Updates from September, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • mokrish 7:51 am on September 4, 2013 Permalink | Reply  

  எங்கிருந்தோ வந்தான் 

  கடந்த வாரம் அலுவலகத்தில் House Keeping சர்வீஸ் பற்றி நிறைய புகார் என்பதால் அந்த contractor ஐ கூப்பிட்டு விசாரித்தோம். அவர் இந்த சர்வீஸ் நடத்துவதில் உள்ள சிரமங்களை அடுக்கினார். வேலையாட்கள் சரியான நேரத்தில் வருவதில்லை, சொன்ன வேலைகள் எதையும் சரியாகச் செய்வதில்லை, வெறும் அரட்டையில் நேரத்தை வீணடிக்கிறார்கள், அடிக்கடி விடுப்பு எடுக்கிறார்கள் என்று அங்கலாய்த்தார்.

  எனக்கு மீட்டிங் அறையில் முண்டாசுடன் ஒருவன் சிரிப்பது கேட்டது. பல வருடங்களுக்கு முன் பாரதி சொன்ன

  கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம் மறப்பார்:

  வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்;

  ஓயாமல் பொய்யுரைப்பார்; ஒன்றுரைக்க வேறுசெய்வார்;

  தாயாதி யோடு தனியிடத்தே பேசிடுவார்;

  உள்வீட்டுச் செய்தியெல்லாம் ஊரம் பலத்துரைப்பார்;

  சேவகரால் பட்ட சிரமமிக உண்டு கண்டீர்

  என்ற வரிகளுக்கு ஏற்ப இன்றும் சேவகர்கள் அப்படியே இருப்பது ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் மகாகவிக்கு யோகம் – கண்ணனே சேவகனாக வருகிறான். கண்ணன் இலட்சிய சேவகன். வந்தவுடன் தான் என்னென்ன செய்வேன் என்று கூறுவதாக வரும் வரிகள்

  மாடுகன்று மேய்த்திடுவேன், மக்களை நான் காத்திடுவேன்

  வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்;

  சொன்னபடி கேட்பேன்; துணிமணிகள் காத்திடுவேன்;

  சின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைத்தே

  ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன்;

  கற்ற வித்தை யேதுமில்லை; காட்டு மனிதன்; ஐயே!

  ஆன பொழுதுங் கோலடி குத்துப்போர் மற்போர் .

  நானறிவேன்; சற்றும் நயவஞ் சனைபுரியேன்”

  என்றுபல சொல்லி நின்றான்

  இத்தகைய சேவை செய்கின்ற கண்ணன் என்னும் சேவகன் கேட்ட கூலி என்ன? ‘நெஞ்சிலுள்ள காதல் பெரிதெனக்குக் காசு பெரிதில்லை’ என்கிறான்.

  படிக்காத மேதை என்ற படத்தில் கண்ணதாசன் ஒரு சேவகன் தான் என்னென்ன செய்வேன் என்று சொல்லுவதாக ஒரு பாடல் அமைக்கிறார் (இசை கே வி மகாதேவன் பாடியவர் டி எம் எஸ்)

  http://www.youtube.com/watch?v=K1I3c64ieBs

  உள்ளதை சொல்வேன் சொன்னதை செய்வேன்

  வேறென்றும் தெரியாது

  உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும்

  கபடம் தெரியாது

  பள்ளிக்கு சென்று படித்ததில்லை

  ஒரு எழுத்தும் தெரியாது

  பார்த்த உலகத்தில் பாசத்தை தவிர

  எதுவும் கிடையாது

  அடிப்பது போல கோபம் வரும்

  அதில் ஆபத்து இருக்காது

  நீ அழுதால் நானும் அழுவேன் அதற்கும்

  காரணம் புரியாது

  நயவஞ் சனைபுரியேன், காதலே போதும் என்ற பாரதியின் கண்ணன். கபடம் தெரியாது பாசத்தை தவிர எதுவும் கிடையாது என்ற கண்ணதாசனின் ரங்கன். கண்ணனும் ரங்கனும் ஒன்றுதானே?

  மோகனகிருஷ்ணன்

   
  • uma chelvan 8:35 am on September 4, 2013 Permalink | Reply

   கண்ணனே சேவகனாக வருகிறான்!!! இப்படியாக பட்ட கண்ணன் எனக்கும் ஒன்று வேணுமே!! எங்கே கிடைக்கும்?

  • uma chelvan 8:45 am on September 4, 2013 Permalink | Reply

   பற்று மிகுந்து வரப் பார்க்கின்றேன் – கண்ணனால்
   பெற்று வரும் நன்மையெல்லாம் பேசி முடியாது
   நண்பனாய் …
   மந்திரியாய் …
   நல்லாசிரியனுமாய் …

   • kamala chandramani 1:40 pm on September 4, 2013 Permalink | Reply

    அருமையான பதிவு.நல்ல பாடல். கள்ளங்கபடமில்லாமல் சேவை செய்பவர்கள் இருக்கிறார்கள். நம்மால்தான் அவர்களை அடையாளம் காணவோ, ஏற்றுக் கொள்ளவோ முடிவதில்லை.

  • uma chelvan 11:18 pm on September 4, 2013 Permalink | Reply

   கள்ளங்கபடமில்லாமல் சேவை செய்பவர்கள் இருக்கிறார்கள். நம்மால்தான் அவர்களை அடையாளம் காணவோ, ஏற்றுக் கொள்ளவோ முடிவதில்லை.———-எவ்வளவு உண்மையான வார்த்தைகள்! –

  • rajinirams 1:03 am on September 6, 2013 Permalink | Reply

   கண்ணனையும் ரங்கனையும் போன்ற கள்ளம் கபடமில்லாத சேவகர்கள் மிகக்குறைவே.என்றாலும் “அடித்தால் அழுவேன் ஒருநாள் யாரும் அனைத்தால் சிரிப்பேன் மறு நாள்-எடுப்பார் கைகளில் பிள்ளை”என்றிருக்கும் சூது வாதில்லாத ராமன் களும் அரிதாக இருப்பார்கள்.

  • amas32 5:00 pm on September 7, 2013 Permalink | Reply

   மகா கவி அன்று எழுதியது இன்றும் பொருந்துகிறது, என்றும் பொருந்தும். சேவகர்கள் வேலையைச் செய்வதில் சிரத்தை இல்லாமல் இருப்பதற்குப் பல காரணங்கள். ஆனாலும் கண்ணதாசன் கூறியிருப்பதுப் போல ஒரு சேவகன், அன்பிற்கு அடிமையானால் மட்டுமே கிடைப்பான், பாரதிக்குக் கிடைத்தக் கண்ணனைப் போல :-))

   amas32

 • mokrish 10:42 am on May 24, 2013 Permalink | Reply  

  ஒரு கணம் ஒரு யுகமாக 

  கடற்கரையில் உட்கார்ந்திருந்தபோது கவனித்த இன்னொரு விஷயம் – காத்திருத்தல். நிறைய பேர் தனியாக உட்கார்ந்து அலைகளைப்பார்க்காமல் சாலையில் வரும் வாகனங்கள் மேல் விழி வைத்து யார் வருகையையோ எதிர்நோக்கியிருக்கிறார்கள்.  பாலகுமாரன் எழுதிய வரிகள் நினைவுக்கு வந்தது

  உனக்கென்ன

  சாமி பூதம் கோவில் குளம் ஆயிரமாயிரம்

  ஜாலியாய் பொழுது போகும்

  வலப்பக்கக் கடல் மணலை

  இடப்பக்கம் இறைத்திறைத்து

  நகக்கணுக்கள் வலிக்கின்றன

  அடியே –

  நாளையேனும் மறக்காமல்

  வா.

  காத்திருத்தல் பற்றி நிறைய திரைப்பாடல்கள் உண்டு. உதாரணமாக, “16 வயதினிலே” படத்தில் கண்ணதாசன் எழுதிய இந்தப் பாடல் (இசையமைத்து பாடியவர்  இளையராஜா ) http://www.youtube.com/watch?v=Zr9LuHXaUN4

  சோளம் வெதக்கையிலே சொல்லிப்புட்டு  போன புள்ளே ….,

  சோளம் வெளைஞ்சு காத்து கிடக்கு சோடி கிளி இங்கே இருக்கு,

  சொன்ன சொல்லு என்ன ஆச்சு தங்கமே கட்டழகி,

  எனக்கு நல்லதொரு பதில சொல்லு குங்கும பொட்டழகி

  என்ன சொல்கிறார்? இதோ வரேன் என்று போனவள்  திரும்பி வர சுமார் மூன்று மாதங்கள் ஆகிறதா? அடப்பாவமே!. நினைத்தாலே இனிக்கும் படத்தில் கண்மணி சுப்புவும் (இசை எம் எஸ் விஸ்வநாதன், பாடியவர் SPB ) இதையே சொல்கிறார் http://www.youtube.com/watch?v=XdooX-uKfKM

  காத்திருந்தேன் காத்திருந்தேன்

  காதல் மனம் நோகும் வரை..

  பாத்திருந்தாய் பாத்திருந்தாய்

  பச்சைக்கிளி சாட்சி சொல்லு…

  நாத்து வைச்சு காத்திருந்தால்

  நெல்லு கூட விளைஞ்சிருக்கும்…

  இதுவும் ஒரு நீண்ட காத்திருப்பு போல் இருக்கிறது. ஏன் இப்படி? வள்ளுவன் தரும் விளக்கம் இதோ

  ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்

  வருநாள்வைத் தேங்கு பவர்க்கு

  நெடுந்தொலைவு சென்ற காதலர் திரும்பி வரும் நாளை எதிர்பார்த்து ஏங்குபவர்க்கு ஒவ்வொரு நாளும் ஏழு நாள் போல்  தோன்றும் என்று ரிலேடிவிட்டி தியரி சொல்கிறார் வள்ளுவர். அதை கவிஞர்கள் சோளம் / நெல் விளையும் காலம் போல் என்று  காத்திருப்பின் வலியை அடிக்கோடிட்டு காட்ட கொஞ்சம் மிகைப்படுத்தி சொல்கிறார்கள்.

  சரி இவன் இங்கு காத்திருக்க அவள் ஏன் திரும்பி வரவில்லை? மறந்து விட்டாளா அல்லது பாரதி சொன்னது போல் வார்த்தை தவறிவிட்டாளா ? (வறுமையின் நிறம் சிவப்பு இசை எம் எஸ் விஸ்வநாதன், பாடியவர் SPB ) http://www.youtube.com/watch?v=V43cycEi3Gw

  தீர்த்தக்கரையினிலே தெற்கு மூலையில்

  செண்பகத் தோட்டத்திலே

  பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே

  பாங்கியோடென்று சொன்னாய்…

  வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா

  பாலகுமாரன் கவிதையில் சொல்லும் நாளையேனும் மறக்காமல் வா என்ற வேண்டுகோள், திரைப்பாடல் வரிகள் சொல்லும் சோளம் / நெல் விதைத்து காத்திருக்கும் சலிப்பு, பாரதி சொல்லும் ஏமாற்றம் – கடற்கரையில் ஒவ்வொரு  மாலைபொழுதிலும் இவை எல்லாமே  அரங்கேறுகிறது.

  மோகனகிருஷ்ணன்

  174 / 365

   
  • rajinirams 1:04 am on May 25, 2013 Permalink | Reply

   அருமை. நீங்கள் கூறியது போல் காத்திருக்கும் பாடல்கள் பல. கண்மணி நீவர காத்திருந்தேன்,பார்த்து பார்த்து கண்கள் பூத்ததடி நீ வருவாய் என.காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி,காத்திருந்த கண்களே.நீ வருவாய் என நானிருந்தேன்-அவற்றில் சில. நன்றி.

  • GiRa ஜிரா 12:51 pm on May 26, 2013 Permalink | Reply

   காத்திருப்பது சுகமான சோகம். அதைச் சுகமாக பாட்டில் கொண்டு வந்தார்கள் கவிஞர்கள். அதைப் பதிவில் கொண்டு வந்திருக்கின்றீர்கள் நீங்கள் 🙂

  • amas32 10:00 pm on May 26, 2013 Permalink | Reply

   காத்திருத்தல் கொடுமை. அது காதலன்/காதலிக்காக இருந்தாலும் சரி வேலைக்கான interview ஆனா பிறகு முடிவுக்காக இருந்தாலும், எந்த ஒரு நல்ல விஷயத்துக்காகவும் காத்திருத்தல் வலி தான்.

   நல்ல பதிவு!

   amas32

 • என். சொக்கன் 11:41 am on April 1, 2013 Permalink | Reply  

  கண்ணாலே பேசிப் பேசி… 

  • படம்: சூரியன்
  • பாடல்: பதினெட்டு வயது
  • எழுதியவர்: வாலி
  • இசை: தேவா
  • பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி
  • Link: http://www.youtube.com/watch?v=W6Kgy-z9QHA

  கங்கை போலே, காவிரி போலே,

  ஆசைகள் ஊறாதா!

  சின்னப் பொண்ணு, செவ்வரிக் கண்ணு,

  ஜாடையில் கூறாதா!

  ’செவ்வரி’க் கண் என்றால், சம்பந்தப்பட்ட நபருடைய விழியின் வெள்ளைப் பகுதியில் சிவந்த வரிகள் ஓடுகின்றன என்று அர்த்தம். அது ஒரு தனி அழகாகச் சிறப்பித்துக் கூறப்படுகிறது.

  உதாரணமாக மகாகவி பாரதியாரைப்பற்றி வ. ரா. வர்ணித்துக் கூறும் வரிகள், ’பாரதியாரின் கண்கள் செவ்வரி படர்ந்த செந்தாமரைக் கண்கள். இமைகளின் நடுவே, அக்கினிப் பந்துகள் ஜொலிப்பனபோலப் பிரகாசத்துடன் விளங்கும். அந்தக் கண்களை எவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டிருந்தாலும் தெவிட்டாது.’

  குறுந்தொகையில் ஒரு பாடல், ‘இவள் அரி மதர் மழைக்கண்’ என்று வர்ணிக்கும். இதன் பொருள், இந்தப் பெண்ணின் செவ்வரி படர்ந்த, மதர்ப்பான, குளிர்ச்சியான கண்கள்.

  கடவுளுக்குக்கூட செவ்வரி படர்ந்த கண்கள் இருப்பது தனி அழகு. பொய்கையாழ்வார் திருமாலைப்பற்றிப் பேசும்போது, ‘திறம்பாதென் நெஞ்சமே, செங்கண்மால் கண்டாய்’ என்கிறார். இங்கே ‘செங்கண்’ என்பது, கோபத்தாலோ ராத்திரி சரியாகத் தூங்காததாலோ சிவந்த கண்கள் அல்ல, செவ்வரி ஓடியதால் இயற்கையாகச் சிவந்த கண்கள் என்று கொள்வதே சிறப்பு.

  அப்படிப்பட்ட செவ்வரிகளைக் கொண்ட இந்தப் பெண்ணின் கண் ஜாடை, தன்னுடைய ஆசைகளை மறைக்காமல் சொல்லிவிடும், டேய் ஆடவா, அதைப் புரிந்துகொண்டு இவளோடு ஆட வா என்கிறார் வாலி.

  கிட்டத்தட்ட இதேமாதிரி ஒரு பாடலை ’கண்ணதாசன் திரைப் பாடல்கள்’ தொகுப்பில் நேற்று வாசித்தேன், ‘பெண்ணுக்கு ரகசியம் ஏது? தலைப் பின்னலும் பேசிடும்போது!’

  பொதுவாகப் பெண்களிடம் ரகசியம் தங்காது என்று சொல்வார்கள், அவர்கள் வாயைத் திறந்து சொல்லாவிட்டாலும், தங்களுடைய தலைப் பின்னலைத் தூக்கிப் போடுகிற விதத்தில்கூட விஷயம் வெளிவந்துவிடும், எதிரில் உள்ளவருக்கு அதைப் ‘படிக்க’த் தெரிந்திருக்கவேண்டும்.

  ஆக, Body Language, Face Languageபோல், பெண்கள் மொழி Eye Language, Hair Language என்று பலவிதமாக நீளும். படித்துப் புரிந்துகொள்வது ஆண்களின் சமர்த்து!

  ***

  என். சொக்கன் …

  01 04 2013

  121/365

   
  • amas32 10:21 pm on April 1, 2013 Permalink | Reply

   பெண்ணுக்கு பேசும் மொழிகள் பல. கண்ணில் ஓடும் சிவப்பு ரேகைகளில் இருந்து தலையை அடிக்கடி கைகளால் கோதி கொள்வது வரை சங்கேத மொழிகள் பல. அப்படியிருந்தும் ஆணுக்குப் புரிவதில்லையே! எதுக்கோ கோபமாக இருக்கிறாய் என்னவென்று சொல்லிவிடு என்பான் காதலி/மனைவியிடம். என்னவேண்டுமோ நேரடியாகக் கேள், சுற்றி வளைத்துப் பேசாதே எனக்குப் புரியாது என்பான்.

   நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் என்பதெல்லாம் காதலில் மூழ்கியிருக்கும் போது பேசப்படுவது 🙂 நாம் பேச வேண்டியதை வாயைத் திறந்து பேசுவதே போகும் ஊருக்கு வழியைக் காட்டும்.

   amas32

 • G.Ra ஜிரா 8:24 am on March 16, 2013 Permalink | Reply  

  தூக்கம் எங்கே? 

  ஊருசனம் தூங்கிருச்சு
  ஊதகாத்தும் அடிச்சிருச்சு
  பாவி மனம் தூங்கலியே
  அதுவும் ஏனோ புரியலயே

  பொதுவாக இரவு இரண்டு விதமான மனிதர்களைத் தூங்க விடாது. ஒருவர் நோயாளி. இவர் உடல் உபாதையினால் சரியாகத் தூக்கமில்லாமல் தவிப்பார். இன்னொருவர் காதலில் விழுந்தவர். இவர் காதல் நினைவுகள் கொடுக்கும் உபாதையால் தூக்கமில்லாமல் தவிப்பார்.

  ஆனால் மேலே சொன்ன பாடலைப் பாடியவள் நோயாளியல்ல. அவள் ஒரு காதலி. அவள் எண்ணமெல்லாம் காதலன். நினைக்க நினைக்க எண்ணங்கள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. எண்ணங்கள் ஒவ்வொன்றும் இனிக்க இனிக்க நினைப்புகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. ஆனால் அவளுக்கு அது புரியவில்லை. தூக்கம் வரவில்லையே என்று பாடுகிறாள்.

  பாடல் – ஊரு சனம் தூங்கிருச்சே
  படம் – மெல்லத் திறந்தது கதவு
  பாடல் வரிகள் – கங்கை அமரன்
  பாடியவர்கள் – எஸ்.ஜானகி
  இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன் – இசைஞானி இளையராஜா
  இயக்கம் – ஆர்.சுந்தர்ராஜன்

  எப்பேர்ப்பட்ட இனிமையான பாடல். எஸ்.ஜானகியின் குரலில் உணர்வுகள் பொங்கும் அருமையான பாடல்.

  இந்தத் தூக்கம் தராத காதல் ஏக்கத்தை இன்னொரு பெரிய கவிஞரும் திரைப்படம் வராத காலத்திலேயே எழுதியிருக்கிறார். அது பல ஆண்டுகள் கழித்து திரைப்படத்திலும் வந்தது.

  மோனத்திருக்குதடி இவ்வையகம் மூழ்கித் துயினிலே
  நானொருவன் மட்டிலும் இங்கு பிரிவென்பதோர் நரகத்துழலுவதோ

  இப்போது புரிந்திருக்குமே அந்தப் பாடல். ஆம். தீர்த்தக் கரையினிலே என்று தொடங்கும் பாரதியாரின் பாடல்தான். பின்னாளில் வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் மெல்லிசை மன்னர் இசையமைப்பில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடி வெளிவந்தது. இந்தப் பாடலும் திரையிசையில் இனிமை நிறைந்த உணர்வு மிக்க பாடல்தான்.

  இந்த உணர்வுகள் இன்று நேற்றா இருக்கின்றன? இல்லை. நூற்றாண்டுகளுக்கும் மேலாய்… ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாய்… காதல் என்ற உணர்ச்சி மனிதரைப் பிடித்த நாளில் இருந்து இருக்கிறது.

  ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வந்த சங்கத் தமிழில் மேலே பார்த்த இரண்டு பாடல்களின் வரிகளும் அப்படியே இருக்கின்றன. பயன்படுத்திய சொற்கள் மாறியிருக்கின்றன. ஆனால் கருத்து அதே கருத்துதான். காதல் உணர்வுகள் கொடுக்கும் தூக்கமின்மை.

  நள்ளென் றன்றே யாமஞ் சொல்லவிந்
  தினிதடங் கினரே மாக்கண் முனிவின்று
  நனந்தலை யுலகமுந் துஞ்சும்
  ஓர்யான் மன்ற துஞ்சா தேனே
  நூல் – குறுந்தொகை
  எழுதியவர் – பதுமனார்
  திணை – நெய்தல் திணை
  கூற்று – (தோழிக்கு) தலைவியின் கூற்று

  நள்ளென்றன்றே யாமம் சொல் அவிந்(து)
  இனிது அடங்கினரே மாக்கண் முனிவு இன்று
  நனந்தலை உலகமும் துஞ்சும்
  ஓர் யான் மன்ற துஞ்சாதேனே

  இன்னும் விளக்கமாகச் சொல்கிறேன். இரவோ நள்ளிரவு (நள்ளென்றன்றே). விலங்குகள் எல்லாம் ஒலியெழுப்பாமல் அடங்கி உறங்கின. இந்த மிகப்பெரிய உலகத்து மனிதர்கள் எந்த இடைஞ்சலும் இன்றி துஞ்சுகின்றார்கள். நான் மட்டும் துயிலின்றி தவிக்கிறேனே!

  இப்போது தமிழில் கிடைத்ததில் பழைய இலக்கியங்கள் கடைச்சங்க இலக்கியங்கள். இவைகளுக்கு முன்னால் எழுதப்பட்டு காணமல் போன இலக்கியங்களிலும் காதலர்க்கள் தூக்கமில்லாமல் தவிப்பது உறுதியாக எழுதப்பட்டிருக்கும்.

  தீர்த்தக்கரையினிலே…. தெற்கு மூலையில்… செண்பகத் தோட்டத்திலே….

  ஊருசனம் தூங்கிருச்சே பாடலின் சுட்டி – http://youtu.be/GuIAzKphNY4
  தீர்த்தக்கரையினிலே பாடலின் சுட்டி – http://youtu.be/V43cycEi3Gw

  அன்புடன்,
  ஜிரா

  105/365

   
  • amas32 2:16 pm on March 16, 2013 Permalink | Reply

   பாலிருக்கும், பழமிருக்கும் பசியிருக்காது, பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது. இதுவும் இனிமையான ஒரு காதல் தவிப்பில் தூக்கத்தை துறந்த நிலையைச் சொல்லும் அழகிய பாடல்.

   நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் இரண்டும் பாடலகளும் அற்புதம். இரண்டும் இசையமைப்பு மற்றும் பாடல் வரிகளின் சிறப்பினாலும் இங்கே பதிவில் படித்தவுடன் காதில் ஆடோமாடிக்காக ஒலிக்கிறது. ஈஸ்பெஷலி ஊரு சனம் தூங்கிருச்சு such a haunting melody. Kudos to the team!

   amas32

  • anonymous 12:13 am on March 17, 2013 Permalink | Reply

   //சொல் அவிந்(து) இனிது அடங்கினரே//

   ஒருவருக்கு நல்ல தூக்கம் எப்போ வரும்?
   = “சொல் அவிந்தா”, அப்போ தான் வரும்
   = இந்த உளவியல் காட்டிக் குடுக்குது சங்கத் தமிழ்

   “சொல் அவிந்து” = வீரியம் மிக்க வரி;
   அதென்ன “அவிந்து”? ஒரு சொல்லு எப்படி அவியும்?

   “அவியல்”, பொரியல் அப்படி-ங்கறோம்;
   அவியல் செஞ்சிப் பாத்து இருக்கீகளா? = நல்லா வேகும்; ஆனா கொதிக்க விடக் கூடாது;

   அத்தினி காயும் கொட்டி, சிறு தீயில், வெந்து வெந்து அவியும்; தண்ணி ரொம்ப விடக் கூடாது; கொதிச்சாக் கூழ் ஆயீரும்!
   அவிந்து அவிந்தே, பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், தயிரு-ன்னு கொட்டிக் கிளறி எறக்கிருவாங்க;

   இப்பிடிச் சிறு தீயில், உள்ளுக்குள்ளேயே வெந்து வெந்து “அவிவது” போல் = சொல் “அவிந்து”

   மனசுக்குள்ள என்னென்னமோ இருக்கு;
   அவனுக்கு எப்படிப் புரிய வைப்பேன்? -ன்னு விதம் விதமா நினைச்சிப் பாக்கும்; உள்ளுக்குள்ளயே சொல்லிப் பார்க்கும் மனசு;

   ஆனா, எதை-ன்னு சொல்லுறது? = உணர்ச்சி? காதல்? வலி? அன்பு? குணம்? இன்பம்?
   ஒரு அவியல் காய்கறிக் கலவை போலத் தான்!

   இப்படிச் சொல்லலாமோ? இப்படிப் புரிய வைக்கலாமோ? -ன்னு சிறு தீயில், உள்ளுக்குள்ளேயே வெந்து வெந்து “அவியும்”;
   ஆனா இப்படியெல்லாம் மனசு நெனச்சதை, வாய் சொல்லாது; கோபத்தில் கொதிக்காது; அன்பால் அவிஞ்சி மட்டுமே போகும்!
   (அவனாப் புரிஞ்சிக்கிட்டாத் தான் உண்டு)

   அதான் “சொல் அவிந்து” -ன்னு ஒத்த வரி; ரொம்ப நுண்ணியல் சங்கத் தமிழ்!
   காதலிச்சி இருந்தாத் தான், சங்கத் தமிழ் வரிகளை, (சு)வாசிக்க முடியும்!

   • anonymous 12:38 am on March 17, 2013 Permalink | Reply

    இப்போ முழுக் கவிதையும் நேராவே படிச்சி பாருங்க; தெரியும்;

    //சொல் அவிந்(து) + இனிது அடங்கினரே//
    “உள்ளுக்குள்ளயே சொல்லு அவிதல்” = இது அடங்கினாத் தான், தூக்கம் வரும்!
    இல்லீன்னா, ஒடம்பு தான் தூங்கும், உள்ளம் தூங்காது; மறு நாளும் சோர்வு தான்!

    இப்போ நிறுத்திப் படிங்க!

    1) நள் என்றன்றே யாமம்;
    2) சொல் அவிந்(து) இனிது அடங்கினரே மாக்கள்;
    3) முனிவு இன்று நனந்தலை உலகமும் துஞ்சும்;
    4) ஓர் யான் மன்ற துஞ்சாதேனே!

    நள் = நடு (நண்-பகல், நள்-இரவு)
    யாமம் = தொன்மையான தமிழ்ச் சொல்லு; அதை “ஜா”மம் ன்னு மாத்தி ஆக்கிப்புட்டாங்க:(
    வைகறை/காலை – பகல்/எற்பாடு – மாலை/யாமம் = தமிழ்த் திணை இலக்கணத்தில், 6 சிறுபொழுதுகள்!

    நள் என்றன்றே யாமம்
    =பேச்சுத் துணையும் இல்லாத தனிமை; அதனால் இரவே அவ கிட்ட பேசுதாம்; நள் என்றன்றே; “நடு வந்துருச்சி்; போய்த் தூங்கு”

    சொல் அவிந்(து) இனிது அடங்கினரே மாக்கள்
    =மத்தவங்களுக்கு மனசுக்குள்ள சொல்ல ஒன்னும் இல்ல;
    =சொல்லு அவிந்து + அடங்கிட்டாங்க; அதனால் “இனிது” உறங்குறாங்க!

    (நல்லாச் சாப்பிடறவனைப் பார்த்தா மகிழ்ச்சி (அ) சிரிப்பு (அ) ஏளனம் தான் வரும்;
    ஆனா நல்லாத் தூங்குறவனைப் பார்த்தா?
    சிலருக்குப் பொறாமை கூட வரும்:) ’எப்பிடி மாடு மாதிரி தூங்குறான் பாரு’:))

    உலகம் ஏனோ தூங்குபவர்களைப் பார்க்கக் கூடாது-ன்னு சொல்லி வச்சிருக்கு;
    ஆனா காதலி/ காதலன் வியர்வை அடங்கித் தூங்கும் சுகத்தைப் பாக்குறதே ஒரு இன்பம்!

   • anonymous 1:05 am on March 17, 2013 Permalink | Reply

    முனிவு இன்று நனந்தலை உலகமும் துஞ்சும்;
    = முனிதல் -ன்னா கோபம்; (வடமொழி ’முனி’வர் வேறு; தமிழில் அடிகள்)

    *முந்தைய வரியில், உறவுக்காரங்கள் தூங்குறதைப் பாக்குறா;
    *இந்த வரியில், மத்த உயிரினங்களையும் பாக்குறா;

    உறவு/ மக்கள் = திட்டி இருப்பாங்க போல; ஆனா வலி உணராது, திட்டுன சொல்லெல்லாம் அவிந்து+அடங்கி, “இனிது” தூங்குறாங்க!

    மான், முயல், பறவை, அட.. செடி கூடத் தூங்குது = முனிவு இன்றி (கோவம் இல்லாம) தூங்குது;
    வேட்டையை இன்னிக்கித் தவற விட்டுட்டோமே -ன்னு, அன்றைய கோப தாபம் இல்லாமத் தூங்குதுகள்;

    (இராத்திரியில், கிராமத்தில்/ வீட்டில் உள்ள மாடோ/ கோழியோ/ நாயோ தூங்குவதைப் பாத்து இருக்கீங்களா?
    அவசியம் பாருங்க; எல்லாரும் தூங்கி, நீங்க மட்டும் ஒரு நடை பாத்துக்கிட்டே வந்தாத் தெரியும்; itz a different experience)

    ***ஓர் யான் மன்ற துஞ்சாதேனே = பாவி மனம் (மட்டும்) தூங்கலியே!

    யான் -ன்னாலே ஒருமை தானே? அப்பறம் என்ன “ஓர் யான்”?

    “நான்” புத்தகம் படிச்சேன்-ன்னு சொல்லுவீங்களா?
    “ஒரு நான்” புத்தகம் படிச்சேன்-ன்னு சொல்லுவீங்களா?:)

    நானொருவன் -ன்னு சொல்லலாம்; ஆனா “ஒரு நான்” -ன்னு சொல்லும் வழக்கம் இல்ல!
    அப்பறம் எப்படி “ஓர் யான்”?:)

    நாங்க ரெண்டு பேரும் “ஓர் உயிர்” தான்!
    ஆனா, இந்த “ஓர்-உயிரி”லும், “ஓர்-யான்” மட்டும் தான் தூங்காமத் தவிக்குது;
    “இன்னொரு யான்”, பாவி, இந்நேரம் நல்லாத் தூங்கினாலும் தூங்கியிருக்கும்:)

    இதான் காதல்!
    காதலர்களுக்குப் புரியும்;

 • G.Ra ஜிரா 10:23 am on February 13, 2013 Permalink | Reply  

  ஒரு பாடல், இரு கவிஞர்கள் 

  சில நாட்களுக்கு முன்னர் நண்பர் நாகா ஒரே கவிஞர் படத்தின் எல்லாப் பாடல்களையும் எழுதப் போவது பற்றிய பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவிலேயே பலர் விதவிதமான கருத்துகளைத் தெரிவித்திருந்தார்கள்.

  ஒரு படத்தில் எல்லாப் பாடல்களையும் ஒரே கவிஞரே எழுதினால் நன்றாக இருக்கும் என்று எண்ணம் எழுந்தது இருக்க, ஒரே பாடலை இரண்டு கவிஞர்கள் எழுதிய கதையெல்லாம் நடந்திருக்கிறது.

  பொதுவாக இரு மொழிப் பாடல்கள் வருகையில் இரண்டு கவிஞர்கள் எழுதுவார்கள். ஆங்கில வரிகளைப் பெரும்பாலும் ராண்டார் கையும் தமிழ் வரிகளைத் தமிழ்க் கவிஞர் ஒருவரும் எழுதியிருப்பார். அதே போல இந்தி வரிகள் என்றால் பி.பி.ஸ்ரீநிவாசைத்தான் கூப்பிடுவார்கள்.

  தவப்புதல்வன் படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விசுவநாதன் இசையில் வந்த “உலகின் முதலிசை தமிழிசையே” என்ற பாடலின் தமிழ் வரிகளைக் கவிஞர் கண்ணதாசன் எழுதினார், அதே பாடலில் வரும் இந்துஸ்தானி இசைக்கான வரிகளை பர்கத் சைபி எழுதினார்.

  அதே போல வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் ”தூ ஹே ராஜா மே ஹூ ராணி” என்ற இந்திப் பாட்டை பி.பி.ஸ்ரீனிவாஸ் எழுத கடைசியாக நான்கு வரிகளைத் தமிழில் கண்ணதாசன் எழுதினார். நான்கு வரிகளை எழுதுவதா என்றெல்லாம் யோசிக்கவில்லை கண்ணதாசன். அந்த நான்கு வரிகளில் பாட்டையே பிரமிப்பாக்கி விட்டார். நல்ல கவிஞன் ஒரு வரியில் கூடச் சொல்ல வந்ததைச் சொல்லி தன்னையும் நிலை நிறுத்துவான் என்பதே உண்மை.

  சூரியகாந்தி படத்தில் தமிழும் ஆங்கிலமும் கலந்த பாடல் உண்டு. “நான் என்றால் அது நானும் அவளும்” என்று தமிழ் வரிகளை வாலி எழுத, ஆங்கில வரிகளை ராண்டார்கை எழுதினார். இது எஸ்.பி.பாலசுப்ரமணியமும் ஜெயலலிதாவும் இணைந்து பாடிய பாடல்.

  இந்தப் பாடல்கள் எல்லாம் இரு மொழிப் பாடல்கள். இரண்டு கவிஞர்கள் இருவேறு மொழிகளில் எழுதியது இயல்பானது. ஒரே மொழிப்பாடலை இரண்டு கவிஞர்கள் எழுதியிருக்கிறார்களா? எழுதியிருக்கிறார்கள். மூன்று எடுத்துக்காட்டுகளைச் சொல்ல முடியும். ஆனால் மூன்றிலும் கவியரசர் கண்ணதாசனின் பங்கு இருக்கிறது.

  வியட்னாம் வீடு படத்தில் ”உன் கண்ணில் நீர் வழிந்தால்” பாடலின் தொடக்க வரிகள் பாரதியாரால் எழுதப்பட்டவை. அந்த வரிகளை எடுத்துக் கொண்டு சரணத்தை கண்ணதாசனிடம் எழுதச் சொன்னார்களாம். அவரும் எழுதிக் கொடுத்தார். ஆனால் பாடலை எழுதியவர் என்று தன்னுடைய பெயரைப் போடக்கூடாது என்று சொல்லிவிட்டார்.

  இந்த எடுத்துக்காட்டு செல்லாது என்கின்றீர்களா? வாருங்கள். இன்னும் இரண்டு சொல்கிறேன்.

  தேவரின் துணைவன் திரைப்படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் முருகனைப் புகழ்ந்து பாடும் “மருதமலையானே நாங்கள் வணங்கும் பெருமானே” என்ற பாடலின் முதல் பாதியை மருதகாசியும் இரண்டாம் பாதியைக் கண்ணதாசனும் எழுதினார்கள். இருவருமே முழுதாகத் தானே எழுதுவேன் என்று சண்டையிடவில்லை.

  அடுத்த எடுத்துக்காட்டு சிவப்பு ரோஜாக்கள். ”மின்மினிக்குக் கண்ணில் ஒரு மின்னல் வந்தது” அற்புதமான பாடல். அந்தப் பாடலின் பல்லவியை கவியரசர் எழுத சரணங்களை கங்கையமரன் எழுதினாராம். இருவரையும் நம்மால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. கவியரசர் எழுதிய பல்லவிக்குச் சரணம் எழுதி அதைப் பிரபலமாகவும் ஆக்கிய கங்கையமரனையும் பாராட்டியே ஆக வேண்டும்.

  உலகின் முதலிசை தமிழிசையே (தவப்புதல்வன்) – http://youtu.be/pLNYJ7uCyyM
  தூ ஹே ராஜா மே ஹூ ராணி (வறுமையின் நிறம் சிவப்பு) – கிடைக்கவில்லை
  நான் என்றால் அது நானும் அவளும் (சூரியகாந்தி) – http://youtu.be/lWH2aplXjG0
  உன் கண்ணில் நீர் வழிந்தால் (வியட்னாம் வீடு) – http://youtu.be/NC3QQL3cMlg
  மருதமலையானே (தேவரின் துணைவன்) – http://youtu.be/aeGUa8rg3nM
  மின்மினிக்குக் கண்ணில் (சிவப்பு ரோஜாக்கள்) – http://youtu.be/Yoo_WkRIgYU

  அன்புடன்,
  ஜிரா

  074/365

   
  • Rajnirams 10:44 am on February 13, 2013 Permalink | Reply

   தவப்புதல்வன்-உலகின் முதலிசை பாடலை கண்ணதாசனுடன் எழுதியவர் பர்கத் சைபி என்ற இஸ்லாமியர்.அதே படத்தில் love is fine darling பாடலை வாலி-ராண்டார்கை எழுதியுள்ளனர்.அதே போல ஊருக்கு உழைப்பவன் படத்தில் it is easy to fool you பாடலும் அவர்களே எழுதியவை.(தங்கள் முந்தைய பதிப்பில் திருநாள் வந்தது -காக்கும் கரங்கள்
   பாடலும் வாலி எழுதியதே-கண்ணதாசன் அல்ல).நன்றி.

   • GiRa ஜிரா 8:38 am on February 15, 2013 Permalink | Reply

    இந்த மாதிரிப் பிழைகளத் தவிர்க்கப் பாக்கிறோம். ஆனா வந்தா எடுத்துச் சொல்லி நீங்க தொடர்ந்து இப்பிடியே உதவிகளைச் செய்யனும். 🙂

  • ravi_aa 1:00 pm on February 13, 2013 Permalink | Reply

   thanks !

  • amas32 (@amas32) 5:28 pm on February 13, 2013 Permalink | Reply

   How do you get such in depth information! ஒவ்வொரு முறை பதிவைப் படிக்கும் பொழுதும் அசந்து போகிறேன்.

   உண்மையாகவே அகங்காரம் அற்ற ஒரு கலைஞனால் மட்டுமே இப்படி செயல் பட முடியும். மேலும் வெவ்வேறு school of thoughtல் இருக்கும் இரு வேறு கவிஞர்கள் ஒரு எண்ணத்தை அல்லது ஒரு சிச்சுவேஷனைப் பிரதிபலிக்கும் ஒரு பாடலைப் பங்கு போட்டு எழுதுவது எளிதன்று. அதுவும் அவர்களது அசாத்தியத் திறமையை தான் காட்டுகிறது.

   amas32

   • GiRa ஜிரா 8:37 am on February 15, 2013 Permalink | Reply

    உண்மைதானம்மா. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு எண்ணவோட்டம். அது ரெண்டையும் கலக்குறது கடினம். சமைக்கும் போது வேற யாரும் உதவிக்கு வந்தாலே பல பெண்களுக்குக் கஷ்டம். நானே பண்ணிக்கிறேன். அதுதான் வசதின்னு சொல்லிருவாங்க. அப்படியில்லாம சேந்து செய்றதும் ஒரு திறமைதானே.

  • Mohanakrishnan 7:53 pm on February 13, 2013 Permalink | Reply

   மண்ணில் இந்த காதல்’ கங்கை அமரன் எழுதி பாவலர் வரதராசன் பெயரில் வெளிவந்த பாடல் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

   • என். சொக்கன் 12:10 pm on February 14, 2013 Permalink | Reply

    Yes

   • GiRa ஜிரா 8:36 am on February 15, 2013 Permalink | Reply

    பாவலர் எழுதினார் எப்படியிருக்கும் என்று நினைத்து எழுதினாராம். அதனால்தான் பாவலர் பெயர். உன் கண்ணில் நீர் வழிந்தால் பாட்டில் பாரதியைப் போடச்சொன்னது போலத்தான். கங்கையின் மரியாதை அண்ணனுக்கு என்றால் கண்ணதாசனின் மரியாதை பாட்டு மன்னனுக்கு.

 • G.Ra ஜிரா 10:16 am on January 11, 2013 Permalink | Reply  

  கன்னத்தில் முத்தமிட்டால் 

  கொஞ்ச வேண்டும் என்ற சூழல் வந்தால் கன்னத்தைத் தொடாத கவிஞன் இல்லை.

  கண்ணம்மா என் குழந்தை என்று எழுதிய பாரதியும் குழந்தையின் கன்னத்தில் முத்தமிடுவது கள்வெறி கொடுக்கும் மயக்கத்தைக் கொடுப்பதைக் குறிப்பிடுகிறான்.

  சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா

  கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி
  படம் – நீதிக்கு தண்டனை
  இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

  பாரதி இப்படிச் சொல்லியிருக்க, கண்ணாதாசனா கன்னதாசனா என்று ஐயத்தை உண்டாக்கும் வகையில் பாடல்களை எழுதியிருக்கிறார். கன்னம் என்பதே தித்திப்பது என்பது அவர் கருத்து.

  முத்துக்களோ கண்கள்
  தித்திப்பதோ கன்னம்
  படம் – நெஞ்சிருக்கும் வரை
  இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

  பார்க்கப் பார்க்க மின்னும் கன்னம் பருவப் பெண்ணின் கன்னம் என்பதை ரசித்தவர்தானே கண்ணதாசன். அதுதான் இந்தப் பாடலில் இப்படி வெளிப்படுகிறது.

  பால் வண்ணம் பருவம் கண்டு
  வேல் வண்ணம் விழிகள் கண்டு

  கன்னம் மின்னும் மங்கை வண்ணம்
  படம் – பாசம்
  இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

  தித்திக்கும் கண்ணம் என்று சொல்லியாகி விட்டது. ஆனால் கன்னம் ஒரு கிண்ணம் என்றும் அந்தக் கிண்ணத்திலே கறந்த பாலின் சுவையிருக்கும் என்றும் சொல்லியிருக்கிறார் கவியரசர்.

  விழியே விழியே உனக்கென்ன வேலை
  விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை

  கன்னம் என்னும் ஒரு கிண்ணத்திலே
  கறந்த பாலிருக்கும் வண்ணத்திலே
  படம் – புதிய பூமி
  இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

  தங்கமானது கன்னம் என்றால் காதல் விளையாட்டில் அதில் சேதாரம் இருக்கும் என்பது தெரிந்தவரும் அவர்தான். அதனால்தான் கன்னத்தில் என்னடி காயம் என்று குறும்போடு கேட்கிறார்.

  கன்னத்தில் என்னடி காயம்
  இது வண்ணக்கிளி செய்த மாயம்
  படம் – தனிப்பிறவி
  இசை – திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்

  நாணத்தாலே கன்னம் மின்ன மின்ன
  நடிக்கும் நாடகம் என்ன
  படம் – சிஐடி சங்கர்
  இசை – வேதா

  நாணத்தில் மின்னும் கன்னம் காதல் சோகத்திலும் கண்ணீர் சேர்ந்து மின்னும் என்றும் தெரிந்து வைத்திருக்கிறார் கண்ணதாசன்.

  நினைவாலே சிலை செய்து
  உனக்கான வைத்தேன்.. திருக்கோயிலே ஓடி வா
  ..
  கண்ணீரிலே நான் தீட்டினேன்
  கன்னத்தில் கோலங்கள்
  படம் – அந்தமான் காதலி
  இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

  கவியரசர் மட்டுந்தானா இப்படி? அடுத்து வந்த வாலியின் கை வண்ணத்து கன்னத்து அட்டகாசங்களைப் பார்ப்போம்.

  கன்னத்தை அத்திப்பழம் என்று உவமிக்கும் வாலி.. அந்தப் பழத்தைக் கிள்ளி விடவா என்று கேட்கிறார். மெல்லிய நண்டின் கால் பட்டாலே சிதைந்து போகும் மென்மையான பழம் அத்தி என்று அகநானூறு சொல்கிறது. கன்னத்தை அப்படியொரு பழத்துக்கு ஒப்பிடுவதும் அழகுதான்.

  வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ
  வஞ்சிமகள் வாய்திறந்து சொன்ன மொழியோ

  அத்திப்பழக் கன்னத்திலே கிள்ளி விடவா
  படம் – தெய்வத்தாய்
  இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

  அத்திப் பழம் என்று உவமித்த அதே வாலி கன்னத்தை மாம்பழம் என்றும் சொல்லத் தவறவில்லை. மரத்தில் பழுக்கும் அந்த மாம்பழங்களை விட காதலியின் கன்ன மாம்பழங்களைத்தான் காதலன் விரும்புவானாம்.

  நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்
  அவன் மாம்பழம் வேண்டுமென்றான்
  அதைக் கொடுத்தாலும் வாங்கவில்லை
  இந்தக் கன்னம் வேண்டும் என்றான்
  படம் – எங்க வீட்டுப் பிள்ளை
  இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

  பழம் என்று சொன்னால் அணில் கடித்து விடுமோ என்று நினைத்தாரோ என்னவோ… தாமரைப் பூவைப் போன்ற கன்னங்கள் என்றும் வர்ணித்து விட்டார். அந்தத் தாமரைக் கன்னம் என்னும் கிண்ணத்தில்தானே தேன் இருக்கிறது.

  தாமரைக் கன்னங்கள்
  தேன்மலர்க் கிண்ணங்கள்
  படம் – எதிர் நீச்சல்
  இசை – வி.குமார்

  கண்ணதாசன் கன்னத்தில் என்னடி காயம் என்று கேட்டால்… வாலியோ கன்னத்து முத்தங்களால் கன்னிப் போகும் கன்னங்களே அத்தானின் அன்புக்கு அடையாளச் சின்னங்கள் என்று அடித்துச் சொல்கிறார்.

  அத்தானின் முத்தங்கள் அத்தனையும் முத்துக்கள்
  அழகான கன்னத்தில் அடையாளச் சின்னங்கள்
  படம் – உயர்ந்த மனிதன்
  இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

  நறுந்தேனை கிண்ணத்தில் வடித்து எடுத்து வருகிறாள் ஒருத்தி. அதெல்லாம் எதற்கு? உன் கன்னத்தில் தேன் குடித்தால் ஆயிரம் கற்பனை ஓடி வராதா என்று ஏங்குகிறது கவிஞனின் உள்ளம்.

  கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன்
  எண்ணத்தில் போதை வர எங்கெங்கோ நீந்துகிறேன்
  கன்னத்தில் தேன் குடித்தால் கற்பனை ஓடி வரும்
  படம் – இளமை ஊஞ்சலாடுகிறது
  இசை – இசைஞானி இளையராஜா

  கண்ணன் ஒரு கைக்குழந்தை
  கண்கள் சொல்லும் பூங்கவிதை
  கன்னம் சிந்தும் தேனமுதை
  படம் – பத்ரகாளி
  இசை – இசைஞானி இளையராஜா

  கன்னத்தை பழமென்றும் பூவென்றும் வர்ணிக்க கண்ணதாசனாலும் வாலியாலும் மட்டுந்தான் முடியுமா? இதோ இருக்கிறார் வைரமுத்து.

  தொட்டுரச தொட்டுரச மணக்கும் சந்தனம். அப்படியான சந்தனக் கிண்ணமடி உன் கன்னம். அதைத் தொட்டுரசி தொட்டுரசி மணக்குதடி என் கைகள் என்று கவிதையை அடுக்குகிறார்.

  ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
  தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்
  படம் – சிவப்புமல்லி
  இசை – சங்கர் கணேஷ்

  தொட்டுப் பார்த்தால் பளபளப்போடு வழவழக்கும் பட்டை கன்னத்திற்கு ஒப்பிடாமல் போவாரோ கவிஞர்.

  பட்டுக் கன்னம்
  தொட்டுக் கொள்ள
  ஒட்டிக் கொள்ளும்
  படம் – காக்கிச்சட்டை
  இசை – இசைஞானி இளையராஜா

  கண்ணுக்கு மையழகு.. என்று சொல்லும் போது கன்னத்தில் குழியழகு என்று எழுதிய வைரமுத்து ஒரு கிராமத்துக் காதலைச் சொல்லும் போது கன்னத்தில் கன்னம் வைத்த காதலனைப் பற்றியும் சொல்கிறார்.

  காக்கிச்சட்ட போட்ட மச்சான்
  கன்னத்திலே கன்னம் வெச்சான்
  படம் – சங்கர் குரு
  இசை – சந்திரபோஸ்

  தன்னுடைய குழந்தை கன்னத்தில் முத்தமிட்டால் நெஞ்சில் ஜில்ஜில்ஜில்ஜில் என்று எழுதியதும் இதே வைரமுத்துதான். ஆனாலும் காதல் குறும்பில் கன்னத்தில் முத்தமிட வரும் காதலனின் கன்னத்தில் தேளைப் போலக் கொட்டுவேன் என்றா எழுதுவது! உயிர் போக்கும் வலி அல்லவா அது!

  நேந்துக்கிட்டேன் நேந்துக்கிட்டேன்
  நெய்விளக்க ஏந்திக்கிட்டேன்
  உன்னோட கன்னத்திலே முத்தம் குடுக்க
  ..
  கன்னத்திலே தேளப் போலே கொட்டி விடுவேன்
  படம் – ஸ்டார்
  இசை – இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்

  அன்புடன்,
  ஜிரா

  041/365

   
  • niranjanbharathi 10:24 am on January 11, 2013 Permalink | Reply

   தேன் கன்னம், மதுக் கன்னம் , சந்தனக் கன்னம் ஆகியவற்றோடு சேர்ந்து இது தான் “ஜீரா” கன்னம் போலும். ஜாமூனைச் சூழந்து நிற்கும் ஜீரா 🙂 🙂

  • amas32 (@amas32) 2:43 pm on January 13, 2013 Permalink | Reply

   What a myriad of songs with cheeks alone! ;-)) You are one genius only 🙂

   amas32

  • தேவா.. 3:41 pm on January 13, 2013 Permalink | Reply

   கன்னங்களுக்கு பல உவமைகள்…..கண் பட்டிருச்சு ஜீரா…. 🙂

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel