எந்த ஊர் என்றவனே 

ஒருவர் நமக்கு அறிமுகமான சில நிமிடங்களில் கேட்கப்படும் கேள்விகளில்  ஒன்று – ‘நீங்க எந்த ஊர்? என்பது. ஒரே ஊர் என்றோ ஒரே மாவட்டம் என்றோ தெரிந்தால் ‘ அட நீங்களும் வேலூர் தானா என்று உடனே ஒரு புன்முறுவல். நட்பு சுலபமாகும். நாம் பிறந்து வளர்ந்த ஊரை நினைத்தாலே சந்தோஷம் பொங்கும். வெளிநாட்டில் வாழும்போது சொந்த ஊரில் / மாவட்டத்தில் இருந்து வருபவர்களுடன் பேசும்போது ஒரு extra connect இருப்பதை உணர்ந்திருக்கிறேன்

ஊர்ப்பெயர்களை அதன் வேர்ச்சொல் அறிந்து ஆராய்வது ஒரு பெரிய சவால்.இடப்பெயராய்வு. கல்வெட்டு, புத்தகங்கள், அரசுப் பதிவேடுகள், செப்பேடுகள், கர்ணபரம்பரைக் கதைகள், நாட்டுப்புற பாடல்கள், பழமொழிகள், சொலவடைகள், விடுகதைகள் ஆகியவற்றில் சம்பந்தப்பட்ட ஊர்கள் இடம்பெற்ற விதத்தையும், அந்த ஊர்களின் மக்களுடைய வாழ்க்கைத் தரம், பொருளாதாரம், தற்போதய நிலை உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்தும் பல ஆய்வுகள் உண்டு. ரா பி சேதுப்பிள்ளை அவர்களின் ‘தமிழகம் ஊரும் பேரும்’ என்ற ஆய்வை இணையத்தில் படித்தேன். சுவாரஸ்யமான ஆய்வு.

http://www.tamilvu.org/library/lA475/html/lA475con.htm

ஒரு கவிஞனை எந்த ஊர் என்றால் என்ன சொல்வான்? திரைப்பாடல்களில் ஒரு தேடல் கண்ணதாசன் காதல் தோல்வி சொல்ல ஒரு பாடலில் பிறப்பில் தொடங்கி ஆணின் அன்றைய காதல் தோல்வி status வரை ஊர்ப்பெயர்களை எழுதிய வரிகள் அருமையான கற்பனை. எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா? என்று தொடங்கும் பாடலில் வரும் கற்பனை ஊர்ப்பெயர்கள் – பேச்சு வழக்கில் இருக்கும் வார்த்தைகளை ஊர் போல சொல்வார். http://www.youtube.com/watch?v=eyIWD8FOh4g

உடலூரில் வாழ்ந்திருந்தேன் உறவூரில் மிதந்திருந்தேன்

கருவூரில் குடி புகுந்தேன் மண்ணூரில் விழுந்து விட்டேன்!

என்று பிறப்பையும் பின் வரும் வரிகளில்

வேலூரைப் பார்த்து விட்டேன் விழியூரில் கலந்து விட்டேன்

காதலூர் காட்டியவள் காட்டூரில் விட்டுவிட்டாள்

கன்னியூர் மறந்தவுடன் கடலூரில் விழுந்துவிட்டேன்!

பள்ளத்தூர் தன்னில் என்னை பரிதவிக்க விட்டு விட்டு

மேட்டூரில் அந்த மங்கை மேலேறி நின்று கொண்டாள்!

காதலில் விழுந்ததையும் பின் பள்ளத்தில் விழுந்ததையும் சொல்கிறார்

வாலி தமிழகத்தின் ஊர்ப்பெயர்களை வைத்து ஒரு பெண்ணை வர்ணிக்கிறார். மதுரையில் பறந்த  மீன் கொடியை அவள் கண்ணில் பார்த்து  சேரன் வில்லை புருவத்தில் பார்த்து புலிக்கொடியை அவள்  பெண்மையில் பார்த்து என்று அலங்காரமான பாடல் ஒன்று

http://www.youtube.com/watch?v=GN5JGwKojgk அதில் தொடர்ந்து

காஞ்சித் தலைவன் கோவில் சிலை தான் கண்மணியே உன் பொன்னுடலோ

குடந்தையில் பாயும் காவிரி அலை தான் காதலியே உன் பூங்குழலோ

சேலத்தில் விளையும் மாங்கனிச் சுவைதான் சேயிழையே உன் செவ்விதழோ?

தூத்துக் குடியின் முத்துக் குவியல் திருமகளே உன் புன்னகையோ?

பாடல் முழுவதும் வரிகளின் முதலில் ஒரு ஊர்ப்பெயரை வைத்து அழகான கவிதை.

வைரமுத்துவும் பெண்ணை வர்ணிக்கவே ஊர்பெயரை வரிகளில் வைக்கிறார். ஒவ்வொரு ஊரிலிருந்தும் விசெஷமான பொருள் எடுத்து அந்த பெண்ண சிலை செய்ததாக கற்பனை தஞ்சாவூரு மண்ணெடுத்து என்ற பாடலில் வரும் வரிகள் http://www.youtube.com/watch?v=NzRHBQRpqkI

கன்னம் செஞ்ச மண்ணு அது பொன்னூரு

ஒதடு செஞ்ச மண்ணு  மட்டும் தேனூரு

நெத்தி செய்யும் மண்ணுக்கு சுத்தி சுத்தி வந்தேங்க

நெலாவில் மண்ணெடுத்து நெத்தி செஞ்சேன் பாருங்க

வாழையூத்து மண்ணெடுத்தேன் வயித்துக்கு – அட

கஞ்சனூரு மண்ணெடுத்தேன் இடுப்புக்கு

கண்ணதாசனின் காதல் தோல்வி வரிகள் ஒரு extreme என்றால் வாலியும் வைரமுத்துவும் சொல்லும் வர்ணனைகளும் மிகையானவை. எனக்கு அறிவுமதி எழுதிய அழகூரில் பூத்தவளே பாடல வரிகள் இயல்பாக இருப்பதாய் தோன்றுகிறது http://www.youtube.com/watch?v=83Zq_Bh3mCg

அழகூரில் பூத்தவளே

எனை அடியோடு சாய்த்தவளே

மழையூரின் சாரலிலே

எனை மார்போடு சேர்த்தவளே

உன்னை அள்ளி தானே உயிர் நூலில் கோர்ப்பேன்

உயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன்

அவள் பிறந்த ஊர் எதுவாக இருந்தாலும் அதுவே அழகான ஊர் என்பதில் ஒரு உணர்வுபூர்வமான நியாயம். அவள் சுருட்டி போட்ட முடியை மோதிரமாகியது அவள் சோம்பலில் இவன் முறிந்து போனது – மிகை தான் என்றாலும் சுவாரஸ்யம்தான். ,’என்னை மறந்தாலும் உன்னை மறவாத நெஞ்சோடு நான் இருப்பேன்’ என்று சொன்னவுடன் நெகிழ்ந்து ‘அன்பூரில் பூத்தவனே என்கிறாள்.  அழகு.

 மோகனகிருஷ்ணன்

138/365