மலரும் அன்பு

  • படம்: பாண்டிய நாடு
  • பாடல்: ஒத்தைக்கடை
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: டி. இமான்
  • பாடியவர்கள்: சுராஜ் சந்தோஷ், ஹரிஹரசுதன்
  • Link: http://www.youtube.com/watch?v=BaG0wq-23lQ

ஜெயிச்சா இன்பம் வரும், தோத்தா ஞானம் வரும்,

இதான் மச்சி லவ்வு! இது இல்லா வாழ்க்கை ஜவ்வு!

நாரும் பூ ஆகும்டா, மச்சி

மோரும் பீர் ஆகும்டா!

’பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்’ என்பது நம் எல்லாருக்கும் தெரிந்த பழமொழி. வாசனை எதுவும் இல்லாத நாரில்கூட, அதனால் கட்டப்பட்டுள்ள பூக்களின் வாசனை சேர்ந்துவிடும் என்பதுதான் இதன் அர்த்தம்.

அங்கிருந்து அப்படியே ஒரு டைவ் அடித்துத் திருக்குறளுக்குச் செல்வோம். இந்தப் பாடலைப் பாருங்கள்:

நாணாமை, நாடாமை, நார் இன்மை யாது ஒன்றும்

பேணாமை பேதை தொழில்

அதாகப்பட்டது, பேதைங்களோட வேலைகள் என்னென்ன தெரியுமா?

1. கெட்டதைச் செய்யறமேன்னு வெட்கப்படமாட்டாங்க : நாணாமை

2. நல்லதைத் தேடமாட்டாங்க : நாடாமை

3. அவங்ககிட்ட நார் இருக்காது : நார் இன்மை

4. நல்லபடியாப் பார்த்துக்கவேண்டிய நல்ல குணங்களைப் பராமரிக்கமாட்டாங்க : பேணாமை

மற்றதெல்லாம் புரிகிறது. அதென்ன ‘நார் இன்மை’? நார் இல்லாமல் எப்படி பூவைக் கட்டுவார்கள்? அது என்ன வயர்லெஸ் பூமாலையா?

தமிழில் ‘நார்’ என்ற சொல்லுக்கு அன்பு என்றும் அர்த்தம் உண்டு. அதைதான் திருவள்ளுவர் இங்கே பயன்படுத்துகிறார். ‘நார் இன்மை’ என்றால், அன்பு இல்லாத மனம் என்று அர்த்தம்.

இன்னொரு ரிவர்ஸ் ஜம்ப் அடித்து பழமொழிக்குத் திரும்பி வாருங்கள். இப்போது ‘பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும்’ என்றால் என்ன அர்த்தம்?

காதலிக்குப் பூ வாங்கிக் கொடுத்தால், அவளுக்கு உன்மேல் அன்பு பிறக்கும், அதுவும் அந்த பூவைபோலவே, அந்தப் பூவைப்போலவே மணம் வீசும்!

அப்புறமென்ன? உடனே ஓடுங்க பூக்கடைக்கு!

***

என். சொக்கன் …

20 11 2013

353/365