உரசிவிட்டேன் சந்தனத்தை! 

மேகத்த தூது விட்டா
தெச மாறிப் போகுமோன்னு
தண்ணிய நான் தூது விட்டேன்
தண்ணிக்கு இந்தக் கன்னி
சொல்லி விட்ட சேதியெல்லாம்
எப்ப வந்து தரப்போற
எப்ப வந்து தரப்போற

இசையரசி பி.சுசீலாவின் குரல் தேனாறாய் ஓடிக் கொண்டிருந்தது. எல்லாருக்கும் தெரிந்த பாட்டுதான். அச்சமில்லை அச்சமில்லை திரைப்படத்தில் வி.எஸ்.நரசிம்மன் இசையில் வைரமுத்துவின் வைரவரிகள்.

மேகம் வானத்தில் மிதந்து போகும். காற்றடித்து திசை மாறிப் போய் விட்டால் அத்தானுக்கு அனுப்பிய சேதியும் திசை மாறிப் போய்விடுமல்லவா! அதுதான் அவளது கவலை. அதனால்தான் மேகத்துக்கு பதிலாக பழகிய வழியில் ஓடிக் கொண்டிருக்கும் ஆற்று நீரை தூதாக அனுப்பினாள் அந்தப் பெண்.

ஆனால் இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போகும் ஒரு யட்சனுக்கு அந்தக் கவலை எல்லாம் இல்லை. மோகங்களைத் தூதனுப்ப அவன் நம்பியது தாகங்கள் கொண்டு நீர் குடித்த மேகங்களைத்தான்.

யார் இந்த யட்சன்?

செல்வத்துக்கெல்லாம் அதிபதி குபேரன். அந்தக் குபேரன் இருப்பது இமயமலையில் உள்ள அளகாபுரி. அந்த அளகாபுரியில் ஒரு ஏரி. அதற்கு மானச ஏரி (மானசரோவர்) என்று பெயர். செல்வத் திருநாட்டின் ஏரி என்பதாலோ என்னவோ… அந்த ஏரியில் பூக்கும் தாமரை மலர்கள் கூட தங்கத் தாமரைகளா இருக்கின்றன. பறவைகளும் பொற்பறவைகளே!

அந்த ஏரியைக் காவல் காக்க வேண்டிய பொறுப்பில் இருந்தவன் தான் நாம் பார்க்கும் யட்சன். அன்றொரு நாள் அவன் காவல் காத்துக்கொண்டுதான் இருந்தான். இரவு வந்தது. மனதில் உறவின் நினைவு வந்தது. முதலில் உடம்பை விட்டுவிட்டு மனம் மட்டும் மனைவியிடம் சென்றது. பின்னர் மனம் போன வழியிலேயே உடம்பும் போனது.

அவன் போன நேரம் பார்த்து அந்தப் பக்கம் வந்தன சில யானைகள். ஏரிக்குள் இறங்கி விளையாடின. அந்த விளையாட்டில் தங்கத் தாமரைகள் சிதைந்து போயின. பொற்பறவைகள் பறந்து போயின. அத்தோடு ஏரி சிதைந்த சேதியும் குபேரனுக்குப் பறந்தது.

அந்த யட்சனை அழைத்தான்.

“கடமை தவறிய யட்சனே! உன்னால் அல்லவோ ஏரி கலங்கியது. தாமரைகள் அழிந்தன. எதை நினைத்து நீ கடமையை மறந்தாயோ அதைப் பிரிந்து ஓராண்டுகாலம் ராமகிரி காட்டுக்குள் வசிப்பாயாக. இதுவே உனக்குத் தண்டனை”

அந்த சாபத்தினால் காட்டுக்கு வந்தவனே நாம் முன்னம் சொன்ன யட்சன். அது ஆடி மாதம் வேறு.

காட்டுக்கு வந்தாலும் வீட்டு நினைப்புதான் அவனுக்கு. மெல்லியலாள் இன்சொல்லாள் தேனிதழாள் நினைப்பு அவனை வாட்டி வதைத்தது. அந்த வேதனையில் அவன் உள்ளத்தில் பிறந்த ஏக்கங்களையெல்லாம் மனைவிக்குச் சொல்ல விரும்பினான்.

யாரிடம் சொல்லி அனுப்புவது. அந்தரங்கமான ஏக்கங்கள் அல்லவா? ஜிமெயிலோ மொபைல் போனோ இல்லாத காலம் அது. மனிதர்களிடம் சொல்லியனுப்ப முடியாது. அப்போது அவன் கண்ணில் பட்டவைதான் மேகங்கள்.

அவன் இருந்த அதே மனநிலையில்தான் அவன் மனைவியும் இருந்தாள். அந்தப் பெண்ணின் மனநிலையை நினைக்கும் போது எனக்கு கவிஞர் தாமரை எழுதிய பாடல் நினைவுக்கு வருகிறது.

தூது வருமா தூது வருமா
காற்றில் வருமா கரைந்து விடுமா
கனவில் வருமா கலைந்து விடுமா
…………….
கருப்பிலே உடைகள் அணிந்தேன்
இருட்டிலே காத்துக்கிடந்தேன்
யட்சன் போலே நீயும் வந்தாய்
………………
மறுபடி வருவாய் என்று துடித்தேன்
நடந்ததை எண்ணி உறங்க மறுத்தேன்
பிரிய மனமில்லை
இன்னும் ஒரு முறை வா…..

தன்னுடைய மனைவியின் ஏக்கங்களைப் புரிந்த கணவனால்தான் தன்னுடைய ஏக்கங்களை வெளிக்காட்ட முடியும். நாம் பார்த்துக் கொண்டிருக்கும் யட்சனும் அந்த வகைதான். காட்டில் இருந்த போது அந்த வழியாக வந்த மேகங்களை அழைத்து தன் ஏக்கங்களை தூது விடுகிறான். ஒருவேளை அந்த மேகங்கள் வழி மாறிப் போய்விட்டால்?

அதற்காகத்தான் அவன் போகும் வழியையும்… போவது சரியான வழிதானா என்பதை உறுதி செய்யும் அடையாளங்களையும் சொல்லியே மேகங்களை தூதனுப்புகிறான்.

இதுதான் காளிதாசர் எழுதிய மேகதூதத்தின் கதை.

ஒவ்வொரு பாடலும் அதன் பொருளும் மிக அழகானவை. ஒரு சிறு பகுதியை உங்களுக்காக ஆங்கில மொழிபெயர்ப்பின் உதவியோடு தமிழாக்கம் செய்து தருகிறேன்.

“மேகங்களே, கடம்ப மலர்கள் பூத்த நிச்ச மலையில் சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு வடக்கே செல்க. அங்கே நாகநதி வரும். ஓட்டத்தில் அது வேகநதி. அங்கிருக்கும் வெயிலுக்கு அது தாகநதி.

அந்த நதிக்கரையிலே, அல்லி மலர்களைக் கிள்ளி மெல்லிய செவித்துளையில் தள்ளி கம்மலாக அணிந்து கொண்டு துளித்துளியாய் வியர்வை வழிய துள்ளித் துள்ளி ஓடுகிறாள் பூ விற்கும் இளம்பெண். நீ போகும் வழியில் அவளுக்கும் சற்று நிழல் தந்து களைப்பை நீக்குவாயாக!”

பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
பாடல் – ஓடுகிற தண்ணியிலே ஒரசி விட்டேன் சந்தனத்த
வரிகள் – கவிஞர் வைரமுத்து
பாடியவர்கள் – இசையரசி பி.சுசீலா, மலேசியா வாசுதேவன்
இசை – வி.எஸ்.நரசிம்மன்
படம் – அச்சமில்லை அச்சமில்லை
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=w_obVXcywTo

பாடல் – தூது வருமா தூது வருமா
வரிகள் – கவிஞர் தாமரை
பாடியவர் – சுனிதா சாரதி
இசை – ஹாரிஸ் ஜெயராஜ்
படம் – காக்க காக்க
பாடலின் சுட்டி – http://youtu.be/BFv9wo4s4jw

அன்புடன்,
ஜிரா

329/365