Updates from July, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • என். சொக்கன் 11:48 pm on July 17, 2013 Permalink | Reply  

    ஒட்டாத உதடுகள் 

    • படம்: வில்லுப்பாட்டுக்காரன்
    • பாடல்: தந்தேன் தந்தேன்
    • எழுதியவர்: வாலி
    • இசை: இளையராஜா
    • பாடியவர்: மலேசியா வாசுதேவன்
    • Link: http://www.youtube.com/watch?v=0OFeSDoMf_8

    ஏழைகள் காதுகளில், செந்தேன் அள்ளிச் சேர்க்கிற கலைஞனடி,

    தென்னாட்டுல இருக்கிற இதயங்களைச் சங்கீதத்தில் ஈர்க்கிற இளைஞனடி!

    நாட்டுல கேட்டுக்கடி இசையில் இங்கு நான் செஞ்ச சாதனைதான்,

    நாக்குல இருக்குதடி, எடுத்துத் தர ஆயிரங்கீர்த்தனைதான்!

    இந்தப் பாடலைப்பற்றிச் சொல்வதற்கு ஓர் அபூர்வமான விஷயம் இருக்கிறது, இது ‘நிரோட்டகம்’ என்ற வகையைச் சேர்ந்த பாடல்.

    நிரோட்டகம் என்பது சமஸ்கிருதச் சொல், நிர் + ஓட்டகம், அதாவது, உதடுகள் ஒட்டாமல் பாடப்படுகிற பாடல்.

    தமிழில் எத்தனையோ பாவகைகள் இருப்பினும், இதை ஒரு விசேஷமான வகையாகக் குறிப்பிட்டு இலக்கணம் வரையறுத்திருப்பதாகத் தெரியவில்லை. சினிமாவிலும் இந்த ஒரு பாடலில் வாலியைத் தவிர வேறு யாரும் இந்த வகையில் முயற்சி செய்திருக்கிறார்களா என்று அறியேன்.

    ஆச்சர்யமான விஷயம், உதடு ஒட்டாமல் பாடுவது என்றாலும், இந்த வரிகளைப் படிக்கும்போது அந்த சிரமமே தெரியாது. மிகவும் லகுவாக எழுதியிருப்பார் வாலி.

    காரணம், தமிழில் உச்சரிக்கும்போது உதடு ஒட்டுகிற எழுத்துகள் குறைவுதான். ப், ம் மற்றும் வ் என்ற மெய்யெழுத்துகள், இவை இடம்பெறுகிற உயிர்மெய் எழுத்துகள், இவற்றைமட்டும் தவிர்த்துவிட்டு மீதமிருக்கும் தமிழ் எழுத்துகளை வைத்து எழுதவேண்டியதுதான்!

    கொஞ்சம் சிரமம். ஆனால் ஜாலியான சிரமம், சும்மா ஒரு நாலு வரி முயற்சி செய்து பாருங்களேன்!

    ***

    என். சொக்கன் …

    17 07 2013

    228/365

     
    • Raj 12:00 am on July 18, 2013 Permalink | Reply

      Varigal vaali

      • என். சொக்கன் 12:02 am on July 18, 2013 Permalink | Reply

        இல்லைங்க, கங்கை அமரன்தான், கேசட் உறையில் பார்த்து உறுதிப்படுத்திக்கொண்டே எழுதினேன்

      • என். சொக்கன் 12:29 pm on July 18, 2013 Permalink | Reply

        It seems movie title says this song is written by Valee, Will correct, Thanks for pointing it out

    • GiRa ஜிரா 8:02 am on July 18, 2013 Permalink | Reply

      உதடுகள் ஒட்ட வேண்டும் என்பதற்குதான் தமிழில் உதடு ஒட்டாப் பாடால்களுக்கு இலக்கணம் இல்லையோ?! 🙂

      நிரொட்டகம் எனபதே பாதி வடமொழியும் பாதி தமிழும் கலந்த சொல் போலத் தோன்றுகிறது. மலையமாருதம் போல.

    • venkatramanan (@venkatramanan) 10:44 am on July 18, 2013 Permalink | Reply

      குறள் 489
      எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே
      செய்தற்கு அரிய செயல்

      http://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_49.%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

      எய்தற்கு அரியது இயைந்தக்கால்= பகையை வெல்லக் கருதும் அரசர் தம்மால் எய்துதற்குஅரிய காலம் வந்து கூடியக்கால்; அந்நிலையே செய்தற்கு அரிய செயல்= அது கழிவதற்கு முன்பே, அது கூடாவழித் தம்மால் செய்தற்கு அரிய வினைகளைச் செய்க.

      Regards
      Venkatramanan

    • Meenaks 11:12 am on July 18, 2013 Permalink | Reply

      ப், ம், வ் ஆகியவற்றின் அனைத்து உயிர்மெய் எழுத்துக்களையும் தவிர்க்க வேண்டும் அல்லவா?

      • என். சொக்கன் 12:29 pm on July 18, 2013 Permalink | Reply

        Yes, I am wrong, Will change the text, Sorry, and thanks for pointing out

    • rajinirams 1:49 pm on July 18, 2013 Permalink | Reply

      நிரோட்டகம் பற்றி அறிய வைத்ததற்கு நன்றி.இதே போன்ற உதடு ஒட்டாத பாடல் இதற்கு முன்பே வாலி,யூகிசேதுவின் “மாதங்கள் ஏழு”படத்திற்கு எழுதியுள்ளார்-“காதல் என்ன கத்தரிக்காய்”. அது சரி-இந்த பாடல் வாலி எழுதியதாக டைட்டில் கார்டையும் படம் எடுத்து போட்டு விட்டு கேசட்டில் கங்கை அமரன் என்று போட்டிருப்பதாகவும் சொல்கிறீர்கள்-எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்:-))))))

    • amas32 10:03 pm on July 19, 2013 Permalink | Reply

      தந்தேன் என்னை நாட்டிற்கு என்றான் அரசியல் தலைவன்.
      தந்தேன் என்னை கலைக்கு என்றான் கலைஞன்.
      தந்தேன் என்னை என் குழந்தைகளுக்கு என்றால் தாய்!

      எதோ மூணு வரி எழுதிட்டேன் :-)))

      amas32

  • என். சொக்கன் 8:11 pm on July 11, 2013 Permalink | Reply  

    காய் நிலவும் கனி நிலவும் 

    • படம்: பலே பாண்டியா
    • பாடல்: அத்திக்காய் காய் காய்
    • எழுதியவர்: கண்ணதாசன்
    • இசை: விஸ்வநாதன், ராமமூர்த்தி
    • பாடியவர்கள்: டி. எம். சௌந்தர்ராஜன், பி. சுசீலா, பி. பி. ஸ்ரீனிவாஸ், ஜமுனா ராணி
    • Link: http://www.youtube.com/watch?v=muWBARd3oAk

    அத்திக்காய் காய் காய், ஆலங்காய் வெண்ணிலவே,

    இத்திக்காய் காயாதே, என்னைப்போல் பெண்ணல்லவோ!

    கன்னிக்காய், ஆசைக்காய், காதல் கொண்ட பாவைக்காய்,

    அங்கே காய், அவரைக் காய், மங்கை எந்தன் கோவைக்காய்!

    ஒரு படை வீரன், கடமை அழைக்க, போர்க்களத்துக்குச் சென்றுவிடுகிறான்.

    அவனைப் பிரிந்து வாடும் காதலி, தவிக்கிறாள், துடிக்கிறாள், வானத்தில் இருக்கும் முழுச் சந்திரனும் அவளுக்குச் சூரியனைப்போல் சுடுகிறது. அதைப் பார்த்துப் பேசுகிறாள்:

    ‘அத்திக்காய்க் காய் காய், ஆலங்காய் வெண்ணிலவே,

    இத்திக்காய்க் காய்ந்துனக்கு என்ன பயன்?’

    இங்கே அத்திக்காய், ஆலங்காய் என்பவை காய்களின் பெயர்கள் அல்ல, ’ஆலத்தைப்போலக் (அதாவது, விஷத்தைப்போலக்) காய்கிற (அதாவது, சுடுகிற) வெண்ணிலவே, அத் திக்காய் (அதாவது, அந்தத் திக்காக, என் காதலன் இருக்கும் அந்தத் திசையில்) சென்று காய்வாயாக, இத் திக்காய் (அதாவது, இந்தத் திக்கில், நான் இருக்கும் இந்தத் திசையில்) மட்டும் காய்வதால் உனக்கு என்ன பயன்?’ என்கிறாள் அந்தப் பெண்.

    இதன் அர்த்தம், ’நிலவே, நீ என்னையே சுட்டுகிட்டிருக்கியே, என்னைப் பிரிவுத் துன்பத்தில வாடவைக்கற அந்தக் காதலன் இருக்கற திசையிலும் போ, அவனையும் கொஞ்சம் நல்லாச் சுடு, அப்போதாவது அந்தப் பயலுக்கு என் ஞாபகம் வருதான்னு பார்ப்போம்!’

    அவள் அதோடு நிறுத்தவில்லை, ‘பற்றில் அவரைக் காய், கோவைக் காய்’ என்கிறாள். அதாவது, (என்மீது) பற்று இல்லாத என் காதலனைச் சுடு, அவனைப் போருக்கு அழைத்துச் சென்ற அவனுடைய தலைவன் (கோ) இருக்கிறானே, அவனையும் சுடு!’

    இத்தனை சூட்டையும், ஒரு சந்தோஷமான காதல் பாட்டுக்குள் கண்ணதாசன் எப்படிக் கச்சிதமாக இறக்கியிருக்கிறார் என்று மேலே படித்துப் பாருங்கள்!

    ***

    என். சொக்கன் …

    11 07 2013

    222/365

     
    • ranjani135 8:41 pm on July 11, 2013 Permalink | Reply

      அருமை, அருமை!

    • Uma Chelvan 9:00 pm on July 11, 2013 Permalink | Reply

      OMG, I never Thought that this song means this way !!! ’நிலவே, நீ என்னையே சுட்டுகிட்டிருக்கியே, என்னைப் பிரிவுத் துன்பத்தில வாடவைக்கற அந்தக் காதலன் இருக்கற திசையிலும் போ, அவனையும் கொஞ்சம் நல்லாச் சுடு, அப்போதாவது அந்தப் பயலுக்கு என் ஞாபகம் வருதான்னு பார்ப்போம்! Wonderful!!.excellent.

    • ranjani135 10:00 pm on July 11, 2013 Permalink | Reply

      அன்புள்ள திரு சொக்கன்,
      இந்த கட்டுரையின் இணைப்பை எனது தளத்தில் பகிர்கிறேன், உங்கள் சம்மதத்துடன்.
      அன்புடன்,
      ரஞ்சனி

    • Arun Rajendran 11:08 pm on July 11, 2013 Permalink | Reply

      இந்தப் பாட்டுல “கனியிருப்பக் காய் கவர்ந்தற்று” பொய்த்துப் போகிறதோ? 🙂

      ஆனா படமாக்குன விதம் தான் பாடலுக்குப் பொருந்தி வரல 😦

      நன்றிங்க சொக்கன் சார்

    • pvramaswamy 5:33 am on July 12, 2013 Permalink | Reply

      எனக்கு ரொம்பவும் பிடித்தப் பாடல். நான் பிறகு எப்போதாவது எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன். உங்கள் எழுத்தில் இன்னும் ‘லாகவ’மாக ( நன்றி: @elavasam ) வந்திருக்கு. ஒரு குறை. பாட்டு முழுவதையும் விளக்கத்தோடு எழுதியிருக்கலாம்.

    • Saba-Thambi 10:47 am on July 12, 2013 Permalink | Reply

      பாடல் முழுவதும் வரும் காய்கள் அத்தனையும் சிலேடை தானே ?

      அல்லது ஒரே சொல் பெயராகவும் வினையாகவும் அமையும் பதமா?

    • amas32 10:56 pm on July 12, 2013 Permalink | Reply

      எனக்கு மிகவும் பிடித்தப் பழைய பாடல் இது. பலமுறை கேட்டாலும் புதுசுப் போல தோன்றும். ஒவ்வொரு வரிக்கும் இரு பொருள்கள் வரும். அதுவும் கருத்தும் பாடலின் தேவைக்கேற்ப இருக்கும்.கவியரசரின் ரொம்ப நல்ல பாடல்களில் இதுவும் ஒன்று. நாலு வரி நாட்டிற்கு perfect song selection 🙂

      amas32

    • rajinirams 10:25 am on July 14, 2013 Permalink | Reply

      தமிழ் திரையுலகின் மிக முக்கியமான சிலேடை பாடல். தங்கள் விளக்கமும் அருமை.பாடல் முழுக்க கவியரசரின் கவித்திறமை பளிச்சிடும்.

    • Sakthivel 3:02 pm on July 17, 2013 Permalink | Reply

      என்ன ஓர் அர்த்தம் உள்ளே வைத்து இருக்கிறார்…!!! உண்மையில் மிக பெரும் பிரமிப்பை ஏற்படுத்திவிட்டார்.

  • G.Ra ஜிரா 8:13 am on June 1, 2013 Permalink | Reply  

    இராகங்கள் பதினாறு 

    இன்றைய பதிவில் இரண்டு பாடல்களை ரசித்துப் பாராட்டப் போகிறேன்.

    இரண்டு பாடல்களையும் எழுதியவர்கள் வேவ்வேறு. இசையமைத்தவர்கள் வெவ்வேறு. பாடியவர்கள் வெவ்வேறு. நடித்தவர்களும் வெவ்வேறு. ஆனால் இயக்குனர் ஒருவரே. ஆம். திரு.ஏ.பி.நாகராஜன் இயக்கிய இரண்டு படங்களில் இடம் பெற்ற பாடல்கள் அவை.

    முதற்பாடல் – ஒரு நாள் போதுமா
    படம் – திருவிளையாடல்
    பாடியவர் – பாலமுரளிகிருஷ்ணா
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    இசை – திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்
    நடிகர் – பாலையா
    பாடலின் சுட்டி – http://youtu.be/ppnzHXqT5Sg

    இரண்டாம் பாடல் – வென்றிடுவேன் நாட்டையும் நாதத்தால்
    படம் – அகத்தியர்
    பாடியவர்கள் – டி.எம்.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன்
    வரிகள் – உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்
    இசை – குன்னக்குடி வைத்தியநாதன்
    நடிகர்கள் – சீர்காழி கோவிந்தராஜன், ஆர்.எஸ்.மனோகர்
    பாடலின் சுட்டி – http://youtu.be/N-5btIpWZmQ

    இந்த இரண்டு பாடல்களிலும் இயக்குனரையும் தாண்டி காட்சியமைப்பில் ஒரு ஒற்றுமை உண்டு. ஆம். சங்கீதத்தின் சிகரங்களாக இருப்பவர்கள் பாடுகின்ற பாடல்களாக இவை இருக்கின்றன.

    மீன்காரன் பாடினால் பாட்டில் மீனைப்பற்றி வரும். வேடன் பாடினால் மானைப் பற்றி வரும். விவசாயி பாடினால் பயிர் வகைகள் வரும். ஆய்ச்சியர் பாடினால் பாலும் தயிரும் ஓடும். ஆனால் இவர்கள் வாக்கேயக்காரர்கள். அதாவது சங்கீத சாம்ராட்டுகள். இவர்கள் பாட்டில் என்ன வரும்?

    இராகமும் தாளமும் அள்ளக் குறையாமல் வரும். இராகங்களின் பெயர்களையே பாடலின் வரிகளில் வைத்து விளையாடுகிறார்கள். அப்படி எழுதிய கவிஞர்களை முதலில் வணங்குகிறேன்.

    காலத்தில் திருவிளையாடல் பாடலே முந்தியது. ஆகவே அதையே முதலில் எடுத்துக் கொள்வோம்.

    இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ
    எழுந்தோடி வருவாரன்றோ
    இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ

    எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ
    தர்பாரில் எவரும் உண்டோ..
    எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ

    கலையாத மோகனச் சுவை நானன்றோ
    மோகனச் சுவை நானன்றோ
    கலையாத மோகனச் சுவை நானன்றோ

    கான(ண)டா என் பாட்டுத் தேனடா
    இசை தெய்வம் நானடா

    பாட்டு வரிகளில் வருகின்ற இராகங்கள் தெரிகின்றதா? அவைகளை எடுத்துப் பட்டியல் இடுகிறேன், பாருங்கள்.

    எழுந்தோடி வருவாரன்றோ – தோடி இராகம்
    எனக்கிணையாக தர்பாரில் – தர்பார் இராகம்
    கலையாத மோகனச் சுவை – மோகன இராகம்
    காண(ன)டா என் பாட்டு தேனடா – கானடா இராகம்

    கவியரசர் எவ்வளவு அழகாக பாடல் வரிகளில் இராகங்களின் பெயர்களை பொருள் பொருந்திவரும்படி நெய்திருக்கிறார். அடடா!

    கவியரசர் அப்படிச் செய்தது முதற்படி என்றால் உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் பாடலை அடுத்த படிக்கு எடுத்துச் செல்கிறார். பாடல் முழுவதுமே இராகங்கள். அதுவும் போதாதென்று இன்னொரு புதுமையையும் செய்திருக்கிறார். அதைக் கடைசியாகச் சொல்கிறேன்.

    இது போட்டிப் பாட்டு. அகத்தியருக்கும் இராவணுக்கும் இடையில் இசைப்போட்டி. எல்லாரும் மீட்டிய வகையில் வீணை இசைத்தால் இவர்கள் இருவருக்கு மட்டும் எண்ணிய வகையிலேயே வீணை இசைக்கும். அப்பேர்ப்பட்ட மேதைகள். அதனால் பாடல் வரிகளும் மேதாவித்தனமாகவே இருக்கிறது. பதிவின் ரசிப்புத்தன்மைக்காக பாடலின் சிலவரிகளை நீக்கியிருக்கிறேன்.

    வென்றிடுவேன் நாதத்தால் வென்றிடுவேன்
    நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன் எந்த
    நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்

    வென்றிடுவேன் உன்னை வென்றிடுவேன்
    பைரவி துணைவன் பாதம் பணிந்து
    உன்னை வென்றிடுவேன்

    இசை கேட்டு எழுந்தோடி வந்தான் உன்தன்
    இதயத்திலே வாழும் ஈசன் எனைத் தேடி
    எழுந்தோடி வந்தான்

    ஆரபிமானம் கொள்வார் வெறும்
    அகந்தையினால் உனது
    அறிவது மயங்கிட இறைவனே இகழ்ந்தனையே
    ஆரபிமானம் கொள்வார்

    சண்முகப் ப்ரியன் என்னும் தைரியமா?
    சங்கீதத்தில் எனக்கு இணையாகுமா?
    சண்முகப் ப்ரியன் என்னும் தைரியமா? இனிய
    சங்கீதத்தில் எனக்கு இணையாகுமா?

    நாடகமா தர்பார் நாடகமா?
    அடக்கு முறை தர்பார் நாடகமா? எதுவும்
    அவன் செயல் அல்லாமல் கூடிடுமா?

    ஹம்சத்வனி அமைத்த மன்னவன் நான்
    அனைத்தும் உன் வசந்தானா ஆணவம் ஏன்?

    மோகன
    கானம் நான் மீட்டிடுவேன்
    மனோலயம் இல்லை உன் பாட்டினிலே

    பாகேஸ்வரியோ பரம்பொருளோ?
    பாற்கடலில் துயிலும் சாரங்கனோ?
    யார் வந்தால் என்ன காம்போதி
    ராகம் ஒன்றே போதும் வென்றிடுவேன்

    கௌரி மனோகரி துணையிருப்பாள்
    கல்யாணி மணாளன் கை கொடுப்பான்
    சரஸ்வதி எந்நாவில் குடியிருப்பாள்
    சத்தியமே நிலைக்கும் வென்றிடுவேன்

    பாடல் வரிகள் நாடகத்தனமாக இருந்தாலும் எத்தனையெத்தனை இராகங்கள் பார்த்தீர்களா? படிப்பதற்கு எளிமையாக எடுத்துக் கொடுக்கிறேன்.

    நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன் – நாட்டை
    பைரவி துணைவன் பாதம் பணிந்து – பைரவி
    இசை கேட்டு எழுந்தோடி வந்தான் – தோடி
    ஆரபிமானம் கொள்வார் வெறும் – ஆரபி
    சண்முகப் ப்ரியன் என்னும் தைரியமா? – சண்முகப்பிரியா
    நாடகமா தர்பார் நாடகமா? – தர்பார்
    ஹம்சத்வனி அமைத்த மன்னவன் நான் – ஹம்சத்வனி
    அனைத்தும் உன் வசந்தானா ஆணவம் ஏன்? – வசந்தா
    மோகன கானம் நான் மீட்டிடுவேன் – மோகனா
    மனோலயம் இல்லை உன் பாட்டினிலே – மனோலயம்
    பாகேஸ்வரியோ பரம்பொருளோ? – பாகேஸ்வரி
    பாற்கடலில் துயிலும் சாரங்கனோ? – சாரங்கா
    யார் வந்தால் என்ன காம்போதி – காம்போதி
    கௌரி மனோகரி துணையிருப்பாள் – கௌரிமனோகரி
    கல்யாணி மணாளன் கை கொடுப்பான் – கல்யாணி
    சரஸ்வதி எந்நாவில் குடியிருப்பாள் – சரஸ்வதி

    இராகங்கள் பதினாறு. ஆம். பாட்டில் வந்திருக்கும் இராகங்கள் பதினாறு. அடேங்கப்பா என்று மலைப்பாக இருக்கிறதல்லவா.

    அத்தோடு நின்றுவிடவில்லை உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் அவர்கள். சுரங்களையும் சொற்களாக மாற்றியிருக்கிறார்.

    சுரங்கள் “ச ரி க ம ப த நி” என்று ஏழு வகை என்பது தெரிந்திருக்கும். இந்தச் சுரங்களையே முன்னும் பின்னுமாக மாற்றிப் போட்டு சொற்களை உண்டாக்கியிருக்கிறார் கவிஞர். பாட்டாகப் பாடும் போது சுரங்கள் மறைந்து சொற்கள் வெளிப்படும்.

    ச ம ம – சமமா?
    ச ரி ச ம ம – சரி சமமா?
    நி ச ரி ச ம ம – நீ சரி சமமா?
    ம நி த நி பா த க ம – மனிதா நீ பாதகமா!

    இப்படியாக பாட்டெழுதிய கவிஞர்களும் நம் நாட்டில் இருந்தார்கள் என்று நினைத்து நாம் பெருமை மட்டுமே பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

    அன்புடன்,
    ஜிரா

    182/365

     
    • anonymous 9:18 am on June 1, 2013 Permalink | Reply

      நலம் பெற வேண்டும் – நீயென்று
      இலை மறை காய் போல் – பொருள் கொண்டு…
      ——

      இராகங்கள் தவழும் இன்னிசைப் பதிவு
      முருகத் திரு. TMS அவர்களின் நினைவை மீண்டும் கிளறி விடும் பதிவு!

      இராக மாலிகை -ன்னு சொல்லுவாங்க;
      பல ராகங்களையும் கலந்து பாடும் பாட்டு!

      ஆனா, அந்தப் பாட்டிலேயே, இராகத்தின் பேரையும் வச்சி,
      அதையும் அந்த இராகத்திலேயே பாடுவது என்பது மிக அழகு!

      இதைச் சினிமாவில் சிற்சில இடங்களில் செஞ்சிருக்காங்க!
      ஆனா, முதலில் செஞ்சவரு யார் தெரியுமா?
      Murugan Talkies முதலாளியான = அருணகிரிநாதர்:)
      ——–

      • anonymous 10:11 am on June 1, 2013 Permalink | Reply

        கொல்லி -ன்னு ஒரு தமிழ்ப் பண் (இராகம்)
        அதைப் பாட்டில் பயன்படுத்தி, அதே பண்ணில், அந்தப் பாட்டையும் பாடிய அருணகிரி

        கந்தர் அலங்காரத்தில்…
        “கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியை” -ன்னு ஒரு வரி வரும்;

        வள்ளி பேசுற பேச்சே, பண் போல இருக்காம்
        எந்தப் பண்? = கொல்லிப் பண் (நாத நாமக் கிரியை)

        அவள் நாதனின் நாமத்தைத் தானே, சதா “முருகா முருகா” -ன்னு காடு மேடெல்லாம் உளறிக்கிட்டு இருந்தா?
        அதான் போல = நாத நாமக் கிரியை
        இப்படிக், “கொல்லி-சொல்லி-வள்ளி” -ன்னு, பாடுன மொத ஆளு அருணகிரி:)
        ——

        நட்டபாடை, செவ்வழி
        தக்கேசி, கொல்லிக் காவளம்,
        இந்தளம், சீகாமரம், புறநீர்மை
        -ன்னு எத்தனை எத்தனையோ தமிழ்ப் பண்கள்…

        எல்லாம் போயிருச்சி:(
        தேவாரம்/ ஆழ்வார் பாசுரம் என்கிற Museum-ல்ல தான் பாக்க முடியும்;

        கர்நாடக சங்கீதம் -ன்னு ஒன்னையே பரக்கப் பரக்கப் பேசினா, இன்னொன்னு கேட்பார் அற்று போயிருச்சி:(
        ஏதோ, கர்நாடக சங்கீதத்திலேயே, தமிழ்ப் பாட்டா, இந்தக் காலத்தில் பாட ஆரம்பிச்சி இருக்காங்க! ஆனா இராகம் என்னமோ = கர்நாடகம் தான்! தமிழிசை அல்ல!

        எங்கேயோ போயிட்டோம்;
        சொல்ல வந்தது = பாட்டில் பண் பேரை வச்சி, அதே பண்ணில் பாடிய அருணகிரி!

    • anonymous 10:19 am on June 1, 2013 Permalink | Reply

      நீங்க குடுத்த ரெண்டு பாட்டும் ரொம்பப் பிடிக்கும்!
      குறிப்பா, பாலையா (பாலமுரளி)… “எனக்கு இணையாகத் தர்பாரில் எவரும் உண்டோ?” -ன்னு அதே தர்பார் ராகத்தில் பாடுவாரு…
      பாலையா Body Language அதுக்கு, செம:)

      உளுந்தூர்ப்பேட்டையார் பாட்டும், Top Class!
      யார் வந்தால் என்ன காம்போதி -ன்னு இராவணன் பாடும் போது, “கபோதி” ங்குறாப் போல லுக்கு விடுவாரு ஆர்.எஸ்.மனோகர்:)

      காம்போதி = சிவபெருமானுக்கு உரிய ராகம்;
      (வீணைக் கொடி உடைய வேந்தனே – பாட்டில் கூட, நிறைவா அது தான் வரும்!)

      சிவனுக்கு ஈடு யாரு? = அவ ஒருத்தி தானே?:)
      கௌரி மனோகரி துணையிருப்பாள் -ன்னு அகத்தியர் பாடி முடிச்சீருவாரு!
      ——

      ச ம ம – சமமா?
      நி ச ரி ச ம ம – நீ சரி சமமா?

      இதை எங்கே சொல்லாம விட்டுருவீங்களோ? -ன்னு, மனசைக் கையில் புடிச்சிக்கிட்டே படிச்சேன்; ஆனா கடைசீயாச் சொல்லீட்டீங்க; அதப் பாத்தப் பொறவு தான், மனசே நிம்மதியாச்சு:)

    • anonymous 10:28 am on June 1, 2013 Permalink | Reply

      இது போல இராகப் பெயர்கள் கொண்ட, இதர பாடல்கள்…

      உன்னால் முடியும் தம்பி படத்தில், “என்ன சமையலோ?”

      கல்யாணி = அரிசியில் கல்…ஆணி
      ராகம் வசந்தா; ருசித்து பார்க்க ரசம் தா
      கரி கரி கரி கரி – கறி காய்களும் இங்கே; கறி வேப்பிலை எங்கே?:)
      ———–

      இதே போல், “வீணைக் கொடியுடைய வேந்தனே”
      ராகம் பேரு, சொல்லுல ஒளிஞ்சி வராம, நேரடியாவே வந்துரும்

      காலையில் பாடும் ராகம் – பூபாளம்
      உச்சி வேளை ராகம் – சாரங்கா
      மாலையில் பாடும் ராகம் – வசந்தா

      இரக்கம் பற்றிய ராகம் – நீலாம்பரி
      மகிழ்ச்சிக்குரிய ராகம் – தன்யாசி
      யுத்த ராகம் – கம்பீர நாட்டை

      வெண்பா பாடுவது – சங்கராபரணம்
      அகவல் பா – தோடி
      யாழ் இசைக்கு – கல்யாணி

      கயிலை மலையானைக், கானத்தால் கவர்ந்த ராகம் – காம்போதி, காம்போதி, காம்போதி

    • anonymous 10:43 am on June 1, 2013 Permalink | Reply

      அட, எல்லாத்தையும் சொல்லிட்டு, சென்னையில் என் அம்மாவைப் பத்திச் சொல்லலீன்னா எப்படி?
      வாழ்க்கைல, பல விசயமெல்லாம், அவ கிட்ட போய் நிக்கும் போது தான், நடந்து இருக்கு!

      =திருமயிலை வாழ் கற்பகம்!
      =அவரு ஒதுக்கினாலும், அவனே அவனே -ன்னு மயிலா மாறித், தவங் கெடந்தவ!

      அவளை TMS பாடும் பாட்டுல தான், இராகத்தின் பேரு இழையோடுமே!
      கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
      நற்கதி அருள்வாய் அம்மா!
      ——-

      ஏன் இந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள
      ** ஆனந்த பைரவியே ** ஆதரித்தாளும் அம்மா!

      ** கல்யாணியே ** கபாலி காதல் புரியும் அந்த
      உல்லாசியே உமா உனை நம்பினேன் அம்மா!

      தஞ்சம் என அடைந்தேன் தாயே உன் சேய் நான்
      ** ரஞ்சனியே ** ரட்சிப்பாய் கெஞ்சுகிறேன் அம்மா!
      ——–

      சும்மா, TMS இழுப்பாரு பாருங்க, ஒத்த தந்தித் தம்பூரா கணக்கா…
      யம்மாடியோவ்…
      கர்நாடக சங்கீதப் பிதாமகர்கள் கூட, அம்புட்டு உருக்கமாப் பாட முடியாது;
      உருக்கம் வேற, இலக்கணம் வேற = ரெண்டும் நிக்கும் TMS கிட்ட!

      இந்தப் பாடல் பற்றி எப்பவோ இட்ட பதிவு
      http://ammanpaattu.blogspot.com/2007/03/blog-post_27.html

      கற்பகவல்லி, சின்னஞ் சிறு கிளியே = ரெண்டும் நாதசுரத்தில் வாசிச்சிக் கேட்கும் போது, போற உயிரும், கொஞ்ச நேரம் நிக்கும்!
      மா மயிலாள் = கற்பகத்து அம்மன்;

    • Simulation 10:47 pm on June 1, 2013 Permalink | Reply

    • elavasam 10:07 am on June 2, 2013 Permalink | Reply

      /பாட்டாகப் பாடும் போது சுரங்கள் மறைந்து சொற்கள் வெளிப்படும்./

      இதற்கு ஸ்வராஷ்ட்ரப்ரயோக எனப் பெயர்.

      • anonymous 10:30 am on June 2, 2013 Permalink | Reply

        அது, ஸ்வ ராஷ்ட்ர அல்ல (தாய் நாடு)
        ஸ்வராக்ஷர
        = ஸ்வர + அக்ஷர (சுரம் + எழுத்து)

        சாமகான லோலனே, சதா சிவா -ன்னு கீர்த்தனை..

        ச, ம, க -ன லோலனே -ன்னு ஸ்வரம் போலவும் பாட முடியும்
        சாம கானத்தின் லோலனே -ன்னும் பொருள் வராப் போல, பாட முடியும்!

        = ஸ்வரமும் + அட்சரமும் இழைந்து ஓடுவது = ஸ்வராக்ஷரம்

    • Saba-Thambi 2:09 pm on June 3, 2013 Permalink | Reply

      பதிவு பிரமாதம். பலே பலே!

      இன்னொரு பாடல் -ஒரு சில ராக பெயர்களுடன்:

      • anonymous 2:48 pm on June 3, 2013 Permalink | Reply

        sooper song sir! – sri priya in grand

        ரஞ்சனி… சிவ ரஞ்சனி

        அதி காலையில் வரும் பூபாள ராகம்
        ஆனந்தத் தேன் தரும் கல்யாணி ராகம்
        என்ன சொல்லி என்ன பாட
        கம்பன் இல்லை கவிதை பாட
        class lines & a song for shankar ganesh to treasure

    • chinnapiyan 5:56 am on August 8, 2013 Permalink | Reply

      பதிவும் அருமை. வந்த விமர்சனக்கருத்துகளும் பலே. மிகவும் ரசித்து மகிழ்ந்தேன், நன்றி, வாழ்க ஜிரா

    • badrirag 8:43 pm on November 27, 2013 Permalink | Reply

      ”நீ ஒரு ராக மாலிகை என் நெஞசம் உன் காதல் மாளிகை” என்ற பாட்டில், வரிக்கு ஒரு ராகம் என்று பாடியிருப்பார் பாலு (SPB). அருமையான உவமைகள்.

    • isakki 3:03 pm on June 4, 2019 Permalink | Reply

      rangangalai kondu padum sangidha murai ethu?

  • என். சொக்கன் 9:17 am on May 23, 2013 Permalink | Reply  

    காலையும் மாலையும் 

    • படம்: சித்திரையில் நிலாச்சோறு
    • பாடல்: காலையிலே மாலை வந்தது
    • எழுதியவர்: புலமைப்பித்தன்
    • இசை: இளையராஜா
    • பாடியவர்: சப்தபர்ணா சக்ரபர்த்தி

    காலையிலே மாலை வந்தது, நான் காத்திருந்த வேளை வந்தது!

    இனி காலமெல்லாம், உன்னைத் தொடர்ந்துவர,

    உன் காலடிதான் இனி சரணமென,

    இந்த வானமும் பூமியும் வாழ்த்துச் சொல்ல!

    சென்ற நூற்றாண்டில் சிலேடை என்றால், கிவாஜ. அவர் எழுதிய, பேசிய, அல்லது பேசியதாகச் சொல்லப்பட்ட ஏராளமான சிலேடைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளன. அந்தப் புத்தகமும் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கிறது.

    அது சரி, நாலு வரி நோட்டுக்கும் கிவாஜவுக்கும் என்ன சம்பந்தம்?

    கிவாஜா சினிமாப் பாட்டு ஒன்று எழுதியிருக்கிறார். ஆனால் இங்கே நாம் பார்க்கவிருப்பது, அவருடைய புகழ் பெற்ற சிலேடை ஒன்று.

    வெளியூரில் ஒரு நிகழ்ச்சி. அதில் கலந்துகொள்வதற்காக ரயிலேறிச் சென்றார் கிவாஜ. அதிகாலையில் ரயிலிலிருந்து இறங்கியதும், நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அவரை வரவேற்று, ஒரு பூமாலையை அணிவித்தார்கள்.

    கிவாஜ மகிழ்ச்சியுடன் புன்னகை செய்தார். பின்னர், ‘என்ன இது அதிசயம்! காலையிலேயே மாலை வந்துவிட்டதே!’ என்றார் சிலேடையாக.

    இந்த வார்த்தை விளையாட்டைப் பழநிபாரதி ஒரு திரைப்பாடலில் பயன்படுத்தினார், ‘சேது’ படத்தில் வரும் ‘சிக்காத சிட்டொண்ணு’ என்ற பாடலில், ‘காலையிலே மாலை வர ஏங்குதடி’ என்று எழுத, அதை உன்னி கிருஷ்ணன் பாடியிருந்தார்.

    பல வருடங்கள் கழித்து, இப்போது ‘சித்திரையில் நிலாச்சோறு’ படத்தில் புலமைப்பித்தனும் அதே கற்பனையைப் பயன்படுத்தியிருக்கிறார், ‘காலையிலே மாலை வந்தது’ என்று தொடங்கி, ‘நான் காத்திருந்த வேளை வந்தது’ என்று அழகாகத் தொடர்கிறார்.

    ‘காத்திருந்த வேளை வந்தது’ என்பதில் உள்ள ‘வந்தது’ என்ற வார்த்தையை, வேளையோடு சேர்த்து வாசித்தால் ‘the day I was waiting for… இதோ வந்துவிட்டது’ என்ற பொருள் வரும். அப்படியில்லாமல், முதல் வரியோடு சேர்த்து, ‘நான் மாலைக்காகக் காத்திருந்தவேளையில், மாலை வந்து சேர்ந்தது’ என்றும் வாசிக்கலாம். அதுவும் அழகிய சிலேடைதான்!

    அதன்பிறகும் ஓர் அழகான வார்த்தை விளையாட்டு உண்டு, ‘உன் காலடிதான் இனி சரணமென’ என்று பாடுகிறாள் அந்தக் கதாநாயகி… உண்மையில், ‘சரண்’ என்ற வார்த்தைக்குப் பொருளே ‘காலடி’தான் 🙂 ‘நின்னைச் சரணடைந்தேன்’ என்றால், உன் காலடியில் பணிந்தேன் என்று பொருள்!

    ***

    என். சொக்கன் …

    23 05 2013

    173/365

     
    • amas32 9:38 am on May 23, 2013 Permalink | Reply

      “காலையிலே மாலை வர ஏங்குதடி” நீங்கள் குறிப்பிடும் வரை நான் பொருளைக் கூர்ந்து கவனித்ததில்லை. ராகத்தில் மயங்கியிருந்தேன். இப்பொழுதுப் புரிந்து ரசிப்பேன் 🙂

      “காலையிலே மாலை வந்தது, நான் காத்திருந்த வேளை வந்தது!” ரொம்ப அழகான வரி! நீங்கள் சொல்லியிருப்பதுப் போல இரண்டு பொருள்களில் எதை எடுத்துக் கொண்டாலும் மொத்தத்தில் காதலனின் மகிழ்ச்சியை வெளிக்காட்டும் சூப்பர் வரி 🙂

      சுடச் சுட போண்டா 🙂 பாடல் வந்தவுடன் நாலு வரி நோட்டு!

      amas32

    • GiRa ஜிரா 11:08 pm on May 23, 2013 Permalink | Reply

      அழகான பாடல் நாகா. இது டிபிகல் எஸ்.ஜானகி பாட்டு. 80களின் எஸ்.ஜானகி பாடியிருந்தா மாஸ்டர் பீசாகியிருக்கும் இந்தப் பாட்டு.

      சிலேடை மிக அழகு. காலையிலேயே மாலை வந்தது. ரெண்டு பொருளும் பொருத்தமாதான் இருக்கு.

    • rajinirams 1:25 am on May 25, 2013 Permalink | Reply

      காலையிலே மாலை வந்தது-புலமைப்பித்தனின் அருமையான வரிகள்.இதே போன்ற வாலியின் சிலேடை- தென்றல் மெல்ல மெல்ல நீந்துகின்ற மாலை.இவள் மார்பினில் நான் ஏந்துகின்ற மாலை. நன்றி.

  • G.Ra ஜிரா 11:10 am on January 23, 2013 Permalink | Reply  

    இரு கன்னியர் 

    அரியது என்ன என்ற முருகனின் கேள்விக்கு ஔவை சொன்னது என்ன?

    அரியது கேட்கின் வரிவடிவேலோய்
    அரிது அரிது மானிடர் ஆதல் அரிது
    மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடு பேடு
    நீங்கிப் பிறத்தல் அரிது

    ஊனமற்ற வாழ்க்கைதான் முதலில் சொல்லப்படும் அரியதாக இருக்கிறது. எல்லாம் இருப்பவர்களுக்கு இருப்பதன் பெருமை தெரியவில்லை. பெருமை தெரிந்த சிலருக்கு அது இருப்பதில்லை.

    வாழ்க்கையில் மட்டுமல்ல திரைப்படங்களில் ஊனமுள்ள பாத்திரங்கள் துன்பியல் பாத்திரங்களாகவே காட்டப்படுகின்றன. ஊனமுற்ற ஒரே காரணத்துக்காக அந்த பாத்திரங்களும் அவைகளின் உறவுப் பாத்திரங்களும் திரையில் மிகுந்த துன்பப்படும். ஒரு வகையில் வாழ்க்கையிலும் பெரும்பாலும் அப்படித்தான் இருக்கிறது.

    கல்லுக்கும் மரத்துக்கும் நமக்கும் உள்ள முதல் வேறுபாடே நாம் ஒரே இடத்தில் இல்லாமல் இருப்பது. அதற்கு உதவுவது நமது கால்கள். அது இல்லையென்றால்?!?! அப்படி இல்லாதவர்கள் பெண்கள் என்றால்? அந்தப் பெண்கள் திருமணம் ஆகாத கன்னியர் என்றால்? அந்தக் கன்னிகள் தமிழ்த் திரைப்படத்தின் பாத்திரங்கள் என்றால்?

    அவளால் நடக்க முடியாது. ஊர் அவளை நொண்டி என்று ஏளனம் பேசும். அவளுக்கும் ஒரு திருமணம் நடக்க இருந்தது. அவளுடைய குறையைத் தெரிந்து கொண்டதால் திருமணம் நடக்கவில்லை. அப்போது அவள் பாடுகிறாள்.

    தேர் வந்தது
    திருநாள் வந்தது
    ஊர்வலம் போகின்ற நாள் வந்தது
    ஓட முடியாமல் தேர் நின்றது!

    ஊர்வலம் செல்வதற்கான நாளும் வந்தது. தேரும் இருக்கிறது. ஆனால் ஓட முடியாமல் தேர் நின்றது. சே! என்ன ஒரு வருத்தமான நிலை. வாலி எழுதிய பாடல் இது.

    இன்னொருத்தி இருக்கிறாள். அவளுக்கும் இதே நிலைதான். ஆசைகள் மொட்டு விட்டுப் பூப்பூக்கும் இளம் வயது. அந்தப் பூவின் கண்ணிலும் ஒரு வண்டு தென்படுகின்றது. ஆனால் வண்டை அழைத்துச் சொல்லுமா மலர்? வாய் இல்லாத மலரும் ஒருவகையில் ஊனம்தானே. அந்த எண்ணத்திலேயே பாடுகிறாள்.

    மலரும் மங்கையும் ஒரு ஜாதி
    தன் மனதை மறைப்பதில் சரி பாதி
    தன் ஆசையின் கோலத்தை
    வண்ணப் பூக்கள் யாரிடம் சொல்லும்
    கன்னிப் பெண்மை யாரிடம் சொல்லும்

    இந்த வரிகளும் அந்த வண்டை அவளிடத்தில் இழுத்து வரவில்லை. வராத வண்டைப் பார்த்துப் பாடுகிறாள்.

    நீ வரவேண்டும். ஏன் வரவில்லை?
    நான் வரலாமா? ஒருக்காலுமில்லை… ஒரு காலுமில்லை!

    மலர்கள் வண்டை நோக்கிப் போவதற்கு வழி ஒருக்காலும் இல்லை என்று சொன்ன வேளையில் அவளுக்கு ஒரு காலும் இல்லை என்று சோகத்தையெல்லாம் கொட்டி விடுகிறாள். இப்படி சொற்சிலம்பம் ஆட கவியரசரை அன்றி யார் முடியும்!

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்

    பாடல் – தேர் வந்தது திருநாள் வந்தது
    படம் – காக்கும் கரங்கள்
    பாடல் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர் – இசையரசி பி.சுசீலா
    இசை – திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்
    பாடலின் சுட்டி – https://www.youtube.com/watch?v=pQOTkIekP9g

    பாடல் – மலரும் மங்கையும் ஒரு ஜாதி
    படம் – அன்னையும் பிதாவும்
    பாடல் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர் – இசையரசி பி.சுசீலா
    இசை – திரையிசைச் சக்கரவர்த்தி எம்.எஸ்.விசுவநாதன்
    பாடலின் சுட்டி – https://www.youtube.com/watch?v=Zutwx7oWk9E

    அன்புடன்,
    ஜிரா

    053/365

     
    • amas32 (@amas32) 3:07 pm on January 24, 2013 Permalink | Reply

      //ஊர்வலம் போகின்ற நாள் வந்தது
      ஓட முடியாமல் தேர் நின்றது!//
      கவியரசர் கவியரசர் தான்!

      உடல் ஊனத்தோடு நிறமும் ஒரு காராணம் ஆகிறது பெண்ணுக்குத் திருமணம் தடை பட. கண்ணா கருமை நிறக் கண்ணா என்ற பாடல் அதைத் தான் அற்புதமாக விவரிக்கும். The tune is also soul wrenching one.

      amas32

      • Rajnirams 3:27 pm on February 11, 2013 Permalink | Reply

        காக்கும் கரங்கள் பாடல்களை எழுதியர் கவிஞர் வாலி ஆயிற்றே.

  • என். சொக்கன் 10:51 am on December 18, 2012 Permalink | Reply  

    விருந்தினர் பதிவு : எண்ணும் எழுத்தும் 

    எண்களை வைத்து எழுதப்பட்ட பாடல்கள் ஏராளம். திருவிளையாடலில் வரும் ஒவ்வை பாடிய ‘ஒன்றானவன்’ முதல் மாதுரி தீட்சித் ஆடிய ஏக் தோ தீன் வரை பிரபலமான பாடல்கள் பலவற்றில் எண்கள் பாடல் வரிகளின் அடித்தளமாக வருவதை பார்த்திருக்கிறோம். ஆனால் கண்ணதாசன்  அதை உபயோகித்த விதம் அற்புதம்.
    கலை கோவில் படத்தில் வரும் ‘நான் உன்னை சேர்ந்த செல்வம் ‘ P B ஸ்ரீநிவாஸ் P சுசீலா குரலில் இந்த பாடலில்

    உன் அச்சம் நாணம் என்ற நாலும்
    என் அருகில் வந்தவுடன் அஞ்சும்
    இதழ் பருகும்பொது நெஞ்சம் ஆறும்
    அது பாடும் இன்ப ஸ்வரம் ஏழும்

    நாலும் ஏழும் எண்களாய் ஆனால் அஞ்சும் ஆறும் அழகான அர்த்தங்களை கொடுத்து … ஆஹா. இன்னொரு பாடலில் இந்த இரண்டு எண்கள்  மறுபடியும்… இது சத்தியம் படத்தில் வரும் ‘சரவண பொய்கையில் நீராடி’

    அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை
    அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை
    இவ்விடம் இவர் கண்ட இன்ப நிலை
    கண்டு என்னிடம் நான் கண்டேன் மாறுதலை

    காதலில் சொன்னதை கடவுளை பற்றியும் சொல்லி கண்ணதாசன் செய்யும் வித்தை

    நா. மோகனகிருஷ்ணன்
    (@mokrish  in Twitter)

    நான் நா மோகனகிருஷ்ணன். படிப்பு B.Com FCA. இந்த ஏப்ரல் மாதத்தில் பொன் விழா வயதை பெருமையாக கொண்டாடினேன். I turned 25 for a second time! என் மனைவியும் இரண்டு மகன்களுமே என் முதல் நண்பர்கள்

    சென்னையில் தொடங்கி பிறகு ஜகர்த்தாவில் சில வருடங்கள் பின் வளைகுடா வாழ் தமிழனாய் சில வருடங்கள். இப்போது மறுபடியும் சென்னை வாசி. வேலூர் போன்ற ஒரு small town ல் சினிமா பார்த்து, விவித் பாரதி யும் இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனத்தின் ஆசிய சேவையில் திரை இசை பாடல் கேட்டு , தெருவில் கிரிக்கெட் விளையாடி, வளர்ந்தவான். படிக்க பிடிக்கும் – ஆங்கிலம் தமிழ் இரண்டும். In 2012, I wanted to read a book a week. Hope I have managed about 80% adherence

    இசை பிடிக்கும் – தமிழ் திரை இசை மிகவும் பிடிக்கும். MSV -கண்ணதாசன் Combo பாடல்கள் மிகவும் பிடிக்கும். ipod ல் 8000 பாடல்கள் MSV முதல் வித்யாசாகர் வரை – கேட்டுகொண்டே நடக்க பிடிக்கும். கோவில்கள் போக பிடிக்கும். தமிழ் இலக்கியம் பக்தி சார்ந்து இருப்பதை ரசிப்பவன்.

    அரசியல், நாட்டு நடப்பு , சினிமா கிரிக்கெட் என்று எல்லாவற்றிலும் ஆர்வம் உண்டு

     
    • arvenky 10:54 am on December 18, 2012 Permalink | Reply

      செம்ம செம்ம 🙂

    • Prasannaa S (@tcsprasan) 12:57 pm on December 18, 2012 Permalink | Reply

      Very Nice one 🙂 அருமை. கண்ணதாசன் கண்ணதாசந்தான்…

    • amas32 (@amas32) 10:36 pm on December 18, 2012 Permalink | Reply

      திரு மோகன கிருஷ்ணன், உங்களைப் பற்றிய bio is very interesting 🙂

      கண்ணதாசனின் இந்த வரிகள் எனக்கு மிகவும் விருப்பமானவை 🙂
      //அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை
      அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை
      இவ்விடம் இவர் கண்ட இன்ப நிலை
      கண்டு என்னிடம் நான் கண்டேன் மாறுதலை//

      amas32

      • Niranjan 9:49 am on December 19, 2012 Permalink | Reply

        மொழி ஆளுமை, கருத்து ஆளுமை இரண்டுமே ஒரு சேரப் பெற்ற , கலைமகள் கடாட்சம் பெற்ற கவிஞர் கவியரசு கண்ணதாசன் அவர்கள். அதற்கு இந்தப் பாடல் ஒரு சிறந்த உதாரணம். இந்தப் பாடலில் எண்கள் அழகாகக் கையாளப்பட்டிருப்பது ஒரு பக்கம் இருந்தாலும், என்னை மிகவும் கவர்ந்தது இந்தப் பாடலின் பல்லவியில் வரும் வரி தான். அது ” ….. என்ன சொல்ல வேண்டும், நம் இளமை வாழ வேண்டும்” என்பது தான். இந்த இளமை வாழ வேண்டும் என்பது எளிமையாக இருந்தாலும் எத்துணை பெரிய விஷயத்தை உள்ளடக்கி வைத்திருக்கிறது. கண்ணதாசன் கண்ணதாசன் தான். கண்ணதாசனின் எண்ணதாசன் நான். வாழ்க அவர் புகழ்.

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel