இல்லாததுபோல் இருக்குது 

கண்ணதாசன் முன்னாள் நாத்திகர்தானே என்று நண்பர் @ncokkan ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார். பழ. கருப்பையா ஒரு திறனாய்வு நூலில்.

“கண்ணதாசன் அறியாப் பருவத்தில் கடவுள் நம்பிக்கை உடையவராக இருந்தார். இளமையின் தொடக்கத்தில் கடவுள் மறுப்பாளராக மாறிவிடுகிறார். அந்தக் கால கட்டம் முழுவதிலும் அவர் எழுதிய பாடல்களில் கடவுள் ஏற்பு காணப்படவில்லையே தவிர கடவுள் எதிர்ப்பும் காணப்படாதது ஒரு வியப்பே”

என்று தொடங்கி ஒரு முழு அத்தியாயமே எழுதியிருக்கிறார். சந்தர்ப்பவசத்தால் ஒரு இயக்கத்தில் சேர்ந்து அதற்குத் தன்னுடைய உயிரினும் இனிய கொள்கையை முதற்பலியாகக் கொடுத்துவிட்டு வெகுகாலமாக இருட்டறையில் புழுங்கிக்  கொண்டிருந்தார் என்றும் சொல்கிறார்.

இயக்கத்தை விட்டு வெளியேறியபின் மீண்டும் தீவிர கடவுள் நம்பிக்கை! திரைப்பாடல்களில் அதை அழகாக வெளிப்படுத்தினார். அவ்வப்போது உரிமையுடன் நிந்தாஸ்துதியும் பாடினார்

கண்ணதாசன் சண்முகப்பிரியா என்ற படத்தில் எழுதிய ஒரு பாடல் (இசை சூலமங்கலம் ராஜலட்சுமி & ஜெயலட்சுமி, பாடியவர் டி எம் எஸ்)

இறைவனுக்கும் பெயரை வைத்தான் ஒரு மனிதன் இங்கே

இறைவன் இல்லை என்று சொன்னான் ஒரு மனிதன் இங்கே

என்று தொடங்கி

இல்லை இல்லை என்றவனும் எதனை இல்லை என்றான்

இல்லை ஒரு சக்தி என்று சொல்லவில்லை என்றான்

நாத்திகம் என்பது கடவுள் மறுப்பு மட்டும்தானா? நாத்திகம் என்பது நம்பிக்கையற்று இருப்பதா? யோசித்தால் ஆத்திகர்களைப்போலவே நாத்திகர்களும் ஒரு பெயர் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. ‘ஒரே தேவன்’ என்றோ இயற்கை  என்றோ பெயரிட்டார்கள். ஸ்டார் வார்ஸ் படங்களில் வரும் பிரபலமான வசனம் “May the Force be with you” குறிப்பது கண்ணுக்கு தெரியாத ஒரு சக்தி.

இரு தரப்பிலும் இருந்ததால் ஆத்திக-நாத்திக வாதத்தை மனிதனும் தெய்வமாகலாம் படத்தில் வெற்றி வேல் வெல்லுமடா என்ற பாட்டில் வைக்கிறார்.

http://www.youtube.com/watch?v=DvFZurTDX1A

வெற்றி வேல் வெல்லுமடா வினை தீர்ப்பான் வேலனடா

கற்றவர்க்கும் கல்லார்க்கும் கருணை தரும் தென்றலடா

என்று இறைவன் பெருமை  சொல்லும் அண்ணன். ஆனால் தம்பி நாத்திகவாதி.

இறைவன் ஆளும் உலகம் என்றால் ஏழைகளை ஏன் படைத்தான்

ஒருவர் வாழ ஒருவர் வாடும் உயர்வு தாழ்வை ஏன் அமைத்தான்

என்ற stock  கேள்வி கேட்கிறான்.பக்தியில் உருகும் அண்ணன் ‘குழந்தை போல அவனைப் பார்த்தால் கூட வந்து கொஞ்சுமடா ‘ என்று சொன்னால் ‘குழந்தை இங்கு கோடி உண்டு குமரன் என்ன தேவையடா என்று பாடும் தம்பி.  பசியால் குழந்தைகள் வாடும்போது பாலபிஷேகம் எதற்கு  என்ற வழக்கமான வாதம்தான்.

ஆனால் இது ஏன் mutually exclusive ஆக இருக்கவேண்டும்? குமரனையும் கொண்டாடி கோடி குழந்தைகளையும் கொண்டாட முடியுமே? ஆண்டவனை கும்பிட்டால் அன்பு செலுத்த முடியாமல் போகுமா?

மோகனகிருஷ்ணன்

362/365