Updates from November, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • என். சொக்கன் 10:50 pm on November 18, 2013 Permalink | Reply  

    உத்தரவின்றி உள்ளே வா 

    • படம்: ஜில்லுன்னு ஒரு காதல்
    • பாடல்: முன்பே வா
    • எழுதியவர்: வாலி
    • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
    • பாடியவர்கள்: நரேஷ் ஐயர், ஷ்ரேயா கோஷல்
    • Link: http://www.youtube.com/watch?v=OHA_ATdgw_g

    நீ நீ மழையில் ஆட,

    நான் நான் நனைந்தே வாட,

    என் நாளத்தில் உன் ரத்தம்,

    நாடிக்குள் உன் சத்தம்!

    பள்ளியில் தமிழ் மீடியத்தில் அறிவியல் (அல்லது உயிரியல்) படித்தவர்களுக்கு இந்த வரிகளைப் படித்தவுடன் சட்டென்று அந்த ‘நாளம்’ என்ற சொல்லில் மனம் சென்று நிற்கும்.

    ’ரத்தக் குழாய்’ என்று நாம் பரவலாகச் சொல்லும் அதே வார்த்தைதான். ’ரத்த நாளம்’ என்று சொன்னால் இன்னும் அழகாக இருக்கிறது. நாளத்திற்கும் குழாய்க்கும் ஏதேனும் நுட்பமான வேறுபாடு உண்டா என்று தெரியவில்லை.

    அப்புறம் அந்த நாளமில்லாச் சுரப்பிகள்? தமனி? சிரை? தந்துகி? இந்த வார்த்தைகளையெல்லாம் கேட்கும்போது, மறுபடி ஒன்பதாங்கிளாஸுக்குத் திரும்பிவிடமாட்டோமா என்றிருக்கிறது!

    விஷயத்துக்கு வருவோம். நம் உடம்பு நிறைய இருக்கும் ரத்த நாளங்கள் பேச்சிலோ, சினிமாப் பாடல்களிலோ அதிகம் வருவதில்லை என்று நினைத்தேன். கொஞ்சம் தேடினால் ஒரு சில நல்ல உதாரணங்கள் சிக்கின:

    உயிர் உருகிய அந்த நாள் சுகம்,

    அதை நினைக்கையில்,

    ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும் (வாலி)

    ***

    நாளங்கள் ஊடே

    உனதன்பின் பெருவெள்ளம் (மதன் கார்க்கி)

    ***

    ரத்த நாளங்களில் போடும் தாளங்களில்

    புதுத் தாலாட்டுதான் பாடுமா? (பொன்னியின் செல்வன்)

    ***

    மேளங்கள் முழங்குதுங்க, ரத்த

    நாளங்கள் துடிக்குதுங்க (டி. ராஜேந்தர்)

    ***

    ஒரே ஒரு ஆச்சர்யம், ”அறிவியல் கவிஞர்” வைரமுத்து இந்தச் சொல்லை இதுவரை பயன்படுத்தவில்லையோ?

    ***

    என். சொக்கன் …

    18 11 2013

    351/365

     

     
    • Uma Chelvan 6:52 am on November 19, 2013 Permalink | Reply

      நாளமில்லாச் சுரப்பிகள்……..endocrine glands ….that’s what I taught my students today. What a coincident….

      அஞ்சு நாள் வரை அவள் பொழிந்தது ஆசையின் மழை!!
      அதில் நனைந்தது நூறு ஜென்மங்கள் நினைவினில் இருக்கும் -அது போல்
      இந்த நாள் வரும் உயிர் உருகிய அந்த நாள் சுகம். – அதை நினைக்கையில்
      ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும் ………ஒரு நிமிஷம் கூட என்னை பிரியவில்லை

      மிக மிக அருமையான பாடல். இதை தான் முதல் பாடலாக நீங்க சொல்லி இருக்கீங்க!!! still I want to post this song again !!!

    • amas32 8:37 pm on November 19, 2013 Permalink | Reply

      எவ்வளவு ஆராய்ச்சிப் பண்ணியிருக்கீங்க ஒரு பதிவுக்கு! வைரமுத்து இந்த சொல்லை பயன்படுத்தவில்லை என்னும் அளவுக்கு research!

      //என் நாளத்தில் உன் ரத்தம்,// very romantic!

      ரொம்பப் பிடிச்சிருக்கு இந்த போஸ்ட் 🙂

      amas32

    • rajinirams 11:28 am on November 20, 2013 Permalink | Reply

      நல்ல பதிவு. என்ன அருமையான வாலியின் வரிகள் -உயிர் உருகிய அந்த நாள் சுகம்,அதை நினைக்கையில்,ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும்,நீங்கள் சொன்னது போல வைரமுத்து அந்த வார்த்தையை உபயோகிக்காதது ஆச்சர்யமே.

    • நவநீதன் 9:34 pm on January 29, 2014 Permalink | Reply

      ”வந்து தூறல் போடு… இல்லை சாரல் போடு… எந்தன் நாளம் நனையட்டுமே…”

      வைரமுத்து

      படம்: க.கொ.க.கொ
      பாடல்: ஸ்மை யாயி..

  • என். சொக்கன் 11:11 pm on October 9, 2013 Permalink | Reply  

    பூக்கள் சொன்ன ரகசியம் 

    • படம்: கூலிக்காரன்
    • பாடல்: குத்துவிளக்காக
    • எழுதியவர்: டி. ராஜேந்தர்
    • இசை: டி. ராஜேந்தர்
    • பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி
    • Link: http://www.youtube.com/watch?v=asEFE8rUXkM

    பல வண்ணப் பூக்கள், பாடுது பாக்கள்

    அது ஏன் தேன் சிந்துது?

    அது நீ பூ என்குது!

    இந்தப் பாடலைக் கேட்டுக்கொண்டிருக்கும்போதே ‘என்குது’ என்கிற வார்த்தையால் திகைத்துப்போனேன். ரீவைண்ட் செய்து மறுபடி தெளிவாகக் கேட்டேன், ‘என்குது’ என்றுதான் பாடுகிறார் எஸ். பி. பி.

    ’என்கிறது’ என்ற சொல்லின் சுருக்கம்தான் இது. ஆனால், சாதாரணமாக நாம் எழுத்திலோ பேச்சிலோ பயன்படுத்துகிற வார்த்தை அல்ல. பாடல்களில்கூட, மிக அபூர்வமாகவே தென்படுகிறது.

    உதாரணமாக, ‘தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு’ என்ற கவிமணியின் பிரபலமான குழந்தைப் பாடலில், ‘அம்மா என்குது வெள்ளைப் பசு’ என்று ஒரு வரி வரும்.

    கவிமணி பாடலிலும் சரி, டி. ராஜேந்தரின் பாடலிலும் சரி, ‘என்குது’ என்பதற்குப் பதில் ‘என்கிறது’ என்று எழுதினால் மெட்டுக்குப் பொருந்தாது. அதையே கொஞ்சம் சுருக்கி ‘என்றது’ என்று எழுதினால் கச்சிதமாகப் பொருந்தும். இவர்கள் இருவரும் பிரபலமான அந்த வார்த்தையைத் தவிர்த்து வேண்டுமென்றே ‘என்குது’ என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று ஊகிக்கிறேன். அதற்கும் ஒரு தனி அழகு இருக்கிறதுதான்!

    நல்லவேளையாக, நாமும் இந்தச் சொல்லைக் கைவிட்டுவிடவில்லை. கொஞ்சம் மாறுபட்ட வடிவத்தில் இன்னும் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறோம்.

    உதாரணமாக, ‘கதவை இழுத்து இழுத்துப் பார்த்தேன், திறக்கமாட்டேங்குது’ என்று சொல்கிறோம் அல்லவா? அதன் எழுத்து வடிவம், ‘திறக்க மாட்டேன் என்குது’. அதுதான் பின்னர் ‘திறக்கமாட்டேனென்குது’ என்று மாறி, திரிந்து, ‘திறக்கமாட்டேங்குது’ என்று சிதைந்துவிட்டது!

    அதாவது, ‘என்குது’ என்ற சொல்லின் சிதைந்த வடிவம்தான், இன்று நாம் சர்வசாதாரணமாகப் பயன்படுத்துகிற ‘ங்குது’ என்ற விகுதி.

    இது உங்கள் மனத்தில் விளங்குவேன் என்குதா? விளங்கமாட்டேங்குதா? 😉

    ***

    என். சொக்கன் …

    09 10 2013

    312/365

     
    • rajinirams 2:42 pm on October 10, 2013 Permalink | Reply

      சூப்பர் சார்,உண்மையிலேயே “என்குது”என்பது வேறு எந்த பாடலிலாவது இருக்குமா என்பது சந்தேகமே,நீங்கள் சொன்னது போல என்றதுன்னு எழுதாமல் என்குதுன்னு எழுதியிருப்பது புதுமை,அருமை.

    • Uma Chelvan 8:05 pm on October 10, 2013 Permalink | Reply

      “என்குது ” என்பது very unusual word தான். இதுவரை நான் கேள்விபட்டது இல்லை. “என்ன செய்வேன்” என்பது “என் செய்வேன்”னு சுரிங்கயது போலவா?

    • amas32 9:52 pm on October 15, 2013 Permalink | Reply

      4வரிநோட்டில் தேடிப் பிடித்து எழுதும் புதுப் புது வார்த்தைகளின் பொருள் பற்றி எழுதும்போது இழையோடும் உங்கள் நகைச்சுவை எழுத்து என்னை வெகுவாகக் கவருகிறது 🙂

      amas32

  • G.Ra ஜிரா 9:57 pm on August 24, 2013 Permalink | Reply  

    கை, செய் 

    கை என்னும் உறுப்புக்கு தெலுங்கில் செய் என்றே பெயர். வேலைகளை எல்லாம் செய்வதனால் அது செய் என்றழைக்கப்படுகிறது. பழைய தமிழ்ப் பெயர்தான். தமிழில் வழக்கொழிந்து தெலுங்கில் மட்டும் நிலைத்து விட்ட பெயர்.

    அந்தக் கையை நிறைய தமிழ்ப் பாடல்களில் காணலாம் என்றாலும் இந்தக் கட்டுரையில் மூன்று பாடல்களை மட்டும் எடுத்துப் பார்க்க நினைக்கிறேன்.

    முதலில் புலமைப்பித்தன் எழுதிய வரிகளைப் பார்க்கலாம்.

    எதுகை அது உனது இருகை அதில் எனது பெண்மை ஆடட்டுமே
    ஒருகை உடல் தழுவ மறுகை குழல் தழுவ இன்பம் தேடட்டுமே
    (பாடல் – அமுதத் தமிழில். படம் – மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன். இசை-எம்.எஸ்.வி)

    எதுகை பொருந்தி வரும். தொடர்ந்து வரும். நயமும் தரும். அப்படி அவன் கைகள் அவள் பெண்மைக்குப் பொருந்தியும் தொடர்ந்தும் நயமாகவும் வரட்டும் என்று விரும்புகிறாள். அவ்வாறாக ஒரு கை உடலையும் மறுகை குழலையும் தழுவும் போது அங்கு தவழும் இன்பத்துக்கு குறைவேது?

    அடுத்தது கண்ணதாசன் எழுதிய வரிகளைப் பார்ப்போம். பாடலுக்கான காட்சியை முதலில் சொல்லி விடுகிறேன். அவள் பெயர் பத்மாவதி. அவள் அலர் அமர் திருமகளின் வடிவம். அவள் மணக்க விரும்புவது ஸ்ரீநிவாசனை. அந்த ஸ்ரீநிவாசனே ஒரு குறத்தியாக வந்து பத்மாவதிக்கு குறி சொல்லி ஆடிப் பாடும் பாடல் இது. அதற்கு கண்ணதாசன் எழுதிய வரிகளைப் பாருங்களேன்.

    மங்கை தண்கை மலர்க்கை
    அந்த மலர்மகள் வழங்கும் திருக்கை
    பங்கய மலரே இருக்கை
    அந்த பாற்கடல் நாயகன் துணைக்கை
    (படம் – தெய்வத் திருமணங்கள், இசை – எம்.எஸ்.விசுவநாதன்)

    அவளுடைய பெயரிலேயே குளிர்ந்த தாமரை இருக்கிறது. பத்மாவதியல்லவா. அந்த மங்கையின் கையும் குளிர்ந்த மலர்க்கையாம். அலைமகள் அள்ளி வழங்கும் செல்வம் நிறைந்த கை. அவளுடைய இருக்கை பங்கய மலர். அவளுக்கு பாற்கடல் பரந்தாமனே துணைக்கை.

    ஏன் இத்தனை கைகள்? குறத்தி கை பார்த்துதானே குறி சொல்ல முடியும்!

    இதையெல்லாம் விட என்னை ஆச்சரியப்படுத்தியது டி.ராஜேந்தரின் வரிகள். அவர் கைக்கு உவமை சொன்னது போல வேறு யாரும் சொன்னார்களா என்று எனக்குத் தெரியவில்லை.

    அஞ்சுதலை நாகமென நெளிகின்ற கையானது
    (பாடல் – மோகம் வந்து தாகம் வந்து, படம் – உயிருள்ளவரை உஷா, இசை – டி.ராஜேந்தர்)

    ஐந்து விரல்களை ஐந்து தலைகளாக்கி கையை நாகம் என்று உவமித்தது நல்ல கற்பனை. மோகம் கொண்ட வேளையில் அவளுடைய கை ஐந்துதலை நாகம் போல நெளிவதாகச் சொல்வதும் பொருத்தம் தானே!

    இதுவரை திரையிலக்கியம் பார்த்தோம். இனி பழந்தமிழ் இலக்கியம் கொஞ்சம் பார்க்கலாமா?

    கை என்ற சொல் ஒரு அகவுணர்வைக் குறிக்கும். அந்த உணர்வு நிலைக்கு கைந்நிலை என்று பெயர்.

    அதென்ன கைந்நிலை?

    காமம் பாடாய்ப் படுத்தும் உடல் வாதையைக் கூடல் கொண்டு தீர்க்க யாரும் இல்லாத நிலை கைந்நிலை.

    அந்த நிலையில் வருந்திடும் பெண்களைத்தான் சமூகம் கைம்பெண் என்று அழைக்கிறது.

    அந்த உணர்வுநிலையை முன்னிறுத்தி சங்கம் மருவிய காலத்தில் ஒரு நூல் எழுந்தது. பதினென் கீழ்க்கணக்கு வரிசையில் கடைசியாக வைக்கப்பட்ட அந்த நூலின் பெயரே கைந்நிலை என்பதுதான்.

    இந்த நூலை இயற்றியவர் பெயர் புல்லங்காடர். குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை ஆகிய ஐந்து திணைகளிலும் கைந்நிலையை முன்னிறுத்தி எழுந்த ஒரே நூல் கைந்நிலை மட்டுமே எனலாம். அந்த நூலில் ஒரு அழகான பாடலைப் பார்க்கலாமா?

    நாக நறுமலர் நாள்வேங்கைப் பூவிரவிக்
    கேச மணிந்த கிளரெழிலோ ளாக
    முடியுங்கொ லென்று முனிவா னொருவன்
    வடிவேல்கை யேந்தி வரும்

    புன்னை மரத்து நன்மலரையும்
    வேங்கை மரத்தின் பூவினையும்
    சூடிக் கொண்ட கிளர் எழில் கூந்தலாள் நான்
    பிரிவாற்றாமை துன்பம் வருத்துவதால்
    அழிந்து போய்விடுவேனோ என்று அஞ்சி
    எதற்கும் அஞ்சாதவனாய் தன்னுயிரை வெறுத்து
    கையில் வேலேந்தி காட்டு விலங்குகளைத் தாண்டி
    இரவில் வருவான்! இன்பம் தருவான்!

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
    பாடல் – அமுதத் தமிழில் எழுதும் கவிதை
    வரிகள் – புலவர் புலமைப்பித்தன்
    பாடியவர்கள் – ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – மதுரை மீட்ட சுந்தரபாண்டியன்
    பாடலின் சுட்டி – http://youtu.be/RDARFimmHLg

    பாடல் – மங்கை தண்கை மலர்க்கை
    வரிகள் – கவியரசு கண்ணதாசன்
    பாடியவர் – வாணி ஜெயராம்
    இசை – திரையிசைச் சக்கரவர்த்தி எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – தெய்வத் திருமணங்கள் (ஸ்ரீநிவாச கல்யாணம்)
    பாடலின் சுட்டி – கிடைக்கவில்லை

    பாடல் – மோகம் வந்து தாகம் வந்து
    பாடியவர் – எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்
    வரிகள், இசை – டி.ராஜேந்தர்
    படம் – உயிருள்ளவரை உஷா
    பாடலின் சுட்டி – http://youtu.be/1S3XGSA4qTk

    அன்புடன்,
    ஜிரா

    266/365

     
    • rajinirams 9:01 pm on August 26, 2013 Permalink | Reply

      “கை” தட்டி பாராட்ட வேண்டிய நல்ல பதிவு. முக்கியமான மற்ற இரண்டு பாடல்கள்-ஹோ ஹோ ஹோ -கை கை மலர் கை, இது நாட்டை காக்கும் கை:-))

  • G.Ra ஜிரா 11:43 am on July 14, 2013 Permalink | Reply  

    படைத்தவன் யாரோ? 

    நீண்ட நாட்களாக எனக்கு ஒரு ஐயம். தமிழ்க் கவிஞர்கள் அதிகமாகப் பாடிய கடவுள் யார்?

    முருகன், அம்மன், சிவன், கிருஷ்ணன் என்று அடுக்கலாம். ஆனால் அவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களால் பாடப்பட்டவர்கள்.

    கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும் இல்லாதவர்களும் ஒத்த எண்ணத்தோடு எந்தக் கடவுளைப் பாடியிருக்கிறார்கள்?

    அப்படியொரு ஒரு கடவுள் இருக்கிறார். அவருக்கு கோயில் கிடையாது. வழிபாடு கிடையாது. திருவிழா கிடையாது. பலிகளோ படையல்களோ கிடையாது. ஆனால் கவிஞர்கள் மட்டும் அவரைப் போற்றிக் கொண்டாடுவார்கள்.

    யார் அந்தக் கடவுள்? ஏன் அவரைக் கொண்டாடுகிறார்கள்?

    கண்ணதாசன் எழுதிய ஒரு பாடலின் வரியைச் சொல்கிறேன். உங்களுக்குச் சட்டென்று புரிந்து போகும்.

    படைத்தானே பிரம்மதேவன் பதினாறு வயது கோலம்!

    புரிந்து விட்டதல்லவா? நான்முகன் பிரம்மன் என்றெல்லாம் அழைக்கப்படும் படைப்புக் கடவுள்தான் அந்தக் கடவுள்.

    ஏன்? ஏனென்றால் அந்தப் படைப்புக் கடவுள்தான் காதலர்களுக்குத் தக்க காதலிகளைக் கொடுக்கிறார். இல்லை இல்லை. படைக்கிறார்.

    மடப்பாவையார் நம் வசமாகத் தூது நடப்பாரே தெய்வம் நமக்கு” என்று ஆதிநாதன் வளமடலில் செயங்கொண்டார் சொன்னதும் அதே கருத்துதான்.

    கொன்றை அணிந்த சிவனோ உலகளந்த கோபலனோ எமக்குத் தெய்வமல்ல. அழகான காதல் பாவையருக்காக தூது நடப்பவரே நமக்குத் தெய்வம்.

    சரி. வாருங்கள். இனி ஒவ்வொரு கவிஞரும் பிரம்மனை எப்படியெல்லாம் புகழ்ந்திருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

    அப்படி பிரம்மனைப் புகழ்ந்தவர்களில் என்னை மிகவும் வியக்க வைத்தவர் டி.ராஜேந்தர். அவரே எழுதி இசையமைத்த இரண்டு பாடல்களில் மிகமிகக் கவிநயத்தோடு பிரம்மனைக் குறிப்பிட்டிருக்கிறார். அந்த வரிகளை நீங்களே படித்துப் பாருங்கள். நான் சொல்வதை ஒப்புக் கொள்வீர்கள்.

    தேவலோக அமுதத்தை குழம்பாக எடுத்து
    தங்க நிற வர்ணத்தில் குழைக்கின்ற போது
    பிரம்மனுக்கு ஞானம் வந்து உன்னை படைக்க
    அட பிரமிப்புடன் நானும் வந்து உன்னை ரசிக்க

    மேலே குறிப்பிட்டுள்ள பாடல் உயிருள்ளவரை உஷா படத்தில் இடம் பெற்ற “மோகம் வந்து தாகம் வந்து என்னை அழைக்க” பாடல். விளக்கமே தேவைப்படாத அழகிய வரிகள் அல்லவா!

    அதே போல மைதிலி என்னைக் காதலி படத்தில் இடம் பெற்ற “ஒரு பொன்மானை நான் காணத் தகதிமித்தோம்” பாடலிலும் பிரம்மனைப் பாராட்டுகிறார் விஜய டி.ராஜேந்தர்.

    தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறி
    தாமரைப் பூ மீது விழுந்தனவோ
    இதைக் கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில்
    படைத்திட்ட பாகந்தான் உன் கண்களோ

    அடடா! என்ன கற்பனை! அவள் கண்ணைப் படைப்பதற்கே பிரம்மனுக்கு இப்படியொரு காட்சி தேவைப்பட்டிருக்கிறது. அவள் முழுவுடலையும் பளிங்குச் சிலையாய் படைப்பதற்கு எதையெதையெல்லாம் பார்த்துக் கற்றானோ!

    வைரமுத்துவின் சிந்தனை சற்று வேறுவிதமாகச் செல்கிறது. ஒரு எலக்ட்ரானிக் கண் கொண்டு காதலியைப் பார்க்கிறார். அவள் சிரிப்பு கூட டெலிபோன் மணி போலக் கேட்கிறது. அப்படி ஒரு பெண்ணை பிரம்மன் எதை அடிப்படையாகக் கொண்டு படைத்திருப்பான்? வேதங்களா? குருவருளா? சிவனருளா?

    கம்ப்யூட்டர் கொண்டிவளை அந்த பிரம்மன் படைத்தானா

    பிரம்மனும் காலமாற்றத்துக்குத் தக்க ஓலைச் சுவடிகளை வீசி எறிந்து விட்டு கம்ப்யூட்டரில் அனிமேஷன் செய்யத் துவங்கி விட்டானோ என்று வைரமுத்துவின் கற்பனை ஓடுகிறது.

    இன்னொரு பாட்டில் சற்று கொச்சையாக பிரம்மனின் படைப்புக் கதையைச் சொல்கிறார் வைரமுத்து. அண்ணாமலை திரைப்படத்தில் இடம் பெற்ற “அண்ணாமல அண்ணாமல” பாடல் வரிகளைக் கொஞ்சம் பார்க்கலாம்.

    பிரம்மனுக்கு மூடு வந்து உன்னை படைச்சிட்டான்
    அடி காமனுக்கு மூடு வந்து என்னை அனுப்பிட்டான்

    பிரம்மனின் வள்ளல் திறமையையும் கஞ்சத்தனத்தையும் இன்னொரு பாட்டில் கொண்டுவருகிறார் வைரமுத்து. ஜீன்ஸ் படத்தில் இடம்பெற்ற “அன்பே அன்பே கொல்லாதே” பாடல் வரிகளைக் கொடுக்கிறேன். பிரம்மன் எங்கு கஞ்சத்தனத்தையும் எங்கு வள்ளல் தன்மையையும் காட்டினான் என்று நீங்களே கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்.

    பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
    அடடா பிரம்மன் கஞ்சனடி
    சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன்
    ஆஹா அவனே வள்ளலடி

    அத்தோடு விடவில்லை வைரமுத்து. பிரம்மனைப் பார்த்து “தகுமா? முறையா? நீதியா?” என்று ஜெமினி படத்து நாயகனுக்காக முறையிடுகிறார்.

    பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
    என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
    உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்
    நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய்
    பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
    அய்யோ இது வரமா சாபமா

    இந்தப் பாட்டில் சொல்வது போன்ற அழகான பெண்ணை பிரம்மன் கொடுத்தால் அது வரமா? சாபமா? இரண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

    இன்னொரு வித்தியாசமான கவிஞர் இருக்கிறார். அவர் இசையில் அவர் எழுதி இசையமைத்த பாடல் தான் நாடோடித் தென்றல் படத்தில் வந்த “மணியே மணிக்குயிலே மாலையிளங் கதிரழகே” பாடல். ஆம். இசைஞானி இளையராஜா தான் எழுதிய பாடலிலும் பிரம்மனை இழுக்கிறார்.

    மணியே மணிக்குயிலே மாலையிளங் கதிரழகே
    கொடியே கொடிமலரே கொடியிடையில் மணியழகே
    ………………..
    பொன்னில் வடித்த சிலையே பிரம்மன் படைத்தான் உனையே

    இன்றைய கவிஞர்களும் பிரம்மனை விடுவதாக இல்லை. முதலில் பா.விஜய் எழுதிய பாடல்களைப் பார்க்கலாம்.

    அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
    நீ என் மனைவியாக வேண்டும் என்று
    ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான்
    ஆயுள் வரை காத்திருப்பேன் என்று நானும் சொல்லி வந்தேன்

    அரசாங்க அலுவலகத்தில் மனு கொடுத்தால் அது எங்கு போகும் என்று தெரியும். ஆனால் பிரம்மனிடத்தில் மனு கொடுத்தால் கண்டிப்பாக அது நடக்கும் என்றொரு நம்பிக்கையை தேவதையைக் கண்டேன் திரைப்படப் பாடல் வரிகளில் கொண்டு வந்திருக்கிறார்.

    பிரியமான தோழி படத்துக்காகவும் பிரம்மனைப் புகழ்ந்திருக்கிறார் பா.விஜய்.

    பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
    ………………..
    பிரம்மன் செய்த சாதனை உன்னில் தெரிகிறது

    இந்த உலகத்தையே படைத்து, அதில் அத்தனை உயிர்களையும் படைத்ததை விட ஓவியம் போன்ற அழகான காதலியைப் படைத்ததுதான் மிகப் பெரிய சாதனை என்று காதலன் பார்வையில் பா.விஜய் எழுதியதும் ரசிக்கத்தக்கதுதான்.

    நா.முத்துக்குமாரும் வழக்கு எண் 18/9 படத்துக்காக பிரம்மன் கையைப் பிடித்து இழுத்திருக்கிறார்.

    வானத்தையே எட்டி புடிப்பேன்
    பூமியையும் சுத்தி வருவேன்
    …………………
    அடி பெண்ணே நீயும் பெண்தானோ
    இல்ல பிரம்மன் செய்த சிலைதானோ

    வழக்கமாக பாட்டெழுதும் கவிஞர்கள் மட்டுமல்ல, புதிதாகப் பாட்டெழுதுகின்றவர்களுக்கும் பிரம்மனே துணை. தானே இயக்கிய கச்சேரி ஆரம்பம் திரைப்படத்தில் ஒரு பாடலை இயக்குனர் திரைவாணன் எழுதியிருக்கிறார். அங்கும் பிரம்மனுக்குப் போற்றி மேல் போற்றி.

    பிரம்மா உன் படைப்பினிலே…
    எத்தனையோ பெண்கள் உண்டு
    ஆனாலும் அசந்துவிட்டேன் அழகினிலே
    இவளைக் கண்டு
    அழகினிலே.. இவளைக்கண்டு
    வாடா வாடா பையா

    இப்படியெல்லாம் பாடல்களைப் பார்க்கும் போது எனக்கு என்ன தோன்றுகிறது தெரியுமா?

    இதுதான் பிரம்மனுக்கு வந்த வாழ்வு! வாழ்வோ வாழ்வு!

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்

    பாடல் – மோகம் வந்து தாகம் வந்து
    படம் – உயிருள்ளவரை உஷா
    பாடியவர்கள் – எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்
    பாடல் & இசை – டி.ராஜேந்தர்
    பாடலின் சுட்டி – http://youtu.be/1S3XGSA4qTk

    பாடல் – அன்பே அன்பே கொல்லாதே
    படம் – ஜீன்ஸ்
    பாடல் – வைரமுத்து
    பாடியவர் – ஹரிஹரன்
    இசை – ஏ.ஆர்.ரகுமான்
    பாடலின் சுட்டி – http://youtu.be/_QzDFtWVf3c

    பாடல் – படைத்தானே பிரம்மதேவன்
    படம் – எல்லோரும் நல்லவரே
    பாடல் – கண்ணதாசன்
    பாடியவர் – எஸ்.பி.பாலசுப்ரமணியம்
    இசை – வி.குமார்
    பாடலின் சுட்டி – http://youtu.be/qamttiCClsc

    பாடல் – அழகே பிரம்மனிடம் மனு
    படம் – தேவதையைக் கண்டேன்
    பாடல் – பா.விஜய்
    பாடியவர்கள் – ஹரீஷ் ராகவேந்திரா, கங்கா
    இசை – தேவா
    பாடலின் சுட்டி – http://youtu.be/lrCW8fOcXVQ

    பாடல் – அண்ணாமல அண்ணாமல
    படம் – அண்ணாமலை
    பாடல் – வைரமுத்து
    பாடியவர்கள் – எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா
    இசை – தேவா
    பாடலின் சுட்டி – http://youtu.be/OQ3RdFU5vsQ

    பாடல் – வானத்தையே எட்டி புடிப்பேன்
    படம் – வழக்கு எண் 18/9
    பாடல் – நா.முத்துக்குமார்
    பாடகர் – தண்டபாணி
    இசை – ஆர்.பிரசன்னா
    பாடலின் சுட்டி – http://youtu.be/a-ohRTF8CeI

    பாடல் – பெண்ணொருத்தி பெண்ணொருத்தி
    படம் – ஜெமினி
    பாடல் – வைரமுத்து
    இசை – பரத்வாஜ்
    பாடியவர் – எஸ்.பி.பாலசுப்ரமணியம்
    பாடலின் சுட்டி – http://youtu.be/XNiS5Zxj_RY

    பாடல் – பிரம்மா உன் படைப்பினிலே(வாடா வாடா பையா)
    படம் – கச்சேரி ஆரம்பம்
    பாடல் – திரைவாணன் (இயக்குனர்)
    பாடியவர் – கார்த்திகேயன் எம்.ஐ.ஆர், அந்திதா
    இசை – டி.இமான்
    பாடலின் சுட்டி – http://youtu.be/ho-4PCJnQ6k

    பாடல் – பெண்ணே நீயும் பெண்ணா
    படம் – பிரியமான தோழி
    பாடல் – பா.விஜய்
    பாடியவர்கள் – கல்பனா, உன்னி மேனன்
    இசை – எஸ்.ஏ.ராஜ்குமார்
    பாடலின் சுட்டி – https://www.youtube.com/watch?v=KSM9aCJFVTo

    பாடல் – மணியே மணிக்குயிலே
    படம் – நாடோடித் தென்றல்
    பாடியவர்கள் – எஸ்.ஜானகி, மனோ
    பாடல் & இசை – இளையராஜா
    பாடலின் சுட்டி – http://youtu.be/UNIb8Pblu7w

    பாடல் – ஒரு பொன் மானை நான் காண
    படம் – மைதிலி என்னைக் காதலி
    பாடியவர் – எஸ்.பி.பாலசுப்ரமணியம்
    பாடல் & இசை – டி.ராஜேந்தர்
    பாடலின் சுட்டி – http://youtu.be/S-XvP9p9mOs

    பாடல் – டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா
    படம் – இந்தியன்
    பாடியவர் – ஹரிணி, ஹரிஹரன்
    பாடல் – வைரமுத்து
    இசை – ஏ.ஆர்.ரகுமான்
    பாடலின் சுட்டி – http://youtu.be/SfHbknfOOuA

    அன்புடன்,
    ஜிரா

    225/365

     
    • மணிகண்டன் துரை 2:19 pm on July 14, 2013 Permalink | Reply

      அருமையான பதிவு

    • rajinirams 2:49 pm on July 14, 2013 Permalink | Reply

      அடடா பிரமாதம். எல்லா பாடல்களுமே சூப்பர். புதியவன் படத்தில் வைரமுத்துவின் “நானோ கண் பார்த்தேன்” பாடலில் பருவம் அடடா பஞ்சம் இல்லை,அடடா பிரம்மன் அவன் கஞ்சன் இல்லை என்று வரும். எல்லோரும் நல்லவரே பாடல் படைத்தானே பிரம்மதேவன் பாடல் கவியரசர் கண்ணதாசன் எழுதியது. (பகை கொண்ட உள்ளம்,சிகப்புகல்லு போன்றவை புலமைப்பித்தன் எழுதியவை).திருவருள் படத்தில் வரும் கந்தன் காலடியை பாடலில் “அதனால் கந்தனிடம் பிரம்மனும் மிரளுவான்” என்ற வரி வரும். நன்றி.

    • amas32 5:49 pm on July 14, 2013 Permalink | Reply

      எத்தனை எத்தனைப் பாடல்களைத் தேடி எடுத்து அடுக்கியிருக்கிறீர்கள்! படைப்புக் கடவுளான பிரம்மா சும்மா இல்லை! 🙂 அவருக்குக் கோவிலோ வழிபாடோ இல்லை என்றாலும் திரைப் பாடல்கள் அவரை துதிப்பது அவருக்குப் பெருமை தான் 🙂

      amas32

  • என். சொக்கன் 10:51 am on May 14, 2013 Permalink | Reply  

    விருந்தினர் பதிவு : அம்மானை 

    ”ஒரு பொன் மானை நான் காண தகதிமித்தோம்

    ஒரு அம்மானை நான் பாட தகத்திமித்தோம்”

     பொன்மான் ஓகே! அதென்ன அம்மானை…?  ‘பொன் மானை’க்கு ரைமிங்காக வந்து அழகாக அமர்கிறதே…

    அம்மானை என்றால் ஒருவகை ’சங்ககாலத்து விளையாட்டு’ என்கிறார்கள். சில பெண்கள் வட்டமாக அமர்ந்து ஒரு காயை (அம்மானைக் காய்)  வைத்து விளையாடும் விளையாட்டாம். நமது கிராமப்புறங்களில் விளையாடும் ‘சொட்டாங்கல்’ என்பது மாதிரியாகப் புரிந்து கொள்ளலாம். சில இடங்களில் இவ்விளையாட்டு ‘தட்டாங்கல்’ எனவும் வழங்கப் படுவதுண்டு.

    சங்க காலப் பெண்டிர், இதை விளையாடுகையில், ஒரு பாடல் பாடி, அதன் இறுதிச் சொல் ‘அம்மானை’ என வரும்படி முடிப்பார்களாம்! அதனாலேயே அது அம்மானை.

    சில பத்தாண்டுகளுக்கு முன்பு, தம் வீட்டுப் பெண்கள் சொட்டாங்கல் விளையாடுவதற்கு அண்ணன், தம்பிமார்கள் நல்ல கூழாங்கற்களுக்காக கண்மாய்களையும் ஊருணிகளையும் சுற்றிப் பெரும் தேடுதல் வேட்டையெல்லாம் நடத்திய கதைகளுண்டு. இப்போதோ, கிராமங்களில்கூட சொட்டாங்கல் விளையாடுகிறார்களா என்பதே சந்தேகம். இதில் எங்கிருந்து அம்மானைப் பாடலெல்லாம்?

    சரி, ‘விளையாட்டு’க்காக நாயகியைப் பார்த்துப் பாடினாலும் அதில் இலாபமும் நியாயமும் உண்டு. ஆனால் இங்கு ஏன் ஒரு விளையாட்டையே பாடுகிறார் கவிஞர். விஜய. டி. இராஜேந்தர்?

    இந்தப் பாடலில் வரும் அம்மானை என்பது விளையாட்டல்ல, பருவம்! அதாவது, அந்த விளையாட்டை விளையாடுவதற்கு உகந்த பருவம்!

    தமிழ்ச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றான பிள்ளைத்தமிழ், ஆண், பெண் குழந்தைகளுக்குரிய பருவங்களை வகுத்து வழங்கியுள்ள‌து. அதில் பெண்பால் பிள்ளைத் தமிழுக்கு மட்டுமே உரிய மூன்று பருவங்களுள் ஒன்று இந்த அம்மானை!

    பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்று இப்போது புழங்கப் படும் பெண் வகைகளில், அம்மானைப் பருவத்திற்கான பெண்களாக பெதும்பையினரையும் மங்கையினரையும் குறிப்பிடலாம். அந்தப் பருவங்களில்தான் அவர்கள் அம்மானை விளையாடத் தொடங்குவதால் அப்படி அழைக்கப் படுகின்றனர்.

    ஆக, கதாநாயகியை ஒரு குழந்தையாக பாவித்துக் காதலன் ‘பிள்ளைத் தமிழ்’ பாடுவதாக எழுதுகிறார் டி.ஆர்.

    இதே ‘அம்மானை’ உள்ளிட்ட பருவங்களால் மதுரை மீனாட்சியம்மையைக் குழந்தையாக உருவகித்து, ‘மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்’ இயற்றியவர் குமரகுருபரர். அவர் இந்தக் காதலுக்கு அருள்வாராக!

    ராஜூ

    பிறந்தது வளர்ந்தது எல்லாம் மதுரைப் பக்கம். கடந்த ஆறாண்டுகளாக தமிழிணைய வாசி. இது அது என்று வகை தொகையின்றி எல்லாவற்றிலும் நுனிப்புல் மேய்வது பிடித்த செயல்.

    வலைப்பூ: http://www.tucklasssu.blogspot.com
    ட்விட்டரில்: http://www.twitter.com/naaraju

     
    • amas32 10:58 am on May 14, 2013 Permalink | Reply

      நல்ல வரிகள் தேர்வு செய்து அழகாக விளக்கியுள்ளீர்கள். பெண் குழந்தைக்குரிய பருவங்களை பிள்ளைத் தமிழ் மிக அழகாக எடுத்துரைத்திருக்கிறது.

      ammas32

      • kamala chandramani 1:31 pm on May 14, 2013 Permalink | Reply

        சொட்டாங்கல்தான் ‘ஏழாங்கல்’ என்ற ஆட்டமோ? அதில்தான் ஏழு கூழாங்கல்லை வைத்துக்கொண்டு தூக்கிப் போட்டு விளையாடுவார்கள். மனம், கண், கை மூன்றும் ஒருமித்து செயல்படும் ஒரு நல்ல விளையாட்டு.

        • ராஜூ 7:42 pm on May 15, 2013 Permalink

          ஆமாம். சொட்டாங்கல்தான் ஏழாங்கல் என்றும் அழைக்கப்படும். தவிர, ஐந்துகல் என்றும் அழைக்கப்படுவதுண்டு. பொதுவாக கற்கள் ஒற்றைப்படை எண்களாகத்தான் இருக்கும்.இது எங்க ஊர் விதி 🙂

    • saba 7:36 pm on May 14, 2013 Permalink | Reply

      உங்கள் பதிவு மற்றொரு பாடலையும் நினைவுக்கு கொண்டு வருகிறது

      அம்மானை அழகு மிகும் கண்மானை,
      ஆடிவரும் பெண்மானை…

    • GiRa ஜிரா 9:43 am on May 15, 2013 Permalink | Reply

      அருமையான பதிவு. அம்மானைப் பருவம் பிள்ளைத்தமிழ் நூல்களில் வருவதுதானே. அதுவும் பெண்குழந்தைகளுக்கு மட்டுமே. ஆண்களுக்கு இல்லை.

      அம்மானை அழகு மிகும் கண்மானை
      ஆடி வரும் பெண்மானைத் தேடி வரும் பெருமானை
      இது கண்ணதாசன் காட்டிய அம்மானை. நல்ல பாடல்.

      • ராஜூ 7:42 pm on May 15, 2013 Permalink | Reply

        அட! ‘அம்மானை’யை டீ.ஆர் மட்டுமே தொட்டிருப்ப‌தாக நினைத்திருந்தேன். 🙂 கண்ணதாசனாருமா…? சூப்பர்!

    • Uma Chelvan 10:30 pm on May 20, 2013 Permalink | Reply

      excellent !!!

  • mokrish 10:46 am on March 18, 2013 Permalink | Reply  

    முரண்களைக் கோத்து மாலை 

    எண்பதுகளின் துவக்கத்தில் வந்த படங்களில் ஒரு தலை ராகம் முக்கியமானது. நிறைய புதியவர்கள், கல்லூரி  ரயில்வே ஸ்டேஷன்  வித்தியாசமான களம் என்று சில அடையாளங்களுடன் வந்து மிகப்பெரிய Blockbuster வெற்றி பெற்றது. படத்தின் பாடல்கள் இசைக்காகவும் வரிகளுக்காகவும் பரபரப்பாக பேசப்பட்டன. இதில் எல்லா பாடல்களும் ஆண் குரலில் ஒலிக்கும். இது ஒரு தலை காதல் என்பதை குறிக்கவே என்று அந்த நாளில் கல்லூரியில் விவாதித்ததுண்டு.

    எழுதி இசையமைத்தவர் என்று படம் வந்தபோது T ராஜேந்தருக்கு  முழு Credit கொடுக்கப்படாவிட்டாலும் பின்னர் வந்த வெற்றிகள் அவர் உழைப்புக்கும் வேர்வைக்கும் பேர் வைத்தது.

    இதில் முரண்களைக்  கோர்த்து மாலை செய்த இனிமையான பாடல் ஒன்று உண்டு. காதல் கைகூடாது என்று வலியுடன் நாயகன் பாடும் பாடல். http://www.inbaminge.com/t/o/Oru%20Thalai%20Ragam/Ithu%20Kuzhanthai%20Padum.eng.html

    நடக்க முடியாத அல்லது முரண்பட்ட அல்லது தொடர்ச்சியாக அமையாத அல்லது பொருத்தமில்லாத நிகழ்வாக சில உதாரணங்களை சொல்லி அதுபோலவே தன் காதலும் என்று சொல்லும் பாடல்.

    இது குழந்தை பாடும் தாலாட்டு
    இது இரவு நேர பூபாளம்
    இது மேற்கில் தோன்றும் உதயம்
    இது நதியில்லாத ஓடம்

    பூபாளம் அதிகாலை ராகம் அது இரவில் பொருந்தாது. மேற்கில் உதயம் நடக்கவே நடக்காது. நதியில்லாத ஓடம் உபயோகமற்றது – என்று தன் காதலின் நிலை சொல்லும் வார்த்தைகள். (சமீபத்தில் ராம் படத்தில் வந்த ஆராரிராரோ பாடல்  குழந்தை பாடும் தாலாட்டாக)

    சரணத்திலும் தொடரும் இந்த அமைப்பு – சில வரிகளைப்பாருங்கள்

    நடை மறந்த கால்கள் தன்னின்
    தடயத்தைப் பார்க்கிறேன்
    வடமிழந்த தேரது ஒன்றை
    நாள் தோறும் இழுக்கிறேன்

    வெறும் நாரில் கரம் கொண்டு
    பூமாலை தொடுக்கிறேன்..
    வெறும் காற்றில் உளி கொண்டு
    சிலை ஒன்றை வடிக்கிறேன்

    ஆனால் கூர்ந்து கவனித்தால் நாயகன் தன்  நிலையை நன்கு உணர்ந்திருக்கிறான் என்றே தோன்றுகிறது. சரணங்களின் முடிவில் வரிகளை கவனியுங்கள் .

    உறவுறாத பெண்ணை எண்ணி
    நாளெல்லாம் வாழ்கிறேன்
    விருப்பமில்லா பெண்ணை எண்ணி
    உலகை நான் வெறுக்கிறேன்
    ஒரு தலையாய் காதலிலே
    எத்தனை நாள் வாழ்வது

    வாழ்வின் அர்த்தமின்மை, உலகை வெறுக்கும் நிலை, வாழ விருப்பமின்மை என்று கதை சொல்லும் பாடல்.

    இது என்ன வகைப்பாடல்? இது போல் அது என்று சொல்லும் உவமை மாதிரி தோன்றவில்லை .இது Compound Similie என்று எங்கோ படித்த நினைவு ஆனால் இப்போது கூகிளினால் அது பொருந்தவில்லை. Incongruity , முரண்கள், Inverted Parallels , நெகடிவ் metaphor, என்று கலந்து கட்டி – ஆனால் கேட்டவுடன் ரசிக்கக்கூடிய வரிகள்.

    இது போல் வேறு பாடல் உண்டா? கொஞ்சம் யோசித்தால் ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு’ பாடல் இந்த வகையோ என்று தோன்றுகிறது. அதில் களமும் காட்சியும் வேறு. நாயகியை சிரிக்கவைக்க மனதில் தோன்றியதை வாயில் வந்ததை குஷியாக பாடும் பாடல்

    இது என்ன வகை ? தெரிந்தால் சொல்லுங்கள்.

    மோகனகிருஷ்ணன்

    107/365

     
    • anonymous 11:25 am on March 18, 2013 Permalink | Reply

      ஊடாடும் ஊடுபொருளைத் தொட்டு இருக்கீக;
      வாழ்த்துக்கள் மோகனகிருஷ்ணன்:)

      Compound Simile, Inverted Parallel, Negative Metaphor -ன்னு இதுக்கு இத்தனை அடைகளா? சங்கத் தமிழில் கேட்டிருக்கப்படாதோ?:)

      இது குழந்தை பாடும் தாலாட்டு – ஒரு அற்புதமான சில்லு வரி;
      பின்னாளில், டி.ராஜேந்தர் ஏன் தான் இப்படித் தடம் மாறிப் போனாரோ? -ன்னு ஏக்கம், திரைக் கவிதை வாசகர்கள் எல்லாருக்கும் இருக்கும்!

      ஆனா, அடுத்தாப்புல குடுத்தீங்க பாருங்க – எங்க கண்ணதாசன் பாட்டு; மலேசிய மயக்குவோனின் “ஆண்மைக்” குரலிலே…
      அது பாட்டு; நீங்க சொன்ன Inverted Parallel, Negative Metaphor எல்லாம் இருக்கும் பாட்டு!:)

      “கூத்து மேடை ராஜாவுக்கு நூற்றி ரெண்டு பொண்டாட்டி
      நூற்றி ரெண்டு பெண்டாட்டியும் வாத்து முட்டை போட்டதுவாம்
      பட்டத்து ராணி அதுல பதினெட்டு பேரு
      பதினெட்டு பேர்க்கும் வயசு இருபத்து ஆறு”

      இந்த வரிக்கு விளக்கஞ் சொல்லுறவன் செத்தான்:) பரிமேலழகர் கூட 365paa போட்டு வெளக்கஞ் சொல்ல முடியாது, ஆமாம்:)

      • anonymous 11:49 am on March 18, 2013 Permalink | Reply

        மரபான தமிழ் இலக்கணம் -ன்னு ஒன்னு இருக்கு!
        ஆனா, “மரபு தாண்டிய இலக்கணம்” -ன்னும் தொல்காப்பியரு காட்டுவாரு;

        *இது குழந்தை பாடும் தாலாட்டு
        = இல் பொருள் உவமை அணி -ன்னு சொல்லலாம்;
        குழந்தை என்னிக்குமே தாலாட்டு பாடாது; இல்லாத பொருளை உவமை ஆக்குதல்; அது போல நாயகன் காதல் -ன்னு சொல்லாமச் சொல்லுறது;

        ஆனா, அத்தோட நிறுத்தாம, வரீசையாக் கலந்து கட்டி அடிச்சா?

        *இது இரவு நேர பூபாளம் = (கால வழு) பல்வயிற் போலி உவமை
        *இது மேற்கில் தோன்றும் உதயம் = இல் பொருள் உவமை

        *இது நதியில்லாத ஓடம் = இது இல்பொருள் உவமை ஆவாது; நதி இல்லாத இடத்திலும் ஓடம் கட்டி வச்சிருப்பாங்க; நதிக்கு அப்பறமாக் கொண்டு போவாங்க;

        அப்ப என்ன-ன்னு இதைச் சொல்லுறது?
        பல உவமைகள்/ உருவகங்கள்; நடுவுல முரண்; Incongruent, Inverted Parallel

        பல்பொருள் உவமையா? பிறிது மொழிதலா?
        வடமிழந்த தேரை இழுக்கிறேன் -ன்னு வேற பாடுறானே; குறிப்பு உவமம்/ உள்ளுறை உவமமா?:)
        —-

        இங்கிட்டு தான் சங்கத் தமிழ், ஒங்களுக்குக் கை கொடுக்கும்!:)
        இதுக்குப் பேரு = “இறைச்சிப் பொருள்”

      • anonymous 12:11 pm on March 18, 2013 Permalink | Reply

        சங்கத் தமிழ், “மரபு அல்ல!”-ன்னு எதையும் ஒதுக்காது;

        பரத்தையின் கற்பு? = Is it an oxymoron? இல்லை! “இல்-பரத்தை” -ன்னு காட்டும்!

        ஆண் காதலோ, பெண் காதலோ, அல்லது உலக வழக்கத்துக்கு மாறான காதலோ..
        எதையுமே ஒதுக்காது; வகைப் படுத்தும்!
        அதான் 1500 வருசத்துக்கு முன்பே, “Illegitimate Child”-ஐ, காப்பியத் தலைவியாக வைக்க முடிஞ்சுது (மணிமேகலை)

        இன்று மரபு அல்லாதது, நாளை மரபு ஆகும்-ன்னு தெரிஞ்சி, அதுக்கும் இடம் விட்டு வைக்கும்! (room for human emotions)
        அப்படியொரு சக்தி வாய்ந்த கவிதை உத்தி = “இறைச்சிப் பொருள்”

        சில சமயம், நாம நெனக்குறதை, நேரடியாச் சொல்லீற முடியாது…
        அதுவும் காதலில்?
        சொல்லுக்கும் மனசுக்கும் போட்டி வச்சா, மனசே ’ஜெ’யிக்கும்:)

        அப்படியான நேரங்களில் உள்ளுறை (உவமம்) வைப்பது வாடிக்கை!
        அதாச்சும், “குறிப்புப்” பொருள்;

        கருப் பொருள் -ன்னு சொல்லப்படும், மரம்/ விலங்கு etc etc, இதுங்க மேல ஏத்திச் சொல்லுறது!
        இந்த மறைமுகக் குறிப்பும்-பொருளும், பொருந்தி வரும்;

        ஆனா, இப்பிடி நேரடியாப் பொருந்தி வராத பொருளும் இருக்கு!
        அதான் = “இறைச்சிப் பொருள்”

        அதே ஆட்டுக்குட்டி முட்டையிட்டு பாட்டு…

        காக்கையில்லாச் சீமையிலே காட்டெருமை மேய்க்கையிலே
        சந்தைக்குப் போறேன், நீங்க சாப்பிட்டு வாங்க
        சம்பந்தம் பண்ண, எனக்கு சம்மதம் தாங்க!

        இதுல என்ன “உவமை” இருக்கு? = ஒன்னுமில்லை!
        குறிப்புப் பொருள் (உள்ளுறை) இருக்கு = ஆனா ஒன்னோட ஒன்னு பொருந்துதா? இல்லை!

        மனசு போற வேகத்துக்கு, “நியமமா” உவமை சொல்லாம, பலதும் கலந்து சொல்வது; ஆனா குறிப்பால மட்டுமே சொல்லுவது;
        நாம தான், தனித் தனியாப் பொருத்திப் பாத்துக்கணும்;

        பட்டத்து ராணி அதுல பதினெட்டு பேரு
        பதினெட்டு பேர்க்கும் வயசு இருபத்து ஆறு

        Inverted Parallel, Negative Metaphor, Incongruity -ன்னு இம்புட்டு சிரமம் ஒங்களுக்கு வைப்பதில்லை சங்கத் தமிழ்!
        = “இறு”ப்பதால் வரும் “இறைச்சிப் பொருள்”; அதுவே அது!:)

    • anonymous 1:02 pm on March 18, 2013 Permalink | Reply

      //இது போல் அது என்று சொல்லும் உவமை மாதிரி தோன்றவில்லை? இது என்ன வகை? தெரிந்தால் சொல்லுங்கள்//

      இப்போ, தெரிகிறது அல்லவா?:) Lemme share a small example; வேரல்வேலி -ன்னு தொடங்கும் குறுந்தொகை;
      “இவள் உயிர் தவச் சிறிது, காமமோ பெரிதே” -ன்னு முடியும்! பலாப் பழக் காதல்:)
      —-

      வேரல்வேலி வேர்க்கோட் பலவின்
      சாரல் நாட! செவ்வியை ஆகுமதி!

      யார் அஃது அறிந்திசினோரே? சாரல்
      சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு, இவள்
      உயிர்தவச் சிறிது, காமமோ பெரிதே!
      —-

      தலைவியின் காதல் = பலாப் பழம் போல; சின்னக் கொம்புல, பெரிய பளுவைத் தாங்கிக்கிட்டு இருக்கும்;
      அவ உசுரு சிறுசு; ஆனா அவ மனசு ஆசையோ பெருசு;
      சின்ன உசுரு-ல (கொம்புல), பெரிய ஆசையை (பலாவை) தாங்கிக்கிட்டு தவிக்குறா;

      சரி, என்ன அழகு; வழக்கமான உவமை போல-ன்னு தோனும்; ஆனா பலரும் கவனிப்பதில்லை இன்னோரு விடயத்தை;
      —-

      //வேர்க்கோட் பலவின் சாரல் நாட// = இது என்னமோ வேர்ப்பலா பழுக்கும் நாட்டை உடைய தலைவா -ன்னு, “லேசா”, அர்த்தம் பண்ணிட்டுப் போயிடுவாங்க!

      ஆனா, இங்கே காட்டுவது ரெண்டு பலாப் பழங்கள்;
      *ஆண் பலா = வேர்ப் பலா
      *பெண் பலா = கொடிப் பலா

      ஆண் (வேர்) பலாவுக்குப் பாரமில்லை; இனிமையும்/ இன்பமும் அதுக்குத் தான் கூட; அறுந்து விழாது; நல்ல பாதுகாப்பு
      ஆனா பெண் பலா? மனசால பாரம் சுமக்குறா; சுமக்கும் சக்தி (காம்பு) மீறி, அவனுக்காகவே சுமக்குறா.. வெடிச்சா, மொத்தமும் சிதறி அசிங்கப்படுவா… ஆனாலும் சுமக்குறா;

      இதெல்லாம் பாட்டில் இருக்கா? நீங்களே பாருங்க!
      பலரும், பெண்ணுள்ளம் காமம் சுமக்குது -ன்னு மட்டுமே நினைப்பாங்க; ஆனா எத்தனை துயரம் இருந்தா, ஆண் பலா (வேர்ப் பலா)வையும் உவமை காட்டுவா?

      ஆனா காட்டலை; “வேர் கோட் பலவின் நாட” -ன்னு காட்டாம காட்டுறா; “வேர்ப் பலா” ன்னு குறிப்பை வச்சிடுறா;
      —-

      இது வரைக்கும் “உள்ளுறை உவமம்” -ன்னு சொல்லீறலாம்! ஆனா அல்ல!

      “வேரல் வேலி” -ன்னு வேலியைக் காட்டுறா பாருங்க; என்ன நேரடித் தொடர்பு? = அங்கே தான் “இறைச்சிப் பொருள்” (உள்ளுறை உவமம் அன்று)

      அவன் வேலிக்குள்ள இருக்கான்; வேர்ப்பலாவுக்குத் தானே வேலி போடுவாங்க? கொடிப்பலாவுக்குப் போட முடியாதே!
      யார் இந்த வேலி? = உறவினர்கள்? வேலை? சமூக அந்த’ஸ்’து?

      அதை அவ சொல்லலை! நாமளாத் தான் பொருத்திக்கணும்;

      உன் உறவினர்கள் உன்னை எப்படியும் ஏத்துப்பாங்க
      ஆனா, என் உறவு என்னை ஏத்துக்காது டா…
      உன் காமம் அடங்கீரும், என் காமம் அடங்காதுடா… மனசுல பாரம் சுமக்கிறேன்டா

      இது அத்தனையும் சேர்ந்தா = “இறைச்சிப் பொருள்”!
      —-

      குழந்தை பாடும் தாலாட்டு
      இரவு நேர பூபாளம்
      மேற்கில் தோன்றும் உதயம்
      நதி இல்லாத ஓடம்
      வடம் இல்லாத தேரு – இழுக்கிறேன், இழுக்கிறேன், இழுக்கிறேன் டா பாவீ… இன்னுமா புரியல ஒனக்கு? (நீயல்லால்) யார் அஃது அறிந்திசினோரே?

    • amas32 (@amas32) 1:40 pm on March 18, 2013 Permalink | Reply

      T ராஜேந்தர் எதுகை மோனையோடு எழுதும் பாடல்களை இன்று நிறைய பேர் கிண்டல் செய்தாலும் அவர் மிகுந்த திறமை வாய்ந்தவர் என்பதில் துளியும் சந்தேகமில்லை. அதுவும் அவர் திரைத் துறைக்கு வந்த புதிதில் எழுதிய பாடல்கள் எல்லாமே அருமை. முக்கியமாக ஒரு தலை ராகம் ஒரு மாஸ்டர் பீஸ் தான்.

      இந்தப் பாடலின் சிறப்பு ஒவ்வொரு வரியும் ஒரே கருத்தை வலியுறுத்துவது தான். இல்லாத ஒன்றை மனம் இருப்பதாக நம்பி வேதனைப் படுவதை இந்தப் பாடல் மிக அழகாக சொல்கிறது. மனம் போகாத ஊருக்கு வழி தேடுகிறது. இந்தப் பாடலின் உயிர் அதன் ராகத்தில் உள்ளது என்று கூறுவேன். மனத்தை தொடும் சோக கீதம்.

      உங்கள் பாடல் தேர்வுகள் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. முன்பே சொல்லியிருந்தாலும் மறுபடியும் சொல்கிறேன் 🙂

      amas32

    • rajnirams 2:18 pm on March 18, 2013 Permalink | Reply

      நல்ல பாடல் தேர்வு,நல்ல விளக்கம்.பாராட்டுக்கள்.இந்த படத்தில் வரும் பிற பாடல்களான “வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது வைகையில்லா மதுரையிது மீனாட்சியை தேடுது”
      கடவுள் வாழும் கோவிலிலே,நான் ஒரு ராசியில்லா ராஜா போன்ற பாடல்களும் ஒரு தலை காதலால் உருகி பாடும் சோக பாடல்கள் தான். பாடல்களை எழுதிய டி.ஆருக்கு நல்ல காலம் தொடங்கினாலும்,நான் ஒரு ராசியில்லா ராஜா என்று பாடிய டி.எம்.எஸ். அவர்களுக்கு இறங்கு முகமாகி விட்டது சோகமே. நன்றி.

    • Arun Rajendran 1:56 pm on March 19, 2013 Permalink | Reply

      திரு. மோகனகிருஷ்ணன் அவர்களுக்கு முதற்கண் என் நன்றி… “அனானிமஸ்” சார்…நீங்க யாரா இருந்தாலும், உங்கப் பதிவுகள் அத்தனையும் முத்துக்கள்…ஏகப்பட்ட விளக்கம் கொடுத்து இருக்கீங்க…இன்னும் படிக்கனும்ன்ற ஆவல தூண்டி இருக்கீங்க…உங்கள் வலைப்பதிவுகள் இருப்பின் பகிர்ந்தால் பயண் அடைவேன்…

  • என். சொக்கன் 12:57 pm on March 5, 2013 Permalink | Reply  

    கண்ணே, கொஞ்சம் சிரி! 

    • படம்: உயிருள்ளவரை உஷா
    • பாடல்: இந்திர லோகத்து சுந்தரி
    • எழுதியவர்: டி. ராஜேந்தர்
    • இசை: டி. ராஜேந்தர்
    • பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், பி. எஸ். சசிரேகா
    • Link: http://www.youtube.com/watch?v=jpoafTkAwv4

    பொன் உருகும் கன்னம் குழிய,

    ஒரு புன்முறுவல் சிந்திச் சென்றாள்,

    இந்த மானிடனும் மயங்கிவிட்டான்,

    அந்த மானிடமே மனதை விட்டான்!

    ’முறுவல்’ என்றால், அட்டகாசமாக வாய் விட்டுச் சிரிக்காமல், உதட்டால்மட்டும் (கொஞ்சம்போல்) சிரிப்பது, பேச்சுவழக்கில் அதிகம் இல்லாவிட்டாலும், இன்றைக்கும் எழுத்தில் நிறையப் பயன்படுத்துகிற ஒரு சொல்தான் இது.

    அதே சொல்லுக்கு, ‘பல்’ என்றும் ஓர் அர்த்தம் உண்டு, தெரியுமா?

    நளவெண்பாவில் புகழேந்தியின் பாடல் ஒன்று, ‘முந்நீர் மடவார் முறுவல் திரள் குவிப்ப’ என்று தொடங்குகிறது. கடற்கரைக்கு வரும் அலைகள், அங்கே பல முத்துகளை விட்டுச் செல்கின்றன, அவற்றைப் பார்க்கும்போது, அழகிய பெண்களின் பற்களைப்போல் இருக்கின்றனவாம்.

    இங்கே ‘முறுவல்’ என்றால் பல், ’திரள்’ என்றால் ஒன்றுசேர்தல், பல கவிதைகளைத் தொகுத்துள்ள ஒரு நூலைத் ‘திரட்டு’ என்று சொல்கிறோமே, அதன் வேர்ச்சொல் இதுதான். ஆக, ‘முறுவல் திரள்’ என்றால், பற்களின் கூட்டம், அல்லது தொகுப்பு.

    ’முறுவல்’ சரி, அதென்ன ‘புன்’?

    ராமாயணத்தில் ராமனும் ராவணனும் முதன்முறையாகச் சந்தித்துக்கொள்ளும் காட்சியில், ‘புன் தொழில் ராவணன்’ என்கிறார் கம்பர். அதாவது, (இன்னொருவருடைய மனைவியை விருப்பமில்லாமல் கடத்திவந்து சிறைப்படுத்தியதன்மூலம்) சிறுமையான தொழிலைச் செய்துவிட்ட ராவணன்.

    ‘புன்’ என்றால் சிறிய / சிறுமையான / அதிகம் இல்லாத என்று பொருள் சொல்லலாம். புன்சிரிப்பு, புன்முறுவல், புன்னகை (புன் நகை) என்று சிரிப்புக்கு அடைமொழியாகவே நாம் மிகுதியாகப் பயன்படுத்தும் ஒரு சொல் இது.

    ’முறுவல்’போலவே, சிரிப்பைச் சொல்லும் இன்னொரு சொல் ‘மூரல்’. இதுவும் ‘புன்’ என்கிற அடைமொழியுடன் சேர்ந்து ‘புன்மூரல்’ என்று குறிப்பிடப்படுகிறது.

    சில பழந்தமிழ் இலக்கியங்களில் இந்த இரண்டையும் சேர்த்து, அதாவது ’மூரல் முறுவல்’ என்றும் படிக்கிறோம், இது ‘கேட்டு வாசல்’, ‘நடுசென்டர்’போல அபத்தமாகத் தோன்றும், ஆனால் அங்கெல்லாம் ‘மூரல் = பல்’, ‘முறுவல் = சிரிப்பு’ (Or, Vice Versa) என்று புரிந்துகொள்ளவேண்டுமாம், அதாவது, பல் தெரியச் சிரிப்பது.

    இவ்வளவு தூரம் வந்துவிட்டோம், இன்னும் இரண்டு வார்த்தைகளைப் பார்த்துவிடலாம்!

    முதலில், முறுகு.

    ஹோட்டலில் நுழைந்தவுடன் ‘முறுகலா ஒரு தோசை’ என்று ஆர்டர் செய்கிறோம், இது ‘முள்’ என்பதிலிருந்து வந்தது, நாம் கடித்துத் தின்னும் முறுக்கு, நமீதா விளம்பரம் செய்கிற முறுக்குக் கம்பிகள் எல்லாமே இந்தக் குடும்பம்தான்.

    இந்தச் சொல்லுக்கு இரண்டு பொருள்கள் உள்ளன:

    1. நேராக இல்லாமல் திரிக்கப்பட்டது / முறுக்கப்பட்டது
    2. சூட்டினால் கடினமானது.

    அரிசி முறுக்குக்கும், வீடு கட்டும் கம்பிக்கும் இந்த இரண்டு பொருள்களும் பொருந்துகின்றன, ஆனால் தோசைக்கு இரண்டாவது அர்த்தம்மட்டும்தான் என்று நினைக்கிறேன்.

    அடுத்து, முருகு.

    கடினமான ‘முறுகு’வில் வல்லின ‘ற’க்குப் பதில் இடையின ‘ர’ சேர்த்தால், அர்த்தமே மாறிவிடுகிறது. இந்த ‘முருகு’வின் பொருள், அழகு, இளமை.

    அதனால்தான், ’அழகன் முருகன்’ என்கிறோம், இடுகுறிப் பெயர் அல்ல, காரணப் பெயர்!

    இப்போ, மாப்பிள்ளை முறுக்கு, மாப்பிள்ளை முருக்கு… இரண்டில் எது சரி? 😉

    ***

    என். சொக்கன் …

    094/365

     
    • Arun Rajendran 11:38 am on March 6, 2013 Permalink | Reply

      என் போன்ற இளைஞர்கள் எளிதில் புரிந்து கொள்ளும்படி நமீதாவின் முருக்கு கம்பி..இல்லை இல்லை..முறுவல்கள் மூலம் விளக்கியமைக்கு என் புன்மூரல்களை சமர்பிக்கிறேன்..

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel