செங்காத்தில் ஒரு தத்தை 

நேற்று காரில் சென்று கொண்டிருந்த போது கருத்தம்மா படத்திலிருந்து “காடு பொட்டக் காடு செங்காத்து வீசும் காடு” என்ற பாட்டு ஓடியது.

கவிஞர் வைரமுத்து எழுதி ஏ.ஆர்.ரகுமான் இசையில் இயக்குனர் பாரதிராஜாவும் பாடகர் மலேசியா வாசுதேவனும் டி.கே.கலாவும் இணைந்து பாடிய அற்புதமான பாடல் அது.

மழை கண்டு அறியாத கரிசல் காட்டின் நிலையைச் சொல்லும் பாடல் அது. அதில் கீழ்க்கண்ட வரிகளைக் கேட்கும் போது சிந்தனை ஓடியது.

மாடு தத்த மாடு
அது ஓடும் ரொம்ப தூரம்
வாழ்க்க தத்த வாழ்க்க
இது போகும் ரொம்ப காலம்

ஏழ்மையைச் சொல்லும் சோக வரிகளானாலும் வளமையும் அழகும் நிறைந்த கருத்துள்ள வரிகள்.

மாடு என்றாலே விறுவிறுப்பும் ஓட்டமும் தான். ஆனால் இங்கு மாட்டையே தத்த மாடு என்கிறார் கவிஞர்.

வேகம் குறைந்த மாட்டைத்தான் தத்த மாடு என்பார்கள். அந்த மாடுதான் தத்தித் தத்தி கரிசல் மக்களின் உழவுக்குப் பயன்படுகிறது. அப்படியான மாட்டைப் பயன்படுத்துகிறவர்கள் வாழ்க்கையும் தத்தித் தத்தித்தான் போகிறது. அதுதான் “வாழ்க்க தத்த வாழ்க்க”.

தத்தை என்ற சொல் கிளியைக் குறிப்பது. தத்தித் தத்தி நடப்பதால் அதற்குத் தத்தை என்று பெயர்.

செவ்வாய்க் கிளியைத் தத்தை என்றலும்
நூல் – தொல்காப்பியம்
அதிகாரம் – பொருளதிகாரம்
இயல் – மரபியல்
எழுதியவர் – தொல்காப்பியர்

ஆகா கிளி என்ற சொல் தொல்காப்பியர் காலத்திலேயே இருந்திருக்கிறது. அதை இன்றும் சிதையாமல் பயன்படுத்தி வருகிறோம். என்ன… பலர் வாயில் கிளி என்பது கிலியாக வருகிறது.

செக்கச் சிவந்த வாயினை உடைய கிளிக்கு தத்தை என்று மற்றொரு பெயரும் உண்டு.

கிளியைச் சொன்னால் அடுத்து தொல்காப்பியர் எதைப் பற்றி சொல்லியிருக்க வேண்டும்? ஆம். பூனையைத்தான். அதனால்தானோ என்னவோ நாமும் கிளியை வளர்த்து பூனை கையில் கொடுப்பதாக பழமொழி சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

செவ்வாய்க் கிளியைத் தத்தை என்றலும்
வெவ்வாய் வெருகினைப் பூசை என்றலும்

வெருகு என்பதும் பூனையையே குறிக்கும். பூசை என்றும் அதற்குப் பெயர் உண்டு. மலையாளத்தின் இன்றும் தத்தம்மே என்பது கிளியையும் பூச்சா என்பது பூனையையும் குறிக்கும்.

தத்தம்மே பூச்சா பூச்சா” என்று மலையாளத் திரைப்படப் பாடலே உண்டு.

ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சீவக சிந்தாமணியின் கதாநாயகன் சீவகன். அவனுக்கு பல மனைவியர். அவர்களில் ஒருத்திக்கு தத்தை என்றே பெயராம். அவளுக்குத் தத்தை என்று பெயர் இருப்பதால் தான் அவள் முதல் மனைவியாக பட்டத்தரசியாக இருந்தாள் என்று திருத்தக்கதேவர் சொல்கிறார்.

இன்னொரு கிளி தகவல். எல்லாக் கடவுள்களுக்கும் வாகனம் உண்டல்லவா. அதுபோல கிளியும் ஒரு கடவுளுக்கு வாகனம். எந்தக் கடவுளுக்கு என்றா கேட்கின்றீர்கள்? அன்றாடம் மக்களையெல்லாம் பாடாப் படுத்தும் மன்மதக் கடவுளின் வாகனம் தான் கிளி.

பாடல் – காடு பொட்டக் காடு
வரிகள் – கவிஞர் வைரமுத்து
பாடியவர்கள் – மலேசியா வாசுதேவன், டி.கே.கலா, பாரதிராஜா
இசை – ஏ.ஆர்.ரகுமான்
படம் – கருத்தம்மா
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=4T0aPXIl3tM

அன்புடன்,
ஜிரா

326/365