Updates from November, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • என். சொக்கன் 12:08 am on November 30, 2013 Permalink | Reply  

  விருந்தினர் பதிவு: நான் கண்ணாடிப் பொருளல்லவா! 

  பாடல் : கண்ணாமூச்சி ஏனடா

  படம் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

  பாடலாசிரியர் :  வைரமுத்து

  இசை: எ.ஆர்.ரஹ்மான்

  பாடகர் : சித்ரா

  என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா ?

  எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா ?

  நெஞ்சின் அலை உறங்காதோ ?

  உன் இதழ் கொண்டு வாய்
  மூட வா என் கண்ணா…

  உன் இமைக் கொண்டு விழி
  மூட வா என் கண்ணா…

  உன் உடல் தான்
  என் உடையல்லவா….!

  காதலைப் பற்றியப் பாடல். எப்பொழுதுமே காதலை சொல்வதில் இரு பாலாருக்கும் தயக்கம் இருக்கும், ஏனென்றால் ஒருவரால் சொல்லப்பட்டக் காதல் மற்றவரால் நிராகரிக்கப்பட்டால் அது சொன்னவருக்கு வேதனை மட்டும் தராது, அவமானத்தையும் சேர்த்துத் தரும். சொல்லாமல் இருந்தாலும் மனம் கொந்தளித்துக் கொண்டே இருக்கும். ஆனால் பெரும்பாலான சமயம் காதல் வயப்பட்ட இருவருக்குமே ஒருவர் மற்றவரைக் காதலிப்பதுத் தெள்ளத் தெளிவாகவே தெரியும். 

  இது ஒரு பெண் பாடும் பாடல். அவள் இன்னும் காதலில் விழவில்லை ஆனாலும் தன் அக்காவின் காதல் நிலை கண்டு பாடும் பாடல். பெண் மனம் ஒரு உணர்ச்சிக் குவியல். ஆணுக்கு எல்லாமே ஒரு விளையாட்டு. பெண்ணுக்குக் காதல் ஒரு சீரியஸ் மேட்டர். மீனைக் ஆற்றில் பிடித்துத் திரும்பி நீரிலேயே விட்டு விளையாடுவதைப் போல பெண்ணிடம் சீண்டி விளையாடுவது ஆணுக்குக் கை வந்த கலை. ஆனால் அவளுக்கோ மனதை பறிகொடுத்துவிட்டால் எல்லாமே அவன் தான்.

  “எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா?” மிக முக்கியமான வரி. அவளே காதலன் பால் மயங்கி தனக்கென தனியாக எண்ணாமல் அவனைச் சார்ந்தே எண்ணத் தொடங்கிப் பிறகும் எனக்குத் தனியாக எண்ணங்கள் இல்லையா என்று கேட்பதில் நியாயமே இல்லை. ஆயினும் காதலனின் எண்ணங்களும் செயல்களும் அவள் உணர்சிகளுக்கு மதிப்புக் கொடுத்து நடக்கும்படி இருக்கவேண்டும் என்று அவள் நினைப்பதிலும் தவறேதும் இல்லை.

  நெஞ்சில் அடிக்கும் எண்ண அலைகள் கடலை விஞ்சும். அவன் எப்பொழுதும் என்னிடம் காதலுடன் இருப்பானா? வேறு பெண்ணைப் பார்த்து மயங்கி விடுவானோ? கடைசி வரை காதல் நிலைக்குமா? திருமணம் கைகூடுமா? நடுவில் கைவிட்டு விட்டுப் போய்விடுவானோ என்று ஆயிரத்தெட்டுக் கவலைகள்.

  இதில் தொடர்ந்து வரும் வரிகள் காதலன் எப்படி தன்னை சேர்ந்தவுடன் தான் தன் காதலுக்கே உத்தரவாதமே என்ற காதலி நினைக்கிறாள் என்ற பொருளில் வருகிறது. 

  //உன் உடல் தான்
  என் உடையல்லவா….!//
  நானே உன் உடையாக வேண்டும் -என்று சங்கத் தமிழ் வரிகள் நேரடியாக இல்லை! 
  ஆனால், நள வெண்பாவில் ஒன்று உள்ளது!

  —ஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்கி
  இருவர் எனும் தோற்றம் இன்றிப் – பொருவெங்
  கனற்கேயும் வேலானும் காரிகையும் சேர்ந்தார்
  புனற்கே புனல்கலந்தாற் போன்று—-

  அதாவது நளன்-தமயந்தி, ஒருவர் உடம்பில் ஒருவர் ஒதுங்குகிறார்கள். அதாவது ஒருத்தர், இன்னொருத்தரோட உடம்பாகவே ஆகிவிடுகிறார்கள். அதைத் தான் இந்தப் பாடல் வரிகளும் சொல்கின்றன.

  மிக அருமையான இசை. சித்ரா தன் தேன் குரலில் உணர்ச்சிப் பொங்கப் பாடியிருகிறார். அதற்கேற்பத் திரைப்படத்தில் ஐச்வர்யா ராயின் நடனமும், முக்கியமாக அஜித்தும் தபுவும் மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன பாணியில் காதல் பார்வை பார்த்துக் கொள்வதும் பாட்டுக்குப் பெருமை சேர்க்கிறது.
   
  youtube link for the song : http://www.youtube.com/watch?v=5ftMtHBgKTc
  நள வெண்பா உதவி KRS  

  சுஷிமா சேகர்

  பிறந்தது பாண்டிச்சேரியில், வளர்ந்தது சென்னையில். கலிபோர்னியாவில் பத்து வருடங்களும் சிங்கப்பூரில் மூன்று வருடங்களும் இருந்துவிட்டுத் தற்போது வசிப்பது சென்னையில். குழந்தைகள் பிறந்த பிறகு MBA படித்தேன். நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் உண்டு. இணையத்துக்கு (டவிட்டருக்கு) வந்து இரண்டு வருடங்கள்தான் ஆகிறது. அதன் மூலம் எனக்குக் கிடைத்த நண்பர்களை எண்ணி மகிழ்கிறேன். இணையத்துக்கு வந்த பிறகுதான் தமிழ் பயில்கிறேன். நேசிப்பது என் தொழில், பொழுதுபோக்கு 🙂

  சுஷிமா சேகர் வலைப்பதிவு: http://amas32.wordpress.com/

   
  • rajinirams 10:32 am on November 30, 2013 Permalink | Reply

   அருமையான பதிவு.”வைர”வரிகளுக்கு பட்டை தீட்டியது போன்ற அருமையான விளக்கம்,உடல் தான் உடையல்லவா என்ற அற்புதமான வரிகளை நளவெண்பா வரிகளுடன் எடுத்துக்காட்டி நல்ல பதிவை தந்திருக்கிறீர்கள்.பாராட்டுக்கள். “உன் இமை கொண்டு விழி மூடவா” வரிகள் வாலியின் வரிகளை நினைவு படுத்தும்- இதழோடு இதழ் வைத்து இமை மூடவோ-இருக்கின்ற சுகம் வாங்க தடை போடவோ,மடி மீது தலை வைத்து இளைப்பாறவோ முகத்தோடு முகம் வைத்து முத்தாடவோ….

   • amas32 9:35 pm on November 30, 2013 Permalink | Reply

    மிக்க நன்றி. You are a connoisseur of 4varinote. So any appreciation from you is a big honour, thank you 🙂

    amas32

  • B.MURUGAN 11:21 am on November 30, 2013 Permalink | Reply

   அருமை, யாராவது சிலாகித்து சொல்லும்போதுதான் அந்த பாடலின, பாடல் வரிகளின் மகத்துவம் புரிகிறது

  • umakrishh 11:24 am on November 30, 2013 Permalink | Reply

   ஹா..பெண்ணின் மனதை உணர்ந்து எழுதிய,பாடியவங்களுக்கு கௌரவம் சேர்க்கும் விதமாக உணர்ந்து எழுதி இருக்கீங்க 🙂
   //காதலைப் பற்றியப் பாடல். எப்பொழுதுமே காதலை சொல்வதில் இரு பாலாருக்கும் தயக்கம் இருக்கும், ஏனென்றால் ஒருவரால் சொல்லப்பட்டக் காதல் மற்றவரால் நிராகரிக்கப்பட்டால் அது சொன்னவருக்கு வேதனை மட்டும் தராது, அவமானத்தையும் சேர்த்துத் தரும். சொல்லாமல் இருந்தாலும் மனம் கொந்தளித்துக் கொண்டே இருக்கும். ஆனால் பெரும்பாலான சமயம் காதல் வயப்பட்ட இருவருக்குமே ஒருவர் மற்றவரைக் காதலிப்பதுத் தெள்ளத் தெளிவாகவே தெரியும்.//
   முற்றிலும் உண்மை :))
   இப்படத்தில் எங்கே எனது கவிதையும் நல்லதொரு உருக்கமான பாடல்

   • amas32 9:33 pm on November 30, 2013 Permalink | Reply

    உண்மை தான் உமா, நன்றி 🙂

    amas32

  • kamala chandramani 11:42 am on November 30, 2013 Permalink | Reply

   அருமையான பதிவு. வாழ்த்துகள்.

  • pvramaswamy 11:42 am on November 30, 2013 Permalink | Reply

   Excellent choice of song. The lyrics, tune, singing style, and, all very well picturised. Aishwaya Rai, apart from her being the “Miss World”, was a model too. That is very visible in graceful movements in this song (and the songs in ‘iruvar’). You have a superb taste. I wanted to write about this song, but avoided, as I could be accused of being carried away… Yeah, I went to you tube once again! 🙂

   Now about your writing. Good style, good flow. Direct. As usual. You seem to have a thin layer of suspicion about the ‘ரொம்பவே பாவம்’ men. Luckily you have not been elected as the Chairma… sorry Chairperson of Indian Women’s Fedration! 😉

   • amas32 9:31 pm on November 30, 2013 Permalink | Reply

    Thank you PVR 🙂 So happy to see your comment 🙂 This song is got a wholesomeness like the Thillaana Mohanambal’s மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன, ஆனால் இக்காலத்திற்குடையது. நன்றி!

    amas32

    • to_pvr 9:54 pm on November 30, 2013 Permalink

     Yes.

  • Uma Chelvan 6:04 pm on November 30, 2013 Permalink | Reply

   Excellent write up !!!

   உங்க postம் commentsம் எப்பொழுதுமே மிகவும் நன்றாக இருக்கும். படிக்கும் காலத்தில், கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லும் நல்ல மாணவியாக இருந்து இருபீங்கனு நினைக்கிறேன். Though I don’t have an account, I regularly follow you in Twitter, மிகவும் மென்மையான போக்கு, அனைவரயும் மனம் திறந்து வாழ்த்தும் உயர்ந்த உள்ளம் ……..God Bless you and My best wishes for your Kids especially for your Daughter for a bright and Beautiful Future…

   “A Happy person is not a person in a certain set of circumstances, but rather a person with a certain set of Attitudes “……….Hugh Downs

   • amas32 9:26 pm on November 30, 2013 Permalink | Reply

    Thank You Uma Chelvan. I always wondered who you were as you are not on twitter. Happy to know you through this blog site. Your comments are always very distinctive and your song links a welcome and picturesque interlude 🙂 Thank you so much for your kind words. I wish you the very best in everything. I have a great admiration for doctors and their yeomen service.

    amas32

    • Uma Chelvan 10:36 pm on November 30, 2013 Permalink

     Thank you very much amas 32. With my busy schedule (if you look at the time, I post my comments are mostly around 2:00 AM) I cannot cope with the speed of twitter, might be easier after a while ??:). I am on Facebook, not active now a days though. Finally I found a “Niche” here. Thank you very much for your appreciation on my comments. Couple of times, I was baffled by twitter people ‘s comments. I know how to easily ignore/avoid people, some times unwanted/ unnecessary comments will make you to look inside. It is Very nice know you too.!!!!!!:) . .

  • Saba-Thambi 8:46 pm on December 1, 2013 Permalink | Reply

   அருமையான பதிவு!

 • என். சொக்கன் 11:59 pm on November 27, 2013 Permalink | Reply  

  வானவில் ஆடை 

  • படம்: ரோஜா
  • பாடல்: சின்னச் சின்ன ஆசை
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
  • பாடியவர்கள்: மின்மினி, ஏ. ஆர். ரஹ்மான்
  • Link: http://www.youtube.com/watch?v=YpMK2UYmgw8

  சேற்று வயல் ஆடி, நாற்று நட ஆசை,

  மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை,

  வானவில்லைக் கொஞ்சம் உடுத்திக்கொள்ள ஆசை,

  பனித்துளிக்குள் நானும் படுத்துக்கொள்ள ஆசை!

  ’உடை’ என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்தது ‘உடுத்தல்’ என்ற செயல். இதே வரிசையில் வரும் ‘உடுப்பு’ என்பதும் மிக அழகான சொல். ஆனால் ஆடை சார்ந்த மற்ற சொற்களோடு ஒப்பிடும்போது இவற்றை நாம் பேச்சில் குறைவாகவே பயன்படுத்துகிறோம்.

  உண்மையில் ‘உடுப்பு’ என்பது ‘உடுபு’ என்ற கன்னடச் சொல்லில் இருந்து வந்தது என்கிறார் பாவாணர். அப்படியானால் ‘உடுத்தல்’ என்ற பெயர்ச்சொல்லும் அதன்பிறகுதான் வந்திருக்கவேண்டும்.

  பழந்தமிழ்ப் பாடல்களில் ‘உடுத்தல்’க்கு நிறைய மரியாதை இருக்கிறது. உதாரணமாக: நீர் ஆரும் கடல் உடுத்த நில மடந்தை, உண்பது நாழி, உடுப்பது இரண்டே!

  சினிமாப் பாடல்களைப் பொறுத்தவரை, ’பட்டுடுத்தி’ என்ற சொல் மிகப் பிரபலம் (பட்டு உடுத்தி), மற்றபடி இடுப்புக்கு எதுகையாக இருந்தும் உடுப்பைக் கவிஞர்கள் அதிகம் விரும்பாதது பெருவிநோதம்.

  முந்தின வரியில் இரட்டை அர்த்தம் ஏதுமில்லை என்பதையும் சொல்லிவிடுகிறேன் 😉

  ***

  என். சொக்கன் …

  27 11 2013

  360/365

   
  • Uma Chelvan 12:51 am on November 28, 2013 Permalink | Reply

   “காஞ்சி பட்டுடுத்தி கஸ்துரி பொட்டும் வைத்து ”

  • amas32 3:33 pm on November 28, 2013 Permalink | Reply

   உடுப்பு என்ற சொல் எனக்கு ஏனோ uniformஐ நினைவுப் படுத்தும். உடுத்தி என்பது அழகிய பிரயோகம். ஆனால் புடைவை கட்டிக் கொண்டு வருகிறேன் என்றும் வேட்டி சட்டைப் போட்டுக் கொண்டு வருகிறேன் என்றே பேச்சு வழக்கில் வந்து விட்டது. உடுத்தி என்ற சொல்ல ஆரம்பிக்க வேண்டும் 🙂

   உப்புமா கன ஜோர்!

   amas32

  • Saba-Thambi 10:17 pm on November 28, 2013 Permalink | Reply

   உடுப்பு, உடுத்தல் என்பன யாழ்ப்பாணைத்தில் தாராளமாக பாவிக்கப்படும் சொற்கள்.

   அப்போ திருக்குறளில் வரும் உடுக்கை என்ற சொல் ?

  • rajinirams 3:11 am on November 29, 2013 Permalink | Reply

   ஆம்.நீங்கள் சொன்னது போல் உடுத்தி என்ற வார்த்தையை பயன்படுத்தியது இல்லை.சேலை”கட்டும்”பெண்ணுக்கொரு,நீ பட்டுப்புடவை”கட்டிக்கொண்டால்”ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்.சேலை”மூடும்”இளஞ்சோலை,நீலச்சேலை கட்டிக்கொண்ட சமுத்திரப்பொண்ணு, இப்படி பல.

 • G.Ra ஜிரா 9:13 pm on November 22, 2013 Permalink | Reply  

  மாற்றங்கள் 

  சிறுவயதில் நான் சேட்டைக்காரன். பிடித்து ஒரு இடத்தில் உட்கார வைப்பதும் கடினம். வாயைத் திறந்தால் கேட்கவே வேண்டாம்… தூத்துக்குடியில் நான் கதறினால் விளாத்திகுளத்தில் எதிரொலிக்கும்.

  ஊருக்குப் போகும் போதெல்லாம் சொந்தக்காரர்களிடம் கெட்ட பெயரை பெட்டி பெட்டியாக சம்பாதித்துக் கொண்டு வருவேன்.

  வளர வளர நடத்தையில் மாற்றம் வந்தது. குறிப்பாக கல்லூரிக்குச் சென்றபின். பலவித அனுபவங்களிலும் வாழ்க்கையில் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்ன சிந்தனையிலும் மனம் கட்டுப்பட்டது. சிந்தனைகள் அமைதிப்படுத்தின. மாற்றம் தவிர்க்கவே முடியாததானது. ஒரு திருவிழாவுக்கு ஊருக்குச் சென்ற போது என்னுடைய அத்தை ஒருவர் “பையன் எப்பிடி மாறிப் போயிட்டான்! அவரஞ்சிக் கொடியா மாறிட்டான்!” என்றார்.

  மாற்றம் என்பதுதான் மாற்றமில்லாத தத்துவம். இந்த மாற்றத்தை திரைப்படக் கவிஞர்கள் எப்படி கையாண்டிருக்கிறார்கள் என்று யோசித்துப் பார்த்தேன். மடமடவென்று காதல் பாடல்கள் கண் முன்னே வந்தன. அவற்றில் நான்கு பாடல்களை மட்டும் பார்க்கலாம்.

  வழக்கம் போலவே கவியரசர் முன்னால் வந்து நிற்கிறார். பணமா பாசமா திரைப்படத்துக்காக அவர் எழுதிய பாடலைத்தான் பார்க்கப் போகிறோம்.

  அவளொரு கல்லூரி மாணவி. செல்வந்தரின் செல்வமகள். திமிரும் அதிகம் தான். காரிலேயே கல்லூரி சென்று திரும்புகின்றவள் தவிர்க்க முடியாமல் ரயிலில் ஒருநாள் செல்ல வேண்டியிருக்கிறது. அந்த ரயிலில்தான் அவள் அவனைப் பார்க்கிறாள். அவனோ அவளைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. அவள் அவனைப் பார்த்ததாலேயே அவளுடைய திமிர் கரைந்து ஓடுகிறது. உள்ளத்தில் காதல் வந்த பிறகு அங்கு திமிருக்கு இடமில்லை. வீட்டுக்கு வந்து அவனை நினைத்துப் பாடுகிறாள்.

  மாறியது நெஞ்சம்! மாற்றியது யாரோ!
  காரிகையின் உள்ளம் காண வருவாரோ!

  மாறிய உள்ளம் மாறாமல் இருக்க வேண்டுமென்றால் மாற்றியவனே வரவேண்டும். கதைப்படி வந்தான். நல்வாழ்வு தந்தான்.

  மாற்றத்தின் தோற்றத்தை அடுத்ததாகச் சொல்ல வருகின்றவர் கவிஞர் வாலி. சந்திரோதயம் படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலிலும் ஒரு பெண் வருகிறாள். ஆம். இளம்பெண்ணே தான். அவளும் நோக்கினாள். அவனும் நோக்கினாள். அதை மன்மதனும் நோக்கினான். காதல் அம்பு விட்டான்.

  மன்மதன் அம்பு விட்டான் என்று நமக்குத் தெரிகிறது. அவளுக்குத் தெரியவில்லையே. அவள் நெஞ்சுக்குள் உண்டான குழைவு எப்படி வந்தது என்றே அவளுக்குப் புரியவில்லை. அதையே பாட்டாகப் பாடுகிறாள்.

  எங்கிருந்தோ ஆசைகள்
  எண்ணத்திலே ஓசைகள்
  என்னென்று சொல்லத் தெரியாமலே
  நான் ஏன் இன்று மாறினேன்!

  பெண்மை தானாக மாறுவதும் உண்டு. வலுக்கட்டாயமாக மாற்றப்படுவதும் உண்டு. அன்பும் அடக்கமும் நிறைந்தவள் அவள். அவளை ருசிக்க விரும்பிய ஒருவன் அவளுக்குத் தெரியாமல் மதுவைக் குடிக்க வைத்தான். மது மதியை மயக்கியது. மயங்குவது புரிந்தது அவளுக்கு. ஆனால் அதைத் தடுக்க முடியவில்லை. தானா இப்படி மாறிக் கொண்டிருக்கிறோம் என்று வியந்து பாடுகிறாள் அவள்.

  நானே நானா யாரோதானா
  மெல்ல மெல்ல மாறினேனா
  தன்னைத் தானே மறந்தேனே
  என்னை நானே கேட்கிறேன்

  இதுவும் கவிஞர் வாலியின் கைவண்ணம் தான். அடுத்து கவிஞர் வைரமுத்து காட்டும் மாற்றத்தை அவரது வைரவரிகளில் பார்க்கலாம். இதுவரை பார்த்த அதே காட்சிதான். நேற்று வரைக்கும் இல்லாத காதல் இன்று அவளுக்கு வந்து விட்டது.

  நேற்று இல்லாத மாற்றம் என்னது
  காற்று என் காதில் ஏதோ சொன்னது
  இதுதான் காதல் என்பதா!
  இளமை பொங்கிவிட்டதா!
  இதயம் சிந்திவிட்டதா! சொல் மனமே!

  இப்படி பெண்களின் மனது குழந்தைத்தனத்திலிருந்து காதலுக்கு மாறுவதைச் சொல்ல எத்தனையெத்தனை பாடல்கள்.

  அதெல்லாம் சரி. வாலிபத்துக்கு வந்த பின் குழந்தைத்தனத்துக்கு நாம் ஏங்குவதேயில்லையா. வாழ்க்கையில் எவ்வளவுதான் வளர்ந்தாலும் உயர்ந்தாலும் குழந்தைப் பருவத்தின் குற்றமில்லா குதூகலங்கள் எப்போதும் நம்மோடு வருவதில்லை. ஏனென்றால் மனதோடு சேர்ந்து அறிவும் மாறிவிடுகிறதே. இந்த ஏக்கத்தை அழகாக ஒரு பாட்டில் வைத்தார் கவிஞர் சிநேகன்.

  அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்
  அந்த நினைவுகள் நெஞ்சில் திரும்பிடத் திரும்பிட ஏக்கங்கள்!

  பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
  பாடல் – மாறியது நெஞ்சம் மாற்றியது யாரோ
  வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
  பாடியவர் – இசையரசி பி.சுசீலா
  இசை – திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்
  படம் – பணமா பாசமா
  பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=wlSTmduxnyA

  பாடல் – எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே
  வரிகள் – கவிஞர் வாலி
  பாடியவர்கள் – பி.சுசீலா, டி.எம்.சௌந்தரராஜன்
  இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
  படம் – சந்திரோதயம்
  பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=DM_m7xWYTHc

  பாடல் – நானே நானா யாரோதானா
  வரிகள் – கவிஞர் வாலி
  பாடியவர் – வாணி ஜெயராம்
  இசை – இசைஞானி இளையராஜா
  படம் – அழகே உன்னை ஆராதிக்கிறேன்
  பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=Hh6lAvR12cA

  பாடல் – நேற்று இல்லாத மாற்றம்
  வரிகள் – கவிஞர் வைரமுத்து
  பாடியவர் – சுஜாதா
  இசை – இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்
  படம் – புதியமுகம்
  பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=9_geeVUdWwc

  பாடல் – அவரவர் வாழ்க்கையில்
  வரிகள் – சினேகன்
  பாடியவர் – பரத்வாஜ்
  இசை – பரத்வாஜ்
  படம் – பாண்டவர் பூமி
  பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=yHW1mPvAM3Q

  அன்புடன்,
  ஜிரா

  355/365

   
  • amas32 9:29 pm on November 22, 2013 Permalink | Reply

   //மாறியது நெஞ்சம்! மாற்றியது யாரோ!
   காரிகையின் உள்ளம் காண வருவாரோ!//
   அருமையான ஒரு பாடலை நினைவு படுத்தியதற்கு எக்கச்சக்க நன்றி :-))

   பெண்ணின் மனம் மாறுகிறது. அவள் அறியாமலேயே அவளுள் மாற்றம் ஏற்பட்டுவிடும். இது இயற்கை நடத்தும் ஒரு அதிசயம். இதை வாழ்க்கையில் உணர்ந்தவர்கள் ரசிகர்கள், புத்திசாலிகள். அந்த மாற்றத்துக்கு ஏற்ப நாம் வாழும் கலையை மாற்றியமைத்தால் வெற்றி நமதே.

   எல்லா பாடல்களுமே அருமை ஜிரா 🙂

   amas32

  • rajinirams 1:02 am on November 23, 2013 Permalink | Reply

   அருமையான பதிவு-பொருத்தமான நல்ல “மாற்ற”பாடல்கள். சில காதலர்கள் “காலம் மாறலாம் நம் காதல் மாறுமா” என்றும் வாலிபங்கள் ஓடும் வயதாகக் கூடும்,ஆனாலும் அன்பு “மாறாதம்மா” என அன்புடன் இருப்பர்.பின்னாளில் “தாலாட்டு மாறி”போனதே என்று பாடாமலிருந்தால் நல்லது. வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை ஆனால்”மாறி”விட்டான் எனக்கூறும் கவியரசர் “மாறாதய்யா மாறாது மணமும் குணமும் மாறாது” என்று எழுதியுள்ளார். நன்றி:-)

  • Uma Chelvan 3:26 am on November 23, 2013 Permalink | Reply

   மிக மிக நல்ல பதிவு. மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் பதிவு. அதிலும் மிகவும் அருமையான “எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள்” என்ற பாடல் வேறு. கேட்கவும் வேண்டுமா? ……Mr. Rajinirams கமெண்ட்ஸ் எல்லாமே படிக்க மிகவும் நன்று. இவ்வளவு பாடல்களை தெரிந்து வைத்ருகிறார் என்று ஆச்சரியமாக இருக்கிறது.

  • rajinirams 9:02 pm on November 23, 2013 Permalink | Reply

   uma chelvan நன்றி:-)

 • என். சொக்கன் 10:50 pm on November 18, 2013 Permalink | Reply  

  உத்தரவின்றி உள்ளே வா 

  • படம்: ஜில்லுன்னு ஒரு காதல்
  • பாடல்: முன்பே வா
  • எழுதியவர்: வாலி
  • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
  • பாடியவர்கள்: நரேஷ் ஐயர், ஷ்ரேயா கோஷல்
  • Link: http://www.youtube.com/watch?v=OHA_ATdgw_g

  நீ நீ மழையில் ஆட,

  நான் நான் நனைந்தே வாட,

  என் நாளத்தில் உன் ரத்தம்,

  நாடிக்குள் உன் சத்தம்!

  பள்ளியில் தமிழ் மீடியத்தில் அறிவியல் (அல்லது உயிரியல்) படித்தவர்களுக்கு இந்த வரிகளைப் படித்தவுடன் சட்டென்று அந்த ‘நாளம்’ என்ற சொல்லில் மனம் சென்று நிற்கும்.

  ’ரத்தக் குழாய்’ என்று நாம் பரவலாகச் சொல்லும் அதே வார்த்தைதான். ’ரத்த நாளம்’ என்று சொன்னால் இன்னும் அழகாக இருக்கிறது. நாளத்திற்கும் குழாய்க்கும் ஏதேனும் நுட்பமான வேறுபாடு உண்டா என்று தெரியவில்லை.

  அப்புறம் அந்த நாளமில்லாச் சுரப்பிகள்? தமனி? சிரை? தந்துகி? இந்த வார்த்தைகளையெல்லாம் கேட்கும்போது, மறுபடி ஒன்பதாங்கிளாஸுக்குத் திரும்பிவிடமாட்டோமா என்றிருக்கிறது!

  விஷயத்துக்கு வருவோம். நம் உடம்பு நிறைய இருக்கும் ரத்த நாளங்கள் பேச்சிலோ, சினிமாப் பாடல்களிலோ அதிகம் வருவதில்லை என்று நினைத்தேன். கொஞ்சம் தேடினால் ஒரு சில நல்ல உதாரணங்கள் சிக்கின:

  உயிர் உருகிய அந்த நாள் சுகம்,

  அதை நினைக்கையில்,

  ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும் (வாலி)

  ***

  நாளங்கள் ஊடே

  உனதன்பின் பெருவெள்ளம் (மதன் கார்க்கி)

  ***

  ரத்த நாளங்களில் போடும் தாளங்களில்

  புதுத் தாலாட்டுதான் பாடுமா? (பொன்னியின் செல்வன்)

  ***

  மேளங்கள் முழங்குதுங்க, ரத்த

  நாளங்கள் துடிக்குதுங்க (டி. ராஜேந்தர்)

  ***

  ஒரே ஒரு ஆச்சர்யம், ”அறிவியல் கவிஞர்” வைரமுத்து இந்தச் சொல்லை இதுவரை பயன்படுத்தவில்லையோ?

  ***

  என். சொக்கன் …

  18 11 2013

  351/365

   

   
  • Uma Chelvan 6:52 am on November 19, 2013 Permalink | Reply

   நாளமில்லாச் சுரப்பிகள்……..endocrine glands ….that’s what I taught my students today. What a coincident….

   அஞ்சு நாள் வரை அவள் பொழிந்தது ஆசையின் மழை!!
   அதில் நனைந்தது நூறு ஜென்மங்கள் நினைவினில் இருக்கும் -அது போல்
   இந்த நாள் வரும் உயிர் உருகிய அந்த நாள் சுகம். – அதை நினைக்கையில்
   ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும் ………ஒரு நிமிஷம் கூட என்னை பிரியவில்லை

   மிக மிக அருமையான பாடல். இதை தான் முதல் பாடலாக நீங்க சொல்லி இருக்கீங்க!!! still I want to post this song again !!!

  • amas32 8:37 pm on November 19, 2013 Permalink | Reply

   எவ்வளவு ஆராய்ச்சிப் பண்ணியிருக்கீங்க ஒரு பதிவுக்கு! வைரமுத்து இந்த சொல்லை பயன்படுத்தவில்லை என்னும் அளவுக்கு research!

   //என் நாளத்தில் உன் ரத்தம்,// very romantic!

   ரொம்பப் பிடிச்சிருக்கு இந்த போஸ்ட் 🙂

   amas32

  • rajinirams 11:28 am on November 20, 2013 Permalink | Reply

   நல்ல பதிவு. என்ன அருமையான வாலியின் வரிகள் -உயிர் உருகிய அந்த நாள் சுகம்,அதை நினைக்கையில்,ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும்,நீங்கள் சொன்னது போல வைரமுத்து அந்த வார்த்தையை உபயோகிக்காதது ஆச்சர்யமே.

  • நவநீதன் 9:34 pm on January 29, 2014 Permalink | Reply

   ”வந்து தூறல் போடு… இல்லை சாரல் போடு… எந்தன் நாளம் நனையட்டுமே…”

   வைரமுத்து

   படம்: க.கொ.க.கொ
   பாடல்: ஸ்மை யாயி..

 • என். சொக்கன் 11:01 pm on November 16, 2013 Permalink | Reply  

  விருந்தினர் பதிவு: கொல்லையில் தென்னை 

  இரவு நேர பண்பலையில் எப்பொழுதுமே நாம் கேட்டறியாத அல்லது கேட்டு நீண்ட நாட்கள் ஆகிப் போன பாடல்களை ஒலிபரப்புவதால்  நான் அதற்கு ரசிகை.. அப்படி ஒரு நாளில் ஜெயச்சந்திரனின் அருமையான தாலாட்டு

  கொல்லையில தென்னை வச்சி குருத்தோலைப் பெட்டி செஞ்சி சீனி போட்டு நீ திங்க செல்லமாய்ப் பிறந்தவளோ ,மரக் கிளையில் தொட்டில் கட்ட மாமனவன் மெட்டுக் கட்ட  அரண்மனையை விட்டு வந்த அல்லி ராணி கண்ணுறங்கு..

  இந்தப் பாடல் சின்னதாய்ப் போயிற்றே என்று முதன் முதலாய்க் கேட்ட தருணத்தில் இருந்தே மனக் குறை . அதிக இசைக்கருவிகள் இன்றி  இரவு நேர இதத்துக்கு இழுக்கு சேர்க்காமல் நேர்த்தியாக இசையமைத்திருக்கிறார் ரஹ்மான்.    இப்பாடலில் வரும் கொல்லையில என்பது கிராமத்துப் பேச்சு வழக்கு. வீட்டின் பின் புறத்தை கொல்லைப் பக்கம் என்பார்கள். சின்ன வயதில் புதுக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் செல்வதுண்டு. அங்கே பெரும்பாலும் ஒவ்வொரு வீட்டின் பின்புறமும் ஏதேனும் மரங்கள் செடிகள் இருக்கும்.முன்புறமும் சிறிதளவேனும் இடம் விட்டு செடிகள் வளர்த்து வீடுகள் பார்க்கவே அழகாகவும் குளுகுளுவென இருக்கும். வீடு என்று ஒன்று கட்டினால் இப்படிதான் கட்ட வேண்டும் என்று தீர்மானமே உண்டு எனக்கு. நகரத்து கான்கிரீட் காடுகளில் இது குறைந்து விட்டது. இந்தப் பதிவுக்கு மூல காரணம் அந்த கொல்லை அல்ல 🙂 பாடலில் வரும் குருத்தோலை என்ற சொல்.

  குருத்தோலை என்றதும் எனக்கு உடனே பனை ஓலை தான் நினைவுக்கு வந்தது. (ஆனால் பாடலை எழுதிய வைரமுத்து கொல்லையில தென்னை வச்சு குருத்தோலைப் பெட்டி செய்துன்னு தானே எழுதி இருக்கிறார்..அவர் தவறு செய்ய வாய்ப்பு இருக்காதே என்று தென்னை ஓலையிலும் குருத்தோலைப் பெட்டி செய்யப்படுமா என விபரம் சேகரித்தேன்..

  குருத்து -முளை இந்த முளை விடும் இலையே ஓலையாக இருப்பது தென்னை மற்றும் பனைக்கு மட்டும் தானாம் ..

  பனை ஓலையில்,விசிறிகள்,பெட்டி ,கூடை ,கிலுக்கு என நிறைய செய்வார்கள். பனை ஓலை கிலுக்கு ப்ளாஸ்டிக் கிலுக்கு போல அல்லாமல் அதிக சத்தமின்றி அழகாகவும் அருமையாகவும் இருக்கும். பனை ஓலையில் கைப்பை கூட உண்டு. என்ன மடங்காது :)(திருப்புலானி கோவில் தலத்தில் விற்கிறார்கள்.இப்படி ஒரு காலத்தில் பனை ஓலையில் செய்தவற்றை ஆர்வத்துடன் வாங்கியதுண்டு..இந்தக் குருத்தோலைப் பெட்டியும் அதில் ஒன்று. இன்றும் என் அம்மா பூஜை அறையில் காணிக்கைக் காசுகள் ,காதோலை கருக மணி போட இந்தப் பெட்டி தான் பயன்படுத்துகிறார். (வீட்டில் இருக்கும் பெண்ணடி தெய்வத்தை நினைத்து வணங்க இந்தக் காதோலைக் கருகமணி தான் )

  கருப்பட்டி ,வெல்லம் இதில் வைத்து விற்றுப் பார்த்திருக்கிருக்கிறேன். (கருப்பட்டி நினைச்சாலே நாக்கில் எச்சில் ஊறுது .கருப்பட்டி காப்பி குடித்தவர்கள் பாக்கியவான்கள் 🙂 )

  குருத்தோலை ஞாயிறு என கிறித்துவர்கள் கொண்டாடுவார்கள்.

  தென்னங்குருத்து ,குருத்தோலை தென்னை மரத்திற்கும் உண்டு. கல்யாண  வீடுகளில் மாவிலையோடு சேர்த்து தோரணமாய்ப் போடுவது இந்தக் குருத்தோலையைத் தான் . மதுரையில் தென்னங்குருத்து என்றே தள்ளுவண்டியில் இன்னமும் விற்கின்றார்கள்.உடல் நலத்திற்கு நல்லது எனக் கேள்விப் பட்டு வாங்கிச் சாப்பிட்டதுண்டு.ருசியாகவே இருக்கும். நல்ல காரியங்களுக்கு இந்தத் குருத்தோலை தவறாமல் கிராமத்தில் இடம் பெறும் .பல கிராமப்புற சினிமா திருவிழாப் பாடல்களில் அதை நீங்கள் காணலாம் .(மதுரை மரிக் கொழுந்து வாசம் பாடலில் கூட ஆரம்பத்தில் காட்டுவாங்க) கிராமங்களில் காட்டு வேலை செய்பவர்கள் மரக் கிளையில் தொட்டில் கட்டி பிள்ளைகளை உறங்க வைப்பார்கள். (அதெல்லாம் ஒரு காலம் ) ..

  எனக்குத் தெரிந்து குரல் வளம் நன்றாக இருக்கிறதோ இல்லையோ ஒரு ஆராரோ ஆரிரரோ தாலாட்டுக்கு மயங்காத பிள்ளைகள் இல்லை. எனக்குத் தெரிந்த ஒரே தாலாட்டு ஜோ ஜோ 🙂 என் அண்ணன் பிள்ளைகளை கட்டுப் படுத்தும் மந்திரம் இது:) தாலாட்டு குழந்தைக்கு மிகவும் நல்லது என்று ஆராய்ச்சியில் கண்டுபிடிச்சிருக்காங்க .தாலாட்டு புரியாவிடிலும் நமக்கு வேண்டியவர்கள் நமக்கு மிக அருகாமையில் தான் இருக்கிறார்கள் என்ற பாதுகாப்பையும் ஆசுவாசத்தையும் குழந்தைக்குத் தரும் என்று அவதானிக்கிறேன். எவருமில்லாத அமைதியான சூழலில் அழும் குழந்தை அதை உறுதிப் படுத்தும்.குரல் கேட்டதும் குழந்தை இயல்பாகி மீண்டும் உறங்க ஆரம்பிக்கும்.

  இப்படியாக இந்தப் பாடல் பல நினைவுகளைக் கிளறி விட்டுவிட்டது .இந்தப் பாடலில் உள்ள ஒரே உறுத்தல் அவ்ளோ பெரிய அம்மணி நக்மாவை குழந்தையா  நினைச்சு தொட்டிலில் போட்டு ஆட்டுவதுதான். காதலுக்குக் கண்ணில்லைன்னு சும்மாவா சொன்னாங்க :))

  சில படங்கள்:

  1. குருத்தோலைப் பெட்டி:

  petti

  2. பனை ஓலைக் கிளுக்கு:
  petti

  3. தென்னங்குருத்து

  Thennanguruthu (2)

  4. பாடலின் வீடியோ:

  http://www.youtube.com/watch?v=LO6Vllv85Rk

  உமா கிருஷ்ணமூர்த்தி

  தென் மதுரைச் சீமையைச் சேர்ந்தவர். ட்விட்டரில் பெரியாள். தன்னுடைய வலைப்பதிவுக்கு (http://umakrishhonline.blogspot.in/) ”நிச்சயம் புரட்சிப்பெண் அல்ல, மனித கூட்டங்களின் நடுவே எனக்கென்று ஒரு அடையாளத்தை மட்டுமே விரும்புகின்றேன்” என்று Tagline வைத்திருக்கிறார்.

  ”வேற எதாவது சொல்லுங்க” என்றால் இப்படிப் பதில் வருகிறது: “மண் சட்டியில் சோறு ஆக்கி விளையாடுவது பிடிக்கும். பல்லாங்குழி வீட்டில் வைத்து இருக்கிறேன். மழை நின்றபிறகு மரத்தில் உள்ள நீரை உதிர்த்து விளையாடுவது பிடிக்கும். ஆற்று மணலில் வீடு கட்டி விளையாடுவது பிடிக்கும்”

   
  • amas32 11:16 pm on November 16, 2013 Permalink | Reply

   படங்களுடன் பதிவு ரொம்பவும் அழகு 🙂 எனக்கும் இந்தப் பாடல் ரொம்பப் பிடிக்கும். தென்னங்குருத்து ஓலை எல்லாவித மங்கள நிகழ்சிகளுக்கும் ஒரு கட்டாயம். கிராமப்புறத்து வாழ்க்கையை நினைவு படுத்துகிறது இந்தப் பாடல் 🙂

   amas32

  • pvramaswamy 11:20 pm on November 16, 2013 Permalink | Reply

   நன்றாக இருக்கிறது.

   மார்ஜினில் ஏதாவது கோளாறா? ஒவ்வொரு வரியிலும், கடைசி/முதல் எழுத்துகள் காணவில்லை!

 • G.Ra ஜிரா 9:18 pm on November 14, 2013 Permalink | Reply  

  தலைவர்களின் தலைவிகள் 

  சங்க இலக்கியம் காதல் கொண்ட ஆணையும் பெண்ணையும் தலைவன் தலைவி என்றே அழைக்கிறது. மிகப் பொருத்தமான பெயர்தான். அவனுக்கு அவள் தலைவி. அவளுக்கு அவன் தலைவன். அவர்கள் ஊடிக் கூடி முயங்குவதுதான் காமம்.

  அது சரி. ஊருக்கோ நாட்டுக்கோ தலைவன் ஒருவன் இருப்பானே. அவனுக்கும் ஒரு தலைவி இருப்பாளே! அவளுடைய நிலை எப்படி இருக்கும்?

  சாதரண மனிதனாலேயே வீட்டுக்கும் வேலைக்கும் சரியான அளவு நேரம் ஒதுக்க முடிவதில்லை. அப்படியிருக்க நாடாளும் தலைவன் நாட்டுக்கும் வீட்டுக்கும் சரியான அளவு நேரமும் கவனமும் ஒதுக்க முடியுமா?

  முடியாது என்று அடித்துச் சொல்கிறார் துரியோதனனின் மனைவி பானுமதி.

  அரண்மனை அறிவான்
  அரியணை அறிவான்
  அந்தப்புரம் ஒன்று இருப்பதை அறியான்
  வருகின்ற வழக்கை முடித்து வைப்பான்
  மனைவியின் வழக்கை கனவிலும் நினையான்
  என்னுயிர்த் தோழி கேளொரு சேதி
  இதுதானோ உங்கள் மன்னவர் நீதி!

  நாட்டுக்கே அரசியானலும் இதுதான் அவள் நிலை. “தன்னுயிர் போலே மண்ணுயிர் காப்பான் தலைவன் என்றாயே தோழி” என்றுதான் அவளால் புலம்ப முடிந்தது. ஆனாலும் அவளுக்கும் ஒரு நம்பிக்கை.

  இன்றேனும் அவன் எனை நினைவானோ
  இளமையைக் காக்க துணை வருவானோ
  நன்று! தோழி நீ தூது செல்வாயோ
  நங்கையின் துயரச் சேதி சொல்வாயோ!

  கவியரசர் கண்ணதாசன் வரிகளில் அத்தினாபுர அரசி பானுமதி அனுப்பிய தூது வெற்றி பெற்றிருக்கும் என்றே நம்புகிறேன். வெற்றி பெற்றிருக்கவே விரும்புகிறேன்.

  ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது பெண்கள் நிலை மாறியிருக்கிறதா? குறிப்பாக தலைவர்களின் தலைவிகளின் நிலை? இல்லை என்கிறார் கவிஞர் வைரமுத்து.

  இப்பொதெல்லாம் அந்தரங்க விஷயங்களை நம்பிப் பரிமாறுவதற்கான தோழிகளும் தோழர்களும் அரிதாகித்தான் போனார்கள். ஆகையால் முதல்வனின் முதல்வி அவளுக்காக அவளே பாடுகிறாள்.

  உலகம் வாழ நிதி ஒதுக்கு
  என் உயிரும் வாழ மதி ஒதுக்கு
  அரசன் வாழ விதி இருக்கு
  அதற்கு நீதான் விதிவிலக்கு
  மன்னனே… இதோ இவள் உனக்கு

  அப்போதும் அவன் அசைந்து கொடுத்தது போலத் தெரியவில்லை. ஆசைகளை அள்ளித் தெளிக்கிறாள்.

  பள்ளிவாசல் திறந்தாய் பள்ளி திறந்தாய்
  பள்ளியறை வர நேரமில்லையா
  ஊரடங்கு தளர்த்தி வரிகள் தளர்த்தி
  உடைகள் தளர்த்திட வேண்டுமில்லையா!

  காதல் பஞ்சம் வந்து நொந்தேனே முத்த நிவாரணம் எனக்கில்லையா?” என்று தலைவியே தலையெழுத்தை நொந்து கொள்கிறாள். காலங்கள் மாறினாலும் தலைவிகளுக்கு புலம்பல் தான் வழி போல!

  இந்த ஏக்கங்கள் தலைவிக்கு மட்டுந்தான் இருக்குமா? இல்லை. தலைவனுக்கும் இருக்கும் என்கிறார் கவிஞர் வாலி.

  தலைவன் போர்க்கடமையில் இருக்கிறான். போர்ப்பாசறையில் இருந்தாலும் அவன் மனம் அவளது பாச அறைக்கு ஏங்குகிறது.

  வாள் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்!
  போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னை சேர்ந்திடும்
  தேன் நிலவு நான் வாழ ஏன் இந்த சோதனை?
  வான் நிலவை நீ கேளு! கூறும் என் வேதனை!

  அப்படியானால் மகிழ்ச்சியான தலைவனும் தலைவியும் கிடையவே கிடையாதா? அவர்கள் எப்படிப் பாடுவார்கள் என்பதை எப்படித்தான் தெரிந்து கொள்வது? கவலை வேண்டாம் என்கிறார் கவிஞர் வாலி. மன்னவன் வந்தானடி என்ற படத்துக்காக ஒரு பாடல் எழுதினார்.

  காதல் ராஜ்ஜியம் எனது!
  அந்தக் காவல் ராஜ்ஜியம் உனது!
  இது மன்னன் மாடத்து நிலவு!
  இதில் மாலை நாடகம் எழுது!

  அடடா! இப்படி தலைவனும் தலைவியும் ஒன்றாக மனமகிழ்ந்து பாடுவது நமக்கெல்லாம் கேட்பதற்கு எவ்வளவு இன்பமாக இருக்கிறது!

  பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
  பாடல் – என்னுயிர்த் தோழி கேளொரு சேதி
  வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
  பாடியவர் – இசையரசி பி.சுசீலா
  இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன் – டி.கே.இராமமூர்த்தி
  படம் – கர்ணன்
  பாடலின் சுட்டி – https://www.youtube.com/watch?v=ON5Wh1WuAH0

  பாடல் – முதல்வனே வனே வனே வனே
  வரிகள் – கவிஞர் வைரமுத்து
  பாடியவர் – எஸ்.ஜானகி
  இசை – இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்
  படம் – முதல்வன்
  பாடலின் சுட்டி – https://www.youtube.com/watch?v=k6X1d2zlqTw

  பாடல் – சுந்தரி கண்ணால் ஒரு சேதி
  வரிகள் – கவிஞர் வாலி
  பாடியவர் – எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்
  இசை – இசைஞானி இளையராஜா
  படம் – தளபதி
  பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=aPp_i4qzoqI

  பாடல் – காதல் ராஜ்ஜியம் எனது
  வரிகள் – கவிஞர் வாலி
  பாடியவர்கள் – இசையரசி பி.சுசீலா, ஏழிசை வேந்தர் டி.எம்.சௌந்தரராஜன்
  இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
  படம் – மன்னவன் வந்தானடி
  பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=EMPVtUf42Dc

  அன்புடன்,
  ஜிரா

  347/365

   
  • Kannabiran Ravi Shankar (KRS) 4:07 am on November 15, 2013 Permalink | Reply

   தலை = “முதல்”
   உழந்தும் உழவே “தலை” -ன்னு சொல்றோம்-ல்ல

   அப்படி, வாழ்க்கையில்..
   அவனுக்கு முதல் = அவளே; “தலை”வி
   அவளுக்கு முதல் = அவனே; “தலை”வன்

   வாழ்வில் எத்தனையோ வரும் போகும்..
   ஒவ்வொன்னுத்துக்கும் ஒரு மதிப்பு | அந்த நேரத்துக்கு வரும், அப்பறம் போயீரும்;

   ஆனா அவளுக்கு = அவன் தான் முதல்! அவனுக்கு அப்பறம் தான் மத்த எல்லாம்;
   அதனால் தான் அவ = “தலைவி”
   ————

   சீதை = தலைவி; அவனே முதல், அப்பறம் தான் மத்த எல்லாம்
   இராமன் = ? | அவனுக்கு மற்ற விஷயங்களும் முதல் ஆகி விடுகிறது, வெவ்வேறு காலங்களில்..

   சங்கத் தமிழில் அகம் தான் அதிகம் | புறத்தை விட..
   நாடாளும் மன்னனை = நாடன், மன்னன், கோன், பெருமன் -ன்னு சொல்லுவாங்களே தவிர, “தலைவன்” -ன்னு சொல்ல மாட்டாங்க!

   காதலனைத் தான் = தலைவன் -ன்னு சொல்லுறது வழக்கம்! அப்படியொரு உயர்வு, மனசால் வாழும் அக வாழ்வுக்கு!

   சில பாடல்களில் குறிஞ்சி நாட்டுத் தலைவன்-ன்னு வந்தாலும், அது அகப் பாடலாய்த் தான் இருக்கும்! அவள், அவனைத் “தலைவன்” -ன்னு சொல்வது!
   ஆனால் பின்னாளில் புறம் மிகுந்து போய்….
   நாடாள்பவர்களை = “தலைவர்” -ன்னு இன்னிக்கும் சொல்லிக் கொண்டு இருக்கிறோம்:(

   • Kannabiran Ravi Shankar (KRS) 4:23 am on November 15, 2013 Permalink | Reply

    வருகின்ற வழக்கைத் தீர்த்து முடிப்பான்
    மனைவியின் வழக்கை மனதிலும் நினையான்
    என்னுயிர்த் தோழி கேளொரு சேதி…
    -ன்னு கண்ணதாசன், என்னவொரு ஏக்கத்தை வைக்குறாரு! யப்பா…

    நாடாளும் மன்னவனே ஆனாலும்,
    அலுவல் காரணமாய் நேரம் ஒதுக்க முடியாவிட்டாலும் கூடப் பரவாயில்லை…

    ஆனால், அவளே “முதல்” -ன்னு மனசால நினைக்கணும்!
    அப்ப தான் = “தலைவன்”
    நாட்டுக்கு/ ஆபீசுக்கு = பல ஆபீசர்கள் கிடைப்பார்கள்
    ஆனா அவளுக்கு = ?

    காசில்லாம குடும்பம் நடத்த முடியாது; அலுவல்/ கடமை எல்லாமே முக்கியம் தான்!
    ஆனா, இதெல்லாமே எதுக்குச் செய்யறது?
    தன்னையே நம்பி வந்த அவளோடு “வாழ”வே இத்தனையும்!
    —————-

    வீட்டு வேலைக்கு நேரம் ஒதுக்க முடியாட்டாலும் பரவாயில்லை…
    ஆனா, “இரவு” -ன்னு ஒன்னு வருது-ல்ல?

    அந்த இரவில், தூங்கும் முன்,
    அவ கிட்ட, முகத்தோடு முகம் வச்சி,
    “என்னடீ?” -ன்னு பேசும் ரெண்டே சொல்லு…

    அடுத்த நாள், அவளுக்கும் புத்துணர்வு, அவனுக்கும் புத்துணர்வு
    தலைவன்-தலைவி என்னுமோர் “அக” வாழ்க்கை!

  • Kannabiran Ravi Shankar (KRS) 4:27 am on November 15, 2013 Permalink | Reply

   //ஊரடங்கு தளர்த்தி, வரிகள் தளர்த்தி
   உடைகள் தளர்த்திட வேண்டுமில்லையா//

   என்னவொரு அழகு “தளர்த்தல்” வரிகளில்:)

   //”காதல் பஞ்சம் வந்து நொந்தேனே
   முத்த நிவாரணம் எனக்கில்லையா?”//

   வாய் விட்டுக் கேட்டே விட்டாள்…
   நோய் விட்டுப் போகுமோ?

  • Uma Chelvan 8:34 pm on November 15, 2013 Permalink | Reply

   தலை வாழை இல்லை போட்டு இந்த அம்மா விருந்து வைக்குமாம் !! அவர் நல்லா சாப்பிட்டு விட்டு தூங்குவாரம் !!! what a stupid song !!!

  • rajinirams 12:47 am on November 16, 2013 Permalink | Reply

   செம பதிவு.மூன்று ஏக்கங்களை வெளிப்படுத்தி இறுதியில் காதல் ராஜ்ஜியத்தில் ஆடிப்பாடுவதாக சுபமாக முடித்து அருமையான பதிவை தந்துள்ளீர்கள். நாளை இந்த வேளை பார்த்து ஓடி வாநிலா.இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா பாடலும் பொருத்தமானதே. நன்றி.

 • என். சொக்கன் 9:23 pm on November 10, 2013 Permalink | Reply  

  விருந்தினர் பதிவு: இரட்டைப் பிறவிகள் 

  தாமரை இலை-நீர் நீதானா?
  தனியொரு அன்றில் நீதானா?|
  புயல் தரும் தென்றல் நீதானா?
  புதையல் நீதானா?
   
  பாடல்: கருகரு விழிகளால்
  படம்: பச்சைக்கிளி முத்துச்சரம்
  இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
  பாடலாசிரியர்: தாமரை
  பாடியவர்: கார்த்திக்
   
  தலைவன் தலைவியை மையப்படுத்தி எண்ணற்ற சங்ககாலப் பாடல்கள் வந்திருக்கும். சில திரைப்பாடல்களிலும் உவமையாக அவ்வப்போது தலை காட்டுவது வழக்கம். தாமரை இலை-நீர் என்பது பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்த உவமை. (ஒட்டியும்-ஒட்டாமலும்)

  தனியொரு அன்றில் என்றால்?

  இதற்கும் சங்கப் பாடல்களில் குறிப்புகள் உள்ளன. அன்றில் என்பது ஓருடல்-இருதலையாக வாழும் பறவை என்று பஞ்சதந்திரக்கதைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சங்ககாலப் பாடல்களில், இணைபிரியாதிருக்கக் கூடிய பறவைகள் என்கிற அர்த்தத்தில் (இரண்டில் ஒன்று இறந்தால், மற்றொன்று(ம்) இறக்கும். அல்லது சோகத்தோடு வாழும் ) பாடல்கள் உள்ளன.

  அன்றில் போல் ‘புன்கண் வாழ்க்கை’ வாழேன்  (நற்றிணை-124 | மோசிகண்ணத்தனார்)

  கவிஞர் வைரமுத்து கூட, ஒரு பாடலில் (கண்ணோடு காண்பதெல்லாம்/ஜீன்ஸ்/ ஏ.ஆர்.ரஹ்மான்)
  “அன்றில் பறவை ரெட்டைப்பிறவி
  ஒன்றில் ஒன்றாய் வாழும் பிறவி
  பிரியாதே..விட்டுப்பிரியாதே”
  என்று எழுதியிருக்கிறார்.
  சாத்தியமோ, இல்லையோ ஆனால் (இணை) பிரியாத வரம் வேண்டும்தானே?
  தமிழ்

  நான் தமிழ். @iamthamizh என்கிற பெயரில் ட்விட்டரில் எழுதுகிறேன்.

  பயணப்படுதலும் அதன் சுவாரசியங்களும் மிகப் பிடிக்கும். பயணப்படுதலின் பொருட்டு பாடல்கள் கேட்கத் துவங்கிய இப்போது அவை குறித்து எழுதியும் வருகிறேன்.

  பார்க்க:

  thamizhg.wordpress.com

  isaipaa.wordpress.com

   
  • rajinirams 10:14 am on November 11, 2013 Permalink | Reply

   சங்கப்பாடல்,திரைப்பாடல் கொண்டு “அன்றில் பறவை”யின் சிறப்பை விளக்கிய அருமையான பதிவு-வாழ்த்துக்கள் “தமிழ்”.

  • amas32 7:18 pm on November 11, 2013 Permalink | Reply

   “அன்றில் பறவை” பாட்டில் கேட்டிருந்தும் கவனித்து அர்த்தம் யோசித்ததில்லை. நல்ல ர்டுத்துக்காட்டுக்களுடன் விளக்கி உள்ளீர்கள் 🙂

   சங்க இலக்கியங்களில் தான் எவ்வளவு இருக்கின்றன! படித்துப் புரிந்து கொள்ள நேரம் ஒதுக்க வேண்டும்.

   நன்றி

   amas32

 • என். சொக்கன் 6:54 pm on November 6, 2013 Permalink | Reply  

  வல் ஆடை, மெல் ஆடை 

  • படம்: ஜீன்ஸ்
  • பாடல்: கொலம்பஸ் கொலம்பஸ்
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
  • பாடியவர்: ஏ. ஆர். ரஹ்மான்
  • Link: http://www.youtube.com/watch?v=LNl44GG7gts

  ரெட்டைக் கால் பூக்கள் கொஞ்சம் பாரு,

  இன்றேனும் அவசரமாக லவ்வராக மாறு!

  அலை நுரையை அள்ளி அவள் ஆடை செய்யலாகாதா!

  விண்மீன்களைக் கிள்ளி அதில் கொக்கி வைக்கலாகாதா!

  ’ஜீன்ஸ்’ என்கிற ‘வன்’ ஆடையின் பெயரில் ஒரு படம், அதற்குள் அலை நுரையை அள்ளிச் செய்த ‘மென்’ ஆடையைப்பற்றிய ஒரு கற்பனை!

  அலை நுரையை அள்ளி ஆடை செய்தால் எப்படி இருக்கும்? மிக மெல்லியதாக, உடல் வண்ணம் வெளியே தெரியும்படி Transparentடாக இருக்கும்.

  ‘ச்சீ, இந்த ஆடையெல்லாம் நம் ஊருக்குப் பொருந்தாதே’ என்று யோசிக்கிறீர்களா?

  நுரை போன்ற ஆடைகளெல்லாம் நம் ஊரில் எப்போதோ இருந்திருக்கின்றன. பெண்களுக்குமட்டுமல்ல, ஆண்களுக்கும்!

  நம்பமாட்டீர்களா? சீவக சிந்தாமணியில் ஒரு காட்சி. ஹீரோ சீவகன் தன்னை அலங்கரித்துக்கொள்வதை வர்ணிக்கும் திருத்தக்க தேவர், ‘இன் நுரைக் கலிங்கம் ஏற்ப மருங்குலுக்கு எழுதி வைத்தான்’ என்கிறார்.

  அதாவது, இனிய நுரை போன்ற ஆடையைத் தன் இடுப்பில் எழுதிவைத்தானாம்… உடுத்தினான் இல்லை, எழுதினான்… அவன் உடம்பில் ஆடையை வரைந்தாற்போல அப்படிச் சிக்கென்று பிடித்துக்கொண்டிருந்ததாம் அந்த ஆடை.

  இப்போது சொல்லுங்கள், லெக்கின்ஸ் எந்த ஊர்க் கலாசாரம்?

  ***

  என். சொக்கன் …

  06 11 2013

  339/365

   
  • amas32 7:29 pm on November 6, 2013 Permalink | Reply

   நான் இந்தப் பாடலை கேட்டபோது கற்பனை செய்தது foam மாதிரி லேசான எடை உடைய ஆடையை. பெண்களுக்குத் தான் தெரியும் கனமான புடைவைகளை அணியும் சிரமம் 🙂 அலை நுரை அவ்வளவாக transparent ஆக இருக்காதே. நுரை கலையும் போது தான் அடி மணல் தெரியும். ஆனாலும் நீங்க சொன்னா சரியாகத் தான் இருக்கும் 🙂

   amas32

  • rajinirams 11:22 pm on November 6, 2013 Permalink | Reply

   சூப்பர்.கவிஞர் வைரமுத்து அவர்களின் அழகான கற்பனையை -அலை நுரையை அள்ளி அவள் ஆடல் செய்யலாகாதா- சீவக சிந்தாமணி பாடலுடன் ஒப்பிட்டு அருமையான “ஜீன்ஸ்-லெக்கின்ஸ்” பதிவை தந்திருக்கிறீர்கள்.

 • mokrish 10:58 pm on November 3, 2013 Permalink | Reply  

  நிலவின் நிறம் 

  • படம்: ஸ்ரீராகவேந்திரா

  • பாடல்: ஆடல் கலையே

  • எழுதியவர்: வாலி

  • இசை: இளையராஜா

  • பாடியவர்: கே ஜே யேசுதாஸ்

  • Link: http://www.youtube.com/watch?v=Tjs3heWyCiU

  சித்திர நாட்டியம் நித்தமும் காட்டிடும்

  சிற்றிடை தான் கண் பறிக்கும் மின்கொடியோ?

  விண்ணிலே வாழ்ந்திருக்கும் வெண்ணிற நிலா

  பெண்ணென காலெடுத்து வந்ததோ உலா

  நிலவின் நிறம்  என்ன என்ற கேட்டால் நம்மில் பலர் வெண்மை என்றே சொல்வோம். வெறும் கண்களால் பார்க்கும்போது நமக்கு நிலவு வெள்ளையாகவே தெரியும். வெண்ணிலா, வெண்மதி என்று நிறம் சேர்த்தே சொல்வது வழக்கம். நவக்கிரக வழிபாட்டிலும் சந்திரனுக்கு வெள்ளைதான் உகந்த நிறம். பால் போலவே வான் மீதிலே என்று நிலவுக்கு கவிஞர்களும் வெள்ளையடிப்பது உண்டு.

  By the light of the silvery moon என்ற பாடல் ஒன்று நிலவு வெள்ளியின் நிறம் என்று சொல்லும். ஆங்கிலத்தில் Blue moon என்றொரு சொற்றொடர் உண்டு. இது நிலவின் நிறம் இல்லை. அபூர்வமாக நடக்கும் நிகழ்வு என்ற பொருளில் சொல்லப்படுவது.

  ஆனால்  நிஜத்தில் நிலவின் நிறம் என்ன? பொதுவாக வானில், உயரத்தில் நிலவு வெள்ளையாகவே தெரியும்.  கூர்ந்து கவனித்தால் சில சாம்பல் நிற கறைகள்  தெரியும். விண்வெளியிலிருந்து எடுத்த படங்களில் நிலவு மங்கிய வெண்மை / சாம்பல் நிறத்தில் இருக்கும். இதற்கு சில விதிவிலக்குகள் உண்டு. இதற்கு பார்க்கும் கோணம், atmosphere, ஒளிச்சிதறல் என்று பல காரணங்கள்.  கடற்கரையில் நின்று சந்திரன் உதயமாகும்போது பார்த்தால் நிலவின் நிறம் மஞ்சள். சில நாட்களில் அது ஆரஞ்சு சிவப்பு நிறத்திலும் தெரிவதுண்டு.

  நிறங்கள் பற்றி வைரமுத்து எழுதிய சகியே என்ற பாடலில் நிலவுக்கு என்ன நிறம் சொல்கிறார்? நேரடியாக எதுவுமில்லை. ஆனால்

  அந்தி வானம் அரைக்கும் மஞ்சள்

  அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சள்

  என்ற வரி சூரியனின் ஒளியில் பூத்த நிலவை குறிக்கிறதோ? வெறும் சாம்பல் நிறம் கவிதைக்கு உதவாது. அதனால் வெள்ளி நிலா, மஞ்சள் நிலா சிவப்பு நிலா என்று கவிஞர்கள் அழகு சேர்ப்பார்கள்

  மோகனகிருஷ்ணன்

  336/365

   
  • rajinirams 12:44 am on November 4, 2013 Permalink | Reply

   வித்தியாசமான நல்ல பதிவு.நீங்கள் சொல்வது போல கவிஞர்களும் தங்கள் கற்பனைக்கேற்ப நிலவின் நிறத்தை எழுதியிருக்குறார்கள்- மஞ்சள் நிலாவிற்கு,கருப்பு நிலா,வெள்ளி நிலவே,வண்ண நிலவே ,நன்றி.

  • Uma Chelvan 2:25 am on November 4, 2013 Permalink | Reply

   நிஜமாகவே “கருப்பு நிலா ” என்று ஒன்று இருந்தால் எப்படி இருக்கும்?

   மாலை ஒன்று மலரடி விழுந்திட …..
   .பகலில்லே ஒரு நிலவினை கண்டேன்
   அது கருப்பு நிலா

  • amas32 7:53 pm on November 4, 2013 Permalink | Reply

   நிலா வெள்ளையாக தெரிவதற்கு வானம் இரவில் கருமையாக இருப்பதும் ஒரு காரணமே.கருத்த வானத்தில் நிலா ஒரு வட்ட வெள்ளித் தட்டுப் போல நம் கண்களுக்குத் தெரிகிறது. ஆனால் நீங்கள் சொல்வது கூர்ந்து கவனித்தால் சிறிது மஞ்சளாகவும் சாம்பல் பூத்தது போலவும் புலப்படுகிறது.

   என்ன நிறமானாலும் நிலாவின் வண்ணம் மனதை மயக்கும் ஒரு வண்ணம் தான் :-))

   amas32

  • Saba-Thambi 7:39 pm on November 5, 2013 Permalink | Reply

   இன்னொரு பிரபல்யமான பாடல்…
   என் இனிய பொன் நிலாவே

 • என். சொக்கன் 11:17 pm on October 28, 2013 Permalink | Reply  

  அழகின் கதகதப்பு! 

  • படம்: உயிரே
  • பாடல்: தைய தையா
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
  • பாடியவர்கள்: சுக்விந்தர் சிங், மால்குடி சுபா
  • Link: http://www.youtube.com/watch?v=pE3ykXZS4zA

  அவள் கண்களோடு இருநூறாண்டு,

  மூக்கின் அழகோடு முந்நூறாண்டு,

  அவள் அழகின் கதகதப்பில் ஆண்டு ஐநூறு வாழவேண்டும்!

  ஐநூறா, ஐந்நூறா, எது சரி?

  வழக்கம்போல், இரண்டுமே சரிதான், எந்தச் சூழ்நிலையில் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்து விடை மாறும்!

  சாலையில் நடந்து செல்கிறீர்கள். கீழே ஏதோ கிடக்கிறது, குனிந்து பார்த்தால், அது ஒரு நூறு ரூபாய் நோட்டு. மகிழ்ச்சியில் துள்ளுகிறீர்கள். ‘ஐ! நூறு ரூபாய் கிடைத்தது எனக்கு’ என்கிறீர்கள்.

  ஆனால், அதே இடத்தில் ஐந்து நூறு ரூபாய்த் தாள்கள் கிடைத்தால், ‘ஐநூறு ரூபாய்’ என்று சொல்லக்கூடாது, ‘ஐந்நூறு ரூபாய்’ என்றுதான் சொல்லவேண்டும்!

  ஐந்து + நூறு ஆகியவை இணையும்போது, ’ஐந்து’ என்ற சொல்லின் நிறைவில் உள்ள ‘து’ என்ற எழுத்து நீக்கப்படும், ஆனால் ‘ந்’ என்ற எழுத்து நீக்கப்படாது, இதனைத் தொல்காப்பியம் ‘நான்கும் ஐந்து ஒற்றுமெய் திரியா’ என்று குறிப்பிடுகிறது.

  ஆக, ஐந்(து) + நூறு = ஐந்நூறு.

  ***

  என். சொக்கன் …

  28 10 2013

  330/365

   
  • rajinirams 12:33 pm on October 29, 2013 Permalink | Reply

   ஐ! “ந்”த தகவல் புதுசு.நல்ல பதிவு.

  • amas32 11:22 am on November 2, 2013 Permalink | Reply

   //அவள் கண்களோடு இருநூறாண்டு,

   மூக்கின் அழகோடு முந்நூறாண்டு,

   அவள் அழகின் கதகதப்பில் ஆண்டு ஐநூறு வாழவேண்டும்!//

   200 +300 =500?
   கண்களின் அழகோடு 200 ஆண்டுகள்,
   மூக்கின் அழகோடு 300 ஆண்டுகள்,
   ஆக மொத்தம் 500 ஆண்டுகள்?

   அழகோ அழகு 🙂

   amas32

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel