. அறிவியல் கணக்கு உயிரியல் என்று பலப்பல பாடங்கள் நடத்தப்படும். +2 மாணவர்களுக்காக தேர்வுக்கு முன்னர் முக்கிய கேள்விகளைப் பாடமாக நடத்தினார்கள்.

  கண்மணிப்பூங்கா – இது குழந்தைகளுக்கான நிகழ்ச்சி. ஒவ்வொருநாளும் மாலை வேளையில் வரும்.

  தடங்கலுக்கு வருந்துகிறேன் – இது நிகழ்ச்சியல்ல. நிகழ்ச்சியில் தடங்கல் உண்டானால் காட்டப்படும் அட்டை. இதையே விதவிதமாக எழுதிவைத்துக் கொண்டு காட்டுவார்கள். தடங்கலுக்கு வருந்தும் போதும் தொலைக்காட்சியையே பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டம். திடீரென அங்கும் இங்கும் திரும்பும் போது நிகழ்ச்சி தொடக்கி விட்டால்?

  ஒலியும் ஒளியும் – இது திரைப்படப் பாடல் நிகழ்ச்சி. ஒவ்வொரு வெள்ளி இரவும் ஒட்டு மொத்தத் தமிழகமும் உட்கார்ந்து பார்த்த நிகழ்ச்சி. அப்போதெல்லாம் தொலைக்காட்சி இல்லாதவர்கள் தொலைக்காட்சி இருக்கும் பக்கத்து வீடுகளுக்குச் சென்று விடுவார்கள். பெரிய கூட்டமே உட்கார்ந்து நிகழ்ச்சியை பார்க்கும்.

  இன்னும் சித்ரஹார், சித்ரமாலா என்று எத்தனையெத்தனையோ நிகழ்ச்சிகள். எல்லாம் சொல்லச் சொல்ல இனிக்குதடா வகைதான்.

  இன்று எத்தனையெத்தனையொ தொலைக்காட்சிகள் இருக்கின்றன. அனைத்திலும் பெரும்பாலும் திரைப்பட நிகழ்ச்சிகள்தான்.

  ஆனால் வாரம் ஒரு திரைப்பாடல் நிகழ்ச்சி, ஒரு திரைப்படம், எப்போதாவது மலரும் நினைவுகள் என்று திரைப்படம் சார்ந்த நிகழ்ச்சிகளைக் குறைவாகக் கொடுத்த சென்னை தொலைக்காட்சி உண்மையிலேயே மனதுக்கு நிறைவானது.

  பாடல் – மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்
  வரிகள் – கவிப்பேரரசு வைரமுத்து
  பாடியவர்கள் – இசையரசி பி.சுசீலா, ராஜ் சீத்தாராமன்
  இசை – வி.எஸ்.நரசிம்மன்
  படம் – கல்யாண அகதிகள்
  பாடலின் சுட்டி – http://youtu.be/wEjZJ7G8uL0

  அன்புடன்,
  ஜிரா

  197/365

   
  • Arun Rajendran 10:40 am on June 16, 2013 Permalink | Reply

   ஜிரா சார்…

   மலரும் நினைவுகள் தான் இந்தப் பதிவும் என்னுடையப் பிண்ணூட்டமும்..இந்தப் பாட்ட இப்போ தான் கேட்கறேன் / பார்க்கறேன்..

   வானொலி, தொலைக்காட்சி – இரு கண்கள்தான் என்னுடைய பிள்ளைப்பருவத்திலும்

   எதிரொலி : திரு.கண்ணப்பன் அவர்கள் எதிரொலியில் வந்தபோது “கரடிபாளையத்தில் இருந்து குமார்” என்ற வாசகர், செவ்வாய்(ஒரு மணி நேர நாடகம் அன்று மட்டும்) நாடகத்தைப் பாராட்டி கடிதம் எழுதி இருந்தார்..நன்றி சொல்லும் விதமா திரு.கண்ணப்பன் “குமாரபாளையத்தைச் சேர்ந்த திரு.கரடி அவர்களுக்கு நன்றி”-னு மறுமொழி கூறினார்..

   செவ்வாய் இரவு நாடகம்: முத்தான நாடகங்கள் பல வந்திருந்தாலும், “காதாலாகி கசிந்துருகி”-னு ஒரு நாடகம்…தலைப்பும் கவித்துவமாக இருக்க, கதையும் இளமைப் பொலிவுடன் கைத்தட்டல் பெற்றது..

   மலரும் நினைவுகள்: திரையிசைப் பாடகர் P.B.Sreenivas அவர்கள் தன்னுடைய திரையுலக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டது , “மலரும் நினைவுகள்”-னு கவிதைல வர்ற மாதிரி நிகழ்ச்சியின்போதே ஒரு கவிதையை எழுதிப் பகிர்ந்து கொண்டது இன்னும் நினைவில் இருக்கு..

   வயலும் வாழ்வும்: (வானொலியில் ஏரும் ஊரும் 🙂 )..திரு.புஷ்பவன குப்புசாமி அவர்களை எனக்கு அறிமுகப் படுத்தியது இந்த நிகழ்ச்சி தான்..கிராமியப் பாட்டு “தாலி ஒன்னு செய்யச்சொன்னேன்”-னு வரும்.

   தேசிய ஒளிபரப்புல ரங்கோலி, டர்னிங் பாயிண்டு, வேர்ல்ட் திஸ் வீக், லிவிங் ஆன் தி எட்ஜ், சுரபி, இக்னோ பல்கலை நிகழ்ச்சி, நாடகங்கள், மேரி ஆவாஸ் சுனோ அப்படினு ஒன்னையும் விடாமப் பார்த்து வளர்ந்த நாட்கள் அவை..

   nostalgic..thank you for this post and a song..

   இவண்,
   அருண்

   • GiRa ஜிரா 3:57 pm on June 16, 2013 Permalink | Reply

    அற்புதம் அற்புதம் அற்புதம். உங்க பின்னூட்டம் கலக்கல். அதுவே தனி பதிவு மாதிரி இருக்கு. நீங்க சொன்ன ஒவ்வொன்னும் இப்பதான் நினைவுக்கு வருது.

    ரங்கோலி மட்டுமா… தேசிய நீரோட்டத்திலும் எத்தனை நிகழ்ச்சிகளைப் பாத்திருக்கோம். பேசாம எல்லா டிவிகளையும் மூடிட்டு மறுபடியும் தூர்தர்ஷன் மட்டும் இருக்கனும்னு சட்டம் கொண்டு வந்துரலாமா?

    • Arun Rajendran 5:06 pm on June 16, 2013 Permalink

     நன்றிங்க ஜிரா சார்… 🙂 அப்படி ஒரு சட்டம் கொண்டு வந்தா தேவலைங்க…

     இதோ அந்த கிராமியப் பாட்டு:

  • D sundarvel 11:59 am on June 16, 2013 Permalink | Reply

   எதிரொலி பகுதி பற்றி ஆனந்தவிகடனில் ஒரு ஜோக் வந்தது.
   ”போனவாரம் வெளியான நாடகத்தைப் பாராட்டி மூணு கடிதம் வந்திருக்கு.
   என்ன? மூணு கடிதமா? நாலு வரணுமே.”

   • GiRa ஜிரா 4:01 pm on June 16, 2013 Permalink | Reply

    ஹாஹாஹா விழுந்து விழுந்து சிரிச்சேன்னு சொன்னா பொய். ஆனா நெனச்சு நெனச்சு ரசிச்சுச் சிரிக்கிறேன். செம ஜோக்கு 🙂

  • kamala chandramani 4:37 pm on June 16, 2013 Permalink | Reply

   ஆம், அந்தப் பழைய நாட்களின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அளவாக, பொழுது போகவும், பொது அறிவை, உலக விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும் உதவின. இப்பொழுது திகட்டுகிறது. ‘மனதுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்’ அழகானபாடல்.

  • rajnirams 9:24 am on June 17, 2013 Permalink | Reply

   சூப்பர் சார். ரொம்ப அருமையான பாட்டு,அந்த நிகழ்சிகளை பற்றிய தங்கள் விளக்கமும் சூப்பர். 6 பாடல்களுக்காக காத்திருந்த ஆர்வம் 24 மணி நேரமும் பாடல்கள் என்றிருக்கும் இந்த கால கட்டத்தில் இல்லை. இந்த பாடலை பி.சுசிலா அவர்களுடன் பாடியது ராஜ்குமார் பாரதி என்று ஞாபகம். நான் ஒரு பாடலை பற்றி நினைத்து கொண்டிருந்தால் நான்காம் நாள் 4 வரி நோட்டில் வருவது பல முறை நடப்பது ஆச்சர்யமாக இருக்கிறது-“நெட்”பதி யா-அதனால் இப்போது நான் நினைக்கும் சில பாடல்கள் உள்ள ஒரு விஷயத்தை cc உங்கள் 3 பேருக்கும் அனுப்பி விடப்போகிறேன்:-))

  • pradeepkt 10:26 am on June 17, 2013 Permalink | Reply

   மறக்க முடியுமா? அத்தோடு செவ்வாய்க் கிழமை 7 மணிக்கு ஒரு மணி நேர நாடகம் போடுவார்கள். அதில் ஒன்று இன்றைக்கும் நினைவு இருக்கிறது … அம்மா அங்கே கணேசு இங்கே. இப்போ குளுதாடி மாதிரி இருக்கும் மாஸ்டர் கணேசு அந்தக் காலத்தில் நடித்த கண்ணீர்க் காவியம் 🙂

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel