Updates from February, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • என். சொக்கன் 10:04 am on February 12, 2013 Permalink | Reply  

    பொய்க்கும் மெய்க்கும் இடையே 

    • படம்: தாயைக் காத்த தனயன்
    • பாடல்: மூடித் திறந்த இமை இரண்டும் பார், பார் என்றன
    • எழுதியவர்: கண்ணதாசன்
    • இசை: கே. வி. மகாதேவன்
    • பாடியவர்கள்: டி. எம். சௌந்தர்ராஜன், பி. சுசீலா
    • Link: http://www.youtube.com/watch?v=-MiDUzvViSo

    அன்னப் பொடிநடை முன்னும் பின்னும் ஐயோ, ஐயோ என்றது,

    வண்ணக் கொடி இடை கண்ணில் விழுந்து மெய்யோ, பொய்யோ என்றது,

    கன்னிப் பருவம் உன்னைக் கண்டு காதல், காதல் என்றது,

    காதல் என்றதும் வேறோர் இதயம் நாணம், நாணம் என்றது!

    கண்ணதாசனை நாம் கம்ப தாசன் என்றும் அழைக்கலாம். அந்த அளவுக்குக் கம்பன்மீது கவிஞருக்குப் பற்று அதிகம்.

    இதற்குச் சாட்சியாக, கண்ணதாசனின் தனிப்பாடல்களில் இருந்து சில வரிகள்:

    அந்நாளில்,

    அழகு வெண்ணெய் நல்லூரில்,

    கம்பனது வீட்டில்

    கணக்கெழுதி வாழ்ந்தேனோ!

    • பத்தாயிரம் கவிதை

    சத்தாக அள்ளிவைத்த

    சத்தான கம்பனுக்கு ஈடு, இன்னும்

    வித்தாகவில்லை என்று பாடு!

    • கம்பன் எனும் மாநதியில்

    கால்நதிபோல் ஆவதென

    நம்புகிறேன் பாட்டெழுதும் நானே, அந்த

    நாயகன்தான் என்ன நினைப்பானோ!

    தனிப்பாடல்களில்மட்டுமல்ல, திரைப்பாடல்களிலும் கவிஞரின் கம்பன் பற்று தெரியும். உதாரணமாக, ‘செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்’ என்ற பாடலில் பலவிதமான இயற்கைக் காட்சிகளைச் சொல்லிப்போகும் கவிஞர், ‘இதழை வருடும் பனியின் காற்று’ என்று சொல்லிவிட்டு, அதற்குப் பொருத்தமான உவமையாகக் ‘கம்பன் செய்த வர்ணனை’ என்கிறார். அப்படியென்றால் கம்பனின் வர்ணனைப் பதிவுகளை அவர் எந்த அளவு ரசித்துப் படித்திருக்கவேண்டும் என்று நாம் ஊகித்துக்கொள்ளலாம்!

    கம்ப ராமாயணத்தை முழுவதுமாகப் படித்து ருசித்து, அதில் உள்ள அழகழகான அம்சங்களைத் திரைப்பாடல்களில் மிக எளிமையாக, யாரும் புரிந்துகொள்ளும்வகையில் உரித்துத் தந்தவர் கண்ணதாசன். அப்படிச் சில வரிகளைதான் இன்றைக்கு நாம் பார்க்கிறோம்.

    அன்னம் போன்ற அவளுடைய பொடிநடையைப் பார்க்கும்போது மனம் ‘அடடா!’ என்று வியந்து நிற்கிறது, அப்போது அவளுடைய அழகான கொடி போன்ற மெல்லிய இடை கண்ணில் தோன்றி, மறுகணம் காணாமல் போய்விடுகிறது, நிஜத்தில் அங்கே இடை உள்ளதா, அல்லது அது பொய்யா என்று உள்ளம் மயங்குகிறது.

    இந்த வாக்கியங்கள் சீதை, ராமனைப்பற்றிக் கம்பர் எழுதியவை:

    வெய்யோன் ஒளி தன் மேனியின் விரி சோதியின் மறைய,

    பொய்யே எனும் இடையாளொடும், இளையானொடும் போனான்,

    ’மையோ, மரகதமோ, மறி கடலோ, மழை முகிலோ,

    ஐயோ இவன் வடிவு!’ என்பது ஓர் அழியா அழகு உடையான்!

    ராமனின் உடலில் இருந்து வெளிப்படும் பிரகாசத்துக்கு முன்னால், அந்தச் சூரிய ஒளிகூடத் தோற்றுவிடுகிறது. ‘அங்கே இடுப்பு உள்ளது பொய்யே’ என்று எண்ணத் தோன்றும் மெலிந்த இடை கொண்ட சீதையோடும், தம்பி லட்சுமணனோடும் நடந்து செல்லும் அந்த ராமனைஎப்படி வர்ணிப்பது? கருத்த மை என்பதா? மரகதம் என்பதா? கடல் என்பதா? மேகம் என்பதா? அடடா, இவனுடைய அழியாத அழகுக்குப் பொருத்தமான உவமை சிக்க மறுக்கிறதே!

    ***

    என். சொக்கன் …

    12 02 2013

    073/365

     
    • amas32 10:54 am on February 12, 2013 Permalink | Reply

      கம்பனை இரசிப்பதா கண்ணதாசனை இரசிப்பதா? இரசிக்கும் மனம் கொடுத்த இறைவா உமக்கு என் நன்றி 🙂 நன்றி சொக்கரே இந்த கம்பாரிசனைக் கொண்டு வந்ததற்கு! கம்பன் நமக்குக் கிடைத்த வரம்

      amas32.

      • என். சொக்கன் 11:02 am on February 12, 2013 Permalink | Reply

        கம்பனுக்கும் கண்ணதாசனுக்கும் ‘ன்’ விகுதி, எனக்குமட்டும் ‘ர்’ விகுதி எதற்கு? 🙂

      • Rajnirams 11:30 am on February 12, 2013 Permalink | Reply

        கம்பனையும் கண்ணதாசனையும் இணைத்து இனிக்க வைத்துவிட்டீர்கள்.மேலும் கண்ணதாசன் கம்பனோடு சீதையையும் இரண்டு பாடல்களில் அழைத்து வந்திருக்கிறார்-ஆலயமணி -கல்லெல்லாம் பாடலில் கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா என்றும்
        பாட்டும் பரதமும் -தெய்வத்தின் பாடலில் கம்பனை கூப்பிடுங்கள் சீதையை காண்பான் என்றும் எழுதியிருப்பார்.நிழல் நிஜமாகிறது பாடலில் கம்பன் ஏமாந்தான் இளம் கன்னியரை ஒரு மலரேன்றானே கற்பனை செய்தானே என்றும் கலக்கியிருப்பார். நன்றி.

  • என். சொக்கன் 11:28 am on January 22, 2013 Permalink | Reply  

    ஏன் நின்றாய்? 

    • படம்: ஜீன்ஸ்
    • பாடல்: எனக்கே எனக்கா
    • எழுதியவர்: வைரமுத்து
    • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
    • பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், ஹரிணி
    • Link: http://www.youtube.com/watch?v=QIyBk0HH7zo

    ஒற்றைக் காலிலே பூக்கள் நிற்பது

    உன் கூந்தலில் நின்றாடத்தான்,

    பூமாலையே, பூச்சூட வா!

    பூவின் காம்பை ஒற்றைக் காலாக வர்ணித்து, அதனை ஒற்றைக் காலில் நின்று தவம் செய்யும் முனிவர்களோடு ஒப்பிட்டு, ‘பூக்களின் இந்தத் தவம் எதற்காக? அவளுடைய கூந்தலில் சென்று சேர்வதற்காகதானா?’ என்று கேள்வி எழுப்புகிறது இந்தப் பாடல். ‘பூக்களின் தவத்தை முடித்து வை, அவற்றைப் பறித்து உன் கூந்தலில் சூடிக்கொள்’ எனக் காதலியிடம் ஒரு கோரிக்கையையும் வைக்கிறது.

    அருமையான இந்தக் கற்பனை, முத்தொள்ளாயிர வெண்பா ஒன்றில் இருக்கிறது. அதன் சாரத்தை இன்றைய காதல் பாட்டுக்கு ஏற்ப அழகாக ரீமிக்ஸ் செய்து பயன்படுத்தியிருக்கிறார் வைரமுத்து.

    கார் நறு நீலம் கடிக் கயத்து வைகலும்

    நீர்நிலை நின்ற தவம்கொலோ, கூர்நுனைவேல்

    வண்டு இருக்கும் நக்க தார் வாமான் வழுதியால்

    கொண்டு இருக்கப் பெற்ற குணம்

    நல்ல மணம் கொண்ட, நீல நிறக் குவளைப் பூவே, தினந்தோறும் நீர்நிலைக்கு மத்தியில் நின்றுகொண்டு தவம் செய்கிறாயே, எதற்காக?

    எனக்கு விஷயம் புரிந்துவிட்டது, கூரான வேலை ஏந்தியவன், வண்டுகள் மொய்க்கும் மலர் மாலைகளை அணிந்தவன், விரைவாகச் செல்லும் குதிரையைக் கொண்டவன், அந்தப் பாண்டியன் வழுதியின் மார்பைச் சென்று சேர நீ விரும்புகிறாய், அதற்காக இப்படி நாள்முழுவதும் தவம் இருக்கிறாய், சரிதானே?

    ***

    என். சொக்கன் …

    22 01 2013

    052/365

     
    • amas32 11:48 am on January 22, 2013 Permalink | Reply

      இந்தப் பாடலில் எல்லா வரிகளுமே அழகும் பொருட்செறிவும் நிறைந்தவை 🙂 நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இந்த வரிகளும் ரொம்ப அழகு 🙂 பூமாலையே பூச்சூடவா என்ற வரியும் ஐஸ்வர்யாவின் அழக்குக்கு ஒரு feather in her cap 🙂

      amas32

    • kamala chandramani 2:52 pm on January 22, 2013 Permalink | Reply

      அருமையான விளக்கம், பூக்களைப் பார்க்கையில் தவம்தான் நினைவுவரும்.

    • GiRa ஜிரா 11:07 am on January 23, 2013 Permalink | Reply

      Wonderful.

      இதே கருத்தை வைமு வெள்ளி மலரே வெள்ளி மலரே பாட்டில் ஒற்றைக் காலில் நெடுவனம் கண்டாய் என்று மீள்பயன்படுத்தியிருக்கிறார்

  • என். சொக்கன் 10:05 am on December 14, 2012 Permalink | Reply  

    என் காந்தா! 

    • படம்: கண்ட நாள் முதல்
    • பாடல்: கண்ட நாள் முதலாய்
    • எழுதியவர்: என். எஸ். சிதம்பரம்
    • இசை: என். எஸ். சிதம்பரம் / யுவன் ஷங்கர் ராஜா
    • பாடியவர்: பூஜா, சுபிக்‌ஷா
    • Link: http://www.youtube.com/watch?v=MD9j8xxvYe8

    கண்ட நாள் முதலாய், காதல் பெருகுதடி,

    கையினில் வேல் பிடித்த, கருணை சிவ பாலனை!

    வண்டிசை பாடும் எழில் வசந்தப் பூங்காவில்,

    வந்து சுகம் தந்த கந்தனை, என் காந்தனை!

    என். எஸ். சிதம்பரம் எழுதி இசையமைத்த பழைய பாடல் இது. பின்னர் அதனை ரீமிக்ஸ் செய்து ஒரு படத்தில் பயன்படுத்திக்கொண்டார் யுவன் ஷங்கர் ராஜா. பாடல் வரிகளை மாற்றவில்லை.

    இந்தப் பாடலில் நாம் கவனிக்கவிருக்கும் வார்த்தை ‘காந்தன்’.

    முருகனைப் பாட வந்த என். எஸ். சிதம்பரம், கந்தன், காந்தன் என்று இயைபுத் தொடைக்காகமட்டும் அந்த வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. ’காந்தன்’ என்றால் கணவன் என்று அர்த்தம். அந்தக் கந்தனையே தன்னுடைய கணவனாக நினைத்துப் பாடும் ஒரு பெண்ணின் மொழியாக இந்தப் பாடல் உள்ளது.

    கண்ணனைப் பலவிதமாகக் கற்பனை செய்து எழுதிய பாரதி, ‘கண்ணன்: என் காதலன்’க்கும் ‘கண்ணன்: என் தந்தை’க்கும் இடையே, ‘கண்ணன்: என் காந்தன்’ என்று ஒரு பாட்டு எழுதியுள்ளார்.

    ’லஷ்மி காந்தன்’ என்று பெயர் கேள்விப்பட்டிருப்பீர்கள், அதன் அர்த்தம், திருமகளின் கணவன்.

    இதே ‘காந்தன்’ என்ற பெயர், ’சிறந்த ஆண்’ என்பதுபோன்ற பொருளிலும் வருகிறது என்று நினைக்கிறேன், எழுத்தாளர்‘ஜெய காந்தன்’ பெயருக்கு அர்த்தம், வெற்றியின் கணவன்? அல்லது, தொடர்ந்து ஜெயித்துக்கொண்டே இருக்கும் ஆண் மகன்?

    இந்தத் திசையில் இன்னும் கொஞ்சம் ஆராய்ச்சியை நீட்டினால், விஜயகாந்த், ரஜினிகாந்த் போன்ற பெயர்களும் விஜயகாந்தன், ரஜினிகாந்தன் என்பதன் சுருக்கம்தானா? ஈர்க்கும் காந்தத்துக்கும் இவற்றுக்கும் என்ன தொடர்பு?

    போகட்டும், ‘காந்தன்’ என்றால் கணவன், அதற்குப் பெண்பால், அதாவது ‘மனைவி’க்கு இணையான சொல் என்ன?

    ’காந்தி’ அல்ல, காந்தை!

    இதற்குச் சான்றாக, நீதி நூல் பாடல் ஒன்றில் ‘புரவிகள்போல் காந்தனும் காந்தையும்’ என்கிறது. அதாவது, கணவனும் மனைவியும் ஒரு வண்டியில் பூட்டிய இரண்டு குதிரைகளைப்போல் ஒருமித்த சிந்தனையோடு இருக்கவேண்டுமாம்!

    ***

    என். சொக்கன் …

    14 12 2012

    13/365

     
c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel