Updates from August, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • என். சொக்கன் 11:04 pm on August 13, 2013 Permalink | Reply  

    சிறு துரும்பும்… 

    • படம்: மிஸ்டர் ரோமியோ
    • பாடல்: ரோமியோ ஆட்டம் போட்டால்
    • எழுதியவர்: வைரமுத்து
    • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
    • பாடியவர்கள்: ஹரிஹரன், உதித் நாராயண்
    • Link: http://www.youtube.com/watch?v=q_Be1aOMeYc

    யாரையும் தூசைப்போலத்

    துச்சம் என்று எண்ணாதே,

    திருகாணி இல்லை என்றால்

    ரயிலே இல்லை மறவாதே!

    ஒரு சின்னத் திருகாணி காணாமல் போய்விட்டால், ஒரு பெரிய ரயிலே பழுதடைந்து நின்றுவிடக்கூடும். அதுபோல, நாம் யாரையும் சிறியவர்கள் என்று அலட்சியமாக நினைக்கக்கூடாது என்கிறார் வைரமுத்து.

    சுருக்கமாக, தெளிவாக, கிட்டத்தட்ட திருக்குறள்மாதிரி இருக்கிறது, இல்லையா?

    மாதிரி என்ன? திருக்குறளேதான். எப்போதோ ’அச்சாணி’யை உவமையாக வைத்துத் திருவள்ளுவர் சொன்ன கருத்தை அழகாக நவீனப்படுத்திப் பாடலில் பயன்படுத்தியிருக்கிறார் வைரமுத்து:

    உருவுகண்டு எள்ளாமை வேண்டும், உருள் பெரும் தேர்க்கு

    அச்சாணி அன்னார் உடைத்து

    உருளுகின்ற பெரிய தேர், ஒரு சிறிய அச்சாணி இல்லை என்றால் ஓடாது. அதுபோல, யாரையும் உருவத்தை வைத்துக் குறைவாக எடை போட்டுவிடாதீர்கள்!

    அது நிற்க. அச்சாணி, திருகாணி இரண்டுமே மிக அழகான தமிழ்ச் சொற்கள்.

    அச்சு + ஆணி = அச்சாணி. வண்டியின் சக்கரங்களில் உள்ள அச்சு (axle) என்ற பாகத்தை விலகாமல் பொருத்திவைப்பதால் அதன் பெயர் அச்சாணி.

    திருகு + ஆணி = திருகாணி. மற்ற ஆணிகளை அடிக்கவேண்டும், ஆனால் இந்த ஆணியைத் திருகவேண்டும். அதனால் அப்படிப் பெயர்.

    கிட்டத்தட்ட அந்தத் திருகாணியில் உள்ள மரைகளைப்போலவே சுருண்டு சுருண்டு செல்லும் கூந்தல் கொண்ட பெண்கள் உண்டு. சிலருக்கு இயற்கையாகவே சுருட்டை முடி, சிலர் அழகு நிலையங்களுக்குச் சென்று கூந்தலைச் சுழற்றிக்கொள்கிறார்கள்.

    பார்வதி தேவிக்கு அப்படிப்பட்ட Curly Hairதான்போல. திருநாவுக்கரசர் தேவாரத்தில் இப்படி அழகாக வர்ணிக்கிறார்: ‘திருகு குழல் உமை!

    ***

    என். சொக்கன் …

    13 08 2013

    255/365

     

     
    • rajinirams 12:12 pm on August 14, 2013 Permalink | Reply

      யாரையும் துச்சம் என்று எண்ணாதே என்ற வைரமுத்துவின் வரிகளையும் உருவு கண்டு எள்ளாமை குறளையும் விளக்கி.பின் திருகாணி -திருகு குழல் உமை என அழகாக சொல்லியுருக்கிறீர்கள்.குரங்கு என்று துச்சமாக நினைத்து அதன் வாலில் தீ வைத்தானே-அது எரித்தது ராவணன் ஆண்ட தீவைத்தானே என்ற வாலியின் வரிகளும் நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ என்ற வாலியின் வரிகளும் நினைவிற்கு வந்தது.நன்றி.

      • amas32 5:12 pm on August 14, 2013 Permalink | Reply

        நீங்க ரொம்ப அழகா விளக்கம் தருகிறீர்கள் 🙂

        amas32

    • Uma Chelvan 5:14 pm on August 14, 2013 Permalink | Reply

      திருகு குழல் உமை! மிக அழகான வர்ணனை !

    • amas32 5:26 pm on August 14, 2013 Permalink | Reply

      எனக்குத் திருகாணி என்றவுடன் காது தோட்டின் திருகாணி தான் நினைவுக்கு வந்தது. காதிலோ மூக்கிலோ நகையை மாட்டிக்கொண்டு திருகாணியைத் திருகுவதும் ஒரு கலை! அதுவும் பல சமயம் திருகாணியைத் தொலைத்துவிட்டு தேடுவதே தான் வேலை -)
      திருகாணியில் thread போய்விட்டால் சுற்றிக் கொண்டே இருக்கும்.

      நச்சென்று இருக்கிறது இந்த நாலு வரி 🙂

      amas32

  • G.Ra ஜிரா 11:08 am on May 1, 2013 Permalink | Reply
    Tags: கடியலூர் உருத்திரங்கண்ணனார், பத்துப்பாட்டு, பெரும்பாணாற்றுப்படை, பேரரசு   

    ”மா”வடு 

    கோடை வந்தாலே மாமரங்களில் மாம்பிஞ்சுகள் நிறைந்து தொங்கும். மாம்பிஞ்சு என்று சொல்வதை விட மாவடு என்ற பெயர்தான் இன்று பிரபலமாக இருக்கின்றது. மாவடு என்றதுமே இரண்டு திரைப்படப் பாடல்கள் நினைவுக்கு வரும்.

    என்னாத்த சொல்வேனுங்கோ வடுமாங்கா ஊறுதுங்கோ
    வடுமாங்கா ஊறச்சொல்லோ தயிர்சாதம் ரெடி பண்ணுங்கோ
    படம் – சிவகாசி
    பாடல் – இயக்குனர் பேரரசு
    இசை – ஸ்ரீகாந்த் தேவா
    பாடியவர்கள் – அனுராதா ஸ்ரீராம், உதித் நாராயண்
    பாடலின் சுட்டி – http://youtu.be/6XXhDTH2iMw

    முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ
    ………………
    மாவடு கண்ணல்லவோ மைனாவின் மொழியல்லவோ
    படம் – நெஞ்சில் ஒரு ஆலயம்
    பாடல் – கவியரசர் கண்ணதாசன்
    இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன் – இராமமூர்த்தி
    பாடியவர் – இசையரசி பி.சுசீலா
    பாடலின் சுட்டி – http://youtu.be/t5zV9id2QP4

    முதல் பாடல் கவித்துவமே இல்லாமல் இருந்தாலும் தயிர்ச்சோற்றுக்கு மாவடு மிகப்பொருத்தம் என்ற உண்மையைச் சொல்கிறது. இரண்டாவது பாடல் மிக இனிமையான பாடல். மாவடு வகிர்ந்தது போன்ற அழகான கண்கள் என்று உவமிக்கிறது.

    சரி. நாம் தயிர்ச்சோற்றுக்கே போகலாம். ஊறுகாய்கள் எல்லாமே தயிர்ச்சோற்றுக்குப் பொருத்தமாக இருந்தாலும் நன்கு ஊறிய வடுமாங்காய் பலரால் விரும்பப்படுவதுதான் உண்மை.

    இப்பொழுதெல்லாம் ஊறுகாய்களை கடைகளிலேயே வாங்கிக் கொள்ளலாம். ஆனால் வீட்டிலேயே செய்யப்படும் மாவடுவுக்கு இணை வேறெதுவும் இல்லை.

    சென்னையில் மாவடு பார்த்துப் பொறுக்கி வாங்க வேண்டுமென்றால் மயிலைதான் சிறந்த இடம். வெறும் வடுமாங்காய்கள் மட்டுமல்ல, ஊறுகாய் செய்வதற்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் அங்கேயே வாங்கிவிடலாம். பிராமணர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வடுமாங்காய் பிரபலமாக இருப்பது இன்று நேற்று நடப்பதல்ல. கடைச்சங்க காலத்திலேயே அப்படித்தான் இருந்திருக்கிறது.

    கடைச்சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டில் தொகுக்கப்பட்ட ஒரு நூல் அந்தணர் வீடுகளில் வடுமாங்காய் பயன்பாட்டில் இருந்ததையும் செய்முறையையும் தெளிவாகக் குறிக்கிறது.

    அந்த நூல்தான் கடியலூர் உருத்திரங்கண்ணனார் எழுதிய பெரும்பாணாற்றுப்படை.

    மறை காப்பாளர் உறை பதிச் சேப்பின்
    ……………………………………….பைந்துணர்
    நெடு மரக் கொக்கின் நறு வடி விதிர்த்த
    தகை மாண் காடியின், வகைபடப் பெறுகுவிர்
    நூல் – பெரும்பாணாற்றுப்படை
    எழுதியவர் – கடியலூர் உருத்திரங்கண்ணனார்

    இந்த வரிகள் அந்தணர் வீடுகளில் கிடைக்கும் உணவுப் பொருட்களைப் பட்டியல் இடுகின்றது. மாதுளங்காயை எப்படிப் பொரியல் செய்வது என்றும் இந்தப் பாடல் விளக்கும். ஆனாலும் நமக்குத் தேவையான மாவடு பற்றிய வரிகளின் பொருளை மட்டும் பார்க்கலாம்.

    மறைகளை ஓதுகின்றவர்களின் வீடுகளில்
    நெடிய மாமரங்களின் பசுங்கொத்துகளிலிருந்து
    உதிர்க்கப்பட்ட மாவடுக்கள் காடியில் ஊறி
    உண்பதற்கு சோற்றோடு வகைபடப் பெறுவீர்கள்

    காடித்தண்ணீரில் மாவடு ஊற வைக்கப்பட்டு சோற்றோடு கலந்து உண்ணப்பட்டதாம். எப்போது? கிட்டத்தட்ட ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கும் முன்னர்.

    ஆனால் அந்த முறையில்தான் இப்போதும் மாவடுக்கள் ஊறவைக்கப்படுகின்றனவா? இல்லை. இப்போதைய செய்முறையை எளிமையாச் சொல்கிறேன்.

    வடுமாங்காய்களை காம்பு நீக்கி நீரில் அலசிக்கொள்ள வேண்டும். நன்கு கழுவப்பட்ட மாவடுக்களை நிழலில் உலர்த்திக்கொள்ள வேண்டும். சிறிதும் ஈரம் இருக்கக்கூடாது.

    ஆமணக்கு எண்ணெய்யை (விளக்கெண்ணெய்) சிறிதளவு எடுத்துக்கொண்டு மாவடுகளின் மீது பரவலாகப் பரவும்படி கலந்துகொள்ள வேண்டும். சிறிதளவு விளக்கெண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அளவு கூடினால் ”பின்விளைவுகள்” இருக்கும்.

    இந்த மாவடுக்களோடு உப்பு, மிளகாய்த்தூள், கடுகுப்பொடி கலந்து பாத்திரத்தில் போட்டு துணியால் மூடி வைக்க வேண்டும். இரண்டு நாட்கள் கழித்து காலையிலும் மாலையிலும் குலுக்கி விட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக ஊறி ஊறி நீர் சேர்ந்து மாவடுக்கள் சுண்டிச் சுருங்கி சுவையாகிவிடும். அவ்வளவுதான் செய்முறை.

    என்ன? மாவடு வாங்கப் போகின்றீர்களா? மாவடு ஊறியபின் எனக்கும் ஒரு பாட்டில் நிறைய கொடுங்கள்.

    அன்புடன்,
    ஜிரா

    151/365

     
    • rajnirams 9:13 pm on May 1, 2013 Permalink | Reply

      ஆஹா,அருமை.மாவடுவின் பழமையையும்,செய்முறையையும் விளக்கி நாவில் நீர் ஊற வைத்துவிட்டீர்கள்.பேரும் புகழும் படத்தில் கண்ணதாசன் பாடலிலும் மாவடு வரும்.தானே தனக்குள் ரசிக்க்கின்றாள் பாடலில் கர்ப்பமான மனைவியை பார்த்து பாடுவது,”காலம் வரும் வரை தாயின் வயிற்றிலே கால்கள் உதைத்திடும் நாதம்,பச்சை “மாவடுவை”தேடி போவதன் காரணம் மூன்று மாதம்”என்று. நன்றி.

    • rajnirams 9:16 pm on May 1, 2013 Permalink | Reply

      அருமை.மாவடுவின் பழமையையும்,செய்முறையையும் விளக்கி நாவில் நீர் ஊற வைத்துவிட்டீர்கள்.பேரும் புகழும் படத்தில் கண்ணதாசன் பாடலிலும் மாவடு வரும்.தானே தனக்குள் ரசிக்க்கின்றாள் பாடலில் கர்ப்பமான மனைவியை பார்த்து பாடுவது,”காலம் வரும் வரை தாயின் வயிற்றிலே கால்கள் உதைத்திடும் நாதம்,பச்சை “மாவடுவை”தேடி போவதன் காரணம் மூன்று மாதம்”என்று. நன்றி.

      • GiRa ஜிரா 9:09 am on May 3, 2013 Permalink | Reply

        அடடா! என்ன அழகான பாட்டு. சரியாக எடுத்துச் சொன்னீர்கள். எனக்கும் தானே தனக்குள் ரசிக்கின்றாள் பாட்டு மிகவும் பிடிக்கும். கண்ணதாசன் கண்ணதாசன் தான் 🙂

    • amas32 6:26 am on May 2, 2013 Permalink | Reply

      / கிட்டத்தட்ட ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கும் முன்னர் / அவ்வளவு பழமையான பாடலில் வருகிறதா? அதிசயம்! அதைத் தேடி எடுத்து இந்தப் பதிவில் போட்டு இருக்கிறீர்களே, நன்றி 🙂

      நீங்கள் சமீபத்தில் வந்தப் பாடலையும் பழைய பாடலையும் ஒரே இடத்தில் போடும்போது பழைய பாடல்களின் அருமை தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

      என்ன அருமையாக மாவடு செய்முறை எழுதியுள்ளீர்கள் 🙂

      ரொம்ப நல்ல பதிவு ஜிரா 🙂

      amas32

      • GiRa ஜிரா 9:11 am on May 3, 2013 Permalink | Reply

        ரெண்டாயிரமாண்டு பழைய மாவடு பாருங்க. இது மட்டுமல்ல ரெண்டாயிரமாண்டு சமையற் குறிப்புகளும் இருக்கு. சங்க இலக்கியம் அந்தக் காலத்து வாழ்வியலைக் காட்டும் கண்ணாடி. காற்றில் கோட்டை கட்டாம மக்கள் வாழ்வைப் பற்றி பாட்டு கட்டும்.

        மாவடு ரெசிப்பு சரியா இருக்கா? எதாச்சும் கூட்டிக் கொறைச்சு சொல்லியிருந்தா அதையும் சொல்லிருங்க 🙂

    • anonymous 10:39 am on May 2, 2013 Permalink | Reply

      பாணாற்றுப்படை = அதிலிருந்தே மாவடு எடுத்துக் குடுத்தமை மிக்க சிறப்பு; நன்றி

      அதே பாணாற்றுப்படையில் ஊறுகாய் “ஜா”டி பற்றியும் வரும்;

      இந்தப் பதிவை வாசிக்கும் பெண்களுக்கு ஒரு மனமார்ந்த வேண்டுகோள்;
      = ஊறுகாயை, Bottle-இல் அடைப்பது, அதைக் கொலை செய்வது போல்:)
      = தயவு செய்து கல்சட்டி (அ) “ஜா”டியில் அடைத்து புண்ணியம் பெறுங்கள்:) அந்த வாசமே அலாதி!
      ——-

      //பிராமணர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வடுமாங்காய் பிரபலமாக இருப்பது//

      வடு = முகத்தில் “வடு/தழும்பு” -ன்னு மட்டும் பொருளல்ல
      வடு = “பிஞ்சு/ இளமை”
      பல பிராமணர்களின் அழகிய வீட்டுச் சொல் இது;

      அவா கல்யாணப் பத்திரிகை பார்த்து இருந்தாக் கண்டு புடுச்சிருவீக:)
      “மேற்படி சுபமுஹூர்த்தத்தை நடத்திக் கொடுத்து ***வடுவை*** ஆசீர்வதித்து என்னையும் கௌரவிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்”

      இதில் வரும் வடு = சின்னப் பையன்:)
      அதே போல் மா வடு = சின்ன மாங்காய்!

      • anonymous 10:51 am on May 2, 2013 Permalink | Reply

        மாவடு -வில், சில அக்ரஹாரங்களில், மஞ்சப்பொடி/கிழங்கு மஞ்சளும் சேர்ப்பாங்க; நல்லெண்ணெயோடு வாசம் தூக்கலா இருக்கும்:)

        Homemade மாவடு ரொம்ப நாள் கெடாம இருக்கணுமா? = Just drop 1 or 2 ice cubes; It will be ever fresh (கேள்விப்பட்டது – self experience only – No suing allowed:))

        ஆச்சாளுக்கு ஊறுகாயா ஆகாமல் ஆருக்கா(க)
        காய்ச்சாய் வடு மாங்காய்?
        -ன்னு காளமேகம், பெண்களைக் கேலி பண்ணி ஒரு பாட்டு எழுதி இருப்பாரு:))

    • anonymous 11:21 am on May 2, 2013 Permalink | Reply

      முக்கியமா ஒன்னு சொல்லணும் = சிவபெருமான் “மாவடு” கடிச்ச கதை

      சிவபெருமான் ரொம்பக் கருணையே உருவானவரு;
      அவர் கருணை = தனிப் பெரும் கருணை;
      தேவன்/ அசுரன் பேதம் பாக்க மாட்டாரு; பல அசுரர்கள், சிவபெருமானை நோக்கியே தவம் இருப்பதைப் புராணக் கதைகளில் காணலாம்;
      ——

      ஒரு ஊருல ஒரு அன்பர்; பேரு = தாயன்;
      தெனமும், அரிசிச் சோறு – கீரை – மாவடு, சிவபெருமானுக்குக் குடுப்பாரு (நைவேத்தியம்)

      பிராமணர் அல்லர்; வேளாளர்; அதனால் கோயில் ஐயரிடம் குடுத்து நிவேதனம் செய்யச் சொல்வது வழக்கம்;
      (On a sidenote, not only thayir choRu, கீரைச் சோற்றுக்கும் = மாவடு செம Combination)

      இந்த அன்பர், வறுமையில் வாடினாலும், இந்த “மாவடு நைவேத்தியம்” மட்டும் நிறுத்தவே இல்ல;
      ஒரு நாள் புருசனும் பொண்டாட்டியும், கூலி வேலை முடிச்சிட்டு, கோயிலுக்குத் தூக்கிட்டுப் போறாங்க, சோற்றுக் கூடையை;

      அப்போ, கூலி வேலைக் களைப்பினால், கால் தடுக்கி, கீழே விழுந்துடறாங்க…
      மொத்த கீரைச் சோறும், மாவடுவும் = மண்ணுக்குள்:(((
      —–

      அய்யோ, “வீணாப் போயிருச்சே” -ன்னு ஒரு கலக்கம்;
      வாழ்க்கையே வீணாப் போவது கண்ணுக்குத் தெரியாது; ஆனா கொண்டவன் மேல் வச்ச அன்பு வீணாப் போனா மட்டும்..??

      தாயனார், நெல் அறுக்கும் தன் குறுங்கத்தி; அதைத் தன் கழுத்திலே வச்சி அறுக்கத் தொடங்கறாரு:(
      வறுமை + வெறுமையில், வீணாப் போகும் போது தான், இந்த வலி புரியும்;

      அப்போ, கடக் கடக் -ன்னு ஒரு சத்தம்;
      = “மாவடு கடிக்கும் சத்தம்”

      ஈசனுக்கு, முதன் முறையாக, தன் கையாலேயே செஞ்ச மண்சோறு+மாவடு நைவேத்தியம்;
      அவர் கரத்தை, “வேணாம்டா” -ன்னு பற்றிக் கொள்ள,
      “என் கிட்ட வந்துரு” -ன்னு, தன் மார்புறச் சேர்த்துக் கொண்ட சிவபெருமான்;

      கடக், கடக் = மாவடு கடிக்கும் சத்தம், இன்னும் தெளிவாக் கேட்குது….
      இவரே = அரிவாட்டாய நாயனார் திருவடிகளே சரணம்!

      • anonymous 11:28 am on May 2, 2013 Permalink | Reply

        பணம்/ காசு
        உடல் சுகம்
        ஊரில் பெத்த பேரு
        வாழ்க்கையே போனாலும்…

        அந்த “அன்பை” மட்டும் விடாது பிடித்துக் கொண்டு, ஒரு ஓரமாய் வாழும் வாழ்க்கை…
        =இதெல்லாம் முடியுமா?
        =”முடியும்” -ன்னு மனசுக்கு ஊங்கங் குடுப்பதே, இது போல் திருத்தொண்டர் கதை தான்

        மதங்களைக் கடந்த ஈசன்
        “மாவடு கடித்த ஈசன்” = மனவடு களைவான் ஈசன்!

  • G.Ra ஜிரா 11:47 am on April 7, 2013 Permalink | Reply  

    மூன்றெழுத்தில் மூச்சிருக்கும் 

    வாழ்க்கையில் கடன் வாங்காதார் யார்? இன்றைக்கு உலகமே கடனில் இயங்குகிறது. கடனுக்காக இயங்குகிறது. வீட்டுக் கடன், வண்டிக் கடன், தனிப்பட்ட கடன், சம்பளக் கடன் என்று எத்தனையெத்தனையோ கடன்கள்.

    இதையெல்லாம் தெரிந்துதானோ என்னவோ விஸ்வரூபம் திரைப்படத்தில் கவியரசர் கண்ணதாசன் இப்படி எழுதினார்.

    நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து
    அடைபட்ட கடன் எதுவுமில்லை ஆயிரம் இருந்து செல்வம் ஆயிரம் இருந்து

    மகாபாரதத்தில் வரும் கர்ணன் கூட செஞ்சோற்றுக் கடன் தீர்க்க உயிரையே கொடுத்தான். அதைக் கர்ணன் படத்தில் கவியரசர் இப்படியும் எழுதியிருக்கிறார்.

    செஞ்சோற்றுக் கடன் தீர்க்க
    சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா
    கர்ணா.. வஞ்சகன் கண்ணனடா!

    கடன் வாங்கி விட்டால் உயிரைக் கூட கொடுத்து அடைக்க வேண்டி வரும் என்பதற்கு கர்ணன் கதை நல்ல எடுத்துக்காட்டு. ஆனாலும் “வஞ்சகன் கண்ணனடா” என்று சொல்வதன் வழியாக நாம் வாங்கும் கடனுக்கும் காரணம் கடவுளே என்று சொல்கிறார் கண்ணதாசன். அவனின்றி ஒரு அணுவும் அசையாத போது கடன் மட்டும் எப்படி அசையும்?!

    கடன் வாங்கியவருக்கு மட்டுமே துன்பம் கொடுக்கும். கொடுத்தவருக்கு இன்பம்தான். வட்டி என்னும் இன்பம் பெருகிப் பெருகி வரும். அதைச் சொல்லத்தான் பட்டினத்தில் பூதம் திரைப்படத்தில் கவியரசர் கண்ணதாசன் கீழ்க்கண்டவாறு எழுதினார்.

    உலகத்தில் சிறந்தது எது
    ஒரு உருவமில்லாதது எது
    ஆளுக்கு ஆள் தருவதுண்டு
    அசலுக்கு மேலும் வளர்வதுண்டு
    உலகத்தில் சிறந்தது வட்டி

    ஆனால் கண்ணதாசன் காலம் இப்போது இல்லை. நிறைய மாற்றங்கள். கடன் அட்டையைப் (credit card) பெருமையாக பையில் எடுத்துக் கொண்டுதானே வாசலைத் தாண்டுகிறோம். இந்தச் சூழ்நிலையில் பாட்டு எழுதுகின்றவர்கள் கடன் வாங்கினால் தப்பில்லை என்றுதான் எழுதுவார்கள். நாடே கடன் வாங்குகிறது. பிறகென்ன என்ற எண்ணம் நாட்டின் வேர் வரை பரவிவிட்டதே!

    ஈஸ்வரா வானும் மண்ணும் ஃபிரண்ட்ஷிப் பண்ணுது
    உன்னால் ஈஸ்வரா
    ………………………………………………….
    கிளியின் சிறகு கடன் கேட்கலாம் தப்பில்லை

    ஒருவகையில் மக்கள் மனநிலையின் ஓட்டத்தைத்தான் வைரமுத்து அவர்கள் எழுதிய இந்தப் பாடல் காட்டுகின்றது. கண்ணதாசன் காலத்துக்கும் இன்றைய காலத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் ஒரு பாடல் வந்தது. அதுவும் கடன் பாட்டுதான்.

    பெத்து எடுத்தவதான் என்ன தத்து கொடுத்துப்புட்டா
    பெத்த கடனுக்குதான் என்ன வித்து வட்டியக் கட்டிப்புட்டா

    மு.மேத்தா இந்தப் பாட்டை எழுதினார். இவர் கடனுக்காக உயிரைக் கொடுக்கும் கண்ணதாசன் காலத்துக்கும் கடன் வாங்கினால் தப்பேயில்லை என்னும் புதிய உலகத்துக்கும் இடைப்பட்டவர். கடனின் சோகம் புரிந்தவர். ஆனால் எதையாவது கொடுத்து அடைத்து விட முடியும் என்று நம்புகின்றவர். ஆனாலும் வட்டி கட்டியே வாழ்க்கை முடிந்து விடும் என்று நொந்து கொள்கிறார்.

    கதைப்படி பெற்ற தாயால் வளர்க்கப்படாத மகன் பாட்டு அது. பெற்ற கடனைத் தீர்ப்பதற்காக அன்னை மகனையே விற்று வட்டி கட்டியதாகப் பாடுகின்றார். ஆனால் பெற்ற கடன் தீர்க்கக் கூடியதா? அதனால்தான் ”வட்டியைக் கட்டிப்புட்டா” என்று பாடுகிறார். அசல் இன்னும் தீர்க்கப்படாமலேயே இருக்கிறது.

    கடன் பிரச்சனை சங்ககாலத்திலேயே இருந்திருக்கிறது. அதையும் ஒரு பெண் எடுத்து எழுதியிருக்கிறார். அவர் பெயர் பொன்முடியார். ஒருவரிடம் இருந்து வாங்கினால்தான் அது கடன் என்பதில்லை. நாம் செய்ய வேண்டிய கடமை என்பதே ஒரு கடன் என்று எண்ணும் உயர்ந்த பண்புடைய காலத்தவர் இவர். செய்ய வேண்டிய கடமையைச் செய்யாத ஒவ்வொருவரும் கடன்காரரே என்ற இவரது கருத்து மிகச் சிறந்தது.

    ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே
    சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
    வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
    நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
    ஒளிறு வாள் அருஞ் சமம் முருக்கி
    களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே
    நூல் – புறனானூறு
    எழுதியவர் – பொன்முடியார்
    திணை – வாகை
    துறை – மூதில்முல்லை

    பெற்று நான்கு பேர் பார்க்க சிறப்பாக வளர்ப்பது ஒரு தாயின் கடன்(கடமை)
    பிள்ளைக்குத் தக்க கல்வியைக் கொடுத்து சான்றோனாக்குவது தந்தையின் கடன்(கடமை)
    செயலுக்குரிய வேல் போன்ற கருவிகளைச் செய்து கொடுத்தல் கொல்லற்கு கடன்(கடமை)
    நல்ல நெறிமுறைகளை நடைமுறைகளை செயல்படுத்துவது அரசாள்கின்றவரின் கடன்(கடமை)
    கடமை என்னும் போரில் களிறு போன்ற பிரச்சனைகளை வென்று மீளல் பிள்ளைகளின் கடன்(கடமை)

    ஒரு தாய் எழுதிய பாட்டல்லவா. அதனால்தான் நல்ல கருத்துகளை நயமகாகப் படைத்துள்ளார். இந்தப் பாடல்களின் வழியாக கடன் மீதான பார்வை காலகாலமாக மாறிக் கொண்டே வந்திருப்பதைப் பார்க்கலாம்.

    முடிப்பதற்கு முன்னால் ஒரு செய்தி. “கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்று ஒரு சொற்றொடர் பிரபலமானது. இதைக் கம்பர் சொன்னதாகச் சொல்வார்கள். ஆனால் கம்பராமாயணத்தில் இப்படி ஒரு வரியே இல்லை.

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
    நான் பட்ட கடன் எத்தனையோ (இசை-மெல்லிசை மன்னர்) – http://youtu.be/SxeODtxmL9M
    உள்ளத்தில் நல்ல உள்ளம் (இசை-மெல்லிசை மன்னர்) – http://youtu.be/GxG9EzeAXi4
    உலகத்தில் சிறந்தது எது (இசை-ஆர்.கோவர்தனம்) – கிடைக்கவில்லை
    பெத்த கடனுக்குதான் (இசை-இசைஞானி இளையராஜா) – http://youtu.be/XH9_BooSMtU
    ஈஸ்வரா வானும் மண்ணும் (இசை-தேவா) – http://youtu.be/wkv4XZb07Eo

    அன்புடன்,
    ஜிரா

    127/365

     
    • amas32 (@amas32) 6:21 pm on April 7, 2013 Permalink | Reply

      கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்பது கம்ப இராமயணத்தில் வராவிட்டாலும் அந்த உணர்வு என்னமோ உண்மை தான். எந்தக் கடனையும் செஞ்சோற்றுக் கடனோ, நன்றிக் கடனோ, பணக் கடனோ ஏதுவாக இருந்தாலும் அதைத் திருப்பிச் செலுத்தும் வரை மனத்தில் ஒரு தாக்கத்தையும் அழுத்தத்தையும் ஏற்படுத்திக கொண்டே இருக்கும். அதைத் திருப்பித் தந்த பிறகு தான் நிம்மதி நம்மை தழுவும்.

      amas32

      • suri 1:42 am on April 27, 2013 Permalink | Reply

        naan patta kadan song was written
        by vaalee

    • GiRa ஜிரா 10:44 pm on April 7, 2013 Permalink | Reply

      உண்மைதான். கடன் இருக்கும் வரையில் நிம்மதி இருக்கத்தான் செய்யாது. ஆண்டவன் அருளினால்தான் எந்த நிலையிலிருந்தும் மீள முடியும்.

    • Raghu 8:03 pm on August 22, 2014 Permalink | Reply

      கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் – திரு வி க

  • G.Ra ஜிரா 11:24 am on March 25, 2013 Permalink | Reply
    Tags: ஆர்.சுதர்சனம், உடுமலை நாராயணகவி, என்.எஸ்.கிருஷ்ணன், எஸ்.வி.வெங்கட்ராமன், கா.மு.ஷெரிப், சிதம்பரம் சி.எஸ்.ஜெயராமன், ஜெரார்டு, ஜேம்ஸ் வசந்தன், திருச்சி லோகநாதன், மாயா   

    காசு மேலே, காசு வந்து… 

    ஒருவன் ஒரு பிறப்பில் கற்ற கல்வி ஏழுபிறப்பிலும் தொடர்ந்து வரும் என்று ஐயன் வள்ளுவர் கூறியிருக்கிறார். கல்வியும் பாவபுண்ணியங்களும் தொடர்ந்து வரும். ஆனால் செல்வம்?

    ஒரு பிறப்பில் பெற்ற செல்வம் அந்தப் பிறப்பு முழுதும் தொடர்ந்து வந்தாலே அது பெரும் பேறு. ஓரிடத்தில் நில்லாமல் ”செல் செல்” செல்வதால் அதற்குச் செல்வம் என்று பெயர் வந்ததோ! இன்றைக்கு செல்வம் என்பது பணம் என்றாகி விட்டது.

    அந்தப் பணம்(பொருள்) இல்லாதவர்க்கு இவ்வுலக வாழ்க்கை இல்லை என்றும் ஐயன் வள்ளுவர்தான் கூறியிருக்கிறார். இந்த உலகத்தில் பணம் இல்லையென்றால் எதுவும் செய்ய முடியாது. அந்தப் பணத்தை வைத்து பழைய படங்களில் நிறைய பாடல்கள் வந்திருக்கின்றன. ஏனென்றால் அந்த படங்களில் இயல்பான மனிதர்களின் எளிய பிரச்சனைகள் சிறிதேனும் அலசப்பட்டன.

    பணம் என்றே ஒரு திரைப்படம். அதற்கு முன் எம்.எஸ்.விசுவநாதன் தனியாக இசையமைத்திருந்தாலும் மெல்லிசை மன்னர்கள் இருவருமாக இணைந்து இசையமைத்த முதற்படம் பணம். அவர்கள் இசையில் இந்தப் படத்தில் ஒரு பாடல். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனே எழுதிப் பாடிய பாடலிது.

    எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்
    பணத்தை எங்கே தேடுவேன்
    உலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்
    அரசன் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை எங்கே தேடுவேன்
    கருப்பு மார்க்கெட்டில் கலங்குகின்றாயோ
    கஞ்சன் கையிலே சிக்கிக் கொண்டாயோ
    கிண்டி ரேசில் சுத்திக் கிறுகிறுத்தாயோ
    திருப்பதி உண்டியலில் சேர்ந்து விட்டாயோ
    திருவண்ணாமலை குகை புகுந்தாயோ
    தேர்தலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ
    தேக சுகத்துக்காக ஊட்டி சென்றாயோ

    நகைச்சுவையாக வரிகள் இருப்பது போலத் தோன்றினாலும் பாடலில் பணம் பதுங்கியிருக்கும் இடங்கள் தெள்ளத் தெளிவாகத் தெரியும். கலைவாணர் என்ற பெயர் பாடலை எழுதியவருக்குப் பொருத்தமே.

    இப்படிப் பட்ட பணம் அனைத்தையும் ஆட்டி வைக்கும். எதுவும் அதன் முன் வாலாட்ட முடியாது என்பதை அதே காலகட்டத்தில் வந்த பராசக்தி திரைப்படத்தில் ஆர்.சுதர்சனம் இசையில் உடுமலை நாராயணகவி எழுதினார்.

    தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம்
    காசு முன் செல்லாதடி குதம்பாய் காசு முன் செல்லாதடி
    ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
    காசுக்குப் பின்னாலே குதம்பாய் காசுக்குப் பின்னாலே

    அப்படி பணத்தின் திறமையைச் சொல்லும் போது “ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசு பணம் காரியத்தில் கண்ணாய் இருக்கனும்” என்று நமக்கெல்லாம் அறிவுரையும் சொல்கிறார் உடுமலை நாராயணகவி. சிதம்பரம் சி.எஸ்.ஜெயராமன் இந்தப் பாடலை மிக அருமையாகப் பாடியிருக்கிறார்.

    இப்படி ஆரியக் கூத்தோ காரியக் கூத்தோ ஆடிச் சம்பாதிக்கும் பணம் எப்படியெல்லாம் செலவாகிறது என்பது தெரியாமலேயே செல்வாகிவிடும். இன்றுதான் வங்கிக் கணக்கில் சம்பளம் வந்தது போல இருக்கும். சில நாட்களிலேயே பழைய நிலைதான். இதையும் பாட்டில் சொல்ல பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கு எஸ்.வி.வெங்கட்ராமன் இசையில் வாய்ப்பளித்தது இரும்புத்திரை திரைப்படம். பாடலுக்குக் குரலால் உயிர் கொடுத்தவர் திருச்சி லோகனாதன்.

    கையில வாங்கினேன்
    பையில போடல
    காசு போன எடம் தெரியல்லே
    என் காதலி பாப்பா காரணம் கேப்பா
    ஏது சொல்லுவதென்றும் புரியல்லே
    ஏழைக்கு காலம் சரியில்லே

    இப்படியான நிலையில் பணம் இருப்பவனைத்தான் உலகம் மதிக்கிறது. அவனே வல்லான். அவன் வகுத்ததே வாய்க்கால். எவ்வளவு நல்ல குணமுடையவனாக இருந்தாலும் பணத்தைப் பார்த்துதான் உற்றாரும் ஊராரும் மதிப்பார்கள் என்பதை கா.மு.ஷெரிப் ஒரு பாடலில் அழகாகக் காட்டியிருப்பார். பணம் பந்தியிலே என்ற திரைப்படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடலது.

    பணம் பந்தியிலே குணம் குப்பையிலே
    அதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே

    இந்த உலகத்தையே இன்பவுலகமாக்கும் அந்தப் பணம் வந்தால் கொண்டாட்டங்களும் குதியாட்டங்களுக்கும் குறைவேது. பணம் வந்தால் அதைத் திருப்புவேன் இதைப் புரட்டுவேன் என்று கனவு காணும் மக்கள்தான் எத்தனையெத்தனை பேர். அத்தனை கனவுகளையும் கவிஞர் ஆலங்குடி சோமு ஒரு பாட்டில் வைத்தார். சொர்க்கம் திரைப்படத்தில் இடம் பெற்ற அந்தப் பாடலை எம்.எஸ்.விசுவநாதன் இசையில் டி.எம்.சௌந்தரராஜன் பாடினார்.

    பொன்மகள் வந்தாள் பொருள் கோடிதந்தாள்
    பூமேடை வாசல் பொங்கும் தேனாக
    ………………………………………………
    செல்வத்தின் அணைப்பில் கிடப்பேன்
    வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன் ராஜனாக
    இன்பத்தின் மனதில் குளிப்பேன்
    என்றென்றும் சுகத்தில் மிதப்பேன் வீரனாக

    இப்படியெல்லாம் கனவு கண்ட ஏழையிடம் காசு உண்மையிலே வந்து விடுகிறது. சும்மாயிருப்பானா? அதற்கும் திரைப்படத்தில் ஒரு பாடல் உண்டு. கார்த்திக்ராஜா இசையில் வாலி எழுதி கமலும் உதித்நாராயணனும் பாடினார்கள்.

    காசு மேலே காசு வந்து கொட்டுகிற நேரமிது
    வாசக்கதவ ராசலெச்சுமி தட்டுகிற நேரமிது
    அட சுக்கிரன் உச்சத்தில்
    லக்குதான் மச்சத்தில்
    வந்தது கைக்காசுதான்

    காசு என்று சொல்லிவிட்டாலும் ஒவ்வொரு ஊரிலும் அதற்கு ஒவ்வொரு பெயர். இந்தியாவில் இன்று ரூபாய். அமெரிக்காவில் டாலர். ஐரோப்பாவில் யூரோ. ரஷ்யாவில் ரூபிள் என்று எத்தனை வகையான பணங்கள். அந்தப் பண வகைகளை மதன் கார்க்கி புத்தகம் திரைப்படப் பாடலில் ஜேம்ஸ் வசந்தன் இசையில் அடுக்கியுள்ளார். அப்படிப் பட்டியல் போடுவதோடு நிற்காமல் பணம் இல்லாவிட்டாலும் தூக்கமில்லை இருந்தாலும் தூக்கமில்லை என்றொரு உண்மையையும் சொல்லியிருக்கிறார். ஜெரார்டும் மாயாவும் இணைந்து இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார்கள்.

    டாலர் யூரோ ரூபா ரூபிள் பெசோ டாகா
    ரியல் புலா தினார் ரிங்கிட் குனா கினா
    யுவான் லிரா க்ரோனி பவுண்ட் யென் ராண்ட் ஆஃப்கானி
    கோலன் ஃப்ரான்க் சொமோனி Money is so funny!
    ……………………………………….
    கையில் வரும் வரைக்கும் கண்ணில் இல்ல உறக்கம்
    கையில் அது கெடச்சும் கண்ணில் இல்லடா உறக்கம்

    என்னதான் சொல்லுங்கள். காசு எல்லா இடங்களிலும் வேலை செய்வதில்லை. காசு குடுத்து அன்பை வாங்க முடியாது. சாப்பாட்டை வாங்கலாம். பசியை வாங்க முடியாது. மிகப் பெரிய கோயிலையே கட்டலாம். ஆனால் காசு குடுத்து அருளை ஒருபோதும் வாங்கவே முடியாது. அனைத்துக்கும் மேலாக பணம் மட்டுமே நிம்மதியைக் கொடுக்காது. இப்படியாக பணத்தால் செய்ய முடியாததை இன்னொன்று செய்யும். அது என்னவென்று மெல்லிசை மன்னர் இசையில் கவியரசர் கண்ணதாசன் எழுதி டி.எம்.சௌந்தரராஜன் அந்தமான் காதலி திரைப்படத்துகாக பாடியிருக்கிறார்.

    பணம் என்னடா பணம் பணம்
    குணம் தானடா நிரந்தரம்

    பதிவில் இடம் பெற்ற பாடல்களின் சுட்டிகள்.

    பணம் என்னடா பணம் பணம் – http://youtu.be/xgUCFhNpOhY
    எங்கே தேடுவேன் பணத்தை – http://youtu.be/4cX12Szgsyc
    தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை – http://youtu.be/eCVQAzG8_14
    கையில வாங்குனேன் பையில போடல – http://youtu.be/UDhOVDUouhc
    பணம் பந்தியிலே குணம் குப்பையிலே – http://youtu.be/1VKqj92W73k
    பொன்மகள் வந்தாள் பொருள் கோடி – http://youtu.be/XGr0vonzcjE
    காசுமேல காசு வந்து – http://youtu.be/iMu_QWzjoW4
    டாலர் யூரோ ரூபா ரூபிள் – http://youtu.be/MA-_OfqUl_0

    அன்புடன்,
    ஜிரா

    114/365

     
    • மழை!! 4:10 pm on March 25, 2013 Permalink | Reply

      wow.. super.. thanks geeraa.. :)))))))

      • GiRa ஜிரா 9:06 am on April 1, 2013 Permalink | Reply

        நன்றி 🙂

    • rajnirams 5:09 pm on March 25, 2013 Permalink | Reply

      ஆஹா ஓஹோ…கலக்கிட்டீங்க சார்.வாழ்த்துக்கள்.

      • GiRa ஜிரா 9:06 am on April 1, 2013 Permalink | Reply

        நன்றி நண்பரே 🙂

    • Saba-Thambi 8:25 pm on March 25, 2013 Permalink | Reply

      காசே தான் கடவுளடா ! அந் தகடவுளுக்கும் இது தெரியுமடா!!

      • GiRa ஜிரா 9:07 am on April 1, 2013 Permalink | Reply

        ஆமா ஆமா.

        ஆண்டவன் தொடங்கி ஆண்டிகள் வரைக்கும் காசேதான் கடவுளடா!

    • amas32 8:28 pm on March 25, 2013 Permalink | Reply

      போறுமா? டக டகவென்று எத்தனைப் பாடல்களை எடுத்துவிட்டிருக்கிறீர்கள்! 🙂 சினிமாவில் சென்டிமென்ட் அதிகம். சரோஜா படத்தில் கங்கை அமரன எழுதிய பாடல் “கோடான கோடி” என்று ஆரம்பிக்கும். படமும் தயாரிப்பாளருக்குப் பணத்தை ஈட்டித் தந்தது. சிம்பு நடித்த வானம் படத்தில் no money no money no money da என்று ஒரு பாடல் வரும். படம் பிளாப் ஆகி விட்டது 🙂

      amas32

      • GiRa ஜிரா 9:08 am on April 1, 2013 Permalink | Reply

        அருமையாச் சொன்னிங்க. எப்பவுமே நேர்மறையான கருத்துகளும் சிந்தனைகளும் நல்ல பலனையே தரும். உண்மை.

    • அண்ணாதுரை 1:42 pm on October 28, 2020 Permalink | Reply

      எங்கே தேடுவேன் கண்ணதாசனின் பாடல் ..The Hind-Randor Guy-The lyrics for all the songs were written by Srinivasan’s brother, ace lyricist Kannadasan, with the exception of one song, which was written by Bharathidasan, the rebel poet of Pondicherry. Sivaji Ganesan and Padmini played the lead, while the other members of the NSK drama group such as T. K. Ramachandran,V. K. Ramasami, C. S. Pandian, Krishnan and Mathuram played significant roles.

      • G.Ra ஜிரா 9:43 pm on October 28, 2020 Permalink | Reply

        தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி. இந்தப் பதிவு எழுதப்பட்ட ஆண்டில் பணம் திரைப்படத்தை இணையத்தில் பார்க்கக் கிடைக்கவில்லை. அதனால் தகவலையும் சரிபார்க்க முடியவில்லை. பொதுவாக கலைவாணர் பாடல்களை எழுதிக் கொள்வார் என்பதாலும் அவருடைய படம் என்பதாலும் பொதுப்புத்தி முடிவுக்கு வந்திருந்தேன். சரியான தகவலைத் தந்தமைக்கு நன்றி. தற்போது இப்படம் யூடியூபில் உள்ளது. ஆனால் எழுத்தில் யார் பாடல்களை எழுதினார்கள் என்று இல்லை. விக்கிப்பீடியாவில் நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல தற்போது update செய்யப்பட்டுள்ளது.

  • G.Ra ஜிரா 11:48 am on February 10, 2013 Permalink | Reply  

    மலையாளக் காற்று 

    தமிழ்மொழிக்கும் மலையாளத்துக்கும் நிறைய நெருக்கங்கள் உண்டு. அதனால்தானோ என்னவோ மலையாளப் படங்களில் தமிழ்ப்பாத்திரங்களும் தமிழ்ப்படங்களில் மலையாளப் பாத்திரங்களும் விரவிக்கிடக்கும். மணிச்சித்ரதாழு, ஒரு யாத்ராமொழி மற்றும் மேலேபரம்பில் ஆண்வீடு ஆகிய படங்கள் சிறந்த உதாரணம். தமிழிலும் நிறைய சொல்லலாம்.

    ஆனால் பாடல்கள்? மலையாளப் பாத்திரங்கள் கதையோடு ஒட்டி வருகையில்தான் மலையாளப் பாடல்கள் தமிழ்த்திரைப்படங்களில் இடம் பெற்றுள்ளன. ஆகையால் அந்தப் பாடல்களின் எண்ணிக்கை மிகக்குறைவு.

    அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் பி.பானுமதி பாடிய “லட்டு லட்டு மிட்டாய் வேணுமா” என்ற பாடலின் நடுவில் மலையாள வரிகளையும் பாடுவார். இதே கதை நீரும் நெருப்பும் படமாக வந்த போது மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசையில் எல்.ஆர்.ஈசுவரி “விருந்தோ நல்ல விருந்து” என்று பாடும் போது மலையாளத்து வரிகளையும் பாடுவார். இந்தப் பாடல்களைப் பற்றி Multi Cuisine Songs என்ற பதிவில் முன்பே பார்த்தோம்.

    பாரதவிலாஸ் என்றதொரு திரைப்படம் ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தில் வந்த போது அதில் மலையாள முஸ்லீமாக வி.கே.ராமசாமியும் அவரது மனைவியாக ராஜசுலோசனாவும் நடித்தார்கள். அந்தப் படத்தில் இடம்பெற்ற ”இந்திய நாடு என் வீடு” என்ற பலமொழிக் கதம்பப் பாட்டில் தமிழும் மலையாளமும் கலந்து எம்.எஸ்.விசுவநாதனும் எல்.ஆர்.ஈசுவரியும் பாடுவார்கள்.

    படச்சோன் படச்சோன் எங்கள படச்சோன்
    அல்லாஹு அல்லா எங்கள் அல்லா
    தேக்கு தென்னை பாக்குமரங்கள் இவிடே நோக்கனும் நீங்க
    தேயிலை மிளகு விளைவதைப் பார்த்து வெள்ளையன் வந்தான் வாங்க… படச்சோன் படச்சோன்

    அடுத்து வந்தது கே.பாலச்சந்தர் இயக்கத்தில் நான் அவன் இல்லை என்ற திரைப்படம். இது பல பெண்களை ஏமாற்றிய ஒருவனின் கதை. மலையாள தேசத்துக்கும் போகிறான் அவன். நீராடுகிறாள் ஒருத்தி. அவளோடு ஆட விரும்புகிறான். முள்ளை முள்ளால் எடுப்பது போல மலையாளத்து நாரியை மலையாளத்தால் எடுக்கிறான் அவன்.

    மந்தார மலரே மந்தார மலரே
    நீராட்டு களிஞ்ஞில்லே
    மன்மத்த ஷேத்ரத்தில் இன்னானு பூஜா நீ கூடவருனில்லே
    என்று அவள் பாடும் போது
    மன்மதன் இவிடத்தன்னே உண்டு
    என்று அவன் பாடத்தொடங்குவான்.

    ஜெயசந்திரனும் வாணிஜெயராமும் பாடிய இந்த இனிய பாடலுக்கு இசையமைத்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன். இந்தப் பாடலில் “மன்மதன் இவிடத்தன்னே உண்டு” என்று ஜெயச்சந்திரன் பாடியதும் ஒரு அழகிய இசைக்கோர்ப்பு வரும். அதைத்தொடர்ந்து “ஓ எந்தோ” என்று எல்.ஆர்.ஈசுவரி சொல்வது மிக மிக அழகு.

    கடைசியில் சிலவரிகள் தமிழில் இருந்தாலும் இப்படி மலையாள மொழி தமிழ்ப் படத்தில் மிகச்சிறந்த இசையோடு வந்தது இதுவே முதன்முறை.

    இதே திரைப்படம் நான் அவனில்லை என்று பல ஆண்டுகளுக்குப் பின் எடுக்கப்பட்டது. அதில் இதே காட்சியமைப்பு உண்டு. ஆனால் மந்தாரமலரே பாடல் அளவுக்கு ஒரு கலைநயம் மிகுந்த பாடலாக இல்லை. கடலினக்கரே போனோரே என்ற மலையாளைப் பாடல்களைக் கேலி செய்வது போல பாடியிருப்பார்கள். சற்றும் கற்பனைத்திறம் இல்லாத இது போன்ற பாடல்கள் தமிழ்த்திரையிசையின் தேய்வுக்கு எடுத்துக்காட்டு.

    சரி. மறுபடியும் பின்னோக்கிச் செல்வோம். எழுபத்து ஒன்பதில் மீண்டுமொரு இனிய மலையாளப்பாடல் தமிழில் இளையராஜாவின் கைவண்ணத்தில் வந்தது. எம். ஜி. வல்லபன் எழுத, ஜென்சி ஆண்டனி என்ற கேரளநாட்டுப் பாடகியின் குரலில் “ஞான் ஞான் பாடனும் ஊஞ்ஞால் ஆடனும்” என்று தேவராஜ்-மோகன் இயக்கத்தில் பூந்தளிர் பூத்தது.

    கேரளத்துக்குச் செல்லும் சிவகுமாரின் பாத்திரம் அங்கிருக்கும் சுஜாதாவின் மீது காதல் கொள்கிறது. சுஜாதாவும் காதலை ஏற்றுக் கொள்ளும் போது அவரை ஓவியமாக வரையும் காட்சியில் இந்தப் பாடல் வரும். நல்ல பாடலாக இருந்தாலும் இதே படத்தில் வந்த “மனதில் என்ன நினைவுகளோ”, “வா பொன்மயிலே” மற்றும் “ராஜா சின்ன ராஜா” போன்ற பிரபல பாடல்களால் அமுக்கப்பட்டது என்றே சொல்ல வேண்டும்.

    அதற்குப் பிறகு பெரிய இடைவெளி. ஏ.ஆர்.ரகுமான் வரவினால் தமிழில் இரண்டு பாடல்களில் மலையாளம் கலந்து வந்தது. முத்து திரைப்படத்தில் வரும் குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ என்ற பாடலில் “ஓமணத்திங்ஙள் கிடாவோ” என்ற சுவாதி திருநாளின் சாகித்யம் பயன்படுத்தப்பட்டது. இதுவொரு தாலாட்டுப் பாட்டு. அதே போல உயிரே திரைப்படத்தில் நெஞ்சினிலே நெஞ்சினிலே பாடலில் ”கொஞ்ஞிரி தஞ்ஞிக் கொஞ்ஞிக்கோ முந்திரி முத்தொளி சிந்திக்கோ” என்று மலையாள வரிகள் நடுநடுவாக வரும்.

    ஆனால் தனிப்பாடல் என்றால் விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தில் வந்த ஆரோமோளே என்ற பாடலைத்தான் சொல்ல வேண்டும். கேரளத்துக்குக் காதலியைத் தேடிச் செல்லும் தமிழ்க் காதலனின் ஏக்கக் குரலாக ஒலித்தது அந்தப் பாடல்.

    பொதுவாகவே தமிழ்ப்பாடல்கள் கேரளத்தில் பிரபலம் ஆகும் அளவுக்கு மலையாளப்பாடல்கள் தமிழ்நாட்டில் பிரபலமாவதில்லை. அதற்குக் காரணம் சதுக்க காலத்து நடையும் எந்தப் பாட்டுக்குள்ளும் ஒளிந்திருக்கும் ஒருவித சோகமும் மென்மையாக ஒலிக்கும் ஆண்பாடகர்களின் குரலும் காரணம் என்பது என் கருத்து. ஆரோமோளே பாட்டில் ஏ.ஆர்.ரகுமான் அந்தச் சோகத்தை மெல்லியதாகப் புகுத்தியதும் கரகரப்பான பெண்குரல் போல ஆண்குரல் ஒலிக்கச் செய்திருப்பதும் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

    இதற்கு நடுவில் ஒரு வித்யாசமான இனிய பாடல் ஆட்டோகிராப் வழியாக நமக்குக் கிடைத்தது. இந்த முறை இசையமைத்தவர் பரத்வாஜ். சிநேகன் எழுதி ஹரிஷ் ராகவேந்திராவும் ரேஷ்மியும் பாடிய ”மனசுக்குள்ளே காதல் வந்துச்சா வந்துச்சா” பாடல் அந்த பொழுதின் இனிய பாடலாக இருந்தது மறுக்க முடியாத உண்மை. இந்தப் பாடலில் கேரளக் காதலி மலையாளத்தில் பாடவும் தமிழ்க்காதலன் தமிழில் பாடவும் தொடங்கும். இருவருடைய உள்ளமும் இணைந்து விட்டது என்பதைக் காட்டுவது போல பாடல் முடியும் போது ஆண் மலையாளத்திலும் பெண் தமிழிலும் பாடுவதாக இருக்கும்.

    இத்தனை பாடல்கள் இருந்தாலும் அத்தனையிலும் உச்சப் பாடலாக நான் கருதுவது அந்த ஏழு நாட்கள் படத்தில் வரும் கவிதை அரங்கேறும் நேரம் பாடலைத்தான்.

    தமிழில் எடுக்கப்பட்ட படம் பின்னால் எல்லா மொழியிலும் எடுக்கப்பட்டது என்பது அந்தக் கதையமைப்பின் சிறப்பையும் கே.பாக்கியராஜின் இயக்கும் திறமையையும் சொல்லும்.

    மேலே இத்தனை பாடல்களைப் பட்டியல் இட்டிருக்கிறோம். ஆனால் எந்தப் பாத்திரமும் நமக்கு மனதில் தங்காதவை. ஆனால் பாலக்காட்டு மாதவன் நாயரை தமிழ் சினிமா விரும்பிகள் மறக்க முடியுமா? சரியோ முறையோ குறையோ பிழையோ, அந்தப் பாத்திரம் ஓட்டைத் தமிழில் சொல்லும் “எண்டே காதலி நிங்கள் மனைவியாகும். ஆனால் நிங்கள் மனைவி எனிக்கி காதலியாக மாட்டாள்” என்ற வசனம் அவ்வளவு பிரபலமானது.

    அப்படியொரு பாத்திரத்துக்கு “கவிதை அரங்கேறும் நேரம்” பாடல் மிகப் பொருத்தம். பாடலின் தொடக்கத்தில் ஜெயச்சந்திரனின் ஆலாபணை ஒன்று போதும். அது முடித்து ஷப்த ஸ்வரதேவி உணரு என்று பாடல் தொடரும் பொழுது மீளா இசைச்சுழலில் நாம் மூழ்கிவிடுகிறோம்.

    இந்தப் பாடலை எழுதியது யார் தெரியுமா? இந்தப் படத்தில் கவியரசர் கண்ணதாசன் எழுதிய “தென்றல் அது உன்னிடத்தில்” என்ற பாடலும் வைரமுத்து எழுதிய “எண்ணில் இருந்த ஈடேற” என்ற பாடலும் மிகமிகப் பிரபலம்தான். ஆனால் அந்தப் பாடல்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்ட இந்தப் பாடல் அந்த அளவுக்குப் பிரபலமாகாத குருவிக்கரம்பை சண்முகம் அவர்களால் எழுதப்பட்டது. அவர் திறமைக்கு இந்த ஒரு பாட்டு எடுத்துக்காட்டாய் எப்போதும் நிற்கும்.

    இந்தப் படத்தில் இன்னொரு அழகான பாட்டு உண்டு. “மனசுக்குள்ளே காதல் வந்தல்லோ” பாடலைப் போல தமிழும் மலையாளமும் கலந்த பாடல். ஆனால் படத்தில் இடம் பெறவில்லை. ஏனென்று தெரியவில்லை. ஆனால் இந்தப் பாடலைக் கேட்ட யாரும் இந்தப் பாடலில் மயங்காமல் இருக்கவே முடியாது. ஜெயச்சந்திரனும் வாணி ஜெயராமும் பாடிய இந்தப் பாடலின் தமிழ் வரிகளைக் கண்ணதாசன் எழுதியிருக்கிறார். மலையாள வரிகளை எழுதியவர் தெரியவில்லை. மெல்லிசை மென்னரும் இந்தப் பாடலை வேறு எந்தப் படத்திலும் பயன்படுத்தாதது நமக்கெல்லாம் இழப்பே. இந்தப் பாடலின் தாளமாக ஒலிக்கும் செண்டை மேளங்களின் பயன்பாடு மிகமிக நேர்த்தியானது. நல்லவேளையாகப் பாடலின் ஒலிவடிவம் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

    இப்படிப் பட்ட பாடல்களை நாம் ரசித்துக் கேட்கிறோம் என்பதே நமக்கு மகிழ்ச்சியானது.

    இந்தப் பதிவில் உள்ள பாடல்களைப் பார்க்க கேட்க….

    மந்தார மலரே மந்தார மலரே (நான் அவன் இல்லை) – http://youtu.be/46KA5mwksMs
    கடலினக்கர போனோரே (நான் அவன் இல்லை-ரீமேக்) – http://youtu.be/V_tlLfligkw
    இந்திய நாடு என் வீடு (பாரதவிலாஸ்) – http://youtu.be/kG2Get7rZuU
    ஞான் ஞான் பாடனும் (பூந்தளிர்) – http://youtu.be/S0dXtaX0FX0
    குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ (முத்து) – http://youtu.be/C89P-eN9CCw
    நெஞ்சினிலே நெஞ்சினிலே (உயிரே) – http://youtu.be/YhmsG_2yudk
    ஆரோமோளே (வின்னைத் தாண்டி வருவாயா) – http://youtu.be/_9exfKUDt6Y
    மனசுக்குள்ளே காதல் வந்துச்சா (ஆட்டோகிராப்) – http://youtu.be/KLQk4jacuVk
    ஷப்த ஸ்வரதேவியுணரு (அந்த ஏழு நாட்கள்) – http://youtu.be/OvSdzh2S12w
    ஸ்வர ராக சுத தூகும் (அந்த ஏழு நாட்கள்) – http://youtu.be/MqcbOgkS4m0

    அன்புடன்,
    ஜிரா

    071/365

     
    • gbsivakumar 12:31 pm on February 10, 2013 Permalink | Reply

      manasukkule thaagam vanthucha song written by snehan. Not pa.vijay

      • என். சொக்கன் 5:33 pm on February 10, 2013 Permalink | Reply

        Corrected now, Thanks for pointing out the info error

    • Rajnirams 9:50 am on February 11, 2013 Permalink | Reply

      super.அபாரம்.

      • Kaarthik Arul 2:30 pm on July 16, 2013 Permalink | Reply

        How come sundari neeyum sundaran nyAnum from MMKR is missing in this post?

    • Kana Praba 4:55 pm on July 16, 2013 Permalink | Reply

      kalakkals

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel