Updates from November, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • என். சொக்கன் 10:50 pm on November 18, 2013 Permalink | Reply  

  உத்தரவின்றி உள்ளே வா 

  • படம்: ஜில்லுன்னு ஒரு காதல்
  • பாடல்: முன்பே வா
  • எழுதியவர்: வாலி
  • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
  • பாடியவர்கள்: நரேஷ் ஐயர், ஷ்ரேயா கோஷல்
  • Link: http://www.youtube.com/watch?v=OHA_ATdgw_g

  நீ நீ மழையில் ஆட,

  நான் நான் நனைந்தே வாட,

  என் நாளத்தில் உன் ரத்தம்,

  நாடிக்குள் உன் சத்தம்!

  பள்ளியில் தமிழ் மீடியத்தில் அறிவியல் (அல்லது உயிரியல்) படித்தவர்களுக்கு இந்த வரிகளைப் படித்தவுடன் சட்டென்று அந்த ‘நாளம்’ என்ற சொல்லில் மனம் சென்று நிற்கும்.

  ’ரத்தக் குழாய்’ என்று நாம் பரவலாகச் சொல்லும் அதே வார்த்தைதான். ’ரத்த நாளம்’ என்று சொன்னால் இன்னும் அழகாக இருக்கிறது. நாளத்திற்கும் குழாய்க்கும் ஏதேனும் நுட்பமான வேறுபாடு உண்டா என்று தெரியவில்லை.

  அப்புறம் அந்த நாளமில்லாச் சுரப்பிகள்? தமனி? சிரை? தந்துகி? இந்த வார்த்தைகளையெல்லாம் கேட்கும்போது, மறுபடி ஒன்பதாங்கிளாஸுக்குத் திரும்பிவிடமாட்டோமா என்றிருக்கிறது!

  விஷயத்துக்கு வருவோம். நம் உடம்பு நிறைய இருக்கும் ரத்த நாளங்கள் பேச்சிலோ, சினிமாப் பாடல்களிலோ அதிகம் வருவதில்லை என்று நினைத்தேன். கொஞ்சம் தேடினால் ஒரு சில நல்ல உதாரணங்கள் சிக்கின:

  உயிர் உருகிய அந்த நாள் சுகம்,

  அதை நினைக்கையில்,

  ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும் (வாலி)

  ***

  நாளங்கள் ஊடே

  உனதன்பின் பெருவெள்ளம் (மதன் கார்க்கி)

  ***

  ரத்த நாளங்களில் போடும் தாளங்களில்

  புதுத் தாலாட்டுதான் பாடுமா? (பொன்னியின் செல்வன்)

  ***

  மேளங்கள் முழங்குதுங்க, ரத்த

  நாளங்கள் துடிக்குதுங்க (டி. ராஜேந்தர்)

  ***

  ஒரே ஒரு ஆச்சர்யம், ”அறிவியல் கவிஞர்” வைரமுத்து இந்தச் சொல்லை இதுவரை பயன்படுத்தவில்லையோ?

  ***

  என். சொக்கன் …

  18 11 2013

  351/365

   

   
  • Uma Chelvan 6:52 am on November 19, 2013 Permalink | Reply

   நாளமில்லாச் சுரப்பிகள்……..endocrine glands ….that’s what I taught my students today. What a coincident….

   அஞ்சு நாள் வரை அவள் பொழிந்தது ஆசையின் மழை!!
   அதில் நனைந்தது நூறு ஜென்மங்கள் நினைவினில் இருக்கும் -அது போல்
   இந்த நாள் வரும் உயிர் உருகிய அந்த நாள் சுகம். – அதை நினைக்கையில்
   ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும் ………ஒரு நிமிஷம் கூட என்னை பிரியவில்லை

   மிக மிக அருமையான பாடல். இதை தான் முதல் பாடலாக நீங்க சொல்லி இருக்கீங்க!!! still I want to post this song again !!!

  • amas32 8:37 pm on November 19, 2013 Permalink | Reply

   எவ்வளவு ஆராய்ச்சிப் பண்ணியிருக்கீங்க ஒரு பதிவுக்கு! வைரமுத்து இந்த சொல்லை பயன்படுத்தவில்லை என்னும் அளவுக்கு research!

   //என் நாளத்தில் உன் ரத்தம்,// very romantic!

   ரொம்பப் பிடிச்சிருக்கு இந்த போஸ்ட் 🙂

   amas32

  • rajinirams 11:28 am on November 20, 2013 Permalink | Reply

   நல்ல பதிவு. என்ன அருமையான வாலியின் வரிகள் -உயிர் உருகிய அந்த நாள் சுகம்,அதை நினைக்கையில்,ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும்,நீங்கள் சொன்னது போல வைரமுத்து அந்த வார்த்தையை உபயோகிக்காதது ஆச்சர்யமே.

  • நவநீதன் 9:34 pm on January 29, 2014 Permalink | Reply

   ”வந்து தூறல் போடு… இல்லை சாரல் போடு… எந்தன் நாளம் நனையட்டுமே…”

   வைரமுத்து

   படம்: க.கொ.க.கொ
   பாடல்: ஸ்மை யாயி..

 • G.Ra ஜிரா 10:20 am on March 4, 2013 Permalink | Reply  

  ஆனந்தம், ஆரம்பம்! 

  ஆண்களுக்குக் காதல் வந்தால் என்னாகும்? அதைப் பாடலில் சொல்ல முடியுமா? நினைத்தேன் துடித்தேன் பலமுறை அழுதேன் தொழுதேன் மனத்தில் உழுதேன் என்றெல்லாம் எழுதுவது அக்காலம். இக்காலத்துக் கவிஞர்கள் எப்படி எழுதுகிறார்கள் என்று அறிந்து கொள்ள ஒரு எண்ணம் வந்தது.

  நண்பர்களிடம் பிடித்த பாடல் எது என்று கேட்ட போது நிறைய பேர் கும்கியைக் கை காட்டினார்கள். அதிலும் குறிப்பாக அய்யய்யய்யோ ஆனந்தமே பாடலை. டி.இமான் இசையமைத்த அந்தப் பாடலை நானும் கேட்டிருக்கிறேன். பார்த்திருக்கிறேன்.

  அதை வரிவரியாகத் திரும்பவும் கேட்டேன். கவிஞர் யுகபாரதியின் எளிய வரிகள் ஒரு எளிய பாத்திரத்தின் காதலுக்கு மிகப் பொருத்தமாகவே இருந்தது.

  அய்யய்யயோ ஆனந்தமே நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே – என்ற எளிய தொடக்கமே அழகு.

  அவன் யானை வளர்ப்பவன். காட்டில் இருக்கிறான். அதனால் சிந்தனையில் ஐரோப்பாவும் அமெரிக்காவும் வரவில்லை. இயற்கையான காட்சிகளில் காதலைச் சொல்கிறான். அந்த வரிகளில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் இவை.

  நூறுகோடி வானவில் மாறிமாறிச் சேருதே
  காதல் போடும் தூறலில் தேகம் மூழ்கிப் போகுதே

  இந்த வரியிலும் இரண்டாவது வரி மிகச் சிறப்பானது. ஏன் தெரியுமா?

  காதல் உள்ளத்துக்குள்ளே ஏதோ ஒரு இடம் தெரியாத மர்மப்புள்ளியில் தொடங்குவது போலத்தான் இருக்கும். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக படர்ந்து ஆளையே மூழ்கடித்து விடும். அப்படி நடப்பதை என்ன செய்தாலும் தடுக்கவே முடியாது.

  சின்னச் சின்னத் தூறல்களாக எண்ண அலைகள் சிதறிச் சிதறிப் பெருவெள்ளமாகி அந்த வெள்ளத்தில் அவன் மூழ்கிப் போனான் என்று செல்கிறது கற்பனை. இது காதலில் உண்டாகும் உண்மை நிலையும் கூட.

  இதை மிக எளிமையாக ”காதல் போடும் தூறலில் தேகம் மூழ்கிப் போகுதே” என்று சொன்ன கவிஞர் யுகபாரதியை பாரட்டத்தான் வேண்டும்.

  இன்றைக்கு நேற்றா ஆண் இப்படியிருக்கிறான்? இல்லை. எப்போதுமே ஆண் இப்படித்தான். காதல் வந்தால் புலம்பலிலேயே மூழ்கிப் போய்விடுவான்.

  இதே சூழ்நிலை சங்ககாலத்தான் ஒருவனுக்கும் வந்தது. ஆம். அவனுக்கும் வந்தது காதல். தன்னை மறந்தான். தந்தை தாய் மறந்தான். தன் கடமை மறந்தான். தன்னைச் சுற்றியுள்ளதையெல்லாம் மறந்தான். உலகை மறந்தான். காதலுக்குள் தன்னைத் தொலைத்தான்.

  நண்பர்கள் கண்டித்தனர். ஆற்றும் கடமையே ஆண்மைக்கழகு என்று அறிவுறுத்தினர். அவன் கேட்டானா? இல்லையே. செந்தமிழில் சொல் செதுக்கி சொல்லியவர்க்குத் தன்னிலையை விளக்கமாகச் செப்பி விட்டான்.

  கையில்லாதவன் ஒருவன். அவனுக்குச் சொந்தமாய் ஒரு உருண்டையளவு வெண்ணெய். அந்தக் கட்டி வெண்ணெய் சட்டியில் இல்லை. வெட்டுப்பாறையில் இருக்கிறது. பொழுதோ உச்சிப்பகல். முதலில் இளகுகிறது வெண்ணய். பிறகு நெய்யாய் உருவிப் பரவுகிறது. அதைக் காப்பாற்ற விரும்புகிறான் அந்தக் கையில்லாதவன். அது முடியுமா?

  அந்த வெண்ணெய் நெய்யாகிப் பரவுவததைப் போல காதல் அவன் மீது பரவிக்கொண்டிருக்கிறது. கையில்லாதவன் அந்த வெண்ணையைக் கண்களாப் பார்த்தே காப்பாற்ற முடியுமா? முடியவே முடியாது. வெண்ணெய் உருகுவதைத் தடுக்கும் வழி(கை) இல்லாதவனாய் மூழ்கிப் போகிறான். காதலில் மூழ்கிப் போகிறான்.

  இடிக்கும் கேளிர் நும் குறை ஆக
  நிறுக்கல் ஆற்றினோ நன்று மன் தில்ல
  ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில்
  கை இல் ஊமன் கண்ணின் காக்கும்
  வெண்ணெய் உணங்கல் போலப்
  பரந்தன்று இந்நோய் நோன்று கொளற்கு அரிதே
  நூல் – குறுந்தொகை
  திணை – குறிஞ்சி
  கூற்று – தலைவன்
  எழுதியவர் – வெள்ளிவீதியார்

  வெள்ளிவீதியாரும் யுகபாரதியும் எடுத்துச் சொன்ன எடுத்துக்காட்டுகள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் பொருள் ஒன்றுதான்.

  காதல் வந்தால் அதில் ஆண் மூழ்கித்தான் போவன். அப்படி மூழ்குவதுதான் சுகமானது. இன்பமானது. வாழ்க்கைக்கும் ரசமானது. அப்படி மூழ்காத ஆணுக்கு இன்பமில்லை. இல்லறமில்லை. வாழ்க்கையில் எதுவுமேயில்லை.

  அய்யய்யோ பாடலின் ஒளிச்சுட்டி – http://youtu.be/xh8PByTv9kw

  அன்புடன்,
  ஜிரா

  093/365

   
  • kamala chandramani 4:14 pm on March 4, 2013 Permalink | Reply

   சங்க இலக்கியங்களில் காதல் மிக மென்மையாக சொல்லப்பட்டுள்ளது. அற்புதமான மனதைத் தொடும் காதல். திரைப்படப் பாடல்களில் அதைத் தேடுவது …….ஒரிரு முத்துக்கள் கிடைக்கலாம்….

   • GiRa ஜிரா 8:12 am on March 5, 2013 Permalink | Reply

    உண்மைதானம்மா.. இன்றைய பாடல்களில் தேடித்தான் பிடிக்க வேண்டியிருக்கிறது. அவ்வளவு உயிர்ப்புள்ள வரிகள் இன்றைய பாடல்களுக்குத் தேவையேயில்லை. டச் ஸ்கிரீன் பெண்ணே சார்ஜர் நானேன்னு எதையாச்சும் எழுதிக்கிட்டு போய்க்கிட்டேயிருக்கலாம்.

  • amas32 (@amas32) 4:45 pm on March 4, 2013 Permalink | Reply

   //நினைத்தேன் துடித்தேன் பலமுறை அழுதேன் தொழுதேன் மனத்தில் உழுதேன் என்றெல்லாம் எழுதுவது// விவிசி

   நீங்க சொல்ல வந்தது வேற என்றாலும் எனக்கென்னமோ வைரமுத்துவின் அந்தி மழை பொழிகிறது பாடல் தான் உங்கள் பதிவைப் படிக்கும் பொழுது ஞாபகத்துக்கு வருகிறது 🙂
   “தண்ணீரில் முழ்கிக் கொண்டே தாகம் என்றாய்”

   amas32

   • GiRa ஜிரா 8:15 am on March 5, 2013 Permalink | Reply

    தண்ணீர் மூழ்கிக் கொண்டே தாகம் என்றாய்.. நல்ல அழகான முரண். அட்டகாசமான வரியைப் பிடிச்சிங்க 🙂

  • anonymous 11:05 pm on March 4, 2013 Permalink | Reply

   யுக-பாரதி – இந்தப் பேரே ஒரு நல்ல சொல்லு;

   “ஆனந்தம் ஆரம்பம்” -ன்னு நீங்க குடுத்த தலைப்பு மெய்யாலுமே உண்மை தான்!
   யுகபாரதியின் ஆரம்பம் = ஆனந்தம் -ங்கிற படத்தில் தான்!

   பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
   புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்
   -பாட்டுல, நடுவாப்புல ஒரு வரி வரும்; அது சொல்லீரும் “ஒரு ஆணின் காதல்” எப்படி-ன்னு?

   அடி காலம் முழுவதும் காத்திருப்பேன்
   நீ காணும் இடத்தினில் பூத்திருப்பேன்

   காலம் முழுசுமே, பூவா இருக்க முடியாது; ரொம்பக் கடினம்
   மகரந்தச் சேர்க்கை, அறிஞ்சோ அறியாமலோ நடந்துக்கிட்டு தான் இருக்கும்;
   அப்படி நடக்கும் போது, பூ -> காய் ஆகும் ->கனி ஆயீரும்;
   அவரவர் வாழ்க்கை; அதுல கொஞ்சம் கொஞ்சம் அவரவர் இன்ப நலங்கள்!

   ஆனா, இந்த “ஆணின் காதல்”?
   = பூவாகவே இருப்பானாம்
   = அதுலயும், அவ காணும் இடத்தில் மட்டுமே பூத்து இருப்பானாம்
   (ஏன்னா, மகரந்தச் சேர்க்கை, அவ கிட்ட தான்; காற்றில் பரவி வருதல் கூட அவனுக்கு வேணாம்; அதுக்காக ஒடுக்கிக் கொள்கிறான்)

   இந்த ஆரம்ப வரிகள், மனசுல பண்ண மாயமோ என்னமோ..
   யுகபாரதியை ரொம்ப ரொம்பப் பிடிச்சிப் போயிருச்சி
   (i don’t hesitate to say this even to my friend, who is a big lyric writer himself, of course with smiles:)
   —-

   நீங்க குடுத்த வரிகளும் அழகோ அழகு!

   நூறுகோடி வானவில் மாறிமாறிச் சேருதே
   = இப்புடிச் சேர்ந்தா, என்ன வண்ணம்-ன்னு சொல்லுறதாம்? காதலை, “இதான்” ன்னு சொல்லீற முடியாது;

   காதல் போடும் தூறலில் தேகம் மூழ்கிப் போகுதே
   = தூறல்-ல நனையலாம்; லேசாத் தலையைத் துவட்டிக்கிட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம்!
   ஆனா தூறல்-ல யாராச்சும் “மூழ்கிப்” போயிருவாங்களா? = அதான் “ஆணின் காதல்”

   வாழ்க்கையே இல்லீன்னாலும், கடைசி வரைக்கும் அவனே-ங்கிற உறுதி;
   இது ஆண் காதலில் அதிகம்!
   KB Sundarambal அம்மா என்னும் பெண் காதலிலும் உண்டு! அந்தப் பெண்ணுக்கு ஆண்மையின் உள்ள உறுதி!

   • anonymous 11:43 pm on March 4, 2013 Permalink | Reply

    நடுவுல, மன்மத ராசா, காதல் பிசாசு -ன்னுல்லாம் யுகபாரதி எழுதுனது வேற; அங்கிட்டு நான் போவலை:) chummaa time pass!

    மைனா, கும்கி பாடல்கள் மிக்கு அழகு!
    ——

    பொதுவா, ஆண், “ஆசை” அதிகம் வச்சிப் பாடுவதால், ஆண் காதலில், “காதலை” விடக் “விரகம்” கலந்து இருப்பதாத் தான் பலருக்கும் தோனும்!

    ஆனா, “ஆணின் காதல்” -ன்னு திரை-இலக்கியப் பாடல்கள், கொஞ்சமே கொஞ்சம்; அத்தனையும் மூழ்கி எடுக்கும் முத்துக்கள்!

    ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் -ன்னு ஒரு பாட்டு; அதுல ஒரு வரி

    வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது – உனது கிளையில் பூவாவேன்
    இலையுதிர்காலம் முழுதும் – உனக்கு மகிழ்ந்து வேராவேன்
    -ன்னு வரும்;
    இதே பூ-வேர் உவமை தானோ என்னமோ, ஒரு ஆணின் காதலுக்கு?
    ——

    பூமி தான் நிலாவுக்கு ஏங்கும்; ஆனா நிலா ஏங்குமா?

    பெண் தான் எப்பமே “ஏங்குறாப்” போலப் பல பாடல்கள்;
    சுசீலாம்மாவின் சாகாத வரம் = நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா

    ஆனா, ஒரு ஆணின் ஏக்கம்; அது கண்ணதாசன் மெட்டு
    = நீ இல்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா

    தேய்ந்த வெண்ணிலா = தன்னையே தேய்த்துக் கொள்ளும் ஆண் காதலைத் தொட்டுக் காட்டி இருப்பாரு கண்ணதாசன்;
    But, என்ன நடுவுல, காமம் உள்ள வரிகளும் வரும் = இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா

    அதனால், ஆண் காதலில் “ஏக்கமே இல்லை” -ன்னு ஆயீறாது;
    சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா?
    வாழ்க்கை வழியிலா? ஒரு மங்கையின் ஒளியிலா?
    -ன்னு, கொஞ்சம் உன்னிச்சிப் பாத்தாத் தான் தெரியும், “ஆணின் காதல்”!
    ——

    ஆணின் தவிப்பு அடங்கி விடும்
    பெணின் தவிப்பு தொடர்ந்து விடும்
    -ன்னு ஒரு பாட்டு இருக்கு;

    ஆனா பல ஆண்களின் உடல் தவிப்பு அடங்கீருமே தவிர,
    காதல் நெறைஞ்ச ஒரு ஆணின் தவிப்பு = அது அடங்குவதேயில்லை என்பது தான் உண்மை!

  • anonymous 12:18 am on March 5, 2013 Permalink | Reply

   சங்கப் பாடல் பத்தி, ஒன்னுமே சொல்லாமப் போயிறணும் -ன்னு நெனைச்சேன்; முடியலை; தோல்வி!

   வெள்ளி வீதியார் = என் உள்ள வீதியார்!
   ———

   இவரு ஒரு பொண்ணு தான்;
   ரொம்பவும் காதலில் அழிஞ்சி போன பொண்ணு;

   ஆனா, இந்தப் பாட்டை மட்டும், பொண்ணாப் பாடாம, ஒரு ஆணாப் பாடுறா; ஏன்?

   ஒரு தோழன், என்னடா, ஏன் இப்பிடி ஆயிட்ட? -ன்னு கேக்குறான்;
   அதுக்குத் தலைவன் கூற்றாகத், தன் காதலை ஏத்திச் சொல்லுறா!

   = “நாயகி பாவம்” தானே கேட்டு இருக்கீக?
   = இது “நாயகன் பாவம்” பாட்டு;
   ———

   ஏன்-ன்னா, சங்க காலத்தில் (கொஞ்சம் இந்தக் காலத்தில் கூட), காதலை இழந்த ஒரு பொண்ணைச், சமூகம் அப்படியே விட்டுறதில்லை!
   என்னென்னமோ பண்ணி, எப்படியும் “மகரந்தச் சேர்க்கை” செஞ்சீரும்!

   ஆனா, ஒரு “உண்மையான ஆணை”, அப்படிப் பண்ணுறது மெத்த கடினம்!

   ஆண் கிட்டேயும், சமூகம் தன் வித்தையைக் காட்டும்;
   ஆனா, அவன் “காதல் ததும்பும் ஆணாக” இருந்தா? = அவன் கிட்ட சமூகத்தின் பாச்சா பலிப்பதில்லை; அவன் அப்படியே “நின்னுருவான்”;

   இந்தக் “காதல் உறுதி”;
   அதான், தன் காதலும் “நின்னுற” வேண்டி, “ஆண் காதல்” ஆக்கிப் பாடுறா, இந்த வெள்ளி வீதியார் என்னும் பொண்ணு;

   இது, சங்கத் தமிழ், “உண்மையான ஆண்”களுக்குச் செய்த மிகப் பெரும் மரியாதை;
   அதுவும் ஒரு புரட்சிப் பொண்ணு மூலமாவே செய்த பெருமிதம்;

   ஆண்கள் மட்டுமே அந்தரங்க உறுப்பு/ முலை-ன்னு பாடிய காலத்தில்… என் அல்குலில் வெள்ளைப் படுதே -ன்னு கூச்சம் துணிஞ்சி பாடிய புரட்சிப் பொண்ணு இவ;
   (கன்றும் உணாது, கலத்தினும் படாது….திதலை அல்குல் என் மாமைக் கவினே)
   ———

   (இந்தச் சங்க இலக்கிய உளவியல் – ஆணாகிப் பாடும் பெண் – தாயம்மாள் அறவாணன் என்கிற பெண் தமிழறிஞரின் நூலிலே காண்க)

   • anonymous 12:49 am on March 5, 2013 Permalink | Reply

    //கை இல் ஊமன் கண்ணின் காக்கும்
    வெண்ணெய் உணங்கல் போலப்//

    இது போலவொரு உவமை, ஆனானப்பட்ட கவிச் சக்கரவர்த்தி கம்பன் கூடிய காட்டியதில்லை… இன்னிக்கி வரை இலக்கியத்தில்! என்னமா ஒரு வீச்சு!

    கண்ணின் காக்கும் = கண்ணால மட்டும் காவல் காக்குறானா(ளா)ம்
    பாத்துப் பாத்து ஏங்குறா!
    ஆனா, வெளிய சொல்லவும் முடியல!
    சொன்னா, தனக்கு இழுக்கோ? இல்லை, அவனுக்கு இழுக்கோ?

    வெண்ணைய் என்னும் காதல்-களி; உருகி, ஒன்னுமில்லாமப் போவப் போகுது;

    ஆனா, எடுத்துக் காப்பாத்த முடியல = கை இல்லை!
    மத்தவங்க கிட்ட சொல்லி ஆத்தவும் முடியல = வாய் இல்லை!

    அப்போ, என்ன தான் வழி? = கண்ணின் காக்கும்!
    ————

    //கை இல் ஊமன், கண்ணின் காக்கும்// – ஒத்த வரி!

    வெறுமனே காக்கும் -ன்னு போட்டிருக்கலாம்! காதலிற் காக்கும் -ன்னு போட்டிருக்கலாம்!
    ஆனா, “கண்ணின் காக்கும்”…

    நம்ம கண்ணு முன்னாடியே, காதல்-களி அழிஞ்சி உருகுவதைப் பாக்குற கொடுமை யாருக்கும் வரக் கூடாது;
    அதை விட, அதை ஆத்திக்க, வெளியில் கூட சொல்லி அழ முடியாத நெலமை யாருக்கும் வரக் கூடாது, முருகா!

    இப்படி வாழ்வது எளிதா? = நோன்று கொளற்கு அரிதே!
    சமூகத்துக்குப் புரியுமா? = நிறுக்கல் ஆற்றினோ!

    கையும் சிறையில், வாயும் சிறையில்
    கண்கள் மட்டும், “ஆணின் காதல்”!

    இதுவொரு சங்கத் தமிழ் வாசிப்பு – சங்கத் தமிழ் சுவாசிப்பு!

    வெள்ளி வீதி முதல், யுகபாரதி வரை… குறிஞ்சிப் பூவென பூக்கும் “உண்மையான ஆண்களின் காதல்”
    பெண்ணின் தவிப்பு தொடர்ந்து வரும்…
    ஆணின் தவிப்பும் அடங்கி விடாது!

    ஆண் காதல் வாழ்க!

  • psankar 12:38 pm on March 6, 2013 Permalink | Reply

   வெள்ளிவீதியார் ஏன் தலைவன் கூற்றாக பாடியிருக்கிறார், தலைவி கூற்றாக பெண் பாடினால் இன்னும் உசிதமாக இருக்குமே என்று கருத்து சொல்ல வந்தேன். பாடும் பெண்களே குறைவு, ஆண்டாளே ஆண் என்று ஒரு கதை உண்டு. இப்படிப்பட்ட பெண்பாற் புலவர் பஞ்சத்தில் ஒழுங்காக பெண் மனத்தை மட்டும் கூறும் விதமாக தலைவி கூற்றாகவே பெண்பாற் புலவர்கள் பாடி இருந்தால், நிறைய பெண்ணிய கருத்துகள் பரவி இருக்குமே. பெண்களின் ஒழுக்கம், கற்பு, காமம், காதல் பற்றி ஆண்களின் பார்வையில் உள்ள பாடல்களினால் பெண்களின் உண்மையான எண்ணங்கள் வெளியிலே தெரியாமலே போய் விடுமோ, என்று யோசித்தேன்.

   பார்த்தால் இங்கு ஏற்கனவே அனானி (அவனா(ரா)நீ?) எழுதி வைத்து விட்டார்.

   @அனானி: இங்கு வந்து இவ்வளவு எழுதுகிறீரே, உமக்கு ஒரு கடிதம் அனுப்பினேனே, பதில் எங்கே !? 😉

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel