Updates from August, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • mokrish 8:54 pm on August 26, 2013 Permalink | Reply  

  கங்கை தலையினில் மங்கை இடையினில் 

  நண்பர் @nchokkan னுடன் பேசிக்கொண்டிருந்தபோது  ‘ஜனனி ஜனனி ஜகம் நீ’ பாடல் வரிகள் பற்றி அவருடைய நண்பர் கேட்டதாக ஒரு கேள்வி எழுப்பினார். சிவன் அக்னி வடிவம். அடிமுடி காணாத ஜோதிஸ்வரூபம்.  ஆனால் கவிஞர் வாலி பாடலின் முதல் சரணத்தில் http://www.youtube.com/watch?v=PFPX9OgqEG4

  கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே..

  நின்ற நாயகியே இட பாகத்திலே..

  என்ற வரிகளில் ஏன் குளிர் தேகத்திலே என்று சொல்கிறார்?

  சிவபெருமான் உஷ்ணமான திருமேனியை உடையவர். அந்த நெருப்பின் கடுமை குறையவே குளிர்ச்சியான திருக்கயிலையை இருப்பிடமாகக் கொண்டிருக்கிறார். மேலும் தேவலோகத்திலிருந்து கங்கை பூமிக்கு வரும் பொழுது எழும் பிரவாகத்தினை கட்டுப்படுத்தி தன் சடாமுடியில் தாங்கி  பூமி தாங்கும் அளவில் மட்டும் வெளிவிட்டார். இருப்பது கயிலையில், கங்கையின் பிரவாகம் தலையில் என்னும்போது குளிர் தேகம் என்பது சரிதானே?

  விஷ்ணு அலங்காரப் பிரியர். அனுமன் ஸ்தோத்திரப் பிரியர். சிவ பெருமான் அபிஷேகப் பிரியர். தன்னைத் துதித்துச் செய்யப்படும் அபிஷேக ஆராதனைகளால் மனம் மகிழ்ந்து  வேண்டியதை தருபவன். சிவபெருமானுக்கு என்னென்ன பொருட்களால் அபிஷேகம் செய்ய வேண்டும் என்பதை அண்ணாமலைச் சதகம் என்ற நூல் சொல்கிறது. பேரொளி மயமான அவன் திருமேனி குளிர்ந்தால், அண்ட சராசரங்களும் குளிர்ந்து, காலம் தவறாமல் மழை பொழிந்து, பயிர்கள் நல்ல முறையில் விளைந்து உலகை வாழ்விக்கும் என்பது நம்பிக்கை. தொடர்ந்து அபிஷேகங்கள் என்னும்போது குளிர் தேகம் என்பது சரிதானே?

  நீரும் நெருப்பும் மட்டுமல்லாமல் ‘இருநிலனாய்த் தீயாகி நீருமாகி’ என்ற தேவாரப் பாடல் பரமசிவனின் எட்டு வடிவங்கள் சொல்லும். பஞ்சபூதங்களுக்கும் உரிய தலங்களில் அமைந்துள்ள சிவாலயங்களில், மூலவர் பஞ்ச பூதங்களின் பெயர்களாலேயே அழைக்கப்படுகிறார். இதில் திருவானைக்கா  நீர்த்தலம் ஆகும். மூலஸ்தான லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்க்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். கோடையில், காவேரி வறண்டிருக்கும் நேரங்களிலும், இந்நீர்க்கசிவு வற்றுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

   Phosphorus என்ற பொருள் பற்றி நாம் படித்திருக்கிறோம். இது நீரில் கரைவதில்லை. காற்றில் தானாக எரியும் தன்மை உடையது. எரிவதற்கான தாழ்ந்த வெப்ப நிலை ஏறக்குறைய அறை வெப்ப நிலையாக இருப்பதால் இதை நீரில் இட்டு வைத்திருப்பார்கள். சிவனும் எப்போதும் ஒரு அபிஷேக mode ல் இருப்பதால் குளிர் தேகம் என்பது சரிதானே?

  இருக்கும் இடத்தையும் தன் மேனியையும் குளிர்விக்க எல்லா ஏற்பாடுகளும் செய்த பிறகே உமையவளுக்கு இட பாகத்தை அளிக்கிறான். அட!

  மோகனகிருஷ்ணன்

  268/365

   
  • amas32 4:59 pm on August 27, 2013 Permalink | Reply

   கர்நாடகாவில் பல கோவில்களில் மேலிருந்து சொட்டு சொட்டாக நீர் லிங்கத்தின் மேல் படும்படியாக ஒரு சொம்பில் துளையிட்டு மேலே கட்டி வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். சிவபெருமானை சதா குளிர்விக்க நல்ல ஒரு வழி. திருமாலோ பாற்கடலில் பள்ளிக் கொண்டிருப்பவன். சிவன் சுடும் மயானத்தில் மகிழ்ச்சியாக இருப்பவன். அதனால் வெளி உபகரணங்களால் தான் அவனை குளிர்விக்க வேண்டும்.

   amas32

  • rajinirams 2:52 pm on August 29, 2013 Permalink | Reply

   குளிர் தேகத்திலே என்ற வார்த்தைக்கான தங்களின் விரிவாக்கம் அருமை. amas32 அவர்கள் கூறியதை போல இங்கு எல்லா கோவில்களிலுமே இறைவனை குளிர்விக்கிரார்கள்.கவிஞர் வாலியின் இந்த பாடலை ராஜா ஸ்பஷ்டமாக உச்சரித்து பாடும்போது மெய் சிலிர்க்கும் என்பது உண்மை.நன்றி.

 • என். சொக்கன் 9:11 pm on July 29, 2013 Permalink | Reply  

  பூவாயி! 

  • படம்: எங்க ஊரு காவக்காரன்
  • பாடல்: அரும்பாகி மொட்டாகி
  • எழுதியவர்: கங்கை அமரன்
  • இசை: இளையராஜா
  • பாடியவர்கள்: தீபன் சக்கரவர்த்தி, பி. சுசீலா
  • Link: http://www.youtube.com/watch?v=Y3BYARCNZLc

  அரும்பாகி மொட்டாகிப் பூவாகி

  பூப்போல பொன்னான பூவாயி!

  ’எங்க ஊரு காவக்காரன்’ என்று கிராமிய மணம் கமழும் படத் தலைப்பு, கிராமத்து மெட்டு, நடிப்பதோ கிராமத்து வேடங்களுக்கென்றே நேர்ந்துவிடப்பட்ட ராமராஜன். ஆனால் பாடல் எழுத உட்கார்ந்த கங்கை அமரன்மட்டும், திருக்குறளில் இருந்து முதல் வரியை எடுத்திருக்கிறார்!

  காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி

  மாலை மலரும் இந்நோய்

  வள்ளுவர் ‘நோய்’ என்று சொல்வது காதலைதான். அது காலையில் அரும்பாகிறது, மாலையில் மலர்ந்துவிடுகிறது, பகலெல்லாம் போதாக இருக்கிறது.

  அதென்ன போது?

  மலர்வதற்குத் தயாரான பூவுக்குதான் ‘போது’ என்று பெயர். இன்றைக்கு நாம் மொத்தமாக மறந்துவிட்ட அருமையான தமிழ்ச் சொல் இது.

  என்னைக்கேட்டால், இந்த மெட்டுக்குக் கங்கை அமரன் ‘அரும்பாகிப் போதாகிப் பூவாகி’ என்றே எழுதியிருக்கலாம். ’போது’ என்ற சொல் புழக்கத்தில் இல்லை என்பதால் அதை ‘மொட்டு’ என்று மாற்றிக்கொண்டிருக்கிறாரோ?

  அவர் கிடக்கட்டும், இந்தத் திருவள்ளுவர் காதலை ‘நோய்’ என்று சொல்லிவிட்டாரே, ஆட்டோ வாசகங்களில் ஆடிக்குப் பின்னே ஆவணியும், தாடிக்குப் பின்னால் தாவணியும் என்பதுபோல் தாடிக்கார வள்ளுவர் காதலை வெறுத்துச் சொன்ன உவமையா இது?

  அதற்கு இன்னொரு திருக்குறளில் பதில் இருக்கிறது:

  இருநோக்கு இவள் உண்கண் உள்ளது, ஒருநோக்கு

  நோய், நோக்கு ஒன்று அந்நோய் மருந்து

  இந்தப் பெண்ணுக்கு இரண்டு பார்வை, ஒரு பார்வை நோய் தரும், இன்னொரு பார்வை அந்த நோயைத் தீர்க்கிற மருந்தாகும். டூ இன் ஒன்.

  காதலும் அதேமாதிரிதான். நோய் தரும், அந்த நோய்க்கு அதுவே மருந்துமாகும்.

  ***

  என். சொக்கன் …

  29 07 2013

  240/365

   
  • ranjani135 9:19 pm on July 29, 2013 Permalink | Reply

   ரொம்பவும் ரசித்தேன்!

  • rajinirams 8:52 pm on July 30, 2013 Permalink | Reply

   அருமை. போது பொருள் விளக்கமும் அறிந்து கொண்டேன்.நன்றி

  • amas32 9:37 pm on July 30, 2013 Permalink | Reply

   இறைவனின் பார்வையிலும் ஒரு கண்ணில் சூரியன், ஒரு கண்ணில் சந்திரன். வெப்பம், குளிர்ச்சி இரண்டையும் ஒருசேர வைத்துள்ளார்.

   கங்கை அமரனின் ஞானம் எப்பவும் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. அவர் பாடல்களையும் தொகுத்து வெளியிட வேண்டும். ரொம்ப உள்ளது.

   போது என்ற சொல், சொல்வதற்கே மிகவும் இனிமையாக உள்ளது.

   amas32

 • mokrish 9:01 pm on May 20, 2013 Permalink | Reply  

  ஆத்தோரம் மணலெடுத்து 

  ஒரு விடுமுறை தின ஸ்பெஷல் கொண்டாட்டமாக குடும்பத்துடன்  கடற்கரையில் ஒரு மாலைப்பொழுது. இதமான காற்று, அந்த குச்சி ஐஸ், பாய் / நாற்காலி என்று ஒரு பிக்னிக் போல வந்திருக்கும் குடும்பங்கள், காதலர்கள், சிலைகள், சுண்டல்  மாங்காய். தூரத்தில் கலங்கரை விளக்கம், இவை எல்லாவற்றையும் விட அழகு குழந்தைகள் பெரியவர்கள் என்று எல்லோரும் மணலில் விளையாடுவதுதான் – வீடு கட்டி, படம் வரைந்து , பெயர் எழுதி என்று பல வித விளையாட்டு.

  மணலில் வீடு கட்டுவதைப் பார்த்தவுடன்  ஒரு பழைய பாடல் நினைவுக்கு வந்தது. கண்ணதாசன் எழுதிய ஆத்தோரம் மணலெடுத்து (படம் வாழ்க்கை வாழ்வதற்கே இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர்கள் லதா, ரமாமணி) என்ற பாடல்.  http://www.youtube.com/watch?v=Ik38lU80tMg ஒரு சிறுவனும் சிறுமியும் வீடு கட்டும் கனவோடு பாடும் வரிகள்.

  ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி…

  தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருப்போம்…

  வெய்யிலிலே குளிர்ந்திருக்கும்

  கையகலம் கதவிருக்கும் காற்றுவர வழியிருக்கும்…

  வழி மேலே விழியிருக்கும் வந்தவர்க்கெல்லாம் இடமிருக்கும்…

  எளிமையான வாழ்வுக்கு வகை செய்யும் ஒரு functional வீடு. சுற்றி கொஞ்சம் தோட்டம். வெயிலின் வெளிச்சம் வரும் – வெப்பம் வராமல். காற்று வரும். Guest space is in the hearts என்பது போல் வந்தவர்க்கெல்லாம் இடமிருக்கும். குழந்தைப்பருவத்தின் சிக்கலற்ற மனம் இப்படித்தான் யோசிக்கும். அருமை

  ஆனால் வளர்ந்தபின் வரும் கற்பனை எப்படியிருக்கிறது? கண்ணன் வருவான் என்ற படத்தில் வாலி எழுதிய நிலவுக்கு போவோம் இடமொன்று பார்ப்போம் என்ற பாடல் ( இசை சங்கர்-கணேஷ் பாடியவர்கள் TMS , பி சுசீலா) http://www.youtube.com/watch?v=vIFM4-6yWTU

  நிலவுக்கு போவோம் இடமொன்று பார்ப்போம்

  மாளிகை அமைப்போம் மஞ்சத்தில் இருப்போம்

  நடக்க முடியாத கற்பனை. மனிதன் நிலவில் காலடி வைத்தவுடன் கவிஞருக்கு தோன்றிய வரிகள். காதலர்கள் நிலவில் வாழ்ந்து பூமி பார்க்க இறங்கி வருவார்களாம்.

  மெல்ல பேசுங்கள் என்ற படத்தில் செவ்வந்தி பூக்களில் செய்த வீடு என்ற புலமைப்பித்தனின் பாடலும் காதல் மயக்கத்தில் வரும் கவிதைதான்  (இசை இளையராஜா பாடியவர்கள் தீபன் சக்கரவர்த்தி, உமா ரமணன் )

  https://www.youtube.com/watch?v=w_iKhaN3rLk (

  ‘செவ்வந்திப்பூக்களில் செய்த வீடு

  வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு

  வானவில்லில் அமைப்போம் தோரணம்

  வண்டு வந்து இசைக்கும் நாயனம்

  இதுவும் நடக்காத விஷயம்தான். அழகாக ஒரு கற்பனை. அவ்வளவுதான். குழந்தைகளாக இருக்கும்போது இருக்கும் தெளிவும் எளிமையும் practical சிந்தனையும் வளர்ந்தபின் இருப்பதில்லையோ? மணலில் வீடு கட்டி விளையாடுவது மீண்டும் குழந்தைகளாகும் முயற்சியா? அப்படியாவது இழந்த innocence திரும்ப கிடைக்கும் என்ற நம்பிக்கையா?

  மோகனகிருஷ்ணன்

  171/365

   
  • rajnirams 10:44 am on May 21, 2013 Permalink | Reply

   மிக வித்தியாசமான பதிவும்,பாடல்களும். அருமை.

  • GiRa ஜிரா 9:44 pm on May 21, 2013 Permalink | Reply

   ஆசைகள் எப்படியெல்லாம் மாறுது பாருங்க. மனிதனுக்கு எப்பவும் பொம்மை வெச்சு விளையாட ஆசை இருக்கும்.

   சின்ன வயசுல குட்டிக் குட்டி பொம்மைகளை வெச்சி விளையாட ஆசை வரும்.
   அதுவே கொஞ்சம் வளந்தா தோழன்/தோழி என்னும் பொம்மையை உடன் விளையாடக் கேட்கும்.
   வயது வந்த பிறகு காதலன்/காதலி என்னும் பொம்மையைத் துணையாகக் கேட்கும்.
   அதற்குக் கொஞ்ச நாள் கழிச்சு குழந்தைங்கிற பொம்மை கேட்கும்
   வயதான பிறகும் தெய்வம் என்னும் பொம்மையைக் கேட்கும்.

   அது மாதிரிதான் நீங்க சொல்லியிருக்கிறதும். முதல்ல மணல் வீடு.. போகப் போக நிலவிலேயே வீடு 🙂

  • amas32 10:54 pm on May 22, 2013 Permalink | Reply

   மோகனின் பதிவுக்கு உங்க பொழிப்புரை அருமை gira 🙂

   வயதுக்குத் தகுந்த மாதிரி ஆசைகள் மாறுகின்றன. ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி என்ற பாடலை நான் அன்று கேட்ட பொழுது இவ்வளவு சிந்தித்துப் பார்த்ததிலை. எனக்கு அப்போ தோன்றியது பீச்சில் மணல் வீடு கட்டி விளையாடும் மகிழ்ச்சியான அனுபவம் தான். இன்றும் மனத்தில் தோன்றுவது அது தான் 🙂 என்ன ஒரு இனிமையான காலம் அது! மணல் வீடு கட்டி அதன் மேல் கொடி நட்டு, கிளிஞ்சல்கள் வைத்து அழகு படுத்தி அடித்து வரும் அலைகள் அழித்துவிடாமல் இருக்கவேண்டுமே என்ற கவலையோடு பீச்சை விட்டுக் கிளம்புவது, இதுவே என் நினைவுகள் :-))

   amas32

 • என். சொக்கன் 10:55 am on March 2, 2013 Permalink | Reply  

  சாலை கடந்த குமரிகள் 

  • படம்: இதயம்
  • பாடல்: ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லை
  • எழுதியவர்: வாலி
  • இசை: இளையராஜா
  • பாடியவர்கள்: இளையராஜா, தீபன் சக்கரவர்த்தி, எஸ். என். சுரேந்தர்
  • Link: http://www.youtube.com/watch?v=0ZwRNKNk8TI

  காலேஜ் அழகியும் கான்வென்ட் குமரியும் தியேட்டர் போகிறார்,

  டாக்ஸி ட்ரைவரும் பார்த்துப் பார்த்துதான் மீட்டர் போடுவார்,

  காலை, மாலைதான் வேலை பார்க்கவர் மகிழ்ச்சி கொள்கிறார்,

  வாலைக் குமரிகள் சாலை கடக்கையில் வாயைப் பிளக்கிறார்!

  என்னதான் 75% ஆங்கிலம் கலந்து பாட்டு எழுதினாலும்கூட, தன்னையும் அறியாமல் சில மரபுச் சொற்களை ஆங்காங்கே நுழைத்துவிடுவார் வாலி. அந்தவிதத்தில், இந்தப் பாடலில், ‘வாலை’க் குமரி.

  இதே சொல்லை பாரதியாரும் பயன்படுத்தியிருக்கிறார், ‘வாலைக் குமரியடி, கண்ணம்மா, மருவக் காதல் கொண்டேன்!’

  குறும்பான பெண்ணை ‘வால் குமரி’ என்று சொல்லலாம், அதென்ன ‘வாலைக் குமரி’?

  பெண்களின் வயதைப் பொறுத்து பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்று ஏழுவிதமாகப் பிரிப்பார்கள், கேள்விப்பட்டிருக்கிறோம்.

  இதேபோல், இன்னொரு வகைபாடும் இருக்கிறது: வாலை, தருணி, பிரவுடை, விருத்தை.

  • வாலை = 15 வயதுவரை உள்ள பெண்கள்
  • தருணி = 16 முதல் 30 வயதுக்குள் உள்ள பெண்கள்
  • பிரவுடை = 31 முதல் 55 வயதுக்குள் உள்ள பெண்கள்
  • விருத்தை = 55 வயதுக்குமேல் உள்ள பெண்கள்

  ஆக, ‘வாலைக் குமரி’ என்றால் பதினைந்து வயதுப் பெண் (அல்லது அதைவிடச் சிறியவள்) என்று அர்த்தம். Underage காதல் ரொம்பத் தப்பாச்சே, யு டூ வாலி? அதைவிட, யு டூ பாரதி?

  கவலை வேண்டாம், இதே வார்த்தையில் இரு கவிஞர்களுக்கும் ஒரு Loop Hole இருக்கிறது, அதன்மூலம் பிரச்னையில் சிக்காமல் வெளிவந்துவிடுவார்கள்.

  ’வால்’, ‘வாலை’ என்ற சொற்களுக்குத் தமிழில் ‘சுத்தமான’ என்ற பொருளும் உண்டு. ஹமாம் போட்டுக் குளித்துவிட்டு வந்த சுத்தமான பெண்கள் (அல்லது, தூய்மையான எண்ணங்களைக் கொண்ட / களங்கமில்லாத பெண்கள்) சாலை கடந்தனர், அதைப் பார்த்த மற்றையோர் வாயைப் பிளந்தனர், அம்மட்டே!

  போகட்டும், ‘மருவ’க் காதல் என்கிறாரே பாரதியார், அதென்ன மருமம்?

  தமிழில் ‘மருவுதல்’ என்றால் இது, அது என்று வித்தியாசமே பார்க்காதபடி இரண்டறக் கலத்தல் என்று அர்த்தம். காதலுக்கு மிகப் பொருத்தமான அடைமொழி, பாரதின்னா சும்மாவா? 🙂

  ***

  என். சொக்கன் …

  02 03 2013

  091/365

   
c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel