Updates from September, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • G.Ra ஜிரா 11:48 am on September 20, 2013 Permalink | Reply  

    எல்லார்க்கும் சொந்த மொழி 

    நீண்ட நாட்களாகவே விடை தெரியாத கேள்வி ஒன்று என்னிடம் உண்டு. இன்று அந்தக் கேள்வியை எடுத்து வைத்து யோசிக்க முடிவு செய்தேன். கேள்வி என்ன தெரியுமா?

    இந்தியாவில் இருக்கும் நாயை பிரான்சில் விட்டால் அங்கிருக்கும் நாயோடு குலைத்துப் பேச முடியும். அதே போல எந்தவொரு விலங்கும் உலகில் அதன் வகையைச் சார்ந்த இன்னொரு விலங்கோடு தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும்.

    ஆனால் மனிதன்?

    நாடு விட்டு நாடு என்ன… மாநிலம் விட்டு மாநிலம் போனாலே ஒருவர் பேசுவது இன்னொருவருக்கு புரிவதில்லை. அதை விடுங்கள். ஒரே மாநிலத்துக்குள்ளேயே ஒரே மொழி பேசுகின்றவர்களுக்கு வட்டார வழக்குகள் எளிதில் புரிந்து விடுவதில்லை.

    தெக்கத்திப் பக்கம் பிள்ளை என்பது பெண்பிள்ளையைக் குறிக்கும். “அந்தப் பிள்ளையோட பேசுனியா?” என்றால் “அந்தப் பெண்ணோடு பேசினாயா?” என்று பொருள். வடதமிழ் மக்களுக்கு இது வித்தியாசமாகத்தான் இருக்கும். அதே போல தென் தமிழ்நாட்டின் அழுத்தமான சகர(cha) உச்சரிப்பு வடதமிழ் மக்களுக்கு நகைச்சுவையாகத் தெரியும்.

    நண்பனிடம் பேசும் போது “அந்த எடம் கிட்டக்கதான் இருக்குது” என்று சொன்னேன். அவனுக்குப் புரியவில்லை. “அந்த எடம் பக்கத்துலதான் இருக்குது” என்று சொன்னதும் எளிதாகப் புரிந்துவிட்டது.

    உலகில் எந்த உயிரினத்துக்குமே மொழி தேவைப்படாத போது…. மனிதனுக்கு மட்டும் ஏன் மொழி தேவைப்படுகிறது?

    இதுதான் என்னுடைய கேள்வி.

    மொழி என்பது தகவல் பரிமாறிக் கொள்ள உதவும் கருவி என்று எளிதாக விடை சொல்லி விடலாம்.

    ஆனால் மனிதன் மட்டுமே தகவல்களைப் பரிமாறிக் கொள்கிறானா?

    வண்ண மலர்களும் விண்ணின் மேகங்களும் மண்ணின் மரங்களும் மலையின் காற்றும் இரவின் நிலவும் நீரின் அலையும் இன்னபிறவும் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதில்லையா!

    பேசாத மலர்தான் வண்டுகளை அழைத்து தேனைக் கொடுத்து மகரந்தச் சேர்க்கை நடத்துகிறது.

    உடம்பே இல்லாத காற்றுதான் மூங்கிலின் ஒவ்வொரு துளையிலும் பயணம் செய்து இசையை உண்டாக்குகிறது.

    உயிரே இல்லாத மேகம்தான் கடலில் இருக்கும் உப்புநீரிலிருந்து நல்ல நீரை மட்டும் எடுத்து வந்து மழையாகப் பெய்கிறது.

    எப்போதும் நிரம்பித் தளும்பும் கடல்தான் அலைகளைக் கொண்டு நிலமகளை திரும்பத் திரும்ப தழுவி மகிழ்கின்றது.

    அப்படியென்றால் அவைகளின் மொழி எது?

    உடனே எனக்கு நினைவுக்கு வந்தது கவிஞர் வைரமுத்து எழுதி வித்யாசாகர் இசையில் வெளிவந்த மொழி திரைப்படப் பாடல்தான்.

    காற்றின் மொழி ஒலியா இசையா
    பூவின் மொழி நிறமா மணமா
    கடலின் மொழி அலையா நுரையா
    காதலின் மொழி விழியா இதழா

    காதலனைப் பார்த்ததும் “மனம் முந்தியதோ விழி முந்தியதோ கரம் முந்தியதோ” என்றுதான் திரிகூட ராசப்பரும் எழுதியிருக்கிறார். இதில் மொழியைப் பேசும் இதழே வரவில்லை. ஆக காதலுக்கு மொழி தேவையில்லை.

    காதலுக்கு மட்டுமல்ல… எதற்குமே மொழி தேவையில்லை. இயற்கையோடு இயற்கையாய் வாழும் போது பேசுகின்ற மொழிகள் எதுவும் தேவையில்லை.

    இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
    மனிதரின் மொழிகள் தேவையில்லை
    இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
    மனிதர்க்கு மொழியே தேவையில்லை

    பாட்டில் கவிஞர் வைரமுத்து சொல்லியிருப்பது மிக நியாயமான கருத்து.

    ஒரு மழை நேரத்தில் சன்னலோரத்தில் தேநீர்க் கோப்பையோடு அமருங்கள். தேநீரின் இனிய நறுமணம் மென்புகையாய் நாசியோடு பேசும். அதன் இன்சுவை நாவோடு பேசும்.

    கொட்டும் மழையின் சொட்டுகள் நிலமெனும் பறை தட்டிப் பேசும். வீட்டின் கூரையிலிருந்து சொட்டும் துளிகள் தரையில் தேங்கிய நீரில் ஜலதரங்கம் வாசிக்கும். ஒளிந்திருக்கும் தவளைகள் கடுங்குரலில் மகிழ்ச்சிப் பண் பாடும். மழை நின்றதும் எல்லா நிறங்களையும் ஏழு நிறங்களுக்குள் அடக்கிக் கொண்டு வானவில் புன்சிரிக்கும்.

    நீங்கள் ரசிகராக இருந்தால் இந்நேரம் அழுதிருப்பீர்கள். அது உங்கள் கண்கள் பேசும் மொழி.

    வானம் பேசும் பேச்சு – துளியாய் வெளியாகும்
    வானவில்லின் பேச்சு – நிறமாய் வெளியாகும்
    உண்மை ஊமையானால் – கண்ணீர் மொழியாகும்
    பெண்மை ஊமையானால் – நாணம் மொழியாகும்
    ஓசை தூங்கும் சாமத்தில் – உச்சி மீன்கள் மொழியாகும்
    ஆசை தூங்கும் இதயத்தில் – அசைவு கூட மொழியாகும்

    இப்போது சொல்லுங்கள். மொழி என்பது மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானதா? இல்லை. இயற்கை ஒவ்வொன்றிருக்கும் மொழியைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. மனிதன் மட்டும் அதை வைத்துக் கொண்டு சண்டை போடுகிறான்.

    பாடல் – காற்றின் மொழி ஒலியா
    வரிகள் – கவிஞர் வைரமுத்து
    பாடகர் – பல்ராம்
    இசை – வித்யாசாகர்
    படம் – மொழி
    பாடலின் சுட்டி – http://youtu.be/hs5cj3xPAhA

    அன்புடன்,
    ஜிரா

    293/365

     
    • rajinirams 1:32 pm on September 20, 2013 Permalink | Reply

      செம பதிவு.இந்த பாடலை கேட்கும் போது உருகிப்போவேன்.வைரமுத்துவின் வரிகளாகட்டும் பல்ராமின் குரலாகட்டும் சூப்பர். வாய் பேச இயலாத நாயகியை ஆறுதல் படுத்தும் கவியரசரின் வரிகள் வாழ்வு என் பக்கம் படத்தில்- வீனை பேசும் அது மீட்டும் விரல்களைக்கண்டு.தென்றல் பேசும் அது மோதும் மலர்களைக் கண்டு.

    • Uma Chelvan 8:34 pm on September 20, 2013 Permalink | Reply

      இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
      மனிதரின் மொழிகள் தேவையில்லை
      இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
      மனிதர்க்கு மொழியே தேவையில்லை……………very simple and elegant words, one of the best of Viramuthu !!!

      வட்டார மொழிகளில் எனக்கு மிகவும் பிடித்தது ” திருநவேலி ” பாஷைதான் . கேட்க மிகவும் இனிமை.

      முத்துக் குளிக்க வாரீயளா
      மூச்சை அடக்க வாரீயளா
      சிப்பி எடுப்போமா மாமா மாமா
      அம்மானுக்கு சொந்தமில்லையோ!!!

    • amas32 8:49 pm on September 20, 2013 Permalink | Reply

      எனக்கு மிக மிகப் பிடித்தப் பாடல். அடிக்கடி கேட்டு ரசிக்கத் தோன்றும், முக்கியமாக பாடல் வரிகளுக்காகவே.

      நீங்கள் இந்தப் பதிவை ஆரம்பித்திருக்கும் விதமே அருமை. விலங்கினங்களுக்கும் பறவைகளுக்கும் மொழி பிரச்சினை இல்லை. சில மனித உள்ளங்களுக்கும் :-)) பல மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் ஒருவர் எண்ணுவது மற்றவருக்குப் புரிந்துவிடும். அது எதோ சிலருக்கு வாய்க்கும். பொதுவாக மனிதர்கள் உரையாட மொழி தான் வழி. வேற்று மொழியாளர்களிடம் நாம் சொல்ல வருவதைப் புரிய வைக்கப் படாத பாடு படவேண்டும்.

      இங்கோ காது கேளாத, அதனால் வாய் பேசாத பெண்ணை மனத்தில் கொண்டு பாடப்பட்ட பாடல். ஒவ்வொரு வரியும் சுகந்தம்.

      amas32

      • Uma Chelvan 10:24 pm on September 20, 2013 Permalink | Reply

        சில மனித உள்ளங்களுக்கும் பல மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் ஒருவர் எண்ணுவது மற்றவருக்குப் புரிந்துவிடும். …………..yes, you can easily sense that, even you are thousand miles apart. I really really like it. Thanks.

    • SREE GURUPARAN 8:22 pm on September 21, 2013 Permalink | Reply

      அருமையா சொன்னீங்க போங்க. பாட்டு ரொம்ப நல்ல பாட்டு. கேட்டு முடிச்ச பொறவு ஒரு அமைதி. ஆனா, நீங்க கேட்ட கேள்வி இன்னும் மனசுல ஓடிகிட்டே இருக்கு. நாய், நரி இப்படி மத்த மிருகங்க பேசும் போது, நம்மளால மட்டும் ஏன் பேச முடியலை? எப்பவோ படிச்சது, இங்க வெளக்கம்: http://en.wikipedia.org/wiki/Grooming,_Gossip,_and_the_Evolution_of_Language . இன்னும் கொஞ்சம் வெளக்கம் : http://www.amazon.com/Grooming-Gossip-Evolution-Language-Dunbar/dp/0674363361

      மொழியின் வளர்ச்சி, நமக்கு தெரியாத அதிசியங்கள ஒன்னு.

  • என். சொக்கன் 11:43 am on June 11, 2013 Permalink | Reply  

    ஜில்லுன்னு ஒரு காதல் 

    • படம்: நளனும் நந்தினியும்
    • பாடல்: தூங்காம உன்னை சுத்திச் சுத்தித் திரியுறேன்
    • எழுதியவர்: நிரஞ்சன் பாரதி
    • இசை: அஷ்வத்
    • பாடியவர்கள்: பலராம், சின்மயி

    வெயிலும்தான் சுடுமா? அருகில் நீ உள்ளபோது!

    பிரிவுதான் சுடுதே! சொல்ல வார்த்தைகள் ஏது!

    கம்ப ராமாயணத்தில் ஒரு காட்சி. ராமன் காட்டுக்குச் செல்லத் தயாராகிறான். சீதையிடம், ‘நான் ஜஸ்ட் பதினாலு வருஷத்துல திரும்பி வந்துடுவேன், நீ சமர்த்தா வீட்டைப் பார்த்துகிட்டுச் சௌக்கியமா இரு’ என்கிறான்.

    சீதை மறுக்கிறாள், ‘நானும் உம்மோட வருவேன்!’ என்கிறாள்.

    ராமன் சிரிக்கிறான், ‘கண்ணும்மா, காடுன்னா என்ன பிளாஸ்டிக் கூடை, ஜமுக்காளத்தோட பிக்னிக் போற எடம்ன்னு நினைச்சியா? ரொம்ப ஆபத்தான ஏரியா, எப்பப்பார் வெய்யில் கொளுத்தும், சிங்கம், புலி, மிருகங்கள்லாம் வரும், பூச்சிங்க கடிக்கும், திருடங்க, அரக்கர்ங்க தொல்லைவேற, நீ மென்மையா வளர்ந்தவ, அதெல்லாம் உனக்குச் சரிப்படாதும்மா!’

    அதற்கு சீதை சொல்லும் பதிலாகக் கம்பன் எழுதியுள்ள பாடலில் ஒரு பகுதி:

    ’அருக்கனும்

    எரியும் என்பது யாண்டையது? ஈண்டு, நின்

    பிரிவினும் சுடுமோ பெரும் காடு?’

    ’மிஸ்டர் ராமன், என்னவோ அந்தக் காட்டுல சூரியன் சுடும்ன்னு பெருசாப் பயமுறுத்தறீங்களே, உம்மைப் பிரிஞ்சு தனியா வாழற வேதனையைவிடவா அது என்னைச் சுட்டுடும்?’

    கம்பனின் அற்புதமான இந்தக் கேள்வியை, இந்தக் காதல் பாடலில் அழகாகப் பயன்படுத்தியிருக்கிறார் நிரஞ்சன் பாரதி. இதைக் கேட்டதுமுதல், ‘நின் பிரிவினும் சுடுமோ பெரும் காடு’ என்ற வரியைமட்டும் திரும்பத் திரும்பச் சொல்லி ரசித்துக்கொண்டிருக்கிறேன். எத்துணை அழகு!!

    ***

    என். சொக்கன் …

    11 06 2013

    192/365

    பின்குறிப்பு:

    சில தினங்களுக்குமுன்பாக வைத்த ‘திரைப்பாடல்களில் இல்பொருள் அணி’ போட்டிக்குப் பிரமாதமான வரவேற்பு. பங்கேற்ற அனைவருக்கும் நன்றி!

    ஒரே குறை, வந்தவற்றில் பெரும்பாலானவை இல்பொருள் அணியே அல்ல, அநேகமாக 70%க்குமேல் உயர்வு நவிற்சியும் தற்குறிப்பேற்றமும்தான் இருந்தது. அவற்றை நீக்கி, மீதமுள்ளவற்றில், என் கணிப்பில் அழகானதாக இந்த வரியைத் தேர்வு செய்கிறேன்: ’இருட்டில்கூட இருக்கும் நிழல் நான்’ (எழுதியவர் வாலி, தேர்வு செய்தவர் இன்பா)

    வாழ்த்துகள் இன்பா, nchokkan@gmail.comல் உங்கள் இந்திய முகவரியைத் தந்தால், பரிசை அனுப்பிவைக்கிறேன்!

    By the way, இந்த வரி இல்பொருள் உவமை அல்ல, உருவகம் 🙂

     
    • rajinirams 12:02 pm on June 11, 2013 Permalink | Reply

      கம்பராமாயண அழகான உவமையுடன் அருமையான பதிவு. புதுக்கவிதையின் வைரமுத்து வரிகள்-நீயும் நானும் சேர்ந்தபோது கோடை கூட மார்கழி.பிரிந்த பின்பு பூவும் என்னை சுடுவதென்ன காதலி,..நன்றி.

    • Kannabiran Ravi Shankar (KRS) 1:23 pm on June 11, 2013 Permalink | Reply

      //ராமன் சிரிக்கிறான்; கண்ணும்மா, காடுன்னா என்ன, பிளாஸ்டிக் கூடை, ஜமுக்காளத்தோட பிக்னிக் போற எடம்ன்னு நினைச்சியா?//

      🙂
      இது கம்பராமாயணத்துக்கு, “Curry-மேல்-அழகர்” எழுதிய உரை தானே?
      = Curry சுவையா ஒறைப்பா இருக்கு:))
      ———

      //ஈண்டு நின் பிரிவினும் சுடுமோ, பெருங் காடு?//

      கம்பன் சில சொற்களைச் சும்மாவே போடுவதில்லை! “நறுக்” -ன்னு வச்சி அழுத்துவான்!

      உன் பிரிவினும் சுடுமோ பெருங் காடு? -ன்னு கூட எழுதி இருக்கலாம்!
      ஆனா எதுக்கு “ஈண்டு” -ன்னு அழுத்தறான்? (ஈண்டு = இங்கே)
      ———

      கம்பன் (சீதையின் வாயால்) சொன்ன முகூர்த்தமோ என்னவோ, “சூடு” காட்டுல வரலை; “ஈண்டில்” (அயோத்தியில்) தான் வந்துச்சு;

      *தசரதன் செத்துப் போனான்
      *மங்கலம் எல்லாம் அமங்கலம் ஆயின
      *நாட்டின் தலை நகரமே மாறிப் போச்சி (அயோத்திக்குப் பதிலா, நந்திக்கிராமம் -ன்னு எல்லையில்)
      *கோலாகலமா இருக்க வேண்டிய அரண்மனை, ஆண்டி மடம் போல், துறவுக் கோலப் பரதனைச் சுமந்தது;

      ஆனா, காடு? = புதுத் தம்பியர் கிடைக்க, முனிவர்கள் ஞானம் புகட்ட, வீரம் விளைக்க, முதல் 13 வருசமும் இன்பம் தான்:)

      “ஈண்டு”
      நின் பிரிவினும் சுடுமோ?
      பெருங் காடு = அதுவே பெருமை மிக்க காடு!

    • anonymous 1:30 pm on June 11, 2013 Permalink | Reply

      அடுத்து ஒன்னும் சொல்லுறேன்; கம்ப இரசிகர்கள் கோச்சிக்காதீக:) கம்பன் இதைக் “காப்பி” அடிக்கிறான்:))
      எங்கிருந்து? = குறுந்தொகையில் இருந்து!

      //”ஈண்டு” நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு?//

      பெருங்காடு
      இன்னா என்றீர் ஆயின்
      இனியவோ பெரும தமியேற்கு மனையே?

      பாலை பாடிய பெருங்கடுங்கோ; தலைவியின் சொல்லை, அப்படியே சீதையும் எதிரொலிக்கிறாள்!

      • என். சொக்கன் 2:14 pm on June 11, 2013 Permalink | Reply

        Wonderful!!

    • anonymous 1:34 pm on June 11, 2013 Permalink | Reply

      வாழ்த்துக்கள் இன்பா!

      அழகான வரிகள்; என்ன ஆளுமை = //இருட்டில் கூட இருக்கும் நிழல் நான்//
      ———

      //By the way, இந்த வரி, இல்பொருள் உவமை அல்ல, உருவகம் 🙂 //

      ஒரு திருத்தம் சொல்ல அனுமதி உண்டா?:))

      • anonymous 1:40 pm on June 11, 2013 Permalink | Reply

        *மதி முகம் = உவமை; (மதி போல முகம்; போல தொக்கி இருக்கு; உவமைத் தொகை)
        *முக மதி = உருவகம் (முகம் ஆகிய மதி)

        இதை அப்படியே பொருத்துங்க, இன்பா சொன்ன வரிக்கு!

        *நிழல் நான் = உவமை (நிழல் போல நான்)
        *நான் நிழல் = உருவகம் (நான் ஆகிய நிழல்)
        ————

        //இருட்டில் கூட இருக்கும் நிழல் நான்//

        “நான்-நிழல்” -ன்னு இல்லாம, “நிழல்-நான்” -ன்னு இருப்பதனால்,
        இது 100% இல்பொருள் உவமையே! “இல்பொருள் உருவகம்” அல்ல!:)))

    • Niranjan Bharathi 1:42 pm on June 11, 2013 Permalink | Reply

      வாலி ஐயா எழுதிய “பவளக்கொடியில் முத்துக்கள் கோ(ர்)த்தால் புன்னகை என்றே பெயராகும்” என்பது இல்பொருள் உவமை அணிக்கொரு சிறந்த உதாரணம் என்று பொதிகையில் ஒளிபரப்பான வாலிப வாலி நிகழ்ச்சியில் கவிஞர் நந்தலாலா குறிப்பிட்டார்.

    • anonymous 2:20 pm on June 11, 2013 Permalink | Reply

      இல்பொருள் உவமை -ன்னு, இலக்கணத்தில் இருக்கு!
      ஆனா, இல்பொருள் உருவகம் -ன்னு இல்லையே; ஏன்? -ன்னு யோசிச்சிப் பாத்து இருக்கீகளா?

      உருவகம் -ன்னா, பொருள் முன்னாடி வரணும்; உவமை பின்னாடி போயீறணும்
      eg: வாய்ப் பவளம், முக மதி

      இல்லாத பொருளை, பின்னாடி வச்சா, நமக்கு ஒன்னுமே கிடைக்காது; At the end of any effort, we have to get something;
      அதான் “இல்”-பொருளாச்சே; ஒன்னுங் கிடைக்காது; அதனால் தான் “இல்-பொருளை” உருவகமா வைக்கலை; உவமையா மட்டும் வச்சாங்க!

      அதே போல, ஒரு புடை உருவகம் (ஏகதேசம் -ன்னு sanskrit ஆக்கீட்டோம் so sad:(((
      ஏகதேச உவமை -ன்னு ஒன்னுமில்ல;
      ஆனா ஏகதேச உருவகம் உண்டு! same logic applies!
      —————

      தமிழின் அழகே இதான்!
      = நுணக்கம்; அதுவே தமிழின் அழகு!

      உருவகமா அடுக்கி இருக்கு பாருங்க, வெண்பாவில்!
      (கண்-வண்டு, கொங்கை-முகிழ், கை-மலர்)

      அங்கை மலரும், அடித்தளிரும், கண்வண்டும்,
      கொங்கை முகிழும், குழற்காரும் – தங்கியதுஓர்
      மாதர்க் கொடிஉளதால்; நண்பா! அதற்குஎழுந்த
      காதற்கு உளதோ கரை?

      (தமிழ்க் – காதலுக்கு உளதோ கரை?:)))

    • Saba-Thambi 6:37 pm on June 11, 2013 Permalink | Reply

      தற்போதய நடைமுறைக்கேற்ற விளக்கம். பிரமாதம்!

      பாடலின் சுட்டி பிளீஸ்?

    • Niranjan 8:02 pm on June 11, 2013 Permalink | Reply

      • Saba-Thambi 11:40 am on June 12, 2013 Permalink | Reply

        சுட்டிக்கு நன்றி!
        கம்பன் வீட்டு கட்டு தறியும் கவி பாடினால், எள்ளுப் பேரன் சும்மாவா?
        வாழ்த்துக்கள் இனிவரும் காலங்களுக்கு.

    • amas32 10:38 pm on June 11, 2013 Permalink | Reply

      அருமையான பாடல், நிரஞ்சன். வாழ்த்துக்கள் 🙂

      உண்மை தான், காதலனை, கணவனைப் பிரிந்து வாழும் துன்ப நிலைக்கு முன் கணவனுடன் சேர்ந்து வாழும் சஹாரா பாலைவன வாழ்க்கையும் சுடாது, ஐஸ்லாந்து வாழ்க்கையும் குளிராது.

      amas32

      • Niranjan 11:22 pm on June 11, 2013 Permalink | Reply

        Mikka Nandri amma 🙂 🙂

      • anonymous 4:53 am on June 12, 2013 Permalink | Reply

        //சஹாரா பாலைவனம் சுடாது, ஐஸ்லாந்து வாழ்க்கையும் குளிராது//

        நீங்க எப்போம்மா, சினிமாவுக்கு பாட்டெழுத ஆரம்பிச்சீங்க?:)

    • anonymous 5:01 am on June 12, 2013 Permalink | Reply

      முன்னமே சொல்ல நினைச்சேன்; மறந்து போச்சுது;
      இந்தப் பாடலை எழுதிய நிரஞ்சன் பாரதி போலவே, பாரதியாரும் ஒரு பாட்டு எழுதியுள்ளார் – “பிரிவுச் சுடுதலை” பத்தி;

      //தூங்காம உன்னை சுத்திச் சுத்தித் திரியுறேன்…
      வெயிலும்தான் சுடுமா? அருகில் நீ உள்ளபோது//

      மேனி கொதிக்கு தடீ –
      இந்த வையம் மூழ்கித் துயிலினிலே,
      நானொருவன் மட்டும்
      “பிரிவு” என்பதோர் நரகத் துழலுவதோ?
      “மேனி கொதிக்கு” தடீ –

      • Niranjan 7:16 am on June 12, 2013 Permalink | Reply

        சாக்ஷாத் மகாகவி பாரதியின் எள்ளுப்பேரன் தான் அடியேன்.

        • anonymous 8:37 am on June 12, 2013 Permalink

          ஆ…! வணக்கம்!

          கண்ணாடி நீ, கண் ஜாடை நான் – முதலான திரைப் பாடல் கவிஞர் -ன்னு தான், இது நாள் வரை தெரியும்;
          இன்றே இதுவும் அறிந்தேன்! மகா கவிக்கு வந்தனங்கள்;

          இப்பல்லாம் பல தளங்களுக்குச் செல்வதில்லை;
          தமிழ்/ இசை = இத் தளங்களில் மட்டுமே வாழ்வு சுருக்கிய வண்டு; அதான்! pardon my ignorance:)

          பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா!
          ஓசைதரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ?
          -ன்னு குயில் பாட்டில் சொல்லுவாரு;
          அப்படியான இசையும்-தமிழும் சிறக்க வாழ்த்துக்கள்!

        • Kannabiran Ravi Shankar (KRS) 8:52 am on June 12, 2013 Permalink

          Actually
          //கண்ணாடி நீ, கண் ஜாடை நான்//
          இதைக் கேட்கும் போதே… “பாயுமொளி நீ எனக்கு; பார்க்கும் விழி நான் உனக்கு” ஞாபகம் வந்துச்சி;
          அது, இன்று, இப்படி வந்து…. முகத்தில் வியப்பறையும் -ன்னு நினைச்சிப் பாக்கலை:) முருகா!

        • Niranjan 9:55 am on June 12, 2013 Permalink

          பாரதியின் பரம்பரை என்று தெரியாமல், என் பாடலை மகாகவியின் பாடலோடு உங்கள் மனம் தொடர்பு படுத்தியதல்லவா. அந்த சந்தோஷம் போதும் எனக்கு.

          மகாகவிக்கு ஒரு கடலென்றால் நான் ஒரு குட்டை. அவர் வம்சத்தில் வந்தது பெரும் புண்ணியம்.

          ஆன போதும், அடியேனுக்கென்று ஒரு தனி அடையாளம் வேண்டுமல்லவா?

          கண்ணாடி நீ பாடல் எப்படியிருந்தது ? , தூங்காம பாடல் எப்படியிருந்தது ?

          உங்கள் கருத்துகள்…. விமர்சனங்கள்….

          பாகன் படத்தில் சிம்பா சம்பா என்ற குத்துப் பாடலையும் எழுதியுள்ளேன். அதையும் கேட்டு விட்டுச் சொல்லுங்கள்.

          –> http://www.youtube.com/watch?v=d-rvJDOvfFs

    • Uma Chelvan 5:16 am on June 16, 2013 Permalink | Reply

      பிரிவு என்னும் மூன்று எழுத்து எவ்வளவு பெரிய சோகத்தை துயரைத்தை கொடுக்கிறது! amas 32 சொன்னதை அப்படியே வழி மொழிகிறேன்… அத்தனையும்.உண்மை !!!

  • mokrish 9:52 am on June 3, 2013 Permalink | Reply  

    இருக்கும் இடத்தை விட்டு… 

    ஒரு இடத்திலிருந்து விலகி இன்னொரு இடத்துக்கு நகர்ந்து வாழ்க்கையை தொடரவேண்டிய கட்டாயம் நம் எல்லாருக்கும் உண்டு. நூறு  காரணங்கள். படிப்புக்காக, வேலை, திருமணம், சொந்த வீடு வாங்கி, பிரபல பள்ளியின் பக்கத்தில், என்று வெவ்வேறு காலக்கட்டங்களில் வெவ்வேறு காரணங்கள். வீடு மாறி ஊர் மாறி நாடு விட்டு நாடு மாறி என்று வாழ்வில் நடக்கும் இடம் பெயர்தல் மகிழ்ச்சி தரலாம் சில சமயங்களில் வலியாகவும் இருக்கலாம்.

    ஒரு பெண்ணின் வாழ்வில் இந்த இடமாற்றம் திருமணம் சார்ந்து நடக்கும்.(கால மாற்றத்தில் இப்போது இது ஆண்களுக்கும் நடக்கிற நிகழ்வு)  இது ஒரு mixed feeling தருணம். புது வாழ்வு தொடங்கும் மகிழ்ச்சியான நேரம். ஆனால் வளர்ந்த வீட்டையும் தாய் தந்தை உடன்பிறப்புகள் என்று கூடவே வாழ்ந்தவர்களைப் பிரிந்து இன்னொரு குடும்பம், வேறு வீடு, பல சமயங்களில் வேறு ஊர் /நாடு என்று போக வேண்டிய வேளை. பிரிவின் வேதனையை வைரமுத்து வண்டி மாடு எட்டு வச்சு என்ற பாடலில் (படம்: கிழக்குச் சீமையிலே இசை: ஏ.ஆர். ரஹ்மான் பாடியவர்கள் : ஜெயசந்திரன், எஸ். ஜானகி) அழகாக பதிவு செய்கிறார்.

    http://www.inbaminge.com/t/k/Kizhakku%20Cheemaiyile/Kathalang%20Kattu.eng.html

    வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா

    வாக்க பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா

    எட்டு மேல எட்டு வச்சு முன்னே போகுதம்மா

    பொட்டு வச்ச பொண்ணு மனம் பின்னே போகுதம்மா

    வாசப்படி கடக்கையிலே வரலையே பேச்சு

    பள்ளப்பட்டி தாண்டிபுட்டா பாதி உயிர் போச்சு

    சரி மாற்றம் மகிழ்ச்சியும் தருமா?  யாரும் விளையாடும் தோட்டம் என்ற பாடலில் ஒரு கூட்டம் சந்தோஷமாக இடம் பெயர்வதைச்  சொல்லும் இளையராஜாவின் வரிகளை  பாருங்கள்  (படம்: நாடோடித் தென்றல், பாடியவர்கள்  சித்ரா, மனோ, இசை: இளையராஜா) 

    http://www.inbaminge.com/t/n/Naadodi%20Thendral/Yarum%20Vilaiyaadum.eng.html

    யாரும் விளையாடும் தோட்டம்

    தினந்தோறும் ஆட்டம் பாட்டம் போட்டாலும் பொறுத்துக் கொண்டு

    பொன்னு தரும் சாமி இந்த மண்ணு நம்ம பூமி

    கோபங்கள் வேண்டாம் கொஞ்சம் ஆறப்போடு

    ஆறோடும் ஊரைப் பாத்து டேரா போடு

    இந்தப்பாடலில் நாடோடிகளின் வாழ்வியல், அவர்கள் ஊர் மாற என்ன காரணங்கள் பற்றி நண்பர் @naaraju  சொல்லும் விளக்கங்கள் இந்த  பதிவில் காணலாம்.

    ஆனால் கூட்டமாக இடம் பெயர்வது எப்போதும் மகிழ்ச்சியான நிகழ்வாகவே இருக்கும் என்பதில்லை. வெள்ளம், வறட்சி, போர் என்று பல நிர்ப்பந்தங்களால் நிகழும் இடமாற்றம் மிகுந்த வலி தரக்கூடியது. வைரமுத்து கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் எழுதிய விடை கொடு எங்கள் நாடே என்ற பாடல் வரிகள் (இசை: AR ரஹ்மான் பாடியவர்கள்: MS விஸ்வநாதன் AR ரெஹனா, பால்ராம், ஃபெபி மணி) இடம் பெயரும் வலியை சொல்கிறது

    http://www.youtube.com/watch?v=QX0aLn580dg

    விடை கொடு எங்கள் நாடே கடல் வாசல் தெளிக்கும் வீடே

    பனை மர காடே பறவைகள் கூடே

    மறுமுறை ஒரு முறை பார்ப்போமா

    உதட்டில் புன்னகை புதைத்தோம்

    உயிரை உடம்புக்குள் புதைத்தோம்

    வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்

    பள்ளிக்கூடம் போக முரண்டு பிடிக்கும் குழந்தையைப் போல் வாழ்ந்த வளர்ந்த இடத்தின் இதமான கதகதப்பில் இருந்து வெளியே வர மறுக்கும் மனம் படும் வேதனையை காட்சியாய் சொல்லும் வரிகள்.

    மாற்றம் தான் நிரந்தரம். அது மகிழ்வான நிகழ்வாக அமைவது வரம்.

    மோகனகிருஷ்ணன்

    184/365

     
    • தேவா 10:05 am on June 3, 2013 Permalink | Reply

      மோகன், சிறப்பான பதிவு மேற் குறிப்பிட்ட மூன்று பாடல்களூம் மாற்றத்தினை சிறப்பாக ப்ரதிபலித்திருக்கும் வரிகள், எல்லொருடைய மாற்றங்களும் ம்கிழ்வான நிகழ்வுகளை எதிர்பார்த்தே…

    • kamala chandramani 11:28 am on June 3, 2013 Permalink | Reply

      ‘பசுமை நிறைந்த நினைவுகளே, பாடித்திரிந்த பறவைகளே’ கல்லூரி மாணவர்களிடையே பிரபலமான பாடல்.’To meet, to know, to love and then part is the sad tale of many a human heart’ -வாழ்க்கை!

    • anonymous 1:24 pm on June 3, 2013 Permalink | Reply

      //பனை மரக் காடே பறவைகள் கூடே
      மறுமுறை ஒரு முறை பார்ப்போமா//

      இப்பவும், எங்கூரு வாழைப்பந்தல் கிராமத்துக்குப் போனாலே, “பனை மரக் காடு” தான்;
      ஞான சம்பந்தர், ஆண் பனைகளை -> பெண் பனைகளா மாற்றிய தலம் (செய்யாறு) -ன்னும் சொல்லுவாங்க;

      பனை மரத்தை, எட்ட இருந்து பார்த்தாலே, ஒரு பாசம் வந்துரும்; கிட்டக்கப் போனா, வாசம் வந்துரும்;

      ஊருக்குள் கால் எடுத்து வைக்கும் போதே, கண்ணுல தண்ணி தளும்பும்;
      இன்னும் ரெண்டே நாள்-ல்ல இத விட்டுப் போயீறணுமா? -ன்னு, மகிழ்ச்சியைக் கூட முழுக்க அனுபவிக்க முடியாது;

      புதுசாக் கண்ணாலம் கட்டிப் போன பொண்ணு, சாங்கியத்துக்குச் சொந்த ஊருக்கு வந்தா போல…
      புதுப் பொண்ணுக்குப், புருசன் குடுக்கும் சுகத்தை விடச், சுகமா இருக்கும் பனை மரக் காடு!
      ——-

      ஊரோ, பேரோ…
      மனசுக்குள் இருக்கும் ஒருவரை/ ஒன்றை விட்டு போவது-ன்னாலே,
      “மனசுக்குள்ள மேகம் சூழ்ந்துக்குது”….

    • anonymous 1:35 pm on June 3, 2013 Permalink | Reply

      முருகா, எப்படி @mokrish முக்கியமான “பயணப் பாடலை” விட்டீங்க?:)

      போறாளே பொன்னுத்தாயி
      பொல பொலவென்று கண்ணீர் விட்டு
      தண்ணீரும் சோறும் தந்த மண்ண விட்டு
      பால் பீச்சும் மாட்ட விட்டு,
      பஞ்சாரத்துக் கோழியை விட்டு…
      ———

      இதுல ஒரு வரி வரும்!

      பொதி மாட்டு வண்டி மேலே
      போட்டு வச்ச மூட்டை போல
      ……போறாளே பொன்னுத்தாயி

      மூட்டை, தானா ஊரை வுட்டுப் போவுமா?
      இல்ல… பொதி சொமக்குற மாட்டுக்குத் தான், மூட்டை மனசு தெரியுமா?

      இப்படி, மாட்டுக்கும் சொமக்க ஆசையில்ல; மூட்டைக்கும் போவ ஆசையில்ல,
      ஆனாலும் வாழ்க்கை வண்டி ஓடுது:(
      ———

      நீ வச்ச பாசம், நான் சொன்ன நேசம்
      கடைசியில் ஊமையும் ஊமையும் பேசிய பாஷையடி

      உசுருள்ள நாக்கு ஒன்னு வாடுதடி
      கடைசியில் சாமிக்கு நேர்ந்தது, சாதிக்கு ஆனதடி…
      போறாளே….

      • anonymous 1:56 pm on June 3, 2013 Permalink | Reply

        சொந்த ஊரு-ன்னு இல்ல… மனசைக் குடுத்துட்ட சில இடங்களி்லும் இப்படித் தான் நெலமை…

        திருச்செந்தூர் = இங்கிட்டு போகவே பிடிக்காது;
        ஒரே காரணம்: பிரிஞ்சி வரணுமே -ங்கிறது தான்!

        ஊருல எத்தனையோ முருகன் கோயிலு, பெருமாள் கோயிலு…
        ஆனா செந்தூரைப் பிரியும் போது மட்டும், சோகம் அப்பும்;

        ஆழ்வார், “வாசல் படியாய்க் கிடந்து, உன் பவள வாய் காண்பேனே” -ம்பாரு!
        அப்படிச், செந்தூரில், நடை சாத்தினாலும், பிரியாது இருக்கும் வாசப்படியா மாறிட்டா, ஒரு வேளை இந்தக் காமம் அடங்குமோ? என்னவோ?

    • Saba-Thambi 1:39 pm on June 3, 2013 Permalink | Reply

      அனுபவித்தவருக்குத் தான் தெரியும் – இன்பமும் துன்பமும்

      போர் நிமித்தமாக வலோற்கராமா 75ம் வயதில் இடம் பெயர்ந்தவர் எனது தகப்பனார் – மீண்டும் பிறந்த இடத்தை பார்க்காமலே போய் சேர்ந்து விட்டார். -இப்படி பல இலங்கைத் தமிழரின் வாழ்க்கை இன்றும் அல்லோலப் படுகிறது.
      கன்னத்தில் முத்தமிட்டால் பாடல் எப்போது கேட்டாலும் கண்களில் ஈரம் கசியும். so close to the bone.

      A question “what would you do if you have super powers?” was asked at school and our daughter’s answer was “I loved to visit where my parents were growing up” – well we had to wait 10 more years to fulfill her dreams.

      A very nice post balancing all type of migration. kudos!!

      One more song comes to the mind in the same category :
      வேதம் புதிது: மாட்டு வண்டி….

    • anonymous 2:19 pm on June 3, 2013 Permalink | Reply

      Some more பயணப் பாடல்கள் (both sad & happy)

      *குடகு மலைக் காற்றில் வரும் பாட்டு கேக்குதா
      *தென் கிழக்குச் சீமையிலே, செங்காத்துப் பூமியிலே… ஏழைப்பட்ட சாதிக்கொரு ஈரம் இருக்கு

      *ஜல் ஜல் ஜல் எனும் சலங்கையொலி
      *மாட்டு வண்டி கட்டிக்கிட்டு, மாப்பிள்ளைய கூட்டிக்கிட்டு (வீரபாண்டிய கட்டபொம்மன்)
      *கொட்டாம் பட்டி ரோட்டிலே (class of kunnakudi :))))

    • rajnirams 2:35 pm on June 3, 2013 Permalink | Reply

      சூப்பர். மூன்று விதமான பயணங்களும் அருமையான பாடல்களுடன் கூடிய அருமையான பதிவு.

    • anonymous 2:37 pm on June 3, 2013 Permalink | Reply

      பிரிஞ்சிப் போகும் போது, வெசனப் படுற பாட்டு = சினிமாவில் இருக்கு – தெரியும்!
      ஆனா ஆழ்வாரும் சினிமா பாத்தாரே என்னவோ? பாடுறாரு!

      நல்ல வயலும் வரப்புமா இருக்குற வில்லிபுத்தூரை விட்டுப்புட்டு,
      நகரம்/ நரகமா இருக்குற மதுரைக்குப் போறாளே:)

      இல்லம் வெறியோடிற் றாலோ என்மகளை எங்கும் காணேன்
      நல்லதோர் தாமரைப் பொய்கை நாண்மலர் குளம் விடுத்து…
      …..மதுரைப் புறம் புக்காள் கொலோ?

      ——-

      ஒருமகள் தன்னை உடையேன் – உலகம் நிறைந்த புகழால்
      திருமகள் போல வளர்த்தேன் – செங்கண்மால் கொண்டு போனான்!

      அப்பறமா, மாப்பிள்ளையைத் திட்டுறாரு:)
      நாராயணன் செய்த தீமையாம்! = பாடுறது “பெரிய” ஆழ்வாரு:))

      நன்றும் கிறிசெய்து போனான் – “நாராயணன் செய்த தீமை”
      என்றும் எமர்கள் குடிக்கு – ஓர் ஏச்சுச் சொல் ஆயிடுங் கொலோ?
      ——-

      எம் பொண்ணு, சமைக்கலீன்னாக் கூடப், பழம் தின்னுட்டு இருப்பேனே!
      அங்கிட்டு, அவ கையில், தயிர் கடைஞ்சிக் கடைஞ்சி, கைத் தழும்பே வந்துருச்சி, பாவிங்களா

      நங்காய் நந்தகோபன் மகன் கண்ணன்
      இளைத்து இளைத்து என்மகள் ஏங்கி
      கடைக் கயிறே பற்றி – கைதழும்பு ஏறிடுங் கொலோ?
      ——-

      இம்புட்டும் திட்டிப் போட்டு…
      இந் நற்றமிழ் பத்தும் வல்லார், நண்ணார் நரகமே!:)

    • amas32 6:51 am on June 4, 2013 Permalink | Reply

      The song that always tugs my heart is
      //விடை கொடு எங்கள் நாடே கடல் வாசல் தெளிக்கும் வீடே

      பனை மர காடே பறவைகள் கூடே

      மறுமுறை ஒரு முறை பார்ப்போமா

      உதட்டில் புன்னகை புதைத்தோம்

      உயிரை உடம்புக்குள் புதைத்தோம்

      வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்//

      புலம் பெயர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் வலி அது. வைரமுத்துவுக்கும் புலம் பெயர்ந்த வலியுண்டு, அதனாலோ என்னவோ இந்தப் பாடல் வரிகள் மனத்தின் ஆழத்தைத் தொடும்படி உள்ளது.

      பெண்கள் புகுந்த வீட்டிற்குப் போகும் போதும் ஒரு வலி தான். சில எதிர்ப்பார்ப்புக்கள் இருப்பதாலும், பெண்ணெனப் பட்டவள் இன்னொரு வீடு செல்ல வேண்டும் என்று ஆதியிலிருந்து சொல்லிவைக்கப் படுவதாலும் அதில் அவ்வளவு சோகம் இருக்காது. நான் திருமணம் முடிந்து டெக்சாஸ் மாநிலம் ஆர்லிங்க்டன் என்ற நகரத்துக்குச் சென்ற போது என் தாய் தந்தையரைப் பிரிந்த சோகத்தோடு கோவிலில்லா ஊரில் குடியிருந்த சோகம் என்னை மிகவும் பாதித்தது. ஏழு மாதங்கள் கழித்துத் தைப் பூச நன்னாளில் என் முருகன் சான்பிரான்சிஸ்கோ நகரத்தில் அவன் கோவிலுக்கு என்னை அழைத்த போது நான் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. Some thread to hold on to your native land where you had your roots is so required to find happiness in your adopted place.

      amas32

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel