காலையும் மாலையும் 

  • படம்: சித்திரையில் நிலாச்சோறு
  • பாடல்: காலையிலே மாலை வந்தது
  • எழுதியவர்: புலமைப்பித்தன்
  • இசை: இளையராஜா
  • பாடியவர்: சப்தபர்ணா சக்ரபர்த்தி

காலையிலே மாலை வந்தது, நான் காத்திருந்த வேளை வந்தது!

இனி காலமெல்லாம், உன்னைத் தொடர்ந்துவர,

உன் காலடிதான் இனி சரணமென,

இந்த வானமும் பூமியும் வாழ்த்துச் சொல்ல!

சென்ற நூற்றாண்டில் சிலேடை என்றால், கிவாஜ. அவர் எழுதிய, பேசிய, அல்லது பேசியதாகச் சொல்லப்பட்ட ஏராளமான சிலேடைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளன. அந்தப் புத்தகமும் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கிறது.

அது சரி, நாலு வரி நோட்டுக்கும் கிவாஜவுக்கும் என்ன சம்பந்தம்?

கிவாஜா சினிமாப் பாட்டு ஒன்று எழுதியிருக்கிறார். ஆனால் இங்கே நாம் பார்க்கவிருப்பது, அவருடைய புகழ் பெற்ற சிலேடை ஒன்று.

வெளியூரில் ஒரு நிகழ்ச்சி. அதில் கலந்துகொள்வதற்காக ரயிலேறிச் சென்றார் கிவாஜ. அதிகாலையில் ரயிலிலிருந்து இறங்கியதும், நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அவரை வரவேற்று, ஒரு பூமாலையை அணிவித்தார்கள்.

கிவாஜ மகிழ்ச்சியுடன் புன்னகை செய்தார். பின்னர், ‘என்ன இது அதிசயம்! காலையிலேயே மாலை வந்துவிட்டதே!’ என்றார் சிலேடையாக.

இந்த வார்த்தை விளையாட்டைப் பழநிபாரதி ஒரு திரைப்பாடலில் பயன்படுத்தினார், ‘சேது’ படத்தில் வரும் ‘சிக்காத சிட்டொண்ணு’ என்ற பாடலில், ‘காலையிலே மாலை வர ஏங்குதடி’ என்று எழுத, அதை உன்னி கிருஷ்ணன் பாடியிருந்தார்.

பல வருடங்கள் கழித்து, இப்போது ‘சித்திரையில் நிலாச்சோறு’ படத்தில் புலமைப்பித்தனும் அதே கற்பனையைப் பயன்படுத்தியிருக்கிறார், ‘காலையிலே மாலை வந்தது’ என்று தொடங்கி, ‘நான் காத்திருந்த வேளை வந்தது’ என்று அழகாகத் தொடர்கிறார்.

‘காத்திருந்த வேளை வந்தது’ என்பதில் உள்ள ‘வந்தது’ என்ற வார்த்தையை, வேளையோடு சேர்த்து வாசித்தால் ‘the day I was waiting for… இதோ வந்துவிட்டது’ என்ற பொருள் வரும். அப்படியில்லாமல், முதல் வரியோடு சேர்த்து, ‘நான் மாலைக்காகக் காத்திருந்தவேளையில், மாலை வந்து சேர்ந்தது’ என்றும் வாசிக்கலாம். அதுவும் அழகிய சிலேடைதான்!

அதன்பிறகும் ஓர் அழகான வார்த்தை விளையாட்டு உண்டு, ‘உன் காலடிதான் இனி சரணமென’ என்று பாடுகிறாள் அந்தக் கதாநாயகி… உண்மையில், ‘சரண்’ என்ற வார்த்தைக்குப் பொருளே ‘காலடி’தான் 🙂 ‘நின்னைச் சரணடைந்தேன்’ என்றால், உன் காலடியில் பணிந்தேன் என்று பொருள்!

***

என். சொக்கன் …

23 05 2013

173/365