Updates from October, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • என். சொக்கன் 8:28 pm on October 22, 2013 Permalink | Reply  

    மெல்ல ஊர்ந்து ஊர்ந்து… 

    இன்றைக்கு எதைப்பற்றி நாலு வரி நோட் எழுதலாம் என்று நெடுநேரம் யோசித்துக்கொண்டிருந்தேன். கம்ப்யூட்டர்மீது ஓர் எறும்பு ஊர்ந்தது. இதைப்பற்றி எழுதினால் என்ன?

    சட்டென்று ‘ருக்குமணி ருக்குமணி’ பாடல்தான் மனத்தில் ஓடியது. ‘சின்னஞ்சிறு பொண்ணுக்கு ஆசை ரொம்ப இருக்கு, சீனிக்குள்ள எறும்பு மாட்டிகிட்ட கணக்கு’ என்று அழகாக முதலிரவுக் காட்சியைப் பதிவு செய்திருப்பார் வைரமுத்து.

    வாலிக்கும் எறும்பு பிடிக்கும், அதைவிட, வார்த்தை விளையாட்டு பிடிக்கும், வைரமுத்துவைப்போலவே அவரும் சர்க்கரையாகக் காதலையும், எறும்பாகக் காதலர்களையும் வர்ணித்து ‘சக்கர இனிக்குற சக்கர, அதில் எறும்புக்கு என்ன அக்கறை?’ என்று கேட்பார் குறும்புடன்.

    வைரமுத்துவுக்குமட்டும் குறும்புத்தனம் இல்லையா என்ன? ‘கண்ணா என் சேலைக்குள்ளே கட்டெறும்பு புகுந்துடுச்சு, எதுக்கு?’ என்று காதலியைக் கேட்கவைத்து, ‘கண்ணே, நீ வெல்லமுன்னு கட்டெறும்பு தெரிஞ்சுகிச்சு’ என்று காதலனைப் பதில் சொல்லச்செய்வார்.

    வாலி இன்னொரு படி மேலே போய், கட்டெறும்பு காதலியைமட்டுமா? அவள் பெயரைக்கூட மொய்க்கும் என்பார், ‘நாட்குறிப்பில் நூறுமுறை உந்தன் பெயரை எழுதும் எந்தன் பேனா, எழுதியதும் எறும்பு மொய்க்கப் பெயரும் ஆனதென்ன தேனா!’

    காதலி சம்மதம் சொல்லிவிட்டால்தான் வெல்லம், இல்லாவிட்டால், கண்ணாடி ஜாடிக்குள் இருந்து கைக்கு எட்டாத குலாப் ஜாமூன். ‘இமய மலை என்று தெரிந்தபின்னும் எறும்பின் ஆசையோ அடங்கவில்லை’ என்று வைரமுத்துவின் வரி.

    எறும்பு காதலுக்குமட்டுமல்ல, மற்ற விஷயங்களுக்கும் உவமையாகும், ‘ஈ, எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே’ என்று கடவுளிடம் வேண்டும் சின்னப் பிள்ளைக்கு வாலி எழுத, ‘நம்பிக்கையே நல்லது, எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது’ என்பார் வைரமுத்து.

    என்ன திரும்பத் திரும்ப வாலி, வைரமுத்து? மற்ற கவிஞர்கள் யாரும் எறும்பை எழுதவில்லையா?

    ஏன் இல்லாமல்? ‘எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா’ என்று அதிரவைத்து, ‘என் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா’ என்று தத்துவம் சொன்னாரே கண்ணதாசன்!

    இழிவாக நினைக்காதீர்கள், சிறு எறும்பும் கவி எழுத உதவும்!

    ***

    என். சொக்கன் …

    22 10 2013

    324/365

     
    • amas32 9:49 pm on October 22, 2013 Permalink | Reply

      a very different 4varinote from you! எறும்பூர கல்லும் தேயும், அது போல கொஞ்சம் கொஞ்சமாக காதலனும் காதலியின் மனதை விடா முயற்சியால் மாற்றிவிடலாம். அதற்கும் அந்த எறும்பு பழமொழி உதவுகிறது 🙂

      சின்ன ராசாவே சித்தெறும்பு என்னைக் கடிக்குது, உன்னை சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது பாடலையும் இந்த வரிசையில் சேர்த்துக் கொள்ளவும் 🙂 http://www.youtube.com/watch?v=0V7ezrT_d94

      amas32

    • rajinirams 4:51 pm on October 23, 2013 Permalink | Reply

      அடடா.கலக்கிட்டீங்க. எறும்பு பற்றிய பாடல்களை-நினைவு வைத்து தொகுத்தது-சான்ஸே இல்லை.நம்பிக்கையே நல்லது எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது-அகரம் இப்போ சிகரம் ஆச்சு-என்னைக்கவர்ந்த வைர வரிகள்.கஜேந்திரா படத்தில் பா.விஜய்யின் பாடல் ஒன்று-எறும்பு ஒண்ணு என்னை வந்து என்னென்னமோ பண்ணுது…நன்றி.

  • G.Ra ஜிரா 8:26 pm on October 11, 2013 Permalink | Reply  

    குடும்பம்: ஒரு கதம்பம் 

    70களிலும் 80களிலும் வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் தவிர்க்க முடியாத அம்சமாக விளங்கியவை குடும்பப் பாடல்கள்.

    இந்தப் பாடல்களில் குடும்பப் பாசம் முன்னிறுத்தப் படும். நேர்மையும் நல்ல பண்புகளும் ஒழுக்கம் போற்றப் படும். பொதுவாகவே ஒரே பாடல் மகிழ்ச்சியோடு முதலில் சோகத்தோடு பிறகும் பாடப்படும்.

    மகிழ்ச்சியாகப் பாடிய பின்னர் குடும்பம் பிரியும். சோகமாகப் பாடிய பிறகு சேர்ந்துவிடும். இது படம் பார்க்கும் சராசரி ரசிகனுக்கும் தெரிந்த உலக உண்மை.

    சோகமான பாடலைப் பாடினால் இளகிய மனம் உடையவர்கள் அழுது விடவும் வாய்ப்புண்டு. ஆகையால்தான் இந்த மாதிரி பாடல்களைக் கேட்கும் போது கையில் கைக்குட்டை…. இல்லை இல்லை. கைத்துண்டு இருந்தால் நல்லது.

    குடும்பப் பாட்டு என்றதும் முதலில் எனக்குத் தோன்றியது நாளை நமதே படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல் தான்.

    அன்பு மலர்களே
    நம்பி இருங்களேன்
    தாய் வழி வந்த சொந்தங்கள் எல்லாம்
    ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே

    இந்தப் பாடலைப் பாடி முடித்ததும் குடும்பம் முழுவதுமே பிரிந்து விடும். குழந்தைகள் பெரியவர்களாகித்தான் ஒன்று சேர்வார்கள்.

    இன்னொரு பாடல் உண்டு. இதுவும் குடும்பப் பாட்டுதான். ஆனால் வளர்ந்தவர்களின் குடும்பப்பாட்டு. அண்ணன் தம்பிகள் பாடும் பாட்டு. மகிழ்ச்சியாக பாட்டைப் பாடிய பின்னால் குடும்பத்தில் சண்டை வந்து அவர்களும் பிரிந்துதான் போனார்கள். படம் முடியும் முன்னர் மூத்த அண்ணன் இறக்கும் போது ஒன்று சேர்வார்கள்.

    முத்துக்கு முத்தாக
    சொத்துக்கு சொத்தாக
    அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்
    கண்ணுக்குக் கண்ணாக
    அன்பாலே இணைந்து வந்தோம்
    ஒன்னுக்குள் ஒன்னாக

    இவர்கள் அண்ணன் தம்பிகள் என்றால், அண்ணனுக்கும் தங்கைக்கும் கூட குடும்பப் பாட்டு வைத்தது தமிழ் சினிமா.

    பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த
    ஊர்வலம் வருகின்றது
    அன்பு பொங்கிடும் அன்புத் தங்கையின் நெற்றியில்
    குங்குமம் ஜொலிக்கின்றது

    சினிமா வழக்கப்படி அண்ணனும் தங்கையும் பிரிந்து விடுகிறார்கள். பின்னொரு காட்சியில் அண்ணன் அந்தப் பாடலை ஒரு திருமண வரவேற்பில் பாடும் போது காலில்லாத தங்கை நடக்க முடியாமல் நடந்து ஓடமுடியாமல் அழ முடியாத அளவுக்கு அழுது…. கடைசியில் அண்னனைக் காண முடியாமல் போன போது திரையரங்குகளில் சிந்திய கண்ணீர் ஆற்றிலேயே ஆடிப்பெருக்கு கொண்டாடியிருக்கலாம்.

    கிட்டத்தட்ட இதே போல இன்னொரு குடும்பம். தாய் தந்தை இழந்து அனாதைகளான அக்காவும் தம்பிகளும். அவர்களுக்கும் ஒரு பாடல் எழுதினார் கலைஞர் கருணாநிதி.

    காகித ஓடம் கடலலை மேலே
    போவது போலே மூவரும் போவோம்

    இந்தப் படத்தில் முதலில் மகிழ்ச்சியாகவும் பிறகு சோகமாகவும் பாட மாட்டார்கள். முதலில் சோகமாகவும் அடுத்து பெரும் சோகமாகவும் பாடி படம் பார்த்த மக்களை கதறக் கதறக் கூக்குரலிட்டு அழவைத்ததை மறக்க முடியுமா? எப்போதோ பிரிந்து போன தம்பி குடிபோதையில் எதிரில் இருப்பது அக்கா என்று தெரியாமலே தவறிழைக்க நெருங்குவான். சோகத்தின் உச்சியில் அந்நேரம் அக்கா அந்தப் பாடலைப் பாட திருந்துகிறான் தம்பி. அரிவாள்மனையில் கழுத்தை அறுத்துக் கொண்டு குடும்பத்தை இணைக்கிறாள் அக்கா.

    இன்னொரு குடும்பப் பாடல் உண்டு. இந்தப் பாடல் நடிகர் திலகத்துக்கு. மகிழ்ச்சியான குடும்பம். சந்தர்ப்பத்தால் மூலைக்கொன்றாய் பிரிகிறது. பிறகென்ன… படம் முடியும் போது எல்லாம் சுபம்.

    ஆனந்தம் விளையாடும் வீடு
    இது ஆனந்தம் விளையாடும் வீடு
    நான்கு அன்பில்கள் ஒன்றான கூடு
    இது ஆனந்தம் விளையாடும் வீடு

    பிரிந்தால் குடும்பமாகத்தான் பிரிய வேண்டுமா? கணவனும் மனைவியும் பிரிந்தால்? நிறைமாதமாக இருக்கும் மனைவிக்கு கணவன் ஒரு பாடல் பாடுகிறான். அவன் பாடலைப் பாடிய வேளை இருவரும் பிரிய வேண்டியதாயிற்று.

    மலர் கொடுத்தேன்
    கை குலுங்க வளையலிட்டேன்
    மங்கை எந்தன் ராஜாத்திக்கு நானே
    இதுவொரு சீராட்டம்மா
    என்னையும் தாலாட்டம்மா

    பிரிந்த கணவன் காஷ்மிரில் இருக்க… மனைவி டில்லியில் இருக்க.. ஒரு தற்செயலான தொலைபேசி அழைப்பு இருவரையும் பேச வைக்கிறது.

    எதிர்முனையில் பேசுவது கணவன் என்று தெரிந்ததும் கே.ஆர்.விஜயா அதிர்ச்சியில் போனை கீழே போட்டு விடுவார்… அப்போது “சுமதீஈஈஈஈஈஈஈஈஈஈ” என்று நடிகர் திலகம் சிம்ம கர்ஜனை செய்யும் போது அடுத்த காட்சிக்காக வெளியே காத்திருந்தவர்கள் காதிலும் விழும். இந்தக் காட்சியில் கீழே விழுந்துவிட்ட கே.ஆர்.விஜயா கை நழுவவிட்ட தொலைபேசியை எடுப்பாரா இல்லையா என்ற அதிர்ச்சி தாங்காமல் திரையரங்கில் ஒருவருக்கு மாரடைப்பு வந்ததாகச் சொல்வார்கள்.

    தமிழ்த் திரைப்படத்தின் தன்மை மாறிக் கொண்டிருந்த எழுபதுகளின் இறுதியில் மிகப் பழம் பெருமை வாய்ந்த இயக்குனர் டி.ஆர்.சுந்தரம் ஒரு திரைப்படம் எடுத்தார். அந்தப் படத்திலும் ஒரு குடும்பப் பாட்டு. அவர்கள் குடும்பத்தோடு இன்னொரு உறுப்பினராக நிலா.

    வெண்ணிலா வெள்ளித்தட்டு
    வானிலே முல்லை மொட்டு

    இந்தப் படத்திலும் பிரிந்த அண்ணன் தம்பி தங்கைகள் படம் முடிவதற்கு முன்னால் குய்யோ முய்யோ என்று கதறிக் கொண்டு ஒன்று சேர்ந்தார்கள் என்றும் அவர்களின் மூத்த அண்ணன் உயிரைக் கொடுத்து மற்றவர்களைக் காப்பாற்றினான் என்றும் சொல்லி கிண்டலடிக்க விரும்பவில்லை.

    இது போன்ற குடும்பப் பாட்டுகள் குறைந்து விட்ட காலத்தில் ஒரு குடும்பப் பாட்டு வந்தது. அதுவும் கலைப்பட இயக்குனர் ஒருவரால் கொண்டுவரப்பட்டது. பாலுமகேந்திரா இயக்கிய நீங்கள் கேட்டவை திரைப்படப் பாடலைத்தான் சொல்கிறேன்.

    சிறுவயதில் அம்மா பாடிய பாட்டை நினைவில் வைத்துக் கொண்டு பின்னாளில் அண்ணனும் தம்பியும் சேர்கிறார்கள். அம்மாவைக் கொன்றவனைப் பழி வாங்குகிறார்கள்.

    பிள்ளை நிலா
    இரண்டும் வெள்ளை நிலா
    அலை போலவே
    மனம் விளையாடுதே

    இதில் அம்மாவாக பாடும் எஸ்.ஜானகி குரலில் பிள்ளை நிலா என்றும் மகனுக்காக ஏசுதாஸ் அவர்கள் பாடும் போது பில்லை நிலா என்றும் உங்கள் காதில் விழுந்தால் என்னைக் குற்றம் சொல்லாதீர்கள்.

    இதுவரை நாம் பார்த்ததெல்லாம் குடும்பப் பாட்டுகளே அல்ல என்னும் அளவுக்கு 90களில் ஒரு குடும்பப் பாட்டு வந்தது. இதுவரை நாம் மனிதர் உணர்ந்து கொள்ள மனிதக் குடும்பப் பாட்டுகளைப் பார்த்தோம்.

    ஆனால் ”காக்கை குருவி எங்கள் சாதி” என்று பாரதி சொன்னதை ஒவ்வொரு படத்திலும் பாம்பை டைப் அடிக்க வைத்தும் குரங்கை பைக் ஓட்ட வைத்தும் யானையை சைக்கிள் ஓட்ட வைத்தும் நிரூபித்துக் கொண்டிருக்கும் இயக்குனர் இராம.நாராயணன் எடுத்த படமான துர்காவில் ஒரு குடும்பப் பாட்டு உண்டு.

    பாப்பா பாடும் பாட்டு
    கேட்டு தலைய ஆட்டு
    மூணு பேரும் ஒன்னுதானே
    அம்மாவுக்கு கண்ணுதானே
    ஒன்னா விளையாடலாம்

    அந்தப் பாடலைக் கேட்டதுமே பிரிந்து போன நாயும் குரங்கும் எங்கெங்கோ இருந்து ஓடி வந்து பேபி ஷாமிலியைச் சேரும் காட்சி படம் பார்க்கின்றவர்களின் நெஞ்சை உருக்கும். மனதை கிறுகிறுக்க வைக்கும். சித்தத்தை பைத்தியம் பிடிக்க வைக்கும்.

    எப்படியெல்லாம் நாம் சிக்கியிருக்கிறோம் பார்த்தீர்களா?!?

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
    பாடல் – அன்பு மலர்களே நம்பி இருங்களேன்
    வரிகள் – கவிஞர் வாலி
    பாடியவர் – (மகிழ்ச்சி – பி.சுசீலா, அஞ்சலி, ஷோபா, சசிரேகா) (சோகம் – டி.எம்.சௌந்தரராஜன், எஸ்.பி.பாலசுப்ரமணியம்)
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – நாளை நமதே
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=ED6zDjOZXtw

    பாடல் – முத்துக்கு முத்தாக
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர் – கண்டசாலா
    இசை – கே.வி.மகாதேவன்
    படம் – அன்புச் சகோதரர்கள்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=-gyJT1nQDnM

    பாடல் – பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த
    வரிகள் – புலவர் புலமைப்பித்தன்
    பாடியவர் – டி.எம்.சௌந்தரராஜன்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – நினைத்ததை முடிப்பவன்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=Azrz41LaLeo

    பாடல் – ஆனந்தம் விளையாடும் வீடு
    வரிகள் – கவிஞர் வாலி
    பாடியவர் – பி.சுசீலா, டி.எம்.சௌந்தரராஜன்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – சந்திப்பு
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=bzRQIs5OIuA

    பாடல் – மலர் கொடுத்தேன் கை குலுங்க வளையலிட்டேன்
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர் – டி.எம்.சௌந்தரராஜன்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – திரிசூலம்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=-oUNmu4edLA

    பாடல் – வெண்ணிலா வெள்ளித்தட்டு
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர் – மலேசியா வாசுதேவன், பி.எஸ்.சசிரேகா, எஸ்.பி.ஷைலஜா
    இசை – ராஜேஷ்
    படம் – காளி கோயில் கபாலி
    பாடலின் சுட்டி – http://youtu.be/GfWzFhWRuHs

    பாடல் – பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
    வரிகள் – கவிஞர் வைரமுத்து
    பாடியவர் – எஸ்.ஜானகி (மகிழ்ச்சி), கே.ஜே.ஏசுதாஸ்(சோகம்)
    இசை – இசைஞானி இளையராஜா
    படம் – நீங்கள் கேட்டவை
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=XvrB5UA0Kl0

    பாடல் – பாப்பா பாடும் பாட்டு
    வரிகள் – தெரியவில்லை
    பாடியவர் – எம்.எஸ்.ராஜேஸ்வரி
    இசை – சங்கர் – கணேஷ்
    படம் – துர்கா
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=Vg0kYE6CnWA

    அன்புடன்,
    ஜிரா

    314/365

     
    • Uma Chelvan 9:36 pm on October 11, 2013 Permalink | Reply

      It is really funny to read your post GiRa., .பொதுவாக காதலன் காதலி அன்பைத்தான் ” செம்புல பெயல் நீர் போல் ” னு சொல்லுவாங்க. ஆனால் இங்கே அண்ணன் தங்கை பாசத்தயும் “செம்மணிலே தண்ணீரை போல் உண்டான சொந்தம் இது ” என்று பாடுகிறார் ஒரு அண்ணன். என்ன ஒரு அருமையான பாடல்!!! இந்த ராஜா வேற எல்லாத்துக்கும் ஒரு பாட்ட போட்டு வைச்சு நம்மை படுத்தி எடுக்கிறார் !!!!!!:::::)))))))))

    • rajinirams 2:12 am on October 12, 2013 Permalink | Reply

      செம பதிவு.வித்தியாசமான சிந்தனை.நல்ல திறனாய்வு.இது போல பல பாடல்களிருந்தாலும் சட்டென நினைவு வரும் சில பாடல்கள்-என் பங்கிற்கு-1,நான் அடிமை இல்ளை-ஒரு ஜீவன் தான்-வாலி2,மவுன கீதங்கள்-மூக்குத்தி பூ மேலே-வாலி 3,சின்னதம்பி-நீ எங்கே-வாலி.4,ப
      ட்டிக்காடா பட்டணமா-அடி என்னடி ராக்கம்மா-கண்ணதாசன் 5,நீதிக்கு தலை வணங்கு-இந்த பச்சைக்கிளிக்கொரு(சோகமில்லை)-புலமைப்பித்தன் 6,கல்யாண ராமன்-ஆஹா வந்துருச்சு-காதல் தீபம் ஒன்று-பஞ்சு அருணாசலம்.7,கல்யாண பரிசு-உன்னைக்கண்டு-பட்டுக்கோட்டையார்.8,உழைப்பாளி-அம்மாஅம்மா-வாலி 9,புதுக்கவிதை-வெள்ளைப்புறா ஒன்று-வைரமுத்து 10,கொக்கரக்கோ-கீதம் சங்கீதம்-வைரமுத்து 11,வீட்ல விசேஷங்க-மலரே தென்றல் பாடும்-வாலி.நீங்கள் குறிப்பிட்ட பாப்பா பாடும் பாட்டு உள்ளிட்ட துர்கா படப்பாடல்கள் வாலி எழுதியவையே. நன்றி

    • amas32 9:01 pm on October 14, 2013 Permalink | Reply

      நீங்க எந்த ஒரு டாபிக் எடுத்தாலும் அலசி ஆராய்ந்து சூப்பராக எழுதுகிறீர்கள் ஜிரா! குடும்பப் பாடல்கள் அந்தக் காலப் படங்களில் கண்டிப்பாக இருந்தன, இந்தக் கால டாஸ்மாக்கில் குடித்துப் பாடும் பாடல்கள் போல.

      காற்றில் வரும் கீதமே http://www.youtube.com/watch?v=pnteqlhXlS4 இதுவும் அழகான ஒரு குடும்பப் பாடல் 🙂

      amas32

  • mokrish 11:48 am on July 4, 2013 Permalink | Reply  

    கற்க கற்க 

    கல்வி முறை, பள்ளி என்ன சொல்லி தருகிறது, குழந்தைகள் வீட்டிலேயே படிக்கும் home schooling, வேறு மாற்று வழிகள்  என்று என் டிவிட்டர் நண்பர்களிடையே ஒரு சுவாரசியமான விவாதம் நடந்து கொண்டிருந்தது. கொஞ்சம் சீரியசான விஷயம். சரி / தவறு என்பதையெல்லாம் தாண்டி ஒரு தலைமுறையின் எதிர்காலம் பற்றிய உண்மையான கவலையுடன் வாத பிரதிவாதங்கள்.

    எனக்கு உடனே Don’t let education get in the way of your learning என்ற Quote நினைவுக்கு வந்தது. கற்க வேண்டியது கடலளவு. கற்றுகொள்ளுதல் என்பது எங்கே வேண்டுமானாலும் நிகழலாம் என்பதும் அதில் அட்லீஸ்ட் ஒரு சிறு பகுதியாவது பள்ளியில் நடக்கிறது என்பதும் உண்மை. சந்தேகம் இருந்தால் கண்ணதாசனைக் கேட்கலாம்

    குருதட்சணை என்ற படத்தில் ஒன்றே ஒன்று உலகம் ஒன்று என்ற பாடலில் கண்ணதாசன்   (பாடியவர்  பி.சுசீலா, இசை டி. கே. புகழேந்தி)  https://www.youtube.com/watch?v=bq2p6T5Rw_M. பள்ளியில் கிடைப்பது என்ன என்று விளக்குகிறார்

    வாழும் வழிகள் தெரிந்து கொள்ள

    வழிகள் செய்வது படிப்பு!

    வருவதை ஒழுங்காய் வைத்துக்கொள்ளும்

    அறிவைத்தருவது கணக்கு!

    பார்க்கும் உலகைப் புரிந்துகொள்ள

    பாதை சொல்வது பூகோளம்!

    பரம்பரையான முன்னோர் கதையை

    பாடம் சொல்வது சரித்திரம்!

    ஏடும் அறிவும் கூட இருந்தால்

    எல்லா நலனும் உண்டாகும்!

    சரிதானே? முறையான கல்வி என்பது நம் பார்வைகளை விரிவாக்கி ஆர்வத்தை வளர்த்தால் அது ஒரு அழகிய ஆரம்பமாக இருக்கும் என்று தோன்றுகிறது. பள்ளிகளும் கல்லூரிகளும் முக்கியமாக  உறவை நட்பை சொல்லிக்  கொடுக்கிறது.

    ஒரு குழந்தையின் கண்களில்  இருக்கும் வியப்பே கற்றலின் துவக்கப்புள்ளி.  காட்டில் கூட எதையாவது கற்றுகொள்ளலாம் என்பது வாலியின் வாதம். இந்த வரிகளை கேளுங்கள் (படம் திக்குத்தெரியாத காட்டில் இசை M.S. விஸ்வநாதன் பாடியவர் M S ராஜேஸ்வரி) http://www.youtube.com/watch?v=010ikQLt5wE

    பூ பூவா பறந்து போகும் பட்டு பூச்சி அக்கா நீ
    பளபளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா
    குதிச்சு குதிச்சு ஓடி போகும் குள்ள முயல் அண்ணா நீ
    குதிக்காதே கொஞ்சம் நில்லு கூட வாரேன் ஒன்னா
    பாவாடை போல் தோகை விரிச்சு புள்ளி மயில் வாயேன் என்
    புத்தகத்திலே குட்டி போடவே பூஞ்சிறகொண்ணு தாயேன்
    தாண்டி தாண்டி கிளைக்கு கிளை தாவிப்  போகும் குரங்கே நான்
    பாண்டி ஆடவே உன்னை வேண்டி கேட்கிறேன்
    நீயும் இறங்கி ஓடி வா

    முயல், மயில் குரங்கு யானை, மான் என்று பார்க்கும் எல்லா ஜீவனிடம் பேசும் ஆர்வத்தில் கூட  குழந்தை, கற்றுக்கொள்ளும் என்பதை சொல்கிறார்.

    பல வருடங்களுக்கு முன் படித்த Tao Te Ching வரிகள் நினைவுக்கு வருகிறது.

    We shape clay into a pot,

    but it is the emptiness inside

    that holds whatever we want.

    கொஞ்சம் களிமண் கொண்டு செய்யப்படும் பானை களிமண் இல்லாத இடத்தால்தான் பயன் தருகிறது என்றே இதனை நான் புரிந்து கொள்கிறேன். திறந்த மனம் இருந்தால் போதும். நிறைய கற்றுக்கொள்ளலாம் என்று அர்த்தமா?

    மோகனகிருஷ்ணன்

    215/365

     
    • amas32 6:29 pm on July 4, 2013 Permalink | Reply

      ஒரு ஜென் கதை தான் நினைவுக்கு வருகிறது. எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தோடு பயில வந்த மாணவனிடம் குரு ஒரு தேநீர் நிறைந்தக் கோப்பையில் இன்னும் தேநீரை விடச் சொன்னார். அது வழிந்து வெளியேறியது. அதையே ஒரு காலிக் கோப்பையில் விட்ட பொழுது கோப்பை நிறைந்தது. திறந்த மனத்துடன் ஒன்றும் தெரியாது என்ற மன நிலையோடு வந்தால் நாம் குருவிடம் அநேகம் கற்கலாம். பிஞ்சுக் குழந்தைகள் அதனால் தான் ஸ்பான்ஜ் மாதிரி அனைத்தையும் கிரகித்துக் கொள்கிறார்கள்.

      பூ பூவாய் மலர்ந்து போகும்…. எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடல் 🙂

      amas32

    • GiRa ஜிரா 10:37 pm on July 4, 2013 Permalink | Reply

      கற்றுக்கொள்ள திறந்த மனம் வேண்டும். மூடிய மனம் கல்லாது. சிலர் இருக்கிறார்கள். அவர்கள் சொல்வதே சரி. அவர்களுடைய கருத்தே சரி. அப்படி இருக்கின்றவர்களால் மற்றவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதையே புரிந்து கொள்ள முடியாது. பிறகு எப்படி அவர்கள் கற்பது!

  • mokrish 11:39 am on June 27, 2013 Permalink | Reply  

    இதுதான் எங்கள் வாழ்க்கை 

    அடிக்கடி பார்க்கும் காட்சிதான். ஆபிசில் ஏழாவது மாடியில் ஜன்னலில் திடீரென்று முளைக்கும் முகங்கள். கட்டடத்தின் உச்சியில் இருந்து தொங்கும் கயிற்றில் இணைத்துக்கட்டிகொண்டு,  வெளிப்புற கண்ணாடிகளை  துடைப்பவர்கள்.

    எவ்வளவு அபாயமான வேலை? Occupational hazard, safety என்று நிறைய ஜல்லி அடித்தாலும் இது தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. இந்த தொழில் சார்ந்த இடையூறு / அபாயங்கள் பல வகைப்படும். இவை உடல் / மனம் இரண்டையும் பாதிக்கும். பஞ்சாலை அல்லது சிமெண்ட் ஆலைகளில் வேலை செய்பவர்கள் சுவாசிக்கும் மெல்லிய தூசு அவர்கள் உடல்நலம் கெடுக்கும்.

    திரைப்படங்களில் / பாடல்களில் இது பற்றி ஏதாவது இருக்குமா என்று தேடினேன். கண்ணில் பட்ட சில பாடல்கள். படகோட்டி படத்தில் வாலி எழுதிய தரை மேல் பிறக்க வைத்தான் என்ற மறக்கவே முடியாத ஒரு பாடல் (இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் டி எம் எஸ்)

    http://www.youtube.com/watch?v=Z6DKos7t_V4

    தரை மேல் பிறக்க வைத்தான்

    எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்

    கரை மேல் இருக்க வைத்தான்

    பெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான்

    என்று அலை கடல் மேலே அலையாய் அலைந்து உயிரை கொடுப்பவர்களின் வாழ்க்கை பற்றி எழுதுகிறார்

    கடல் நீர் நடுவே பயணம் போனால்

    குடிநீர் தருபவர் யாரோ

    தனியா வந்தோர் துணிவை தவிர

    துணையாய் வருபவர் யாரோ

    ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்

    ஒவ்வொரு நாளும் துயரம்

    ஒரு ஜாண்  வயிற்றை வளர்ப்பவர் உயிரை

    ஊரார் நினைப்பது சுலபம்

    நீண்ட கடல் பயணம் முடித்து திரும்பும் ஒரு மாலுமியின் நிலை பற்றி Samuel Taylor Coleridge எழுதிய The Rime of Ancient Mariner என்ற ஆங்கில கவிதை வரிகளைப் பாருங்கள்

    Water, water, everywhere,

    And all the boards did shrink;

    Water, water, everywhere,

    Nor  any drop to drink.

    கடலை நம்பி பிழைக்கும்  தொழில் மீன் பிடித்தல். மீனவர்களின் துயர் இன்றும் தொடரும் ஒரு அவலம். மிக ஆபத்தான வேலை என்று  United States Department of Labor குறிப்பிடுவது மீனவர்களைத்தான். அழகன் படத்தில் வரும் கோழி கூவும் நேரமாச்சு என்ற பாடலில் (இசை மரகதமணி பாடியவர்கள் சித்ரா மலேசியா வாசுதேவன், சீர்காழி சிவ சிதம்பரம்)  புலமைப்பித்தன் இந்த சோகத்தை பதிவு செய்கிறார். KB அடிக்கடி பயன்படுத்தும் ‘மேடை நிகழ்ச்சி’ உத்தியில் கதை சொல்லும் ஒரு பாடல்

    http://www.youtube.com/watch?v=q7AufD8pSPc

    காதலி சொன்னது வேதம் என்று

    புயல் வரும் வேளையில் அவன் போனான்

    இந்திய எல்லையை தாண்டும் போது

    பாவிகள் சுட்டதில் பலியானான்

    புலமைப்பித்தன் பாடலின் நடுவே போகிறபோக்கில் அழுத்தமாக இப்படி ஏதாவது சொல்வார். ‘ஏர் பூட்டி தோளில் வைத்து இல்லாமை வீட்டில் வைத்து’ என்று உழவன் வறுமையை சொல்வார். நாயகன் படத்தில் வரும் நான் சிரித்தால் தீபாவளி (இசை இளையராஜா பாடியவர்கள் வசந்தா எம் எஸ் ராஜேஸ்வரி) பாடலை கவனியுங்கள்.  http://www.youtube.com/watch?v=UH1yjlnWTu4

    எனது உலகில் அஸ்தமனம் ஆவதில்லை

    இங்கு இரவும் பகலும் என்னவென்று தோணவில்லை

    வந்தது எல்லாம் போவது தானே சந்திரன் கூட தேய்வது தானே

    காயம் என்றால் தேகம் தானே உண்மை இங்கே கண்டேன் நானே

    யார் விரல் என்றா வீணைகள் பார்க்கும்

    யார் இசைத்தாலும் இன்னிசை பாடும்

    மீட்டும் கையில் நானோர் வீணை

    காயம் என்றால் தேகம்தானே என்ற வரியில் அந்தப்பெண்களின் அத்தனை சோகமும் சொல்லும் திறமை.

    புது புது அர்த்தங்கள் படத்தில் வாலி எழுதிய கல்யாண மாலை பாடலில் சில வரிகள் தன்  சோகத்தை மறைத்து மக்களை மகிழ்விக்கும் ஒரு கலைஞனின் மனம் பற்றி சொல்கிறது

     http://www.youtube.com/watch?v=VchhlBn9wjg

    நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்

    காவல்கள் எனக்கில்லையே

    சோகங்கள் எனக்கும்  நெஞ்சோடு இருக்கும்

    சிரிக்காத நாளில்லையே

    துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும்

    மக்கள் மனம் போல பாடுவேன் கண்ணே

    என் சோகம் என்னோடு தான்…

    சாதரண மஞ்சள் ஹெல்மெட் அணிந்த மெட்ரோ ரயில் வேலை செய்பவர்கள், இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வீடு தேடி வந்து தென்னை மரம் ஏறுபவர், கட்டட வேலை செய்பவர்கள், சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்பவர்கள் என்று எல்லாரும் ‘இதுதான் எங்கள் வாழ்க்கை’ என்று சொல்வது போல் இருக்கிறது.

    மோகனகிருஷ்ணன்

    208/365

     
    • Saba-Thambi 12:16 pm on June 27, 2013 Permalink | Reply

      வித்தியாசமான பார்வை.
      சில வேலைகள் பரிதாபதுக்குரியவை. மிக மிகப் பரிதாபமானது- விளையாடும் பருவத்தில் சிறுபிள்ளைகள் வீட்டுச் சுமையை தூக்குவது.
      இதையும் பாடல்களில் பாடியுள்ளார்கள்

      உதாரணம் : ஆண் பிள்ளையென்றாலும் சாண் பிள்ளையண்றோ
      படம்: ஆறிலிருந்து அறுபதுவரை
      (http://www.youtube.com/watch?v=4Y07weGohR0)

    • G.Vinodh 6:57 pm on June 27, 2013 Permalink | Reply

      Hi Mokrish,

      Nice choice of song & explanation…love this beauty.

      Cheers.
      Vinodh G

    • G.Vinodh 7:06 pm on June 27, 2013 Permalink | Reply

      The reference to window cleaning was good, I see them every week at office & get scared every time.

      Regards,
      Vinodh G

    • rajnirams 7:35 pm on June 27, 2013 Permalink | Reply

      ஆஹா,சான்சே இல்லை,எப்படி யோசித்து சரியான பாடல்களை லிங்க் செய்து கலக்கி விட்டீர்கள். நல்ல நேரம் படத்தில் புலமைப்பித்தனின் வரிகள்-“வயித்துக்காக மனுஷன் இங்கே கயித்துலாடுறான் பாரு,ஆடி முடிச்சு இறங்கி வந்தா அப்புறம் தாண்டா சோறு”. பாராட்டுக்கள்.நன்றி.

    • rajnirams 7:43 pm on June 27, 2013 Permalink | Reply

      சூப்பர் பாட்டு ஒன்னு இருக்கு:-)) அம்மா தாய்மாரே ஆபத்தில் விடமாட்டேன்,”வெயிலோ புயல் மழையோ மாட்டேன்னு சொல்ல மாட்டேன்”-அங்கங்கே பசி எடுத்தா பலகாரம்,அளவு சாப்பாடு ஒரு நேரம்-ஆட்டோ தொழிலாளர்களை பற்றிய வைரமுத்து அவர்களின் வரிகள்.

    • amas32 10:20 pm on June 27, 2013 Permalink | Reply

      பல தொழில்களில் பிரச்சினைகள் இருந்தாலும், சில தொழில்களில் அதிக ஆபத்து உள்ளது. அழகாக வரிசையிட்டுக் காட்டியிருக்கிறீர்கள். வீட்டில் உலை கொதிக்க வேண்டும் என்றால் many have to put their life on line.

      amas32

  • G.Ra ஜிரா 10:02 pm on April 22, 2013 Permalink | Reply
    Tags: எம்.எஸ்.ராஜேஸ்வரி, வி.ஜே.சர்மா   

    யாழிசை உந்தன் மொழி 

    துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
    இன்பம் சேர்க்க மாட்டாயா
    எமக்கின்பம் சேர்க்க மாட்டாயா
    அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
    அல்லல் நீக்க மாட்டாயா
    பாடல் – பாவேந்தர் பாரதிதாசன்
    இசை – ஆர்.சுதர்சனம்
    பாடியவர்கள் – எம்.எஸ்.ராஜேஸ்வரி, வி.ஜே.சர்மா
    படம் – ஓர் இரவு
    நடிகர்கள் – லலிதா, அக்கினேனி நாகேஸ்வரராவ்
    பாடலின் சுட்டி – http://youtu.be/MW4Rm1YkVuo

    திரைப்படப் பாடல்கள் இலக்கியம் ஆகுமா என்று விவாதிக்கும் நேரத்தில் இலக்கியங்களும் திரைப்படப் பாடல்கள் ஆனதுக்கு இந்தப் பாடல் ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

    பாவேந்தரின் கவிதையில் நிறைந்து ததும்பும் தீந்தமிழானது யாழிசையாய் நெஞ்சில் கலந்து அல்லல் நீக்கி இன்பம் சேர்ப்பது உண்மைதான்.

    ஆனால் யாழ் பாரம்பரிய இசை மேடைகளில் இன்று இல்லை. ஆனாலும் சங்க இலக்கியங்களிலும் சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்களின் வழியாகவும் யாழ் பற்றி நாம் நிறைய தெரிந்து கொள்ளலாம்.

    அதையும் விட இன்னொரு எளிய வழி இருக்கிறது. அதுதான் விபுலானந்த அடிகளார் எழுதிய யாழ்நூல் என்ற நூலைப் படிப்பது. இலங்கை யாழ்பாணத்து மட்டக்களப்பில் பிறந்த மயில்வாகனன் என்னும் விபுலானந்த அடிகள் சிலப்பதிகாரம் முதலான இலக்கியங்களை பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சி செய்து உருவாக்கிய செறிவான நூல்தான் “யாழ்நூல்

    யாழ்நூல் 1947ம் ஆண்டு ஜூலை ஐந்தாம் தேதி இலங்கையின் திருக்கொள்ளம் புதூர் கோயிலில் வெளியிடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் சுவாமி விபுலானந்தரின் குறிப்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட யாழ்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தனவாம். அந்த யாழ்களை இசைப் பேரறிஞர் க.பொ.சிவானந்தம் அடிகளார் மீட்டி இன்னிசை பொழிந்தாராம். அந்த யாழ்களுக்கும் பின்னாளில் என்ன ஆயிற்றோ தெரியவில்லை.

    சரி. யாழின் வகைகளைப் பார்க்கலாம். பொதுவாக யாழ் மூன்று விதங்களில் வகைப்படுத்தபடும்.
    1. யாழின் வடிவம்
    2. யாழ் பயன்படுத்தப்பட நிலம்
    3. வாசிக்கப்படும் பண்கள் மற்றும் இசைமுறைகள்

    வடிவத்தை வைத்து வகைப்படுத்தப்பட்ட சில யாழ்களைப் பார்க்கலாம்
    வில்யாழ் – வில்லின் வடிவில் இருப்பது
    சீறியாழ் – சிறிய யாழ்
    பேரியாழ் – பெரிய யாழ். இதில் 21 நரம்புகள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

    ஐவகை நிலங்கள் நாம் அறிந்ததே. அந்த நிலங்களின் அடிப்படையில் கீழ்க்கண்ட யாழ்களும் பழக்கத்தில் இருந்திருக்கின்றன. அந்தந்த நிலப்பகுதிகள் இந்த யாழ்கள் வாசிக்கப்பட்டிருக்கின்றன.
    குறிஞ்சியாழ்
    முல்லையாழ்
    மருதயாழ்
    நெய்தல்யாழ்
    பாலையாழ்

    இசை வளர்ச்சியின் அடிப்படையிலும் வாசிக்கப்படும் பண்களின் அடிப்படையிலும் வகைப்படுத்தப்பட்ட சில யாழ்களைப் பார்க்கலாம்.
    மகர யாழ்
    செங்கோட்டு யாழ்
    பேரியாழ்
    சகோடயாழ்
    மருத்துவயாழ்

    யாழ் வாசிக்கின்றவருக்குப் பண்ணறிவும் பாட்டறிவும் யாழிலக்கண அறிவும் நிறைந்திருக்க வேண்டும். யாழ் வாசிக்கின்றவரை யாழாசிரியர் என்றே அழைத்தார்கள்.

    யாழ் வாசிப்பதில் மிகச்சிறந்த திறம் பெற்றவர்களில் திரூநிலகண்ட யாழ்ப்பாணரும் ஒருவர். இவர் பக்தி இலக்கிய காலத்தவர். பாணர் குலத்தில் பிறந்திருந்ததால் திறமை இருந்தும் கோயிலின் வாயிலில் நின்றே யாழ் வாசிக்க வேண்டிய நிலைக்கும் ஆளானவர். இவரால் வாசிக்க முடியாதவாறு ஒரு பண்ணை திருஞானசம்பந்தர் பாடியதாகவும் சொல்வார்கள். அந்தப் பண் யாழ்முறிப்பண் என்றே அழைக்கப்பட்டது.

    தாம் பெற்ற மக்களின் மழகைக் குரலுக்கு அடுத்த படியாக குழலும் யாழும் இனிமை என்று திருவள்ளுவரும் தெள்ளத்தெளிவாகக் கூறியிருக்கின்றார்.

    குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
    மழலை சொல் கேளாதவர்

    அன்புடன்,
    ஜிரா
    142/365

     
    • amas32 2:52 am on April 23, 2013 Permalink | Reply

      I think Yaazh is very close to what we call Lute in English.
      துன்பம் நேர்கையில் மனத்துக்கு இதம் அளிப்பது நமக்கு நெருக்கமானவர்களின் ஆறுதல் வார்த்தைகளும் இனிமையான இசையும் தான். நமக்கு நெருக்கமானவர்களே இசைத்தார்கள் என்றால் துன்பம் நொடியில் விலகிவிடும் இல்லையா?

      /அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
      அல்லல் நீக்க மாட்டாயா/
      இந்த வரிகளும் அருமையாக உள்ளன!

      யாழைப் பற்றி நிறைய தெரிந்துகொண்டேன் ஜிரா, நன்றி.

      amas32

    • GiRa ஜிரா 9:20 am on April 25, 2013 Permalink | Reply

      Lute, Harp and guitars are different types of யாழ்கள்.

      உண்மைதான். நெருக்கமானவர்களின் பேச்சு கூட பாடலாகுமென்று சொல்வார்களே.

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel