Updates from July, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • G.Ra ஜிரா 7:30 am on July 7, 2013 Permalink | Reply  

    வாழ்க! வாழ்க!! 

    வாழ்த்துவதற்கு இதயம் வேண்டும். ஒருவரை உளமாற உணர்வாற “வாழ்க! வாழ்க!!” என்று வாழ்த்துவதற்கும் ஒரு நல்ல இதயம் வேண்டும்.

    வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் யாரையாவது வாழ்த்திக் கொண்டுதான் இருக்கிறோம். அப்படியிருக்கும் போது திரைப்படத்தில் வாழ்த்துப்பாடல்கள் வராமலா இருக்கும்!

    நல்வாழ்த்து நான் சொல்லுவேன். நல்லபடி வாழ்கவென்று” என்று கவியரசர் கண்ணதாசன் எழுதினாரே. ஒருவரை எதற்காக வாழ்த்துகிறோம் என்பதற்கான காரணத்தை இதைவிட சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்ல முடியுமா!

    சரி. வாழ்த்தை எப்படிச் சொல்ல வேண்டும்? வாழ்க வாழ்க என்று எல்லாச் சூழ்நிலையிலும் ஒரே மாதிரி சொன்னால் அதில் சுவை இருக்காது. ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஒவ்வொரு விதமாகச் சொல்ல வேண்டும். திரைப்படத்தில் கவிஞர்கள் வெவ்வேறு சூழ்நிலைகளில் எப்படி வாழ்த்தியிருக்கிறார்கள் என்று சில பாடல்களைப் பார்த்துத் தெரிந்து கொள்வோமா!

    முதலில் பிறந்தநாள். கையில் ஒரு பரிசைக் கொடுத்து விட்டு வாழ்க என்றால் சரியாக இருக்கும். ஆனால் அது அந்தச் சூழலின் மகிழ்ச்சியைப் பெருக்குமா? இல்லை. இப்போதெல்லாம் கேக் வெட்டும் போது சுற்றி நின்று அனைவரும் “Happy Birthday To You” என்று பாடும் போது அந்த இடமே மகிழ்ச்சியில் மூழ்கிவிடுகிறது அல்லவா.

    அதையே அழகாக “என்னோடு பாடுங்கள். நல்வாழ்த்துப் பாடல்கள்” என்று நான் வாழவைப்பேன் திரைப்படத்தில் இடம் பெற்ற பிறந்தநாள் காட்சிக்காக எழுதினார். எல்லாரும் சேர்ந்து நல்வாழ்த்துப் பாடினால் பிறந்தநாள் கொண்டாட்டம் சிறப்புறும் என்பது வாலியின் கருத்து.

    அடுத்தது திருமணம். புதுவாழ்க்கை தொடங்கும் மகிழ்ச்சியான தருணம் என்றாலும் ஒரு மெல்லிய சோககும் இருக்கும். பிறந்த வீட்டை விட்டுப் புகுந்த வீட்டுக்குக் கணவனே எல்லாம் என்று செல்லும் பெண். இதுவரையில் பாராட்டிச் சீராட்டி வளர்த்த பெண்ணைப் பிரியும் பெற்றோர்கள் என்று உணர்ச்சிக் கலவையாக இருக்கும் அந்த இடம்.

    இந்தச் சூழ்நிலையில் எப்படி வாழ்த்துவது? நெஞ்சிருக்கும் வரை திரைப்படத்தில் “பூமுடிப்பாள் இந்தப் பூங்குழலி” என்ற பாடலில் கண்ணதாசன் இப்படியெல்லாம் வாழ்த்துகள்.

    கொட்டியது மேளம்
    குவிந்தன கோடி மலர்கள்
    கட்டினான் மாங்கல்யம்
    மனை வாழ்க துணை வாழ்க குலம் வாழ்க
    கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ்க
    கடமை முடிந்தது கல்யாணம் வாழ்க
    அடைக்கலம் நீயென்று வந்தனள் வாழ்க
    ஆண்டவன் போலுன்னைக் கோயில் கொண்டாட
    பூமுடிப்பாள் இந்தப் பூங்குழலி

    திரையிசைப் பாடல்களை எழுதுகின்றவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் வந்தால் படிக்க வேண்டிய அகராதியாக கவியரசர் இந்தப் பாட்டிலும் இருக்கிறார்.

    திருமணத்தின் முதற்பலன் குழந்தை. மக்கட்பேறு என்றே வள்ளுவர் குறிப்பிடுகிறார். அப்படியொரு பெண் வயிறு நிறைந்து சுமக்கும் காலகட்டத்தில் அவள் மகிழ்ச்சிக்காக வளைகாப்பு நடத்துவது வழக்கம். அந்த வளைகாப்பில் அந்தப் பெண்ணை எப்படியெல்லாம் வாழ்த்தலாம்? கர்ணன் படத்தில் “மஞ்சள் முகம் நிறம் மாறி” என்ற பாடலில் கவியரசர் கண்ணதாசன் வாழ்த்துவதைப் பாருங்கள்.

    மலர்கள் சூட்டி
    மஞ்சள் கூட்டி
    வளையல் பூட்டி
    திலகம் தீட்டி
    மா தின்று வாழ் என்று வாழ்த்துப் பாடுவோம்

    குழந்தையைச் சுமக்கும் அந்தப் பெண்ணுக்கு மலர்களைச் சூட்டி மஞ்சளைப் பூசி கையிரண்டும் நிறைய வளையல்களை அடுக்கி திலகமிட்டு அலங்கரிப்பார்கள். இத்தனை செய்தாலும் அந்தப் பெண்ணின் மனம் மாங்காய் கடிப்பதிலேயே இருக்கும். அதைத்தான் கவியரசர் பாட்டில் காட்டுகிறார்.

    திருமணம் முடிந்தது. குழந்தையும் பிறந்தது. அது மட்டும் போதுமா? நீடு வாழ வேண்டாமா? பீடு வாழ வேண்டாமா? அப்படி வாழ்வாங்கு வாழ்ந்தாலும் உலகம் பெண்ணைத்தான் தீர்க்க சுமங்கலி என்று வாழ்த்துகிறது. சரி. அந்த தீர்க்கசுமங்கலியை எப்படி வாழ்த்துவது? மறுபடியும் கண்ணதாசனையே கேட்போம்.

    தீர்க்க சுமங்கலி வாழ்கவே
    அந்தத் திருமகள் குங்குமம் வாழ்கவே
    காக்கும் தேவதை வாழ்கவே
    அவள் காக்கும் நல்லறம் வாழ்கவே

    தீர்க்கசுமங்கலி படத்துக்காக எழுதிய இந்த வரிகளிலிருந்து குடும்பத்தின் நல்லறத்தைக் காப்பது பெண்ணே என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

    சரி. பதவியில் இருக்கும் பெரியவர்களை எப்படி வாழ்த்த வேண்டும்? ஆண்டு அரசாளும் மன்னனை எப்படி வாழ்த்த வேண்டும்? இந்த முறை கவிஞர் முத்துலிங்கத்திடம் பாடம் கேட்கலாம். ராஜரிஷி படத்தில் கௌசிக மன்னனை எப்படி வாழ்த்திப் பாடுகிறார்கள் என்று பார்க்கலாம்.

    கருணைக்கடலே வாழ்க வாழ்க
    காக்கும் நிலமே வாழ்க வாழ்க
    அறத்தின் வடிவே வாழ்க வாழ்க
    அரசர்க்கரசே வாழ்க வாழ்க
    அழகிய கலை நிலவே என்றும் வாழ்க வாழ்கவே
    அருள் மழை தரும் முகிலே என்றும் வாழ்க வாழ்கவே
    இமயமலை போல் புகழில் உயர்ந்தாய்
    உனது கொடையால் மனதில் நிறைந்தாய்

    அரசனை வாழ்த்திப் பாடுகையில் அந்த அரசன் காட்டும் பண்பு நலன்களையும் ஆட்சி செய்யும் முறையையும் வாழ்த்திப் பாட வேண்டும். அதைத்தான் இந்தப் பாட்டு சொல்கிறது.

    நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவன் வாக்கு. அது உண்மை என்று இன்றைய நிலை நமக்குப் பாடமாக இருக்கிறது. அதனால்தான் அன்று பெரியவர்கள் “பொய்யாக் குலக்கொடி” என்று வையை ஆற்றைப் பாடினார்கள். இது போன்ற ஆறுகளைப் பாராட்டும் போது எப்படி வாழ்த்த வேண்டும்? காவிரியாற்றையே எடுத்துக் கொள்வோம். அகத்தியர் திரைப்படத்தில் கவிஞர் கே.டி.சந்தானம் காவியாற்றை எப்படியெல்லாம் வாழ்த்துகிறார் பாருங்கள்.

    நடந்தாய் வாழி காவேரி நடந்தாய் வாழி காவேரி
    நாடெங்குமே செழிக்க நன்மையெல்லாம் சிறக்க
    உணவளிக்கும் உழவர்க்கெல்லாம் கண்ணாக பண்பு
    உயர்ந்த தமிழ் நாட்டின் செல்லப் பெண்ணாக
    புலவரெல்லாம் பாராட்டும் பொன்னாக
    அன்பு பொங்கிவரும் காவிரியே வாழியாவே

    ஆற்றினால் உண்டாகும் செழிப்பையும் அது நீக்கும் பசிப்பிணியையும் சொல்லி வாழ்த்த வேண்டும். இப்படியெல்லாம் வாழ்த்திக் கொண்டாடினால்தான் ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்.

    தெய்வத்தை எத்தனையோ முறை எத்தனையோ விதங்களில் வாழ்த்தியாகி விட்டது. ஆனால் தெய்வம் குடியிருக்கும் திருக்கோயிலை?

    தஞ்சைப் பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே
    தாரணியில் தமிழ் போல நிலை நின்று வாழ்கவே

    நிலைத்து நிற்க வேண்டிய கோயில் என்பதால் மொழியோடு தொடர்பு படுத்தி தமிழைப் போல நிலைநின்று வாழ்க என்று எழுதியிருக்கிறார் கவியரசர் கண்ணதாசன்.

    எல்லாம் இருப்பது போல இருந்தாலும் சிலருக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியே இருப்பதில்லை. ஒன்று மாற்றி ஒன்று ஏதேனும் வந்து கொண்டேயிருக்கும். அவர்களுக்கு எப்படி வாழ்த்துவது? மறுபடியும் படத்தில் வாலி கற்றுத் தருகிறார்.

    நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துகள்

    ஆர்ப்பாட்டமே இல்லாத அமைதியான வாழ்த்து. வாழ்த்தப்படுகின்றவருக்கு அந்த வாழ்த்து அமைதியைக் கொண்டு வரட்டும் என்று வாலி அப்படி வாழ்த்துகிறார்.

    வாழ்த்துகள் எல்லாருக்கும் கிடைத்து விடுவதில்லை. வாழ்த்துவதற்கு சுற்றிலும் நல்ல உள்ளங்கள் இல்லாத பாவப்பட்ட உயிர்களும் உண்டு. அப்படியொரு உயிர் மற்றவர்களை வாழ்த்தும் போது மனதுக்குள் என்ன நினைக்கும்?

    எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
    நான் வாழ யார் பாடுவார்

    இப்படிப்பட்ட உள்ளங்களுக்கு ஆண்டவனே துணையிருந்து காப்பாற்ற வேண்டும்.

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
    நல்வாழ்த்து நான் சொல்லுவேன் (பட்டிக்காடா பட்டனமா/எம்.எஸ்.வி) – http://youtu.be/HkXXY_m6EIY
    என்னோடு பாடுங்கள் (நான் வாழ வைப்பேன்/இளையராஜா) – http://youtu.be/pzO8BBL_Zu8
    பூமுடிப்பாள் இந்தப் பூங்குழலி (நெஞ்சிருக்கும் வரை/எம்.எஸ்.வி) – http://youtu.be/ZMUfKlNYulM
    மஞ்சள் முகம் நிறம் மாறி (கர்ணன்/ எம்.எஸ்.வி+டி.கே.ஆர்) – http://youtu.be/h-KP-0ifwQA
    தீர்க்கசுமங்கலி வாழ்கவே (தீர்க்கசுமங்கலி/ எம்.எஸ்.வி) – http://youtu.be/yLX9jP7O8Uo
    அழகிய கலை நிலவே (ராஜரிஷி / இளையராஜ) – http://youtu.be/_qEdcAxfPgs
    நடந்தாய் வாழி காவேரி (அகத்தியர்/குன்னக்குடி வைத்தியநாதன்) – http://youtu.be/1RGZSokw_nI
    தஞ்சைப் பெரிய கோயில் (ராஜராஜசோழன்/குன்னக்குடி வைத்தியநாதன்) – http://youtu.be/5DhrsSQ-2aY
    நலம் வாழ என்னாளும் (மறுபடியும்/ இளையராஜா) – http://youtu.be/JjRs0KjYzbo
    எல்லோரும் நலம் வாழ (எங்க மாமா/ எம்.எஸ்.வி) – http://youtu.be/KPM20P7HDLs

    அன்புடன்,
    ஜிரா

    218/365

     
    • amas32 7:47 am on July 7, 2013 Permalink | Reply

      அழகாக வாழ்த்துவதும் ஒரு கலை தான். வாழ்த்துகள் என்று வெறுமே சொல்வது எப்படி, பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழுங்கள் என்று வாழ்த்துவது எப்படி. கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது அல்லவா? வாழ்த்தவும் ஒரு நல்ல மனம் வேண்டும். சிலர் வாயிலிருந்து வாழ்த்தே வராது. நல்ல வாழ்த்துக்களைக் கேட்க வேண்டும் என்றால் கவிஞகர்களிடம் தான் செல்ல வேண்டும். நீங்கள் இங்கே அருமையான பல உதாரணங்கள் கொடுத்துள்ளீர்கள்!

      நாம் நிறைய நேசிக்கும் ஒருவரை வாழ்த்துவது எளிது. அதே பண்பு அனைவரையும் வாழ்த்தும் பொது நமக்கு வரவேண்டும். அதற்கு எளிமையான வழி எல்லோரையும் நேசிக்க வேண்டும் 🙂 பெரியாழ்வார் பெருமாளையே பல்லாண்டு பாடி வாழ்த்தியவர். அவருக்குள் தான் எத்தனை வாஞ்சை இருந்திருக்க வேண்டும்!

      வாழ்த்தும் போது வாழ்த்தைப் பெறுபவர் தேவை அறிந்து வாழ்த்துவதே சிறப்பு. அதுவே அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். அதுதானே வாழ்த்துபவருக்கும் பெருமை! 🙂

      amas32

    • Uma Chelvan 7:49 am on July 7, 2013 Permalink | Reply

      “Ennodu padungal” TMS version is far better then SPB vesion !!

    • Uma Chelvan 7:58 am on July 7, 2013 Permalink | Reply

      அடுத்தவரை வாழ்த்த நல்ல மனமும் உயர்ந்த குணமும் வேண்டும். amas சொன்னது போல் பெரியாழ்வார் “பெருமாளை” பல்லாண்டு வாழ வாழ்த்தியவர். எல்லோரயும் வாழ்த்துங்கள் , நமக்கு எந்த குறையும் வராது!!!

    • rajinirams 10:29 am on July 7, 2013 Permalink | Reply

      சூப்பர்.வாழ்த்துப்பாடல்கள் என்பது செண்டிமெண்டாக எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று.தமிழில் வாழ்த்து பாடல்களுக்கு பஞ்சமே இல்லை.
      1)பேசும் தெய்வம்- வாலியின் நூறாண்டு காலம் வாழ்க.
      2)இதய வீணை- இன்றுபோல என்றும் வாழ்க-வாலி.
      3)சட்டம் என்கையில்-எங்க ரத்னம் தங்க ரத்னம் இன்று போல என்றும் வாழ்க-கண்ணதாசன்.
      4)ஊருக்கு உழைப்பவன்-பிள்ளை தமிழ் பாடுகிறேன்-காஞ்சி மன்னன் புகழ் போல காவியமாய் நீ வாழ்க,கடவுளுக்கும் கடவுளென கண்மணியே நீ வாழ்க-முத்துலிங்கம்
      5)காளி -வாழுமட்டும் நன்மைக்காக வாழ்ந்துபார்ப்போம்-கண்ணதாசன்.
      6)மனமார வாழ்த்துங்கள்-மனமார வாழ்த்துங்கள்.
      7)நெஞ்சில் ஓர் ஆலயம்-எங்கிருந்தாலும் வாழ்க-கண்ணதாசன்.
      8)நூற்றுக்கு நூறு-நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன்-வாலி.
      9)அடுத்த வாரிசு- வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம்-பஞ்சு அருணாசலம்.
      10)அன்னை ஓர் ஆலயம்-அம்மா-மீண்டும் இந்த மண்ணில் வந்து தோன்ற வேண்டுமே
      வாழ்க வாழ்க மகனே என்று வாழ்த்தவேண்டுமே -வாலி.
      11) இதயக்கனி-நீங்க நல்லா இருக்கணும்-புலமைப்பித்தன்.
      12)நல்லவனுக்கு நல்லவன்-எங்க முதலாளி-வாலி.
      13)முகமது பின் துக்ளக்-பாவலன் பாடிய புதுமை பெண்ணை,happy birthday to you -வாலி.
      14)நாம் மூவர்-பிறந்த நாள் இன்று- வாலி.
      15) வசந்த ராகம்-நான் உள்ளத சொல்லட்டுமா,”வாழ்க நீங்கள் வாழ்க”.
      வாழ்க நீங்கள் வாழ்க”.

    • suri 1:07 pm on July 9, 2013 Permalink | Reply

      theerka sumangali vazhkave was written by vali!

    • SRINIVASAN 8:23 am on July 14, 2013 Permalink | Reply

      Reblogged this on srinivasan s.

  • G.Ra ஜிரா 10:22 am on March 1, 2013 Permalink | Reply
    Tags: கே.பி.சுந்தராம்பாள், டி.ஆர்.மகாலிங்கம்   

    மாத்தி வாசி 

    பொருள்கோள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதாவது ஒரு பாடலை எப்படியெல்லாம் பொருள் கொள்ள வேண்டும் என்று சொல்லும் இலக்கணம் அது.

    சொற்கள் உள்ளது உள்ளபடியே வரிசையாகப் படித்து அப்படியே பொருள் கொண்டால் அது ஆற்றுநீர்ப் பொருள்கோள்.

    அதே போல விற்பூட்டு பொருள்கோள் என்று உள்ளது. பூட்டுவிற் பொருள்கோள் என்றும் இதற்குப் பெயருண்டு.

    அதாவது செய்யுளின் கடைசிச் சொல்லை அங்கிருந்து எடுத்து செய்யுளின் முதலில் வைத்துப் பொருள் கொள்ள வேண்டும்.

    என்னுடைய நண்பன் ஒருவன் பேசுவதெல்லாம் கூட இந்தப் பூட்டுவிற் பொருள்கோள் வகையில்தான் வரும். சற்றே நகைச்சுவையும் கிண்டலும் கலந்துதான் எப்போதும் பேசுவான் அவன். ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன் பாருங்கள்.

    அவனுக்கெல்லாம் உக்கார வெச்சு வெட்டனும்… தலைமுடிய. காடு மாதிரி வளந்திருக்கு.”

    இதில் தலைமுடி என்பதை வரியின் முன்னால் சொன்னால் அதுவொரு சாதாரண கருத்து போல ஆகிவிடும். ஆனால் அதை வேண்டுமென்றே பின்னால் சொன்னதால் எதையோ ஆபாசமாகச் சொல்ல வருகிறான் என்று நினைத்து கடைசியில் சாதாரணமாக முடியும்.

    இது போல முயற்சிகள் திரைப்படங்களிலும் நடந்தன. முதன்முதலில் கண்ணதாசன் இந்த முறையை கந்தன் கருணை திரைப்படத்தில் மிகச்சிறப்பாகச் செய்தார். அடுத்து கே.டி.சந்தானம் அகத்தியர் திரைப்படத்தில் பயன்படுத்தினார். அதற்குப் பிறகு 80களில் முழுக்க முழுக்க ஆபாசமாகவே ஒரு பாடல் வந்தது. “குத்துறேன் குத்துறேன்னு சொல்லிப்புட்டு குத்தாமதான் போறீங்களே.. பச்சைய” என்றெல்லாம் வரிகள் வரும். சரி. அதை விட்டு விட்டு முதல் இரண்டு முயற்சிகளைப் பார்ப்போம்.

    கந்தண் கருணை படத்தில் அரியது பெரியது கொடியது இனியது என்று ஔவையாரின் பாடல்களை முருகன் பாடச் சொல்லிக் கேட்பது போல ஒரு காட்சி. இவையெல்லாம் ஆனதும் முருகன் “ஔவையே புதியது என்ன?” என்று முருகன் கேட்டதும் கவியரசரின் வரிகளைக் கே.பி.சுந்தராம்பாள் பாடுவார்.

    என்றும் புதியது
    பாடல் என்றும் புதியது
    பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது
    உனைப்பாடும் பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது
    முருகா, உனைப்பாடும் பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது

    இப்படி அடுக்கி அடுக்கி எழுதியிருப்பார் கண்ணதாசன். இதற்குப் பிறகுதான் பாடலே தொடங்கும். இப்படி வேண்டுமென்று ஏ.பி.நாகராஜன் கேட்டு வாங்கினாரா என்று தெரியவில்லை. ஆனால் அகத்தியர் படத்தில் லேசாக இதே முயற்சியை கே.டி.சந்தானம் செய்திருப்பதிலிருந்து ஏ.பி.நாகராஜனுக்கு இந்த முயற்சி பிடித்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

    இசையாய் தமிழாய் இருப்பவனே
    இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே

    இந்தப் பாடலை குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் சீர்காழி கோவிந்தராஜனும் டி.ஆர்.மகாலிங்கமும் மிக அருமையாகப் பாடியிருப்பார்கள்.

    பொதுவாக ஆற்றுநீர்ப் பொருள்கோளாக ஓடிக் கொண்டிருக்கும் இன்றைய பாடல்களுக்கு நடுவில் இப்படியான விளையாட்டுகள் நிறைந்த இந்தப் பாடல்களையும் கேட்பது சுகமே.

    இதுபோல நீங்கள் எங்கும் பயன்படுத்தியிருக்கின்றீர்களா? கேட்டிருக்கின்றீர்களா? படித்திருக்கின்றீர்களா? அவைகளை இங்கே எடுத்துச் சொல்லுங்களேன்.

    பாடலின் சுட்டி
    அரியது கேட்கின் (கந்தன் கருணை) –http://youtu.be/HYmH8wOZ4Yg
    இசையாய் தமிழாய் (அகத்தியர்) – http://youtu.be/467Y_UeokDo

    அன்புடன்,
    ஜிரா

    090/365

     
    • Arun Rajendran 2:37 pm on March 1, 2013 Permalink | Reply

      சூரல் பம்பிய சிறுகான் யாறே-னு ஒரு செய்யுள்..

      வரிகள எப்படி மாத்திப் போட்டாலும் பொருள் தரும் ..அடிமறிமாற்றுப் பொருள்கோள்-னு ஞாபகம்..

      கல்யாண தேன் நிலா
      காய்ச்சாத பால் நிலா
      நீதானே வான் நிலா
      என்னோடு வா நிலா
      தேயாத வெண்ணிலா
      உன் காதல் கண்ணிலா
      ஆகாயம் மண்ணிலா
      ——இந்தப் பாட்டு முழுதும் “அடிமறிமாற்று” மாதிரியே வருவதா என் எண்ணம்..

      தவறாயிருப்பின் திருத்துங்கள்…

    • Prabhu 10:15 pm on March 3, 2013 Permalink | Reply

      Does it include songs where the end of charanam and start of pallavi are merged and song is continued? THat would mean a lot of songs could be inclueded

    • Prabhu 10:19 pm on March 3, 2013 Permalink | Reply

      Like in that Ninnu kori varanam, when it ends like ‘உன்னோடு நான் ஓயாமல் தேனாற்றிலே நீராட நினைக்கயில், நின்னுக்கோரி வரணம்’ or ‘அழகி எனது வரனே, அனுதினமும் நின்னுக்கோரி வரணம்’ இப்படியெல்லாம் முடிவையும் ஆரம்பத்தையும் மொபியஸ் வளையம் போல இணைத்து எழுதப் பட்டவை?

  • G.Ra ஜிரா 10:36 am on February 22, 2013 Permalink | Reply  

    வென்றார் உண்டோ? 

    பெண் ஜென்மம் படம் எத்தனை பேருக்குத் தெரியும்? 1977ம் ஆண்டு ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தில் வந்த படம். பத்ரகாளி எடுத்து வெற்றி பெற்ற கையோடு எடுத்த படம் பெண் ஜென்மம். இந்தப் படத்துக்கும் இசை அப்போதைய புதியமுகமான இளையராஜாதான். ஆனால் படம் தோல்வியடைந்தது.

    பத்ரகாளி படத்தில் வாலி எழுதிய “கண்ணன் ஒரு கைக்குழந்தை” பாடல் இன்றும் மிகப் பிரபலம். ஒரு கணவன் மனைவிக்குள் இருக்கும் உரிமை நெருக்கம் அணைப்பு அனைத்தையும் அழகாகக் காட்டிய பாடல்.

    அதே போலவொரு பாடலை பெண் ஜென்மம் படத்திலும் வைக்க விரும்பினார் அதே ஏ.சி.திருலோகச்சந்தர். அதே இளையராஜா. அதே வாலி. அதே பி.சுசீலா. அதே கே.ஜே.ஏசுதாஸ். பாடலிலும் அதே இனிமை. ஆனால் அதே கண்ணன் அல்ல. இந்த முறை முருகன்.

    ஆனால் படத்தின் தோல்வி பாடலைப் பின்னடைய வைத்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

    சரி. பதிவின் கருத்துக்கு வருவோம். அந்தப் பாடலின் தகவல்களைக் கீழே கொடுத்துள்ளேன்

    செல்லப்பிள்ளை சரவணன்
    திருச்செந்தூர் வாழும் சுந்தரன்
    கோபத்தில் மனத்தாபத்தில்
    குன்றம் ஏறி நின்றவன் (செல்லப்பிள்ளை
    படம் – பெண் ஜென்மம்
    பாடல் – கவிஞர் வாலி
    பாடியவர்கள் – பி.சுசீலா, கே.ஜே.ஏசுதாஸ்
    இசை – இசைஞானி இளையராஜா
    ஆண்டு – 1977

    இந்தப் பாடலை இப்போது ஏன் எடுத்துப் பார்க்கிறோம்? இந்தப் பாடலின் நடுவில் வரும் ஒர் வரி என்னைச் சிந்திக்க வைத்தது. மனைவியின் புன்னகையை வியந்து கணவன் பாடுகிறான் இப்படி.

    மன்மதன் கணை ஐவகை
    அதில் ஓர் வகை உந்தன் புன்னகை

    இந்த வரிகளில் இருந்து மன்மதனின் கணைகள் ஐந்து வகையானவை என்று தெரிகிறது. பொதுவாக மன்மதனுக்குக் கரும்பு வில் என்றும் மலர்க்கணைகள் என்றும் நாம் அறிவோம். இதென்ன ஐந்து வகைக் கணைகள்?

    இந்த ஐந்து கணைகளையும் விளக்க நான் இன்னொரு கவிஞரை துணைக்கு அழைக்கிறேன். அவர்தான் கே.டி.சந்தானம். கண்காட்சி திரைப்படத்தில் அவர் எழுதிய வரிகளை ஏ.பி.நாகராஜன் வசனநடையில் மெதுவாகச் சொல்ல அதன்பின் எல்.ஆர்.ஈசுவரி மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் பாடல் தொடரும்.

    வெண்ணிலவை குடை பிடித்து வீசு தென்றல் தேரேறி
    மென் குயில்தான் இசை முழங்க மீன் வரைந்த கொடியசைய
    கண்கவரும் பேரழகி கனகமணிப் பொற்பாவை
    அன்ன நடை ரதியுடனே அழகுமதன் வில்லேந்தி
    தண்முல்லை, தாமரை, மா, தனி நீலம், அசோகமெனும்
    வண்ண மலர்க் கணை தொடுத்தான்
    வையமெல்லாம் வாழ்கவென்றே!

    அடடா! என்ன அழகான வரிகள். வாசிக்கவே சுவையாக இருக்கிறது. ஒரு நடையில் வாய்விட்டு சொல்லிப்பாருங்கள். கவிஞரின் எழுத்து நடையின் சிறப்பு புரியும். கே.டி.சந்தானம் ஒரு நடிகரும் கூட. ஏ.பி.நாகராஜன் படங்களில் எல்லாம் தவறாமல் இருப்பார். “என்ன பொருத்தம் நமக்குள் என்ன பொருத்தம்” பாடலில் ஜெயலலைதாவின் தந்தையாக வருவார்.

    மன்மதன் வைத்திருப்பது மலர்க்கணை என்றாலும் அதில் ஐவகை மலர்கள் உண்டு. அந்த ஐந்து மலர்களாவன முல்லை, தாமரை, மாம்பூ, நீலம் மற்றும் அசோகம். இந்த ஐந்து மலர்களில் ஒரு மலரைப் போல முந்தைய பாடலின் கதாநாயகியின் புன்னகை இருந்ததாம். அது எந்த மலரைப் போல என்று இப்போது ஊகிக்க எளிமையாக இருக்குமே!

    காமதேவாய வித்மஹே புஷ்பபாணாய தீமஹி
    தன்னோ அனங்க ப்ரசோதயா

    பாடலின் சுட்டிகள்.
    செல்லப்பிள்ளை சரவணன் (பெண் ஜென்மம்) – http://isaiaruvi.net/downloads/download.php?d=/Ilayaraja/Ilayaraja%20A-Z%20Songs/Part-11&filename=UGVuX0plbm1hbSBfLV9DaGVsbGFfUGlsbGFpX1NhcmF2YW5hbi0oSXNhaWFydXZpLk5ldCkubXAz&sort=0&p=0
    அனங்கன் அங்கதன் (கண்காட்சி) – http://youtu.be/Z_UG7cmU6Do

    அன்புடன்,
    ஜிரா

    083/365

     
    • amas32 2:21 pm on February 22, 2013 Permalink | Reply

      Super Post! அற்புதமாக எழுதறீங்க 🙂 அது என்னமோ கண்ணனைத் தான் நமக்குக் குழந்தையாகக் கொஞ்சத் தோன்றுகிறது. எனக்கு முருகன் என்றுமே குமரன், பாலகன், கோபித்துக் கொண்டு போய் பேசாமல் தனித்து நிற்கும் சிறுவன். அம்மா போய் தாஜா பண்ணி அழைத்து வர எதிர்பார்க்கும் அழகன். ஆனால் கண்ணனோ அன்னைக் கோபித்துக் கொண்டாலும் அவள் பின் முதுகில் சாய்ந்து கைகளை வளையமாக்கி அம்மா கழுத்தில் மாலையாக்கி அவள் கோபத்தைத் தீர்ப்பவன்.

      நம் இந்து மதத்தில் தான் அனைத்தும் போற்றத்தக்க வழிபடத்தக்கவை. காமமும் inclusive.
      “காமதேவாய வித்மஹே புஷ்பபாணாய தீமஹி
      தன்னோ அனங்க ப்ரசோதயா”

      amas32

    • Mohanakrishnan 9:39 pm on February 22, 2013 Permalink | Reply

      மன்மதன் கணை ல மல்லிப்பூ இல்லையா? நம்பவே முடியலே. அதனால்தான் முன் வரியில் ‘மாலையில் ஒரு மல்லிகை என மலர்ந்தவள் இந்த கன்னிகை’ வாலி வாலிதான்

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel