அழகின் கதகதப்பு! 

  • படம்: உயிரே
  • பாடல்: தைய தையா
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
  • பாடியவர்கள்: சுக்விந்தர் சிங், மால்குடி சுபா
  • Link: http://www.youtube.com/watch?v=pE3ykXZS4zA

அவள் கண்களோடு இருநூறாண்டு,

மூக்கின் அழகோடு முந்நூறாண்டு,

அவள் அழகின் கதகதப்பில் ஆண்டு ஐநூறு வாழவேண்டும்!

ஐநூறா, ஐந்நூறா, எது சரி?

வழக்கம்போல், இரண்டுமே சரிதான், எந்தச் சூழ்நிலையில் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்து விடை மாறும்!

சாலையில் நடந்து செல்கிறீர்கள். கீழே ஏதோ கிடக்கிறது, குனிந்து பார்த்தால், அது ஒரு நூறு ரூபாய் நோட்டு. மகிழ்ச்சியில் துள்ளுகிறீர்கள். ‘ஐ! நூறு ரூபாய் கிடைத்தது எனக்கு’ என்கிறீர்கள்.

ஆனால், அதே இடத்தில் ஐந்து நூறு ரூபாய்த் தாள்கள் கிடைத்தால், ‘ஐநூறு ரூபாய்’ என்று சொல்லக்கூடாது, ‘ஐந்நூறு ரூபாய்’ என்றுதான் சொல்லவேண்டும்!

ஐந்து + நூறு ஆகியவை இணையும்போது, ’ஐந்து’ என்ற சொல்லின் நிறைவில் உள்ள ‘து’ என்ற எழுத்து நீக்கப்படும், ஆனால் ‘ந்’ என்ற எழுத்து நீக்கப்படாது, இதனைத் தொல்காப்பியம் ‘நான்கும் ஐந்து ஒற்றுமெய் திரியா’ என்று குறிப்பிடுகிறது.

ஆக, ஐந்(து) + நூறு = ஐந்நூறு.

***

என். சொக்கன் …

28 10 2013

330/365