Updates from July, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • G.Ra ஜிரா 11:43 am on July 14, 2013 Permalink | Reply  

  படைத்தவன் யாரோ? 

  நீண்ட நாட்களாக எனக்கு ஒரு ஐயம். தமிழ்க் கவிஞர்கள் அதிகமாகப் பாடிய கடவுள் யார்?

  முருகன், அம்மன், சிவன், கிருஷ்ணன் என்று அடுக்கலாம். ஆனால் அவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களால் பாடப்பட்டவர்கள்.

  கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும் இல்லாதவர்களும் ஒத்த எண்ணத்தோடு எந்தக் கடவுளைப் பாடியிருக்கிறார்கள்?

  அப்படியொரு ஒரு கடவுள் இருக்கிறார். அவருக்கு கோயில் கிடையாது. வழிபாடு கிடையாது. திருவிழா கிடையாது. பலிகளோ படையல்களோ கிடையாது. ஆனால் கவிஞர்கள் மட்டும் அவரைப் போற்றிக் கொண்டாடுவார்கள்.

  யார் அந்தக் கடவுள்? ஏன் அவரைக் கொண்டாடுகிறார்கள்?

  கண்ணதாசன் எழுதிய ஒரு பாடலின் வரியைச் சொல்கிறேன். உங்களுக்குச் சட்டென்று புரிந்து போகும்.

  படைத்தானே பிரம்மதேவன் பதினாறு வயது கோலம்!

  புரிந்து விட்டதல்லவா? நான்முகன் பிரம்மன் என்றெல்லாம் அழைக்கப்படும் படைப்புக் கடவுள்தான் அந்தக் கடவுள்.

  ஏன்? ஏனென்றால் அந்தப் படைப்புக் கடவுள்தான் காதலர்களுக்குத் தக்க காதலிகளைக் கொடுக்கிறார். இல்லை இல்லை. படைக்கிறார்.

  மடப்பாவையார் நம் வசமாகத் தூது நடப்பாரே தெய்வம் நமக்கு” என்று ஆதிநாதன் வளமடலில் செயங்கொண்டார் சொன்னதும் அதே கருத்துதான்.

  கொன்றை அணிந்த சிவனோ உலகளந்த கோபலனோ எமக்குத் தெய்வமல்ல. அழகான காதல் பாவையருக்காக தூது நடப்பவரே நமக்குத் தெய்வம்.

  சரி. வாருங்கள். இனி ஒவ்வொரு கவிஞரும் பிரம்மனை எப்படியெல்லாம் புகழ்ந்திருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

  அப்படி பிரம்மனைப் புகழ்ந்தவர்களில் என்னை மிகவும் வியக்க வைத்தவர் டி.ராஜேந்தர். அவரே எழுதி இசையமைத்த இரண்டு பாடல்களில் மிகமிகக் கவிநயத்தோடு பிரம்மனைக் குறிப்பிட்டிருக்கிறார். அந்த வரிகளை நீங்களே படித்துப் பாருங்கள். நான் சொல்வதை ஒப்புக் கொள்வீர்கள்.

  தேவலோக அமுதத்தை குழம்பாக எடுத்து
  தங்க நிற வர்ணத்தில் குழைக்கின்ற போது
  பிரம்மனுக்கு ஞானம் வந்து உன்னை படைக்க
  அட பிரமிப்புடன் நானும் வந்து உன்னை ரசிக்க

  மேலே குறிப்பிட்டுள்ள பாடல் உயிருள்ளவரை உஷா படத்தில் இடம் பெற்ற “மோகம் வந்து தாகம் வந்து என்னை அழைக்க” பாடல். விளக்கமே தேவைப்படாத அழகிய வரிகள் அல்லவா!

  அதே போல மைதிலி என்னைக் காதலி படத்தில் இடம் பெற்ற “ஒரு பொன்மானை நான் காணத் தகதிமித்தோம்” பாடலிலும் பிரம்மனைப் பாராட்டுகிறார் விஜய டி.ராஜேந்தர்.

  தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறி
  தாமரைப் பூ மீது விழுந்தனவோ
  இதைக் கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில்
  படைத்திட்ட பாகந்தான் உன் கண்களோ

  அடடா! என்ன கற்பனை! அவள் கண்ணைப் படைப்பதற்கே பிரம்மனுக்கு இப்படியொரு காட்சி தேவைப்பட்டிருக்கிறது. அவள் முழுவுடலையும் பளிங்குச் சிலையாய் படைப்பதற்கு எதையெதையெல்லாம் பார்த்துக் கற்றானோ!

  வைரமுத்துவின் சிந்தனை சற்று வேறுவிதமாகச் செல்கிறது. ஒரு எலக்ட்ரானிக் கண் கொண்டு காதலியைப் பார்க்கிறார். அவள் சிரிப்பு கூட டெலிபோன் மணி போலக் கேட்கிறது. அப்படி ஒரு பெண்ணை பிரம்மன் எதை அடிப்படையாகக் கொண்டு படைத்திருப்பான்? வேதங்களா? குருவருளா? சிவனருளா?

  கம்ப்யூட்டர் கொண்டிவளை அந்த பிரம்மன் படைத்தானா

  பிரம்மனும் காலமாற்றத்துக்குத் தக்க ஓலைச் சுவடிகளை வீசி எறிந்து விட்டு கம்ப்யூட்டரில் அனிமேஷன் செய்யத் துவங்கி விட்டானோ என்று வைரமுத்துவின் கற்பனை ஓடுகிறது.

  இன்னொரு பாட்டில் சற்று கொச்சையாக பிரம்மனின் படைப்புக் கதையைச் சொல்கிறார் வைரமுத்து. அண்ணாமலை திரைப்படத்தில் இடம் பெற்ற “அண்ணாமல அண்ணாமல” பாடல் வரிகளைக் கொஞ்சம் பார்க்கலாம்.

  பிரம்மனுக்கு மூடு வந்து உன்னை படைச்சிட்டான்
  அடி காமனுக்கு மூடு வந்து என்னை அனுப்பிட்டான்

  பிரம்மனின் வள்ளல் திறமையையும் கஞ்சத்தனத்தையும் இன்னொரு பாட்டில் கொண்டுவருகிறார் வைரமுத்து. ஜீன்ஸ் படத்தில் இடம்பெற்ற “அன்பே அன்பே கொல்லாதே” பாடல் வரிகளைக் கொடுக்கிறேன். பிரம்மன் எங்கு கஞ்சத்தனத்தையும் எங்கு வள்ளல் தன்மையையும் காட்டினான் என்று நீங்களே கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்.

  பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
  அடடா பிரம்மன் கஞ்சனடி
  சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன்
  ஆஹா அவனே வள்ளலடி

  அத்தோடு விடவில்லை வைரமுத்து. பிரம்மனைப் பார்த்து “தகுமா? முறையா? நீதியா?” என்று ஜெமினி படத்து நாயகனுக்காக முறையிடுகிறார்.

  பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
  என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
  உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்
  நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய்
  பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
  அய்யோ இது வரமா சாபமா

  இந்தப் பாட்டில் சொல்வது போன்ற அழகான பெண்ணை பிரம்மன் கொடுத்தால் அது வரமா? சாபமா? இரண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

  இன்னொரு வித்தியாசமான கவிஞர் இருக்கிறார். அவர் இசையில் அவர் எழுதி இசையமைத்த பாடல் தான் நாடோடித் தென்றல் படத்தில் வந்த “மணியே மணிக்குயிலே மாலையிளங் கதிரழகே” பாடல். ஆம். இசைஞானி இளையராஜா தான் எழுதிய பாடலிலும் பிரம்மனை இழுக்கிறார்.

  மணியே மணிக்குயிலே மாலையிளங் கதிரழகே
  கொடியே கொடிமலரே கொடியிடையில் மணியழகே
  ………………..
  பொன்னில் வடித்த சிலையே பிரம்மன் படைத்தான் உனையே

  இன்றைய கவிஞர்களும் பிரம்மனை விடுவதாக இல்லை. முதலில் பா.விஜய் எழுதிய பாடல்களைப் பார்க்கலாம்.

  அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
  நீ என் மனைவியாக வேண்டும் என்று
  ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான்
  ஆயுள் வரை காத்திருப்பேன் என்று நானும் சொல்லி வந்தேன்

  அரசாங்க அலுவலகத்தில் மனு கொடுத்தால் அது எங்கு போகும் என்று தெரியும். ஆனால் பிரம்மனிடத்தில் மனு கொடுத்தால் கண்டிப்பாக அது நடக்கும் என்றொரு நம்பிக்கையை தேவதையைக் கண்டேன் திரைப்படப் பாடல் வரிகளில் கொண்டு வந்திருக்கிறார்.

  பிரியமான தோழி படத்துக்காகவும் பிரம்மனைப் புகழ்ந்திருக்கிறார் பா.விஜய்.

  பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
  ………………..
  பிரம்மன் செய்த சாதனை உன்னில் தெரிகிறது

  இந்த உலகத்தையே படைத்து, அதில் அத்தனை உயிர்களையும் படைத்ததை விட ஓவியம் போன்ற அழகான காதலியைப் படைத்ததுதான் மிகப் பெரிய சாதனை என்று காதலன் பார்வையில் பா.விஜய் எழுதியதும் ரசிக்கத்தக்கதுதான்.

  நா.முத்துக்குமாரும் வழக்கு எண் 18/9 படத்துக்காக பிரம்மன் கையைப் பிடித்து இழுத்திருக்கிறார்.

  வானத்தையே எட்டி புடிப்பேன்
  பூமியையும் சுத்தி வருவேன்
  …………………
  அடி பெண்ணே நீயும் பெண்தானோ
  இல்ல பிரம்மன் செய்த சிலைதானோ

  வழக்கமாக பாட்டெழுதும் கவிஞர்கள் மட்டுமல்ல, புதிதாகப் பாட்டெழுதுகின்றவர்களுக்கும் பிரம்மனே துணை. தானே இயக்கிய கச்சேரி ஆரம்பம் திரைப்படத்தில் ஒரு பாடலை இயக்குனர் திரைவாணன் எழுதியிருக்கிறார். அங்கும் பிரம்மனுக்குப் போற்றி மேல் போற்றி.

  பிரம்மா உன் படைப்பினிலே…
  எத்தனையோ பெண்கள் உண்டு
  ஆனாலும் அசந்துவிட்டேன் அழகினிலே
  இவளைக் கண்டு
  அழகினிலே.. இவளைக்கண்டு
  வாடா வாடா பையா

  இப்படியெல்லாம் பாடல்களைப் பார்க்கும் போது எனக்கு என்ன தோன்றுகிறது தெரியுமா?

  இதுதான் பிரம்மனுக்கு வந்த வாழ்வு! வாழ்வோ வாழ்வு!

  பதிவில் இடம் பெற்ற பாடல்கள்

  பாடல் – மோகம் வந்து தாகம் வந்து
  படம் – உயிருள்ளவரை உஷா
  பாடியவர்கள் – எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்
  பாடல் & இசை – டி.ராஜேந்தர்
  பாடலின் சுட்டி – http://youtu.be/1S3XGSA4qTk

  பாடல் – அன்பே அன்பே கொல்லாதே
  படம் – ஜீன்ஸ்
  பாடல் – வைரமுத்து
  பாடியவர் – ஹரிஹரன்
  இசை – ஏ.ஆர்.ரகுமான்
  பாடலின் சுட்டி – http://youtu.be/_QzDFtWVf3c

  பாடல் – படைத்தானே பிரம்மதேவன்
  படம் – எல்லோரும் நல்லவரே
  பாடல் – கண்ணதாசன்
  பாடியவர் – எஸ்.பி.பாலசுப்ரமணியம்
  இசை – வி.குமார்
  பாடலின் சுட்டி – http://youtu.be/qamttiCClsc

  பாடல் – அழகே பிரம்மனிடம் மனு
  படம் – தேவதையைக் கண்டேன்
  பாடல் – பா.விஜய்
  பாடியவர்கள் – ஹரீஷ் ராகவேந்திரா, கங்கா
  இசை – தேவா
  பாடலின் சுட்டி – http://youtu.be/lrCW8fOcXVQ

  பாடல் – அண்ணாமல அண்ணாமல
  படம் – அண்ணாமலை
  பாடல் – வைரமுத்து
  பாடியவர்கள் – எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா
  இசை – தேவா
  பாடலின் சுட்டி – http://youtu.be/OQ3RdFU5vsQ

  பாடல் – வானத்தையே எட்டி புடிப்பேன்
  படம் – வழக்கு எண் 18/9
  பாடல் – நா.முத்துக்குமார்
  பாடகர் – தண்டபாணி
  இசை – ஆர்.பிரசன்னா
  பாடலின் சுட்டி – http://youtu.be/a-ohRTF8CeI

  பாடல் – பெண்ணொருத்தி பெண்ணொருத்தி
  படம் – ஜெமினி
  பாடல் – வைரமுத்து
  இசை – பரத்வாஜ்
  பாடியவர் – எஸ்.பி.பாலசுப்ரமணியம்
  பாடலின் சுட்டி – http://youtu.be/XNiS5Zxj_RY

  பாடல் – பிரம்மா உன் படைப்பினிலே(வாடா வாடா பையா)
  படம் – கச்சேரி ஆரம்பம்
  பாடல் – திரைவாணன் (இயக்குனர்)
  பாடியவர் – கார்த்திகேயன் எம்.ஐ.ஆர், அந்திதா
  இசை – டி.இமான்
  பாடலின் சுட்டி – http://youtu.be/ho-4PCJnQ6k

  பாடல் – பெண்ணே நீயும் பெண்ணா
  படம் – பிரியமான தோழி
  பாடல் – பா.விஜய்
  பாடியவர்கள் – கல்பனா, உன்னி மேனன்
  இசை – எஸ்.ஏ.ராஜ்குமார்
  பாடலின் சுட்டி – https://www.youtube.com/watch?v=KSM9aCJFVTo

  பாடல் – மணியே மணிக்குயிலே
  படம் – நாடோடித் தென்றல்
  பாடியவர்கள் – எஸ்.ஜானகி, மனோ
  பாடல் & இசை – இளையராஜா
  பாடலின் சுட்டி – http://youtu.be/UNIb8Pblu7w

  பாடல் – ஒரு பொன் மானை நான் காண
  படம் – மைதிலி என்னைக் காதலி
  பாடியவர் – எஸ்.பி.பாலசுப்ரமணியம்
  பாடல் & இசை – டி.ராஜேந்தர்
  பாடலின் சுட்டி – http://youtu.be/S-XvP9p9mOs

  பாடல் – டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா
  படம் – இந்தியன்
  பாடியவர் – ஹரிணி, ஹரிஹரன்
  பாடல் – வைரமுத்து
  இசை – ஏ.ஆர்.ரகுமான்
  பாடலின் சுட்டி – http://youtu.be/SfHbknfOOuA

  அன்புடன்,
  ஜிரா

  225/365

   
  • மணிகண்டன் துரை 2:19 pm on July 14, 2013 Permalink | Reply

   அருமையான பதிவு

  • rajinirams 2:49 pm on July 14, 2013 Permalink | Reply

   அடடா பிரமாதம். எல்லா பாடல்களுமே சூப்பர். புதியவன் படத்தில் வைரமுத்துவின் “நானோ கண் பார்த்தேன்” பாடலில் பருவம் அடடா பஞ்சம் இல்லை,அடடா பிரம்மன் அவன் கஞ்சன் இல்லை என்று வரும். எல்லோரும் நல்லவரே பாடல் படைத்தானே பிரம்மதேவன் பாடல் கவியரசர் கண்ணதாசன் எழுதியது. (பகை கொண்ட உள்ளம்,சிகப்புகல்லு போன்றவை புலமைப்பித்தன் எழுதியவை).திருவருள் படத்தில் வரும் கந்தன் காலடியை பாடலில் “அதனால் கந்தனிடம் பிரம்மனும் மிரளுவான்” என்ற வரி வரும். நன்றி.

  • amas32 5:49 pm on July 14, 2013 Permalink | Reply

   எத்தனை எத்தனைப் பாடல்களைத் தேடி எடுத்து அடுக்கியிருக்கிறீர்கள்! படைப்புக் கடவுளான பிரம்மா சும்மா இல்லை! 🙂 அவருக்குக் கோவிலோ வழிபாடோ இல்லை என்றாலும் திரைப் பாடல்கள் அவரை துதிப்பது அவருக்குப் பெருமை தான் 🙂

   amas32

 • என். சொக்கன் 1:28 pm on April 11, 2013 Permalink | Reply  

  மெல்ல மெள்ள 

  • படம்: சின்னப் பூவே மெல்லப் பேசு
  • பாடல்: சின்னப் பூவே மெல்லப் பேசு
  • எழுதியவர்: எஸ். ஏ. ராஜ்குமார்
  • இசை: எஸ். ஏ. ராஜ்குமார்
  • பாடியவர்: பி. ஜெயச்சந்திரன்
  • Link: http://www.youtube.com/watch?v=_DHaesrupBo

  சின்னப் பூவே, மெல்லப் பேசு,

  உந்தன் காதல், சொல்லிப் பாடு!

  வண்ணப் பூ விழி பார்த்ததும் பூவினம் நாணுது,

  காலடி ஓசையில் காவியம் தோணுது!

  சின்னப் பூ மெல்லப் பேசுமா, மெள்ளப் பேசுமா?

  பேச்சுவழக்கில் இந்த ஒரு சொற்களையும் நாம் பயன்படுத்துகிறோம். எழுத்திலும் மெல்ல, மெள்ள என்று மாற்றி எழுதுபவர்கள் உண்டு. இவற்றுள் எது சரி?

  இரண்டுமே சரிதான். எங்கே எந்த அர்த்தத்தில் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து இவற்றுள் மிகச் சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.

  மெல்ல, மெள்ள இரண்டில் ஒன்றுக்கு மென்மையாக என்று அர்த்தம், இன்னொன்றுக்கு மெதுவாக என்று அர்த்தம். எதற்கு எது என்று புரிந்துகொண்டுவிட்டால் அதன்பிறகு குழப்பமே வராது.

  ஒரு பிரபலமான திருக்குறள், பின்னர் கண்ணதாசன் உபயத்தில் சினிமாப் பாடலாகவும் வந்தது:

  யான்நோக்குங் காலை நிலன்நோக்கும், நோக்காக்கால்

  தான்நோக்கி மெல்ல நகும்

  இதன் அர்த்தம், ‘நான் அவளைப் பார்த்தால், அவள் தரையைப் பார்க்கிறாள், நான் வேறு எங்கேயாவது பார்த்துக்கொண்டிருக்கும்போது, என்னைப் பார்க்கிறாள், தனக்குள் மெல்லச் சிரித்துக்கொள்கிறாள்.’

  இங்கே ‘மெல்ல’க்கு மென்மையாக என்று அர்த்தமா? அல்லது, மெதுவாக என்று அர்த்தமா?

  அந்தப் பெண் அவனை நேருக்கு நேர் பார்க்க நாணுகிறாள், இப்போது அவன் எங்கேயோ பார்த்துக்கொண்டிருப்பதால், கொஞ்சம் தைரியம் வந்து அவனை ஓரக்கண்ணால் பார்க்கிறாள்.

  அப்போதும், ‘இவன் சட்டென்று திரும்பி நம்மை நேருக்கு நேர் பார்த்துவிடுவானோ’ என்கிற அச்சம் அவளுக்குள் இருக்கும், அந்த நேரத்தில் ஃபோட்டோவுக்கு போஸ் கொடுப்பதுபோல் மெதுவாகச் சிரித்துக்கொண்டிருப்பாளா?

  ஆக, இங்கே அவள் மெதுவாகச் சிரிக்கவில்லை, ‘புன்சிரிப்பு’ என்பதுபோல் மென்மையாகச் சிரிக்கிறாள். பின்னர் சட்டென்று மீண்டும் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொள்கிறாள். அதைக் குறிப்பிடும்வகையில் திருவள்ளுவர் ‘மெல்ல’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்.

  அடுத்து, கம்ப ராமாயணத்திலிருந்து ஒரு மிக அழகான வர்ணனைப் பாடல்:

  மழைபடப் போதுளிய மருதத் தாமரை

  தழைபடப் பேர் இலைப் புரையில் தங்குவ,

  விழைபடு பெடையொடும் மெள்ள நள்ளிகள்

  புழை அடைத்து ஒதுங்கின வச்சை மாக்கள்போல்!

  மருத (விவசாய) நிலம், அதில் மழை பெய்கிறது, அதனால் தாமரை செழித்து வளர்ந்திருக்கிறது. அந்தப் பெரிய தாமரைகளின் இலைக்குக் கீழே, நண்டுகள் ஜோடியாகத் தங்கியிருக்கின்றன.

  மழை அதிகரிக்க அதிகரிக்க, நண்டுகளால் அங்கே இருக்கமுடியவில்லை. தங்களுடைய வளைக்குள் செல்கின்றன.

  ஒருவேளை, மழைத் தண்ணீர் அங்கேயும் வந்துவிட்டால்? குளிர் காலக் காதல் விளையாட்டுக்கு இடையூறாக இருக்குமே!

  ஆகவே, நண்டுகள் தங்களுடைய வளையின் வாசலை மண்ணால் அடைத்து மூடிவிடுகின்றன.

  இந்தக் காட்சியைப் பார்க்கும் கம்பர், அதற்கு ஓர் அட்டகாசமான உவமை சொல்கிறார், ‘நண்டுகள் தங்கள் வளையின் வாசலை அடைத்தது எப்படி இருந்தது தெரியுமா? கஞ்சப் பயல்கள் தங்கள் வீட்டுக்கு யாரேனும் வந்துவிடுவார்களோ என்ற பயத்தில் வீட்டு வாசலை எப்போதும் மூடியே வைத்திருப்பார்கள், அதுபோல, இந்த நண்டுகளும் கதவைச் சாத்திக்கொண்டு வளைக்குள் ஒதுங்குகின்றன!’

  பாட்டின் அழகு ஒருபுறமிருக்க, நாம் அந்த ‘மெள்ள’வைக் கவனிப்போம். மெல்ல இல்லை, மெள்ள!

  இங்கே ‘மெள்ள’க்கு மென்மையாக என்ற அர்த்தம் இருக்க வாய்ப்பு இல்லை. மழைத் தண்ணீர் உள்ளே வந்துவிடுமோ என்ற பயத்தில் பதற்றத்துடன்தான் நண்டு வளையின் வாசலை அடைக்கப் பார்க்கும், மென்மையாக அல்ல.

  ஆனால், நண்டுக்குச் சின்னக் கை(கால்?)தானே உண்டு. அதில் மண்ணை அள்ளி அள்ளி அடைக்க நெடுநேரம் ஆகும். அதனால்தான் ‘மெள்ள’, அதாவது மெதுவாக என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார் கம்பர்.

  ஆக, ’மெல்ல’ என்பதன் வேர்ச்சொல் ‘மெல்’, ‘மென்மை’, doing something softly, ஆனால் ’மெள்ள’ என்பது, மெதுவாக, doing something slowly, இவை இரண்டும் ஒரேமாதிரி தோன்றினாலும் ஒன்றல்ல.

  ’ஆஹா, மெல்ல நட, மெல்ல நட, மேனி என்னாகும்!’ என்றால், ’மென்மையாக நட, அதிர்ந்து நடக்காதே’ என்று அர்த்தம். அதே இடத்தில் ‘மெள்ள நட’ என்றால், ’உனக்கு என்ன அவசரம்? மெதுவாக நடந்து வா, இன்னும் நிறைய நேரம் இருக்கிறது’ என்று அர்த்தம்.

  இந்தக் கட்டுரையை நீங்கள் மெல்ல படித்தீர்களா? மெள்ள படித்தீர்களா?

  ***

  என். சொக்கன் …

  11 04 2013

  131/365

   
  • baskaran 2:11 pm on April 11, 2013 Permalink | Reply

   அழகான விளக்கம் ! ஆனால் பெரும்பான்மையான எழுத்தாளார்கள் இரண்டையும் ஒன்றாகவே கையாளுகிறார்கள்!

  • ravi_aa 2:23 pm on April 11, 2013 Permalink | Reply

   மெள்ள தான் . இல்லாட்டா எனக்கு புரியாது. #டூயுப்லைட்

  • amas32 3:35 pm on April 11, 2013 Permalink | Reply

   நல்ல கேள்வி! நல்ல பதிவு! 🙂

   மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்? முல்லை மலர் பாதம் நோகும்…. இப்படி பாடலின் வரிகளை தொடர்ந்து கவனித்தாலே மெல்ல என்ற சொல்லின் பொருளை உணர்ந்து கொள்ளலாம்.

   அவசரமில்லை மெள்ள சாப்பிடுங்கள் என்று விருந்தினரை உபசரிக்கும் பொழுது பொறுமையாக சாப்பிடுங்கள் என்ற பயன்பாட்டில் “மெள்ள” இன்னும் உள்ளது. மகிழ வேண்டிய ஒரு நல்ல விஷயம் தான்.

   தவழும் சிறு குழந்தை முதலில் நடை பயில ஆரம்பிக்கும் பொழுது மெள்ள, மெல்ல நடக்க ஆரம்பிக்கும் அழகே அழகு! :-))

   amas32

  • padma 3:47 pm on April 11, 2013 Permalink | Reply

   /‘நான் அவளைப் பார்த்தால், அவள் தரையைப் பார்க்கிறாள், நான் வேறு எங்கேயாவது பார்த்துக்கொண்டிருக்கும்போது, என்னைப் பார்க்கிறாள், தனக்குள் மெல்லச் சிரித்துக்கொள்கிறாள்.’// நினைவுக்கு வந்தாச்சு.
   பெண் பார்க்க வந்த போது தலை மண் பார்க்க நின்ற மாது என்ற பாடல்.

  • மழை!! 4:18 pm on April 11, 2013 Permalink | Reply

   Wow.. great explanation chokkan sir.. thanks.. :))

  • GiRa ஜிரா 8:58 pm on April 11, 2013 Permalink | Reply

   அருமையாச் சொல்லியிருக்கிங்க நாகா. ஒலி வேறுபாடு மட்டுமல்ல பொருள் வேறுபாடும் உண்டுன்னு தெளிவாச் சொல்லியிருக்கிங்க. அட்டகாஷ் 🙂

  • சான்றோன் 11:54 am on April 12, 2013 Permalink | Reply

   மென்னு சாப்பிடறதுக்கும் மெல்ல ன்னுதான் வரும்……..[ இந்த சாப்பட்ட” மெல்ல ”வே கஷ்டமா இருக்கு] …கவனிச்சிருக்கீங்களோ?

  • Saba-Thambi 6:39 am on April 14, 2013 Permalink | Reply

   யான்நோக்குங் காலை நிலன்நோக்கும், நோக்காக்கால்

   தான்நோக்கி மெல்ல நகும்

   இந்த வரிகளை நினைவூட்டும் வரிகள்

   உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்க்கின்ராயே
   விண்ணை நான் பார்க்கும் போது என்னை நீ பார்க்கின்ராயே…என்றுதொடர்கிறது

   (http://www.youtube.com/watch?v=hJVHq886BOE)

   later on it changed into a joke as ( in Accounts department)
   உன்னை நான் பார்க்கும் போது ledger ai நீ பார்க்கின்ராயே… 🙂

  • Saba-Thambi 8:52 am on April 14, 2013 Permalink | Reply

   இன்னுமொரு சுட்டி : மெல்லப் போ ..(http://www.youtube.com/watch?v=Bm5rgudwbng)

  • Raveenthiran 8:47 pm on October 20, 2014 Permalink | Reply

   Wonderful explanation

  • ஹரி 4:57 am on March 12, 2015 Permalink | Reply

   தெளிவான விளக்கம், இலக்கிய நயத்துடன். நன்றி.

  • விஷ்ணுப்ரியா 10:23 am on November 28, 2019 Permalink | Reply

   …மெள்ள மெள்ள படிக்க தமிழ் மிக மெல்ல கவர்ந்தது உள்ளம்..

  • கு.ப.சிவபாலன் 9:43 am on November 30, 2019 Permalink | Reply

   நன்றி

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel