Updates from September, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • G.Ra ஜிரா 7:51 pm on September 14, 2013 Permalink | Reply  

    இல்லமும் உள்ளமும் 

    1990களின் மத்தியில் வந்த ஒரு இந்திப் பாடல் திடீரென நினைவுக்கு வந்தது. எனக்கு மிகவும் பிடித்த பாடலும் கூட.

    Ghar se nikalte hi
    kuch door chalte hi
    Raste main hai uska ghar

    இந்த வரிகளின் பொருள் என்ன?

    வீட்டில் இருந்து புறப்பட்டு
    சற்று தொலைவு போனால்
    வழியில் அவள் வீடு உள்ளது

    மெட்டுக்குள் அழகாக உட்கார்ந்து கொண்ட இந்தி வரிகளை என்ன நினைத்து கவிஞர் எழுதினார் என்று யோசித்துப் பார்க்கிறேன். அவர் என்ன நினைத்தாரோ தெரியாது. ஆனால் எனக்கு இப்படித் தோன்றுகிறது.

    All roads lead to Rome என்று ஆங்கிலப் பழமொழி ஒன்று உண்டு. எந்தச் சாலையில் போனாலும் அது ரோம் நகரத்துக்குச் செல்லும் என்பது அதன் பொருள். அதாவது ரோம் நகரம் அந்த அளவுக்குப் புகழ் வாய்ந்ததாம்.

    உலகத்துக்கு ரோம் நகரம் என்றால் அவனுக்கு அவள் வீடு. அவன் எந்தத் தெருவில் போனாலும் கால்களும் மனமும் அவனைக் கொண்டு சேர்க்கும் இடம் அவளுடைய வீடு. All roads lead to lover’s house.

    வீடு வரை உறவு என்று கண்ணதாசன் சொன்னதை உறவு இருக்கும் இடம் தான் வீடு என்று மாற்றிக் கொள்ளலாம்.

    ஜெண்டில் மேன் திரைப்படத்தில் செஞ்சுருட்டி ராகத்தில் “நாதவிந்து கலாதீநமோ நம” என்ற திருப்புகழின் சாயலில் அமைந்த பாடல் “என் வீட்டுத் தோட்டத்தில்” என்ற பாடல்.

    காதலி அவளுடைய காதலை அவளுடைய வீட்டுக்குச் சொல்லியிருக்கிறாள். வீடு என்றால்? தோட்டத்துப் பூக்கள், ஜன்னல் கம்பிகள், தென்னை மரங்கள், அந்த மரங்கள் என்று அடுக்கிக் கொண்டே போகிறாள்.

    என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப் பார்
    என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப் பார்
    என் வீட்டுத் தென்னங்கீற்றை இப்போதே கேட்டுப் பார்
    உன் பேரைச் சொல்லுமே!

    வீட்டில் உள்ளவர்களால் காதலுக்கு உதவி இருக்கிறதோ இல்லையோ. வீட்டால் உதவி இருக்கிறது. அவன் பெயரை அவள் அத்தனை முறை வீட்டிடமும் வீட்டில் இருக்கின்ற பொருட்களிடமும் சொல்லியிருக்கிறாள்.

    இதை வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் “நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை” பாடலில் இன்னும் அழகாகச் சொன்னார் கவிஞர் தாமரை.

    காதலன் தன்னுடைய காதலை காதலியிடம் சொல்கிறது போல காட்சியமைப்பு.

    நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
    நீருக்குள் மூழ்கிடும் தாமரை
    சட்டென்று மாறுது வானிலை
    பெண்ணே உன் மேல் பிழை

    ரசனை மிகுந்த வரிகள். தாமரை நீருக்குள் மூழ்குவதே இல்லை. வெள்ளத்து அணையது அதன் மலர் நீட்டம். ஆனால் காதல் வெள்ளம் பெருக்கெடுக்கும் போது தாமரையாவது தாவும் மரையாவது?

    அப்படிப் பட்ட காதலைச் சொல்லும் போது தன்னுடைய வீட்டைப் பற்றி அழகாகச் சொல்கிறான் அவன்.

    என் வீட்டைப் பார் என்னைப் பிடிக்கும்

    அட! அசத்தி விட்டானே! ஆம். ஒருவருடைய வீட்டுக்குப் போனாலே அவரைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். வீட்டை வைத்திருக்கும் பாங்கு மட்டுமல்ல… வீட்டில் இருப்பவர்களின் பாங்கினாலும்.

    இந்த ஒருவரியையே ஒரு நாள் ஒரு கனவு திரைப்படத்துக்காக ஒரு முழுப் பாடலாக்கித் தந்தார் வாலி. காதலன் காதலியை அவனுடைய வீட்டுக்கு கூட்டிச் செல்கிறான். அது வீடே அல்லது என்பது போல இருக்கிறது அவளுடைய அனுபவம். வீட்டில் மனிதர்கள் வாழ்கிறார்களா அல்லது தெய்வங்கள் குடியிருக்கின்றனவா என்று அவள் ஆனந்தமாக ஆச்சரியப்படுகிறாள்.

    ஆதார ஸ்ருதி அந்த அன்னை என்பேன்
    அதுக்கேற்ற லயம் எந்தன் தந்தை என்பேன்
    ஸ்ருதி லயங்கள் தன்னை சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்
    உறவாக அமைந்த நல்ல இசைக் குடும்பம்

    திறந்த கதவு என்றும் மூடாது
    இங்கு சிறந்த இசை விருந்து குறையாது
    இது போல் இல்லம் ஏது சொல் தோழி

    வீடு என்ற சொல்லுக்கு என்ன பொருள் தெரியுமா? மிகமிகப் பழக்கமான சொல்தான். ஆனால் பொருள் பலருக்கும் தெரியாது. விடுவதனால் அது வீடு எனப்பட்டது. எதை விடுவதனால்? நமது துன்பங்களை விடுவதால் வீடு. நாம் துன்பங்களைப் படுவதால் அதற்குப் பெயர் பாடு. அது போல நாம் துன்பங்களை விடுவதால் அதற்குப் பெயர் வீடு.

    வாலி எழுதிய பாடலைப் போல ஒரு வீடு இருந்தால் துணிந்து காதலிக்கலாம். காதற்துணையையும் வீட்டுக்கு கூட்டிச் செல்லலாம்.

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
    பாடல் – என் வீட்டுத் தோட்டத்தில்
    வரிகள் – கவிஞர் வைரமுத்து
    பாடியவர் – எஸ்.பி.பாலசுப்ரமணியம், சுஜாதா
    இசை – ஏ.ஆர்.ரகுமான்
    படம் – ஜெண்டில்மேன்
    பாடலின் சுட்டி – http://youtu.be/Qg3uqQgizyI

    பாடல் – நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
    வரிகள் – கவிஞர் தாமரை
    பாடியவர் – ஹரிஹரன், தேவன், பிரசன்னா
    இசை – ஹாரிஸ் ஜெயராஜ்
    படம் – வாரணம் ஆயிரம்
    பாடலின் சுட்டி – http://youtu.be/QqI2woQjWK4

    பாடல் – காற்றில் வரும் கீதமே
    வரிகள் – கவிஞர் வாலி
    பாடியவர்கள் – ஹரிஹரன், ஷ்ரேயா கோஷல், சாதனா சர்கம், பவதாரிணி
    இசை – இளையராஜா
    படம் – ஒரு நாள் ஒரு கனவு
    பாடலின் சுட்டி – http://youtu.be/pnteqlhXlS4

    பாடல் – Ghar se nikhalte hi
    பாடியவர் – உதித் நாராயணன்
    பாடலின் சுட்டி – http://youtu.be/arK4ybYfH4k

    அன்புடன்,
    ஜிரா

    287/365

     
    • rajinirams 11:52 pm on September 14, 2013 Permalink | Reply

      இல்லத்தின் பெருமையை விளக்கும் அழகான பதிவு.கவியரசர் கண்ணதாசனின் அற்புத வரிகள்-இல்லம் சங்கீதம் அதில் ராகம் சம்சாரம்.கவிஞர் வாலியும் வீட்டை கோவிலாகவும் தன் பிள்ளைகளை தீபங்களாகவும் எடுத்துரைத்த வரிகள்-வீடு என்னும் கோவிலில் வைத்த வெள்ளி தீபங்களே-நாளை நமதே.ஒருவர் ஒரு வீட்டிற்கு புதிதாக போவதை வைத்தும் பாடல் உள்ளது-புது வீடு வந்த நேரம் பொன்னான நேரம்-எங்க பாப்பா. இன்னொரு செண்டிமெண்டான பாடல்-வீடு தேடி வந்தது நல்ல வாழ்வு என்பது-பெண்ணின் வாழ்க்கை-வாலி எழுதியது.

    • Uma Chelvan 12:31 am on September 15, 2013 Permalink | Reply

      very nice write up!!!

      “மணி விளக்காய் நான் இருக்க! மாளிகையாய் தான் இருக்க” !!! தன் காதலனை மாளிகையாகவும் அதில் ஒளிரும் மணி விளக்காய் தன்னையும் …என்ன ஒரு அழகான, அருமையான உவமானம்!. வெள்ளி மணியாக ஒலிக்கும் சுசிலாவின் குரலில்!!

    • Uma Chelvan 5:36 pm on September 15, 2013 Permalink | Reply

      I tried to give the video link, instead the video clip it self is popping up due to some reason. I am sorry about that!!

    • amas32 9:24 am on September 17, 2013 Permalink | Reply

      அசத்திட்டீங்க ஜிரா இன்னிக்கு. அனைத்துப் பாடல்களும் அருமையான தேர்வு! வீடு என்று தமிழில் சொல்வது house என்ற பொருளிலும் இல்லம் என்பது home என்றும் கொள்ளலாமா? அன்புள்ள உறுப்பினர்கள் இருக்கும் வீடு அன்பான இல்லம் ஆகிறது. வீடு வெறும் கட்டிடம் தான். ஆனால் வீடு என்பது home என்ற பொருளில் தான் பெரும்பாலும் பயன்படுத்தப் படுகிறது.

      வீடு பேறு பெறுவதற்கு முதலில் நல்ல வீடு அமைந்து இல்லற சுகத்தை அனுபவித்துப் பின் துறக்க ரெடியாகலாம். நிறைய துறவிகள் இளம் வயதிலேயே மனம் பக்குப்படுவதற்கு முன்பே துறவறத்தை நாடி பின் பல வீடுகளை அழிக்க முற்படுகின்றனர். அவர்களுக்கு நிச்சயம் கிடைக்காது வீடு பேறு!

      amas32

  • G.Ra ஜிரா 11:36 am on June 19, 2013 Permalink | Reply  

    திருப்புகழ்! 

    திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்
    எதிர்ப்புகளை முருகா, உன் வேல் தடுக்கும்
    முருகா…… உன் வேல் தடுக்கும்!

    பூவை செங்குட்டுவன் எழுதிய அற்புதமான பாடல் வரிகள் இவை. கௌரி கல்யாணம் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் இது.

    திருப்புகழின் திருப்புகழை இதை விட எளிமையாகச் சொல்ல முடியுமா என்று நம்மையும் சிந்திக்க வைக்கும் வரிகள் இவை.

    திருப்புகழுக்கு அப்படி என்ன பெருமை? அதைப் புரிந்து கொள்ள சிலபல தகவல்களை நாமும் தெரிந்து கொள்ள வேண்டும்.

    தமிழுக்குக் கிடைத்த அற்புத மாமணி அருணகிரிநாதர். முருகன் திருவருளால் அருணகிரியின் வாக்கில் வந்த பாடல்கள்தான் திருப்புகழ் என்று தொகுக்கப்பட்டன. திருப்புகழ் என்ற பெயரைப் பின்னால் யாரும் வைக்கவில்லை. அருணகிரியே ஒரு பாடலில் திருப்புகழ் என்று குறிப்பிடுகிறார்.

    பக்கரை விசித்ரமணி பொற்கலனை இட்ட நடை
    பட்சியெனும் உக்ர துரகமும் நீபப்
    பக்குவ மலர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
    பட்டுருவ விட்டருள்கை வடிவேலும்
    திக்கது மதிக்கவரு குக்குடமும் ரட்சைதரு
    சிற்றடியு முற்றிய பனிருதோளும்
    செய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு
    செப்பென எனக்கருள்கை மறவேனே

    குற்றமற்ற மணிகள் பொருந்திய பொன்னணிகளை அணிந்து கொண்டு அழகு நடை போடும் மாமயிலையும்,
    கடம்ப மலர் மாலையையும்,
    கிரவுஞ்ச மலையானது மறைந்து போகும் படி திருக்கையால் ஏவித் துளைத்த வேலையும்,
    எட்டுத் திசையும் கிடுகிடுக்க வரும் சேவலையும்,
    அருள் தருகின்ற சிற்றடிகளையும்,
    பன்னிரண்டு தோள்களையும்,
    இருந்து அருள் செய்யும் ஒவ்வொரு திருப்பதிகளையும் வைத்து உயர்ந்த வகையில் திருப்புகழை உள்ளம் விரும்பிப் பாடு என்று அருள் சொன்ன கருணையை நான் என்றும் மறவேனே!

    ஆக.. இந்தப் பாட்டில் இருந்து தெரிவது என்ன? திருப்புகழ் என்ற பெயரை அருணகிரிநாதர் வைக்கவில்லை. முத்தமிழ்த் தெய்வமான முருகப் பெருமானின் திருவாயால் பெயரிடப்பட்ட நூல் திருப்புகழ் என்ற சிறப்பை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    திருப்புகழில் இப்போது கிடைத்திருப்பது 1307 பாடல்கள்தான். இன்னும் பல்லாயிரம் பாடல்கள் இருந்ததாகவும் அவை மறைந்து போனதாகவும் கூறுகிறார்கள்.

    திருப்புகழைப் பாடிய அருணகிரி அந்தப் பாடல்களை ஓலையில் எழுதி வைக்கவில்லை. அவர் பாடிய கோயில்களில் இருக்கும் அன்பர்கள் அந்தப் பாடல்களை ரசித்து எழுதி வைத்தார்கள். அப்படி எழுதி வைத்த பாடல்கள்தான் இன்று தப்பிப் பிழைத்து நமக்குக் கிடைத்திருக்கின்றன.

    திருப்புகழை அருணகிரி அறிவால் பாடவில்லை. முருகன் அருளால் பாடினார். அதாவது முருகன் அருணகிரியைப் பாட வைத்தான். அந்தப் பாடல்களில் எத்தனையெத்தனை சந்தநயம்! எத்தனை தாள வகைகள் உண்டோ அத்தனையும் திருப்புகழ் பாடல்களில் உள்ளனவாம். அத்தோடு அளவிட முடியாத கவிச்சுவை வேறு.

    அப்படிப்பட்ட திருப்புகழ் பாடல்களை அருணகிரியே ரசித்திருக்கிறார். கேட்டவர்கள் ரசித்ததையும் கண்டிருக்கிறார்.

    பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு
    பட்சிந டத்திய குகபூர்வ
    பச்சிம தட்சிண வுத்தர திக்குள
    பத்தர்க ளற்புத மெனவோதுஞ்
    சித்ரக வித்துவ சத்தமி குத்ததி
    ருப்புக ழைச்
    சிறி தடியேனுஞ்
    செப்பென வைத்துல கிற்பர வத்தெரி
    சித்தவ நுக்ரக மறவேனே

    அடியவர்களுக்கு அருளும் இறைவனே
    ஆடும் மயில் ஏறி விளையாடும் குகனே
    கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு
    ஆகிய திசைகளில் உள்ள அன்பர்கள் எல்லாரும்
    அற்புதம் அற்புதம் என்று ரசித்து ஓதுகின்ற
    அழகு கவிநயமும் சந்தநயமும் மிகுந்து இருக்கும்
    திருப்புகழை கொஞ்சமாவது நானும்
    சொல்லும் படி செய்து உலகில் பரவுவதற்கு
    வகை செய்த உன்னருளை மறக்க மாட்டேன் முருகனே!

    இந்த வரிகளிலும் அருணகிரி முருகனுக்கு நன்றி கூறுகிறார். திருப்புகழ் என்ற பெயர் நிலைபெறும் வகையில் இந்தப் பாடலிலும் இடம் பெறுகிறது.

    சரி. திருப்புகழ் பாடல்களிலேயே முதலில் பாடப்பட்டது எந்தப் பாடல் என்று தெரியுமா? எங்கு பாடப்பட்டது என்று தெரியுமா?

    முத்தைத் தரு பத்தித் திருநகை” என்ற பாடல்தான் முதலில் பாடப்பட்டது. பாடப்பட்ட இடம் திருவண்ணாமலை கோயில்.

    திருப்புகழ் பாடு என்று முருகன் பணித்த பின் “என்ன பாடுவது எப்படிப் பாடுவது” என்று புரியாமல் தவித்த அருணகிரிக்கு “முத்து முத்தாகப் பாடு” என்று முருகனே எடுத்துக் கொடுக்க பாடப்பட்டதுதான் “முத்தைத் தரு பத்தித் திருநகை” என்ற திருப்புகழ்.

    இதில் முத்து என்பது அருணகிரியைப் பெற்ற அன்னை என்றொரு கருத்தும் உண்டு.

    திரைப்படங்களிலும் திருப்புகழ் பாடல்கள் வந்துள்ளன. குறிப்பாக அருணகிரிநாதர் திரைப்படத்தில் மூன்று திருப்புகழ் பாடல்கள் வந்துள்ளன.

    1. முத்தைத் தரு பத்தித் திருநகை
    2. பக்கரை விசித்ரமணி பொற்கலனை இட்ட நடை
    3. தண்டையணி வெண்டயம் கிண்கிணி சதங்கையும்

    அதற்குப் பல ஆண்டுகள் கழித்து இறையருட் கலைச்செல்வர் இயக்கத்தில் வெளிவந்த “யாமிருக்க பயமேன்” என்ற திரைப்படத்தில் ”பாதிமதி நதி போது மணிசடை” என்ற திருவேரகத்(சுவாமிமலை) திருப்புகழ் மெல்லிசை மன்னர் இசையமைப்பில் வெளிவந்தது. அதற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு இளையராஜா இசையில் “ஏறுமயில் ஏறிவிளையாடும்” என்ற திருப்புகழ் ”தம்பி பொண்டாட்டி” என்ற திரைப்படத்தில் இடம் பெற்றது.

    நாமும் திருப்புகழை ஓதி முருகனருளால் நல்லறிவும் நல்லருளும் பெற்று வளமோடு வாழ்வோம்.

    பதிவில் இடம் பெற்ற திருப்புகழ் பாடல்கள்
    திருப்புகழை/பி.சுசீலா,சூலமங்கலம் ராஜலட்சுமி/கௌரிகல்யாணம்/எம்.எஸ்.வி – http://youtu.be/awxORiSnHig
    முத்தைத்தரு/டி.எம்.சௌந்தரராஜன்/அருணகிரிநாதர்/டி.ஆர்.பாப்பா – http://youtu.be/2vRkCV3symk
    பக்கரை/டி.எம்.சௌந்தரராஜன்/அருணகிரிநாதர்/டி.ஆர்.பாப்பா – http://youtu.be/AfZ3UoT4pFw
    தண்டையணி/டி.எம்.சௌந்தரராஜன்/அருணகிரிநாதர்/டி.ஆர்.பாப்பா – http://youtu.be/QyZi7oEUtGI
    பாதிமதிநதி/வாணி ஜெயராம், எல்.ஆர்.அஞ்சலி/யாமிருக்க பயமேன்/எம்.எஸ்.வி – http://youtu.be/FDMcv6CjglI
    ஏறுமயில்/சுவர்ணலதா,மின்மினி,கல்பனா,பிரசன்னா/தம்பிபொண்டாட்டி/இளையராஜா – http://youtu.be/ju0VhKQHQ3c

    பி.கு. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளிவந்த “என் வீட்டுத் தோட்டத்தில்” பாடல் “நாதவிந்து கலாதீ நமோநம” என்ற திருப்புகழின் சாயலிலும் “வெற்றிக் கொடி கட்டு” என்ற பாடல் “முத்தைத் தரு பத்தி” என்ற திருப்புகழின் சாயலிலும் வந்துள்ளது.

    அன்புடன்,
    ஜிரா

    200/365

     
    • kamala chandramani 12:14 pm on June 19, 2013 Permalink | Reply

      திருப்புகழ் ஓதுவதன் சிறப்பை அருணகிரிநாதர் திருத்தணிகைத் திருப்புகழில் அருமையாகக் கூறுகிறார்.
      ”சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ் செகுத்தவ ருயிர்க்குஞ் சினமாக,
      சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பென் றறிவோம்யாம்;
      நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும் நிசிக்கருவறுக்கும் பிறவாமல்
      நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும் நிறைப்புக ழுரைக்குஞ் செயல்தாராய்.”

      வள்ளலாரோ”உய்யும் பொருட்டுன் திருப்புகழை உரையே னந்தோ வுரைக்கடங்காய்” எனத் தணிகைச் செஞ்சுடரிடம் வருந்துகிறார். மேலும்,”அருணகிரி பாடும் நின்னருள்தோய் புகழைப் படியேன் பதைத் துருகேன் பணியேன் மனப்பந்தம் எல்லாம் கடியேன் என் செய்வேன் என் காதலனே” என உருகுகிறார். திருப்புகழும் அருட்பாவும் இரு கண்கள்.

    • Arun Rajendran 12:24 pm on June 19, 2013 Permalink | Reply

      ஜிரா சார்,

      அருணகிரிநாதர் காரணப் பெயர் மாதிரி தெரியுதுங்க.. சுருக்கமா ஒரு குறிப்பும் முடிந்தால் கொடுங்க..படிக்கிற ஆர்வத்தத் தூண்டி இருக்கீங்க… திருப்புகழையும் என்னோட அட்டவனைல சேர்த்திக்கிறேன்

      இவண்,
      அருண்

    • amas32 (@amas32) 12:53 pm on June 19, 2013 Permalink | Reply

      //திருப்புகழில் இப்போது கிடைத்திருப்பது 1307 பாடல்கள்தான். இன்னும் பல்லாயிரம் பாடல்கள் இருந்ததாகவும் அவை மறைந்து போனதாகவும் கூறுகிறார்கள்.//

      நீங்கள் இங்கே நாலு வரி நோட்டில் இந்த இருநூறு நாட்களில் பதிந்த பாடல்கள் நாளை ஒரு ரெபரன்சுக்கு நிச்சயம் பலருக்கு உதவப் போகிறது.

      உங்கள் டாபிக் ஜிரா! சூப்பர் பதிவு 🙂 அனுபவித்துப் படித்தேன் 🙂 நன்றி.

      amas32

    • rajnirams 10:07 pm on June 19, 2013 Permalink | Reply

      முதலில் உங்களுக்கெல்லாம் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
      சூப்பரான பதிவு. இதுவரை நான் அறியாத அரிய தகவல்கள்.அருணகிரிநாதரின் பெருமைகளையும் திருப்புகழின் சிறப்புகளையும் அருமையாக “சுட்டி”காட்டியதற்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்.

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel