Updates from June, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • என். சொக்கன் 11:57 am on June 17, 2013 Permalink | Reply  

    கொடி அசைந்ததும்… 

    • படம்: போலீஸ்காரன் மகள்
    • பாடல்: நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்
    • எழுதியவர்: கண்ணதாசன்
    • இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
    • பாடியவர்: பி. பி. ஸ்ரீனிவாஸ்
    • Link: http://www.youtube.com/watch?v=BBEHY5WAbSc

    குலுங்கும் முந்தானை,

    சிரிக்கும் அத்தானை விரட்டுவ(து) ஏனடியோ?

    உந்தன் கொடி இடை இன்று,

    படைகொண்டு வந்து கொல்வவதும் ஏனடியோ!

    காதலியின் கொடி இடையைப் பார்த்தால், பெரும்பாலானோர் கிளுகிளுப்பாக உணர்வார்கள், அல்லது கிறுகிறுத்துப்போவார்கள், ஏனோ, இந்தக் காதலனுக்குமட்டும் அவள் இடையைப் பார்த்துக் கிலி பிடித்துவிடுகிறது!

    இடையைப் பார்த்தால் இச்சைதானே வரணும், அச்சம் ஏன் வந்தது? கண்ணதாசன் ஏன் இப்படி எழுதவேண்டும்?

    போர் வந்தால் இரு தரப்பினரும் கொடி பிடித்துச் செல்வார்கள், அதில் ஈடுபடுகிற தேர்களின்மீதும் அந்தந்த அரசர்களின் கொடி பறக்கும்.

    அதனால், இங்கே காதலியின் கொடி போன்ற இடையைப் பார்த்தவுடன், காதலனுக்குப் போர் ஞாபகம் வந்துவிடுகிறது. ’அடியே, இப்படிக் கொடி இடையை அசைத்து அசைத்து நடக்கிறாயே, இதன் அர்த்தம் என்ன? அடுத்து ஒரு பெரிய படையைக் கொண்டுவரப்போகிறாயா? என்மீது காதல் போர் தொடுக்கப்போகிறாயா?’ என்று கேட்கிறான்.

    ஒரு பெண்ணை வர்ணிக்கும்போது போர், ராணுவமெல்லாம் ஞாபகம் வரலாமா?

    தாராளமாக வரலாம். இந்த விஷயத்தில் கண்ணதாசனுக்கு முன்னோடிக் கவிஞர்கள் பலர் உண்டு. உதாரணமாக, புகழேந்தி எழுதிய நளவெண்பாப் பாடல் ஒன்றில், ஆட்சி இயல் சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களையும் பெண்மீது பொருத்திச் சொல்கிறார். இப்படி:

    நால்குணமும் நால் படையா, ஐம்புலனும் நல் அமைச்சா,

    ஆர்க்கும் சிலம்பே அணி முரசா, வேல் படையும்

    வாளுமே கண்ணா, வதன மதிக் குடைக் கீழ்

    ஆளுமே பெண்மை அரசு!

    தமயந்தி என்கிற பெண்ணை அன்னம் வர்ணிக்கிறது, ‘அவள் ஒரு பெரிய மஹாராணி, தெரியுமா?’

    ’நிஜமாகவா?’ நளன் ஆச்சர்யப்படுகிறான், ‘எந்த நாட்டுக்கு மஹாராணி?’

    ‘இன்னொரு நாடு தேவையா? அவளே ஒரு நாடு, அதற்கு அவளே மஹாராணி!’ என்கிறது அன்னம்.

    ’கொஞ்சம் விளக்கமாகச் சொல்லேன், ப்ளீஸ்!’

    ’அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்கிற பெண்மைக்குரிய நான்கு குணங்களும் அவளுக்கு உண்டு, அவையே அவளது நான்கு வகைப் படைகளைப்போல.’

    ‘வெறும் ராணுவம்மட்டும் போதுமா? அமைச்சர்கள் வேண்டுமே!’

    ‘கண், காது, மூக்கு, வாய், உடல் என்ற ஐந்து புலன்களும்தான் அவளுடைய அமைச்சர்கள்.’

    ’அப்படியானால், அரசர்களுக்கே உரிய முரசு?’

    ‘அதுவும் உண்டு! நடக்கும்போது சத்தமிடும் சிலம்புதான் அவளுடைய முரசு.’

    ’அரசர்கள் எப்போதும் வேல், வாள் போன்ற ஆயுதங்களை வைத்திருப்பார்களே.’

    ’அது இல்லாமலா? அவளுடைய ஒரு கண்ணில் வேல், இன்னொரு கண்ணில் வாள்.’

    ‘எல்லாம் சரி, வெண்கொற்றக் குடை?’

    ’நிலவு போன்ற அவளுடைய அழகிய முகம், அதைவிடச் சிறந்த வெண்கொற்றக் குடை எங்கே உண்டு?’

    ‘அப்படியானால்…’

    ’ராணுவமும் அமைச்சர் படையும் முரசும் ஆயுதங்களும் வெண்கொற்றக்குடையுமாக, தன்னுடைய பெண்மை அரசாங்கத்தை ஆட்சி செய்கிறாள் அந்தத் தமயந்தி!’

    ***

    என். சொக்கன் …

    198/365

     
    • rajnirams 12:26 pm on June 17, 2013 Permalink | Reply

      ஆஹா,பிரமாதம்.நளவெண்பா பாடலின் சுவையை அறிந்து கொண்டேன்.என்ன ஒரு வர்ணனை.”கொடியை”கட்சிக்காரர்களை விட இடையை வர்ணிக்க கவிஞர்கள் அதிகம் பயன்படுத்தி இருக்கிறார்கள் போலும்.”பூவறையும் பூங்கொடியே-வாலி. இடை ஒரு கொடி,இதழ் ஒரு கனி-கண்ணதாசன்,இடை நூலாடி செல்ல செல்ல ஓஹோ-வாலி.இது என்ன கூத்து அதிசயமோ-இளநீர் காய்க்கும் கொடி இதுவோ-வைரமுத்து இப்படி.

    • Arun Rajendran 3:00 am on June 18, 2013 Permalink | Reply

      சொக்கன் சார்,

      இன்று இடையிலக்கணமா?

      வண்ண மேகலைத் தேர் ஒன்று வாள் நெடுங்
      கண் இரண்டு கதி முலை தாம் இரண்டு
      உள் நிவந்த நகையும் என்று ஒன்று உண்டால்
      எண்ணும் கூற்றினுக்கு இத்தனை வேண்டுமோ!
      —–மிதிலைக் காட்சிப் படலம்

      ஆக, பெண்ணின் உடலே படைக்கலன் தான்..சிறுத்தக் கொடியிடை, மற்றப் போர் கருவிகளை அழகுற வெளிப்படுத்தும்..அத்தகைய மலர்கொடியிடை, ’பதாகை’ போன்று அசைந்து ”அந்திப்போர்” துவக்க வழிவகை செய்தலால் காதலன் சிறிது அச்சப்பட்டுதானே ஆக வேண்டும்?

      இவண்,
      அருண்

    • amas32 (@amas32) 2:28 pm on June 19, 2013 Permalink | Reply

      உடலே ஒரு கோவில் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இங்கு பெண் உடலே ஒரு சாம்ராஜ்ஜியமாக வர்ணிக்கும் பாடலைக் கொடுத்திருக்கிறீர்கள். பெண்ணை வர்ணிக்கும் புலவனின் கண்ணிற்கும் கற்பனை வளத்திற்கும் இந்தப் பாடல்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

      பெண்ணென்றால் பேயும் இறங்கும் என்ற பழமொழி பெண்ணிடம் இருக்கும் இந்த பவரினால் தானோ? :-)))

      amas32

    • freevariable 4:44 am on June 21, 2013 Permalink | Reply

      அடடா அருமை!

  • G.Ra ஜிரா 10:16 am on January 11, 2013 Permalink | Reply  

    கன்னத்தில் முத்தமிட்டால் 

    கொஞ்ச வேண்டும் என்ற சூழல் வந்தால் கன்னத்தைத் தொடாத கவிஞன் இல்லை.

    கண்ணம்மா என் குழந்தை என்று எழுதிய பாரதியும் குழந்தையின் கன்னத்தில் முத்தமிடுவது கள்வெறி கொடுக்கும் மயக்கத்தைக் கொடுப்பதைக் குறிப்பிடுகிறான்.

    சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா

    கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி
    படம் – நீதிக்கு தண்டனை
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

    பாரதி இப்படிச் சொல்லியிருக்க, கண்ணாதாசனா கன்னதாசனா என்று ஐயத்தை உண்டாக்கும் வகையில் பாடல்களை எழுதியிருக்கிறார். கன்னம் என்பதே தித்திப்பது என்பது அவர் கருத்து.

    முத்துக்களோ கண்கள்
    தித்திப்பதோ கன்னம்
    படம் – நெஞ்சிருக்கும் வரை
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

    பார்க்கப் பார்க்க மின்னும் கன்னம் பருவப் பெண்ணின் கன்னம் என்பதை ரசித்தவர்தானே கண்ணதாசன். அதுதான் இந்தப் பாடலில் இப்படி வெளிப்படுகிறது.

    பால் வண்ணம் பருவம் கண்டு
    வேல் வண்ணம் விழிகள் கண்டு

    கன்னம் மின்னும் மங்கை வண்ணம்
    படம் – பாசம்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

    தித்திக்கும் கண்ணம் என்று சொல்லியாகி விட்டது. ஆனால் கன்னம் ஒரு கிண்ணம் என்றும் அந்தக் கிண்ணத்திலே கறந்த பாலின் சுவையிருக்கும் என்றும் சொல்லியிருக்கிறார் கவியரசர்.

    விழியே விழியே உனக்கென்ன வேலை
    விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை

    கன்னம் என்னும் ஒரு கிண்ணத்திலே
    கறந்த பாலிருக்கும் வண்ணத்திலே
    படம் – புதிய பூமி
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

    தங்கமானது கன்னம் என்றால் காதல் விளையாட்டில் அதில் சேதாரம் இருக்கும் என்பது தெரிந்தவரும் அவர்தான். அதனால்தான் கன்னத்தில் என்னடி காயம் என்று குறும்போடு கேட்கிறார்.

    கன்னத்தில் என்னடி காயம்
    இது வண்ணக்கிளி செய்த மாயம்
    படம் – தனிப்பிறவி
    இசை – திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்

    நாணத்தாலே கன்னம் மின்ன மின்ன
    நடிக்கும் நாடகம் என்ன
    படம் – சிஐடி சங்கர்
    இசை – வேதா

    நாணத்தில் மின்னும் கன்னம் காதல் சோகத்திலும் கண்ணீர் சேர்ந்து மின்னும் என்றும் தெரிந்து வைத்திருக்கிறார் கண்ணதாசன்.

    நினைவாலே சிலை செய்து
    உனக்கான வைத்தேன்.. திருக்கோயிலே ஓடி வா
    ..
    கண்ணீரிலே நான் தீட்டினேன்
    கன்னத்தில் கோலங்கள்
    படம் – அந்தமான் காதலி
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

    கவியரசர் மட்டுந்தானா இப்படி? அடுத்து வந்த வாலியின் கை வண்ணத்து கன்னத்து அட்டகாசங்களைப் பார்ப்போம்.

    கன்னத்தை அத்திப்பழம் என்று உவமிக்கும் வாலி.. அந்தப் பழத்தைக் கிள்ளி விடவா என்று கேட்கிறார். மெல்லிய நண்டின் கால் பட்டாலே சிதைந்து போகும் மென்மையான பழம் அத்தி என்று அகநானூறு சொல்கிறது. கன்னத்தை அப்படியொரு பழத்துக்கு ஒப்பிடுவதும் அழகுதான்.

    வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ
    வஞ்சிமகள் வாய்திறந்து சொன்ன மொழியோ

    அத்திப்பழக் கன்னத்திலே கிள்ளி விடவா
    படம் – தெய்வத்தாய்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

    அத்திப் பழம் என்று உவமித்த அதே வாலி கன்னத்தை மாம்பழம் என்றும் சொல்லத் தவறவில்லை. மரத்தில் பழுக்கும் அந்த மாம்பழங்களை விட காதலியின் கன்ன மாம்பழங்களைத்தான் காதலன் விரும்புவானாம்.

    நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்
    அவன் மாம்பழம் வேண்டுமென்றான்
    அதைக் கொடுத்தாலும் வாங்கவில்லை
    இந்தக் கன்னம் வேண்டும் என்றான்
    படம் – எங்க வீட்டுப் பிள்ளை
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

    பழம் என்று சொன்னால் அணில் கடித்து விடுமோ என்று நினைத்தாரோ என்னவோ… தாமரைப் பூவைப் போன்ற கன்னங்கள் என்றும் வர்ணித்து விட்டார். அந்தத் தாமரைக் கன்னம் என்னும் கிண்ணத்தில்தானே தேன் இருக்கிறது.

    தாமரைக் கன்னங்கள்
    தேன்மலர்க் கிண்ணங்கள்
    படம் – எதிர் நீச்சல்
    இசை – வி.குமார்

    கண்ணதாசன் கன்னத்தில் என்னடி காயம் என்று கேட்டால்… வாலியோ கன்னத்து முத்தங்களால் கன்னிப் போகும் கன்னங்களே அத்தானின் அன்புக்கு அடையாளச் சின்னங்கள் என்று அடித்துச் சொல்கிறார்.

    அத்தானின் முத்தங்கள் அத்தனையும் முத்துக்கள்
    அழகான கன்னத்தில் அடையாளச் சின்னங்கள்
    படம் – உயர்ந்த மனிதன்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

    நறுந்தேனை கிண்ணத்தில் வடித்து எடுத்து வருகிறாள் ஒருத்தி. அதெல்லாம் எதற்கு? உன் கன்னத்தில் தேன் குடித்தால் ஆயிரம் கற்பனை ஓடி வராதா என்று ஏங்குகிறது கவிஞனின் உள்ளம்.

    கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன்
    எண்ணத்தில் போதை வர எங்கெங்கோ நீந்துகிறேன்
    கன்னத்தில் தேன் குடித்தால் கற்பனை ஓடி வரும்
    படம் – இளமை ஊஞ்சலாடுகிறது
    இசை – இசைஞானி இளையராஜா

    கண்ணன் ஒரு கைக்குழந்தை
    கண்கள் சொல்லும் பூங்கவிதை
    கன்னம் சிந்தும் தேனமுதை
    படம் – பத்ரகாளி
    இசை – இசைஞானி இளையராஜா

    கன்னத்தை பழமென்றும் பூவென்றும் வர்ணிக்க கண்ணதாசனாலும் வாலியாலும் மட்டுந்தான் முடியுமா? இதோ இருக்கிறார் வைரமுத்து.

    தொட்டுரச தொட்டுரச மணக்கும் சந்தனம். அப்படியான சந்தனக் கிண்ணமடி உன் கன்னம். அதைத் தொட்டுரசி தொட்டுரசி மணக்குதடி என் கைகள் என்று கவிதையை அடுக்குகிறார்.

    ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
    தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்
    படம் – சிவப்புமல்லி
    இசை – சங்கர் கணேஷ்

    தொட்டுப் பார்த்தால் பளபளப்போடு வழவழக்கும் பட்டை கன்னத்திற்கு ஒப்பிடாமல் போவாரோ கவிஞர்.

    பட்டுக் கன்னம்
    தொட்டுக் கொள்ள
    ஒட்டிக் கொள்ளும்
    படம் – காக்கிச்சட்டை
    இசை – இசைஞானி இளையராஜா

    கண்ணுக்கு மையழகு.. என்று சொல்லும் போது கன்னத்தில் குழியழகு என்று எழுதிய வைரமுத்து ஒரு கிராமத்துக் காதலைச் சொல்லும் போது கன்னத்தில் கன்னம் வைத்த காதலனைப் பற்றியும் சொல்கிறார்.

    காக்கிச்சட்ட போட்ட மச்சான்
    கன்னத்திலே கன்னம் வெச்சான்
    படம் – சங்கர் குரு
    இசை – சந்திரபோஸ்

    தன்னுடைய குழந்தை கன்னத்தில் முத்தமிட்டால் நெஞ்சில் ஜில்ஜில்ஜில்ஜில் என்று எழுதியதும் இதே வைரமுத்துதான். ஆனாலும் காதல் குறும்பில் கன்னத்தில் முத்தமிட வரும் காதலனின் கன்னத்தில் தேளைப் போலக் கொட்டுவேன் என்றா எழுதுவது! உயிர் போக்கும் வலி அல்லவா அது!

    நேந்துக்கிட்டேன் நேந்துக்கிட்டேன்
    நெய்விளக்க ஏந்திக்கிட்டேன்
    உன்னோட கன்னத்திலே முத்தம் குடுக்க
    ..
    கன்னத்திலே தேளப் போலே கொட்டி விடுவேன்
    படம் – ஸ்டார்
    இசை – இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்

    அன்புடன்,
    ஜிரா

    041/365

     
    • niranjanbharathi 10:24 am on January 11, 2013 Permalink | Reply

      தேன் கன்னம், மதுக் கன்னம் , சந்தனக் கன்னம் ஆகியவற்றோடு சேர்ந்து இது தான் “ஜீரா” கன்னம் போலும். ஜாமூனைச் சூழந்து நிற்கும் ஜீரா 🙂 🙂

    • amas32 (@amas32) 2:43 pm on January 13, 2013 Permalink | Reply

      What a myriad of songs with cheeks alone! ;-)) You are one genius only 🙂

      amas32

    • தேவா.. 3:41 pm on January 13, 2013 Permalink | Reply

      கன்னங்களுக்கு பல உவமைகள்…..கண் பட்டிருச்சு ஜீரா…. 🙂

  • என். சொக்கன் 10:42 am on December 11, 2012 Permalink | Reply  

    பிள்ளைக் கனியமுதே 

    கொஞ்சுவதற்குத் தகுந்த குழந்தை எது? ஆண்குழந்தையா? பெண்குழந்தையா?
    கைக்குழந்தையாக இருவரும் கொஞ்சுவதற்குச் சுகமானவர்கள் என்றாலும், ஆண்குழந்தைகள் வளரவளர விளையாடத் தெருவுக்கு ஓடும்.
    ஆனால் பெண் குழந்தைகள்?
    விளையாடச் சொப்பு வாங்கிக் குடுக்கலாம்
    விதவிதமாக நிறம்நிறமாகப் பொட்டு வைத்துப் பார்க்கலாம்
    மல்லிகை, முல்லை, பிச்சி, ரோஜா, கனகாம்பரம் என்று நாளுக்கொன்றாய் பூ வைத்துப் பார்க்கலாம்
    பட்டுப் பாவாடையும் சட்டையும் கட்டி அழகு பார்க்கலாம்
    கைக்கு வளையல், காலுக்குக் கொலுசு, இடுப்புக்கு மேகலை, நெஞ்சு வரை சங்கிலி, கழுத்துக்குப் பதக்கம், காதுக்குத் தோடு, நெற்றிக்குச் சுட்டி என்று நகைகளைப் பூட்டி ரசிக்கலாம்
    நீண்ட கூந்தலுக்குச் சிக்கெடுத்து சீர்படுத்தி தைலம் தேய்த்து குஞ்சலம் வைத்துப் பின்னலாம்.
    இதையெல்லாம் செய்ய வசதியில்லாவிட்டாலும் காட்டுத் தாழம்பூவைப் பிரித்துக் கூந்தலில் சேர்த்துக் கட்டி அழகு பார்க்கலாம்
    குளிர்ந்த மையை கண்களில் தீட்டி மானோ மீனோ என்று சந்தேகப்படலாம்
    அந்த மையையே விரலோரத்தில் வழித்து கண்ணத்தில் லேசாக இழுகி திருஷ்டிப் பொட்டு வைக்கலாம்
    இப்படிப் பெண்குழந்தைகளைக் கொஞ்சுவதற்கும் சீராட்டுவதற்கும் ஆயிரம் வழிகள். பையன்கள் ஒரு வயதுக்கு மேல் தலையைச் சீவக்கூட விட மாட்டார்கள்.
    இத்தனைக்கும் மேலாக தந்தைக்கு நெருக்கம் பெண்பிள்ளைகளே.
    பாரதியும் பெண்ணைப் பெற்றவனே.  அதனால்தான் ”கண்ணன் என் குழந்தை” என்று எழுதாமல் ”கண்ணம்மா என் குழந்தை” என்று கவிதை எழுதினானோ!
    சின்னஞ் சிறு கிளியே – கண்ணம்மா !
    செல்வ களஞ்சியமே !
    என்னைக் கலி தீர்த்தே – உலகில்
    ஏற்றம் புரிய வந்தாய் !
    பிள்ளைக் கனியமுதே – கண்ணம்மா !
    பேசும்பொற் சித்திரமே !
    அள்ளி யணைத்திடவே – என் முன்னே
    ஆடி வருந் தேனே !
    ஓடி வருகையிலே – கண்ணம்மா !
    உள்ளங் குளிரு தடீ !
    அடித்திரிதல் கண்டால் – உன்னைப்போய்
    ஆவி தழுவு தடீ !
    உச்சி தனை முகந்தால் – கருவம்
    ஓங்கி வளரு தடீ !
    மெச்சி யுனை யூரார் – புகழ்ந்தால்
    மேனி சிலர்க்குதடீ !
    கண்ணத்தில் முத்தமிட்டால் – உள்ளந்தான்
    கள்வெறி கொள்ளு தடீ !
    உன்னைத் தழுவிடிலோ – கண்ணம்மா !
    உன்மத்த மகுதடீ !
    சற்றுன் முகஞ் சிவந்தால் – மனது
    சஞ்சல மாகு தடீ !
    நெற்றி சுருங்கக் கண்டால் – எனக்கு
    நெஞ்சம் பதைக்கு தடீ !
    ”ஒரு குழந்தையைக் கொஞ்சுற சிச்சுவேஷன். இதுக்கு ஒரு பாட்டு வேணும்” என்று இயக்குனர்கள் சொல்லி நிறைய வாட்டி கேட்டிருப்பார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்.
    “ஒரு குழந்தையைக் கொஞ்சுற சிச்சுவேஷன். அதுக்கு இதுதான் பாட்டு. இதுக்கு மெட்டமைக்கனும்” என்று மெல்லிசை மன்னர் கேட்டது இந்தப் பாடலுக்காகத்தான் இருக்கும்.
    இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் படங்களுக்கு 1980களில் இசையமைத்தவர் மெல்லிசை மன்னர். அந்தக் கூட்டணியால் நமக்குக் கிடைத்த அருமையான பாடல்தான் “சின்னஞ் சிறு கிளியே” என்ற பாரதியார் பாடல். இடம் பெற்ற படம் “நீதிக்குத் தண்டனை”.
    ஒருமுறை நண்பர்களோடு தஞ்சாவூர் சென்றிருந்தேன். பெரிய கோயிலில் மாலை நேரத்தில் ஒரு இசைக்கச்சேரி. அதில் இந்தச் சின்னஞ்சிறு கிளியே பாடலைப் பாடினார்கள். பாடகர் பாடிய வேகத்திலும் மத்தளத்தைக் கொட்டு கொட்டுடென்று கொட்டிய வேகத்திலும் ஒரு குழந்தை எழுந்து ஆடத் தொடங்கிவிட்டது. ஆட வேண்டிய பாட்டா இது?
    அப்படியெல்லாம் இல்லாமல் பாடலின் தன்மைக்கேற்ப அற்புதமாக இசையமைத்திருக்கிறார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்.
    இந்தப் பாடலின் வழியாக ஒரு புது பாடகியும் தமிழ்த் திரையிசைக்குக் கிடைத்தார். அவர்தான் சுவர்ணலதா. ”சரவணப் பொய்கையில் நீராடி” என்று சுசீலாம்மா பாடிய முருகன் பாடலைப் பாடிக் காட்டி மெல்லிசை மன்னரிடம் இந்த வாய்ப்பைப் பெற்றவர் சுவர்ணலதா. அவரோடு சேர்ந்து பாடியிருப்பவர் கே.ஜே.ஏசுதாஸ்.
    இந்தப் பாடலை இந்தச் சுட்டியில் கேட்டு ரசிக்கலாம் -> http://www.youtube.com/watch?v=AaLYIYMyqSE
    இந்தப் பாடலில் வரும் “உன் கண்ணில் நீர் வழிந்தால்” என்ற வரிகளைத் தொடக்க வரிகளாக எடுத்துக் கொண்டு கவியரசர் கண்ணதாசன் வியட்நாம் வீடு திரைப்படத்தில் ஒரு பாடல் எழுதினார்.
    உன்கண்ணில் நீர்வழிந்தால் – எந்நெஞ்சில்
    உதிரம் கொட்டுதடீ !
    எங்கண்ணிற் பாவையன்றோ ? – கண்ணம்மா !
    என்னுயிர் நின்ன தன்றோ ?
    இன்னொரு கலைஞனை ஈர்த்து சிந்தனையைத் தூண்டிவிடுவதுதான் படைப்பு. மற்றதெல்லாம் எழுத்துப்புடைப்பு. பாரதியின் எழுத்துகள் பாரதிதாசன் கண்ணதாசன் போன்ற பெருங்கவிகளை மட்டுமல்ல பலரை ஈர்த்துச் சிந்தனையைத் தூண்டியிருக்கிறது என்பதே உண்மை.
    பாரதியின் பிறந்தநாளான இன்று இந்தப் பாடலைப் பகிர்ந்து கொண்டதில் எனக்கும் மகிழ்ச்சி.
    அன்புடன்,
    ஜிரா
    010/365
     
    • rmdeva 11:36 am on December 11, 2012 Permalink | Reply

      உண்மை. என் பையன், ஒரு வயது முதலே, தலை சீவ விடமாட்டேன் என்கிறான். 🙂 பாரதி ஒருவந்தான், தான் நினைத்ததை எந்தவிதமாகவும் மூடி மறைக்காமல் சொன்னவன். தன் வாழ்க்கயை, எந்தவித்திலும், தன் எண்ணங்களுக்கு புறம்பாக ந்டத்தாதவன்.

    • anonymous 4:37 pm on December 11, 2012 Permalink | Reply

      பாராண்ட தமிழின் தேராண்ட பாரதி

      வாழ்க!

      தமிழ்க் கவிதை என்னும் தேரை, புத்தம் புதிய திசையில் திருப்பியவன் = பாரதி

      பிறந்தநாள் 11 12 12 வாழ்க!

      ———

      //நண்பர்களோடு தஞ்சாவூர் சென்றிருந்தேன். பெரிய கோயிலில் மாலை நேரத்தில் ஒரு இசைக்கச்சேரி//

      சின்னஞ் சிறு கிளியே-வை நாதசுரத்தில் வாசிக்கும் போது… மனசு என்னமோ பண்ணும்;
      வரிகள் மறைஞ்சி, அப்படியே, நாதசுரத்தில் உணர்ச்சியா வழிஞ்சி ஓடும்;
      ———

      //பாடலின் தன்மைக்கேற்ப அற்புதமாக இசையமைத்திருக்கிறார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்//

      இந்த வரி, ரொம்ப யோசிக்க வைத்தது;
      இசை அமைப்பதுக்கு முன்பே பிரபலமாகி விட்ட பாடல்களுக்கு, இசை அமைப்பது என்பது ரொம்பவும் கடினமான பணி;
      “பாடலின் தன்மைக்கு ஏற்ப” ன்னு சொன்னீங்க பாருங்க; அது ரொம்பவும் முக்கியம்!

      தன் மேதா விலாசத்தைக் கூட்டிக் கொள்ளாது, குறைத்துக் கொள்ளத் தெரியணும், இது போன்ற கட்டங்களில்;
      இது MSV யால் முடியும்;
      “பாடலின் தன்மைக்கு ஏற்ப” என்பதை உணர்ந்தவனால் தான் முடியும்; பணிவு இந்தக் குணத்தைப் பெற்றுத் தரும்;

      மூலப் பாடலின் ஆன்மாவை,
      வைர-வைடூர்ய அலங்காரத்தில் சிதைக்காமல்,
      ஒரே ஒரு நாட்டு ரோஜா மாலை மட்டும்;

      அது மட்டும் போட்டுக்கிட்டு வரும் திருச்செந்தூர் முருகனைப் பாத்து இருக்கீங்களா?
      அந்த அழகு, இந்த இசையில்!

      • anonymous 4:55 pm on December 11, 2012 Permalink | Reply

        ஆண் குழந்தை மேல், தன் விருப்பங்களை ஏற்றிட முடியாது:)
        பெண் குழந்தை மேல்? = கன்னா பின்னா -ன்னு ஏத்தலாம்:)
        நீங்க சொன்னது போல், பொம்பளைப் பாப்பாவைக் கொஞ்சுவதில், கூட ஒரு படி சுகம்!

        பாரதியும் அதையே நினைச்சானோ என்னவோ?
        அதான் “கண்ணன் பாட்டில்”, நடுவே “கண்ணம்மா பாட்டு”

        கண்ணன் பாட்டு தானே இது?
        எப்படி “கண்ணம்மா” வந்தா? -ன்னு யோசிச்சி இருக்கீங்களா?

        இதுக்கு முந்தன பாட்டு = கண்ணன் என் சத்குரு!
        இதுக்கு அடுத்த பாட்டு = தீராத விளையாட்டுப் பிள்ளை!
        இது மாத்திரம் எப்படிக் “கண்ணம்மா”?

        ஒரு கால், மாறன் என்னும் 32 வயசுப் பையன் (பின்னாளில் ஆழ்வார்)
        அவனின் நாயகி பாவம் போல், கண்ணனையே கண்ணம்மா ஆக்கி விட்டானோ பாரதி?

        இல்லை!
        = இது கண்ணன் பாட்டே அல்ல!
        = இது பராசக்தி பாட்டு!
        —————-

        பாரதியார், இதுக்கு முன்னுரை எழுதும் போது,
        “பராசக்தியைக் குழந்தையாகக் கண்டு சொல்லிய பாட்டு”-ன்னு எழுதறாரு;

        ஏன்?
        கண்ணன் பாட்டுல எதுக்குப் பராசக்தி வரணும்?

        கண்ணனுடன் பிறந்த குழந்தை பராசக்தி!

        அவன் கிருஷ்ணன் என்றால், இவள் கிருஷ்ணை!
        அவன் கருப்பன் என்றால், இவள் கருப்பி!

        கண்ணன், ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஒருத்தி மகனாய் ஒளிந்து விளையாடினான்! ஆனா இவ?
        இரண்டு தாய்களில், ஒருத்தியுடன் கூட வளராமல், கை மாறிய குழந்தை!

        பெண் குழந்தையாச்சே, கம்சன் விட்டுருவான் -ன்னு நினைச்சாங்க;
        ஆனால் கருத்துப் பிழை கொண்ட கம்சன் விடுவானா என்ன?
        மூர்க்கத்தனமான பிடிப்புக்கு ஆண் என்ன? பெண் என்ன?
        குழந்தையைக் கொல்ல உசரத் தூக்கினான்! உதை வாங்கினான்!

        கம்சன் கையில் சிக்காமல், வானில் பறந்தாள் மாயோள்! காற்றில் கலந்தாள் – தெய்வமானாள்;

        இன்னிக்கும் ஆயர்/ கோனார் வீடுகளில் (எங்க வீட்டில் உட்பட),
        மணம் ஆகாமல் மறைந்து போகும் இளம் பெண்களுக்கு,
        ஆண்டு தோறும் படையல் போடுவார்கள்!
        புதுப் புடவையை ஒரு பொண்ணு போல சுத்தி, அதற்கு காதோலை-கருக மணி மாட்டி, நகை போட்டு, அதன் மடியில் பூ பழம் வச்சி, பூசை போடுவார்கள்!

        பாரதியும் செய்வதும், கிட்டத்தட்டே அதே தான்!
        கண்ணக் குழந்தை ஓடி விளையாடுது! ஓடி விளையாடு பாப்பா, ஒரு குழந்தையை வையாதே பாப்பா அல்லவா?
        எனவே இன்னொரு குழந்தையான, இரவில் இடம் மாறிய பராசக்திக் குழந்தையை, கண்ணனின் தங்கச்சியைக், கண்ணனுடன் ஓடி விளையாடச் செய்கிறான்!

        சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா! செல்வக் களஞ்சியமே!
        என்னைக் கலி தீர்த்தே, உலகில் ஏற்றம் புரிய வந்தாய்!

        = “பராசக்தியைக் குழந்தையாகக் கண்டு சொல்லிய பாட்டு!

    • anonymous 4:57 pm on December 11, 2012 Permalink | Reply

      முல்லைச் சிரிப்பாலே, எனது மூர்க்கம் தவிர்த்திடுவாய்!

      இன்பக் கதைகள் எல்லாம், – உன்னைப்போல்
      ஏடுகள் சொல்வதுண்டோ?

      அன்பு தருவதிலே, உன்னை நேர்
      ஆகுமோர் தெய்வம் உண்டோ?

      • anonymous 5:25 pm on December 11, 2012 Permalink | Reply

        எங்க ஆயா (பாட்டி = அப்பாவின் அம்மா),
        கிராமத்தில், இந்தப் பாட்டை ராவுல பாடுவாங்க… அதுனாலயோ என்னவோ சின்னஞ் சிறு கிளியே… ரொம்ப நெருக்கம் ஆயிருச்சி…

        அவுங்க வாழ்க்கை அம்புட்டு சரியா அமையலை;
        கண்ணுல தண்ணிக்குப் பதிலா, இந்தப் பாட்டா வரும், அவுங்க கிட்ட இருந்து;
        as a kid, i used to watch her body language closely in the night; = she melts in this song

        ஒரு கிராமத்துல, எப்படித் தமிழ் இலக்கியப் பாட்டெல்லாம் புகுந்தது? -ன்னு எனக்கு இன்னிக்கும் வியப்பு தான்;
        தீவிர சைவக் குடும்பம்; ஆனாலும், திருப்பாவை பாடித் தூங்க வச்சது ஆயா தான்; திருப்பாவை எழுப்புற பாட்டு -ன்னு அவுங்களுக்குத் தெரியாது போல:)

        தூங்கிட்டேனாக்கும் -ன்னு பாட்டைப் பாதியிலே நிறுத்திடுவாங்களாம் ஆயா;
        மறந்துட்டாங்க போல-ன்னு, மீதி திருப்பாவை, நான் எடுத்துக் குடுப்பேன் -ன்னு, அத்தை இன்னிக்கும் சொல்லிச் சிரிப்பாங்க:)
        அம்மாக்கு இந்த வைணவப் பாட்டெல்லாம் ரொம்ப புடிக்காது; சில சமயம் ஆயா-அம்மா உரசலும் வரும்:)

        வளர்ந்த பின், அப்போ கிடைச்ச TDK 60 Cassette ல பதிச்சி வச்சேன்;
        இன்னும் அதை Cd/mp3 ஆ மாத்தத் தெரியாம, அதுக்காகவே mini Cassette player இன்னும் வச்சிக்கிட்டு இருக்கேன்;
        ஆயா பாடிய – சின்னஞ் சிறு கிளியே – இன்னும் என் கூடவே இருக்கு, கடல் கடந்து!

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel