இசைத் தமிழ் நீர் செய்த அருஞ்சாதனை

  • படம்: காதல் மன்னன்
  • பாடல்: மெட்டுத் தேடி
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: எம். எஸ். விஸ்வநாதன்
  • பாடியவர்: எம். எஸ். விஸ்வநாதன்
  • Link: http://www.youtube.com/watch?v=N0XuO3alLV8
மெட்டுத் தேடித் தவிக்குது ஒரு பாட்டு
அந்தப் பாட்டுக்குள்ளே துடிக்குது ஒரு மெட்டு
அதைக் கண்ணதாசன் கண்டு சொன்னா ரசிக்காதா?
இல்லை விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா?

மெட்டுக்குப் பாட்டா அல்லது பாட்டுக்கு மெட்டா?

இசைக்கு வரிகள் மேன்மை தருகின்றனவா? அல்லது வரிகளுக்கு இசையால் பெருமையா?

தமிழின் மிகச் சிறந்த இசையமைப்பாளர் : கவிஞர் இணையை முன்வைத்துக் கேட்டால், கண்ணதாசனுக்கு விஸ்வநாதன் ஆதாரமா? அல்லது விஸ்வநாதனுக்குக் கண்ணதாசனா?

இக்கேள்விக்கு ஒரு பதில்தான் இருக்கவேண்டுமா? பட்டிமன்றம் பாணியில் “இரண்டும்” என்று சொல்லமுடியாதா?

தமிழில் இசை கொண்டாடப்பட்ட அளவு கவிதை கொண்டாடப்படவில்லை என்பது என் ஆதங்கம். குறிப்பாக திரைப்பாடல் வரிகள்!

மானே, தேனே மீட்டர் வரிகளைத் தாண்டியும், சொல்லப்போனால் அந்தக் கட்டாயங்களுக்குள்ளாகவே படச் சூழலுக்கு இசைந்தபடி நம் திரைக் கவிஞர்கள் பெருஞ்சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். அவற்றைக் கம்பனோடும் இளங்கோவோடும் ஒப்பிட்டுத் தரக்குறைவாகப் பேசுவதைவிட, இதுவும் ஒரு கலை வடிவம் என ஏற்பதில் என்ன தயக்கம்?

மற்ற கலைகளைப்போலவே இங்கும் பொழுதுபோக்கு உண்டு, உன்னதம் உண்டு, மொக்கைகளும் உண்டு. எல்லாவற்றையும் ரசிக்கும் மனம் இருக்கவேண்டுவதில்லை, வடிகட்டி வேண்டியதை எடுத்துக்கொள்ளலாம், எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஏனெனில், மெட்டில்லாத பாட்டு, பாட்டில்லாத மெட்டு இரண்டையும்விட, மெட்டுடன் பாட்டு தனி சுகம். புரிந்தவர்கள் பாக்கியவான்கள்!

தமிழின் அத்துணை திரைப் பாடலாசிரியர்களுக்கும் மனப்பூர்வமான நன்றி சொல்லி நாலு வரி நோட்டிலிருந்து விடை பெறுகிறேன் 🙂

***

என். சொக்கன் …

30 11 2013

363/365