Updates from November, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • mokrish 11:48 pm on November 29, 2013 Permalink | Reply  

  இல்லாததுபோல் இருக்குது 

  கண்ணதாசன் முன்னாள் நாத்திகர்தானே என்று நண்பர் @ncokkan ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார். பழ. கருப்பையா ஒரு திறனாய்வு நூலில்.

  “கண்ணதாசன் அறியாப் பருவத்தில் கடவுள் நம்பிக்கை உடையவராக இருந்தார். இளமையின் தொடக்கத்தில் கடவுள் மறுப்பாளராக மாறிவிடுகிறார். அந்தக் கால கட்டம் முழுவதிலும் அவர் எழுதிய பாடல்களில் கடவுள் ஏற்பு காணப்படவில்லையே தவிர கடவுள் எதிர்ப்பும் காணப்படாதது ஒரு வியப்பே”

  என்று தொடங்கி ஒரு முழு அத்தியாயமே எழுதியிருக்கிறார். சந்தர்ப்பவசத்தால் ஒரு இயக்கத்தில் சேர்ந்து அதற்குத் தன்னுடைய உயிரினும் இனிய கொள்கையை முதற்பலியாகக் கொடுத்துவிட்டு வெகுகாலமாக இருட்டறையில் புழுங்கிக்  கொண்டிருந்தார் என்றும் சொல்கிறார்.

  இயக்கத்தை விட்டு வெளியேறியபின் மீண்டும் தீவிர கடவுள் நம்பிக்கை! திரைப்பாடல்களில் அதை அழகாக வெளிப்படுத்தினார். அவ்வப்போது உரிமையுடன் நிந்தாஸ்துதியும் பாடினார்

  கண்ணதாசன் சண்முகப்பிரியா என்ற படத்தில் எழுதிய ஒரு பாடல் (இசை சூலமங்கலம் ராஜலட்சுமி & ஜெயலட்சுமி, பாடியவர் டி எம் எஸ்)

  இறைவனுக்கும் பெயரை வைத்தான் ஒரு மனிதன் இங்கே

  இறைவன் இல்லை என்று சொன்னான் ஒரு மனிதன் இங்கே

  என்று தொடங்கி

  இல்லை இல்லை என்றவனும் எதனை இல்லை என்றான்

  இல்லை ஒரு சக்தி என்று சொல்லவில்லை என்றான்

  நாத்திகம் என்பது கடவுள் மறுப்பு மட்டும்தானா? நாத்திகம் என்பது நம்பிக்கையற்று இருப்பதா? யோசித்தால் ஆத்திகர்களைப்போலவே நாத்திகர்களும் ஒரு பெயர் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. ‘ஒரே தேவன்’ என்றோ இயற்கை  என்றோ பெயரிட்டார்கள். ஸ்டார் வார்ஸ் படங்களில் வரும் பிரபலமான வசனம் “May the Force be with you” குறிப்பது கண்ணுக்கு தெரியாத ஒரு சக்தி.

  இரு தரப்பிலும் இருந்ததால் ஆத்திக-நாத்திக வாதத்தை மனிதனும் தெய்வமாகலாம் படத்தில் வெற்றி வேல் வெல்லுமடா என்ற பாட்டில் வைக்கிறார்.

  http://www.youtube.com/watch?v=DvFZurTDX1A

  வெற்றி வேல் வெல்லுமடா வினை தீர்ப்பான் வேலனடா

  கற்றவர்க்கும் கல்லார்க்கும் கருணை தரும் தென்றலடா

  என்று இறைவன் பெருமை  சொல்லும் அண்ணன். ஆனால் தம்பி நாத்திகவாதி.

  இறைவன் ஆளும் உலகம் என்றால் ஏழைகளை ஏன் படைத்தான்

  ஒருவர் வாழ ஒருவர் வாடும் உயர்வு தாழ்வை ஏன் அமைத்தான்

  என்ற stock  கேள்வி கேட்கிறான்.பக்தியில் உருகும் அண்ணன் ‘குழந்தை போல அவனைப் பார்த்தால் கூட வந்து கொஞ்சுமடா ‘ என்று சொன்னால் ‘குழந்தை இங்கு கோடி உண்டு குமரன் என்ன தேவையடா என்று பாடும் தம்பி.  பசியால் குழந்தைகள் வாடும்போது பாலபிஷேகம் எதற்கு  என்ற வழக்கமான வாதம்தான்.

  ஆனால் இது ஏன் mutually exclusive ஆக இருக்கவேண்டும்? குமரனையும் கொண்டாடி கோடி குழந்தைகளையும் கொண்டாட முடியுமே? ஆண்டவனை கும்பிட்டால் அன்பு செலுத்த முடியாமல் போகுமா?

  மோகனகிருஷ்ணன்

  362/365

   
  • amas32 9:43 am on November 30, 2013 Permalink | Reply

   //ஆனால் இது ஏன் mutually exclusive ஆக இருக்கவேண்டும்? குமரனையும் கொண்டாடி கோடி குழந்தைகளையும் கொண்டாட முடியுமே? ஆண்டவனை கும்பிட்டால் அன்பு செலுத்த முடியாமல் போகுமா?//

   இது தான் என் சித்தாந்தமும். என் மகன், பாடலில் தம்பி கேட்கும் கேள்விகளை தான் என்னையும் கேட்பான். உண்டியலில் போடும் பணத்திற்கு வாசலில் பிச்சை எடுப்பவர்களுக்குப் பிடிவாதமாக சாப்பாட்டு பேக்கட் வாங்கிக் கொடுப்பான். சுவாமிக்கு அலங்காரம் இருக்கும் போது இன்னும் ஏன் மலர்கள் வாங்கிப் போகிறாய் என்று கேட்பான். இதே பதில் தான் சொல்லுவேன். அதையும் செய் இதையும் செய்.

   அன்பு இருக்கும் இடத்தில் தெய்வ பக்தி இல்லாமல் இருப்பது அரிது. வெளிப்படாமல் இருந்து ஒரு நாள் பிரவாகமாக வெடிக்கும்.

   வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙂

   amas32

  • rajinirams 10:54 am on November 30, 2013 Permalink | Reply

   கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்,அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும்,இறைவன் உலகத்தை படைத்தானா அவன் தான் ஏழ்மையை படைத்தானா-ஏழ்மையை படைத்தவன் அவனென்றால் இறைவன் என்பவன் எதற்காக? பாடல் சூழ் நிலைக்கேற்ப இப்படியும்-கடவுள் ஏன் கல்லானார் மனம் கல்லாய் போன மனிதர்களாலே, இறைவன் இருக்கின்றானா மனிதன் கேட்கிறான்-மனிதன் இருக்கின்றானா இறைவன் கேட்கிறான்- இப்படியும் பாடல் எழுதிய கண்ணதாசன் இறைவனுக்கும் பெயரை வைத்தான் பாடலின் இறுதியில்”இல்லை இல்லை என்றவனும் எதனை இல்லை என்றான்
   இல்லை ஒரு சக்தி என்று சொல்லவில்லை என்றான்” என்று முத்தாய்ப்பாக முடித்த விதம் அருமை.முதலில் நாத்திகராக இருந்த கவியரசர் பின் இறைவன் திருவடி சரணடைந்து பக்தியில் திளைத்ததோடு பல பக்தி பாடல்களையும் இலக்கியங்களையும் அர்த்தமுள்ள இந்து மதம் என்ற காவியத்தையும் தந்து என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

 • mokrish 8:19 pm on October 14, 2013 Permalink | Reply  

  உருவங்கள் மாறலாம் 

  விஜயதசமி நன்னாளில் மகிழ்ச்சியான ஒரு புதிய ஆரம்பம் காண அனைவருக்கும் #4varinote ன் நல்வாழ்த்துகள்.

  நவராத்திரி பூஜைகளில் கொலு பொம்மைகளில் பார்த்த கடவுள் திருவுருவங்கள் ரொம்ப சுவாரசியம். பல வடிவங்களில் விநாயகர். மயிலோடு முருகன்.  மயிலிறகோடு மாதவன்.  கையில் கொட்டும் காசு லட்சுமி, சிவன் என்ற உருவத்தில் இருக்கும் detailing, நின்ற, நடந்த, அமர்ந்த, கிடந்த என்று பல நிலைகளில் நாராயணன். இன்னும் இன்னும்…

  இவையெல்லாம் வெறும் கற்பனைகளா? கண்டவர் சொன்னதா ? அடியவர்கள் பக்தியில் உணர்ந்ததா?  பாலில் நெய் போல மறைந்து நிற்கும் இறைவனை முகத்தில் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள், அகத்தில் கண்கொண்டு  காண்பதே ஆனந்தம் என்கிறார் திருமூலர். அப்பர் சுவாமிகள் இறைவனின் தோற்றத்தைப் எப்படி எழுதிக் காட்டுவேன் என்கிறார்.

  அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்

     அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்

  இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன்

     இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே

  ஆனால் ஒரு உருவம் கொடுத்தபின் அதை வைத்து பல நல்ல கற்பனைகள். அப்பரின் கிடந்தபாம் பருகுகண் டரிவை பேதுற என்ற பாடலில் சிவபிரான் திருமுடியிற் பாம்பும், பிறையும் உள்ளன.  உமை ஒரு பாகத்தில் இருக்கிறாள். பாம்பினைத் தன் அருகில் கண்டு பார்வதி மயங்க, அப்பாம்பு அவளை நீலமயிலோ என்று ஐயப்பட, பிறையோ, அம்மையின் நுதலைக் கண்டு இவ்வழகு தனக்கில்லையே என்று எண்ணி ஏங்க… அட அட

  வாலி தாய் மூகாம்பிகை படத்தில் ஜனனி ஜனனி என்ற பாடலில்

  ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும்

  சடை வார்குழலும் விடை வாகனமும்

  கொண்ட நாயகனின் இடப்பாகத்தில் நின்றவளை பாட எல்லாம் சொல்லி கங்கையை பற்றி சொல்லவில்லை. குளிர் தேகத்திலே என்று குறிப்பால் சொல்கிறார். அப்பர் சொன்ன பனித்த சடையும்  போல.

  ரவிவர்மா வரைந்த சரஸ்வதி உருவப்படத்தை close-up ல் பார்த்தேன். வெள்ளை உடை அணிந்து வெண் தாமரையில் அமர்த்திருக்கும் அழகிய தோற்றம். நான்கு கைகளில் ஒன்றில் செபமாலையும், மற்றொன்றில் ஏடும் இருக்க, முன் கைகள் இரண்டிலும் வீணையை வைத்து மீட்டுபவளாகச் சரஸ்வதி உருவகப்படுத்தப்படுகிறாள்.  மகாகவி பாரதியார் சொல்லும் சரஸ்வதி வர்ணனை அற்புதம்.

   (திரையில் கௌரி கல்யாணம் படத்தில் இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர் சூலமங்கலம் ராஜலக்ஷ்மி)

  http://www.youtube.com/watch?v=0oL9BklwdX8

  வெள்ளைக் கமலத்திலே — அவள்

  வீற்றிருப் பாள், புக ழேற்றிருப் பாள்,

  கொள்ளைக் கனியிசை தான் — நன்கு

  கொட்டுநல் யாழினைக் கொண்டிருப் பாள்,

  முதலில் படம் பார்த்து விளக்கம் சொல்கிறார். அதன் பின் வரும் வரிகளில் கலைமகளின் விழிகள், கண் மை, நுதல், தோடு, நாசி, வாய் என்று அவர் சொல்லும் கற்பனை அட்டகாசமான character sketch

  வேதத் திருவிழி யாள், — அதில்

  மிக்கபல் லுரையெனுங் கருமையிட் டாள்,

  சீதக் கதிர்மதி யே — நுதல்

  சிந்தனையே குழ லென்றுடை யாள்,

  வாதத் தருக்கமெனுஞ் — செவி

  வாய்ந்தநற் றுணிவெனுந் தோடணிந் தாள்,

  போதமென் நாசியி னாள், — நலம்

  பொங்குபல் சாத்திர வாயுடை யாள்.

  குழந்தைக்கு அலங்காரம் செய்து மகிழ்வது போல இறைவன் உருவங்களையும் கற்பனையில் மெருகேற்றி வழிபடுவதும் ஒரு ஆனந்தம்தான்

  மோகனகிருஷ்ணன்

  316/365

   
  • amas32 8:42 pm on October 14, 2013 Permalink | Reply

   மற்ற நாட்களில் அவ்வளவாகக் கவனிக்கப் படாத தெய்வம் விஜயதசமி அன்று படு கோலாகலமாகக் கொண்டாடப் படுகிறாள். அவள் ஆதற்காகக் கவலைப் பட்டதாகாவும் தெரியவில்லை. அறிவுக்கு அதிபதி, உயர் மறை எல்லாம் போற்றும் அவளை நாம் போற்ற வேண்டியது நம் கடமை.

   மெய் ஞானத்தை அருளும் அவள் கிருபை இல்லாமல் இறைவனடியை அடைவதும் கடினமே.

   அதேபோல அறிவை வைத்து தான் பொருளீட்டவும் முடியும். அதற்கும் அவள் அருளே தேவை.

   சிலருக்கு சில அடையாளங்கள் நம் மனத்தில் ஆழப் பதிந்து விடுகின்றன. அது பல பிறவிகளாக வரும் வாசனையின் காரணமாகவும் இருக்கலாம். அது போல கலைமகள் என்றால் நீங்கள் கூறியிருக்கும் ரவி வர்மாவின் ஓவியம் போல கையில் வீணையுடன் வெள்ளைத் தாமரையில் இருக்கும் சரஸ்வதி நாம் நம் மனக் கண் முன் வருவாள். 🙂

   amas32

 • mokrish 10:05 pm on September 28, 2013 Permalink | Reply  

  நோய் விட்டுப்போகும் 

  சில தினங்களுக்கு முன் ட்விட்டரில் @amas32 ‘நோயற்றே வாழ்வே செலவற்ற செல்வம்’ என்று புது மொழி சொன்னார். தொடர்ந்து இன்றைய மருத்துவம், செலவுகள் என்று ஒரு பெரிய விவாதம்.

  நோயற்ற வாழ்வு பற்றி மாற்று கருத்து இருக்க முடியாது. Health is wealth. நோயற்ற உடல் என்பது பதினாறு செல்வங்களில் ஒன்று என்று அபிராமி பட்டர் ‘திருக்கடவூர் அபிராமியம்மை பதிகம்’ என்ற நூலில் சொல்கிறார்

  கலையாத கல்வியும், குறையாத வயதும், ஓர் கபடு வாராத நட்பும்,

  கன்றாத வளமையும், குன்றாத இளமையும், கழுபிணி இலாத உடலும்,

  சலியாத மனமும்

  என்ற வரிகளில் குறையாத வயதும் குன்றாத இளமையும் கழுபிணி இல்லாத உடலும் என்று நோயற்ற ஆரோக்கியமான வாழ்வு பற்றி மூன்று செல்வங்கள். வாலி பேசும் தெய்வம் படத்தில் ஒரு பாடலில் (இசை கே வி மகாதேவன் பாடியவர்கள் எல் ஆர் ஈஸ்வரி சூலமங்கலம் ராஜலக்ஷ்மி) இந்த செல்வங்களை rearrange செய்கிறார்

  http://www.youtube.com/watch?v=ZqtdSAA-5Es

  நூறாண்டு காலம் வாழ்க

  நோய் நொடி இல்லாமல் வளர்க

  ஊராண்ட மன்னர் புகழ் போலே

  உலகாண்ட புலவர் தமிழ் போலே

  குறையாது வளரும் பிறையாக

  குவியாத குமுத மலராக

  குன்றாத நவநிதியாக

  துள்ளி குதித்தோடும் ஜீவ நதியாக

  நீ வாழ்க.. நீ வாழ்க..

  நீண்ட ஆயுள் என்பது அர்த்தமுள்ளதாக இருக்கவேண்டும் என்றால் முதலில் நோய் இல்லாத உடல் வேண்டும். கலையாத கல்வியும், குன்றாத நவநிதியும் என்ற மற்ற செல்வங்கள் எல்லாம் அடுத்த priority தான்

  அனைவரும் அரை நிஜார் அடிடாஸ் சகிதம் நடந்து, ஓடி நல்ல ஆரோக்கியம் தேடிக்கொண்டே இருக்கிறோம். வள்ளுவர் மருந்து என்று ஒரு அதிகாரம் வைத்து முக்கியமாக உணவைப் பற்றியே பேசுகிறார். நல்ல உணவு, ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி என்று நினைக்கும் போது சுலபம்தான் ஆனால் நடைமுறையில்?

  நோய் வராமல் தடுப்பதுதான் நலம். வந்து விட்டால் அலோபதி, ஹோமியோபதி நேச்சுரோபதி என்று அலைந்து  இவை எதுவும் கை கொடுக்கவில்லையென்றால் வெங்கடாஜலபதி தான் துணை !

  மோகனகிருஷ்ணன்

  301/365

   
  • Suri 3:51 am on September 29, 2013 Permalink | Reply

   Normandu Kalamazoo Valhalla was written by vali not by kannadasan

   • என். சொக்கன் 1:21 pm on September 29, 2013 Permalink | Reply

    Regret the error. It is corrected now

   • rajinirams 2:35 pm on September 29, 2013 Permalink | Reply

    Uma Chelvan-மிகவும் நெகிழ வைத்த பின்னுட்டம்.

    வாழ்க்கையில் முதலிலேயே “நடையாய் நடந்து விட்டால்”பிறகு மருத்துவமனைக்கு நடையாய் நடக்க வேண்டியிருக்காது.”செரிக்காத உணவும் எரிக்காத சக்தியும் தான் மனித ஆரோக்கியத்தின் எதிரிகள்.வெறும் வயிற்றில் 750 மி.லி.தண்ணீர் அருந்திவிட்டு அரை மணி நேரம் அதிவேக நடைப்பயிற்சி நம்மை பாதுகாக்கும் என்று புத்தகத்தில் படித்திருக்கிறேன். மேலும் வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும் என்பது கலைவாணர் வாக்கு. இந்த பாடல் மட்டுமல்ல பல வாழ்த்து பாடல்கள் வாலி எழுதியவையே-பிறந்த நாள் இன்று பிறந்த நாள்,பாவலன் பாடிய புதுமைப்பெண்,என்னோடு பாடுங்கள் நல்வாழ்த்து,நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள். நன்றி.

  • Uma Chelvan 1:16 pm on September 29, 2013 Permalink | Reply

   நோயற்ற வாழ்வே குறைவில்லாத செல்வம். பலவகையான நோய் உள்ளவர்களை தினமும் பார்பவர்களுக்கு அதன் முழு அர்த்தமும் நன்றாக விளங்கும். அப்பொழுது நான் மதுரை பெரிய hospitalலில் house surgency ட்ரைனிங்லில் இருந்த நேரம். Cancer ward ல் போஸ்டிங். ஒரு 18 வயது இளைஞன் blood cancer என்று அட்மிட் ஆகி இருந்தான். திருநெல்வேலி பக்கம் ஒரு சிறு கிராமத்தை சேர்ந்தவன். ஒரே பையன், அப்பா கிடையாது.மிகவும் வறிய குடும்பம். அவனுக்கு ஒரு நாள் blood குடுத்தே ஆக வேண்டிய கட்டாயம். நானும் பகல் முழுவதும் முயற்சி செய்தும் ஒரு பயனும் இல்லை. இரவு 10 மணி போல் வீட்டிற்கு கிளம்பி கொண்ட்ருந்த என் chief முன் போய் நின்று எவ்வளவு முயன்றும் என்னால் blood collect பண்ண முடியவில்லை. காலையில் மீண்டும் ஒரு முறை பார்த்து விட்டு கிடக்க வில்லையெனில், நானே blood கொடுக்கிறேன் sir, என்றேன். சிறிது நேரம் ஏதும் பேசாமல் என் முகத்தயே பார்த்து கொண்டு இருந்தவர் பின் மௌனமாக தலையை மட்டும் ஆட்டி, வேண்டாம்மா, இப்படி எத்தனை பேருக்கு கொடுப்பீங்க என்றார்.அவர் சொன்னதன் அர்த்தம் நன்றாக புரிந்தாலும், காலைக்குள் blood கிடக்கவில்லை என்றால் நான் blood கொடுப்பது என்று மனதுக்குள் முடிவு செய்து அவன்ரூம்க்கு போனேன். infection ஆக கூடாது என தனி ரூம்ளில் இருந்தான். அவனிடம் மிகவும் கஷ்டபட்டும் blood கிடைக்கவில்லை , காலையில் நான் வந்து உனக்கு blood தருகிறேன் என்றேன். அதை கேட்டதும் ” அக்கா”, என்ற ஒரு வார்த்தையுடன் கண்ணீர் விட்டு கதறி அழுதான். என்னாலும் அதருக்கு மேல் நிற்க முடியாமல் பேசாமல் ரூமை விட்டு வெளியே வந்தேன். 10 மணிக்கு மேல் ஆகி விட்டதால் mess லில் சாப்பாடு இல்லை. பசி, அலைச்சல் , வருத்தம் ……அடுத்தநாள் காலை, அவன் ரூமில் அவன் இல்லை. night duty நர்சிடம் , சிஸ்டர் எங்கே அந்த பையன் என்று கேட்டேன். அவன் இன்று காலை 3 மணிக்கு இறந்து விட்டான். நீங்க வர கொஞ்ச நேரம் முன்புதான் அவனை அவன் ஊருக்கு எடுத்து சென்றார்கள். என்றார். I was totally, totally devastated இது நடந்து 20 வருடங்களுக்கு மேல ஆகிறது. இன்றும் அவன் முகமும் அவனின் அக்கா என்ற கதறலும் பசுமையாக என் மனதில் . இவ்வளவு டிராமடிக் சீன் எல்லாம் US லில் கிடையாது. Patient comfort is very important here.. சாகும் பொழுது வலி இல்லாமல் சாக வேண்டும் என்று Heavy dose “Morphine” கொடுப்பார்கள் . அமைதியான முறையில்.எல்லாம் நடக்கும். நம் ஊரில் எப்படி என்று உங்களுக்கே தெரியும். My professional ethic’s prevents me to discuss further about our place.

  • amas32 4:10 pm on September 29, 2013 Permalink | Reply

   உமா செல்வன், உங்கள் பகிர்வு என் மனத்தை அதிர வைக்கிறது. என் இளம் வயதிலிருந்தே பலவித நோய்களுக்கும் ஆட்ப்பட்டிருக்கேன், அவதிப் படுபவர்களையும் பார்த்திருக்கிறேன். என்னை பொறுத்த வரை நோயில்லா வாழ்வே சொர்க்கம். நரகமும் சொர்க்கமும் வேறு எங்கோ இல்லை . நம் தினப்படி வாழ்வில் தான் உள்ளது.

   சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். வாழ்வில் மற்ற எந்த மகிழ்ச்சியையும் அனுபவிக்க முதலில் ஆரோக்கிய வாழ்வு அமைய வேண்டும்.

   amas32

 • G.Ra ஜிரா 11:36 am on June 19, 2013 Permalink | Reply  

  திருப்புகழ்! 

  திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்
  எதிர்ப்புகளை முருகா, உன் வேல் தடுக்கும்
  முருகா…… உன் வேல் தடுக்கும்!

  பூவை செங்குட்டுவன் எழுதிய அற்புதமான பாடல் வரிகள் இவை. கௌரி கல்யாணம் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் இது.

  திருப்புகழின் திருப்புகழை இதை விட எளிமையாகச் சொல்ல முடியுமா என்று நம்மையும் சிந்திக்க வைக்கும் வரிகள் இவை.

  திருப்புகழுக்கு அப்படி என்ன பெருமை? அதைப் புரிந்து கொள்ள சிலபல தகவல்களை நாமும் தெரிந்து கொள்ள வேண்டும்.

  தமிழுக்குக் கிடைத்த அற்புத மாமணி அருணகிரிநாதர். முருகன் திருவருளால் அருணகிரியின் வாக்கில் வந்த பாடல்கள்தான் திருப்புகழ் என்று தொகுக்கப்பட்டன. திருப்புகழ் என்ற பெயரைப் பின்னால் யாரும் வைக்கவில்லை. அருணகிரியே ஒரு பாடலில் திருப்புகழ் என்று குறிப்பிடுகிறார்.

  பக்கரை விசித்ரமணி பொற்கலனை இட்ட நடை
  பட்சியெனும் உக்ர துரகமும் நீபப்
  பக்குவ மலர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
  பட்டுருவ விட்டருள்கை வடிவேலும்
  திக்கது மதிக்கவரு குக்குடமும் ரட்சைதரு
  சிற்றடியு முற்றிய பனிருதோளும்
  செய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு
  செப்பென எனக்கருள்கை மறவேனே

  குற்றமற்ற மணிகள் பொருந்திய பொன்னணிகளை அணிந்து கொண்டு அழகு நடை போடும் மாமயிலையும்,
  கடம்ப மலர் மாலையையும்,
  கிரவுஞ்ச மலையானது மறைந்து போகும் படி திருக்கையால் ஏவித் துளைத்த வேலையும்,
  எட்டுத் திசையும் கிடுகிடுக்க வரும் சேவலையும்,
  அருள் தருகின்ற சிற்றடிகளையும்,
  பன்னிரண்டு தோள்களையும்,
  இருந்து அருள் செய்யும் ஒவ்வொரு திருப்பதிகளையும் வைத்து உயர்ந்த வகையில் திருப்புகழை உள்ளம் விரும்பிப் பாடு என்று அருள் சொன்ன கருணையை நான் என்றும் மறவேனே!

  ஆக.. இந்தப் பாட்டில் இருந்து தெரிவது என்ன? திருப்புகழ் என்ற பெயரை அருணகிரிநாதர் வைக்கவில்லை. முத்தமிழ்த் தெய்வமான முருகப் பெருமானின் திருவாயால் பெயரிடப்பட்ட நூல் திருப்புகழ் என்ற சிறப்பை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

  திருப்புகழில் இப்போது கிடைத்திருப்பது 1307 பாடல்கள்தான். இன்னும் பல்லாயிரம் பாடல்கள் இருந்ததாகவும் அவை மறைந்து போனதாகவும் கூறுகிறார்கள்.

  திருப்புகழைப் பாடிய அருணகிரி அந்தப் பாடல்களை ஓலையில் எழுதி வைக்கவில்லை. அவர் பாடிய கோயில்களில் இருக்கும் அன்பர்கள் அந்தப் பாடல்களை ரசித்து எழுதி வைத்தார்கள். அப்படி எழுதி வைத்த பாடல்கள்தான் இன்று தப்பிப் பிழைத்து நமக்குக் கிடைத்திருக்கின்றன.

  திருப்புகழை அருணகிரி அறிவால் பாடவில்லை. முருகன் அருளால் பாடினார். அதாவது முருகன் அருணகிரியைப் பாட வைத்தான். அந்தப் பாடல்களில் எத்தனையெத்தனை சந்தநயம்! எத்தனை தாள வகைகள் உண்டோ அத்தனையும் திருப்புகழ் பாடல்களில் உள்ளனவாம். அத்தோடு அளவிட முடியாத கவிச்சுவை வேறு.

  அப்படிப்பட்ட திருப்புகழ் பாடல்களை அருணகிரியே ரசித்திருக்கிறார். கேட்டவர்கள் ரசித்ததையும் கண்டிருக்கிறார்.

  பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு
  பட்சிந டத்திய குகபூர்வ
  பச்சிம தட்சிண வுத்தர திக்குள
  பத்தர்க ளற்புத மெனவோதுஞ்
  சித்ரக வித்துவ சத்தமி குத்ததி
  ருப்புக ழைச்
  சிறி தடியேனுஞ்
  செப்பென வைத்துல கிற்பர வத்தெரி
  சித்தவ நுக்ரக மறவேனே

  அடியவர்களுக்கு அருளும் இறைவனே
  ஆடும் மயில் ஏறி விளையாடும் குகனே
  கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு
  ஆகிய திசைகளில் உள்ள அன்பர்கள் எல்லாரும்
  அற்புதம் அற்புதம் என்று ரசித்து ஓதுகின்ற
  அழகு கவிநயமும் சந்தநயமும் மிகுந்து இருக்கும்
  திருப்புகழை கொஞ்சமாவது நானும்
  சொல்லும் படி செய்து உலகில் பரவுவதற்கு
  வகை செய்த உன்னருளை மறக்க மாட்டேன் முருகனே!

  இந்த வரிகளிலும் அருணகிரி முருகனுக்கு நன்றி கூறுகிறார். திருப்புகழ் என்ற பெயர் நிலைபெறும் வகையில் இந்தப் பாடலிலும் இடம் பெறுகிறது.

  சரி. திருப்புகழ் பாடல்களிலேயே முதலில் பாடப்பட்டது எந்தப் பாடல் என்று தெரியுமா? எங்கு பாடப்பட்டது என்று தெரியுமா?

  முத்தைத் தரு பத்தித் திருநகை” என்ற பாடல்தான் முதலில் பாடப்பட்டது. பாடப்பட்ட இடம் திருவண்ணாமலை கோயில்.

  திருப்புகழ் பாடு என்று முருகன் பணித்த பின் “என்ன பாடுவது எப்படிப் பாடுவது” என்று புரியாமல் தவித்த அருணகிரிக்கு “முத்து முத்தாகப் பாடு” என்று முருகனே எடுத்துக் கொடுக்க பாடப்பட்டதுதான் “முத்தைத் தரு பத்தித் திருநகை” என்ற திருப்புகழ்.

  இதில் முத்து என்பது அருணகிரியைப் பெற்ற அன்னை என்றொரு கருத்தும் உண்டு.

  திரைப்படங்களிலும் திருப்புகழ் பாடல்கள் வந்துள்ளன. குறிப்பாக அருணகிரிநாதர் திரைப்படத்தில் மூன்று திருப்புகழ் பாடல்கள் வந்துள்ளன.

  1. முத்தைத் தரு பத்தித் திருநகை
  2. பக்கரை விசித்ரமணி பொற்கலனை இட்ட நடை
  3. தண்டையணி வெண்டயம் கிண்கிணி சதங்கையும்

  அதற்குப் பல ஆண்டுகள் கழித்து இறையருட் கலைச்செல்வர் இயக்கத்தில் வெளிவந்த “யாமிருக்க பயமேன்” என்ற திரைப்படத்தில் ”பாதிமதி நதி போது மணிசடை” என்ற திருவேரகத்(சுவாமிமலை) திருப்புகழ் மெல்லிசை மன்னர் இசையமைப்பில் வெளிவந்தது. அதற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு இளையராஜா இசையில் “ஏறுமயில் ஏறிவிளையாடும்” என்ற திருப்புகழ் ”தம்பி பொண்டாட்டி” என்ற திரைப்படத்தில் இடம் பெற்றது.

  நாமும் திருப்புகழை ஓதி முருகனருளால் நல்லறிவும் நல்லருளும் பெற்று வளமோடு வாழ்வோம்.

  பதிவில் இடம் பெற்ற திருப்புகழ் பாடல்கள்
  திருப்புகழை/பி.சுசீலா,சூலமங்கலம் ராஜலட்சுமி/கௌரிகல்யாணம்/எம்.எஸ்.வி – http://youtu.be/awxORiSnHig
  முத்தைத்தரு/டி.எம்.சௌந்தரராஜன்/அருணகிரிநாதர்/டி.ஆர்.பாப்பா – http://youtu.be/2vRkCV3symk
  பக்கரை/டி.எம்.சௌந்தரராஜன்/அருணகிரிநாதர்/டி.ஆர்.பாப்பா – http://youtu.be/AfZ3UoT4pFw
  தண்டையணி/டி.எம்.சௌந்தரராஜன்/அருணகிரிநாதர்/டி.ஆர்.பாப்பா – http://youtu.be/QyZi7oEUtGI
  பாதிமதிநதி/வாணி ஜெயராம், எல்.ஆர்.அஞ்சலி/யாமிருக்க பயமேன்/எம்.எஸ்.வி – http://youtu.be/FDMcv6CjglI
  ஏறுமயில்/சுவர்ணலதா,மின்மினி,கல்பனா,பிரசன்னா/தம்பிபொண்டாட்டி/இளையராஜா – http://youtu.be/ju0VhKQHQ3c

  பி.கு. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளிவந்த “என் வீட்டுத் தோட்டத்தில்” பாடல் “நாதவிந்து கலாதீ நமோநம” என்ற திருப்புகழின் சாயலிலும் “வெற்றிக் கொடி கட்டு” என்ற பாடல் “முத்தைத் தரு பத்தி” என்ற திருப்புகழின் சாயலிலும் வந்துள்ளது.

  அன்புடன்,
  ஜிரா

  200/365

   
  • kamala chandramani 12:14 pm on June 19, 2013 Permalink | Reply

   திருப்புகழ் ஓதுவதன் சிறப்பை அருணகிரிநாதர் திருத்தணிகைத் திருப்புகழில் அருமையாகக் கூறுகிறார்.
   ”சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ் செகுத்தவ ருயிர்க்குஞ் சினமாக,
   சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பென் றறிவோம்யாம்;
   நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும் நிசிக்கருவறுக்கும் பிறவாமல்
   நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும் நிறைப்புக ழுரைக்குஞ் செயல்தாராய்.”

   வள்ளலாரோ”உய்யும் பொருட்டுன் திருப்புகழை உரையே னந்தோ வுரைக்கடங்காய்” எனத் தணிகைச் செஞ்சுடரிடம் வருந்துகிறார். மேலும்,”அருணகிரி பாடும் நின்னருள்தோய் புகழைப் படியேன் பதைத் துருகேன் பணியேன் மனப்பந்தம் எல்லாம் கடியேன் என் செய்வேன் என் காதலனே” என உருகுகிறார். திருப்புகழும் அருட்பாவும் இரு கண்கள்.

  • Arun Rajendran 12:24 pm on June 19, 2013 Permalink | Reply

   ஜிரா சார்,

   அருணகிரிநாதர் காரணப் பெயர் மாதிரி தெரியுதுங்க.. சுருக்கமா ஒரு குறிப்பும் முடிந்தால் கொடுங்க..படிக்கிற ஆர்வத்தத் தூண்டி இருக்கீங்க… திருப்புகழையும் என்னோட அட்டவனைல சேர்த்திக்கிறேன்

   இவண்,
   அருண்

  • amas32 (@amas32) 12:53 pm on June 19, 2013 Permalink | Reply

   //திருப்புகழில் இப்போது கிடைத்திருப்பது 1307 பாடல்கள்தான். இன்னும் பல்லாயிரம் பாடல்கள் இருந்ததாகவும் அவை மறைந்து போனதாகவும் கூறுகிறார்கள்.//

   நீங்கள் இங்கே நாலு வரி நோட்டில் இந்த இருநூறு நாட்களில் பதிந்த பாடல்கள் நாளை ஒரு ரெபரன்சுக்கு நிச்சயம் பலருக்கு உதவப் போகிறது.

   உங்கள் டாபிக் ஜிரா! சூப்பர் பதிவு 🙂 அனுபவித்துப் படித்தேன் 🙂 நன்றி.

   amas32

  • rajnirams 10:07 pm on June 19, 2013 Permalink | Reply

   முதலில் உங்களுக்கெல்லாம் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
   சூப்பரான பதிவு. இதுவரை நான் அறியாத அரிய தகவல்கள்.அருணகிரிநாதரின் பெருமைகளையும் திருப்புகழின் சிறப்புகளையும் அருமையாக “சுட்டி”காட்டியதற்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்.

 • mokrish 12:24 pm on February 2, 2013 Permalink | Reply  

  கொஞ்சம் கனவு கொஞ்சம் நிஜம் 

  நண்பர் ராகவன் கன்னத்திலே கன்னமிட்ட ஒரு பதிவில் பூஞ்சிட்டு கன்னங்கள் என்ற பாடலை குறிப்பிட்டிருந்தார். அற்புதமான பாடல். இளவயதில் கேட்டபோது என்னை குழப்பிய பாடல் வரிகள் அமைப்பு. பின்னர் கண்ணதாசனை கூர்ந்து ரசிக்க ஆரம்பித்தவுடன் சட்டென்று புரிந்த மயக்கும் வரிகள். (பரவாயில்லை. பள்ளியில் மனப்பாடம் செய்த Wordsworth ன் Daffodils ல் வந்த pensive mood அப்போது புரியவில்லை. பின்னர் புரிந்து வியந்த வரிகள்.)

  எனக்கு இந்த பாடலை கேட்கும்போது ஏனோ Corporate பட்ஜெட் மீட்டிங் நினைவுக்கு வருகிறது. Reality Check (தமிழில் எப்படி சொல்ல வேண்டும்?) என்ற வார்த்தையை அடிக்கடி சொல்லுவார்கள். உயரே கனவுடன் பறக்கும் ஒருவரை தரைக்கு கொண்டு வரும் செயல். கனவுகளை முடிந்தவரை நிஜத்துக்கு பக்கத்தில் வைக்கும் முயற்சி. கண்ணதாசன் அதை துலாபாரம் பாடலில் கொண்டுவந்திருக்கிறார். http://www.youtube.com/watch?v=zsBG59Y0k04

  பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
  பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே

  என்று தாய் சொன்னவுடன் தந்தை ‘செல்லக்குழந்தையே இது கனவு நிஜம் வேறு’ என்று சொல்லும்

  பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும்
  ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே
  இந்த ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே

  வரிகள். தாய் மனம் தளராமல் குழந்தைக்கு சோறுடன் கனவை ஊட்டுகிறாள். அவள் திருமணத்திற்கு முன் செல்வங்களுடன் வாழ்ந்தவள்

  செல்வர்கள் இல்லத்தில் சீராட்டும் பிள்ளைக்கு
  பொன்வண்ண கிண்ணத்தில் பால் கஞ்சி

  என்று இல்லாத பொன் கிண்ணத்து உணவை பாட தகப்பன் விடாமல் உண்மை விளம்பியாய் தன் ஏழ்மை நிலையை

  கண்ணீர் உப்பிட்டு காவேரி நீரிட்டு
  கலயங்கள் ஆடுது சோறின்றி
  இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி

  என்று வலியுடன் சொல்வான். தாயும் உண்மை நிலை அறியாதவள் இல்லை

  கண்ணுறங்கு கண்ணுறங்கு
  பொன்னுலகம் கண்ணில் காணும் வரை
  கண்ணுறங்கு கண்ணுறங்கு

  என்று நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் சொல்கிறாள். தொடர்ந்து மாணிக்க தேர் போல மயிட்டு பொட்டிட்டு விளையாடும் செல்வங்களை பாடும் தாயும் கண்ணாடி வளையலும் காகித பூக்களும் தான் நிரந்தரம் என்று வாதிடும் தகப்பனும் என்று விளையாடும் வரிகள் திரைக்கதையும் காட்சியமைப்பும் சொல்ல முடியாத உணர்வுகளை பதிவு செய்யும் வித்தை.

  இன்னொரு பாடலிலும் இந்த ரியாலிட்டி செக் மாயம் செய்கிறார். தரிசனம் படத்தில் ஒரு பாடலில் காதலுடன் பாடும் பெண்ணை தடுத்து ஆண் பாடும் பாடல் http://www.youtube.com/watch?v=8d_xbq3xFtE

  இது மாலை நேரத்து மயக்கம் பூமாலை போல் உடல் மணக்கும்

  இதழ் மேலே இதழ் மோதும் அந்த இன்பம் தோன்றுது எனக்கும்

  என்று காதல் பற்றி அவள் சொன்னவுடன் அவளை யதார்த்த உலகுக்கு கொண்டு வர ஆண்

  இது காலதேவனின் கலக்கம் இதைக் காதல் என்பது பழக்கம்

  ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பெறப் போகும் துன்பத்தின் துவக்கம்

  என்கிறான். காதலி ரொமான்டிக்காக ‘பனியும் நிலவும் பொழியும் நேரம் மடியில் சாய்ந்தாலென்ன’ என்று கேட்டால் இவன் இதையெல்லாம் உலகம் மறந்து உண்மை உணர வேண்டும் என்று பாடுகிறான். இது ஓட்டை வீடு இதற்குள்ளே ஆசையென்ன என்று கேட்கிறான். பெண் சலிப்புடன்

  முனிவன் மனமும் மயங்கும் பூமி மோக வாசல் தானே

  தினம் மூடி மூடிஒடினாலும் தேடும் வாசல்தானே

  என்றால் இவன் பாயில் படுத்து நோயில் விழுந்தால் காதல் கானல் நீரே என்று துறவறம் பேசுகிறான். மாறி மாறி வெவ்வேறு உணர்வுகளை பதிவு செய்யும் இந்த இரு பாடல்களும் சரியான ரியாலிட்டி check.

  மோகன கிருஷ்ணன்

  063/365

   
  • Rajnirams 9:52 am on February 4, 2013 Permalink | Reply

   இரண்டு பாடல்களில் உள்ள சோகத்தையும் கசக்கி பிழிந்து விட்டீர்கள்.அருமை.
   தரிசனம் பாடலில் இது ஓட்டை வீடு என்று சொல்லிவிட்டு ஒன்பது வாசலை மறந்து
   விட்டீர்களா,அருமையான வரி. இதை வாலியும் கலியுக கண்ணனில் “எட்டடுக்கு கட்டிடத்தில் ஒன்பது ஓட்டை இதில் நல்ல ரத்தம் உள்ள வரை எத்தனை சேட்டை”என்று
   கலக்கி இருப்பார்..இதே போன்ற ஒரு சோக பாடல் மன்னவன் வந்தானடி படத்தில்
   வரும் “சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில் -ஏழ்மை துன்பத்தில் ஆடுதம்மா இங்கே”.
   இன்னொரு பாடல்-காலம் நமக்கு தோழன்,காற்றும் மழையும் நண்பன் என்ற பெத்தமனம் பித்து படப் பாடல் என்று நினைக்கிறேன்.நன்றி.

  • amas32 11:59 am on February 5, 2013 Permalink | Reply

   Glass is half empty/half full கதை தான். பூஞ்சிட்டு கன்னங்கள் என்னை ரொம்ப உருக்கும் பாடல். ஏழ்மை ஏன் மனதை எப்பொழுதும் வருத்தும்.”கொடிது கொடிது வறுமை கொடிது, அதனினும் கொடிது இளமையில் வறுமை” அந்தப் பாடல் இந்த தத்துவத்தைத் தான் பிரதிபலிக்கும். இதேப் பாடல் சோக கீதமாகவும் பின்னாடி வரும். நடிகை சாரதா ஏற்கனவே ஒல்லி தேகம். இந்தப் படத்திற்காக இன்னும் இளைத்ததாகச் சொல்வார்கள்.

   அடுத்தப் பாடல் நான் அவ்வளவாகக் கேட்டதில்லை. அனால் சிறந்த தத்துவப் பாடல்!

   amas32

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel