Updates from April, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • என். சொக்கன் 1:27 pm on April 17, 2013 Permalink | Reply  

  சந்தோஷக் குப்பை 

  • படம்: யூத்
  • பாடல்: சந்தோஷம், சந்தோஷம்
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: மணி ஷர்மா
  • பாடியவர்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
  • Link: http://www.youtube.com/watch?v=PljReF6wMps

  உள்ளம் என்பது, கவலைகள் நிரப்பும்

  குப்பைத்தொட்டி இல்லை!

  உள்ளம் என்பது பூந்தொட்டி ஆனால்

  நாளை துன்பம் இல்லை!

  நண்பர் மோகன கிருஷ்ணனுடன் நேற்று ஒரு சின்ன விவாதம். எழுத்தாளர் ஒருவருடைய படைப்புகளைக் ‘குப்பை’ என்று நான் விமர்சிக்க, அவர் செல்லமாகக் கோபித்துக்கொண்டார், ‘எனக்கும் அவருடைய எழுத்துகள் பிடிக்காது, ஆனால் அதற்காக அவற்றைக் குப்பை என்று சொல்வது நியாயமில்லை!’

  நானும் ஏட்டிக்குப் போட்டியாக அவருக்குப் பதில் சொன்னேன், ‘எனக்குப் பிடிக்காததைக் குப்பை என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது?’

  அதன்பிறகுதான் யோசித்தேன், தமிழில் ‘குப்பை’ என்பது உண்மையில் கேவலமான பொருளைக் கொண்ட வார்த்தை இல்லையே, அதன் அர்த்தம் ‘குவியல்’தானே?

  உதாரணமாக, ‘அழகின் சிரிப்பு’ நூலில் பாரதிதாசனின் வர்ணனை ஒன்று இப்படிச் செல்கிறது:

  அருவிகள், வைரத் தொங்கல்!

  ….அடர்கொடி, பச்சைப் பட்டே!

  குருவிகள், தங்கக் கட்டி!

  ….குளிர்மலர், மணியின் குப்பை!

  எருதின்மேல் பாயும் வேங்கை

  ….நிலவுமேல் எழுந்த மின்னல்,

  சருகெலாம் ஒளிசேர் தங்கத்

  ….தகடுகள் பாரடா நீ!

  இங்கே ‘மணியின் குப்பை’ என்றால், விலைமதிக்கமுடியாத மணிகள் நிறைந்த குவியல் என்று அர்த்தம், மலர்க் குவியலை மணிக் குவியலுக்கு ஒப்பிடுகிறார் பாரதிதாசன்.

  கம்ப ராமாயணத்தில் தொடங்கி இப்படி நிறைய உதாரணங்கள் காட்டமுடியும், ’குப்பை’ என்ற சொல்லுக்குப் பொருள், குவியல், செல்வக் குப்பை, ரத்தினக் குப்பை, காய்கறிக் குப்பை, நெல் குப்பை, மலர்க் குப்பை…

  ஆனால் இன்று நாம் ‘குப்பை’ என்றாலே வீசி எறியப்படவேண்டிய, பயனற்ற ஒன்று என்ற அர்த்தத்தில்தான் பயன்படுத்துகிறோம், ‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்று பழமொழிகூட இருக்கிறது.

  அது சரி, ‘இவர் முப்பது வருஷமா இந்தக் கம்பெனியில குப்பை கொட்டியிருக்கார்’ என்பதுபோன்ற வாசகங்களின் அர்த்தம் என்னவாக இருக்கும்? குப்பைக்கு இழிவான பொருள் இருந்தால், இந்த இடத்தில் பொருந்தாதே, முப்பது வருஷமாக இவர் செய்ததெல்லாம் வீண் என்ற அர்த்தம் வந்துவிடுமே!

  வயலில் வேலை செய்கிறவர்கள் பயிரை (அதாவது, விளைச்சலின் பலனை) அறுவடை செய்து ஓரமாகக் குவிப்பார்கள், அதாவது, கொட்டிக் குப்பையாக்குவார்கள். அதுபோல, இந்த அலுவலகத்தில் அவர் முப்பது வருடங்களாகப் பல நல்ல பணிகளைச் செய்து குவித்திருக்கிறார், குப்பை கொட்டியிருக்கிறார்!

  முக்கியமான குறிப்பு, இது அகராதிப் பொருள் அல்ல, என்னுடைய சுவாரஸ்யமான ஊகம்மட்டுமே, உங்களுடைய கருத்துகளை எதிர்பார்க்கிறேன்!

  ***

  என். சொக்கன் …

  17 04 2013

  137/365

   
  • n_shekar 1:36 pm on April 17, 2013 Permalink | Reply

   இதே மாதிரி நாற்றம் என்ற சொல்லும் தப்ப உபயோகத்தில் உள்ளதாக படுகிறது – அதை பற்றியும் எழுதலாமே – இது வரை எழுதாவிட்டால்!!

  • Saba-Thambi 3:09 pm on April 17, 2013 Permalink | Reply

   “பணம் பந்தியிலே குணம் குப்பையிலே” விளக்கம்
   (http://dinamani.com/specials/karuthuk_kalam/article1337300.ece)

  • amas32 6:26 pm on April 18, 2013 Permalink | Reply

   முன்பு அப்படி அந்தப் பொருளில் இருந்திருக்க்அலாம். ஆனால் இப்பொழுது குப்பை என்றால் வெண்டாத அல்லது கெட்டுப் போன என்ற அர்த்ததில் தானே வருகிறது.

   On a different note, I too was following the conversational thread you had with MohanaKrishnan regarding Chetan Bhagat. I am not a fan of his writing too. I get really annoyed when I read certain portions of his novel. But still I have read all of his books. Why is that, I wonder!

   amas32

 • G.Ra ஜிரா 11:22 am on January 14, 2013 Permalink | Reply
  Tags: பொங்கல், Pongal   

  பொங்கலோ பொங்கல் 

  நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் மற்றும் தைப்புத்தாண்டு வாழ்த்துகள். இந்தத் திருநாள் அனைவருக்கும் நல்ல வாழ்க்கையையும் அறிவையும் அன்பையும் அருளையும் கொடுக்கட்டும்.

  ”ஏன் உழவு செய்கின்றீர்கள்? விட்டுவிட்டு வாருங்கள்” என்று ஒரு பிரதமரே சொல்லும் அவல நிலையில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதும் அதன் பெருமையை புரிந்து கொள்வதும் மிகமிகத் தேவையாகிறது.

  உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார். மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்வார். அந்த உழுதுண்டு வாழ்வோரே தொழுதுண்டு கொண்டாடும் பண்டிகைதான் தைத்திருநாள். தை பிறப்பு என்று சிறப்பாகப் போற்றப்படும் பண்டிகை இது. இந்த நன்னாளில் வேளாண்மை மீண்டும் சிறப்புற ஆண்டவனை வணங்குகிறேன்.

  இந்தப் பொங்கல் பண்டிகையின் பெருமையைச் சொல்லும் பாடல்கள் திரைப்படங்களில் நிறைய உள்ளன. ஆனால் அவைகளில் எல்லாம் ஆகச் சிறந்த பாடலாக நான் கருதுவது மருதகாசி அவர்கள் எழுதிய தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பாடல்தான்.

  தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்
  தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்
  தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
  ஆடியிலே வெதை வெதைச்சோம் தங்கமே தங்கம்
  ஐப்பசியில் களையெடுத்தோம் தங்கமே தங்கம்
  கார்த்திகையில் கதிராச்சு தங்கமே தங்கம்
  கார்த்திகையில் கதிராச்சு தங்கமே தங்கம்
  கழனியெல்லாம் பொன்னாச்சு தங்கமே தங்கம்
  படம் – தை பிறந்தால் வழி பிறக்கும்
  பாடியவர்கள் – டி.எம்.சௌந்தரராஜன் மற்றும் பி.லீலா
  பாடல் – ஏ.மருதகாசி
  இசை – கே.வி.மகாதேவன்

  அன்றன்று வேட்டையாடி அன்றன்று உண்ட மனிதன் நாகரிகம் கொண்டதற்கு அடையாளம் வேளாண்மைதான். ஆறு மாத உழைப்பும் ஆறு மாத ஓய்வுமாய் மனிதனை மாற்றியது வேளாண்மைதான். ஆகையால்தான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று பழமொழியே உண்டானது.

  பொங்கல் என்றாலே கரும்பை மறக்க முடியுமா? நீரை மொடாக் குடியாக குடித்து வளர்ந்து அந்த நீரிலே இனிப்பு கலந்து கொடுக்கும் புல்லே கரும்பு. அந்தக் கரும்புப்புல் காற்றில் லேசாக ஆடுவதைப் பார்க்கிறார் கவியரசர் கண்ணதாசன். கரும்பா பெண் என்னும் அரும்பா என்னும் ஐயத்தில் இப்படியொரு பாட்டை எழுதுகிறார். காதலும் கரும்பும் இனிப்பதால் ஒன்று. இரண்டும் பழசாக ஆக போதை கூட்டும் என்று தெரிந்து எழுதுகிறார்.

  தை மாதப் பொங்கலுக்கு
  தாய் தந்த செங்கரும்பே
  தள்ளாடி வாடி தங்கம் போலே
  மையாடும் பூவிழியில்
  மானாடும் நாடகத்தை
  மயங்கி மயங்கி ரசிக்க வேண்டும் வாடி
  நீ என்னை தேடுவதும்
  காணாமல் வாடுவதும்
  கடவுள் தந்த காதலடி வாடி
  படம் – நிலவே நீ சாட்சி
  பாடியவர் – இசையரசி பி.சுசீலா
  பாடல் – கவியரசர் கண்ணதாசன்
  இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

  தை பிறந்த வேளையில் எல்லோர் வீட்டிலும் புதுப்பானை இருக்கிறதா? எல்லோர் வீட்டிலும் புதுநெல் இருக்கிறதா? புத்தம் புதிதாய் கறந்த பாலும் அந்தப் பாலிலிருந்து எடுத்த நெய்யும் இருக்கிறதா? புதுக்கரும்பை ஆலையில் ஆட்டிச் சாறுபிழிந்து காய்ச்சி எடுத்த வெல்லம் இருக்கிறதா? இவையெல்லாம் இல்லாத ஏழைகளும் நாட்டில் உண்டு. அவர்களுக்குப் பொங்கல் இல்லையா?

  இருக்கிறது என்கிறார் கவியரசர் கண்ணதாசன். குடிசை வீட்டுக் கோமதகமான குழந்தையின் கன்னத்து முத்தத்து இனிப்பை விடவா சர்க்கரைப் பொங்கலும் செங்கரும்பும் இனித்து விடும்?

  பூஞ்சிட்டுக் கன்னங்கள்
  பொன்மணி தீபத்தில்
  பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே
  பொங்கல் பிறந்தாலும்
  தீபம் எரிந்தாலும்
  ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே
  படம் – துலாபாரம்
  பாடியவர் – இசையரசி பி.சுசீலா மற்றும் ஏழிசை வேந்தர் டி.எம்.சௌந்தரராஜன்
  பாடல் – கவியரசர் கண்ணதாசன்
  இசை – டி.தேவராஜன்

  ஏழைகள் கண்ணீரையெல்லாம் துடைக்கும் பொங்கல் பண்டிகைகள் இனிமே ஒவ்வொரு ஆண்டும் வர வேண்டும் என்று வேண்டும்.

  வளமையின் பண்டிகையான பொங்கலின் மற்றொரு வழமை மஞ்சளாகும். கொத்து மஞ்சளை புத்தம் புதிதாய் பறித்து மங்கலப் பொருளாய் வைப்பார்கள். அந்த மஞ்சளையே காய வைத்துப் பொடியாக்கிப் பயன்படுத்துவதும் உண்டு. மஞ்சள் மங்கலமாவது மங்கையில் மனதுக்கினிய வாழ்வில்தானே. அதை நினைத்துதான் காதலில் பொங்கல் வைக்கிறார் வாலி.

  பொங்கலு பொங்கலு வெக்க
  மஞ்சள மஞ்சள எடு
  தங்கச்சி தங்கச்சி தங்கச்சி
  புஞ்சையும் நஞ்சையும் இந்த பூமியும் சாமியும் இனி
  நம் கட்சி நம் கட்சி நம் கட்சி
  பூ பூக்கும் மாசம் தை மாசம்
  ஊரெங்கும் வீசும் பூவாசம்
  படம் – வருஷம் 16
  பாடியவர் – இசையரசி பி.சுசீலா
  பாடல் – வாலிபக் கவிஞர் வாலி
  இசை – இசைஞானி இளையராஜா

  எப்படியான சூழ்நிலையிலும் பொங்கல் கொண்டாட்டம் மகிழ்ச்சியைப் பெருக்கும். அந்த மகிழ்ச்சியை அப்படியே வாலி அவர்கள் வரிகளில் வார்த்துக் கொடுக்க, அத்தோடு இசையைக் கோர்த்துக் கொடுத்திருக்கிறார் இளையராஜா.

  தைப் பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ
  வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியைப் போற்றிச் சொல்லடியோ
  இந்தப் பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் தெய்வமடி
  இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி
  படம் – மகாநதி
  பாடியவர் – கே.எஸ்.சித்ரா
  பாடல் – வாலிபக் கவிஞர் வாலி
  இசை – இசைஞானி இளையராஜா

  இப்படி உழவும் தொழிலும் சிறந்த வேளாண் பெருமக்களின் பொங்கல் திருநாள் இன்றும் இருக்கிறது. எப்படி இருக்கிறது தெரியுமா?

  ஆடுங்கடா என்னச் சுத்தி
  நான் ஐயனாரு வெட்டுகத்தி
  பாடப் போறேன் என்னப் பத்தி
  கேளுங்கடா வாயப் பொத்தி
  கெடா வெட்டிப் பொங்கல் வெச்சா காளியாத்தா பொங்கலடா
  துள்ளிக்கிட்டு பொங்கல் வெச்சா ஜல்லிக்கட்டு பொங்கலடா
  போக்கிரிப் பொங்கல் போக்கிரிப் பொங்கல்
  படம் – போக்கிரி
  பாடியவர் – நவீன்
  பாடல் – கபிலன்
  இசை – மணி சர்மா

  இப்பிடிப் போக்கிரியான பொங்கல் மீண்டும் மறுவாழ்வு பெற்று வேளாண்மை சிறந்து மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று ஆனை கட்டிப் போரடிக்கும் அழகான தமிழகம் உருவாக இறைவனை வேண்டுகிறேன்.

  பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!

  அன்புடன்,
  ஜிரா

  044/365

   
  • kamala chandramani 12:16 pm on January 14, 2013 Permalink | Reply

   அருமையான பதிவு ராகவன். உழவர்கள் வாழ்வு மலர அரசாங்கம் நிறைய செய்யவேண்டும் என்று இறைவனை வணங்குகிறேன். சினிமாப் பாடல்களுடன் இலக்கியத்தைக் கலந்து மிக நல்ல பதிவுகளைத் தரும் உங்களுக்கும், திரு. சொக்கன், மோக்ரீஷ் அனைவருக்கும் நன்றி. பொங்கல் நல் வாழ்த்துகள்.

   • Niranjan 8:07 pm on January 14, 2013 Permalink | Reply

    அருமையான பதிவு 🙂 🙂 பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!

    • GiRa ஜிரா 8:52 pm on January 14, 2013 Permalink

     நன்றி நிரஞ்சன். இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் 🙂

   • amas32 8:38 pm on January 14, 2013 Permalink | Reply

    //பூஞ்சிட்டுக் கன்னங்கள்
    பொன்மணி தீபத்தில்
    பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே
    பொங்கல் பிறந்தாலும்
    தீபம் எரிந்தாலும்
    ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே/

    சாரதா அவர்களின் நடிப்பு அப்படியே கண் முன்னே நிற்கிறது. இதுவே வார்த்தைகள் சிறிது மாறி சோக கீதமாகவும் வரும்.

    வாழ்க்கை ஒரு வட்டம் என்பது உண்மையானால் வேளாண்மை மீண்டும் அதற்குண்டான மேன்மை நிலையை நிச்சயம் அடையும்!

    amas32

    • GiRa ஜிரா 8:53 pm on January 14, 2013 Permalink

     அருமையான பாடல் அது. சாரதாவுக்கு ஊர்வசி பட்டம் வாங்கிக் கொடுத்த படமல்லவா. மலையாளம் தொடங்கி தமிழ், தெலுங்கு என்று இந்தி வரைக்கும் சென்ற படமாயிற்றே.

   • GiRa ஜிரா 8:52 pm on January 14, 2013 Permalink | Reply

    இனிய பொங்கல் வாழ்த்துகள் அம்மா.

    உண்மைதான். உழவருக்கு அரசாங்கம் ஆதரவு தெரிவிக்காமல் போகுமானால் இறைவனே இறங்கி வந்து ஆதரவு தெரிவிக்க வேண்டி வரும். அன்று அரசாங்கமும் அதற்கு ஆதரவாக இருந்தவர்களும் தொழுதுண்டு வாழ வேண்டியவர்கள் ஆவார்கள்.

  • Rajan D. R 11:50 am on January 18, 2013 Permalink | Reply

   மசக்கைக்கு முன்னும் பின்னும் கூட புளிப்பு காரம் இவற்றின் மீது பெண்களுக்கு ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கின்றது. பானிபூரி மீது அவர்கள் கொண்டிருக்கும் மோகத்தை உளவியல் மற்றும் பரினாம வளர்ச்சி பார்வையில் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கின்றது

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel