படைத்தவன் யாரோ? 

நீண்ட நாட்களாக எனக்கு ஒரு ஐயம். தமிழ்க் கவிஞர்கள் அதிகமாகப் பாடிய கடவுள் யார்?

முருகன், அம்மன், சிவன், கிருஷ்ணன் என்று அடுக்கலாம். ஆனால் அவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களால் பாடப்பட்டவர்கள்.

கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும் இல்லாதவர்களும் ஒத்த எண்ணத்தோடு எந்தக் கடவுளைப் பாடியிருக்கிறார்கள்?

அப்படியொரு ஒரு கடவுள் இருக்கிறார். அவருக்கு கோயில் கிடையாது. வழிபாடு கிடையாது. திருவிழா கிடையாது. பலிகளோ படையல்களோ கிடையாது. ஆனால் கவிஞர்கள் மட்டும் அவரைப் போற்றிக் கொண்டாடுவார்கள்.

யார் அந்தக் கடவுள்? ஏன் அவரைக் கொண்டாடுகிறார்கள்?

கண்ணதாசன் எழுதிய ஒரு பாடலின் வரியைச் சொல்கிறேன். உங்களுக்குச் சட்டென்று புரிந்து போகும்.

படைத்தானே பிரம்மதேவன் பதினாறு வயது கோலம்!

புரிந்து விட்டதல்லவா? நான்முகன் பிரம்மன் என்றெல்லாம் அழைக்கப்படும் படைப்புக் கடவுள்தான் அந்தக் கடவுள்.

ஏன்? ஏனென்றால் அந்தப் படைப்புக் கடவுள்தான் காதலர்களுக்குத் தக்க காதலிகளைக் கொடுக்கிறார். இல்லை இல்லை. படைக்கிறார்.

மடப்பாவையார் நம் வசமாகத் தூது நடப்பாரே தெய்வம் நமக்கு” என்று ஆதிநாதன் வளமடலில் செயங்கொண்டார் சொன்னதும் அதே கருத்துதான்.

கொன்றை அணிந்த சிவனோ உலகளந்த கோபலனோ எமக்குத் தெய்வமல்ல. அழகான காதல் பாவையருக்காக தூது நடப்பவரே நமக்குத் தெய்வம்.

சரி. வாருங்கள். இனி ஒவ்வொரு கவிஞரும் பிரம்மனை எப்படியெல்லாம் புகழ்ந்திருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

அப்படி பிரம்மனைப் புகழ்ந்தவர்களில் என்னை மிகவும் வியக்க வைத்தவர் டி.ராஜேந்தர். அவரே எழுதி இசையமைத்த இரண்டு பாடல்களில் மிகமிகக் கவிநயத்தோடு பிரம்மனைக் குறிப்பிட்டிருக்கிறார். அந்த வரிகளை நீங்களே படித்துப் பாருங்கள். நான் சொல்வதை ஒப்புக் கொள்வீர்கள்.

தேவலோக அமுதத்தை குழம்பாக எடுத்து
தங்க நிற வர்ணத்தில் குழைக்கின்ற போது
பிரம்மனுக்கு ஞானம் வந்து உன்னை படைக்க
அட பிரமிப்புடன் நானும் வந்து உன்னை ரசிக்க

மேலே குறிப்பிட்டுள்ள பாடல் உயிருள்ளவரை உஷா படத்தில் இடம் பெற்ற “மோகம் வந்து தாகம் வந்து என்னை அழைக்க” பாடல். விளக்கமே தேவைப்படாத அழகிய வரிகள் அல்லவா!

அதே போல மைதிலி என்னைக் காதலி படத்தில் இடம் பெற்ற “ஒரு பொன்மானை நான் காணத் தகதிமித்தோம்” பாடலிலும் பிரம்மனைப் பாராட்டுகிறார் விஜய டி.ராஜேந்தர்.

தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறி
தாமரைப் பூ மீது விழுந்தனவோ
இதைக் கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில்
படைத்திட்ட பாகந்தான் உன் கண்களோ

அடடா! என்ன கற்பனை! அவள் கண்ணைப் படைப்பதற்கே பிரம்மனுக்கு இப்படியொரு காட்சி தேவைப்பட்டிருக்கிறது. அவள் முழுவுடலையும் பளிங்குச் சிலையாய் படைப்பதற்கு எதையெதையெல்லாம் பார்த்துக் கற்றானோ!

வைரமுத்துவின் சிந்தனை சற்று வேறுவிதமாகச் செல்கிறது. ஒரு எலக்ட்ரானிக் கண் கொண்டு காதலியைப் பார்க்கிறார். அவள் சிரிப்பு கூட டெலிபோன் மணி போலக் கேட்கிறது. அப்படி ஒரு பெண்ணை பிரம்மன் எதை அடிப்படையாகக் கொண்டு படைத்திருப்பான்? வேதங்களா? குருவருளா? சிவனருளா?

கம்ப்யூட்டர் கொண்டிவளை அந்த பிரம்மன் படைத்தானா

பிரம்மனும் காலமாற்றத்துக்குத் தக்க ஓலைச் சுவடிகளை வீசி எறிந்து விட்டு கம்ப்யூட்டரில் அனிமேஷன் செய்யத் துவங்கி விட்டானோ என்று வைரமுத்துவின் கற்பனை ஓடுகிறது.

இன்னொரு பாட்டில் சற்று கொச்சையாக பிரம்மனின் படைப்புக் கதையைச் சொல்கிறார் வைரமுத்து. அண்ணாமலை திரைப்படத்தில் இடம் பெற்ற “அண்ணாமல அண்ணாமல” பாடல் வரிகளைக் கொஞ்சம் பார்க்கலாம்.

பிரம்மனுக்கு மூடு வந்து உன்னை படைச்சிட்டான்
அடி காமனுக்கு மூடு வந்து என்னை அனுப்பிட்டான்

பிரம்மனின் வள்ளல் திறமையையும் கஞ்சத்தனத்தையும் இன்னொரு பாட்டில் கொண்டுவருகிறார் வைரமுத்து. ஜீன்ஸ் படத்தில் இடம்பெற்ற “அன்பே அன்பே கொல்லாதே” பாடல் வரிகளைக் கொடுக்கிறேன். பிரம்மன் எங்கு கஞ்சத்தனத்தையும் எங்கு வள்ளல் தன்மையையும் காட்டினான் என்று நீங்களே கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்.

பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன்
ஆஹா அவனே வள்ளலடி

அத்தோடு விடவில்லை வைரமுத்து. பிரம்மனைப் பார்த்து “தகுமா? முறையா? நீதியா?” என்று ஜெமினி படத்து நாயகனுக்காக முறையிடுகிறார்.

பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்
நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய்
பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
அய்யோ இது வரமா சாபமா

இந்தப் பாட்டில் சொல்வது போன்ற அழகான பெண்ணை பிரம்மன் கொடுத்தால் அது வரமா? சாபமா? இரண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

இன்னொரு வித்தியாசமான கவிஞர் இருக்கிறார். அவர் இசையில் அவர் எழுதி இசையமைத்த பாடல் தான் நாடோடித் தென்றல் படத்தில் வந்த “மணியே மணிக்குயிலே மாலையிளங் கதிரழகே” பாடல். ஆம். இசைஞானி இளையராஜா தான் எழுதிய பாடலிலும் பிரம்மனை இழுக்கிறார்.

மணியே மணிக்குயிலே மாலையிளங் கதிரழகே
கொடியே கொடிமலரே கொடியிடையில் மணியழகே
………………..
பொன்னில் வடித்த சிலையே பிரம்மன் படைத்தான் உனையே

இன்றைய கவிஞர்களும் பிரம்மனை விடுவதாக இல்லை. முதலில் பா.விஜய் எழுதிய பாடல்களைப் பார்க்கலாம்.

அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
நீ என் மனைவியாக வேண்டும் என்று
ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான்
ஆயுள் வரை காத்திருப்பேன் என்று நானும் சொல்லி வந்தேன்

அரசாங்க அலுவலகத்தில் மனு கொடுத்தால் அது எங்கு போகும் என்று தெரியும். ஆனால் பிரம்மனிடத்தில் மனு கொடுத்தால் கண்டிப்பாக அது நடக்கும் என்றொரு நம்பிக்கையை தேவதையைக் கண்டேன் திரைப்படப் பாடல் வரிகளில் கொண்டு வந்திருக்கிறார்.

பிரியமான தோழி படத்துக்காகவும் பிரம்மனைப் புகழ்ந்திருக்கிறார் பா.விஜய்.

பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
………………..
பிரம்மன் செய்த சாதனை உன்னில் தெரிகிறது

இந்த உலகத்தையே படைத்து, அதில் அத்தனை உயிர்களையும் படைத்ததை விட ஓவியம் போன்ற அழகான காதலியைப் படைத்ததுதான் மிகப் பெரிய சாதனை என்று காதலன் பார்வையில் பா.விஜய் எழுதியதும் ரசிக்கத்தக்கதுதான்.

நா.முத்துக்குமாரும் வழக்கு எண் 18/9 படத்துக்காக பிரம்மன் கையைப் பிடித்து இழுத்திருக்கிறார்.

வானத்தையே எட்டி புடிப்பேன்
பூமியையும் சுத்தி வருவேன்
…………………
அடி பெண்ணே நீயும் பெண்தானோ
இல்ல பிரம்மன் செய்த சிலைதானோ

வழக்கமாக பாட்டெழுதும் கவிஞர்கள் மட்டுமல்ல, புதிதாகப் பாட்டெழுதுகின்றவர்களுக்கும் பிரம்மனே துணை. தானே இயக்கிய கச்சேரி ஆரம்பம் திரைப்படத்தில் ஒரு பாடலை இயக்குனர் திரைவாணன் எழுதியிருக்கிறார். அங்கும் பிரம்மனுக்குப் போற்றி மேல் போற்றி.

பிரம்மா உன் படைப்பினிலே…
எத்தனையோ பெண்கள் உண்டு
ஆனாலும் அசந்துவிட்டேன் அழகினிலே
இவளைக் கண்டு
அழகினிலே.. இவளைக்கண்டு
வாடா வாடா பையா

இப்படியெல்லாம் பாடல்களைப் பார்க்கும் போது எனக்கு என்ன தோன்றுகிறது தெரியுமா?

இதுதான் பிரம்மனுக்கு வந்த வாழ்வு! வாழ்வோ வாழ்வு!

பதிவில் இடம் பெற்ற பாடல்கள்

பாடல் – மோகம் வந்து தாகம் வந்து
படம் – உயிருள்ளவரை உஷா
பாடியவர்கள் – எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடல் & இசை – டி.ராஜேந்தர்
பாடலின் சுட்டி – http://youtu.be/1S3XGSA4qTk

பாடல் – அன்பே அன்பே கொல்லாதே
படம் – ஜீன்ஸ்
பாடல் – வைரமுத்து
பாடியவர் – ஹரிஹரன்
இசை – ஏ.ஆர்.ரகுமான்
பாடலின் சுட்டி – http://youtu.be/_QzDFtWVf3c

பாடல் – படைத்தானே பிரம்மதேவன்
படம் – எல்லோரும் நல்லவரே
பாடல் – கண்ணதாசன்
பாடியவர் – எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை – வி.குமார்
பாடலின் சுட்டி – http://youtu.be/qamttiCClsc

பாடல் – அழகே பிரம்மனிடம் மனு
படம் – தேவதையைக் கண்டேன்
பாடல் – பா.விஜய்
பாடியவர்கள் – ஹரீஷ் ராகவேந்திரா, கங்கா
இசை – தேவா
பாடலின் சுட்டி – http://youtu.be/lrCW8fOcXVQ

பாடல் – அண்ணாமல அண்ணாமல
படம் – அண்ணாமலை
பாடல் – வைரமுத்து
பாடியவர்கள் – எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா
இசை – தேவா
பாடலின் சுட்டி – http://youtu.be/OQ3RdFU5vsQ

பாடல் – வானத்தையே எட்டி புடிப்பேன்
படம் – வழக்கு எண் 18/9
பாடல் – நா.முத்துக்குமார்
பாடகர் – தண்டபாணி
இசை – ஆர்.பிரசன்னா
பாடலின் சுட்டி – http://youtu.be/a-ohRTF8CeI

பாடல் – பெண்ணொருத்தி பெண்ணொருத்தி
படம் – ஜெமினி
பாடல் – வைரமுத்து
இசை – பரத்வாஜ்
பாடியவர் – எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடலின் சுட்டி – http://youtu.be/XNiS5Zxj_RY

பாடல் – பிரம்மா உன் படைப்பினிலே(வாடா வாடா பையா)
படம் – கச்சேரி ஆரம்பம்
பாடல் – திரைவாணன் (இயக்குனர்)
பாடியவர் – கார்த்திகேயன் எம்.ஐ.ஆர், அந்திதா
இசை – டி.இமான்
பாடலின் சுட்டி – http://youtu.be/ho-4PCJnQ6k

பாடல் – பெண்ணே நீயும் பெண்ணா
படம் – பிரியமான தோழி
பாடல் – பா.விஜய்
பாடியவர்கள் – கல்பனா, உன்னி மேனன்
இசை – எஸ்.ஏ.ராஜ்குமார்
பாடலின் சுட்டி – https://www.youtube.com/watch?v=KSM9aCJFVTo

பாடல் – மணியே மணிக்குயிலே
படம் – நாடோடித் தென்றல்
பாடியவர்கள் – எஸ்.ஜானகி, மனோ
பாடல் & இசை – இளையராஜா
பாடலின் சுட்டி – http://youtu.be/UNIb8Pblu7w

பாடல் – ஒரு பொன் மானை நான் காண
படம் – மைதிலி என்னைக் காதலி
பாடியவர் – எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடல் & இசை – டி.ராஜேந்தர்
பாடலின் சுட்டி – http://youtu.be/S-XvP9p9mOs

பாடல் – டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா
படம் – இந்தியன்
பாடியவர் – ஹரிணி, ஹரிஹரன்
பாடல் – வைரமுத்து
இசை – ஏ.ஆர்.ரகுமான்
பாடலின் சுட்டி – http://youtu.be/SfHbknfOOuA

அன்புடன்,
ஜிரா

225/365