விருந்தினர் பதிவு: காதல் மயக்கம் 

காதலை பற்றி பல்வேறு கவிஞர்கள் பலவிதமாக பாடியிருக்கிறார்கள் –

உலகமெங்கும் ஒரே மொழி,உண்மை பேசும் காதல் மொழி-கவியரசர் கண்ணதாசன்.

காதல் எனும் தேர்வெழுதி  என்று தேர்வுக்கு ஒப்பாக எழுதியவர் காவியக்கவிஞர் வாலி.

காதலித்துப் பார்-உன்னை சுற்றி ஒளி வட்டம் தோன்றும்,உனக்கும் கவிதை வரும் என்று கவிதை எழுதியவர் கவிப் பேரரசு வைரமுத்து.

திரைப்படங்களில் காதல் வயப்பட்டவர்களின் சிந்தனையை நம் கவிஞர்கள் தங்கள் கற்பனையில் வெளிப்படுத்தும் விதம் அலாதியானது.இந்த வகையில் ஆயிரக்கணக்கான பாடல்கள் இருந்தாலும் எனக்கு உடனே தோன்றியது இந்த மூன்று பாடல்கள். உணவிருந்தாலும் உண்பதற்கு மனமிருக்காது பசியுமிராது என்பதை எளிமையாக கூறும் பாலிருக்கும் பழமிருக்கும் பாடல்.  

“கட்டவிழ்ந்த கண்ணிரண்டும் உங்களை தேடும்,பாதி கனவு வந்து மறுபடியும் கண்களை மூடும் என்று” தன் நிலையை எடுத்துசொல்வது மட்டுமல்லாமல்  

                              “காதலுக்கு ஜாதியில்லை மதமுமில்லையே,

                                கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே 

                                 வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே “என்று காதலுக்கு வக்காலத்து வாங்கும் கவியரசரின் வரிகள் நிறைந்த பாடல் 

                                பாடல்:பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது 

                                 படம்- பாவ மன்னிப்பு 

                                  இயற்றியவர்-கவியரசர் கண்ணதாசன் 

                                 பாடியவர்:பி.சுசிலா 

                                   இசை-விஸ்வநாதன் ராமமூர்த்தி 

இரண்டாவது பாடல்-தன் இதயம் தொலைந்து போனதாக கூறும் “என்னவளே” பாடல்:-காதலென்றால் பெரும் அவஸ்தையென்று உன்னை கண்டதும் கண்டு கொண்டேன்-கழுத்து வரை எந்தன் காதல் வந்து இரு கண்விழி பிதுங்கி நின்றேன்.”வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் வசப்படவில்லையடி 

                                               வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு உருண்டையும் 

                                                உருளுதடி, என்றும்  ,காதலுக்கு காத்திருக்கும் தருணத்தை-“காத்திருந்தால் எதிர்பார்த்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமடி” என்று தன் உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.”

                                                                பாடல்-என்னவளே அடி என்னவளே 

                                                                 படம்-காதலன் 

                                                                 இயற்றியவர்-கவிப்பேரரசு வைரமுத்து 

                                                                  பாடியவர்-உன்னிகிருஷ்ணன் 

                                                                   இசை-ஏ.ஆர்.ரகுமான்.

மூன்றாவது பாடல் : “விழிகளின் அருகினில் வானம்-தொலைவினில் தொலைவினில் தூக்கம்,இது ஐந்து புலன்களின் ஏக்கம்,என் முதல் முறை அனுபவம்.”தன்னாலும் பேச முடியவில்லை,பிறர் கேட்பதும் தன் காதில் விழவில்லை,என்ற விக்கித்து நிற்கும் நிலையை வெளிப்படுத்தும் வார்த்தை வரிகள் 

“கேட்காத ஓசைகள்,இதழ் தாண்டாத வார்த்தைகள்,இமை மூடாத பார்வைகள்-இவை நான் கொண்ட மாற்றங்கள்” அருமை.மேலும் “பசி நீர் தூக்கம் இல்லாமல் உயிர் வாழ்கின்ற மாற்றங்கள்” என்று அதிசயித்து  “இருதயமே துடிக்கிறதா-துடிப்பது போல் நடிக்கிறதா”என்று வெளிப்படுத்தும் விதம் அபாரம்.

                                                             பாடல்-விழிகளின் அருகினில் வானம் 

                                                              படம்-அழகிய தீயே 

                                                             இயற்றியவர்-கவிவர்மன் 

                                                              இசையமைத்து பாடியவர்-ரமேஷ் விநாயகம்.

        பாடல்களுக்கான சுட்டிகள்:

                 பாலிருக்கும் பழமிருக்கும் –      http://youtu.be/xqofnfgytws

                  என்னவளே அடி என்னவளே:   http://youtu.be/tvZi0fd_1IY

                 விழிகளின் அருகினில் வானம்: http://youtu.be/nb_v7W4HfCw

பின்குறிப்பு: “விழிகளின் அருகினில் வானம்”பாடலை எழுதிய கவிவர்மன், என் சொந்த அண்ணன்!

நா. ராமச்சந்திரன்

பிறந்தது கடலூர், என்றாலும் வளர்ந்ததெல்லாம் சிங்காரச் சென்னைதான். ஒரு தனியார் நிறுவனத்தில் பணி. தற்போது பெங்களுரில் வசிக்கிறேன்.