ஆடும் கிளி
- படம்: அமுதவல்லி
- பாடல்: ஆடைகட்டி வந்த நிலவோ
- எழுதியவர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
- இசை: விஸ்வநாதன், ராமமூர்த்தி
- பாடியவர்கள்: டி. ஆர். மகாலிங்கம், பி. சுசீலா
- Link: http://www.youtube.com/watch?v=G8QcPKPYc2Y
கிளைதான் இருந்தும், கனியே சுமந்து
தனியே கிடந்த கொடிதானே,
கண்ணாளனுடன் கலந்து ஆனந்தம்தான் பெறக்
காவினில் ஆடும் கிளிதானே!
பட்டுக்கோட்டையார் கிளை, கனி, கொடி என்று எதையெல்லாம் வர்ணிக்கிறார் என்று யோசித்தபடி அடுத்த வரிக்கு வாருங்கள், அதென்ன ‘காவினில்’ ஆடும் கிளி?
தமிழில் ‘கா’ என்ற சொல்லுக்குச் சோலை அல்லது தோட்டம் என்று பொருள், காக்கப்படும் (வேலி போட்ட) தோட்டம் என்று விவரிக்கிறவர்களும் உண்டு.
இந்தச் சொல் நமக்கு அதிகப் பழக்கமில்லாததாக இருக்கலாம். ஆனால், ‘காவிரி’ என்ற நதியின் பெயருக்கே ‘கா + விரி’, அதாவது, சோலைகளை விரித்துச் செல்லும் நீர்வளம் நிறைந்த ஆறு, அல்லது சோலைகளுக்குள் விரிந்து பரவும் ஆறு என்றெல்லாம் பொருள் சொல்கிறார்கள்.
அப்போ காவேரி?
அதுவும் மக்கள் பயன்பாட்டில் உள்ளது. கவேர முனிவரின் மகள் என்பதால் அவளுக்குக் ‘காவேரி’ என்று பெயர் வந்ததாம். ஜனகன் மகள் ஜானகி, கேகயன் மகள் கைகேயி என்பதுபோல!
பெயர் / அதற்கான காரணம் எதுவானால் என்ன? ஆற்றில் தண்ணீர் வந்தால் சரி. நீரால் அமையும் உலகு!
***
என். சொக்கன் …
13 11 2013
346/365
amas32 7:43 pm on November 15, 2013 Permalink |
பூங்கா என்பத்தும் பூஞ்சோலை தான். ஒரே எழுத்தில் எத்தனை அழகியப் பொருளைத் தரும் ஒரு சொல்லைத் தமிழ் தருகிறது! தமிழ் வாழ்க 🙂
amas32