Updates from June, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • mokrish 9:40 am on June 30, 2013 Permalink | Reply  

  அன்னமிட்ட கைகளுக்கு 

  நடிகர் சந்தானம் உரத்த குரலில் ‘நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டையில் உள்ள நாய்க்குதான் கிடைக்கும் என்று இருந்தால் அதை யாராலும் தடுக்க முடியாது’ என்று டிவியில் தீயாய் வேலை செய்து கொண்டிருந்தார்.  முதலில் ஒரு involuntary சிரிப்பு வந்தாலும் கொஞ்சம் யோசிக்க வைத்த  வரிகள்.

  இது சூப்பர் ஸ்டார் பிரபலப்படுத்திய ‘ஆண்டவன் கொடுக்க நினைத்ததை யாரும் தடுக்க முடியாது’ என்ற கருத்தின் இன்னொரு வடிவம். நாகூர் என்ற சொல் ஒரு clue போல் தோன்ற, அந்த நூல் பிடித்து சென்றால் திருக்குர்ஆன் வாசகம் பற்றி வாலி எனக்குள் MGR என்ற தொடரில் எழுதிய செய்தி ஒன்று கிடைத்தது

  ‘அவரவர்க்கான அரிசியில் அவரவர் பெயர் எழுதப்பட்டிருக்கிறது!’ என்கிறது திருக்குர்ஆன்.  நீ – வாயைத் திறந்து வைத்துக் கிடந்தாலும் உனக்கல்லாத உணவு உன் வாய்க்கு வாய்க்காது; நீ – வாயை மூடிக் கொண்டு உட்கார்ந்திருந்தாலும், உனக்கான அரிசியை ஆண்டவன் உன் வாயை வலியத் திறந்து ஊட்டி விடுவான். இந்த மறைவாசகத்தை நாம் மறுதலிப்பதற்கில்லை!’

  வாலி இதை ஒரு கொடியில் இரு மலர்கள் என்ற படத்தில் ‘உப்பைத் தின்னவன் தண்ணி குடிப்பான்’ என்ற பாடலில் (இசையமைத்து பாடியவர் எம்‌எஸ்‌வி)  http://www.youtube.com/watch?v=T6743o-yK7U

  அரிசியின் மேலே அவனவன் பேரை

  ஆண்டவன் எழுதி வைப்பான் – அதை

  அடுத்தவன் யாரும் கெடுப்பதற்கில்லை

  அவனவன் தின்று தீர்ப்பான்

  எவரெவருக்கு என்னென்ன தேவை

  இறைவன் கொடுக்கின்றான் – அதை

  அவசர மனிதன் ஆத்திரப்பட்டு

  அதற்குள் எடுக்கின்றான்

  என்று பதிவு செய்கிறார். படத்தில் MSV கைதிகளிடம் பேசுவது போல் காட்சி.  ‘உங்களுக்காக கவிஞர் வாலி ஒரு அற்புதமான பாடலை எழுதியிருக்கிறார்’ என்று பாராட்டிவிட்டு பாடுவார்.

  நல்ல வரிகள் தான். ஆனாலும் கொஞ்சம் நெருடல். ஒவ்வொரு தானிய மணியிலும் அதை உண்ணப் போகிறவரின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது என்றால் என்ன அர்த்தம்? கோடிக்கணக்கானவர்கள் உணவு கிடைக்காமல் பட்டினி இருப்பது நமக்கு தெரியும். அவர்கள் பெயர் இருக்கும் உணவு  எங்கே ? அவர்கள் பெயர்கள் எல்லாம் விட்டுப்போக இது என்ன வாக்காளர் பட்டியலா?

  எல்லாருக்கும் உணவு கிடைக்கும்படி செய்துவிட்டு அதன் பிறகு அவரவர் பேர் எழுதிய அரிசியை க்யூவில் வந்து ஆதார் கார்ட் காட்டி வாங்க வைக்கலாம் . பல பேர் பட்டினி கிடைக்கும்போது இந்த வரிகள்  சரியா? அல்லது இதற்கு வேறு அர்த்தமா? மதங்களும் இறைவன் மொழியும் உணர்த்தும் பொருள் என்ன?

  • இவ்வுலகத்தில் எவ்வளவு மனிதர்கள் தோன்றினாலும் அவர்களுக்கான உணவு இறைவனிடத் திலிருந்து கிடைக்கும் என்று சிலர் இந்த திருக்குர்ஆன் வரியை  பகிர்ந்து உண்ணுதல் என்ற பொருளில் விளக்குவர்.

  • பைபிள் காட்சி ஒன்று – இயேசுவின் போதனைகள் நடக்கும் இடத்தில சுமார் 5000 பேர் கூடுகின்றனர். இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து உணவை பகிர்ந்து  அதை மக்களுக்கு கொடுக்குமாறு கூறினார். எல்லா மக்களும் திருப்தியாக உண்டனர். சாப்பிட்டது போக மீதியும் இருந்தது. அதை பன்னிரண்டு கூடைகள் நிரப்பினர். (லூக் 9: 10-17)

  • சிவன் கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமியில் அன்னாபிஷேகம் செய்து அந்த அன்னம், தயிர் கலந்து மக்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அதில் ஒரு பாகம், அருகிலுள்ள  குளத்தில் கரைக்கப்படும். ஏன் அப்படி?

  பல்குஞ் சரந்தொட்டு எறும்பு கடையானதொரு

  பல்லுயிர்க் குங் கல்லிடைப் பட்டதேரைக்கும்

  அன்றுற் பவித்திடும் கருப் பையுறு சிவனுக்கும்

  மல்குஞ் சராசரப் பொருளுக்கும் இமையாத

  வானவர் குழாத்தினுக்கும் மற்றுமொரு மூவருக்கும்

  யாவருக்கும்

  என்ற அபிராமி பட்டர்  பாடல் வரிகளுக்கு ஏற்ப, இறைவனது பிரசாதம் எறும்பில் தொடங்கி நீர்வாழ் உயிரிகள், மனிதர்கள் என சகல ஜீவராசிகளுக்கும் இதன் மூலம் சென்றடைகிறது

  வள்ளுவர் ஈகை பற்றி சொல்லும்போது பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை என்று குறிப்பிடுகிறார்.பசித்திருக்கும் ஒருவனுக்கு உணவு கொடுக்கும்போது அவனது அரிசியில் பெயர் எழுதும் வாய்ப்பு நமக்கு கிடைக்கும் என்று தோன்றுகிறது.

  மோகனகிருஷ்ணன்

  211/365

   
  • D sundarvel 10:01 am on June 30, 2013 Permalink | Reply

   Nice interpretation. Remembering “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் உயிர்கள் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”.

  • சிவா கிருஷ்ணமூர்த்தி 12:30 pm on June 30, 2013 Permalink | Reply

   //பசித்திருக்கும் ஒருவனுக்கு உணவு கொடுக்கும்போது அவனது அரிசியில் பெயர் எழுதும் வாய்ப்பு நமக்கு கிடைக்கும் என்று தோன்றுகிறது.//
   சரியாக வந்தடைந்துவிட்டீர்கள், அவ்வளவுதான் மெசேஜ்…

  • amas32 7:36 pm on June 30, 2013 Permalink | Reply

   As an off shoot of what you have written, ஒருத்தன் பெண்டாட்டியை இன்னொருத்தன் கொண்டு போக முடியாது என்னும் வசனமும் என் நினைவுக்கு வந்தது 🙂 அதாவது என்று எழுதப்பட்டுள்ளதோ அது மாறப் போவதில்லை.

   ஆனால் நீங்கள் கூறியிருக்கும் இந்த வரிகளில் உள்ளப் பொருள் அருமை!
   //பசித்திருக்கும் ஒருவனுக்கு உணவு கொடுக்கும்போது அவனது அரிசியில் பெயர் எழுதும் வாய்ப்பு நமக்கு கிடைக்கும் என்று தோன்றுகிறது.//

   amas32

 • என். சொக்கன் 2:01 pm on June 29, 2013 Permalink | Reply  

  நானே எனக்கு என்றும் நிகரானவன்! 

  • படம்: முரட்டுக் காளை
  • பாடல்: பொதுவாக என் மனசு தங்கம்
  • எழுதியவர்: பஞ்சு அருணாசலம்
  • இசை: இளையராஜா
  • பாடியவர்: மலேசியா வாசுதேவன்
  • Link: http://www.youtube.com/watch?v=dJeW9LKQhMQ

  பொதுவாக என் மனசு தங்கம், ஒரு

  போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்!

  உண்மையே சொல்வேன், நல்லதே செய்வேன்,

  வெற்றி மேல் வெற்றி வரும்!

  அன்றுமுதல் இன்றுவரை பல ஹீரோக்களுக்கு இதுபோன்ற “மாஸ் ஓபனிங்” பாடல்களைக் கேட்டிருக்கிறோம். அதில் கதாநாயகர் தன்னுடைய புகழைத் தானே பலவிதமாகப் பாடிக்கொள்வார். சுற்றியிருக்கிறவர்கள் கோரஸ் குரலில் அதற்கு “ஆமாம் சார்” போடுவார்கள்.

  இது ஏதோ புதுப்பழக்கம் என்று எண்ணி முகம் சுளிக்காதீர்கள். நம்முடைய இலக்கியங்களில் இது நிறைய உண்டு. அதற்கென்று தனியாக இலக்கணமும் வகுக்கப்பட்டிருக்கிறது.

  ”தண்டியலங்காரம்” என்ற இலக்கண நூல், இந்த வகைப் பாடல்களைத் “தன் மேம்பாட்டு உரை அணி” என்று அழைக்கிறது. இதற்கான வரையறை: ”தான், தன் புகழ்வது தன் மேம்பாட்டு உரை” அதாவது, ஒருவர் தன்னைத் தானே புகழ்ந்துகொள்வது, தன்னுடைய மேம்பாட்டை / உயர்வைச் சொல்வது.

  சினிமா ஹீரோக்கள்மட்டுமல்ல, நாம் எல்லாருமே இந்தத் “தன் மேம்பாட்டு உரை அணி”யில் ஓரிரு வரிகளாவது நிச்சயம் எழுதியிருப்போம், குறைந்தபட்சம் வேலைக்கு அப்ளிகேஷன் போடும்போதும், கல்யாணத்துக்கு மாப்பிள்ளை அல்லது பெண் தேடும்போதும்! 😉

  ***

  என். சொக்கன் …

  29 06 2013

  210/365

   
  • rajnirams 2:36 pm on June 29, 2013 Permalink | Reply

   “தன் மேம்பாட்டு உரை அணியை”எளிமையாக எடுத்து சொல்லியிருக்கிறீர்கள்.கடைசியில் குறைந்தபட்சம் வேலைக்கு அப்ளிகேஷன் போடும்போதும், கல்யாணத்துக்கு மாப்பிள்ளை அல்லது பெண் தேடும்போதும் என்ற உண்மையான பஞ்ச் :-)) சூப்பர்

  • amas32 3:43 pm on June 29, 2013 Permalink | Reply

   :-)) self promotion! இக்காலத்தில் மிகவும் தேவையான ஒன்று தான் 🙂 இது ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் அதிகம் காணப்படும். பண்டை பாடல்களிலேயும் இது உண்டு என்று இன்று அறிந்து கொண்டேன். இன்று .நம்ம ஊரில் நம்மைக் கொஞ்சம் உயர்த்திச் சொல்லிக்கொண்டாலும் சுய தம்பட்டமாகத் தெரியும். நம் பண்பாட்டுப்படி அடக்கமாக இருப்பது தான் உயர்வு. ஆனால் வெளிநாட்டு தொடர்பு அதிகரித்துள்ள இக்காலத்தில் நம்மை உயர்த்தி நாமே சொல்லாவிட்டால் ஏறி மிதித்துக் கொண்டுப் போய் விடுவார்கள்!

   amas32

 • G.Ra ஜிரா 10:54 am on June 28, 2013 Permalink | Reply  

  மோடிபற்றிக் கொஞ்சம் 

  சில சொற்களை நாம் அடிக்கடி பயன்படுத்தியிருப்போம். ஆனால் அதற்கு என்ன பொருள் என்று அவ்வளவாக சிந்தித்திருக்க மாட்டோம். அப்படியொரு சொல்லைத்தான் நாம் இன்று பார்க்கப் போகிறோம்.

  தொலைக்காட்சியில் “வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எந்தன் கதையே” என்ற பாடல் ஓடிக்கொண்டிருந்தது. அந்தப் பாடலில் வந்த ஒரு வரிதான் என்னுடைய சிந்தனையைத் தூண்டி விட்டது.

  அனுதினம் செய்வார் மோடி
  அகமகிழ்வார் போராடி

  இந்த வரியில் வந்த மோடி என்ற சொல்லைத்தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம்.

  பொதுவாகவே மோடி என்றால் அதுவொரு வித்தை என்ற அளவுக்கு நமக்குத் தெரியும். இந்தப் பாட்டிலும் அப்படித்தான் வருகிறது. அனுதினமும்(ஒவ்வொரு நாளும்) கணவன் மோடி வித்தை செய்து ஏமாற்றுகிறார் என்று பெண் குற்றம் சாட்டுவது போல பாட்டில் வருகிறது.

  சிலர் மோடி வித்தையை கண்கட்டு வித்தை என்றும் சொல்வார்கள். எப்படியோ, மோடி என்றால் ஒரு வித்தை. அதை வைத்து மக்களை ஏமாற்றலாம் (அல்லது) மகிழ்விக்கலாம் என்று தெரிகிறது.

  சரி ஐயா! மோடி என்ற சொல் எங்கிருந்து வந்தது?

  அதைப் புரிந்து கொள்ள கொஞ்சம் காலத்தால் பின்னோக்கிப் போக வேண்டும்.

  அந்தக் காலத்தில் மந்திர தந்திர வித்தைகளைக் கற்றுக் கொண்டவர்கள் மாகாளிக்கு நச்சு பொருட்களை இட்டு வேள்வி செய்து தீய மந்திரங்களை உச்சாடணம் செய்து பலி கொடுப்பார்களாம். அந்த பலியை ஏற்றுக் கொண்ட காளி குறிப்பிட்ட காலம் வரைக்கும் அவர்கள் இட்ட ஏவல்களை செய்வாளாம்.

  இந்த சக்திகளை வைத்துக் கொண்டு ஏதேதோ வித்தைகளைக் காளியின் அருளால் செய்து மக்களையும் மன்னர்களையும் மருட்டி வெருட்டி சொகுசாக வாழ்வார்களாம் அந்த மந்திரவாதிகள்.

  இப்படி காளியின் துணை கொண்டு செய்யப்படும் வித்தைக்கு காளியின் பெயரே அமைந்தது. ஆம். காளிக்கு மோடி என்றும் ஒரு பெயருண்டு.

  இப்போது புரிந்திருக்குமே மோடி வித்தை என்ற பெயர் வரக் காரணம்.

  காளியை மோடி என்று இலக்கியங்களிலேயே அழைத்திருக்கிறார்கள். அப்பரும் அருணகிரிநாதரும் கலிங்கத்துப்பரணி எழுதிய செயங்கொண்டாரும் மோடி என்ற பெயரில் காளியை அழைத்திருக்கிறார்கள்.

  உவையுவை உளஎன் றெண்ணி
  உரைப்ப தென்உரைக் கவந்த
  அவை அவை மகிழ்ந்த மோடி
  அவயவம் விளம்பல் செய்வாம்
  நூல் – கலிங்கத்துப்பரணி
  பாடியவர் – செயங்கொண்டார்

  காளிக்குப் படையல் வைக்கப்பட்டிருக்கிறது. படையல்களைப் பார்க்கிறாள் அன்னை. இருக்கின்ற எல்லாவற்றையும் கண்டு மகிழ்ந்து ஏற்றுக் கொள்கின்றாளாம் காளி. ஆனால் இந்தப் பாடலில் காளி என்ற பெயருக்குப் பதிலாக மோடி என்ற பெயரைப் பயன்படுத்தியிருக்கிறார் செயங்கொண்டார்.

  போகமார் மோடி கொங்கை
  புணர்தரு புனிதர்போலும்
  வேகமார் விடையர் போலும்
  வெண்பொடியாடு மேனிப்
  பாகமா லுடையர் போலும்
  நூல் – தேவாரம்
  பாடியவர் – அப்பர் (திருநாவுக்கரசர்)

  மோடி(காளி)யின் கொங்கை தனைப் புணர்ந்து போகத்தையும் ரசிக்கும் சிவனார் என்று திருநாவுக்கரசர் பாடுகிறார்.

  அருணகிரிநாதரை எதிர்த்த சம்பந்தாண்டானும் ஒரு மோடி வித்தைக்காரர்தான். காளி உபாசகராக இருந்து அருணகிரி மேல் காளியை ஏவி விட்டார். ஆனால் முருகன் அருளால் அருணகிரிநாதரும் பிழைத்தார். தமிழும் பிழைத்தது. அத்தோடு சம்பந்தாண்டானின் ஏவல் காலம் முடிவடைந்ததால் அதற்குப் பின்னர் காளி உதவவில்லை.

  இதுதான் மோடி வித்தையின் கதை.

  பதிவில் இடம் பெற்ற பாடல்
  பாடல் – வாராயோ வெண்ணிலாவே
  பாடியவர்கள் – ஏ.எம்.ராஜா, பி.லீலா
  பாடல் வரிகள் – தஞ்சை ராமையாதாஸ்
  இசை – எஸ்.ராஜேஸ்வரராவ்
  படம் – மிஸ்ஸியம்மா
  பாடலின் சுட்டி – http://youtu.be/1AbSd-UYoyo

  அன்புடன்,
  ஜிரா

  209/365

   
  • rajnirams 2:40 pm on June 29, 2013 Permalink | Reply

   ஓ,புதிய தகவல்-மோடி என்பதற்கு “காளி”என்றும் பொருள் என்று.நன்றி.-அதான் மோடின்னா எதிர்கட்சிகளுக்கு நாக்கு தள்ளுதோ:-))

 • mokrish 11:39 am on June 27, 2013 Permalink | Reply  

  இதுதான் எங்கள் வாழ்க்கை 

  அடிக்கடி பார்க்கும் காட்சிதான். ஆபிசில் ஏழாவது மாடியில் ஜன்னலில் திடீரென்று முளைக்கும் முகங்கள். கட்டடத்தின் உச்சியில் இருந்து தொங்கும் கயிற்றில் இணைத்துக்கட்டிகொண்டு,  வெளிப்புற கண்ணாடிகளை  துடைப்பவர்கள்.

  எவ்வளவு அபாயமான வேலை? Occupational hazard, safety என்று நிறைய ஜல்லி அடித்தாலும் இது தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. இந்த தொழில் சார்ந்த இடையூறு / அபாயங்கள் பல வகைப்படும். இவை உடல் / மனம் இரண்டையும் பாதிக்கும். பஞ்சாலை அல்லது சிமெண்ட் ஆலைகளில் வேலை செய்பவர்கள் சுவாசிக்கும் மெல்லிய தூசு அவர்கள் உடல்நலம் கெடுக்கும்.

  திரைப்படங்களில் / பாடல்களில் இது பற்றி ஏதாவது இருக்குமா என்று தேடினேன். கண்ணில் பட்ட சில பாடல்கள். படகோட்டி படத்தில் வாலி எழுதிய தரை மேல் பிறக்க வைத்தான் என்ற மறக்கவே முடியாத ஒரு பாடல் (இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் டி எம் எஸ்)

  http://www.youtube.com/watch?v=Z6DKos7t_V4

  தரை மேல் பிறக்க வைத்தான்

  எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்

  கரை மேல் இருக்க வைத்தான்

  பெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான்

  என்று அலை கடல் மேலே அலையாய் அலைந்து உயிரை கொடுப்பவர்களின் வாழ்க்கை பற்றி எழுதுகிறார்

  கடல் நீர் நடுவே பயணம் போனால்

  குடிநீர் தருபவர் யாரோ

  தனியா வந்தோர் துணிவை தவிர

  துணையாய் வருபவர் யாரோ

  ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்

  ஒவ்வொரு நாளும் துயரம்

  ஒரு ஜாண்  வயிற்றை வளர்ப்பவர் உயிரை

  ஊரார் நினைப்பது சுலபம்

  நீண்ட கடல் பயணம் முடித்து திரும்பும் ஒரு மாலுமியின் நிலை பற்றி Samuel Taylor Coleridge எழுதிய The Rime of Ancient Mariner என்ற ஆங்கில கவிதை வரிகளைப் பாருங்கள்

  Water, water, everywhere,

  And all the boards did shrink;

  Water, water, everywhere,

  Nor  any drop to drink.

  கடலை நம்பி பிழைக்கும்  தொழில் மீன் பிடித்தல். மீனவர்களின் துயர் இன்றும் தொடரும் ஒரு அவலம். மிக ஆபத்தான வேலை என்று  United States Department of Labor குறிப்பிடுவது மீனவர்களைத்தான். அழகன் படத்தில் வரும் கோழி கூவும் நேரமாச்சு என்ற பாடலில் (இசை மரகதமணி பாடியவர்கள் சித்ரா மலேசியா வாசுதேவன், சீர்காழி சிவ சிதம்பரம்)  புலமைப்பித்தன் இந்த சோகத்தை பதிவு செய்கிறார். KB அடிக்கடி பயன்படுத்தும் ‘மேடை நிகழ்ச்சி’ உத்தியில் கதை சொல்லும் ஒரு பாடல்

  http://www.youtube.com/watch?v=q7AufD8pSPc

  காதலி சொன்னது வேதம் என்று

  புயல் வரும் வேளையில் அவன் போனான்

  இந்திய எல்லையை தாண்டும் போது

  பாவிகள் சுட்டதில் பலியானான்

  புலமைப்பித்தன் பாடலின் நடுவே போகிறபோக்கில் அழுத்தமாக இப்படி ஏதாவது சொல்வார். ‘ஏர் பூட்டி தோளில் வைத்து இல்லாமை வீட்டில் வைத்து’ என்று உழவன் வறுமையை சொல்வார். நாயகன் படத்தில் வரும் நான் சிரித்தால் தீபாவளி (இசை இளையராஜா பாடியவர்கள் வசந்தா எம் எஸ் ராஜேஸ்வரி) பாடலை கவனியுங்கள்.  http://www.youtube.com/watch?v=UH1yjlnWTu4

  எனது உலகில் அஸ்தமனம் ஆவதில்லை

  இங்கு இரவும் பகலும் என்னவென்று தோணவில்லை

  வந்தது எல்லாம் போவது தானே சந்திரன் கூட தேய்வது தானே

  காயம் என்றால் தேகம் தானே உண்மை இங்கே கண்டேன் நானே

  யார் விரல் என்றா வீணைகள் பார்க்கும்

  யார் இசைத்தாலும் இன்னிசை பாடும்

  மீட்டும் கையில் நானோர் வீணை

  காயம் என்றால் தேகம்தானே என்ற வரியில் அந்தப்பெண்களின் அத்தனை சோகமும் சொல்லும் திறமை.

  புது புது அர்த்தங்கள் படத்தில் வாலி எழுதிய கல்யாண மாலை பாடலில் சில வரிகள் தன்  சோகத்தை மறைத்து மக்களை மகிழ்விக்கும் ஒரு கலைஞனின் மனம் பற்றி சொல்கிறது

   http://www.youtube.com/watch?v=VchhlBn9wjg

  நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்

  காவல்கள் எனக்கில்லையே

  சோகங்கள் எனக்கும்  நெஞ்சோடு இருக்கும்

  சிரிக்காத நாளில்லையே

  துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும்

  மக்கள் மனம் போல பாடுவேன் கண்ணே

  என் சோகம் என்னோடு தான்…

  சாதரண மஞ்சள் ஹெல்மெட் அணிந்த மெட்ரோ ரயில் வேலை செய்பவர்கள், இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வீடு தேடி வந்து தென்னை மரம் ஏறுபவர், கட்டட வேலை செய்பவர்கள், சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்பவர்கள் என்று எல்லாரும் ‘இதுதான் எங்கள் வாழ்க்கை’ என்று சொல்வது போல் இருக்கிறது.

  மோகனகிருஷ்ணன்

  208/365

   
  • Saba-Thambi 12:16 pm on June 27, 2013 Permalink | Reply

   வித்தியாசமான பார்வை.
   சில வேலைகள் பரிதாபதுக்குரியவை. மிக மிகப் பரிதாபமானது- விளையாடும் பருவத்தில் சிறுபிள்ளைகள் வீட்டுச் சுமையை தூக்குவது.
   இதையும் பாடல்களில் பாடியுள்ளார்கள்

   உதாரணம் : ஆண் பிள்ளையென்றாலும் சாண் பிள்ளையண்றோ
   படம்: ஆறிலிருந்து அறுபதுவரை
   (http://www.youtube.com/watch?v=4Y07weGohR0)

  • G.Vinodh 6:57 pm on June 27, 2013 Permalink | Reply

   Hi Mokrish,

   Nice choice of song & explanation…love this beauty.

   Cheers.
   Vinodh G

  • G.Vinodh 7:06 pm on June 27, 2013 Permalink | Reply

   The reference to window cleaning was good, I see them every week at office & get scared every time.

   Regards,
   Vinodh G

  • rajnirams 7:35 pm on June 27, 2013 Permalink | Reply

   ஆஹா,சான்சே இல்லை,எப்படி யோசித்து சரியான பாடல்களை லிங்க் செய்து கலக்கி விட்டீர்கள். நல்ல நேரம் படத்தில் புலமைப்பித்தனின் வரிகள்-“வயித்துக்காக மனுஷன் இங்கே கயித்துலாடுறான் பாரு,ஆடி முடிச்சு இறங்கி வந்தா அப்புறம் தாண்டா சோறு”. பாராட்டுக்கள்.நன்றி.

  • rajnirams 7:43 pm on June 27, 2013 Permalink | Reply

   சூப்பர் பாட்டு ஒன்னு இருக்கு:-)) அம்மா தாய்மாரே ஆபத்தில் விடமாட்டேன்,”வெயிலோ புயல் மழையோ மாட்டேன்னு சொல்ல மாட்டேன்”-அங்கங்கே பசி எடுத்தா பலகாரம்,அளவு சாப்பாடு ஒரு நேரம்-ஆட்டோ தொழிலாளர்களை பற்றிய வைரமுத்து அவர்களின் வரிகள்.

  • amas32 10:20 pm on June 27, 2013 Permalink | Reply

   பல தொழில்களில் பிரச்சினைகள் இருந்தாலும், சில தொழில்களில் அதிக ஆபத்து உள்ளது. அழகாக வரிசையிட்டுக் காட்டியிருக்கிறீர்கள். வீட்டில் உலை கொதிக்க வேண்டும் என்றால் many have to put their life on line.

   amas32

 • என். சொக்கன் 8:39 pm on June 26, 2013 Permalink | Reply  

  மீனாக் கண்ணு! 

  • படம்: பூந்தோட்டக் காவல்காரன்
  • பாடல்: சிந்திய வெண்மணி
  • எழுதியவர்: கங்கை அமரன்
  • இசை: இளையராஜா
  • பாடியவர்கள்: கே. ஜே. யேசுதாஸ், பி. சுசீலா
  • Link: http://www.youtube.com/watch?v=e_fCjI0YTX0

  சேலாடும் கண்ணில், பாலூறும் நேரம்,

  செவ்வானம் எங்கும், பொன் தூவும் கோலம்!

  ’சேல்’ என்ற வார்த்தையைப் பழைய (அதாவது, கருப்பு வெள்ளைப்) பாடல்களில் நிறைய கேட்கலாம். தமிழ் மொழி கொஞ்சம் நவீன வடிவத்தைப் பெற்றபிறகு, பேச்சுவழக்கில் இல்லாத காரணத்தாலோ என்னவோ, திரைக் கவிஞர்கள் இந்த வார்த்தையை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டார்கள்.

  அபூர்வமாக, கங்கை அமரன் இதைப் பயன்படுத்தியிருக்கிறார், மிக அழகான உவமையாக!

  ‘சேல்’ என்றால் கெண்டை மீன். அந்த மீனைப்போன்ற பெரிய, அகன்று விரிந்த கண்களைக் கொண்ட பெண்ணைச் ‘சேல்விழியாள்’ என்று சொல்வார்கள்.

  உதாரணமாக, திருப்புகழ் பாடல் ஒன்றில் அருணகிரிநாதர் வள்ளியை இப்படி வர்ணிக்கிறார்: கொஞ்சு வார்த்தை கிளி, தண் கண் சேல், குன்ற வேட்டிச்சி!

  அதாவது, கிளிபோல் கொஞ்சுகிற வார்த்தைகளையும், தண்ணீரில் எந்நேரமும் மிதப்பதால் குளிர்ந்திருக்கும் கெண்டை மீனைப்போன்ற கண்களையும் கொண்ட, குன்றில் வாழ்கிற வேடுவப் பெண்!

  கங்கை அமரனின் சொல்லாட்சி ஒருபுறமிருக்க, இந்தப் பாடலில் எனக்கு மிகவும் பிடித்த வரி, ‘பெண் என்னும் வீட்டில் நீ செய்த யாகம்’. கர்ப்பம் தாங்குதலை இதைவிட எளிமையாகவும் சுருக்கமாகவும் உயர்வாகவும் சொல்லிவிடமுடியுமா என்ன!

  ***

  என். சொக்கன் …

  26 06 2013

  207/365

   
  • amas32 8:55 pm on June 26, 2013 Permalink | Reply

   //‘பெண் என்னும் வீட்டில் நீ செய்த யாகம்’. கர்ப்பம் தாங்குதலை இதைவிடச் சுருக்கமாகவும் உயர்வாகவும் சொல்லிவிடமுடியுமா என்ன!// எடுத்துக் காண்பித்ததற்கு நன்றி 🙂

   //சேலாடும் கண்ணில், பாலூறும் நேரம்,// சேலின் அர்த்தம் புரிந்தது ஆனால் இந்த வரியின் பொருள் புரியவில்லை. கண் கிறங்குகிறது என்ற பொருளோ?

   amas32

  • என். சொக்கன் 9:54 pm on June 26, 2013 Permalink | Reply

   //கண்ணில் பாலூறும்// விழிகளில் தாய்மை உணர்வு ததும்பும் என்று சொல்வதாக நான் புரிந்துகொள்கிறேன், அர்த்தம் அதுதானா என்று தெரியவில்லை

  • rajnirams 7:51 pm on June 27, 2013 Permalink | Reply

   sale, சேலை என்று அறிந்திருந்த எனக்கு “சேல்” வார்த்தையின் “மீனி”ங்கை சொன்னதற்கு நன்றி. இவ்வளவு நாள் “வாலி”எழுதியது என்றே நினைத்திருந்தேன்.அந்த படத்தின் எல்லா பாடல்களும் கங்கை அமரன் என்று இப்போது தான் தெரிந்தது. அற்புதமான வரிகள் கொண்ட பாடல். நன்றி.

 • G.Ra ஜிரா 10:33 am on June 25, 2013 Permalink | Reply  

  அன்னக்கிளியின் கடையிலே 

  அடுப்புச் சட்டியில் வெந்துகொண்டிருப்பது தோசையா ஆப்பமா என்பதை பழகிய நாசி எளிதாக கண்டுபிடித்து விடும். “ஆப்பம் வரும் பின்னே அதன் வாசம் வரும் முன்னே” என்றெல்லாம் பழமொழிகளை வகைவகையாக உருவாக்கியவர்களாயிற்றே நாம்.

  ஆப்பம் என்றதும் எனக்கு நினைவுக்கு வருவது கீழே குறிப்பிட்ட பாடல்தான். மிகவும் பிடித்த பாடலும் கூட.

  ஆப்பக்கட அன்னக்கிளி
  ஆடிவரும் வண்ணக்கிளி
  ஓரங்கட்டு ஓரங்கட்டு பொன்னாத்தா
  உங்கூடையிலே இருக்குறது என்னாத்தா
  பாடல் வரிகள் – வாலி
  பாடியவர்கள் – பி.சுசீலா, மலேசியா வாசுதேவன்
  இசை – இளையராஜா
  படம் – பாயும் புலி
  பாடலின் சுட்டி – http://youtu.be/2mdtO8PpfdI

  பல வீடுகளில் குழந்தைகள் ஆப்பம் கேட்கும் போது அவசரத்துக்கு தோசை மாவையே ஊற்றி ஆப்பம் சுட்டுக் கொடுப்பதும் உண்டு. ஆனால் ஆப்பம் சுவையாக வேண்டுமென்றால் அதற்கென்றே மாவாட்ட வேண்டும்.

  பச்சரிசியையும் புழுங்கலரிசியையும் சமபங்கு எடுத்து ஊற வைக்க வேண்டும். அரைப்பங்கு உழுந்தில் சிறிது வெந்தயம் கலந்து ஊற வைக்க வேண்டும். ஊற வைத்தவைகளை மைய அரைத்து எடுத்து சிறிது உப்பு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த மாவில் ஆப்பம் சுட்டால்தான் நடுவில் மெத்தென்றும் சுற்றிலும் மொறுமொறுப்பாகவும் சுவையாகவும் வரும்.

  எந்த விதமான கூட்டணியிலும் ஆப்பம் தாக்குப் பிடிக்கும். இனிப்பான தேங்காப்பாலுடன் சாதுவாக ருசிக்கும். அதே நேரத்தில் பாயா/குருமா போன்ற அசைவக் குழம்புகளோடு சேரும் போது சுவையில் ருத்ரதாண்டவமே ஆடிவிடும். அதே போல சொதி என்றொரு சைவப் பக்குவம் உண்டு. தேங்காய்ப்பாலை அரைத்து விட்டுச் செய்வது. இந்தச் சொதியில் ஊறிய ஆப்பத்தை மட்டும் முருகன் சாப்பிட்டிருந்தால் தேனும் தினைமாவும் வேண்டேன் என்று சொல்லியிருப்பான்.

  இப்படி நாம் ருசிக்கும் ஆப்பத்தை பக்கத்து மாநிலமான கேரளத்தில் அப்பம் என்பார்கள். முன்பு தமிழிலும் அது அப்பம் என்றே வழங்கப்பட்டது. எத்தனையோ திரிபுகள். அதிலொன்று நீளல். அப்பம் ஆப்பமானது. வணிகம் வாணிகமானது. இன்னும் சில இடங்களில் நிழல் என்ற சொல் நீழல் என்று வரும்.

  ஒரு வடக்கத்திக் கதை. சந்திரகுப்த மவுரியர் நாட்டைக் கைப்பற்றுவதற்காக மிகுந்த யோசனையோடு சாப்பிட்டுக் கொண்டிருந்தாராம். அப்போது இலையில் வைக்கப்பட்ட அப்பத்தின் நடுப்பாகத்தைப் பிய்த்ததும் கை சுட்டு விட்டதாம். “சூடாக இருக்கும் அப்பத்தை ஓரத்தில் இருந்தே பிய்த்துச் சாப்பிட வேண்டும்.” என்று அப்போது சாணக்கியர் சொன்ன அறிவுரையை அரசியலிலும் பயன்படுத்தி வெற்றி பெற்றார் என்றும் சொல்வார்கள்.

  தமிழ்நாட்டு அப்பம் பாடலிபுத்திரத்துக்கு எப்படி சென்றதென்று தெரியவில்லை. ஷியாம் பெனகல் இயக்கிய பாரத் ஏக்.கோஜ் என்ற தொலைக்காட்சித் தொடரில் சந்திரகுப்தரைப் பற்றிய கதையில் மேலே சொன்ன நிகழ்ச்சியும் வந்தது. ஆனால் அப்பத்துக்குப் பதிலாக சாணக்கியர் சுடுசோற்றை வைத்து அறிவுரை சொன்னார். இருந்தாலும் என்ன… சூடுசோற்றை விட அப்பமே இந்த அறிவுரைக்குப் பொருத்தமாக இருக்கிறது என் கருத்து.

  அடுத்து ஒரு தமிழ்க்கதை. பட்டினத்தாரை நமக்கெல்லாம் தெரியும். செல்வச் செழிப்பிலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்த அவர் அனைத்தையும் உதறிவிட்டு துறவியானார். வீடுவீடாகச் சென்று கையேந்தி இரந்து உண்டார்.

  தன்னுடைய தம்பி இப்படியெல்லாம் செய்வதைத் தாங்க முடியாத அக்காள் ஒருமுறை அப்பத்தில் நஞ்சை ஊற்றிக் கொடுத்து விட்டாராம்.

  பட்டினத்தார் தன்னுடைய கையில் விழுந்த அப்பத்தைப் பார்த்ததும் அதில் நஞ்சு கலந்திருப்பதைப் புரிந்து கொண்டார். அந்த அப்பத்தை அக்காளின் வீட்டு ஓட்டுக்கூரை மேல் வீசி விட்டார். “தன்வினை தன்னைச் சுடும். ஓட்டப்பம் வீட்டைச் சுடும்” என்று சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டுக் கிளம்பினார்.

  அடுத்த நொடியே அந்த ஓட்டுக்கூரையில் தீப்பிடித்து விட்டதாம். பிறகு மனம் திருந்தி அக்காள் மன்னிப்பு கேட்கவும் நெருப்பு அணைந்ததாம்.

  ஆப்பத்தைப் போல ஆப்பம் வருகின்ற கதைகளும் சுவையாகத்தான் இருக்கின்றன. என்ன இருந்தாலும் பிட்டுக்குப் பிரம்படி வாங்கிய பரமசிவன் ஆப்பத்துக்கு ஐந்தாறு அடிகள் வாங்கியிருக்கலாம்.

  அன்புடன்,
  ஜிரா

  206/365

   
  • amas32 4:24 pm on June 25, 2013 Permalink | Reply

   தாங்கள் ஒரு ஆப்பப் பிரியர் என்று உங்கள் பதிவில் இருந்தே தெரிகிறது 🙂

   ஆப்பமும் தேங்காய் பாலும் எனக்கு மிகவும் பிடித்த உணவும் கூட. ஒரே அரிசி மாவு, உளுந்து, வெந்தயம் தான் போட்டு அரைகிறோம், ஆனால் இட்லி தொசையைவிட ஆப்பம் ஸ்பெஷல் தான் 🙂

   amas32

   • GiRa ஜிரா 9:41 am on June 26, 2013 Permalink | Reply

    ஒரு ரகசியம் சொல்றேன். நாள் வெளிய கடைக்குப் போனா ஆப்பம் சொல்றதே இல்லை. வீட்டுல செஞ்சாதான் சாப்பிடுவேன். 🙂

  • Saba-Thambi 8:48 pm on June 25, 2013 Permalink | Reply

   இலங்கையிl அப்பம் என் று தமிழர்கள் மத்தியிலும் ஆப்ப என்று சிங்களவர் மத்தியிலும்
   வழங்கப்படுகிறது Hoppers in English.
   உளுந்து, வெந்தயம் ஒன்றும் சேர்ப்பதில்லை. Rice flour dough is fermented overnight and made in a small wok (தாச்சி).
   made in 3 types – plain hopper, milk hopper (with sugar sweetened coconut milk) or சர்க்கரை அப்பம், and then முட் டைஅப்பம் with one whole egg in the middle. Plain ones are eaten with curries particularly with seeni sambal(சீனிச்சம்பல்) made of onion and tamarind.

   சிங்களவர் mastered the art and are many outlets in Colombo – just made to order. Yummy!!!
   அட பழையதுகளை நினைவு படுத்திவிட்டீர்களே. இதற்காக இந்து சமுத்திரம் கடக்கத்தான் வேண்டும். அனுமனை துணைக்கு அழைக்க வேண்டும். 🙂

   • GiRa ஜிரா 9:43 am on June 26, 2013 Permalink | Reply

    ஆகா. இலங்கையப்பத்தைப் பத்தி அழகாச் சொல்லியிருக்கிங்க. சீனிச்சம்பலைப் பத்தியும் நண்பர் கானாபிரபா சொல்லியிருக்காரு. முட்டையப்பத்தின் படத்தைக் கூட ட்விட்டரில் ஒருமுறை கொடுத்தார்.

    ஒன்னு பிரபலமாயிருச்சுன்னா அது வழியா காசு பாக்க வேண்டியதுதானே. அதத்தான் சிங்களர்கள் செய்றாங்க போல. 🙂

  • Uma Chelvan 12:03 am on June 26, 2013 Permalink | Reply

   GiRa, அது “வீட்டப்பம் ஓட்டை சுடும்” என்பதே சரி.

   • GiRa ஜிரா 9:47 am on June 26, 2013 Permalink | Reply

    நான் படிச்சது ஓட்டப்பம் வீட்டைச்சுடும். நீங்க சொன்னப்புறம் தேடிப்பாத்தேன். ஓட்டப்பம் வீட்டைச்சுடும்னுதான் நெட்லயும் இருக்கு.

  • Arun Rajendran 9:39 am on June 26, 2013 Permalink | Reply

   கேரள முறையில் புழுங்கல் அரிசி சேர்ப்பதில்லை.. மாவு அரைக்கும்போது துறுவிய தேங்காய் சேர்ப்பர். அதனால் கேரள ஆப்பம் சிறிது இனிப்பாகவே இருக்கும்… அனைத்து அசைவ குழம்புகளுக்கும் பொருந்தி வரும்…அருமையானப் பாடல் கொடுத்து இருக்கீங்க ..ஆப்பத்த வேற ஞாபகப்படுத்திட்டீங்க..waiting for sunday 🙂

   இவண்
   அருண்

   • GiRa ஜிரா 9:48 am on June 26, 2013 Permalink | Reply

    ஆமா. கேரளாக்காரங்க தேங்கா சேப்பாங்க. அங்க சிலர் கள்ளும் சேப்பாங்கன்னு சொல்வாங்க. கேரளாவில் ஆப்பம் சாப்பிட்டதில்ல.

    • Saba 10:20 am on June 27, 2013 Permalink

     இலங்கையிலும் சிலர் கள்ளும் சேர்பாங்க – அது தான் புளிக்கும் படலத்தை ஆரம்பிக்கும். (start the fermenting process with yeast in கள்ளு)

  • Uma Chelvan 12:09 am on June 28, 2013 Permalink | Reply

   Thanks GiRa, I thought and read other way around. Thanks any way!

  • Uma Chelvan 10:01 pm on June 28, 2013 Permalink | Reply

   GiRa, Are you in Face book?

  • Jayavel 4:27 pm on August 3, 2014 Permalink | Reply

   எங்க கடையில ஆப்பம் தான் ஸ்பெஷல் அயிட்டம் . நல்ல இருக்கும் . நெறைய விற்கும் . ஆனால் ஒரு சோகம் எனக்குதான் ஆப்பம் சாப்பிட்டால் வயித்துக்கு ஒத்துக்கறதில்லை .பச்சரிசி ஆவறதில்லை . நெஞ்சு கரிக்கும் . ஆனாலும் அப்பப்ப சாப்பிட்டுவிட்டு கஷ்டப்படுவேன் .

 • mokrish 10:01 am on June 24, 2013 Permalink | Reply  

  ஆழக்கடலில் தேடிய முத்தையா 

  கவியரசு கண்ணதாசன். நாலு வரி நோட்டின் நாயகர்களில் முதன்மையானவர். இவரை ‘தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர், நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர்’ என்ற புள்ளி  விவரத்தில் அடைத்தால்  ஒரு முழுமையான பிம்பம் நிச்சயம் கிடைக்காது.

  திரைப்படப் பாடலாசிரியர் என்ற ஒரு பரிமாணத்தைப் பார்க்கலாம். நல்ல பாட்டு என்றால் இவர் எழுதியதாகவே இருக்கும் என்று தீர்மானமாக நம்பிய ஒரு தலைமுறை கொண்டாடிய கவிஞன். இவர் எழுதாத விஷயமே இல்லை என்றும் , அனுபவங்களையே பாட்டில் வைத்தார் என்று அவர் கவிதைகளை நேசித்தனர்.  அவரவர் வாழ்வின் எல்லா நிலைகளுக்கும் நிகழ்வுகளுக்கும் இவர் எழுதிய பாடல்களே reference. காதல், இலக்கியம், வாழ்வியல், தத்துவம், நாத்திகம்,அரசியல், புராணம், மதம் என்று எதை தொட்டாலும் இனிக்கும் நயம்.

  இதையெல்லாம் தாண்டி இன்னொரு காரணம் உண்டு. ஒரு மூன்று மணிநேர திரைப்படத்தின் கதையை, கருவை, காட்சியை ஒரு சில வரிகளில் கொண்டு வரும் திறமை.  பாடல் வரிகளுக்குள்  ஒரு விஷுவல் element. நெஞ்சில் ஓர் ஆலயம் படமும் பாடல்களும் இதற்கு சிறந்த உதாரணம் என்று நினைக்கிறேன்.

  படத்தின் கதை இதுதான். கல்யாண் குமாரும் தேவிகாவும் காதலர்கள். விதிவசத்தால் பிரிந்து, தேவிகா தான் மணந்து கொண்ட முத்துராமனின் நோயைக் குணப்படுத்த மருத்துவரிடம் செல்கையில், அவர் முன்னாள் காதலர் கல்யாண் குமார். கணவனுக்கும் இது தெரிந்துவிட, தான் இறந்தால் அவள் மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பும் கணவன். இதைக்கேட்டு அதிர்ந்து போகும் மனைவி. படத்தில் வரும் நாலு பாடல்களில் வரும் சில வரிகளை கேளுங்கள்

   மருத்துவர்,  முன்னாள் காதலர்

   https://www.youtube.com/watch?v=_s8f6qlwY0k

  வருவாய் என நான் தனிமையில் நின்றேன்
  வந்தது வந்தாய் துணையுடன் வந்தாய்
  துணைவரைக் காக்கும் கடமையும் தந்தாய்

   கணவனுக்கு இது தெரிந்து, மறுமணம் பற்றி யோசிப்பது

  https://www.youtube.com/watch?v=20qUiIEdzkY

  ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
  யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவது தெரியாது
  ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை
  ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை
  பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்து விடும்
  மாறுவதை புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும்

  மறுமணம் என்று கேட்டவுடன் பதறும் மனைவி

  https://www.youtube.com/watch?v=4WGVo1Zh3Yw

  சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என் உயிரே
  சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என் உயிரே
  இன்னொரு கைகளிலே யார் யார் யார் நானா
  எனை மறந்தாயா ஏன் ஏன் ஏன் என் உயிரே
  சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என் உயிரே

  கணவன் தான் இறக்குமுன் அவளை மணக்கோலத்தில் வரச்சொல்லும் காட்சி. சத்தியவான் சாவித்திரி கதை சொல்கிறார்

  https://www.youtube.com/watch?v=9OlWrb-ntl8

  என்ன நினைத்து என்னை அழைத்தாயோ?

  ஏன் இந்த கோலத்தைக் கொடுத்தயோ?

  மாயப் பறவை ஒன்று வானில் பறந்து வந்து

  வாவென அழைத்ததைக் கேட்டாயோ

  பறவை பறந்து செல்ல விடுவேனோ?

  அந்தப் பரம்பொருள் வந்தாலும் தருவேனோ?

  உன்னை அழைத்துச் செல்ல எண்ணும் தலைவனிடம்

  என்னையே நான் தர மறுப்பேனா?

  நாலு பாடல்களில் படத்தின் கதை சொல்லும் வித்தை. மீட்டருக்கு மேட்டர் என்ற தளத்தில் சாகசம். அதற்குள் தத்துவம், இலக்கியம் சொல்லும் திறமை. அதுதான் கண்ணதாசன்.

  ‘பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்’ என்ற கவிதையில்

  http://tamilaavanam.blogspot.in/2012/11/Kannadasan-Kavithaigal.html

     அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்

     ஆண்டவனே நீ ஏன்? எனக் கேட்டேன்!

     ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி

     “அனுபவம் என்பதே நான்தான்” என்றான்!

  என்று ஆண்டவனைப்பற்றி எழுதிய வரிகள் அவர் கவிதைகளுக்கும் பொருந்தும். அனுபவித்தால்தான் இனிமை.

  கவியரசர் பற்றி நிறைய செய்திகள், கட்டுரைகள், பாடல் உருவான விதம், ஆராய்ச்சிகள் என்று பல தகவல்கள். அதில் தேடியபோது ஒரு புதிய தகவல் படித்தேன். கவிஞர் மாலையிட்ட மங்கை என்ற படத்தில் எழுதிய ‘மழை கூட ஒரு நாளில் தேனாகலாம்’ https://www.youtube.com/watch?v=87pHmrrnrcs என்ற பாட்டை  சாகித்ய அகாதெமி 14 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறது. இந்த பாடல் வரிகளை கேளுங்கள். சில ஆச்சரியங்கள்

  அவர் நிரந்தரமானவர். அவர் எழுதிய பாடல்களும்தான்

  மோகனகிருஷ்ணன்

  205/365

   
  • amas32 5:27 pm on June 24, 2013 Permalink | Reply

   எனக்கு இந்தப் பாடல் வரிகளை வரிசையாகப் படிக்கும் பொழுது புல்லரிக்கிறது. எவ்வளவு பெரிய மகா கவிஞன் கண்ணதாசன்!

   நாத்திகத்தில் இருந்து ஆத்திகத்திற்கு மாறியவர்கள் தான் ஆத்திகத்தின் உயர்வையும் பெருமையையும் பறை சாற்றும் வல்லமையை அதிகம் பெறுகிறார்கள். அதனால் தான் அர்த்தமுள்ள இந்துமதமும், ஏசு காவியமும் காலத்தால் அழிக்க முடியாதப் படைப்புகளாக இன்று உள்ளன். இன்று எத்தனையோ நல்ல கவிஞர்கள் தமிழ் நாட்டில் இருந்தாலும் என்னுடைய பேவரிட் கவியரசர் கண்ணதாசன் தான். அதற்கு இன்று நீங்கள் 4 வரி நோட்டில் கூறியுள்ள அனைத்துமே காரணம்.

   அவர் பாடல்களோ எளிமை, வரிகளிலிலோ புலமை! சந்த நயத்தோடு சிறுகூடல்பட்டி அம்பிகை அருள் பெற்ற அவர் நாவில் இருந்து விழும் வார்த்தைகள் அக்ஷர லட்சம் பெரும்.

   amas32

 • என். சொக்கன் 11:17 am on June 23, 2013 Permalink | Reply  

  அகரம் நீ! 

  • படம்: சரஸ்வதி சபதம்
  • பாடல்: அகரமுதல எழுத்தெல்லாம்
  • எழுதியவர்: கண்ணதாசன்
  • இசை: கே. வி. மகாதேவன்
  • பாடியவர்: டி. எம். சௌந்தர்ராஜன்
  • Link: http://www.youtube.com/watch?v=Pb2GiPNrGTw

  அகர முதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய், தேவி!

  ஆதி பகவன் முதல் என்றே உணரவைத்தாய், தேவி!

  இயல், இசை, நாடக தீபம் ஏற்றிவைத்தாய் நீயே!

  ஈன்றவர் நெஞ்சை இன்று குளிரவைத்தாய் தாயே!

  உயிர், மெய் எழுத்தெல்லாம் தெரியவைத்தாய்,

  ஊமையின் வாய் திறந்து பேச வைத்தாய்,

  எண்ணும் எழுத்து என்னும் கண் திறந்தாய்,

  ஏற்றம் தரும் புலமை ஆற்றல் தந்தாய்,

  ஐயம் தெளியவைத்து அறிவு தந்தாய்,

  ஒலி தந்து, மொழி தந்து குரல் தந்தாய்,

  ஓம்கார இசை தந்து உயரவைத்தாய், தேவி!

  தமிழின் உயிர் எழுத்துகள் வரிசையில் கண்ணதாசன் எழுதிய பக்திப் பாடல் இது. கே. வி. மகாதேவனின் இசை, டி. எம். எஸ். அவர்களின் கம்பீரமான குரலால் இன்னும் அழகு பெற்றது.

  இந்தப் பாடலை எழுதிப் பல ஆண்டுகளுக்குப்பிறகு, இதே பாணியில் இயேசுநாதரைப்பற்றியும் ஒரு பாடல் எழுதியிருக்கிறார் கண்ணதாசன். அவரது புகழ் பெற்ற ‘இயேசு காவியம்’ நூலில் இடம்பெற்ற கவிதை அது:

  அடுத்தவர் இடத்தில் அன்பு காட்டியும்

  ஆடல், பாடல் அணுகாதிருந்தும்,

  இழந்தோர் இடத்தே இரக்கம் மிகுந்தும்

  ஈகை உதவி இதயம் மலர்ந்தும்

  உறவோர் இடத்து உள்ளன்பு வைத்தும்

  ஊரார் புகழப் பணிவுடன் நடந்தும்

  என்றும் தந்தை எதைச் சொன்னாலும்

  ஏற்று முடித்தும் இயல்புற வாழ்ந்தும்

  ஐயம் தவிர்க்க ஆசானை அணுகியும்

  ஒத்த வயதே உடையோர் இடத்து

  ஓதும் பொருளில் உயர்ந்தே நின்றும்…

  கண்ணதாசன் இதோடு நிறுத்தவில்லை, க, கா, கி, கீ வரிசையில் கவிதையைத் தொடர்கிறார். இப்படி:

  கன்னித் தாயின் காலடி வணங்கியும்

  காலம் அறிந்து கணக்குற வாழ்ந்தும்

  கிட்டாதாயின் வெட்டென மறந்தும்

  கீழோர், மேலோர் பேதம் இன்றியும்

  குணத்தில் தேவ குமாரன் என்று உலகம்

  கூப்பி வணங்கக் குறைகள் இலாமலும்

  கெட்ட பழக்கம் எட்டா நிலையில்

  கேடுகள் எதையும் நாடாத அளவில்

  கைத்தலத்துள்ளே காலத்தை அடக்கியும்

  கொஞ்சி வளர்ந்து குழந்தையில் இருந்து

  கோமகன் வயதில் ஆறிரண்டு அடைந்தார்!

  ***

  என். சொக்கன் …

  23 06 2013

  204/365

   
  • D sundarvel 11:34 am on June 23, 2013 Permalink | Reply

   இரண்டு பாட்டுமே மிக நன்றாக இருக்கிறது.

  • rajnirams 11:57 am on June 23, 2013 Permalink | Reply

   அப்பப்பா,என்ன தமிழ்! கவியரசு கண்ணதாசன் அவர்கள் ஒரு காவியம்,நாளை அவர் பிறந்த தினத்திற்கு இது உங்களின் “முன்னோட்டம்”. திருவிளையாடலில் வரும் “ஒன்றானவன் உருவில் இரண்டானவன் பாடலின் சிறப்பையும் நினைத்து வியந்து மகிழ்கிறேன்.

  • GiRa ஜிரா 12:27 pm on June 23, 2013 Permalink | Reply

   பொதுவா கவிதைன்னு எழுதும் போது சுதந்திரம் இருக்கும். என்ன வேணும்னாலும் எழுதலாம். என்னென்ன சோதனை வேணுமோ அதெல்லாம் செய்யலாம்.

   ஆனா சினிமாப்பாட்டுக்குள்ள நிறைய கட்டுப்பாடுகள் உண்டு. அதையும் மீறி இந்த மாதிரியெல்லாம் எழுதும் போதுதான் தமிழின் வலிமையும் கவிதையின் பெருமையும் கவிஞனின் திறமையும் தெரியுது.

   நல்லா எடுத்துச் சொன்னிங்க. ரசித்தேன்.

  • சிவா கிருஷ்ணமூர்த்தி 1:02 pm on June 23, 2013 Permalink | Reply

   பாடலாக கேட்டு ரசிப்பது ஒரு வகை ரசனை என்றால் இந்த மாதிரி வரிகளாக படித்து தமிழை வியப்பது இன்னொரு வகையான ரசனை…சொக்கன் மற்றும் மற்ற நண்பர்களினால் தற்போது தினமும் இந்த வகையாக சுவைத்து வருகிறேன். வாழ்க, நன்றி!

   சிவா கிருஷ்ணமூர்த்தி

  • amas32 8:10 pm on June 23, 2013 Permalink | Reply

   சரஸ்வதி சபதம் படத்தில் வரும் பாடல் பலமுறை பாடலாகக் கேட்டதால் எளிமையாக ஒலிக்கிறது.

   ஏசு காவியத்தில் வரும் பாடல் இன்று தான் உங்கள் உபயத்தில் முதல் முறை படிக்கிறேன்.
   அம்மா இங்கே வா வா ஆசை முத்தம் தா தா என்ற மீட்டரில் உள்ளது. ஒரு முறை படித்தவுடன் மனத்தில் நன்கு பதிந்து விட்டது. எல்லாம் கவிஞரின் கை வண்ணம்!

   amas32

  • Uma Chelvan 9:28 am on June 24, 2013 Permalink | Reply

   இந்த பாடலும் ” ஒன்றானவன் உருவில் இரண்டானவன் ” பாடலும் மிக சிறப்பானவை. ஏசுநாதர் பாடல் இதுவரை கேட்டது இல்லை. Thanks for that.

 • G.Ra ஜிரா 1:18 pm on June 22, 2013 Permalink | Reply  

  காதல் காற்று 

  காற்றே என் வாசல் வந்தாய்
  மெதுவாகக் கதவு திறந்தாய்
  காற்றே உன் பேரைக் கேட்டேன்,
  ”காதல்” என்றாய்!

  வைரமுத்து அவர்களின் வைர வரிகள். காதலர்களுக்கு எல்லாமே காதல்தான். மெதுவாகக் கதவைத் திறந்து வரும் காற்றுக்கும் காதல் என்று பெயர் வைக்க காதலர்களால் மட்டுமே முடியும். அதே காற்றுக்கு மற்றவர்கள் குளிர் என்றோ வாடை என்றோ பெயரிட்டிருப்பார்கள்.

  கடவுள் நம்பிக்கை உள்ளவனும் இல்லாதவனுமாக இருவர் பேசிக் கொண்டார்கள்.

  “என்னுடைய செயல்கள் எல்லாம் என்னாலேயே செய்யப்படுகின்றன. அவைகளைக் கட்டுப்படுத்தவும் அதிகப்படுத்தவும் என்னால் முடியும்.” என்றான் கடவுளை நம்பாதவன்.

  “அப்படிச் சொல்லாதே. உன்னுடைய மூச்சு கூட உன்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை. அதைப் புரிந்துகொள்.” என்றான் உண்மையான நம்பிக்கையாளன்.

  “அதெப்படி? நானே மூச்சை இழுக்கிறேன். நானே வெளியே விடுகிறேன். இது என் கட்டுப்பாட்டில் உள்ளதுதானே”

  “உன் தாத்தனும் இப்படித்தானே மூச்சை உள்ளே இழுத்து வெளியே விட்டுக் கொண்டிருந்தான். அவன் கடைசியாக இழுத்த மூச்சை ஏன் வெளியே விடவில்லை? இப்போதாவது நம்முடைய கட்டுப்பாட்டை மீறிய ஒன்று நம்மை இயக்குவதை புரிந்து கொள்” என்றான் இவன்.

  காற்றுதான் உயிர். நாசி வழியாகச் சென்றாலும் உடல் முழுவதும் பரவி வாழ்விப்பதும் காற்றுதான்.

  இப்படி உயிராக இருக்கும் காற்றுக்குக் காதல் என்று பெயர் வைப்பது பொருந்துமா?

  இந்தக் கேள்விக்கு விடை தேட எனக்குச் சிரமம் இருக்கவில்லை. காற்றுதான் காதல் என்று மகாகவி பாரதி என்றைக்கோ காற்று என்ற தலைப்பில் வசன கவிதை எழுதிவைத்துவிட்டான். வீட்டின் உத்தரத்தில் ஆடுகின்ற இரண்டு துண்டு கயிறுகளை வைத்து காற்று காதலாவதை அழகாக நிரூபித்து விட்டான். அதை அப்படியே தருகிறேன். படித்துப் பாருங்கள். பிறகு காற்றுக்குப் பெயர் காதலா இல்லையா என்று சொல்லுங்கள்.

  ஒரு கயிறா சொன்னேன்? இரண்டு கயிறு உண்டு.
  ஒன்று ஒரு சாண். மற்றொன்று முக்கால் சாண்.
  ஒன்று ஆண்; மற்றொன்று பெண்; கணவனும், மனைவியும்.
  அவையிரண்டும் ஒன்றையொன்று காமப்பார்வைகள் பார்த்துக்கொண்டும், புன்சிரிப்புச் சிரித்துக் கொண்டும், வேடிக்கைபேச்சுப் பேசிக்கொண்டும் ரசப்போக்கிலேயிருந்தன.
  அத்தருணத்திலே நான் போய்ச்சேர்ந்தேன்.
  ஆண் கயிற்றுக்குக் ‘கந்தன்’ என்று பெயர்.
  பெண் கயிற்றுக்குப் பெயர் ‘வள்ளியம்மை’.
  (மனிதர்களைப் போலவே துண்டுக் கயிறுகளுக்கும் பெயர் வைக்கலாம்.)

  கந்தன் வள்ளியம்மைமீது கையைப்போட வருகிறது. வள்ளியம்மை சிறிது பின்வாங்குகிறது. அந்த சந்தர்ப்பத்திலே நான் போய்ச்சேர்ந்தேன்.
  “என்ன, கந்தா, சௌக்கியந்தானா? ஒரு வேளை, நான் சந்தர்ப்பந் தவறி வந்துவிட்டேனோ, என்னவோ? போய், மற்றொருமுறை வரலாமா?” என்று கேட்டேன்.
  அதற்குக் கந்தன்: — “அட போடா, வைதிக மனுஷன்! உன் முன்னேகூட லஜ்ஜையா? என்னடி, வள்ளி, நமது சல்லாபத்தை ஐயர் பார்த்ததிலே உனக்குக் கோபமா?” என்றது.
  “சரி, சரி, என்னிடத்தில் ஒன்றும் கேட்கவேண்டாம்” என்றது வள்ளியம்மை.
  அதற்குக் கந்தன், கடகடவென்று சிரித்துக் கைதட்டிக் குதித்து, நான் பக்கத்திலிருக்கும்போதே வள்ளியம்மையைக் கட்டிக்கொண்டது.

  வள்ளியம்மை கீச்சுக்கீச்சென்று கத்தலாயிற்று. ஆனால், மனதுக்குள்ளே வள்ளியம்மைக்கு சந்தோஷம். நாம் சுகப்படுவதைப் பிறர் பார்ப்பதிலே நமக்கு சந்தோஷந் தானே? இந்த வேடிக்கை பார்ப்பதிலே எனக்கும் மிகவும் திருப்திதான், உள்ளதைச் சொல்லிவிடுவதிலே என்ன குற்றம்? இளமையின் சல்லாபம் கண்ணுக்குப் பெரியதோர் இன்பமன்றோ?

  வள்ளியம்மை அதிகக் கூச்சலிடவே, கந்தன் அதைவிட்டு விட்டது. சில க்ஷணங்களுக்குப்பின் மறுபடிபோய்த் தழுவிக்கொண்டது. மறுபடியும் கூச்சல், மறுபடியும் விடுதல்; மறுபடியும் தழுவல், மறுபடியும் கூச்சல்; இப்படியாக நடந்து கொண்டே வந்தது.

  “என்ன, கந்தா, வந்தவனிடத்தில் ஒரு வார்தைகூடச் சொல்ல மாட்டேனென்கிறாயே? வேறொரு சமயம் வருகிறேன், போகட்டுமா?” என்றேன்.
  “அட போடா! வைதிகம்! வேடிக்கைதானே பார்த்துக் கொண்டிருக்கிறாய். இன்னும் சிறிதுநேரம் நின்று கொண்டிரு. இவளிடம் சில வ்யவஹாரங்கள் தீர்க்க வேண்டியிருக்கிறது. தீர்ந்தவுடன் நீயும் நானும் சில விஷயங்கள் பேசலாம் என்றிருக்கிறேன். போய் விடாதே, இரு” என்றது. நின்று மேன்மேலும் பார்த்துக்கொண்டிருந்தேன்.

  சிறிதுநேரம் கழிந்தவுடன், பெண்ணும் இன்ப மயக்கத்திலே நான் நிற்பதை மறந்து நாணத்தை விட்டுவிட்டது. உடனே பாட்டு. நேர்த்தியான துக்கடாக்கள். ஒரு வரிக்கு ஒரு வர்ணமெட்டு.
  இரண்டே ‘சங்கதி’. பின்பு மற்றொரு பாட்டு.

  கந்தன் பாடிமுடிந்தவுடன், வள்ளி. இது முடிந்தவுடன் அது. மாற்றி மாற்றிப் பாடி — கோலாஹலம்!சற்றுநேரம் ஒன்றையொன்று தொடாமல் விலகிநின்று பாடிக்கொண்டே யிருக்கும். அப்போது வள்ளியம்மை தானாகவேபோய்க் கந்தனைத் தீண்டும். அது தழுவிக்கொள்ளவரும். இது ஓடும். கோலாஹலம்!

  இங்ஙனம் நெடும்பொழுது சென்றபின் வள்ளியம்மைக்குக் களியேறி விட்டது. நான் பக்கத்து வீட்டிலே தாகத்துக்கு ஜலம் குடித்துவிட்டு வரப் போனேன். நான் போவதை அவ்விரண்டு கயிறுகளும் கவனிக்கவில்லை.

  நான் திரும்பிவந்து பார்க்கும்போது வள்ளியம்மை தூங்கிக் கொண்டிருந்தது. கந்தன் என் வரவை எதிர்நோக்கியிருந்தது.

  என்னைக் கண்டவுடன், “எங்கடா போயிருந்தாய், வைதிகம்! சொல்லிக் கொள்ளாமல் போய் விட்டாயே” என்றது.

  இதுதான் அந்த வசனகவிதையின் ஒரு பகுதி.

  இரண்டு அறுந்த கயிறுகள் உத்தரத்திலிருந்து தொங்கிக் கொண்டிருக்கின்றன. வீசுகின்ற காற்றுக்கு ஏற்றவாறு கயிறுகள் ஆடுகின்றன. அந்த ஆட்டத்தை ஒரு காதல் கதையாக்கி, அந்தக் கதையை ஒரு வசன கவிதையாக்கி.. காற்றைக் காதல் தேவனாக்கிய பாரதியை எப்படித்தான் பாராட்டுவது!

  பாடல் – காற்றே என் வாசல் வந்தாய்
  பாடியவர் – கவிதா கிருஷ்ணமூர்த்தி, உன்னி கிருஷ்ணன்
  வரிகள் – வைரமுத்து
  இசை – ஏ.ஆர்.ரகுமான்
  படம் – ரிதம்
  பாடலின் சுட்டி – http://youtu.be/oD16SYpgL7A

  அன்புடன்,
  ஜிரா

  203/365

   
  • rajnirams 12:30 pm on June 23, 2013 Permalink | Reply

   காற்றை காதலுக்கு உற்ற தோழன் போல தான் பல பாடல்களில் உருவக படுத்தி பயன்படுத்தி இருக்கிறார்கள்.காற்றையே காதலாக பாரதி எழுதியதை வைரமுத்து கையாண்டிருப்பதை “இதமாக”சொல்லிஇருக்கிறீர்கள். அற்புதமான பாடல், அருமை.

  • amas32 8:14 pm on June 23, 2013 Permalink | Reply

   காற்று நுழைவதுத் தெரியாமல் உள்ளே வந்துவிடும். அது போலத் தானே காதலும் 🙂

   amas32

 • mokrish 12:58 pm on June 21, 2013 Permalink | Reply  

  பாஞ்சாலி புகழ் காக்க 

  மகாபாரதம் என்ற இதிகாசத்தின் அறிமுகம்  ராஜாஜி எழுதிய வியாசர் விருந்து வழியாகத்தான் கிடைத்தது. பின்னர் டிவியில் பி ஆர் சோப்ரா மெகா தொடரும், சோ எழுதிய விளக்கங்களும்தான் துணை. நிறைய கதாபாத்திரங்கள், பல துணை / கிளை கதைகள், அவ்வப்போது கதைக்குள் கதை என்ற பிரமிக்க வைக்கும் layers, அபாரமான திரைக்கதை அமைப்பு – சலிப்பதேயில்லை.

  சில மாதங்களுக்கு முன்  Chitra Banerjee Divakaruni எழுதிய Palace of illusions என்ற புத்தகம் படித்தேன். மகாபாரதக்கதையை திரௌபதியின் பார்வையில் சொல்லும் வித்தியாசமான முயற்சி என்ற அளவில் கொஞ்சம் சுவாரஸ்யம்.

  குர்சரண் தாஸ் எழுதிய The Difficulty of being Good மகாபாரதத்து மாந்தர்களை அலசும் விதம் அருமை. M T வாசுதேவன் நாயர் எழுதிய ரண்டமூழம் பீமனின் பார்வையில் மகாபாரதம் சொல்கிறது என்று கேள்வி.   இந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்ததுதான் பாஞ்சாலி சபதம் என்று படித்திருக்கிறேன்.

  தெரிந்த கதை, களம், ஆனால் பாத்திரங்களை / சம்பவங்களை வேறு கோணத்தில் காட்டும் historical fiction . இதனால் நம் மனதில் இருக்கும் நிறைய பிம்பங்கள் கலையும் அபாயம் உண்டு.

  சரி நாமும் இது போல் ஏதாவது முயற்சி செய்யலாமா?  பாஞ்சாலியின் கூந்தலினைக் கையினால் பற்றி இழுத்துக் கொண்டு போய்க்கேடுற்ற மன்னனின் தர்மம் கெட்ட சபையில் சேர்த்தான் துச்சாதனன். .திரௌபதி சபதம் போடாமல் கண்ணீர் விட்டு அழும் ஒரு சராசரியான பெண்ணாக இருந்தால் என்ன சொல்லியிருப்பாள்? இந்தக் காட்சியில் ஒரு திரைப்படப்பாடலை ஒலிக்க  விட்டால்?

  ராமன் எத்தனை ராமனடி என்ற படத்தில் கண்ணதாசன் எழுதிய நிலவு வந்து பாடுமோ என்ற பாடல் (இசை எம் எஸ் விசுவநாதன் பாடியவர் பி சுசீலா) http://www.raaga.com/player4/?id=27068&mode=100&rand=0.446934545179829

   நிலவு வந்து பாடுமோ சிலை எழுந்து ஆடுமோ

  பலர் நிறைந்த சபையினிலே பண்பு கூட மாறினால்…

  நிலவு வந்து பாடுமோ சிலை எழுந்து ஆடுமோ

  தலை குனிந்த பெண்களும் தலை நிமிர்ந்த ஆண்களும்

  நிலை குலைந்து போன பின் நீதி எங்கு வாழுமோ

  அனுபவிக்கும் அவசரம் ஆடை மாற்றும் அதிசயம்

  முடிவில்லாத போதையில் முகம் மறந்து போகுமோ

  பாரதியின் பாஞ்சாலி கோபம் கொப்பளிக்க கேட்டதை இந்த நாயகி வருத்தமாகக் கேட்கிறாள். இந்த திரைப்பட நாயகி சபதம் போடும் வகையில்லை. விடியும்போது விடியட்டும் என்று விரக்தியில் பாடுகிறாள். பலர் நிறைந்த சபை, பண்பு கூட மாறினால், நீதி எங்கு வாழுமோ, ஆடை மற்றும் அதிசயம் என்று கௌரவர் சபை பற்றி நிறைய hints கொடுக்கிறார் கவிஞர்.

   இதே காட்சிக்கு இன்னொரு பாடலையும் பொருத்தலாம் என்று தோன்றுகிறது. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வாலி எழுதிய ஆடாமல் ஆடுகிறேன் என்ற பாடல் (இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் பி சுசீலா)  http://www.raaga.com/player4/?id=46631&mode=100&rand=0.26648150896653533

  ஆடாமல் ஆடுகிறேன் பாடாமல் பாடுகிறேன்

  ஆண்டவனைத் தேடுகிறேன் வா வா வா

  விதியே உன் கை நீட்டி வலை வீசலாம்

  ஊரார்கள் என்னை பார்த்து விலை பேசலாம்

  அழகென்ற பொருள் வாங்க பலர் கூடலாம்

  அன்பென்ற மனம் வாங்க யார் கூடுவார்

  குயிலே உன் சிறகொடித்து இசை கேட்கிறார்

  மயிலே உன் காலொடித்து நடம் பார்க்கிறார்

  இளம்பெண்ணின் கண்ணீரை யார் மாற்றுவார்

  எறிகின்ற நெஞ்சைத்தை யார் தேற்றுவார்

  இதுவும் வஞ்சகர் கூடி நிற்கும் இடம். என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கும் நாயகி. அடிமையாக நடத்தப்படுகிறாள். வாலி பாஞ்சாலியின் நிலையை சொல்வது போலவே எழுதுகிறார். பாஞ்சாலி கண்ணனை கூப்பிட்டாள். இவள் ஆண்டவனைத் தேடுகிறாள்.

  சரியாக இருக்கிறதா? நீங்கள் சொல்லுங்கள்

  மோகனகிருஷ்ணன்

  202/365

   
  • Saba-Thambi 8:44 pm on June 21, 2013 Permalink | Reply

   பதிவு அருமை!

   …..தெரிந்த கதை, களம், ஆனால் பாத்திரங்களை / சம்பவங்களை வேறு கோணத்தில் காட்டும் historical fiction . இதனால் நம் மனதில் இருக்கும் நிறைய பிம்பங்கள் கலையும் அபாயம் உண்டு…..

   Its good to analyse characters in different angle. I remember a teacher at school who encouraged us to write an essay on : இராமாயணத்தில் இராமனா, இராவணனா இலக்கிய கதாநாயகன்? – to analyse their good qualities vs bad and it was an interesting time with some heated arguments.

   The famous philosopher G. Krishnamurti mentioned : not to dip in the same bath water over and over without changing the water (or he referred to that effect)

   A scene in Mani Ratnam’s movie RaavaNan was angled differently where the husband suspects his wife, but she was determined to go back and inquire about it – but the cunning husband (பொலீஸ் புத்தி) using it as a tactic to catch the thief. (This reminded me when Raman asked Seetha to “தீ குளிக்க” where she responded “தகாத காரியம் செய்தீர் ஆரிய புத்திரரே! – I dont know which version since I have the knowledge of Raamayanam via சடாயு காண் படலம் and kalki version (Raajaji?)

   Its good to have some healthy discussions as your post and agree to disagree. Keep picking the brain 🙂

   விதி என்று நினைக்கும் பெண் பாடும் பாடல்:
   திரைப்படம் : அவளுக்கென்று ஒரு மனம்
   பாடல்: எல்லோரும் பார்க்க..

  • rajnirams 12:21 pm on June 22, 2013 Permalink | Reply

   வித்தியாசமான பதிவு,வித்தியாசமான சிந்தனை,பொருத்தமான இரண்டு பாடல்கள். மூன்றாவதாக வேறு பாடலை யோசித்தேன்,கிடைக்கவில்லை:-))

  • amas32 8:23 pm on June 23, 2013 Permalink | Reply

   என்றோ நடந்தது என்று மறந்து விடக்கூடாதென்று இன்றும் நடக்கிறது இந்த மாதிரிக் கொடுமைகள்! இதில் அழுது புலம்பினால் என்ன, வீறு கொண்டு சபதம் இட்டால் என்ன, பெண் படும் துன்பங்கள் மாறி விட்டனவா? இதோ ஒரு வன்னியப் பெண் கணவனைப் பிரிந்து தாய் வீடு சென்றுள்ளாள். அவள் சபித்தாளா அல்லது அழுதாளா? என்ன செய்தாள் என்று யாருக்குத் தெரியும்? சமூகம் என்ன பதில் வைத்திருக்கிறது?

   amas32

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel