Updates from August, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • mokrish 11:49 pm on August 17, 2013 Permalink | Reply  

    கல்லிலே கலைவண்ணம் கண்டோர் 

    சென்னையில் எங்கள் அலுவலகம் வரும் அமெரிக்கர்களும்  ஐரோப்பியர்களும் மற்ற நாட்டினரும் பார்த்தே தீர வேண்டும் என்று அடம் பிடிப்பது இரண்டு இடங்கள் – ஒன்று பனகல் பார்க் புடவை கடைகள் இன்னொன்று மாமல்லபுரம். ஒருமுறை ஜப்பானிலிருந்து வந்தவர்களுடன் மாமல்லபுரம் செல்ல வேண்டியிருந்தது. பார்த்த இடம்தான். ஆனால் உடன் வந்தவர்களின் உற்சாகம் எனக்கும் தொற்றிக்கொள்ள, எல்லா இடங்களையும் ஆர்வத்துடன் பார்த்தோம்.

    அதில் ஒருவர் கையில் இருந்த Lonely Planetல் இந்த இடம் பற்றி நிறைய விவரங்கள் படித்திருந்தார். அங்கே அவர் பார்த்த சிற்பங்களை Poetry in Stone என்று குறிப்பிட்டார். அட இது கல்லிலே கலை வண்ணம் தானே? குமுதம் படத்தில் கவி கா மு ஷெரிப் எழுதிய கல்லிலே கலை வண்ணம் என்ற பாடல் வரிகள்  (இசை கே வி மகாதேவன் பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன் )

    http://www.youtube.com/watch?v=g-HUpdB_OeI

    கல்லிலே கலைவண்ணம் கண்டான் – இரு

    கண்பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான்

    பல்லவர் கோன் கண்ட மல்லை போலப்

    பாரெங்கும் தேடினும் ஊரொன்றும் இல்லை

    சொல்வதும் இதைத்தானே?

    வா ராஜா வா படத்தில் மாமல்லபுரத்தின் சிறப்பு பற்றி அழ வள்ளியப்பா எழுதிய பாடல் (இசை குன்னக்குடி வைத்யநாதன் பாடியவர் எல் ஆர் ஈஸ்வரி).  http://www.youtube.com/watch?v=TlR7UH3D-J8

    கல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவ ராஜா

    அந்த கதை சொல்ல வந்தேனே சின்ன ராஜா

    ஓட்டுக்கல்ல சேர்க்காம ஒரே கல்ல குடைஞ்செடுத்து

    கட்டிவெச்சான் மண்டபத்தை பல்லவ ராஜா அதை

    கச்சிதமா சொல்ல வந்தேனே சின்ன ராஜா

    கடலோரம் கோபுரம் மலைமேலே மண்டபம்

    எப்படித்தான் செஞ்சானோ பல்லவ ராஜா

    அதை அப்படியே சொல்ல வந்தேன் சின்ன ராஜா

    சர்வர் சுந்தரம் படத்திலும் மகாபலிபுரம் பற்றி கண்ணதாசன் எழுதிய ஒரு அருமையான பாடல் உண்டு.(இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் பி சுசீலா & குழுவினர்)

    http://www.youtube.com/watch?v=Uz_OGjZoPro

    சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு

    கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு

    ஆடை கொடுத்தான் அவள் உடலினிலே

    ஆட விட்டான் இந்த கடலினிலே

    படை கொண்ட பல்லவன் ஆக்கிவைத்தான்

    பருவத்தின் சாரத்தை தேக்கி வைத்தான்

    கன்னி பெண்ணை தேரினில் தூக்கி வைத்தான்

    காதலை ஏன் அவன் பாக்கி வைத்தான்…

    அன்னமிவள் வயதோ பதினாரு

    ஆண்டுகள் போயின ஆறுநூறு

    இன்னும் இவள் முதுமை எய்தவில்லை

    என்னதான் ரகசியம் தெரியவில்லை

    கல்கி சிவகாமியின் சபதத்தின் முன்னுரையில் “கையிலே பிடித்த கல்லுளிகளையே மந்திரக் கோல்களாகக் கொண்டு எந்த மகா சிற்பிகள் இந்த மகேந்திர ஜாலங்களைச் செய்தார்களோ என்று நினைக்கும்போது அந்தச் சிற்பிகளைக் கையெடுத்துக் கும்பிடத் தோன்றியது” என்று எழுதியிருந்தார். எனக்கும்தான்.

    மோகனகிருஷ்ணன்

    259/365

     
    • rajinirams 8:51 pm on August 19, 2013 Permalink | Reply

      நினைவாலே சிலை செய்து அருமையான பதிவை செதுக்கி “சிற்பி”த்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். சிற்பி செதுக்காத பொற்சிலையோ.கண் கவரும் சிலையே இப்படி சி(ல)லை பாடல்களும் இருக்கின்றன. நன்றி.

  • G.Ra ஜிரா 10:44 am on May 26, 2013 Permalink | Reply  

    பாட்டானவன் 

    நேற்றோடு (25-மே-2013) ஒரு வீணையின் நரம்பு அறுந்தது!
    ஒரு புல்லாங்குழலின் இசைத்துளைகள் மூச்சு விட மறந்தன!
    மேளம் ஒன்று தாளங்களை எல்லாம் மறந்து பாளமானது!
    தமிழ்நாட்டின் பிதாமக இசைக்குயில் ஒன்றின் குரல் நின்று போனது!

    ம்ம்ம். ஆர்மோனியத்தின் காற்றுப் பைகளுக்கும் மூச்சுத்திணறல் வருமென்று யாருக்குத் தெரியும்!

    ஆம். ஏழிசை வேந்தர் டி.எம்.சௌந்தரராஜன் இன்று நம்மோடு இல்லை. அவர் வணங்கிப் பாடிய தமிழ்க்கடவுள் முருகப் பெருமான் திருவடியில் அவர் ஆன்மா அமைதியை அடைந்திருக்கும்.

    ஆனால் அவர் குரலால் உயிர் பெற்ற பாடல்கள் நம்மோடு இன்றும் ஊடாடிக் கொண்டு இருக்கின்றன.

    அவர் பாடிய சில பாடல்களைக் கொஞ்சமேனும் நினைத்துப் பார்ப்பதே நாம் அவருக்குச் செய்யும் சிறப்பான அஞ்சலியாகும்.

    எத்தனையோ கவிஞர்கள் எழுதிய பாடல்களை அவர் உணர்வுப்பூர்வமாக பாடியுள்ளார். அவையெல்லாம் திரைப்படப் பாத்திரங்களுக்குப் பொருத்தமான பாடல்கள். ஆனாலும் சில கவிஞர்கள் எழுதிய பாடல் வரிகள் அவருக்குப் பொருத்தமாக இருக்கும். அப்படியான சில பாடல்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

    பாட்டும் நானே பாவமும் நானே” என்ற கா.மு.ஷெரீப்பின் வரிகளைப் பாடச் சிறந்த பாடகர் வேறு யாராக இருக்க முடியும்?! திருவிளையாடல் திரைப்படத்தில் மதுரையின் தலைவன் சொக்கநாதனுக்கு மதுரை தந்த சௌந்தரராஜன் பாடியது மிகப் பொருத்தம்.

    அந்தப் பாடலின் அடுத்தடுத்து வரும் இன்னொரு வரியும் மிகப் பொருத்தம். “அசையும் பொருளில் இசையும் நானே”. உண்மைதான். திரையில் அசையும் பொருளில் (நடிகர்களின் பிம்பம்) இசையாக இருந்தது அவர் குரல்தான். முப்பதாண்டுகள் திரையில் ஒலித்த குரலல்லவா!

    கா.மு.ஷெரீப் மட்டும் தானா? இல்லை. வாலியும் இந்தப் பட்டியலில் உண்டு. ஒரு மிக அருமையான பாடலை எழுதினார். அந்தப் பாடலைப் பாடியவரும் நடித்தவரும் ஒருவரே. ஆம். கல்லும் கனியாகும் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார் டி.எம்.சௌந்தரராஜன். அந்தப் படத்துக்கு இசை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்.

    ஒரு இசைக்கலைஞனின் கதை. ஏழை. ஆனால் உடம்பெல்லாம் இசை ஆர்வம். உணர்வெல்லாம் இசை வேகம். தன்னுடைய குரலின் திறமையைக் காட்ட ஏதேனும் ஒரு வழி வேண்டுமல்லவா! ஒரு சிறிய இசைக்கருவி ஒன்றைச் செய்கிறான். அதை வாசிக்க வாசிக்க இசையூற்று பொங்கிப் பெருகுகிறது. அந்த மகிழ்ச்சியில் பாடுகிறான்.

    கை விரலில் பிறந்தது நாதம்
    என் குரலில் வளர்ந்தது கீதம்
    இசையின் மழையில் நனைந்து
    இதயம் முழுதும் குளிர்ந்து

    வாலி எழுதியது அந்தப் பாத்திரத்தை விடவும் டி.எம்.எஸ் அவர்களுக்கு மிகவும் பொருந்தும். டி.எம்.எஸ் குரலில்தான் பலப்பல தமிழ் கீதங்கள் வளர்ந்தன என்றால் மிகையாகாது. அவருடைய உச்ச காலகட்டத்தில் அவர் பாடாத நடிகர் யார்! அவருடைய குரலிசை மழையில் உலகத் தமிழர்கள் நனைந்தார்கள்… இன்னும் நனைந்து கொண்டு இருக்கிறார்கள் என்றால் மிகையாகாது.

    அடுத்து வைரமுத்து எழுதினார். இசைஞானி இளையராஜாவின் இசையில் எழுதிய அவருடைய வரிகள் இன்று பழைய பாடல்களை ரசித்து ருசித்த மக்களின் ரசனையை பிரதிபலிப்பதாக உள்ளது.

    தாய்க்கு ஒரு தாலாட்டு திரைப்படத்தில் இடம் பெற்ற “இளமைக்காலம் இங்கு என்று திரும்பும்” என்ற பாடலில் “பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை” என்று டி.எம்.எஸ் குரலாலே ஆதங்கத்தைப் பதிவு செய்தார். அதை உண்மை என்றுதான் என் மனம் நம்புகிறது. பழைய பாடல்களில் இருந்த குரல் வித்தைகளும் உச்சரிப்புச் சிறப்புகள் இன்றைய பாடல்களில் இல்லாமலே போனது சோகம் தான்.

    அடிப்படையில் டி.எம்.சௌந்தரராஜன் வைணவக்குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் அவர் விரும்பி உருகி வணங்கியது என்னவோ தமிழ்க்கடவுள் முருகனைத்தான். அதனால்தானோ என்னவோ அவர் பாடிய முருகன் பாடல்கள் காலத்தையும் தாண்டி நிற்கின்றன.

    அவருடைய முருகன் மீதான அன்பையும் ஊர் ஊராகச் சென்று முருகன் பாடல்களைப் பாடும் பண்பையும் கவிஞர் குழந்தைவேலன் எழுதிய ஒரு முருகன் பாட்டில் உணரலாம்.

    எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே
    இன்பம் தந்து காப்பதெல்லாம் கந்தன் அருளே
    ஊருக்கு ஊர் போவேன் தினம் தினமே
    அங்கு உட்கார்ந்து பாடுவது கந்தன் புகழே
    கன்னித்தமிழ் பாடுவது புது சுகமே அதில்
    காண்பதெல்லாம் கந்தன் கவிநயமே

    கவிஞர் குழந்தைவேலன் வரிகளுக்கு இசையமைத்துப் பாடியது டி.எம்.சௌந்தரராஜன் அவர்களே. ஒவ்வொரு வரியும் டி.எம்.எஸ் அவர்களுக்கு எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது. அவ்வளவும் முருகனருள்.

    கவியரசர் கண்ணதாசன் “ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு” என்ற பாடலில் சொன்ன ”இசைப் பாடலிலே என் உயிர்த்துடிப்பு” என்ற வரிகளை டி.எம்.எஸ் பாடுவது மிகப் பொருத்தம்.

    இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் ஒரு பாடல் எழுதினார். குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் அகத்தியர் படத்தில் டி.எம்.எஸ் பாடிய அந்தப் பாடல் வரி டி.எம்.எஸ் அவர்களுக்கு மிகமிகப் பொருத்தம்.

    நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
    எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்

    உண்மைதான். டி.எம்.எஸ் குரலில் கிளம்பிய நாதம் தமிழ் நாட்டை வென்றது உண்மைதான்.

    தமிழ்த்திரையிசையிலும் முருகனருள் பாடிய பக்தியிசையிலாகட்டும் அவருடைய சாதனைகள் இன்னும் வேறு யாராலும் முறியடிக்கப்படாதவை. முறியடிக்கப்பட முடியாதவை.

    அவருடைய பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் டி.எம்.எஸ் என்ற மகாகலைஞன் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்ற எண்ணம் பெருமிதத்தைக் கொடுக்கும்.

    பதிவில் இடம் பெற்ற பாடலின் சுட்டிகள்
    பாட்டும் நானே பாவமும் நானே (கே.வி.மகாதேவன்/கா. மு. ஷெரீஃப்) – http://youtu.be/BAVFuEqqV-k
    கை விரலில் பிறந்தது நாதம் (எம்.எஸ்.விசுவநாதன்/வாலி) – http://youtu.be/Bp8kuO1Dq-o
    எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் (டி.எம்.எஸ்/குழந்தைவேலன்) – http://youtu.be/2lOr4vZVueY
    ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு (கே.வி.மகாதேவன்/கண்ணதாசன்) – http://youtu.be/ICSeUl6j66E

    அன்புடன்,
    ஜிரா

    176/365

     
    • chinnak kannan 10:57 am on May 26, 2013 Permalink | Reply

      ஒவ்வொரு குயிலாக ஓய்வு பெற்று வருகின்றன..ம்ம்..இது தான் வாழ்க்கை..தொடக்கம் என்று இருந்தால் முற்றுப் புள்ளி இருக்கும் எனத் தெரிந்திருந்தும் அந்த முற்றுப்புள்ளி வரும்போது மனம் அலைபாய்கிறது
      நல்ல அஞ்சலி ஜிஆர்.

      இது நேற்று எழுதியிருந்தேன்

      1வெண்ணிலவை நேற்றுப் பார்த்து நின்றவன் – அதன்
      சென்றதன்மை பற்றி நன்று சொன்னவன்..
      2பெண்ணழகு போவதெண்ணி வியந்தவன் – பல
      3கட்டழகைக் குரலினிலே தொட்டவன்
      4ஆண்டவனைப் பார்த்துமனம் மகிழ்ந்தவன் – கொஞ்சம்
      மாண்டவரின் நிலையையுந்தான் சொன்னவன்
      வேண்டியவன் கண்ணனிட்ம் அருளையே – எனில்
      திண்டிவிட்டான் அவனுடைய கழலையே..

      1அன்று வந்ததும் அதே நிலா
      2பெண்போனால் இந்தப் பெண்போனால்
      3கட்டழகுப் பாப்பா கண்ணுக்கு
      4ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான் அனுபவி ராஜான்னு அனுப்பிவச்சன்
      5வீடுவரை உறவு
      6 புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே

      இன்றும் அவர் பாடிய பாடல்கள் மனதில் படையெடுத்து வருகின்றன..அவரது குரலினிமை -யாராலும் நிரப்ப முடியாத ஒன்று..

    • Saba-Thambi 5:14 pm on May 26, 2013 Permalink | Reply

      மனமார்ந்த அஞ்சலி. அன்னாரின் உயிர் சாந்தி அடைவதாக!
      10 ஆயிரம் பாடல்களில் ஒன்றாவது உலகத்தின் எந்த மூலயிலோ ஒவ்வொரு நாளும் ஒலித்துக்கொண்டே இருக்கும். இது நிச்சயம்.

    • rajinirams 5:27 pm on May 26, 2013 Permalink | Reply

      சூப்பர்.பக்தி பரவசம் ஊட்டும் முருகர் பாடல்களானாலும் அச்சம் என்பது மடமையடா போன்ற எழுச்சி ஊட்டும் பாடல்களானாலும் டி.எம்.எஸ்ஸுக்கு ஈடு இணையில்லை. நன்றி. பாட்டும் நானே கண்ணதாசன் ஆயிற்றே.

    • Saba-Thambi 5:33 pm on May 26, 2013 Permalink | Reply

      Reblogged this on SABAS LOG and commented:
      RIP TM Soundrarajan. A playback legend who has sung more than 10,000 songs for the Tamil fans. Will be remembered forever.

    • Kana Praba 6:08 pm on May 26, 2013 Permalink | Reply

      அருமையான பதிவு ஜி.ரா டி.எம்.எஸ் என்ற ஆளுமை குறித்துப் பேசிக்கொண்டே போகலாம்

    • amas32 9:48 pm on May 26, 2013 Permalink | Reply

      TMS அவர்கள் போல் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர் கிடையாது. அவரை நம் தமிழ்நாடு அடைந்தது நாம் பெற்ற பேறு. அவர் பெருமை காலத்தால் அழிக்கமுடியாதது!

      amas32

    • அண்ணாதுரை 1:25 pm on October 28, 2020 Permalink | Reply

      பாட்டும் நானே பாவமும் நானே கண்ணதாசனின் பாடல். அதற்கும் கா.மு.ஷெரீப்பிற்கும் என்ன சம்பந்தம்?

      • G.Ra ஜிரா 9:31 pm on October 28, 2020 Permalink | Reply

        தவறான புரிதலோடு அப்போது எழுதப்பட்டது. பாட்டும் நானே பாவமும் நானே பாடலை எழுதியது கவியரசர் கண்ணதாசன் தான். பதிவில் திருத்த வேண்டும் என்று பார்க்கிறேன். ஆனால் என்னால் திருத்த முடியவில்லை. அதனால் பதிவில் பின்னூட்டமாக தவறை ஒப்புக்கொள்கிறேன். என்றோ எழுதி மறந்துவிட்ட பதிலிருக்கும் தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

    • G.Ra ஜிரா 9:33 pm on October 28, 2020 Permalink | Reply

      இந்தப் பதிவில் பாட்டும் நானே பாவமும் நானே பாடலை எழுதியவர் காமு.ஷெரிப் என தவறாகக் குறிப்பிட்டுள்ளேன். தகவலைச் சரிபார்க்காத தவறுக்கு நானே முழுப்பொறுப்பு.

      திருவிளையாடல் படத்தில் இடம்பெற்ற பாட்டும் நானே பாவமும் நானே பாடலை இயற்றியவர் கவியரசர் கண்ணதாசன் அவர்களே.

  • mokrish 12:40 pm on April 21, 2013 Permalink | Reply  

    வெண்ணிலவே வெண்ணிலவே 

    ‘தமிழ்நாட்டில் கண்ணை மூடிக்கொண்டு கல்லெறிந்தால் அது ஒரு கலைமாமணி மேல் விழும் சாத்தியம் மிக அதிகம்’ என்று ஒரு விழாவில் சோ அவர்கள் சொன்னார். .அதே போல திரைப்பாடல்களில் நிலா பாடல்கள் மேல் தான் விழும். . நிலவும் மலரும் அவளும் தான் கவிஞனுக்கு inspiration. காதல் , திருமணம், காதல் தோல்வி, என்று பல நிலைகளில் காதலனோ காதலியோ நிலவை சாட்சிக்கு அழைக்கும் பல பாடல்கள். நடைபாதை CD / MP3 கடைகளில் நிலா பாடல்கள் என்று ஆல்பம் வந்துவிட்டது.

    நிலவு பற்றி கவிஞர்களின் கற்பனை எப்படி இருக்கிறது? நிலவின் அழகு மட்டும்தான் அவன் கண்ணுக்கு தெரிகிறதா? நிலவின் மற்ற அம்சங்கள் பற்றி ஏதேனும் சொன்னதுண்டா? முத்துக்குளிக்க வாரீகளா ?

    திரைப்பாடல் வரிகளை கொஞ்சம் உரசிப்பார்த்தால் வள்ளுவனும் கம்பனும் அகநானூறு புறநானூறு மற்ற இலக்கியங்கள் என்று ஏராளமான ஆச்சரியங்கள். பாரி மகளிர் பாடிய அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின் எந்தையும் உடையேம் என்ற வரிகளை அழகாக / எளிமையாக மாற்றி ‘

    அன்றொரு நாள் இதே நிலவில்

    அவள் இருந்தாள் என் அருகில்’

    என்று சொன்ன கண்ணதாசன் வரிகள் தான் முதலில் நினைவுக்கு வருகிறது. திருநீலகண்டரின் மனைவி சொன்ன ‘என்னை தொடாதே’ என்பதை கண்ணதாசன் எப்படி சொல்கிறார் பாருங்கள்?

    நிலவைப்பார்த்து வானம் சொன்னது

    என்னைத் தொடாதே

    நிலவு தேய்கிறது என்பதையும் கவிதையாக சொன்னார் சூரியகாந்தி படத்தில் தாழ்வுணர்ச்சியில் வாடும் கணவன் மனைவியைப்பார்த்து பாடும்

    நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவும் வானும் போலே

    நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே

    வரிகளில் தேயாமலே தேய்வதை புரியவைக்கிறார்.

    வள்ளுவன் ‘மதியும் மடந்தை முகனும் அறியா ‘ என்ற குறளில் மங்கையின் முகத்துக்கும், நிலவுக்கும் வேறுபாடு தெரியாமல் விண்மீன்கள் மயங்கிக் தவிக்கின்றன என்று சொன்ன கருத்து கவி கா மு ஷெரிப் அவர்களுக்கு ஒரு தூண்டுதலாகி

    வானில் முழு மதியை கண்டேன்

    வனத்தில் ஒரு பெண்ணை கண்டேன்

    வானமுழு மதியை போலே

    மங்கை அவள் வதனம் கண்டேன்…!

    என்ற சிவகாமி படத்தில் TMS பாடிய பாடல் வரிகளாகிறது. 

    http://www.youtube.com/watch?v=U4cmuER-PxI.

    வாலி இந்தக்கருத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துகிறார் . தெய்வத்தாய் படத்தில்

    ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப்

    பார்த்தேன் நிலவில் குளிரில்லை

    ஒரு நிலவு ஒரு பெண் இதில் யார் அழகு? வாலிக்கு இதில் குழப்பமில்லை. காதல் தரும் மயக்கம் – நிலவும் மலரும் ஈர்க்கவில்லை என்கிறார். உயர்ந்த மனிதன் படத்தில் வரும் வாலியின் இன்னொரு பாடல் http://www.youtube.com/watch?v=l_SpGUaXUqs 

    நாளை இந்த வேளை

    பார்த்து ஓடி வா நிலா

    இன்று எந்தன் தலைவன் இல்லை

    சென்று வா நிலா

    இந்த பாடல் ஒரு நர்சரி Rhyme போல் இருக்கிறது.

    Rain Rain Go away

    Come again another day

    Little Johny wants to play

    என்ற மழலை மொழியை வைத்து காதலியின் சோகம் சொல்லி அசத்தும் வரிகள். வாலியின் இன்னொரு கற்பனையும் அபாரம். மகாநதி படத்தில் ‘பேய்கள நம்பாதே’ பாடலில் http://www.youtube.com/watch?v=465RsI5PNOo

    வீராதி வீரன் நீ என்று உலவு

    ஓர் நாளும் திசையை மாற்றாது நிலவு

    என்று அறிவுரை. வாவ் வாலி!

    வைரமுத்துவும் முகிலெடுத்து முகம் துடைத்த நிலவின் கதை சொன்னவர்தான். நிலாவை ‘ராசாவுக்காக’ கையில புடிச்சவர்தான் . அவர் முதல் மரியாதையில் ராசாவே உன்ன நம்பி பாடலில் எழுதிய அழகான வரிகள்

    களங்கம் வந்தாலென்ன பாரு

    அதுக்கும் நிலான்னு தான் பேரு

    நிலவே நெருங்காதே என்று செல்லமாக சொன்னாலும் வானமுழு மதியைப் பற்றி பாடாமல் இருக்க முடியுமா?

    மோகனகிருஷ்ணன்

    141/365

     
    • amas32 8:08 pm on April 21, 2013 Permalink | Reply

      இந்த லிஸ்டில் ஒரு பென்ண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் ஒளியில்லை சேர்த்து இருக்கிறீர்களா? 🙂

      நிலவில் மனிதன் போய் காலடி வைத்தப் பின்னும் our fascination about moon has not gone away. The unique fact is that it is the same fascination in all cultures. The west is as enamoured by the moon as the east!

      amas32

    • GiRa ஜிரா 9:34 am on April 25, 2013 Permalink | Reply

      சூரியன் இல்லைன்னா உலகமே இல்ல. ஆனா கவிஞர்கள் ஏன் நிலவைக் கொண்டாடுகிறார்கள். அது இல்லைன்னா உலகமே இல்லைங்குற சூரியன் இல்லாதப்போ ஒளி குடுப்பது நிலவு. ஒளி குடுப்பதும் எப்படி? குளுமையான ஒளி. நிலவு சுடுவதில்லை. பிரிந்திருக்கும் காதலர்களைத் தவிர.

      தூக்கம் வராத பொழுதில் நிலைவப் பார்க்கலாம். பார்த்துக் கொண்டே பேசலாம். கவிதை எழுதலாம். காதலியைக் கூப்பிடலாம். கட்டி அணைக்கலாம். கனிமுத்தம் சிந்தலாம். சூரியனை வைத்துக் கொண்டு இதையெல்லாம் செய்ய முடியுமா?

  • G.Ra ஜிரா 11:24 am on March 25, 2013 Permalink | Reply
    Tags: ஆர்.சுதர்சனம், உடுமலை நாராயணகவி, என்.எஸ்.கிருஷ்ணன், எஸ்.வி.வெங்கட்ராமன், கா.மு.ஷெரிப், சிதம்பரம் சி.எஸ்.ஜெயராமன், ஜெரார்டு, ஜேம்ஸ் வசந்தன், திருச்சி லோகநாதன், மாயா   

    காசு மேலே, காசு வந்து… 

    ஒருவன் ஒரு பிறப்பில் கற்ற கல்வி ஏழுபிறப்பிலும் தொடர்ந்து வரும் என்று ஐயன் வள்ளுவர் கூறியிருக்கிறார். கல்வியும் பாவபுண்ணியங்களும் தொடர்ந்து வரும். ஆனால் செல்வம்?

    ஒரு பிறப்பில் பெற்ற செல்வம் அந்தப் பிறப்பு முழுதும் தொடர்ந்து வந்தாலே அது பெரும் பேறு. ஓரிடத்தில் நில்லாமல் ”செல் செல்” செல்வதால் அதற்குச் செல்வம் என்று பெயர் வந்ததோ! இன்றைக்கு செல்வம் என்பது பணம் என்றாகி விட்டது.

    அந்தப் பணம்(பொருள்) இல்லாதவர்க்கு இவ்வுலக வாழ்க்கை இல்லை என்றும் ஐயன் வள்ளுவர்தான் கூறியிருக்கிறார். இந்த உலகத்தில் பணம் இல்லையென்றால் எதுவும் செய்ய முடியாது. அந்தப் பணத்தை வைத்து பழைய படங்களில் நிறைய பாடல்கள் வந்திருக்கின்றன. ஏனென்றால் அந்த படங்களில் இயல்பான மனிதர்களின் எளிய பிரச்சனைகள் சிறிதேனும் அலசப்பட்டன.

    பணம் என்றே ஒரு திரைப்படம். அதற்கு முன் எம்.எஸ்.விசுவநாதன் தனியாக இசையமைத்திருந்தாலும் மெல்லிசை மன்னர்கள் இருவருமாக இணைந்து இசையமைத்த முதற்படம் பணம். அவர்கள் இசையில் இந்தப் படத்தில் ஒரு பாடல். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனே எழுதிப் பாடிய பாடலிது.

    எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்
    பணத்தை எங்கே தேடுவேன்
    உலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்
    அரசன் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை எங்கே தேடுவேன்
    கருப்பு மார்க்கெட்டில் கலங்குகின்றாயோ
    கஞ்சன் கையிலே சிக்கிக் கொண்டாயோ
    கிண்டி ரேசில் சுத்திக் கிறுகிறுத்தாயோ
    திருப்பதி உண்டியலில் சேர்ந்து விட்டாயோ
    திருவண்ணாமலை குகை புகுந்தாயோ
    தேர்தலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ
    தேக சுகத்துக்காக ஊட்டி சென்றாயோ

    நகைச்சுவையாக வரிகள் இருப்பது போலத் தோன்றினாலும் பாடலில் பணம் பதுங்கியிருக்கும் இடங்கள் தெள்ளத் தெளிவாகத் தெரியும். கலைவாணர் என்ற பெயர் பாடலை எழுதியவருக்குப் பொருத்தமே.

    இப்படிப் பட்ட பணம் அனைத்தையும் ஆட்டி வைக்கும். எதுவும் அதன் முன் வாலாட்ட முடியாது என்பதை அதே காலகட்டத்தில் வந்த பராசக்தி திரைப்படத்தில் ஆர்.சுதர்சனம் இசையில் உடுமலை நாராயணகவி எழுதினார்.

    தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம்
    காசு முன் செல்லாதடி குதம்பாய் காசு முன் செல்லாதடி
    ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
    காசுக்குப் பின்னாலே குதம்பாய் காசுக்குப் பின்னாலே

    அப்படி பணத்தின் திறமையைச் சொல்லும் போது “ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசு பணம் காரியத்தில் கண்ணாய் இருக்கனும்” என்று நமக்கெல்லாம் அறிவுரையும் சொல்கிறார் உடுமலை நாராயணகவி. சிதம்பரம் சி.எஸ்.ஜெயராமன் இந்தப் பாடலை மிக அருமையாகப் பாடியிருக்கிறார்.

    இப்படி ஆரியக் கூத்தோ காரியக் கூத்தோ ஆடிச் சம்பாதிக்கும் பணம் எப்படியெல்லாம் செலவாகிறது என்பது தெரியாமலேயே செல்வாகிவிடும். இன்றுதான் வங்கிக் கணக்கில் சம்பளம் வந்தது போல இருக்கும். சில நாட்களிலேயே பழைய நிலைதான். இதையும் பாட்டில் சொல்ல பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கு எஸ்.வி.வெங்கட்ராமன் இசையில் வாய்ப்பளித்தது இரும்புத்திரை திரைப்படம். பாடலுக்குக் குரலால் உயிர் கொடுத்தவர் திருச்சி லோகனாதன்.

    கையில வாங்கினேன்
    பையில போடல
    காசு போன எடம் தெரியல்லே
    என் காதலி பாப்பா காரணம் கேப்பா
    ஏது சொல்லுவதென்றும் புரியல்லே
    ஏழைக்கு காலம் சரியில்லே

    இப்படியான நிலையில் பணம் இருப்பவனைத்தான் உலகம் மதிக்கிறது. அவனே வல்லான். அவன் வகுத்ததே வாய்க்கால். எவ்வளவு நல்ல குணமுடையவனாக இருந்தாலும் பணத்தைப் பார்த்துதான் உற்றாரும் ஊராரும் மதிப்பார்கள் என்பதை கா.மு.ஷெரிப் ஒரு பாடலில் அழகாகக் காட்டியிருப்பார். பணம் பந்தியிலே என்ற திரைப்படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடலது.

    பணம் பந்தியிலே குணம் குப்பையிலே
    அதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே

    இந்த உலகத்தையே இன்பவுலகமாக்கும் அந்தப் பணம் வந்தால் கொண்டாட்டங்களும் குதியாட்டங்களுக்கும் குறைவேது. பணம் வந்தால் அதைத் திருப்புவேன் இதைப் புரட்டுவேன் என்று கனவு காணும் மக்கள்தான் எத்தனையெத்தனை பேர். அத்தனை கனவுகளையும் கவிஞர் ஆலங்குடி சோமு ஒரு பாட்டில் வைத்தார். சொர்க்கம் திரைப்படத்தில் இடம் பெற்ற அந்தப் பாடலை எம்.எஸ்.விசுவநாதன் இசையில் டி.எம்.சௌந்தரராஜன் பாடினார்.

    பொன்மகள் வந்தாள் பொருள் கோடிதந்தாள்
    பூமேடை வாசல் பொங்கும் தேனாக
    ………………………………………………
    செல்வத்தின் அணைப்பில் கிடப்பேன்
    வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன் ராஜனாக
    இன்பத்தின் மனதில் குளிப்பேன்
    என்றென்றும் சுகத்தில் மிதப்பேன் வீரனாக

    இப்படியெல்லாம் கனவு கண்ட ஏழையிடம் காசு உண்மையிலே வந்து விடுகிறது. சும்மாயிருப்பானா? அதற்கும் திரைப்படத்தில் ஒரு பாடல் உண்டு. கார்த்திக்ராஜா இசையில் வாலி எழுதி கமலும் உதித்நாராயணனும் பாடினார்கள்.

    காசு மேலே காசு வந்து கொட்டுகிற நேரமிது
    வாசக்கதவ ராசலெச்சுமி தட்டுகிற நேரமிது
    அட சுக்கிரன் உச்சத்தில்
    லக்குதான் மச்சத்தில்
    வந்தது கைக்காசுதான்

    காசு என்று சொல்லிவிட்டாலும் ஒவ்வொரு ஊரிலும் அதற்கு ஒவ்வொரு பெயர். இந்தியாவில் இன்று ரூபாய். அமெரிக்காவில் டாலர். ஐரோப்பாவில் யூரோ. ரஷ்யாவில் ரூபிள் என்று எத்தனை வகையான பணங்கள். அந்தப் பண வகைகளை மதன் கார்க்கி புத்தகம் திரைப்படப் பாடலில் ஜேம்ஸ் வசந்தன் இசையில் அடுக்கியுள்ளார். அப்படிப் பட்டியல் போடுவதோடு நிற்காமல் பணம் இல்லாவிட்டாலும் தூக்கமில்லை இருந்தாலும் தூக்கமில்லை என்றொரு உண்மையையும் சொல்லியிருக்கிறார். ஜெரார்டும் மாயாவும் இணைந்து இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார்கள்.

    டாலர் யூரோ ரூபா ரூபிள் பெசோ டாகா
    ரியல் புலா தினார் ரிங்கிட் குனா கினா
    யுவான் லிரா க்ரோனி பவுண்ட் யென் ராண்ட் ஆஃப்கானி
    கோலன் ஃப்ரான்க் சொமோனி Money is so funny!
    ……………………………………….
    கையில் வரும் வரைக்கும் கண்ணில் இல்ல உறக்கம்
    கையில் அது கெடச்சும் கண்ணில் இல்லடா உறக்கம்

    என்னதான் சொல்லுங்கள். காசு எல்லா இடங்களிலும் வேலை செய்வதில்லை. காசு குடுத்து அன்பை வாங்க முடியாது. சாப்பாட்டை வாங்கலாம். பசியை வாங்க முடியாது. மிகப் பெரிய கோயிலையே கட்டலாம். ஆனால் காசு குடுத்து அருளை ஒருபோதும் வாங்கவே முடியாது. அனைத்துக்கும் மேலாக பணம் மட்டுமே நிம்மதியைக் கொடுக்காது. இப்படியாக பணத்தால் செய்ய முடியாததை இன்னொன்று செய்யும். அது என்னவென்று மெல்லிசை மன்னர் இசையில் கவியரசர் கண்ணதாசன் எழுதி டி.எம்.சௌந்தரராஜன் அந்தமான் காதலி திரைப்படத்துகாக பாடியிருக்கிறார்.

    பணம் என்னடா பணம் பணம்
    குணம் தானடா நிரந்தரம்

    பதிவில் இடம் பெற்ற பாடல்களின் சுட்டிகள்.

    பணம் என்னடா பணம் பணம் – http://youtu.be/xgUCFhNpOhY
    எங்கே தேடுவேன் பணத்தை – http://youtu.be/4cX12Szgsyc
    தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை – http://youtu.be/eCVQAzG8_14
    கையில வாங்குனேன் பையில போடல – http://youtu.be/UDhOVDUouhc
    பணம் பந்தியிலே குணம் குப்பையிலே – http://youtu.be/1VKqj92W73k
    பொன்மகள் வந்தாள் பொருள் கோடி – http://youtu.be/XGr0vonzcjE
    காசுமேல காசு வந்து – http://youtu.be/iMu_QWzjoW4
    டாலர் யூரோ ரூபா ரூபிள் – http://youtu.be/MA-_OfqUl_0

    அன்புடன்,
    ஜிரா

    114/365

     
    • மழை!! 4:10 pm on March 25, 2013 Permalink | Reply

      wow.. super.. thanks geeraa.. :)))))))

      • GiRa ஜிரா 9:06 am on April 1, 2013 Permalink | Reply

        நன்றி 🙂

    • rajnirams 5:09 pm on March 25, 2013 Permalink | Reply

      ஆஹா ஓஹோ…கலக்கிட்டீங்க சார்.வாழ்த்துக்கள்.

      • GiRa ஜிரா 9:06 am on April 1, 2013 Permalink | Reply

        நன்றி நண்பரே 🙂

    • Saba-Thambi 8:25 pm on March 25, 2013 Permalink | Reply

      காசே தான் கடவுளடா ! அந் தகடவுளுக்கும் இது தெரியுமடா!!

      • GiRa ஜிரா 9:07 am on April 1, 2013 Permalink | Reply

        ஆமா ஆமா.

        ஆண்டவன் தொடங்கி ஆண்டிகள் வரைக்கும் காசேதான் கடவுளடா!

    • amas32 8:28 pm on March 25, 2013 Permalink | Reply

      போறுமா? டக டகவென்று எத்தனைப் பாடல்களை எடுத்துவிட்டிருக்கிறீர்கள்! 🙂 சினிமாவில் சென்டிமென்ட் அதிகம். சரோஜா படத்தில் கங்கை அமரன எழுதிய பாடல் “கோடான கோடி” என்று ஆரம்பிக்கும். படமும் தயாரிப்பாளருக்குப் பணத்தை ஈட்டித் தந்தது. சிம்பு நடித்த வானம் படத்தில் no money no money no money da என்று ஒரு பாடல் வரும். படம் பிளாப் ஆகி விட்டது 🙂

      amas32

      • GiRa ஜிரா 9:08 am on April 1, 2013 Permalink | Reply

        அருமையாச் சொன்னிங்க. எப்பவுமே நேர்மறையான கருத்துகளும் சிந்தனைகளும் நல்ல பலனையே தரும். உண்மை.

    • அண்ணாதுரை 1:42 pm on October 28, 2020 Permalink | Reply

      எங்கே தேடுவேன் கண்ணதாசனின் பாடல் ..The Hind-Randor Guy-The lyrics for all the songs were written by Srinivasan’s brother, ace lyricist Kannadasan, with the exception of one song, which was written by Bharathidasan, the rebel poet of Pondicherry. Sivaji Ganesan and Padmini played the lead, while the other members of the NSK drama group such as T. K. Ramachandran,V. K. Ramasami, C. S. Pandian, Krishnan and Mathuram played significant roles.

      • G.Ra ஜிரா 9:43 pm on October 28, 2020 Permalink | Reply

        தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி. இந்தப் பதிவு எழுதப்பட்ட ஆண்டில் பணம் திரைப்படத்தை இணையத்தில் பார்க்கக் கிடைக்கவில்லை. அதனால் தகவலையும் சரிபார்க்க முடியவில்லை. பொதுவாக கலைவாணர் பாடல்களை எழுதிக் கொள்வார் என்பதாலும் அவருடைய படம் என்பதாலும் பொதுப்புத்தி முடிவுக்கு வந்திருந்தேன். சரியான தகவலைத் தந்தமைக்கு நன்றி. தற்போது இப்படம் யூடியூபில் உள்ளது. ஆனால் எழுத்தில் யார் பாடல்களை எழுதினார்கள் என்று இல்லை. விக்கிப்பீடியாவில் நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல தற்போது update செய்யப்பட்டுள்ளது.

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel