Updates from September, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • mokrish 12:35 pm on September 19, 2013 Permalink | Reply  

  சென்னை செந்தமிழ்! 

  என்னுடன் லிப்டில் வந்த சிலர் ஒரு குறிப்பிட்ட சமூக / வட்டார மொழியை imitate செய்துகொண்டிருந்தனர். இவர் இப்படி பேசுவார் நமக்கு புரியவே புரியாது என்று யார் தலையையோ உருட்டிக் கொண்டிருந்தார்கள். வழக்கமாக நடக்கும் விஷயம்தான் – திரைப்படங்களில், கதைகளில், பதிவுகளில், சமூக வலைத்தளங்களில் தினமும் பார்க்கும் விஷயம்தான். ஆனால்  வட்டார வழக்கு கேலிக்குரியதா  ? இடம் சார்ந்து அல்லது சமூகம் சார்ந்து அல்லது தொழில் சார்ந்து வழங்கும் வட்டார  வழக்குகள் ஒரு மொழியை சுவாரஸ்யமாக்குகிறது என்பது என் கருத்து.

  லிப்டில் பேசியவர்கள் எந்த வட்டாரம் என்று எனக்கு தெரியாவில்லை. ஆனால் அவர்களின் உரையாடலில் ‘மச்சான், பந்தா, பீட்டர், ஃபிலிம் காட்டறது’ போன்ற வார்த்தைகளை மிகவும்  சரளமாக தெளித்து மகிழ்ந்தனர். அட இந்த வார்த்தைகளும் மெட்ராஸ் பாஷை என்ற ஒரு வட்டார மொழியின் தாக்கம்தானே? இவர்கள் கண்ணாடி வீட்டில் இருந்து கல்லெறிந்தார்களா?

  சென்னை மாநகரில் பேசப்பட்டு வந்த பிற மொழிச் சொற்கள் கலந்த தமிழ். சோ வின் Madras by night நாடகம் பார்த்ததிலிருந்தே எனக்கு இந்த மெட்ராஸ் பாஷை  மேல் மிகுந்த ஆர்வம் இருந்தது, அந்த நாளில் ஜாம்பஜார் ஜக்கு என்ற கற்பனை பாத்திரம் ‘அசால்ட்டா’  பேசும் தமிழை ரசித்தேன். சோ,தேங்காய், லூஸ் மோகன் ஜாலியாக பேசிய மொழி. திரைப்படங்களில் கமல் அதை சிறப்பாக நகைச்சுவை முலாம் பூசி மெருகேற்றினார். இந்த மெட்ராஸ் பாஷைக்கு இணையத்தில் நிறைய crash course பதிவுகள் உண்டு. சில அருஞ்சொற்பொருள் பதிவுகளும் உண்டு.

  அறுபதுகளின் இறுதியில் வந்த பொம்மலாட்டம் படத்தில் வாலி இந்த மெட்ராஸ் பாஷையில் எழுதிய ஒரு பாடல் பிரபலமானது (இசை வி.குமார் பாடியவர் மனோரமா).

  https://www.youtube.com/watch?v=x5qzl4mKCgE

  வா வாத்யாரே வூட்டாண்ட

  நீ வராங்காட்டி நா வுடமாட்டேன்

  ஜாம்பஜார் ஜக்கு நான்

  சைதாபேட்டை கொக்கு

  வூட்டாண்ட என்றால் என்ன? வீடு தான் வூடு. அண்டை  வீடு என்றால் பக்கத்து வீடு So இதை மாற்றி ‘வீடு அண்டை’ என்ற construction வீட்டுக்கு அருகில் என்ற  பொருள் தருகிறதோ ?

  வாராவதிலே நின்னுக்கினிருந்தேன்

  அமராவதியாட்டம்

  சைட்டடிச்சு நீ ஜகா வாங்கினே

  அம்பிகாபதியாட்டம்

  வாராவதி ? வார் என்றால் நீர். போக்குவரத்துக்காக ஆற்றின் இரு கரைளை  இணைத்துக் கட்டப்படும் பாலம் தான் வாராவதி. ஆங்கிலேயர் ஒருவர் பெயரால் சென்னையில் ஆமில்ட்டன் வாராவதி எனும் பாலம் ஒன்றுண்டு

  லவ்வாப் பாத்து சோக்காப் பேசி

  டேக்காக் கொடுத்தே பின்னாலே

  சர்தான் வாம்மா கண்ணு  படா

  பேஜாராச்சு நின்னு

  காதலாகி கசிந்துருகி தான் லவ்வாப் பாத்து. ஆனால் சோக்காப் பேசி?  ஒருவேளை ஜோக் ஆ பேசி சிரிக்க வைத்தான் என்று சொல்கிறாரா ? இருக்கலாம். அடுத்து இந்த பேஜார் என்ற வார்த்தை. நாம் எல்லாரும் உபயோகிக்கும் சொல்.  ஆங்கிலேயர்கள் dont badger me (என்னை நச்சரிக்காதே) என்று சொன்ன அந்த badgerஐ, கொஞ்சம் டிங்கரிங் செய்து  பட்டி பார்த்து பேஜார் ஆக்கிவிட்டார்கள்.

  நைனா உன் நெனப்பாலே நான் நாஸ்தா பண்ணி நாளாச்சு

  மச்சான் ஒன் மூஞ்சப் பார்த்தேன்

  சால்னா நெனப்பு வந்தாச்சு

  ஆயாக்கடை இடியாப்பம் நான்

  பாயாக்கறியும் நீயாச்சு

  வா வா மச்சான் ஒண்ணா சேந்து

  வாராவதிக்கே போகலாம்

  நீ காற்று நான் மரம் என்றும் சொல்லலாம். குயிலாக நீ பாட்டாக நான் என்று சொல்லலாம்  நான் ஆயாக்கடை இடியாப்பம் நீ பாயாக்கறி என்றும் சொல்லலாம். அதே அர்த்தம் தானே?  குறிலாக நான் இருக்க, நெடிலாக நீ வளர்க்க ,சென்னை தமிழ் சங்க தமிழ் ஆனதடி என்று அறிவுமதி  சொல்வது சரிதானே?

  ஜாலியான மொழி. Kerosene என்பதை ‘கிருஷ்ணா’யில் என்றும் Palm Oil என்பதை ‘பாமா’யில் என்றும் புராண வாசனையுடன் சொன்ன அருமையான மொழி. இதை மறக்க முடியுமா?

  மோகனகிருஷ்ணன்

  292/365

   
  • Chandsethu 1:01 pm on September 19, 2013 Permalink | Reply

   Lovely :-))

  • amas32 1:06 pm on September 19, 2013 Permalink | Reply

   என் ஊரைப் பற்றிய பதிவு! பேஷ் பேஷ்! 🙂 டக்கரா இருக்கு! – ரெண்டும் ஒரே பொருள் தான் 🙂

   //வா வாத்யாரே வூட்டாண்ட

   நீ வராங்காட்டி நா வுடமாட்டேன்

   ஜாம்பஜார் ஜக்கு நான்

   சைதாபேட்டை கொக்கு//

   இதுக்கு equivalent

   அடுத்தாத்து அம்புஜத்தைப் பார்த்தேளா
   அவ ஆத்துக்காரர் சொல்லுறதைக் கேட்டேளா?
   அடிச்சாலும் புடிச்சாலும் ஒண்ணா சேந்துக்கறா..
   ஆனா அடிச்சதுக்கொண்ணு புடிச்சதுக்கொண்ணு
   புடவையா வாங்கிக்கறா, பட்டுப் புடவையா வாங்கிக்கறா…

   வட்டார வழக்கில் பேசும் மொழி, ஒரு சமூகத்தினரால் பேசும் மொழி, இவற்றை ரசிக்க வேண்டும், ஆராயக் கூடாது :-))

   amas32

   • என். சொக்கன் 9:20 pm on September 19, 2013 Permalink | Reply

    isn’t it funny both these are written by Valee? 😉

    • rajinirams 11:16 am on September 20, 2013 Permalink

     செந்தமிழ் சென்னை தமிழ் என்று மட்டுமல்ல பல இந்திய மொழிகளையும் ஒரு(தமிழ்) மொழி பாட்டில் கொண்டு வந்த “ஒரே”கவிஞர் வாலி அவர்கள்-இந்திய நாடு என் வீடு-பாரத விலாஸ்:-)) அவறை பற்றிய சில விஷயங்களை சமர்ப்பிக்காதலால் இந்திய அரசின் சிறந்த கவிஞர் விருது அவருக்கு(அந்த பாடலுக்கு) கிடைக்கவில்லை.

  • rajinirams 3:54 pm on September 19, 2013 Permalink | Reply

   “ஷோக்கா கீதுபா”என்று சொல்லவைக்கும் நகைச்சுவையான பதிவு.”வா மச்சான் வா,வாடி என் கப்ப கிழங்கே”என்று கொச்சை தமிழில் பாடல்கள் வந்தாலும் சென்னை தமிழை சிறப்பிக்கும் (!) பாடல் இன்றளவில் வாலியின் இந்த பாடல் தான்.

  • க்ருஷ்ணகுமார் 8:56 pm on September 19, 2013 Permalink | Reply

   \\\ சைட்டடிச்சு நீ ஜகா வாங்கினே

   அமராவதியாட்டம் \\\

   தப்பு….தப்பு….தப்பு

   சைட்டடிச்சு நீ ஜகா வாங்கினே அம்பிகாபதியாட்டம்

  • தேவா.. 12:12 pm on September 20, 2013 Permalink | Reply

   எனக்கு என் காலத்தில் வந்த வட்டார மொழிப் பாடல்கள் மேல் தனி ப்ரியம். அதில் ஒன்று .

   மச்சி மன்னாரு (ராஜா சந்தோஷமாக, சென்னை தமிழில் பாடுவார்). காலத்துக்கு ஏற்றவாறு ஜாம்பாஜார், ஜக்கு எல்லாம் மாறியிருக்கும். உற்று நோக்கினால், பல ஆங்கில வார்த்தைகள், ஆங்கிலமாக தெரியாமல் தமிழாக மாறிருக்கும். சென்னை தமிழ் , பல கூடல் சங்கமம்.

 • mokrish 10:08 am on May 9, 2013 Permalink | Reply  

  சென்னையில் ஒரு நாள் 

  கடந்த வாரம் ஆபீஸ் வேலையாய் தென் சென்னை, புற நகர், வட சென்னை , தேசிய நெடுஞ்சாலை என்று பல இடங்கள் செல்லவேண்டியிருந்தது. தினந்தோறும் விரிவடையும் நகரம் பிரமிப்பாக இருந்தது.

  பழைய மகாபலிபுரம் சாலையில் ஒரு வெயில் வேளையில் பயணம். -வழியெங்கும்  சாப்ட்வேர் நிறுவனங்கள் ,கல்லூரிகள். அதனால் நிறைய மிதவை (??) பேருந்துகள்  சாலையின் இரு புறமும் வீடு வாங்கலையோ வீடு வாங்கலையோ என்று கூவும் ப்ளெக்ஸ் விளம்பரங்கள். கண்ணுக்கு தெரியும் தூரம் வரை கட்டடங்கள் – புதிய, பழைய, முடிக்கப்படாமல் என்று பல நிலைகளில் உயர்ந்து நிற்கும் கட்டடங்கள், தரையும் கூரையும் சொந்தமில்லை ஆனால் இடையில்  உள்ள காற்று வெளி  (Air Pocket ) மட்டும் விற்பனைக்கு!

  சட்டென்று மனதில் ஓடியது  ‘ சீட்டுக்கட்டுக் கணக்காக இங்கே வீட்டக் கட்டி’ என்ற வரிகள்.  உடனே மனம்  நாலு வரி நோட் அலைவரிசையில் sync ஆனது.அனுபவி ராஜா அனுபவி என்ற படத்தில் கண்ணதாசன் அன்றைய (1967) மெட்ராஸ் பற்றி எழுதிய பாடல் http://www.youtube.com/watch?v=ujMYkmG6cqA

  மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

  மெதுவாப் போறவுக யாருமில்லே இங்கே

  சரியாத் தமிழ் பேச ஆளுமில்லே

  கிராமத்திலிருந்து வரும் ஒருவன் நகரத்தின் அவலங்கள் சொல்லும் பாடல். அவசர வாழ்க்கையும் காது கூசும் மெட்ராஸ் பாஷையும் பற்றிய வருத்தம்.

  சீட்டுக்கட்டுக் கணக்காக இங்கே வீட்டக் கட்டி இருக்காக

  வீட்டக் கட்டி இருந்தாலும் சிலர் ரோட்டு மேலே படுக்காக

  சீட்டுக்கட்டா? 1967ல் சென்னையில் அடுக்கு மாடி இருந்திருக்க வாய்ப்பில்லை. ஹவுசிங் போர்ட் வீடுகள் பார்த்து / LIC பார்த்து பாடுவது போல் காட்சி. அதுவே சீட்டுக்கட்டு என்றால் இன்றைய கட்டடங்களைப்பார்த்தால்  தீப்பெட்டிக் கணக்காக என்று பாடியிருப்பாரோ?  நகரத்தின்  தெருக்களிலே நிக்க ஒரு நிழலில்லையே  என்றும் அங்கலாய்க்கிறார் .

  பட்டணத்துத் தெருக்களிலே ஆளு நிக்க ஒரு நிழலில்லையே

  வெட்டவெளி நிலமில்லையே நெல்லுக் கொட்ட ஒரு இடமில்லையே

  காத்து வாங்க பீச்சுப் பக்கம் காத்து நிக்கும் கூட்டமே

  நேத்து வாங்கிப் போன காத்து என்ன ஆச்சு வூட்டிலே

  இன்று நகரங்களில் ஷாப்பிங் மால்கள் தான் பப்ளிக் ஸ்பேஸ் என்னும்போது இன்றும் நிற்க நிழலில்லைதான். அதனால்தான் வங்கக்கடலோரம் காற்று வாங்க பெரும் கூட்டம்.என்கிறார்

  வைரமுத்துவும் ஒரு நகர்வல பாடல் எழுதியிருக்கிறார். மே மாதம் படத்தில் மெட்ராச சுத்திப்பாக்கப்போறேன் என்ற பாடல் http://www.youtube.com/watch?v=VETmkuuI8Fs

  மெரினாவில் வீடு கட்டப்போறேன்

  லைட் ஹவுசில் ஏறி நிக்கப்போறேன்

  இதுதானே ரிப்பன் பில்டிங் பாரு

  இதுக்கு உங்கப்பன் பேர் வக்க சொல்லப்போறேன்

  என்று ஜாலியான Fantasy கற்பனையில் ஆரம்ப வரிகள். சினிமா பிடிக்கும் கோடம்பாக்கம், ஏரோப்ளேன் இறங்கும் மீனம்பாக்கம்,, பாரின் சரக்கு பர்மா பஜார் என்று சென்னையின் ‘பெருமைகளை’ பட்டியல் போடுகிறார்.

  மெட்ராஸின் ஹீரோ அது மெட்ரோ வாட்டர்

  ஆனா ஸ்டைலுன்ன இப்ப மினரல் வாட்டர்

  மெட்ராஸின் கீதம் அது ஆட்டோ சத்தம்

  என்றும் நக்கல் செய்கிறார். http://www.youtube.com/watch?v=VETmkuuI8Fs

  இரண்டு பாடல் காட்சிகளையும் பாருங்கள். சென்னை அழகுதான் முதல் பாடலில் வரும் அசல் ஸ்பென்சர் பிளாசாவும் சென்ட்ரல் ஸ்டேஷன் மேல் இருக்கும் murphy radio எழுத்துக்களும் அழகு.

  பல வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட பாடல்கள் இன்றும் பொருத்தமாய்… மாற்றங்களே இல்லையா?  சீட்டுக்கட்டு தீப்பெட்டியாகி, ஆட்டோ ஷேர் ஆட்டோவாகி.. இது வளர்ச்சியா?

  வெயில்தான். மின்வெட்டும் உண்டு. கொசுக்கள் ராஜ்ஜியம். கூவம் பார்த்தால் கோவம் வரும்.ஆனாலும் எனக்கு சென்னை பிடிக்கும். சொர்கமே என்றாலும் அது நம்மூரைப்போல வருமா?

  மோகனகிருஷ்ணன்

  159/365

   
  • rajnirams 6:03 pm on May 9, 2013 Permalink | Reply

   சூப்பர் போஸ்ட்.நீங்கள் சொன்னது மாதிரி சென்னையிலேயே வளர்ந்த என்னை போன்றவர்களுக்கு சென்னை பெஸ்ட் தான்:-)) இரண்டு பாடல்களும் அருமை. அள்ளி தந்த வானத்திலும் கபிலன் எழுதிய ஒரு பாடல் “சென்னை பட்டணம்,எல்லாம் கட்டணம்” நல்ல பாடல்.

  • amas32 8:54 pm on May 9, 2013 Permalink | Reply

   ஆஹா, நீங்க நம்ம கட்சி மோக்ரிஷ்! மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் பாடல் ஒரு காலத்தில் அவ்வளவு பிரபலம். கவிஞர் கண்ணதாசனின் தீர்க்கதரிசனத்தை எண்ணி வியக்கிறேன். 67ல் பாடியது இன்றும் சரியாக இருக்கிறதே!

   எத்தனையோ ஊர்களில் வாழ்ந்திருக்கிறேன். ஆனால் சென்னை போல வருமா? வருடம் முழுவதும் கோடை தான். அதனாலேயே மார்கழி மாதம் #ChennaiSnow என்று ட்விட்டரில் புகழப்படும் அளவு நமக்கு இங்கே குளிரே கிடையாது. மழை வந்தால் தெருவில் கால் வைக்க முடியாது. ஆனால் சென்னையின் சிறப்புத் தான் என்ன? வந்தாரை வாழ வைக்கும் ஊர் இது. இங்கே இருக்கும் பிற மாநிலத்தவர் நிம்மதியாக வாழ முடியும். பேச்சில் மரியாதை கிடையாது தான் சென்னைவாசிகளுக்கு, ஆனால் மனத்தில் அன்பு உண்டு! எல்லாவற்றிற்கும் மேலாக மெரினா கடற்கரை! ஆ! என் இனிய சென்னையே! ரொம்பப் புகுழுகிறேனோ? :-))

   amas32

  • GiRa ஜிரா 10:23 pm on May 9, 2013 Permalink | Reply

   சென்னை என்று சொல்லடா
   தலை நிமிர்ந்து நில்லடா

   தப்பு தப்பு…

   சென்னை என்று சொல்லுங்க
   தலை நிமிர்ந்து நில்லுங்க

   நான் பெங்களூரில் ரொம்ப வருடங்களா இருந்துட்டேன். ஆனாலும் எனக்குச் சென்னை மேல ஒரு தனிப்பாசம் உண்டு.

   சின்ன வயசுல லீவுக்கு சென்னைக்குதான் வருவோம். டி.நகரில் அத்தை வீட்டில் தங்குவோம். டி.நகர், பாண்டி பஜார், ரங்கநாதன் தெரு, அண்ணாசாலை, நுங்கம்பாங்கம், சத்யம்/தேவி/சன்/சாந்தி, மெரினா, பெசண்ட் நகர் பீச்னு எல்லாமே பிரமிப்பா இருக்கும்.

   இப்போ வாழ்க்கையே சென்னைன்னு ஆயிருச்சு. குறை சொல்லனும்னா எதுலையும் குறை சொல்லலாம். ஆனா சென்னை செல்லச் சென்னைதான். பெங்களூர்ல இருந்து வந்தும்… பெங்களூரையே மறக்க வெச்சது சென்னை. அதுதான் அதோட சிறப்பு.

   மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்னு கவியரசர் எழுதுனது திருக்குறள் மாதிரி. இன்னைக்கும் பொருந்துது. முருகன் அருளால் இந்த ஊரும் மக்களும் உலகமும் நல்லாயிருக்கனும்.

   எல்லாரையும் நல்லபடியா காப்பாத்தி நல்லவங்களாவும் நல்லறிவுள்ளவங்களாவும் வெச்சிரு முருகா!

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel