கங்கையும் காவிரியும் 

  • படம்: ஞானப்பழம்
  • பாடல்: யாரும் இல்லாத தீவொன்று வேண்டும்
  • எழுதியவர்: பா. விஜய்
  • இசை: கே. பாக்யராஜ்
  • பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், சுஜாதா
  • Link: http://www.youtube.com/watch?v=QRWeVVy-rMk

காவிரியில் வந்து கங்கை

கை சேர்க்க வேண்டும்,

நாமும் அதில் சென்று காதல்

நீராடவேண்டும்!

இன்று மாயவரம் மயூரநாதர் ஆலயம் சென்றிருந்தேன். அத்தலத்தின் வரலாற்றுப் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தபோது, சட்டென்று இந்தப் பாடல், இந்த வரியை நோக்கிச் சென்றேன்.

காவிரியில் கங்கை வந்து சேரவேண்டும் என்பது ஒரு சுவையான கற்பனை. புவியியல் ரீதியில் சிரமம், ஆனால் கவி மனத்துக்குச் சாத்தியம், காதல் நோக்கமோ, பக்தி நோக்கமோ!

மனிதர்கள் செய்த குற்றங்களைக் கழுவ கங்கைக்குச் சென்று நீராடுவார்கள். ஆனால், இப்படி எண்ணற்றோரின் அழுக்குகளைச் சேர்த்துக்கொண்ட கங்கை என்ன ஆகும்?

தவறு செய்த மனிதர்கள் கங்கையில் குளித்துக் குளித்து அந்த நதியே அழுக்காகிவிட்டதாம். அதனைப் புனிதமாக்க, மாயவரம் நகரில் உள்ள காவிரிக்கு வந்து மூழ்கி எழுந்ததாம். இப்படிச் செல்கிறது இந்நகரின் தல புராணம்.

கிட்டத்தட்ட இதையே பிரதிபலிப்பதுபோல, ‘மகாநதி’ படத்தில் வாலி எழுதிய இரு வெவ்வேறு பாடல்கள், ஒன்றில் ‘கங்கையின் மேலான காவிரித் தீர்த்தம்’ என்பார், இன்னொரு பாடலில், ‘இங்கே குளிக்கும் மனிதர் அழுக்கில் கங்கை கலங்குது’ என்பார்.

இதற்கெல்லாம் அர்த்தம், கங்கையை இழிவுபடுத்துவது அல்ல. நம் அழுக்குகளை ஒரு நதி கழுவிவிடும் என்ற சிந்தனை ஒரு வசதியாக அமைந்துவிடக்கூடாது. ‘தப்புச் செஞ்சுட்டு, அப்புறமா மன்னிப்புக் கேட்டுக்கலாம்’ என்று நினைக்காமல், உண்மையிலேயே திருந்துகிறவர்களாக நாம் இருக்கவேண்டும் என்றுதான் வாலியும், மாயவரத் தல புராணமும் சொல்வதாக நான் நினைக்கிறேன்!

***

என். சொக்கன் …

25 10 2013

327/365