Updates from November, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • என். சொக்கன் 11:59 pm on November 27, 2013 Permalink | Reply  

  வானவில் ஆடை 

  • படம்: ரோஜா
  • பாடல்: சின்னச் சின்ன ஆசை
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
  • பாடியவர்கள்: மின்மினி, ஏ. ஆர். ரஹ்மான்
  • Link: http://www.youtube.com/watch?v=YpMK2UYmgw8

  சேற்று வயல் ஆடி, நாற்று நட ஆசை,

  மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை,

  வானவில்லைக் கொஞ்சம் உடுத்திக்கொள்ள ஆசை,

  பனித்துளிக்குள் நானும் படுத்துக்கொள்ள ஆசை!

  ’உடை’ என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்தது ‘உடுத்தல்’ என்ற செயல். இதே வரிசையில் வரும் ‘உடுப்பு’ என்பதும் மிக அழகான சொல். ஆனால் ஆடை சார்ந்த மற்ற சொற்களோடு ஒப்பிடும்போது இவற்றை நாம் பேச்சில் குறைவாகவே பயன்படுத்துகிறோம்.

  உண்மையில் ‘உடுப்பு’ என்பது ‘உடுபு’ என்ற கன்னடச் சொல்லில் இருந்து வந்தது என்கிறார் பாவாணர். அப்படியானால் ‘உடுத்தல்’ என்ற பெயர்ச்சொல்லும் அதன்பிறகுதான் வந்திருக்கவேண்டும்.

  பழந்தமிழ்ப் பாடல்களில் ‘உடுத்தல்’க்கு நிறைய மரியாதை இருக்கிறது. உதாரணமாக: நீர் ஆரும் கடல் உடுத்த நில மடந்தை, உண்பது நாழி, உடுப்பது இரண்டே!

  சினிமாப் பாடல்களைப் பொறுத்தவரை, ’பட்டுடுத்தி’ என்ற சொல் மிகப் பிரபலம் (பட்டு உடுத்தி), மற்றபடி இடுப்புக்கு எதுகையாக இருந்தும் உடுப்பைக் கவிஞர்கள் அதிகம் விரும்பாதது பெருவிநோதம்.

  முந்தின வரியில் இரட்டை அர்த்தம் ஏதுமில்லை என்பதையும் சொல்லிவிடுகிறேன் 😉

  ***

  என். சொக்கன் …

  27 11 2013

  360/365

   
  • Uma Chelvan 12:51 am on November 28, 2013 Permalink | Reply

   “காஞ்சி பட்டுடுத்தி கஸ்துரி பொட்டும் வைத்து ”

  • amas32 3:33 pm on November 28, 2013 Permalink | Reply

   உடுப்பு என்ற சொல் எனக்கு ஏனோ uniformஐ நினைவுப் படுத்தும். உடுத்தி என்பது அழகிய பிரயோகம். ஆனால் புடைவை கட்டிக் கொண்டு வருகிறேன் என்றும் வேட்டி சட்டைப் போட்டுக் கொண்டு வருகிறேன் என்றே பேச்சு வழக்கில் வந்து விட்டது. உடுத்தி என்ற சொல்ல ஆரம்பிக்க வேண்டும் 🙂

   உப்புமா கன ஜோர்!

   amas32

  • Saba-Thambi 10:17 pm on November 28, 2013 Permalink | Reply

   உடுப்பு, உடுத்தல் என்பன யாழ்ப்பாணைத்தில் தாராளமாக பாவிக்கப்படும் சொற்கள்.

   அப்போ திருக்குறளில் வரும் உடுக்கை என்ற சொல் ?

  • rajinirams 3:11 am on November 29, 2013 Permalink | Reply

   ஆம்.நீங்கள் சொன்னது போல் உடுத்தி என்ற வார்த்தையை பயன்படுத்தியது இல்லை.சேலை”கட்டும்”பெண்ணுக்கொரு,நீ பட்டுப்புடவை”கட்டிக்கொண்டால்”ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்.சேலை”மூடும்”இளஞ்சோலை,நீலச்சேலை கட்டிக்கொண்ட சமுத்திரப்பொண்ணு, இப்படி பல.

 • என். சொக்கன் 10:53 pm on November 16, 2013 Permalink | Reply  

  யாவும் நீ 

  • படம்: கரகாட்டக்காரன்
  • பாடல்: மாரியம்மா, மாரியம்மா
  • எழுதியவர்: கங்கை அமரன்
  • இசை: இளையராஜா
  • பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், கே. எஸ். சித்ரா
  • Link: http://www.youtube.com/watch?v=tOUyOklDqkY

  மண்ணுக்குள் நீ நல்ல நீரம்மா,

  காத்தும், கனலும் நீயம்மா,

  வானத்தப் போல் நின்னு பாரம்மா,

  வந்தேன் தேடி நானம்மா!

  நிலம், நீர், காற்று, நெருப்பு, வானம் என்கிற ஐம்பூதங்களும் நீயாக இருக்கிறாய் என்று பாடுவது பக்தி இலக்கியத்தில் அடிக்கடி வெளிப்படும் அம்சங்களில் ஒன்று.

  உதாரணமாக, ‘நிலம், நீரொடு ஆகாசம், அனல், கால் ஆகி நின்று’ என்று சிவனைக் குறிப்பிடுவார் திருஞானசம்பந்தர். ’நிலம், கால், தீ, நீர், விண் பூதம் ஐந்தாய்’ என்று பெருமாளை அழைப்பார் திருமங்கையாழ்வார். இப்படி இன்னும் ஏராளமான உதாரணங்களைச் சொல்லமுடியும்.

  அதே மரபை மாரியம்மனுக்கும் எளிய சொற்களில் பொருத்தி சினிமாப் பாடலாகத் தருகிறார் கங்கை அமரன். ’மண் தொடங்கி விண்வரை அனைத்தும் நீயே’ என்று அந்தக் கிராமத்துக் காதலர்கள் அவளது கருணையைக் கோரி நிற்கின்றனர்.

  இன்னொரு கிராமத்துப் பாட்டில் வாலியும் இதே மரபைப் பின்பற்றி எழுதியிருப்பார், அங்கேயும் போற்றப்படுகிறவள் தேரில் உலா வரும் கருமாரி, மகமாயி, உமைதான்!

  நீர், வானம், நிலம், காற்று, நெருப்பான ஐம்பூதம்

  உனதாணைதனை ஏற்றுப் பணியாற்றுதே,

  பார்போற்றும் தேவாரம், ஆழ்வார்கள் தமிழாரம்,

  இவை யாவும் எழிலே உன் பதம் போற்றுதே!

  ***
  என். சொக்கன் …

  16 11 2013

  349/365

   
  • Uma Chelvan 4:03 am on November 17, 2013 Permalink | Reply

   எங்கும் அவள், எதிலும் அவள் உமையவள் !!!

   மலரும் வான் நிலவும் சிந்தும் அழகெல்லாம் உன் எழில் வண்ணமே!
   குழலும் யாழ் இசையும் கொஞ்சும் மொழி எல்லாம் உன் குரல் வண்ணமே !

  • amas32 9:31 pm on November 17, 2013 Permalink | Reply

   ஐம்பூதங்களிலும் நீயே உறைகிறாய் என்ற கங்கை அமரனின் பாடல் வரிகள் போற்றிப் பாடப்படும் அம்மனைப் போல் எளிமை நிறைந்தவை.

   நாலே வரியில் வாலி சொல்லும் கருத்தும் அற்புதம். அமரன் சொன்னதை தான் சொல்கிறார் ஆனால் இன்னும் கொஞ்சம் high funda வாக உள்ளது.

   இரு பாடல்களும் அருமை!

   amas32

 • G.Ra ஜிரா 11:36 am on June 19, 2013 Permalink | Reply  

  திருப்புகழ்! 

  திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்
  எதிர்ப்புகளை முருகா, உன் வேல் தடுக்கும்
  முருகா…… உன் வேல் தடுக்கும்!

  பூவை செங்குட்டுவன் எழுதிய அற்புதமான பாடல் வரிகள் இவை. கௌரி கல்யாணம் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் இது.

  திருப்புகழின் திருப்புகழை இதை விட எளிமையாகச் சொல்ல முடியுமா என்று நம்மையும் சிந்திக்க வைக்கும் வரிகள் இவை.

  திருப்புகழுக்கு அப்படி என்ன பெருமை? அதைப் புரிந்து கொள்ள சிலபல தகவல்களை நாமும் தெரிந்து கொள்ள வேண்டும்.

  தமிழுக்குக் கிடைத்த அற்புத மாமணி அருணகிரிநாதர். முருகன் திருவருளால் அருணகிரியின் வாக்கில் வந்த பாடல்கள்தான் திருப்புகழ் என்று தொகுக்கப்பட்டன. திருப்புகழ் என்ற பெயரைப் பின்னால் யாரும் வைக்கவில்லை. அருணகிரியே ஒரு பாடலில் திருப்புகழ் என்று குறிப்பிடுகிறார்.

  பக்கரை விசித்ரமணி பொற்கலனை இட்ட நடை
  பட்சியெனும் உக்ர துரகமும் நீபப்
  பக்குவ மலர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
  பட்டுருவ விட்டருள்கை வடிவேலும்
  திக்கது மதிக்கவரு குக்குடமும் ரட்சைதரு
  சிற்றடியு முற்றிய பனிருதோளும்
  செய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு
  செப்பென எனக்கருள்கை மறவேனே

  குற்றமற்ற மணிகள் பொருந்திய பொன்னணிகளை அணிந்து கொண்டு அழகு நடை போடும் மாமயிலையும்,
  கடம்ப மலர் மாலையையும்,
  கிரவுஞ்ச மலையானது மறைந்து போகும் படி திருக்கையால் ஏவித் துளைத்த வேலையும்,
  எட்டுத் திசையும் கிடுகிடுக்க வரும் சேவலையும்,
  அருள் தருகின்ற சிற்றடிகளையும்,
  பன்னிரண்டு தோள்களையும்,
  இருந்து அருள் செய்யும் ஒவ்வொரு திருப்பதிகளையும் வைத்து உயர்ந்த வகையில் திருப்புகழை உள்ளம் விரும்பிப் பாடு என்று அருள் சொன்ன கருணையை நான் என்றும் மறவேனே!

  ஆக.. இந்தப் பாட்டில் இருந்து தெரிவது என்ன? திருப்புகழ் என்ற பெயரை அருணகிரிநாதர் வைக்கவில்லை. முத்தமிழ்த் தெய்வமான முருகப் பெருமானின் திருவாயால் பெயரிடப்பட்ட நூல் திருப்புகழ் என்ற சிறப்பை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

  திருப்புகழில் இப்போது கிடைத்திருப்பது 1307 பாடல்கள்தான். இன்னும் பல்லாயிரம் பாடல்கள் இருந்ததாகவும் அவை மறைந்து போனதாகவும் கூறுகிறார்கள்.

  திருப்புகழைப் பாடிய அருணகிரி அந்தப் பாடல்களை ஓலையில் எழுதி வைக்கவில்லை. அவர் பாடிய கோயில்களில் இருக்கும் அன்பர்கள் அந்தப் பாடல்களை ரசித்து எழுதி வைத்தார்கள். அப்படி எழுதி வைத்த பாடல்கள்தான் இன்று தப்பிப் பிழைத்து நமக்குக் கிடைத்திருக்கின்றன.

  திருப்புகழை அருணகிரி அறிவால் பாடவில்லை. முருகன் அருளால் பாடினார். அதாவது முருகன் அருணகிரியைப் பாட வைத்தான். அந்தப் பாடல்களில் எத்தனையெத்தனை சந்தநயம்! எத்தனை தாள வகைகள் உண்டோ அத்தனையும் திருப்புகழ் பாடல்களில் உள்ளனவாம். அத்தோடு அளவிட முடியாத கவிச்சுவை வேறு.

  அப்படிப்பட்ட திருப்புகழ் பாடல்களை அருணகிரியே ரசித்திருக்கிறார். கேட்டவர்கள் ரசித்ததையும் கண்டிருக்கிறார்.

  பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு
  பட்சிந டத்திய குகபூர்வ
  பச்சிம தட்சிண வுத்தர திக்குள
  பத்தர்க ளற்புத மெனவோதுஞ்
  சித்ரக வித்துவ சத்தமி குத்ததி
  ருப்புக ழைச்
  சிறி தடியேனுஞ்
  செப்பென வைத்துல கிற்பர வத்தெரி
  சித்தவ நுக்ரக மறவேனே

  அடியவர்களுக்கு அருளும் இறைவனே
  ஆடும் மயில் ஏறி விளையாடும் குகனே
  கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு
  ஆகிய திசைகளில் உள்ள அன்பர்கள் எல்லாரும்
  அற்புதம் அற்புதம் என்று ரசித்து ஓதுகின்ற
  அழகு கவிநயமும் சந்தநயமும் மிகுந்து இருக்கும்
  திருப்புகழை கொஞ்சமாவது நானும்
  சொல்லும் படி செய்து உலகில் பரவுவதற்கு
  வகை செய்த உன்னருளை மறக்க மாட்டேன் முருகனே!

  இந்த வரிகளிலும் அருணகிரி முருகனுக்கு நன்றி கூறுகிறார். திருப்புகழ் என்ற பெயர் நிலைபெறும் வகையில் இந்தப் பாடலிலும் இடம் பெறுகிறது.

  சரி. திருப்புகழ் பாடல்களிலேயே முதலில் பாடப்பட்டது எந்தப் பாடல் என்று தெரியுமா? எங்கு பாடப்பட்டது என்று தெரியுமா?

  முத்தைத் தரு பத்தித் திருநகை” என்ற பாடல்தான் முதலில் பாடப்பட்டது. பாடப்பட்ட இடம் திருவண்ணாமலை கோயில்.

  திருப்புகழ் பாடு என்று முருகன் பணித்த பின் “என்ன பாடுவது எப்படிப் பாடுவது” என்று புரியாமல் தவித்த அருணகிரிக்கு “முத்து முத்தாகப் பாடு” என்று முருகனே எடுத்துக் கொடுக்க பாடப்பட்டதுதான் “முத்தைத் தரு பத்தித் திருநகை” என்ற திருப்புகழ்.

  இதில் முத்து என்பது அருணகிரியைப் பெற்ற அன்னை என்றொரு கருத்தும் உண்டு.

  திரைப்படங்களிலும் திருப்புகழ் பாடல்கள் வந்துள்ளன. குறிப்பாக அருணகிரிநாதர் திரைப்படத்தில் மூன்று திருப்புகழ் பாடல்கள் வந்துள்ளன.

  1. முத்தைத் தரு பத்தித் திருநகை
  2. பக்கரை விசித்ரமணி பொற்கலனை இட்ட நடை
  3. தண்டையணி வெண்டயம் கிண்கிணி சதங்கையும்

  அதற்குப் பல ஆண்டுகள் கழித்து இறையருட் கலைச்செல்வர் இயக்கத்தில் வெளிவந்த “யாமிருக்க பயமேன்” என்ற திரைப்படத்தில் ”பாதிமதி நதி போது மணிசடை” என்ற திருவேரகத்(சுவாமிமலை) திருப்புகழ் மெல்லிசை மன்னர் இசையமைப்பில் வெளிவந்தது. அதற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு இளையராஜா இசையில் “ஏறுமயில் ஏறிவிளையாடும்” என்ற திருப்புகழ் ”தம்பி பொண்டாட்டி” என்ற திரைப்படத்தில் இடம் பெற்றது.

  நாமும் திருப்புகழை ஓதி முருகனருளால் நல்லறிவும் நல்லருளும் பெற்று வளமோடு வாழ்வோம்.

  பதிவில் இடம் பெற்ற திருப்புகழ் பாடல்கள்
  திருப்புகழை/பி.சுசீலா,சூலமங்கலம் ராஜலட்சுமி/கௌரிகல்யாணம்/எம்.எஸ்.வி – http://youtu.be/awxORiSnHig
  முத்தைத்தரு/டி.எம்.சௌந்தரராஜன்/அருணகிரிநாதர்/டி.ஆர்.பாப்பா – http://youtu.be/2vRkCV3symk
  பக்கரை/டி.எம்.சௌந்தரராஜன்/அருணகிரிநாதர்/டி.ஆர்.பாப்பா – http://youtu.be/AfZ3UoT4pFw
  தண்டையணி/டி.எம்.சௌந்தரராஜன்/அருணகிரிநாதர்/டி.ஆர்.பாப்பா – http://youtu.be/QyZi7oEUtGI
  பாதிமதிநதி/வாணி ஜெயராம், எல்.ஆர்.அஞ்சலி/யாமிருக்க பயமேன்/எம்.எஸ்.வி – http://youtu.be/FDMcv6CjglI
  ஏறுமயில்/சுவர்ணலதா,மின்மினி,கல்பனா,பிரசன்னா/தம்பிபொண்டாட்டி/இளையராஜா – http://youtu.be/ju0VhKQHQ3c

  பி.கு. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளிவந்த “என் வீட்டுத் தோட்டத்தில்” பாடல் “நாதவிந்து கலாதீ நமோநம” என்ற திருப்புகழின் சாயலிலும் “வெற்றிக் கொடி கட்டு” என்ற பாடல் “முத்தைத் தரு பத்தி” என்ற திருப்புகழின் சாயலிலும் வந்துள்ளது.

  அன்புடன்,
  ஜிரா

  200/365

   
  • kamala chandramani 12:14 pm on June 19, 2013 Permalink | Reply

   திருப்புகழ் ஓதுவதன் சிறப்பை அருணகிரிநாதர் திருத்தணிகைத் திருப்புகழில் அருமையாகக் கூறுகிறார்.
   ”சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ் செகுத்தவ ருயிர்க்குஞ் சினமாக,
   சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பென் றறிவோம்யாம்;
   நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும் நிசிக்கருவறுக்கும் பிறவாமல்
   நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும் நிறைப்புக ழுரைக்குஞ் செயல்தாராய்.”

   வள்ளலாரோ”உய்யும் பொருட்டுன் திருப்புகழை உரையே னந்தோ வுரைக்கடங்காய்” எனத் தணிகைச் செஞ்சுடரிடம் வருந்துகிறார். மேலும்,”அருணகிரி பாடும் நின்னருள்தோய் புகழைப் படியேன் பதைத் துருகேன் பணியேன் மனப்பந்தம் எல்லாம் கடியேன் என் செய்வேன் என் காதலனே” என உருகுகிறார். திருப்புகழும் அருட்பாவும் இரு கண்கள்.

  • Arun Rajendran 12:24 pm on June 19, 2013 Permalink | Reply

   ஜிரா சார்,

   அருணகிரிநாதர் காரணப் பெயர் மாதிரி தெரியுதுங்க.. சுருக்கமா ஒரு குறிப்பும் முடிந்தால் கொடுங்க..படிக்கிற ஆர்வத்தத் தூண்டி இருக்கீங்க… திருப்புகழையும் என்னோட அட்டவனைல சேர்த்திக்கிறேன்

   இவண்,
   அருண்

  • amas32 (@amas32) 12:53 pm on June 19, 2013 Permalink | Reply

   //திருப்புகழில் இப்போது கிடைத்திருப்பது 1307 பாடல்கள்தான். இன்னும் பல்லாயிரம் பாடல்கள் இருந்ததாகவும் அவை மறைந்து போனதாகவும் கூறுகிறார்கள்.//

   நீங்கள் இங்கே நாலு வரி நோட்டில் இந்த இருநூறு நாட்களில் பதிந்த பாடல்கள் நாளை ஒரு ரெபரன்சுக்கு நிச்சயம் பலருக்கு உதவப் போகிறது.

   உங்கள் டாபிக் ஜிரா! சூப்பர் பதிவு 🙂 அனுபவித்துப் படித்தேன் 🙂 நன்றி.

   amas32

  • rajnirams 10:07 pm on June 19, 2013 Permalink | Reply

   முதலில் உங்களுக்கெல்லாம் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
   சூப்பரான பதிவு. இதுவரை நான் அறியாத அரிய தகவல்கள்.அருணகிரிநாதரின் பெருமைகளையும் திருப்புகழின் சிறப்புகளையும் அருமையாக “சுட்டி”காட்டியதற்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்.

 • என். சொக்கன் 10:06 pm on May 4, 2013 Permalink | Reply  

  விருந்தினர் பதிவு : நுதல் 

  • பாடல் : மாசறு பொன்னே வருக
  • படம் : தேவர் மகன்
  • எழுதியவர் : வாலி

  கோல முகமும்,

  குறுநகையும், குளிர் நிலவென

  நீலவிழியும் பிறை நுதலும்

  விளங்கிடும் எழில்!

  நுதல் : இந்த வார்த்தை இப்பொழுது அதிக புழக்கத்தில் இல்லை.

  பொதுவாக இந்த வார்த்தை நெற்றியைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பாட்டிலும் கூட. நிலவைப் போன்ற நெற்றி என்ற பொருளில்

  Frontal Bone(derived from Forehead) – இதற்குத் தமிழில் நுதலெலும்பு என்றப் பெயரும் இருக்கிறது. ஆனால் புழக்கத்தில் “நெத்தியில்/மண்டையில் அடிப்பட்டிருச்சு” என தான் பேசிக்கொள்வோம். மருத்துவர்கள் கண்டிப்பாக ஆங்கிலத்தில் தான் குறிப்பிடுவர். ஆக,ஒரு நல்ல வார்த்தை காணாமல் போய்விட்டது.

  சங்க இலக்கியங்களில் பல இடங்களில் ”நுதல்” உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

  நற்றிணை

  சுரும்பு இமிர் சுடர் நுதல் நோக்கி,
  பெருங் கடற் சேர்ப்பன் தொழுது நின்றதுவே

  சுடர் விடும் நெற்றி என்ற பொருளில்

  அகநானூறு

  விரி மலர் மராஅம் பொருந்தி, கோல் தெரிந்து,
  வரி நுதல் யானை அரு நிறத்து அழுத்தி,

  வரிகளையுடைய நெற்றியைக் கொண்ட யானை.

  இவ்வளவு நல்ல வார்த்தை தமிழ்சினிமாவில் அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. இருந்தால் சொல்லுங்கள். ”முதல்” “இதழ்” “நுதல்” என ரைமிங் அழகா வருதே :))

  இதழ் முத்தம் ,கணவன்-மனைவி,காதலன்-காதலி இடையே தான் பகிரமுடியும்.

  நுதல் முத்தம் , யாரும் யாரிடமும் பகிரலாம். :))

  பின்குறிப்பு : இது சம்பந்தமாக இணையத்தில் தேடியப்போது , இந்த லிங்க் கிடைத்தது. இதை எழுதியவர் ”நுதல்” என்ற வார்த்தைக்கு “கண்விழி”தான் பொருத்தமாக இருக்கும் என சில உதாரணங்களுடன் விளக்குகிறார். கொஞ்சம் பெரிய பதிவு. கமெண்ட்ஸையும் படிக்கவும்.

  http://thiruththam.blogspot.sg/2010/07/blog-post.html

  காளீஸ்

  பிறந்து வளர்ந்தது நெல்லை மாவட்டம் புளியங்குடி.திருவண்ணாமலையில் எஞ்சனியரிங். Contact Center industry(Voip / IVR)யில் வேலை.சென்னையில் 7 வருடங்கள். இப்பொழுது சிங்கப்பூரில்.

  பக்கத்துவீட்டில் தினத்தந்தி,விகடன்,குமுதம் பஸ் பயணங்களில் ராஜேஷ்குமார் என ஆரம்பித்த வாசிப்பு, வலைத்தள அறிமுகத்திற்குப்பிறகு கொஞ்சம் பரந்து விரிந்திருக்கிறது. ட்விட்டரில் 140க்குள் எழுத ஆரம்பித்து இப்பொழுது இங்கே வலைப்பதிவுவரை வந்திருக்கிறது : http://eeswrites.blogspot.sg/

   
  • penathal suresh (@penathal) 11:07 pm on May 4, 2013 Permalink | Reply

   தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே..

   தமிழ்த்தாய் வாழ்த்தை மறந்துட்டீங்களே சார்!

  • anonymous 3:21 am on May 5, 2013 Permalink | Reply

   கவிஞர் வாலியின் “நுதல்” கொண்டு “நுதலியது” (துவங்கியது) அழகு, காளீஸ்

   குளிர் நிலவென – நீலவிழியும், பிறை நுதலும் -ன்னு தானே ஒரு சந்தம் அமையும் இந்த வாலி பாட்டில்!
   வாலி எத்தனையோ முருகன் பாட்டு எழுதி இருக்காரு; ஆனா அன்னையின் பாட்டு?

   வாலியின் ஆரம்பமே முருகன் பாட்டு தான் – “கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும், கந்தனே உன்னை மறவேன்”
   -ன்னு Railway Station -இல் எழுதி TMS கிட்ட குடுத்தது, அதுவே அவர் சினிமா வருகைக்கும் கட்டியம் கூறியது;

   வாலி எழுதிய அன்னையின் பாட்டில் மிகச் சிறந்தவை இந்த ரெண்டு தான்
   = மாசறு பொன்னே வருக & ஜனனி ஜனனி
   —–

   தமிழில், “நுதலுதல்” -ன்னா = சொல்லத் துவங்குதல்;
   அதாச்சும் முன்னுரை;

   முகத்துக்கு முன்னுரை = நெற்றி ; அதனால் “நுதல்” -ன்னு தீந்தமிழில் வழங்கினார்கள்;

   நெற்றியில் என்ன இட்டுக்கிட்டு வந்தாலும், அதான் பளிச் -ன்னு முதலில் தெரியும்; அதுவே முன்னுரை; அப்பறம் தான் வைரக் கம்மல் எல்லாம்:)
   —-

   “சொல்லு” என்ற சொல்லுக்குப் பல பெயர்கள், தமிழில்

   =அறை, இயம்பு, உரை, கிள,
   =கூறு, சாற்று, செப்பு, சொல்,
   =பகர், பறை, பன்னு, புகல்,
   =பேசு, மிழற்று, மொழி, விளம்பு
   =அந்த வரிசையில், நவில், நுவல், “நுதல்”

   ஒவ்வொன்னுத்துக்கு நுண்ணிய வேறுபாடு இருக்கு…
   “உரை” -ன்னா விளக்கமாச் சொல்லுதல்
   “நுதல்” -ன்னா சுருங்கச் சொல்லுதல்; முன்னுரையாச் சொல்லுதல்

   அப்படி வந்தது தான் “நுதல்” (நெற்றி)

   • anonymous 4:13 am on May 5, 2013 Permalink | Reply

    அந்தச் சுட்டியில் பொன். சரவணன் சொல்வது அத்துணை ஏற்புடைத்து இல்லீங்க:)

    இதுக்கு முன்னாடி “அல்குல் = புருவம்” -ன்னும் தப்பாச் சொல்லி இருப்பாரு;
    *அல்குல் = பெண் உறுப்பு/ இடுப்பு
    *அல்குவதால் = அல்குல் (குறுகுதல்)
    http://goo.gl/sC67V

    நல்ல தமிழ்ச் சொல்லையெல்லாம்… “decency” என்கிற பேரில், மாற்றிப் பொருள் கொள்வதும்,
    தரவுகளே இல்லாமல், மொழி வழக்கத்தில் இருந்து விரட்டி விடுவதும்… தமிழுக்குப் பெருங் கேடாய்த் தான் முடியும்:(
    ஆக்கல் = அரிது; அழித்தல் = எளிது; All it takes is a post & few friends to propagate

    இதுல கூட பாருங்க;
    பசலை நுதல் (பசலை பாய்ந்த நுதல்);
    ஆனா, பசப்பும் = அழுவும் -ன்னு எடுத்துக்கிட்டு, நெத்தி அழுவாது, கண்ணு தான் அழுவும்-ன்னு எடுத்துக்கிட்டாரு:)

    முருகா, எங்கெங்கே, யாரு எப்படிச் சிதைக்கிறாங்க? -ன்னு பாத்துக்கிட்டா இருக்க முடியும்? உன் தமிழை, நீ தான் காப்பாத்திக்கிடணும்;

    காளீஸ், நீங்க சொன்ன நுதல் = நெற்றியே சரி; “நுதல் முத்தமே” அழகு:)

  • anonymous 3:51 am on May 5, 2013 Permalink | Reply

   நாமெல்லாம் முருகனைத் துதிக்கிறோம்;
   ஆனா முருகன், இன்னொருத்தரைத் துதிக்கிறானாம் = யாரை?

   மதிவாள் **”நுதல்”** வள்ளியைப் பின்
   துதியா விரதா… சுர பூபதியே
   -ன்னு அருணகிரியின் கந்தர் அநுபூதி; “நுதல் வள்ளி”-ம்பாரு;

   முருகன் = சரியான பொண்டாட்டி தாசன்:) மாமா, மாலவனைப் போலவே:)

   என்னைக்காச்சும் பூலோகம் போ -ன்னு சாபம் குடுப்பாரா திருமகளுக்கு? அந்தம்மா தான் கோச்சிக்கிட்டு போவாக; இவரு பின்னாலேயே கெஞ்சிக்கிட்டு ஓடீயாருவாரு:)

   வள்ளியின் காலையே பிடிப்பான் முருகன் = “குறமகள் பாதம் வருடிய மணவாளா”
   ஏன்-ன்னா, அவ “காத்திருப்பு” அப்படி;

   முருகன், தன்னை ஏத்துக்கிடுவானா? -ன்னு கூடத் தெரியாது; எது-ன்னாலும், “அவனே அவனே” -ன்னு கற்பனையா வாழ்ந்து சீரழிஞ்சவ;
   நடையா நடந்தவ… =அதான் “பாதம் வருடிய மணவாளா”

   முருகனுக்கு முன்னுரை = வள்ளி;
   முருகனுக்கே நெற்றி போன்றவள் = “நுதல் வள்ளி”
   ——-

   முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
   பைந்தொடிப் பேதை **”நுதல்”** -ன்னு குறள்

   அவன் அவளை இறுக்க அணைக்கிறான்;
   அவன் பாகங்கள் எல்லாம் அவள் பாகங்கள் மேல் = “அவிர்ப் பாகம்”
   அப்படியொரு ஆசை அந்த அணைப்பில்;

   திடீர்-ன்னு என்ன நினைச்சானோ தெரியல, அவளுக்கு வலிக்குமோ?-ன்னு இறுக்கத்தை லேசாத் தளர்த்துறான்;
   ஒடனே, அவ நெற்றி (நுதல்) பசலை பாய்ஞ்சிருச்சாம்:) அந்தச் சிறு பிரிவு/ விலகல் தாங்காம;

   அகத்தை = முகம் காட்டிக் குடுக்கும்
   முகத்தை = நெற்றி காட்டிக் குடுக்கும்;

   முகத்தை “நுதலும்” நுதல் வாழ்க!!

  • Kalees 7:46 am on May 5, 2013 Permalink | Reply

   விரிவான கமெண்ட்க்கு நன்றிங்க…

   “நுதுலுதல்-தொடங்குதல்-முன்னுரை-நெற்றி” இந்த தொடர்பு நல்லா இருக்கு 🙂

   அப்புறம் அந்த லிங்க் , ஒரு மாற்று யோசனை/கற்பனைங்கிற வகையில குடுத்திருந்தேன்.அவ்வ்ளவுதான். உங்களை மாதிரி விசயம் தெரிஞ்சவங்க முன்னெடுத்துப் போவீங்கன்னுதான் 🙂

  • Mohanakrishnan 5:40 pm on May 5, 2013 Permalink | Reply

   பாரதியின் வெள்ளை கமலத்திலே பாடலில் நுதல் சிந்தனை என்று வரும்.

   வேதத் திருவிழி யாள்,-அதில்
   மிக்கபல் லுரையெனுங் கருமையிட் டாள்,
   சீதக் கதிர்மதி யே-நுதல்
   சிந்தனையே குழ லென்றுடை யாள்,

  • என். சொக்கன் 9:09 am on May 6, 2013 Permalink | Reply

   Comment From Sushima (Sent Via Email):

   மிகப் பெரிய பதிவின் லிங்க் கொடுத்துவிட்டீர்கள் 🙂 நல்ல வார்த்தையைத் தேர்வு செய்து அழகாக விளக்கம் அளித்துள்ளீர்கள். சிவபுராணத்தில் வரும். பேச்சு வழக்கில் இல்லை தான். நெற்றி என்ற பொருள் மட்டும் தான் எனக்குத் தெரியும். லிங்க் பதிவில் நிறைய பொருள்கள் கொடுத்திருக்கிறார் அந்தப் பதிவின் ஆசிரியர்.
   நன்றி

   amas32

 • mokrish 10:43 am on January 30, 2013 Permalink | Reply  

  கேட்டதும் கற்றதும் 

  நண்பர் @nchokkan ‘ஒரு பாடலில் ஒரு வார்த்தை வேறு வார்த்தை போல் கேட்டது’ என்று சொல்லி அந்த புதிய வார்த்தையை ஒரு பதிவில் அழகாக விளக்கியிருந்தார். கான மயிலாட கண்டவுடன் சரி நாமும் ஜாலியாக இதே போல் வேறு பாடல்களை ஆராயலாம் என்று ஒரு முயற்சி.

  எனக்கு சில சந்தேகங்கள் – கவிஞரும் இசையமைப்பாளரும் சொல்வதை சில பல சமயங்களில் பாடகர்கள் சரியாக கேட்டுக்கொள்ளாமல் பாடுகிறார்களோ என்று சந்தேகம். அந்தமான் காதலி படத்தில் நினைவாலே சிலை செய்த பாடலில் திருக்கோவிலை ‘தெருக்கொவிலாய்’ பாடியதும் , பூவிழி வாசலில் யாரடி வந்தது என்ற பாடலில் கிளியே என்பதற்கு பதில் கிலியே என்று பாடியதும் ஏன் என்று புரியவில்லை. அப்போது ரொம்பவும் உறுத்தியது ஆனால் இப்போது எல்லாமே ‘பருவாயில்லை’ தான். சமீபத்தில் நெஞ்சுக்குள்ளே ஒம்ம என்ற கடல் பாடலில் கூட ‘வெல்ல பார்வையா வெள்ள பார்வையா என்று ஒரு விவாதம் நடந்தது.
   
  மௌன ராகம் படத்தில் வாலியின்  ‘நிலாவே வா’ என்ற பிரபல பாடலில் http://www.youtube.com/watch?v=-RdltrvAvJ8
   
  பூஞ்சோலையில் வாடைக்காற்றும் ஆட சந்தம் பாட 
  கூடாதென கூறும் பூவும் ஏது மண்ணின் மீது 
  ஒரேயொரு பார்வை தந்தாலென்ன தேனே 
  ஒரேயொரு வார்த்தை சொன்னாலென்ன மானே 
   
  என்ற வரிகளை கேட்டவுடன் குழப்பம். காலங்காலமாய் பார்வைக்கு மானும் சொல்லுக்கு தேனும் தானே? அங்கங்கே மானே தேனே போட்டுக்க என்று சொன்ன கவிஞர் மானையும் தேனையும் மாற்றி போட்டுவிட்டரா? இருக்க முடியாதே. இதே பாடலில் முன்னால் வரும் வரிகளில் ‘பூந்தேனே நீ தானே சொல்லில் வைத்தாய் முள்ளை‘ என்று தேனையும் சொல்லையும் இணைத்து பாடிய வாலி ஏன் இப்படி மாற்றி போட வேண்டும்?அல்லது இசையமைத்தவரும் பாடியவரும் மெட்டில்  உட்கார்ந்தால் போதும் என்று interchange செய்தார்களா? தெரிந்தே செய்தார்களா? Poetic  Liberty என்பது இதில் உண்டா?
   
  சரி விடுங்கள். வேறு பாடல் பார்ப்போம்.   ராமு என்ற படத்தில் ஒரு பாடல். ஒரு பெண் ஒரு குழந்தையிடம் நான் உனக்கு சிற்றன்னையாக வர வேண்டும் என்று கூறும் பாடல் http://www.youtube.com/watch?v=1rC0ny8Q7bA
   
  முத்துசிப்பி மெல்ல மெல்ல திறந்து வரும் 
  முத்தம் ஒன்று சத்தம் இன்றி பிறந்து வரும் 
  அம்மம்மா அப்பப்பா 
  தித்திக்கும் சேதி வரும் 
   
  இதில் தித்திக்கும் சேதி என்பது எனக்கு ‘சித்திக்கும் தேதி’ என்று கேட்டது. அப்படியே கேட்டாலும் பொருள் மாறாமல் மெட்டும் குலையாமல் இருப்பது போல் தோன்றுகிறது.பாடலில் இருப்பது கவிதையாய் இருக்கிறது. எனக்கு கேட்டது கதை சொல்கிறது.
   
  அடுத்து சின்ன சின்ன ஆசை பாடலில் 
   
  பனித்துளிக்குள் நானும் படுத்துக்கொள்ள ஆசை 
  சித்திரைக்கு மேலே சேலை கட்ட ஆசை 
   

  என்ற வரிகள். முதலில் இது எனக்கு ‘சிற்றிடைக்கு மேலே சேலை கட்ட ஆசை’ என்றே கேட்டது. சரியாகத்தானே இருக்கிறது என்று நண்பனிடம் வாதாடி தோற்றுபோனேன்.  சித்திரை தான் இன்னும் அழகான அர்த்தம் கொடுக்கிறது.

  மோகன கிருஷ்ணன்

  060/365

   
  • Saba-Thambi 8:09 pm on January 30, 2013 Permalink | Reply

   வேற் று மொழி பாடகர்களின் உச்சரிப்பு ல,ள,ழ வரிசையிலும், ர,ற வரிசையிலும் காட்டிக் கொடுத்துவிடும் ஆனாலும் அப் பாடகரின் குரல் இனிமை இரசிகர்களின் மனதை வென்று விடும்.
   பூவிழி வாசலில் யாரடி வந்தது என்ற பாடலில் கிளியே அதற்கு நல்ல உதாரணம்

   • amas32 10:12 pm on January 30, 2013 Permalink | Reply

    இப்பொழுது வரும் பலப் பாடல்களில் வார்த்தைகள் எனக்குச் சரியாகவே புரிவதில்லை. காரணங்கள் இரண்டு. ஒன்று தவறான உச்சரிப்பு, இரண்டாவது வார்த்தைகளை மூழ்கடிக்கும் சத்தமான இசை. பழைய பாடல்களில் அந்த பிரச்சினையே கிடையாது. பி.சுசிலா, டி.எம்.எஸ்., பி.பி. ஸ்ரீனிவாஸ் போன்றவர்கள் மெல்லிசை மன்னர் இசையில் பாடியவை துல்லியமாகக் காதில் ஒலிக்கும்! இப்போ தமிழல்லாத வார்த்தைகள் பாடலின் ஆரம்பத்தில் வருவது இன்னும் தலை வேதனையாக உள்ளது 🙂 அனால் அதுவும் இசை தான். இரசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்!

    amas32

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel