Updates from June, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • G.Ra ஜிரா 11:11 am on June 4, 2013 Permalink | Reply  

  ஆயிரத்தில் ஓர் இரவு 

  முதலிரவு. அந்த ஒரு இரவை வாழ்நாள் முழுவதும் மறக்கவே முடியாது என்பதால்தான் அதற்கு முதலிரவு என்று பெயர். அந்த முதலிரவிலே வருவது முதல் உறவு. இதைக் கற்பகம் படத்தில் வாலி இப்படிச் சொன்னார்.

  ஆயிரம் இரவுகள் வருவதுண்டு
  ஆனால் இதுதான் முதலிரவு
  ஆயிரம் உறவுகள் வருவதுண்டு
  ஆனால் இதுதான் முதல் உறவு

  பாடல் – வாலிபக் கவிஞர் வாலி

  எத்தனையோ கற்பனைகளோடும் ஆசைகளோடும் வாழ்க்கைப் பயணத்தில் அடியெடுத்து வைக்கும் அந்த ஒரு இரவில் மணமக்கள் ஒவ்வொருவரின் உள்ளமும் உணர்ச்சியும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டு துள்ளும். அந்தத் துள்ளலில் பேச்சு வருமா? வாழ்க்கைத்துணையிடம் முதலிரவில் முதன்முதலில் என்ன பேசுவது? என்ன பேசுவார்கள்? யார் முதலில் பேசியிருப்பார்கள்? என்ன சொல்லியிருப்பார்கள்? அப்படி எதையும் சொல்லும் போது எவ்வளவு தயக்கம் இருந்திருக்கும்? சிந்தித்துப் பார்க்கவும் இனிதான விஷயம் அது. சரி. இவற்றையெல்லாம் திரைப்படங்களில் பாடலாசிரியர்கள் எப்படிக் கையாண்டார்கள் என்று ஆராய்ச்சி செய்வோம்.

  அவர்களுக்குச் சிறுவயது முதலே பழக்கம். அவன் கால்சட்டை போட்ட காலத்தில் பார்த்த சிறுமி இன்று பெருகிப் பொங்கி மனைவியாக வந்திருக்கிறாள். அவளைப் பார்த்ததும் அவனுக்கு வியப்பு. அதனால் பழைய நட்பினால் உரிமை எடுத்துக் கொண்டு குறும்பாகக் கேட்கிறான்.

  பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
  இன்று பூவாடை வீசிவர பூத்த பருவமா

  பாடல் – கவியரசர் கண்ணதாசன்

  அவன் உழைத்து முன்னுக்கு வந்தவன். ஒவ்வொரு காசும் வேர்வை சொட்டச் சொட்ட உழைத்துச் சேர்த்தது. செல்வத்தின் அருமை பெருமை தெரிந்தவன். இத்தனை பொருட்செல்வங்களைத் தேடினாலும் அதற்கிடையில் வாழ்க்கைத் துணைவியையும் தேட அவன் மறக்கவில்லை. அப்படித் தேடிய மனைவியை முதலிரவில் எப்படி அழைப்பான் அவன்?

  அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்
  ஏகாந்தவேளை வெட்கம் ஏனோ வா இந்தப் பக்கம்

  பாடல் – தஞ்சை இராமையாதாஸ்

  கையும் காலும் நன்றாக இருப்பவர்களுக்கே நல்ல வாழ்க்கை அமைவது கடினம். ஊனமுற்று அதனால் வாழ்க்கையில் பிறரால் ஏளனமுற்று இருப்பவர்களின் நிலை? அவர்கள் மனத்துன்பத்தையெல்லாம் கேட்கக் கூட ஆளிருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட ஒருவனுக்குத் திருமணம் நடந்தது. தெய்வம் போன்றொரு பெண் வந்தாள். அவளிடம் மனதைத் திறந்து கொட்டி அழுதான். அப்போது அவள் என்ன சொல்லியிருப்பாள்?

  தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ
  உங்கள் அங்கத்திலே ஒரு குறைவிருந்தாலும் அன்பு குறைவதுண்டோ
  கால்கள் இல்லாமல் வெண்மதி வானில் தவழ்ந்து வரவில்லை
  இரு கைகள் இல்லாமல் மலர்களை அணைத்து காதல் தரவில்லையா

  பாடல் – கவியரசர் கண்ணதாசன்

  இன்னொரு முதலிரவு. ஒரு சாதாரண ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்ட முதலிரவு. திருமணத்துக்கு முன்னால் அவர்களுக்குள் பழக்கமோ நெருக்கமோ இருந்ததில்லை. இருவருக்கும் அது முதல் மயக்கம். அதனால் ஒரு தயக்கம். தயக்கம் போக வேண்டுமென்றால் விளக்கம் வேண்டும். அதையும் ஆண் பேசினால்தான் சரியாக இருக்கும் என்று பாடலாசிரியர் நினைத்திருக்கிறார் போலும்.

  இதுதான் முதல் ராத்திரி
  அன்புக் காதலி என்னை ஆதரி

  இன்னொருவன் குறும்பன். விளையாட்டுப்பிள்ளை. துரத்தித் துரத்திக் காதலித்தவளையே திருமணமும் செய்து கொள்கிறான். அவனுக்கு ஆர்வங்கள் நிறைய. சாதிக்கும் வெறியும் நிறைய. புதுமைகளைப் புரிந்து கொள்ள விரும்பும் படிப்பாளி. அவன் மட்டுமா? அவளும் அப்படித்தான். அப்படிப்பட்ட முதலிரவு எப்படியிருக்கும்?

  பள்ளிக்கூடம் போகலாமா
  அதுக்கு புத்தகத்த வாங்கலாமா

  பாடல் – கங்கையமரன்

  அவனொரு குழந்தை. வளர்ந்த குழந்தை. உடல் வளர்ந்து விட்ட அளவு உணர்வுகள் வளரவில்லை. வளராத செடிக்குத்தானே உரமும் கவனிப்பும் தேவை. அந்தச் செடிக்கு உரமாக வருகிறாள் ஒருத்தி. அவள் சுரங்களைச் சொல்லச் சொல்ல அவன் கற்றுக் கொள்கிறாள். கற்ற வித்தையை பாட்டாய்ப் பாடுகிறான். அவள் சொல்லிக் கொடுத்ததை அவன் படித்து மேதையாவதை பாட்டில் எப்படிச் சொல்வது?

  மனசு மயங்கும்…மனசு மயங்கும்
  மௌனகீதம்….மௌனகீதம்…பாடு
  மன்மதக்கடலில்…மன்மதக்கடலில்
  சிப்பிக்குள்முத்து…சிப்பிக்குள்முத்து…தேடு

  பாடல் – கவிஞர் வைரமுத்து

  அவள் காத்திருந்தாள். எதிர்பார்த்திருந்தாள். அடைந்தால் அவனைத்தான் அடைவது என்று தவமிருந்தாள். உள்ளத்தில் இருந்தது உண்மையான அன்பாக இருந்ததால் அது நடந்தது. திருப்பரங்குன்றத்திலே பரமசிவன் பார்வதி தலைமையில் அவர்கள் மகனான முருகனையே திருமணம் செய்தாள். அப்படிப்பட்டவளுக்கும் ஒரு முதலிரவு. அந்த இரவிலே அவள் என்னவெல்லாம் சொல்லியிருப்பாள்?

  மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
  நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு

  பாடல் – பூவை செங்குட்டுவன்

  இப்படி ஒவ்வொரு முதலிரவும் ஒவ்வொரு வகை. ஒவ்வொரு வகையிலும் ஒவ்வொரு கலை. ஒவ்வொரு கலையிலும் ஒவ்வொரு சுவை.

  பதிவில் இடம் பெற்ற பாடல்கள்

  ஆயிரம் இரவுகள் வருவதுண்டு
  படம் – கற்பகம்
  பாடியவர் – இசையரசி பி.சுசீலா
  பாடல் – வாலிபக் கவிஞர் வாலி
  இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன் – இராமமூர்த்தி
  பாடலின் சுட்டி – http://youtu.be/IAJbRzdCaDc

  பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
  பாடல் – கவியரசர் கண்ணதாசன்
  பாடியவர் – டி.எம்.சௌந்தரராஜன்
  இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன் – இராமமூர்த்தி
  படம் – நிச்சய தாம்பூலம்
  படத்தின் சுட்டி – http://youtu.be/wi-G7fvgZ7g

  அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்
  பாடல் – தஞ்சை இராமையாதாஸ்
  பாடியவர் – சிதம்பரம் சி.எஸ்.ஜெயராமன், எஸ்.ஜானகி
  இசை – கே.வி.மகாதேவன்
  படம் – தெய்வப்பிறவி
  பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=rO0uDgO2gz0

  தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ
  பாடல் – கவியரசர் கண்ணதாசன்
  பாடியவர் – இசையரசி பி.சுசீலா
  இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன் – இராமமூர்த்தி
  படம் – பாகப்பிரிவினை
  பாடலின் சுட்டி – http://youtu.be/ZCwKgD9E7Qo

  இதுதான் முதல் ராத்திரி
  பாடல் – கவிஞர் வாலி
  பாடியவர்கள் – கே.ஜே.ஏசுதாஸ், வாணி ஜெயராம்
  இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
  படம் – ஊருக்கு உழைப்பவன்
  பாடலின் சுட்டி – http://youtu.be/WgCneO_FIss

  பள்ளிக்கூடம் போகலாமா
  பாடல் – கங்கையமரன்
  பாடியவர்கள் – எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
  இசை – இசைஞானி இளையராஜா
  படம் – கோயில்காளை
  பாடலின் சுட்டி – http://youtu.be/kU9WyvDttkc

  மனசு மயங்கும்…மனசு மயங்கும்
  பாடல் – கவிஞர் வைரமுத்து
  பாடியவர்கள் – எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்
  இசை – இசைஞானி இளையராஜா
  படம் – சிப்பிக்குள் முத்து
  பாடலின் சுட்டி – http://youtu.be/yn2XVHqiUPg

  மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
  பாடல் – பூவை செங்குட்டுவன்
  பாடியவர் – இசையரசி பி.சுசீலா
  இசை – கே.வி.மகாதேவன்
  படம் – கந்தன் கருணை
  பாடலின் சுட்டி – http://youtu.be/aGJhE1CwjWY

  அன்புடன்,
  ஜிரா

  185/365

   
  • Arun Rajendran 11:33 am on June 4, 2013 Permalink | Reply

   இரசித்தேன் ஜிரா சார்..

   தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ — பொருட் பிழைங்களோ?

   மாற்றுத் தானே தரத்தைத் தீர்மானிக்குது? மாற்றுக் குறைந்தால் (குறை அதிகரித்தால் ->பிற உலோகக் கலவை அதிகரித்தால்) தரம் குறையத் தானே செய்யும்? கவிஞர் வேறு எதானும் சொல்ல வருகிறாரா?

   இவண்,
   அருண்

   • GiRa ஜிரா 1:24 pm on June 6, 2013 Permalink | Reply

    கவிஞர் எழுதியது தங்கத்திலே ஒரு குறைவிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ என்றுதான். எப்படி மாறியதோ தெரியாது… ரெக்கார்டிங்கின் போது தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் என்று எழுதிய தாள் சுசீலாம்மா கையில். பாடல் பதிவாகி படமும் ஆனபின் தான் நடந்தது தெரிந்திருக்கிறது கவியரசருக்கு. பிறகு அப்படியே அமைந்தும் விட்டது.

    ஆனாலும் இந்த வரிக்கும் பலவிதங்களில் சுவையான விளங்களை அடுக்கியடுக்கிச் சொல்லலாம்.

  • anonymous 5:03 pm on June 4, 2013 Permalink | Reply

   நலம்?

   பல முறை வாசித்து வாசித்துப் பார்த்தேன், இப்பதிவை;
   சில சொற்கள், மிகவும் பிடிச்சி இருந்தது;

   *முதன்முதலில் என்ன பேசுவது? என்ன பேசுவார்கள்? யார் முதலில் பேசியிருப்பார்கள்? என்ன சொல்லியிருப்பார்கள்?
   *வாழ்க்கையில் பிறரால் ஏளனமுற்று இருப்பவர்களின் நிலை?

   *அவனொரு குழந்தை. உணர்வுகள் வளரவில்லை. வளராத செடிக்குத்தானே உரமும் கவனிப்பும் தேவை
   *அவனுக்கு ஆர்வங்கள் நிறைய. புதுமைகளைப் புரிந்து கொள்ள விரும்பும் படிப்பாளி. அவன் மட்டுமா?

   *உள்ளத்தில் இருந்தது உண்மையான அன்பாக இருந்ததால் அது நடந்தது.
   ——–

   எல்லாப் பாட்டுமே இனியவை தான் என்றாலும், அந்தக் கடைசிப் பாட்டு…
   மனம் படைத்தேன்…

   • anonymous 5:23 pm on June 4, 2013 Permalink | Reply

    //மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு – நான்
    வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு!//

    -ரொம்ப அழகாப் படமாக்கப் பட்டிருக்கும்;
    சிவகுமார், மற்ற வழக்கமான படங்களில் வரும் காதல் காட்சியைப் போல, கே.ஆர்.விஜயா கையைப் பிடிச்சிச், “சரக்” -ன்னு இழுத்தாராம்;

    Director, AP Nagarajan, “யோவ், இப்ப நீ முருகன்-யா; இப்பிடியெல்லாம் இழுக்கக் கூடாது; எழுந்து பின்னாடியே ஓடக் கூடாது;
    மென்மையாக் கையைப் புடிக்கணும்; அந்தப் பிடிப்பிலும் ஒரு புன்சிரிப்பு தெரியணும்”

    -ன்னு சொல்ல, மொத்த யூனிட்டே, கொல் -ன்னு சிரிச்சிருச்சாம்:)
    Such a great director & sculptor;
    He sculpts even Sivaji…. in that “Making of Thillana Mohanambal” video
    ———

    //ஆண் பேசினால்தான் சரியாக இருக்கும் என்று பாடலாசிரியர் நினைத்திருக்கிறார் போலும்//

    சில முதலிரவுகளில் பெண் பேச்சும் உண்டு:)

    “கண்ணைத் தொறக்கணும் சாமீ” -ன்னு தற்காலப் படங்களை விட, ஒரு “மென்மை” இருக்கும் அக்காலப் படங்களில்:)

    பச்சை விளக்கு-ன்னு ஒரு படம்;
    குத்து விளக்கெரிய, கூடமெங்கும் பூ மணக்க
    மெத்தை விரித்திருக்க, மெல்லியலாள் காத்திருக்க….

    வாராதிருப்பானோ? வண்ண மலர்க் கண்ணன் அவன்?
    (shenoy music of MSV)

  • anonymous 5:38 pm on June 4, 2013 Permalink | Reply

   some more 1st night songs…

   *அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்

   உடல் நான் – அதில் உரம் நீ என
   உறவு கொண்டோம் “நேர்மையாய்” -ன்னு எனக்கு ரொம்ப பிடிச்ச வரிகள்; நேர்மையான உறவாம்:)

   *கண்ணுக்குக் குலமேது?

   முதலிரவு -ன்னாலே, “அது” மட்டுமே -ன்னு காட்டாது, உள்ளம் தான் முதலில் இன்புறணும்; அப்பறம் தான் உடல் இன்புறணும்..
   அவமானத்திலேயே சதா துடிக்கும் கணவன் கர்ணன்; அவனை அணுகும் பெண்ணுள்ளம்

   அவன் உள்ளத் தீயை அணைத்து,
   பின்பு உடல் தீயில் குளிர் போக்கும் இன்பமே இன்பம்!
   ———

   some more…

   *மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
   *டிஷ்யும் படத்தில் நெஞ்சாங் கூட்டில்… இதில் படகு வீட்டில் முதலிரவு (my fave fantasy::))

   how u forgot
   பாலக்காட்டுப் பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா?
   different type of 1st night – யாரம்மா அது யாரம்மா?:))

  • anonymous 5:54 pm on June 4, 2013 Permalink | Reply

   “சாந்தி முகூர்த்தம்” -ன்னு வேற ஒரு பேரில் சொல்லுவாங்க;

   ஆனா, இனிய தமிழில், “முதலிரவு” -ன்னு சொல்லுறாப் போல வராது…
   என்ன “சாந்தி”யோ?
   சாந்தி அடைந்து விடக் கூடிய விஷயமா அது?:) முருகா முருகா!
   ———

   சினிமாவில் முதலிரவு உண்டு; ஆனா சங்க இலக்கியத்தில்??
   அய்யோ, சினிமாவை விடக் கிளுகிளுப்பா இருக்கும்:)

   தமர், நமக்கு ஈத்த, “தலைநாள் இரவின்”
   -அகநானூறு

   தலைநாள் இரவு = என்ன பேரு பாருங்க!
   ஏம்மா ஒனக்கு இப்படி வேர்க்குது? சன்னலைத் திறந்தாச் சரி ஆயீரும், திறக்கட்டுமா?:)

   ஒரு முதலிரவு அறைக்குள் “என்ன நடக்குது?” -ன்னு காட்டும் பாட்டு
   http://dosa365.wordpress.com/2012/08/09/1/
   ———

   • anonymous 6:10 pm on June 4, 2013 Permalink | Reply

    சங்க இலக்கியம் = இயற்கை வாழ்வு!
    பூர்வ குடிகள், புராணக் கலப்பு இல்லாம வாழ்ந்த “அக” வாழ்வு!

    *எட்டுத் தொகை = நிறையவே அகம்
    *பத்துப் பாட்டு = மிகவும் புறம்
    *அப்பறமா, ஒரே நீதி இலக்கியமாப் போச்சு:)
    அகம் போனாலே, நீதி போயிருச்சி -ன்னு தானே அர்த்தம்?
    ———

    எனக்கு மிகவும் பிடிச்ச “இலக்கிய முதலிரவு”
    1) சிலப்பதிகாரம் 2) நள வெண்பா

    Dunno, If Kamban sang 1st night:) Gotto figure out;
    ———

  • anonymous 6:21 pm on June 4, 2013 Permalink | Reply

   சிலப்பதிகாரம் – மனையறம் படுத்த காதை
   அதென்ன “படுத்த”?
   மனை அறம் படுத்த – நீங்களே யோசிச்சிப் பாருங்க!

   –தாரும் மாலையும் மயங்கி, கையற்று,
   தீராக் காதலின் திரு முகம் நோக்கி,
   கோவலன் கூறும் ஓர் குறியாக் கட்டுரை–

   தார் = ஆண் சூடும் மாலை;
   கோதை = பெண் சூடும் மாலை;

   ரெண்டுமே மயங்கி ஒன்னோட ஒன்னு கலக்குதாம்; சினிமாவில் ரெண்டு பூ ஒன்னாச் சேருவது போல் காட்டுவாங்களே?:) director eLango adigaL
   ——

   kovalan does too much talking; may be kaNNagi a shy girl?:)
   but, very romantic speeches = foreplay??:)
   –மலையிடைப் பிறவா மணியே என்கோ?
   அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ?–

   ஒரு மாலை ரொம்ப அடர்த்தியா இருக்கு; ஆனா தயங்குது
   Whoz that maalai? = kaNNagi

   –தயங்கு இணர்க் கோதை – தன்னொடு தருக்கி,
   வயங்கு இணர்த் தாரோன் மகிழ்ந்து–

   அவ மனசுல அம்புட்டு “அடர்த்தியான” ஆசைகள்…
   //தயங்கு இணர்க் கோதை// – என்னமாச் சொல்லு போடுறான்-யா இந்த இளங்கோ!

   தயங்கு இணர்க் கோதை = வயங்கு இணர்த் தாரோன்!

   • anonymous 6:38 pm on June 4, 2013 Permalink | Reply

    நள வெண்பா “முதலிரவு”:

    அதிக ஆழம்/ அலை இல்லாத் திருச்செந்தூர்க் கடலில், அலையும் தண்ணியும் ஒன்னாக் கலக்கும் பாத்து இருக்கீங்களா?

    ரெண்டுமே தண்ணி தான்!
    ஆனா, ஒன்னு எழும்பும்; ஒன்னு நுடங்கும்!
    எழும்பி எழும்பிக் கலக்கும்;
    அது போல – நீரும் நீரும் போல – கலந்தாங்களாம்… நளன்-தமயந்தி

    —ஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்கி
    இருவர் எனும் தோற்றம் இன்றிப் – பொருவெங்
    கனற்கேயும் வேலானும் காரிகையும் சேர்ந்தார்
    புனற்கே புனல்கலந்தாற் போன்று—-

    புனல் = தண்ணி; புனலே புனலில் கலந்தாப் போல…

    ஈருடல்-ஓருயிர் ல்லாம் இல்ல
    ஓர் உடல்! (இருவர் எனும் தோற்றம் இன்றி)
    ஓர் உடல்!
    ——–

    ஆனா ஆரம்ப வரி தான் அசத்தல்! = “ஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்கி”

    சூடு, வெயிலு…
    நிழலில் ஒதுங்குவோம்-ல்ல?

    காமச் சூட்டுக்கு எங்கே “ஒதுங்கறது”?
    = ஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்கி

    புகழேந்தீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
    ——-

    செவ்வேள் என நீ பெயர் கொண்டாய் – முருகா
    சொல்வேல் கொண்டு நீ தமிழ் வென்றாய்

    கைவேல் கொண்டு நீ பகை வென்றாய் – இரு
    கண்வேல் கொண்டு நீ எனை வென்றாய்!

    “மனம் படைத்தேன்
    உன்னை நினைப்பதற்கு” !!!

  • amas32 12:09 pm on June 6, 2013 Permalink | Reply

   எப்பவும் போல அருமையான பாடல் தேர்வுகள். ஒரு thesis ஏ எழுதிவிடுகிரீர்கள் 🙂
   //மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
   நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு//
   என்ன அருமையான பாடல் வரிகள்! Ultimate! இதைவிட எளிமையா காதலை, பக்தியை சொல்லிவிட முடியாது.

   amas32

 • G.Ra ஜிரா 11:24 am on March 25, 2013 Permalink | Reply
  Tags: ஆர்.சுதர்சனம், உடுமலை நாராயணகவி, என்.எஸ்.கிருஷ்ணன், எஸ்.வி.வெங்கட்ராமன், கா.மு.ஷெரிப், சிதம்பரம் சி.எஸ்.ஜெயராமன், ஜெரார்டு, ஜேம்ஸ் வசந்தன், திருச்சி லோகநாதன், மாயா   

  காசு மேலே, காசு வந்து… 

  ஒருவன் ஒரு பிறப்பில் கற்ற கல்வி ஏழுபிறப்பிலும் தொடர்ந்து வரும் என்று ஐயன் வள்ளுவர் கூறியிருக்கிறார். கல்வியும் பாவபுண்ணியங்களும் தொடர்ந்து வரும். ஆனால் செல்வம்?

  ஒரு பிறப்பில் பெற்ற செல்வம் அந்தப் பிறப்பு முழுதும் தொடர்ந்து வந்தாலே அது பெரும் பேறு. ஓரிடத்தில் நில்லாமல் ”செல் செல்” செல்வதால் அதற்குச் செல்வம் என்று பெயர் வந்ததோ! இன்றைக்கு செல்வம் என்பது பணம் என்றாகி விட்டது.

  அந்தப் பணம்(பொருள்) இல்லாதவர்க்கு இவ்வுலக வாழ்க்கை இல்லை என்றும் ஐயன் வள்ளுவர்தான் கூறியிருக்கிறார். இந்த உலகத்தில் பணம் இல்லையென்றால் எதுவும் செய்ய முடியாது. அந்தப் பணத்தை வைத்து பழைய படங்களில் நிறைய பாடல்கள் வந்திருக்கின்றன. ஏனென்றால் அந்த படங்களில் இயல்பான மனிதர்களின் எளிய பிரச்சனைகள் சிறிதேனும் அலசப்பட்டன.

  பணம் என்றே ஒரு திரைப்படம். அதற்கு முன் எம்.எஸ்.விசுவநாதன் தனியாக இசையமைத்திருந்தாலும் மெல்லிசை மன்னர்கள் இருவருமாக இணைந்து இசையமைத்த முதற்படம் பணம். அவர்கள் இசையில் இந்தப் படத்தில் ஒரு பாடல். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனே எழுதிப் பாடிய பாடலிது.

  எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்
  பணத்தை எங்கே தேடுவேன்
  உலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்
  அரசன் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை எங்கே தேடுவேன்
  கருப்பு மார்க்கெட்டில் கலங்குகின்றாயோ
  கஞ்சன் கையிலே சிக்கிக் கொண்டாயோ
  கிண்டி ரேசில் சுத்திக் கிறுகிறுத்தாயோ
  திருப்பதி உண்டியலில் சேர்ந்து விட்டாயோ
  திருவண்ணாமலை குகை புகுந்தாயோ
  தேர்தலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ
  தேக சுகத்துக்காக ஊட்டி சென்றாயோ

  நகைச்சுவையாக வரிகள் இருப்பது போலத் தோன்றினாலும் பாடலில் பணம் பதுங்கியிருக்கும் இடங்கள் தெள்ளத் தெளிவாகத் தெரியும். கலைவாணர் என்ற பெயர் பாடலை எழுதியவருக்குப் பொருத்தமே.

  இப்படிப் பட்ட பணம் அனைத்தையும் ஆட்டி வைக்கும். எதுவும் அதன் முன் வாலாட்ட முடியாது என்பதை அதே காலகட்டத்தில் வந்த பராசக்தி திரைப்படத்தில் ஆர்.சுதர்சனம் இசையில் உடுமலை நாராயணகவி எழுதினார்.

  தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம்
  காசு முன் செல்லாதடி குதம்பாய் காசு முன் செல்லாதடி
  ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
  காசுக்குப் பின்னாலே குதம்பாய் காசுக்குப் பின்னாலே

  அப்படி பணத்தின் திறமையைச் சொல்லும் போது “ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசு பணம் காரியத்தில் கண்ணாய் இருக்கனும்” என்று நமக்கெல்லாம் அறிவுரையும் சொல்கிறார் உடுமலை நாராயணகவி. சிதம்பரம் சி.எஸ்.ஜெயராமன் இந்தப் பாடலை மிக அருமையாகப் பாடியிருக்கிறார்.

  இப்படி ஆரியக் கூத்தோ காரியக் கூத்தோ ஆடிச் சம்பாதிக்கும் பணம் எப்படியெல்லாம் செலவாகிறது என்பது தெரியாமலேயே செல்வாகிவிடும். இன்றுதான் வங்கிக் கணக்கில் சம்பளம் வந்தது போல இருக்கும். சில நாட்களிலேயே பழைய நிலைதான். இதையும் பாட்டில் சொல்ல பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கு எஸ்.வி.வெங்கட்ராமன் இசையில் வாய்ப்பளித்தது இரும்புத்திரை திரைப்படம். பாடலுக்குக் குரலால் உயிர் கொடுத்தவர் திருச்சி லோகனாதன்.

  கையில வாங்கினேன்
  பையில போடல
  காசு போன எடம் தெரியல்லே
  என் காதலி பாப்பா காரணம் கேப்பா
  ஏது சொல்லுவதென்றும் புரியல்லே
  ஏழைக்கு காலம் சரியில்லே

  இப்படியான நிலையில் பணம் இருப்பவனைத்தான் உலகம் மதிக்கிறது. அவனே வல்லான். அவன் வகுத்ததே வாய்க்கால். எவ்வளவு நல்ல குணமுடையவனாக இருந்தாலும் பணத்தைப் பார்த்துதான் உற்றாரும் ஊராரும் மதிப்பார்கள் என்பதை கா.மு.ஷெரிப் ஒரு பாடலில் அழகாகக் காட்டியிருப்பார். பணம் பந்தியிலே என்ற திரைப்படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடலது.

  பணம் பந்தியிலே குணம் குப்பையிலே
  அதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே

  இந்த உலகத்தையே இன்பவுலகமாக்கும் அந்தப் பணம் வந்தால் கொண்டாட்டங்களும் குதியாட்டங்களுக்கும் குறைவேது. பணம் வந்தால் அதைத் திருப்புவேன் இதைப் புரட்டுவேன் என்று கனவு காணும் மக்கள்தான் எத்தனையெத்தனை பேர். அத்தனை கனவுகளையும் கவிஞர் ஆலங்குடி சோமு ஒரு பாட்டில் வைத்தார். சொர்க்கம் திரைப்படத்தில் இடம் பெற்ற அந்தப் பாடலை எம்.எஸ்.விசுவநாதன் இசையில் டி.எம்.சௌந்தரராஜன் பாடினார்.

  பொன்மகள் வந்தாள் பொருள் கோடிதந்தாள்
  பூமேடை வாசல் பொங்கும் தேனாக
  ………………………………………………
  செல்வத்தின் அணைப்பில் கிடப்பேன்
  வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன் ராஜனாக
  இன்பத்தின் மனதில் குளிப்பேன்
  என்றென்றும் சுகத்தில் மிதப்பேன் வீரனாக

  இப்படியெல்லாம் கனவு கண்ட ஏழையிடம் காசு உண்மையிலே வந்து விடுகிறது. சும்மாயிருப்பானா? அதற்கும் திரைப்படத்தில் ஒரு பாடல் உண்டு. கார்த்திக்ராஜா இசையில் வாலி எழுதி கமலும் உதித்நாராயணனும் பாடினார்கள்.

  காசு மேலே காசு வந்து கொட்டுகிற நேரமிது
  வாசக்கதவ ராசலெச்சுமி தட்டுகிற நேரமிது
  அட சுக்கிரன் உச்சத்தில்
  லக்குதான் மச்சத்தில்
  வந்தது கைக்காசுதான்

  காசு என்று சொல்லிவிட்டாலும் ஒவ்வொரு ஊரிலும் அதற்கு ஒவ்வொரு பெயர். இந்தியாவில் இன்று ரூபாய். அமெரிக்காவில் டாலர். ஐரோப்பாவில் யூரோ. ரஷ்யாவில் ரூபிள் என்று எத்தனை வகையான பணங்கள். அந்தப் பண வகைகளை மதன் கார்க்கி புத்தகம் திரைப்படப் பாடலில் ஜேம்ஸ் வசந்தன் இசையில் அடுக்கியுள்ளார். அப்படிப் பட்டியல் போடுவதோடு நிற்காமல் பணம் இல்லாவிட்டாலும் தூக்கமில்லை இருந்தாலும் தூக்கமில்லை என்றொரு உண்மையையும் சொல்லியிருக்கிறார். ஜெரார்டும் மாயாவும் இணைந்து இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார்கள்.

  டாலர் யூரோ ரூபா ரூபிள் பெசோ டாகா
  ரியல் புலா தினார் ரிங்கிட் குனா கினா
  யுவான் லிரா க்ரோனி பவுண்ட் யென் ராண்ட் ஆஃப்கானி
  கோலன் ஃப்ரான்க் சொமோனி Money is so funny!
  ……………………………………….
  கையில் வரும் வரைக்கும் கண்ணில் இல்ல உறக்கம்
  கையில் அது கெடச்சும் கண்ணில் இல்லடா உறக்கம்

  என்னதான் சொல்லுங்கள். காசு எல்லா இடங்களிலும் வேலை செய்வதில்லை. காசு குடுத்து அன்பை வாங்க முடியாது. சாப்பாட்டை வாங்கலாம். பசியை வாங்க முடியாது. மிகப் பெரிய கோயிலையே கட்டலாம். ஆனால் காசு குடுத்து அருளை ஒருபோதும் வாங்கவே முடியாது. அனைத்துக்கும் மேலாக பணம் மட்டுமே நிம்மதியைக் கொடுக்காது. இப்படியாக பணத்தால் செய்ய முடியாததை இன்னொன்று செய்யும். அது என்னவென்று மெல்லிசை மன்னர் இசையில் கவியரசர் கண்ணதாசன் எழுதி டி.எம்.சௌந்தரராஜன் அந்தமான் காதலி திரைப்படத்துகாக பாடியிருக்கிறார்.

  பணம் என்னடா பணம் பணம்
  குணம் தானடா நிரந்தரம்

  பதிவில் இடம் பெற்ற பாடல்களின் சுட்டிகள்.

  பணம் என்னடா பணம் பணம் – http://youtu.be/xgUCFhNpOhY
  எங்கே தேடுவேன் பணத்தை – http://youtu.be/4cX12Szgsyc
  தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை – http://youtu.be/eCVQAzG8_14
  கையில வாங்குனேன் பையில போடல – http://youtu.be/UDhOVDUouhc
  பணம் பந்தியிலே குணம் குப்பையிலே – http://youtu.be/1VKqj92W73k
  பொன்மகள் வந்தாள் பொருள் கோடி – http://youtu.be/XGr0vonzcjE
  காசுமேல காசு வந்து – http://youtu.be/iMu_QWzjoW4
  டாலர் யூரோ ரூபா ரூபிள் – http://youtu.be/MA-_OfqUl_0

  அன்புடன்,
  ஜிரா

  114/365

   
  • மழை!! 4:10 pm on March 25, 2013 Permalink | Reply

   wow.. super.. thanks geeraa.. :)))))))

   • GiRa ஜிரா 9:06 am on April 1, 2013 Permalink | Reply

    நன்றி 🙂

  • rajnirams 5:09 pm on March 25, 2013 Permalink | Reply

   ஆஹா ஓஹோ…கலக்கிட்டீங்க சார்.வாழ்த்துக்கள்.

   • GiRa ஜிரா 9:06 am on April 1, 2013 Permalink | Reply

    நன்றி நண்பரே 🙂

  • Saba-Thambi 8:25 pm on March 25, 2013 Permalink | Reply

   காசே தான் கடவுளடா ! அந் தகடவுளுக்கும் இது தெரியுமடா!!

   • GiRa ஜிரா 9:07 am on April 1, 2013 Permalink | Reply

    ஆமா ஆமா.

    ஆண்டவன் தொடங்கி ஆண்டிகள் வரைக்கும் காசேதான் கடவுளடா!

  • amas32 8:28 pm on March 25, 2013 Permalink | Reply

   போறுமா? டக டகவென்று எத்தனைப் பாடல்களை எடுத்துவிட்டிருக்கிறீர்கள்! 🙂 சினிமாவில் சென்டிமென்ட் அதிகம். சரோஜா படத்தில் கங்கை அமரன எழுதிய பாடல் “கோடான கோடி” என்று ஆரம்பிக்கும். படமும் தயாரிப்பாளருக்குப் பணத்தை ஈட்டித் தந்தது. சிம்பு நடித்த வானம் படத்தில் no money no money no money da என்று ஒரு பாடல் வரும். படம் பிளாப் ஆகி விட்டது 🙂

   amas32

   • GiRa ஜிரா 9:08 am on April 1, 2013 Permalink | Reply

    அருமையாச் சொன்னிங்க. எப்பவுமே நேர்மறையான கருத்துகளும் சிந்தனைகளும் நல்ல பலனையே தரும். உண்மை.

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel