Updates from August, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • என். சொக்கன் 4:35 pm on August 27, 2013 Permalink | Reply  

    விருந்தினர் பதிவு: கண்ணதாசன் எழுத்தைப்போல 

    படம்: வேட்டைக்காரன்

    இசை: விஜய் ஆண்டனி

    பாடல்: கபிலன்

    பாடகர்கள்: சுசித் சுரேசன், சங்கீதா ராஜேஸ்வரன்

    கரிகாலன் காலப் போல கருத்திருக்குது குழலு

    குழலில்ல குழலில்ல தாஜு மஹால் நிழலு

    சேவலோட கொண்ட போல சிவந்திருக்குது உதடு

    உதடில்ல உதடில்ல மந்திரிச்ச தகடு

    பருத்திப் பூவப் போல பதியுது உன் பாதம்

    பாதம் இல்ல பாதம் இல்ல பச்சரிசி சாதம்

    வலம்புரி சங்கப் போல வழுக்குது உன் கழுத்து

    கழுத்தில்ல கழுத்தில்ல கண்ணதாசன் எழுத்து

    கார் குழலை கரிகாலன் காலுக்கு இதற்கு முன்னால் யாரவது ஒப்பிட்டு இருக்கிறார்களா தெரியாது, ஆனால் நல்ல கற்பனை! காதலன் சொல்லும் அந்த வரிக்கு காதலி, இல்லையில்லை அந்த கருமை தாஜ் மஹாலின் நிழைலை ஒத்து இருக்கிறது என்கிறாள். காதல் சின்னமான தாஜ் மஹால் மிகப் பெரியக் கட்டிடமும் கூட. அதன் நிழல் அடர்த்தியாகத் தன இருக்கும்.

    சேவலோட கொண்டை நல்ல சிவப்பு நிறம். உதடும் அதே நிறம் என்று சொல்வது மிகவும் பொருத்தம். ஆனால் காதலி தன உதடுகளை மந்திரித்தத் தகடு என்கிறாள். உண்மை தானே? காதலனைக் கிறங்க வைக்கும் செவ்வாய் அவளுடையது, மேலும் அவள் உதடுகள் சொல்வதைக் கேட்டு பூம் பூம் மாடு போல தலையை ஆட்டத் தானேப் போகிறான். அதனால் அவள் உதடு மந்திரித்தத் தகடு தான் 🙂

    பருத்திப்பூ வெடித்து அதில் வரும் இலவம் பஞ்சு மெத்து மெத்தென்று இருக்கும். காதலியின் பட்டுப் பாதங்களுக்கு பஞ்சை உவமையாக்குகிறான் காதலன், ஆனால் காதலியோ வெந்த பச்சரிசி சோற்றைப் போல மெதுவாக தன் கால்கள் இருப்பதாகச் சொல்கிறாள். வடித்தப் பச்சரிசி சாதம் எப்பொழுதும் ரொம்ப மென்மையாக இருக்கும்.

    இந்தப் பாடலின் பல்லவியில் வரும் கடைசி இரண்டு வரிகள் தான் என்னை இந்தப் பாடலுக்கே ஈர்த்தது. வலம்புரி சங்கு வளைந்து வெண்மையாகவும் மழ மழவேன்றும் இருக்கும். காதலியின் கழுத்தை வலம்புரி சங்கைப் போல வழுக்குகிறது உன் கழுத்து என்கிறான் காதலன்.  அவளோ வழுக்கும் அவள் கழுத்தை கண்ணதாசன் எழுத்து என்கிறாள். எனக்கு இந்த வரி ஏனோ ரொம்பப் பிடித்தது. கவிஞன் கற்பனைக்கு சுதந்திரம் உண்டு. தீவிர கண்ணதாச ரசிகர்கள் என்ன சொல்வார்களோ தெரியாது. ஆனால் இந்த உவமை கச்சிதமாக இந்த இடத்தில் பொருந்துவதாக எனக்குத் தோன்றுகிறது.  கண்ணதாசனின் கவிதைகள் மிகவும் மென்மையாகவும் படிக்க நெருடல் இல்லாமல் எளிமையாகவும் இருக்கும்.

    சுஷிமா சேகர்

    பிறந்தது பாண்டிச்சேரியில், வளர்ந்தது சென்னையில். கலிபோர்னியாவில் பத்து வருடங்களும் சிங்கப்பூரில் மூன்று வருடங்களும் இருந்துவிட்டுத் தற்போது வசிப்பது சென்னையில். குழந்தைகள் பிறந்த பிறகு MBA படித்தேன். நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் உண்டு. இணையத்துக்கு (டவிட்டருக்கு) வந்து இரண்டு வருடங்கள்தான் ஆகிறது. அதன் மூலம் எனக்குக் கிடைத்த நண்பர்களை எண்ணி மகிழ்கிறேன். இணையத்துக்கு வந்த பிறகுதான் தமிழ் பயில்கிறேன். நேசிப்பது என் தொழில், பொழுதுபோக்கு 🙂

    சுஷிமா சேகர் வலைப்பதிவு: http://amas32.wordpress.com/

     
    • உமாக்ருஷ் (@umakrishh) 5:11 pm on August 27, 2013 Permalink | Reply

      இந்தப் பாடலை இந்த வயதிலும் இப்படிக் கூட அணு அணுவாக ரசிக்க முடியுமா ?:)மிகவும் ரசித்தேன் !பெரிதாக இவ்வளவு கூர்ந்து கவனித்தது இல்லை இந்தப் பாடலை..இவங்க சொன்ன பிறகு இனி கூர்ந்து கேட்கணும்னு இருக்கும்..இளைஞர்களுக்கு ஈடு கொடுக்கறீங்க..:)) அனுஷ்காவையே ஆன்னு பார்த்தவங்களுக்கு வரிகள் இனி கவனத்தில் படியும் :))

    • @penathal 9:11 pm on August 27, 2013 Permalink | Reply

      இந்தப்பாட்டு இன்னும் அழகாக எழுதி இருக்க முடியும் என்பதே என் எண்ணம். கொஞ்சம் கம்பேரபிளான உவமைகளைப் போட்டிருக்கவேண்டும். குழலுக்கும் நிழலுக்குமாவது கருமை என்று ஒரு சம்பந்தம் இருக்கிறது. உதட்டுக்கும் மந்திரிச்ச தகடுக்கும் என்ன சம்பந்தம்?

      • amas32 6:20 pm on September 2, 2013 Permalink | Reply

        நிழல் கருப்பாகத் தானே இருக்கும். அது போல கார் குழல் சரியாத்தானே இருக்கு 🙂
        ஒருவர் வீட்டில் மந்திரிச்ச தகடை வைத்தால் மந்திரித்த நபர் பேச்சுக்கெல்லாம் தலையாட்டுவார் அந்த வீட்டுக்காரர் என்பது நம்பிக்கை. அது போல இந்த உதடுகள் காதலனை mesmarise பண்ணிவிடுகிறது 🙂

        amas32

    • sukanya (@sukanya29039615) 11:52 am on August 28, 2013 Permalink | Reply

      Indha padalai kettuirkkiren. Idhai Padithappin pramadham. Thanks sushi.

    • rajinirams 2:46 pm on August 29, 2013 Permalink | Reply

      அருமையான பதிவு.இந்த வித்தியாசமான பாடலின் வரிகளை நன்கு திறனாய்வு செய்திருக்கிறீர்கள்.உண்மையில் வாலி “குடந்தையில் பாயும் காவிரி அலை தான் உன் பூங்குழலோ -நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ” என்றெல்லாம் வர்ணித்திருக்கிறார்.கரிகாலன் காலை போல என்பது கபிலனின் வித்தியாசமான வர்ணனையே. மாதுளையின் பூப்போலே மலருகின்ற இதழோ,சேலத்தில் விளையும் மாங்கனி சுவை தான் உன் செவ்விதழோ என்ற கற்பனைக்கு மத்தியில் சேவலோட கொண்டை போல என்றும் மந்திரிச்ச தகடு என்றும் கலக்கி இருக்கிறார்.ஆழ்கடலின் சங்காக நீள் கழுத்து அமைந்தவளோ என்ற வாலியின் கற்பனையை வலம்புரி சங்கு என்றும் இறுதியில் கண்ணதாசன் எழுத்து என்றும் முடித்தும் சூப்பர்.உங்கள் நல்ல ரசனைக்கு பாராட்டுக்கள். நன்றி.

      • amas32 6:26 pm on September 2, 2013 Permalink | Reply

        நீங்க என் பதிவை பாராட்டியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ரொம்ப நன்றி :-))

        amas32

  • G.Ra ஜிரா 12:09 pm on August 21, 2013 Permalink | Reply  

    கவிதைகளில் கவியரசர் 

    தமிழ் திரைத்துறைக் கவிஞர்களில் இன்றும் அதிகமாக கொண்டாடப்படும் கவிஞர் கண்ணதாசன் என்று சொன்னால் மிகையாகாது. கண்ணதாசன் இந்த உலகை விட்டு மறைந்து ஆண்டுகள் முப்பதுக்கும் மேல் ஆகிவிட்டது. இருந்தாலும் கண்ணதாசன் இன்றும் நம்மோடு தமிழ்ப் பாடல்கள் வடிவில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

    அப்படிப் பட்ட கவியரசரின் நண்பரான மெல்லிசை மன்னர் இப்போதெல்லாம் மேடைக்கச்சேரிகளில் “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே” என்ற பாட்டை “கண்ணதாசன் புகழ் பாடுங்களே” என்றுதான் மாற்றிப் பாடுகிறார்.

    பொதுவாகவே பழைய கவிஞர்களை பாட்டில் வைப்பது பழைய தமிழ் வழக்கம். அதைத் திரைப்பாடல்களிலும் கண்ணதாசன் செய்திருக்கிறார்.

    கம்பன் ஏமாந்தான்” என்று எழுதினார். அதே பாடலில் “வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு வரிசையை நான் கண்டேன்” என்றும் எழுதினார்.

    அதே போல பின்னாளில் பாடல் வரிகளில் மற்ற கவிஞர்கள் பரவலாகப் பயன்படுத்தியதும் கண்ணதாசன் பெயரைத்தான்.

    அதை முதலில் தொடங்கி வைத்தது வாலிபக் கவிஞர் வாலி. “காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ” என்று சூரக்கோட்டை சிங்கக்குட்டி படத்துக்காக எழுதினார். காளிதாசனையும் கண்ணதாசனையும் ஒரே நிறையில் வைத்து அழகு பார்த்த வாலிக்கு வணக்கங்கள்.

    அடுத்து ஒரு பாடல் வந்தது. இந்தக் கவிஞர் ஒரு காதல் கவிதையை எழுதி விட்டார். அதில் தவறுகள் இருக்கிறதா என்று தெரியவில்லை. பாடலைத் திருத்திக் கொடுக்க கவியரசர் இருந்தால் நன்றாக இருக்குமென்று நினைத்தார். உடனே எழுதினார்.

    கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு
    என் காதல் கவிதையின் வரிகளைக் கொஞ்சம் திருத்திக் கொடு
    எழுதுகிறோம் பல பாடல்களை எங்கள் காதலுக்கு
    இளம் உள்ளங்களில் அதன் எண்ணங்களில் தேர்ந்தெடுத்து

    இப்படி எழுத அந்தக் கவிஞர் கண்ணதாசனை மானசகுருவாக நினைத்திருந்தால்தான் முடியும். அப்படி நினைத்து எழுதியவர் கவிஞர் காளிதாசன்.

    வைரமுத்து அவர்களும் கண்ணதாசன் பாடல்களை ரசித்திருக்கத்தான் வேண்டும். அதனால்தான் ”வந்தேண்டா பால்காரன்” பாட்டில் “மீன் செத்தா கருவாடு, நீ செத்தா வெறும் கூடு, கண்ணதாசன் சொன்னதய்யா” என்று எழுதினார். கண்ணதாசன் அப்படி எழுதியது “போக்கிரிராஜா” படத்தில் இடம் பெற்ற “கடவுள் படச்சான் உலகம் உண்டாச்சு.. மனுசன் நெனச்சான் உலகம் ரெண்டாச்சு” என்ற பாடலில்.

    இப்படி ஒவ்வொரு கவிஞர்களும் கண்ணதாசனின் கவிதைச் சிறப்பை அடிப்படையாக வைத்துக் கொண்டு பாட்டில் குறிப்பிடும் போது வந்தார் கவிஞர் கபிலன். கண்ணதாசனின் குடிப்பழக்கதை முன் வைத்து எழுதினார் ஒரு பாட்டு.

    கண்ணதாசன் காரைக்குடி
    பேரைச் சொல்லி ஊத்திக் குடி

    இதுதான் காலத்தின் மாற்றமா? கவிஞனின் எழுத்தை மதிக்காமல் அவன் தனிப்பட்ட குறையை முன்னிறுத்தி எழுதுவது என்ன நியாயம் என்று புரியவில்லை. கண்ணதாசன் குடித்தார். உண்மைதான். ஆனால் அவர் திறந்த புத்தகமாக வாழ்ந்தார். அப்படி எத்தனை பேர் இப்போது வாழ்கிறார்கள்!

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
    காளிதாசன் கண்ணதாசன் (இளையராஜா, பி.சுசீலா, ஜெயச்சந்திரன்) – http://youtu.be/iM4hXOpYAcM
    கண்ணதாசனே கண்ணதாசனே (தேவா, சித்ரா) – http://youtu.be/BMRQTScBZx4
    வந்தேண்டா பால்காரன் (தேவா, எஸ்.பி.பாலசுப்ரமணியம்) – http://youtu.be/MRZ7_WMGFSM
    கண்ணதாசன் காரைக்குடி (சுந்தர்.சி.பாபு, மிஷ்கின்) – http://youtu.be/6F1Nfw_Buvc

    அன்புடன்,
    ஜிரா

    263/365

     
    • rajinirams 1:40 am on August 25, 2013 Permalink | Reply

      செம பதிவு சார்.நீங்கள் சொன்னது போல் கண்ணதாசன் புகழை முதலில் வாலி தான் தொடங்கிவைத்தார்.பட்டுக்கோட்டை வார்த்தைகள போட்டு நம்ம புரட்சியாரு பாடிவச்ச பாட்டு என்றும் வாலி தான் எழுதினார். இன்னொரு பாட்டு வரியிலும் சொன்னான் அந்த கண்ணதாசன் பாட்டிலே என்று வரும்-சரியாக நினைவில்லை.கவியரசரின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்.

  • G.Ra ஜிரா 10:54 am on July 10, 2013 Permalink | Reply  

    ஊறல் சுவை 

    தண்ணித் தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்
    ………………………
    புட்டி தொட்டதால புத்தி கெட்டு போனேன்
    ஊறுகாய கொண்டா உன்னையும் தொட்டுக்குறேன்

    இந்தப் பாடல் சிந்துபைரவி படத்தில் ஒரு பிரபலப் பாடகன் குடித்து விட்டுப் பாடுவதாக அமைந்த பாட்டு. இந்தப் பாட்டில் குடிப்பதுக்கு நல்ல துணை ஊறுகாய் என்று வருகிறது. இந்தப் பாட்டில் மட்டுமல்ல அஞ்சாதே படத்தில் இடம் பெற்ற “கண்ணதாசன் காரைக்குடி” பாட்டிலும் ஊறுகாயும் வருகிறது.

    கண்ணாடி கோப்பையிலே கண்ணை மூடி நீச்சலடி
    ஊறுகாயை தொட்டுகினா ஓடிப்போகும் காச்சலடி

    இப்படியாக பாட்டில் வரும் பாட்டில் எல்லாம் ஊறுகாயை இழுப்பது ஒரு வழக்கமாகவே ஆகிவிட்டது என்பதைத்தான் முதல் பாட்டில் வைரமுத்துவும் இரண்டாம் பாட்டில் கபிலனும் காட்டியிருக்கிறார்கள்.

    தண்ணி அடிக்கும் போது மட்டுந்தானா ஊறுகாய்க்கு வேலை?

    இல்லை என்று அழுத்தமாகச் சொல்கிறார் பாவேந்தர் பாரதிதாசன். குடும்பவிளக்கு என்னும் நூலில் வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தினரை உபசரிக்கும் முறையில் ஊறுகாய்களைப் பற்றி அடுக்குகிறார் பாருங்கள்.. ஆகா. பாட்டைப் படிக்கும் போதே வாயூறும். அந்த வரிகளைத் தருகிறேன். படித்துப் பாருங்களேன்.

    இற்றுத்தேன் சொட்டும் எலுமிச்சை! வற்றியவாய்
    பேருரைத்தால் நீர்சுரக்கும் பேர்பெற்ற நாரத்தை
    மாரிபோல் நல்லெண்ணெய் மாறாமல் – நேருறவே
    வெந்தயம் மணக்கஅதன் மேற்காயம் போய்மணக்கும்
    உந்துசுவை மாங்காயின் ஊறுகாய் – நைத்திருக்கும்
    காடி மிளகாய் கறியோடும் ஊறக்கண் ணாடியிலே
    இட்டுமேல் மூடிவைத்தேன் தேடிப்பார்!

    படித்தாலே எளிமையாகப் புரிந்து விடும் பாடல்தான். ஆனாலும் பாரதிதாசன் சொல்லும் ஒவ்வொரு ஊறுகாயையும் சற்று அலசலாம்.

    இற்றுத்தேன் சொட்டும் எலுமிச்சை

    எலுமிச்சை ஊறுகாய் உடனடியாகச் செய்து விடக் கூடியதல்ல. இன்று செய்து நாளை திங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வேறு ஊறுகாய்களுக்கு ஓடிவிடுங்கள். உப்பில் எலுமிச்சை நன்றாக ஊற வேண்டும். சில அவசரக்குடுக்கைகள் எலுமிச்சையை வேகவைத்து ஊறுகாய் போடுவார்கள். ஆனால் அதில் கசப்பேறி விடும்.

    ஆகையால் எலுமிச்சை ஊறுகாய் போடுகின்றவர்களை ”தயவுசெய்து வேகவைக்க வேண்டாம்” என்று கேட்டுக் கொள்கிறேன். ஊற ஊறத்தான் ஊறுகாய்.

    உப்போடு எலுமிச்சை நன்றாக ஊறிய பிறகு எலுமிச்சையின் தோலும் உள்ளிருக்கும் சதைப்பகுதியும் இற்றுப் போய் கலந்து விடும். துண்டு துண்டாக எடுத்து இலையில் போட முடியாது. அல்வா பதத்தில் இருக்கும். அதனால்தான் இற்றுத் தேன் சொட்டும் எலுமிச்சை என்றிருக்கிறார் பாவேந்தர். ரசிகரய்யா நீர்!

    வற்றியவாய் பேர் உரைத்தால் நீர் சுரக்கும் நாரத்தை

    நாரத்தம் பழத்துக்கு இயல்பான சுவை புளிப்பு கலந்த கசப்பு. நாட்டு நாரத்தை மலைநாரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. நாட்டு நாரத்தை உருண்டையாகவும் மலைநாரத்தை சற்று நீளமாகவும் இருக்கும்.

    ஏணி தோணி அன்னாவி நாரத்தை” என்றே ஒரு சொலவடை உண்டு. ஏணி எல்லாரையும் ஏற்றி விடும். ஆனால் அங்கேயே இருக்கும். தோணியும் பலரைக் கரையேற்றும் ஆனால் அங்கேயே இருக்கும். அன்னாவி(ஆசான்) பலரைக் கரையேற்றி மேல்படிப்புக்கு அனுப்புவார். ஆனால் அவர் அந்தப் பள்ளியிலேயே இருப்பார். அது போல வயிற்றுக்குப் போனது எதுவானாலும் அதைச் செமிக்க வைத்துவிடும் நாரத்தை முழுதாகச் செமிக்காது என்று சொல்வார்கள்.

    நாரத்தையை எலுமிச்சை ஊறுகாய் போடுவது போலவே ஊறுகாய் போடலாம். இன்னொரு வகை உப்பில் ஊறவைத்து காய வைக்கும் வகை. இதில் மிளகாய்ப் பொடியே இருக்காது. வெறும் உப்பும் நாரத்தையும்தான். இன்னும் எளிமையாகச் சொன்னால் மோர்மிளகாய் செய்யும் அதே செய்முறைதான்.

    அப்படி உப்பில் ஊறிக் காய்ந்த துண்டுகள் நாட்பட இருக்கும். ஒரு இணுக்கு கிள்ளி வாயில் போட்டலே… ஆகா…ஆகா. அதைச் சாப்பிட்டவர்கள் மறுமுறை நினைத்தாலே வாயில் நாவூறும். அதைத்தான் “வற்றியவாய் பேருரைத்தால் நீர் சுரக்கும் பேர் பெற்ற நாரத்தை” என்கிறார் பாவேந்தர். காய்ச்சல் காலத்தில் வாய்க்கு எதுவும் பிடிக்காமல் போகும் போது நாரத்தை ருசிக்கும் துணை.

    மாரிபோல் நல்லெண்ணெய் மாறாமல் – நேருறவே
    வெந்தயம் மணக்கஅதன் மேற்காயம் போய்மணக்கும்
    உந்துசுவை மாங்காயின் ஊறுகாய்

    ஊறுகாய்களின் ராணி எலுமிச்சை என்றால் ராஜா மாங்காய். மாங்காய் ஊறுகாய் பிடிக்காது என்று யாரும் சொல்லக் கேட்டதேயில்லை.

    மாங்காயில் மட்டுந்தான் விதவிதமான ஊறுகாய்களை உருவாக்க முடியும். மாங்காய்த் தொக்கு, ஆவக்காய் ஊறுகாய், மாங்காய் ஊறுகாய், மாவடு, இனிப்பு மாங்காய், உலர்த்திய மாங்காய் என்று பலப்பல வகைகள்.

    பொதுவில் மாங்காய் ஊறுகாய்க்கு தாளிக்கும் போது நல்லெண்ணெய்தான் மிகப் பொருத்தம். அதில் சிறிது வெந்தயமும் பெருங்காயமும் கலந்துவிட்டால்… அடிமை சாசனம் எழுதிக் கொடுக்கக் கூட மக்கள் ஆயத்தமாக இருப்பார்கள்.

    நாலு நாட்கள் வரக்கூட இன்ஸ்டண்ட் ஊறுகாய் முதல் நாலாறு மாதங்கள் தாண்டியும் சுவைக்கும் ஊறுகாய் செய்ய மாங்காயே உற்ற துணை.

    நைத்திருக்கும் காடி மிளகாய் கறியோடும் ஊறக்கண் ணாடியிலே இட்டுமேல் மூடிவைத்தேன்

    எங்கள் ஊரில் பாட்டிகள் எல்லாம் இருந்த வரை சோறு வடித்துதான் பழக்கம். அந்த வடிநீரைக் கீழே ஊற்ற மாட்டார்கள். ஒரு பெரிய மண்பானையில் ஊற்றி வைத்துவிடுவார்கள். அது புளித்த நீராக மாறும். அதைத்தான் காடி என்பார்கள். காடி என்பது இன்று கடைகளில் கிடைக்கும் செயற்கை வினிகர் அல்ல. இயற்கையாகவே வீடுகளில் கிடைத்த புளித்தநீர்.

    இந்த நீரில் மிளகாயையும் மிளகையும் ஊறப்போட்டு விடுவார்கள். அதிலேயே ஊறிக் கொண்டிருக்கும் மிளகாயை மோர்ச்சோற்றுக்கு சேர்த்துக் கொண்டால்.. அடடா! மேலே சொன்ன அத்தனை ஊறுகாய்களும் தோற்றுவிடும்.

    அரிசிச் சோற்றுக்கு மட்டுமல்ல, கம்பஞ்சோற்றுக்கும், கேப்பைக் களிக்கும், சோளக் கூழுக்கும், குதிரைவாலி சோற்றுக்கும் பொருந்தும் ஒரே ஊறுகாய் ஜாடியில் நிறைந்திருக்கும் காடி மிளகாய்தான்.

    கவிஞர்களுக்கு ரசனை மிகமிக அவசியம். அந்த ரசனை இருந்ததால்தான் ஊறுகாயைப் பற்றியும் இப்படியெல்லாம் பாரதிதாசனாரால் கவிதை எழுந்த முடிந்தது. அது சரி. அதனால்தானே அவருக்குப் பெயர் பாவேந்தர்.

    பாவேந்தர் நான்கு ஊறுகாய்களோடு நிறுத்திக் கொண்டாலும் ஊறுகாய் வகைகள் எக்கச்சக்கம். உங்களுக்குப் பிடித்த ஊறுகாய் வகைகளைப் பற்றிச் சொல்லுங்களேன்.

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்

    பாடல் – தண்ணித் தொட்டி தேடி வந்த
    வரிகள் – வைரமுத்து
    பாடியவர் – கே.ஜே.ஏசுதாஸ்
    இசை – இசைஞானி இளையராஜா
    பாடலின் சுட்டி – http://youtu.be/AHB9TIC04Gc

    பாடல் – கண்ணதாசன் காரைக்குடி
    வரிகள் – கபிலன்
    பாடியவர் – மிஷ்கின்
    இசை – சுந்தர் சி பாபு
    பாடலின் சுட்டி – http://youtu.be/6F1Nfw_Buvc

    அன்புடன்,
    ஜிரா

    221/365

     
    • Arun Rajendran 12:02 pm on July 10, 2013 Permalink | Reply

      இந்தப் பதிவ படிக்கும்போதே எச்சில் ஊற ஆரம்பிச்சுடுச்சு.. 😉

      அழகான பாவேந்தர் பாட்ட வேற கொடுத்திருக்கீங்க… நன்றிங்க ஜிரா சார்..

      நெல்லி, பூண்டு, இஞ்சி, மிளகாய், மீன், மாட்டுக்கறி போன்றவற்றில் ஊறு(காய்/கறி) செய்வர்..

    • rajinirams 12:57 pm on July 10, 2013 Permalink | Reply

      வாயில் நீர் ஊற வைக்கும் “ஊறுகாய்”பதிவு. ஆயுர்வேத மருத்துவர் ஒரு முறை டிவியில் பேசும்போது ஊறுகாய் அவ்வளவு நல்லதல்ல,உடலுக்கு ஊறு விளைவிக்கும் என்பதாலேயே ஊறுகாய் என்று அந்த காலத்தில் சொல்லியிருக்கிறார்கள் என்றெல்லாம் பேசினார்-ஊற வைத்த காய் என்பதால் ஊறுகாய் என்றும் சொல்கிறார்கள்.எது எப்படியோ தயிர்சாதம்-எலுமிச்சை ஊறுகாய் கூட்டணி என்பது ஆண்டாண்டு காலமாக சக்கை போடுகிறது.எனக்கு மிகவும் பிடித்தது நன்கு ஊறவைத்த “மாகாளி கிழங்கு”ஊறுகாய் தான்.சூப்பரோ சூப்பர்.(ஆனால் பலர் இந்த சுவையை அறிந்திருக்க மாட்டார்கள்). நன்றி.

    • amas32 5:20 pm on July 10, 2013 Permalink | Reply

      ஊறுகாய் சுவை நம் மனத்தின் ஆழத்தில் புதைத்து உள்ளது, பல பிறவிகளாகக் கூட இச்சுவையை நம் அறிந்து இருக்கலாம். ஏனென்றால் உங்கள் பதிவைப் படிக்கும் போதே அவ்வளவு நீர் வரத்து வாயினில்!

      குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு நாக்கு செத்துவிடுமோ, அல்லது மூளை தான் மழுங்கி விடுமோ தெரியாது. அதனால் தான் உப்புக் காரத்தோடுத் தொட்டுக் கொள்ள ஊறுகாய் தேவையாய் உள்ளது. ஊறுகாய் தயாரிப்பில் உப்பு அதிகம் சேர்ப்பதால் இப்போ இரத்த அழுத்த நோய் உள்ளவர்களை உணவில் ஊறுகாய் சேர்த்துக் கொள்ள வேண்டாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

      amas32

    • Saba-Thambi 8:13 pm on July 10, 2013 Permalink | Reply

      நன்றாக நறுக்கிய நளபாகம்! எச்சில் ஊறுகிறது.

      பாவற்காய் பொதுவாக பழப்புளியுடன் சமைக்கப்படுவது – மாறுதலுக்கு எலுமிச்சை ஊறுகாயுடன் சமைத்து பாருங்களேன் – புதுச்சுவை தெரியும்.

    • Uma Chelvan 8:18 pm on July 10, 2013 Permalink | Reply

      WOW, what a wonderful post…ஊறுகாய் சாப்பிடகூடாது என்று சொல்வதுக்கு காரணம்…நிறைய உப்பு இருப்பதால் ……leads to high blood pressure.

    • Uma Chelvan 8:47 pm on July 10, 2013 Permalink | Reply

      உப்பை தின்னவன் தண்ணி குடிப்பான், ஊறுகாய் தின்னவனும்தான். It retains water leads to over work on the blood vessels and the Kidney. உப்பும் சர்க்கரையும் எங்கே சென்றாலும் உடன் தண்ணீரையும் எடுத்து செல்லும்( Osmosis). Diabetes people ஓயாமல் பாத்ரூம் போக….. same Mechanism thaan.

  • என். சொக்கன் 5:26 pm on May 2, 2013 Permalink | Reply  

    விருந்தினர் பதிவு : யம்மா 

    எண்பதுகளில், தொண்ணூறுகளில் வந்த படங்களில் எல்லாம் தடுக்கி விழுந்தால் ஒரு காதல் தோல்விப் பாடலைக் கேட்கலாம். ஆண் பாடும் காதல் சோகப் பாடல்களே அவற்றில் அதிகம். பெண்ணின் காதல் தோல்வி சொல்லும் பாடல்களின் வீதம் மிகக் குறைவு. அப்படியே பாடல் கேசட்டில் இருந்திருந்தாலும் ஏதோ காரணத்தால் ”உன் நெஞ்சத் தொட்டுச் சொல்லு என் ராசா”, போல கேசட்டோடு நின்று போகும் சில. (ராஜாதிராஜா பட கேசட்டில் இடம் பெற்ற இந்தப் பாடல் பின்னர் வேறு திரைப்படம் ஒன்றிற்கு உபயோகப்படுத்தப்பட்டதாக ஒரு தகவல் உண்டு).

    குத்து, ஃபேண்டஸி வகைப் பாடல்களின் ராஜ்ஜியமாக தமிழ்த் திரைப்பாடல் சூழல் உருமாறிய பின் சமீபத்தில் காதல் தோல்விப் பாடல்களுக்கான தேவை இங்கே குறைந்தே போனது. மின்னலே “வெண்மதி, வாரணம் ஆயிரம் “அஞ்சல” போல திடீரென்று சில பாடல்கள் குதித்து ஒரு ரவுண்டு வரும். 

    அன்று முதல் இன்று வரை இந்தப் பாடல்களில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று தோல்வியின் சோகத்தில் பாடப்படுவது; இரண்டு தோல்வியின் விரக்தியில் பாடுவது. முதலாவது தோல்வியின் சோகத்தில் புலம்புதல், இரண்டாவது புலம்பலோடு சேர்ந்து கொஞ்சம் திட்டுதலும்.

    முதலாவது வகைக்கு உதாரணம் ’மலையோரம் வீசும் காத்து”, “வெண்மதி, அஞ்சல” வகைப் பாடல்கள். இரண்டாவது வகையில் சேர்பவை, “கண்களே கண்களே காதல் செய்வதை விட்டுவிடுங்கள், கம்பன் ஏமாந்தான்”தனமான பாடல்கள்.

    முதல் வகையறாவில் சமீபத்தில் சேர்ந்து கொண்டது “ஏழாம் அறிவு” படத்தின் “யம்மா யம்மா காதல் பொன்னம்மா”. வெகு அரிதாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் எஸ்.பி.பி. பாடிய பாடல்.

    பாடல்வரிகளுக்குச் சொந்தக்காரர் கபிலன்.

    எஸ்.பி.பி. குரலைத் தவிர்த்துப் பாடலில் வேறேதும் சிறப்பு லேது என்று ரொம்ப நாளாய் நினைத்திருந்தேன். சமீபத்தில் வெளியூர்ப் பயணத்தின்போது காரில் இந்தப் பாடலை ஆற அமர கேட்கையில்தான் இந்தப் பாடலின் நாலுவரி(களுக்கு) நோட்(ஸ்) கிடைத்தது J

    இந்தப் பாடலின் முதல் சரணத்தின் கடைசி இருவரிகள் மற்றும் இரண்டாவது சரணத்தின் கடைசி இருவரிகளே அவை.

    காதல் ஒரு போதை மாத்திரை;

    அதை போட்டுக்கிட்டா மூங்கில் யாத்திரை

    ”காதலில் விழுந்தவனுக்கு இறந்தபின் மூங்கிலில் கட்டித் தூக்கிச் செல்லப்படும் நிலைமையே சாத்தியம்” எனும் சாதாரண அர்த்தம்தான் இதற்கு என்று இதுநாள் வரை நினைத்திருந்தேன். என் கோ-ப்ரதர் வேறோர் அர்த்தம் சொன்னார்.

    “அது அப்படி இல்லை ஃப்ரெண்டு. போதை மாத்திரை எடுத்தவனை அந்த போதை மாத்திரைதான் கண்ட்ரோல்’ல வெச்சிருக்கும். ஆத்துல மூங்கில் அடிச்சிட்டுப் போனா அதோட பிரயாணத்தை ஆறுதான் தீர்மானிக்கும்; மூங்கில் தீர்மானிக்காது. அதுபோல ஆகிடும் காதல்ல விழுந்தவன் நிலைமை. ன்னு சொல்றாரு கவிஞர்”, என்றார்.

    அட இந்த அர்த்தம்தான் சரியோ?

    காதல் இல்லா ஊரு எங்கடா;

    என்னை கண்ணைக் கட்டி கூட்டிப் போங்கடா

    இது ரொம்ப சிம்பிள்! காதலால் நான் உற்ற துயர் போதும். காதல் இல்லாத ஊருக்கு என்னைக் கொண்டு போங்கள். தட்ஸ் இட்?

    இல்லை! அத்தோடு முடியவில்லை அவனது கோரிக்கை. அவன் கோருவது தன் கண்ணைக் கட்டிக் கூட்டிப் போகச் சொல்கிறான். காதல் பித்தினில் தான் எந்த தருணத்திலும் அவளைத் தேடி இங்கேயே திரும்ப வந்துவிடும் நிலைமை ஏற்படலாம். அது கூடவே கூடாது. திரும்ப வரும் வழி நான் அறியாவண்ணம் என் கண்களைக் கட்டிக் கூட்டிப் போங்கள் என்கிறான்.

    வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

    ஆர். எஸ். கிரி

    என்னா சார் பெரிய அறிமுகம். கடந்த முப்பத்ந்தைந்து வருடங்களாக தமிழ் இலக்கியத்தில் உழல்பவர்; ழார் பத்தாய், ஜின்முன்கின் போன்றவர்களின் இந்திய வாரிசு’ன்னு எதுனா போடுங்க சாமி…

    ஹிஹி… ஜோக்கு.
    நம்மைப் பத்தி நாமே என்னத்த சொல்ல சாமி? இது பதிவு எழுதறதைவிட கொடுமையான விஷயமா இருக்கே?
    எனிவே இந்தாங்கோ…..

    ”என்னத்த சொல்ல” என்பதைத் தவிர தன்னைப் பற்றி சொல்ல ஏதுமில்லை எனக் குறிப்பிடும் கிரி கடந்த இருபது வருடங்களாக சென்னைவாசி, ஐந்து வருடங்களாக தமிழ்வலைவாசி. “பேசுகிறேன்” என்று மொக்கை போடச் செய்வார். “பாடுகிறேன்” என்று பிறரை ஓடச் செய்வார். 

    நல்லவர், வல்லவர் என்று மட்டும் தன்னைப் பற்றி குறிப்பிட்டால் போதும் என்று கேட்டுக் கொண்டார்.

     
    • anonymous 7:52 pm on May 2, 2013 Permalink | Reply

      “மூங்கில் யாத்திரை” கூர்மையான நோக்கு; வாழ்த்துக்கள் கிரி

      மூங்கில் -ன்னாலே உறுதி;
      ஆற்றங்கரையில் வளரும் போது, மூங்கில் வெறுமனே காற்றில் ஆடும்; “ஜா”லியா இசை பாடும்;

      அதுவே, காதல் எனும் ஆற்றில் விழுந்து விட்டால்?
      அத்தனை உறுதியான மூங்கிலை, மேலே காற்றும் அலைக்கழிக்கும்; கீழே நீரும் அலைக்கழிக்கும்; பாவம் அந்தப் பயணம்;

      காற்று = (வெளியில்) ஒலக வாழ்க்கை; நீர் = (மனசுக்குள்) காதல் வாழ்க்கை;
      மூங்கில்=?
      முருகனையே நம்பிச் சீரழிந்த உள்ளம்-ன்னு வச்சிக்கலாம்:)

      அழகான இலக்கியப் பாட்டே இருக்கு, “மூங்கில் யாத்திரைக்கு”;
      “மூங்கில் வந்தணைதரு முகலியின் ஆற்றினில்
      வீங்கு வெந்துயர் இழுத்து அவன் வீடு எளி தாகுமே”

    • amas32 5:04 am on May 3, 2013 Permalink | Reply

      இந்தப் பாடலில் எனக்கும் இந்த இரு வரிகள் அர்த்தமுள்ளதாகத் தோன்றும். புல்லாங்குழலும் மூங்கிலால் தான். இறைவன் இசைக்கும் புல்லாங்குழலை செய்யப் பயன்படும் அதே மூங்கில் நம் கடைசி யாத்திரைக்கும் பயன் படுகிறது.

      amas32

    • GiRa ஜிரா 8:46 am on May 3, 2013 Permalink | Reply

      நல்ல பதிவு கிரி. மூங்கிலின் பயணம் அருமையான விளக்கம். நதியோடு போனால் கரையுண்டு கண்ணே விதியோடு போனால் கரையேது என்ற வைரமுத்து வரிகள் நினைவுக்கு வருகின்றன.

  • G.Ra ஜிரா 11:22 am on January 14, 2013 Permalink | Reply
    Tags: பொங்கல், Pongal   

    பொங்கலோ பொங்கல் 

    நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் மற்றும் தைப்புத்தாண்டு வாழ்த்துகள். இந்தத் திருநாள் அனைவருக்கும் நல்ல வாழ்க்கையையும் அறிவையும் அன்பையும் அருளையும் கொடுக்கட்டும்.

    ”ஏன் உழவு செய்கின்றீர்கள்? விட்டுவிட்டு வாருங்கள்” என்று ஒரு பிரதமரே சொல்லும் அவல நிலையில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதும் அதன் பெருமையை புரிந்து கொள்வதும் மிகமிகத் தேவையாகிறது.

    உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார். மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்வார். அந்த உழுதுண்டு வாழ்வோரே தொழுதுண்டு கொண்டாடும் பண்டிகைதான் தைத்திருநாள். தை பிறப்பு என்று சிறப்பாகப் போற்றப்படும் பண்டிகை இது. இந்த நன்னாளில் வேளாண்மை மீண்டும் சிறப்புற ஆண்டவனை வணங்குகிறேன்.

    இந்தப் பொங்கல் பண்டிகையின் பெருமையைச் சொல்லும் பாடல்கள் திரைப்படங்களில் நிறைய உள்ளன. ஆனால் அவைகளில் எல்லாம் ஆகச் சிறந்த பாடலாக நான் கருதுவது மருதகாசி அவர்கள் எழுதிய தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பாடல்தான்.

    தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்
    தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்
    தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
    ஆடியிலே வெதை வெதைச்சோம் தங்கமே தங்கம்
    ஐப்பசியில் களையெடுத்தோம் தங்கமே தங்கம்
    கார்த்திகையில் கதிராச்சு தங்கமே தங்கம்
    கார்த்திகையில் கதிராச்சு தங்கமே தங்கம்
    கழனியெல்லாம் பொன்னாச்சு தங்கமே தங்கம்
    படம் – தை பிறந்தால் வழி பிறக்கும்
    பாடியவர்கள் – டி.எம்.சௌந்தரராஜன் மற்றும் பி.லீலா
    பாடல் – ஏ.மருதகாசி
    இசை – கே.வி.மகாதேவன்

    அன்றன்று வேட்டையாடி அன்றன்று உண்ட மனிதன் நாகரிகம் கொண்டதற்கு அடையாளம் வேளாண்மைதான். ஆறு மாத உழைப்பும் ஆறு மாத ஓய்வுமாய் மனிதனை மாற்றியது வேளாண்மைதான். ஆகையால்தான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று பழமொழியே உண்டானது.

    பொங்கல் என்றாலே கரும்பை மறக்க முடியுமா? நீரை மொடாக் குடியாக குடித்து வளர்ந்து அந்த நீரிலே இனிப்பு கலந்து கொடுக்கும் புல்லே கரும்பு. அந்தக் கரும்புப்புல் காற்றில் லேசாக ஆடுவதைப் பார்க்கிறார் கவியரசர் கண்ணதாசன். கரும்பா பெண் என்னும் அரும்பா என்னும் ஐயத்தில் இப்படியொரு பாட்டை எழுதுகிறார். காதலும் கரும்பும் இனிப்பதால் ஒன்று. இரண்டும் பழசாக ஆக போதை கூட்டும் என்று தெரிந்து எழுதுகிறார்.

    தை மாதப் பொங்கலுக்கு
    தாய் தந்த செங்கரும்பே
    தள்ளாடி வாடி தங்கம் போலே
    மையாடும் பூவிழியில்
    மானாடும் நாடகத்தை
    மயங்கி மயங்கி ரசிக்க வேண்டும் வாடி
    நீ என்னை தேடுவதும்
    காணாமல் வாடுவதும்
    கடவுள் தந்த காதலடி வாடி
    படம் – நிலவே நீ சாட்சி
    பாடியவர் – இசையரசி பி.சுசீலா
    பாடல் – கவியரசர் கண்ணதாசன்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

    தை பிறந்த வேளையில் எல்லோர் வீட்டிலும் புதுப்பானை இருக்கிறதா? எல்லோர் வீட்டிலும் புதுநெல் இருக்கிறதா? புத்தம் புதிதாய் கறந்த பாலும் அந்தப் பாலிலிருந்து எடுத்த நெய்யும் இருக்கிறதா? புதுக்கரும்பை ஆலையில் ஆட்டிச் சாறுபிழிந்து காய்ச்சி எடுத்த வெல்லம் இருக்கிறதா? இவையெல்லாம் இல்லாத ஏழைகளும் நாட்டில் உண்டு. அவர்களுக்குப் பொங்கல் இல்லையா?

    இருக்கிறது என்கிறார் கவியரசர் கண்ணதாசன். குடிசை வீட்டுக் கோமதகமான குழந்தையின் கன்னத்து முத்தத்து இனிப்பை விடவா சர்க்கரைப் பொங்கலும் செங்கரும்பும் இனித்து விடும்?

    பூஞ்சிட்டுக் கன்னங்கள்
    பொன்மணி தீபத்தில்
    பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே
    பொங்கல் பிறந்தாலும்
    தீபம் எரிந்தாலும்
    ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே
    படம் – துலாபாரம்
    பாடியவர் – இசையரசி பி.சுசீலா மற்றும் ஏழிசை வேந்தர் டி.எம்.சௌந்தரராஜன்
    பாடல் – கவியரசர் கண்ணதாசன்
    இசை – டி.தேவராஜன்

    ஏழைகள் கண்ணீரையெல்லாம் துடைக்கும் பொங்கல் பண்டிகைகள் இனிமே ஒவ்வொரு ஆண்டும் வர வேண்டும் என்று வேண்டும்.

    வளமையின் பண்டிகையான பொங்கலின் மற்றொரு வழமை மஞ்சளாகும். கொத்து மஞ்சளை புத்தம் புதிதாய் பறித்து மங்கலப் பொருளாய் வைப்பார்கள். அந்த மஞ்சளையே காய வைத்துப் பொடியாக்கிப் பயன்படுத்துவதும் உண்டு. மஞ்சள் மங்கலமாவது மங்கையில் மனதுக்கினிய வாழ்வில்தானே. அதை நினைத்துதான் காதலில் பொங்கல் வைக்கிறார் வாலி.

    பொங்கலு பொங்கலு வெக்க
    மஞ்சள மஞ்சள எடு
    தங்கச்சி தங்கச்சி தங்கச்சி
    புஞ்சையும் நஞ்சையும் இந்த பூமியும் சாமியும் இனி
    நம் கட்சி நம் கட்சி நம் கட்சி
    பூ பூக்கும் மாசம் தை மாசம்
    ஊரெங்கும் வீசும் பூவாசம்
    படம் – வருஷம் 16
    பாடியவர் – இசையரசி பி.சுசீலா
    பாடல் – வாலிபக் கவிஞர் வாலி
    இசை – இசைஞானி இளையராஜா

    எப்படியான சூழ்நிலையிலும் பொங்கல் கொண்டாட்டம் மகிழ்ச்சியைப் பெருக்கும். அந்த மகிழ்ச்சியை அப்படியே வாலி அவர்கள் வரிகளில் வார்த்துக் கொடுக்க, அத்தோடு இசையைக் கோர்த்துக் கொடுத்திருக்கிறார் இளையராஜா.

    தைப் பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ
    வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியைப் போற்றிச் சொல்லடியோ
    இந்தப் பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் தெய்வமடி
    இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி
    படம் – மகாநதி
    பாடியவர் – கே.எஸ்.சித்ரா
    பாடல் – வாலிபக் கவிஞர் வாலி
    இசை – இசைஞானி இளையராஜா

    இப்படி உழவும் தொழிலும் சிறந்த வேளாண் பெருமக்களின் பொங்கல் திருநாள் இன்றும் இருக்கிறது. எப்படி இருக்கிறது தெரியுமா?

    ஆடுங்கடா என்னச் சுத்தி
    நான் ஐயனாரு வெட்டுகத்தி
    பாடப் போறேன் என்னப் பத்தி
    கேளுங்கடா வாயப் பொத்தி
    கெடா வெட்டிப் பொங்கல் வெச்சா காளியாத்தா பொங்கலடா
    துள்ளிக்கிட்டு பொங்கல் வெச்சா ஜல்லிக்கட்டு பொங்கலடா
    போக்கிரிப் பொங்கல் போக்கிரிப் பொங்கல்
    படம் – போக்கிரி
    பாடியவர் – நவீன்
    பாடல் – கபிலன்
    இசை – மணி சர்மா

    இப்பிடிப் போக்கிரியான பொங்கல் மீண்டும் மறுவாழ்வு பெற்று வேளாண்மை சிறந்து மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று ஆனை கட்டிப் போரடிக்கும் அழகான தமிழகம் உருவாக இறைவனை வேண்டுகிறேன்.

    பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!

    அன்புடன்,
    ஜிரா

    044/365

     
    • kamala chandramani 12:16 pm on January 14, 2013 Permalink | Reply

      அருமையான பதிவு ராகவன். உழவர்கள் வாழ்வு மலர அரசாங்கம் நிறைய செய்யவேண்டும் என்று இறைவனை வணங்குகிறேன். சினிமாப் பாடல்களுடன் இலக்கியத்தைக் கலந்து மிக நல்ல பதிவுகளைத் தரும் உங்களுக்கும், திரு. சொக்கன், மோக்ரீஷ் அனைவருக்கும் நன்றி. பொங்கல் நல் வாழ்த்துகள்.

      • Niranjan 8:07 pm on January 14, 2013 Permalink | Reply

        அருமையான பதிவு 🙂 🙂 பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!

        • GiRa ஜிரா 8:52 pm on January 14, 2013 Permalink

          நன்றி நிரஞ்சன். இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் 🙂

      • amas32 8:38 pm on January 14, 2013 Permalink | Reply

        //பூஞ்சிட்டுக் கன்னங்கள்
        பொன்மணி தீபத்தில்
        பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே
        பொங்கல் பிறந்தாலும்
        தீபம் எரிந்தாலும்
        ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே/

        சாரதா அவர்களின் நடிப்பு அப்படியே கண் முன்னே நிற்கிறது. இதுவே வார்த்தைகள் சிறிது மாறி சோக கீதமாகவும் வரும்.

        வாழ்க்கை ஒரு வட்டம் என்பது உண்மையானால் வேளாண்மை மீண்டும் அதற்குண்டான மேன்மை நிலையை நிச்சயம் அடையும்!

        amas32

        • GiRa ஜிரா 8:53 pm on January 14, 2013 Permalink

          அருமையான பாடல் அது. சாரதாவுக்கு ஊர்வசி பட்டம் வாங்கிக் கொடுத்த படமல்லவா. மலையாளம் தொடங்கி தமிழ், தெலுங்கு என்று இந்தி வரைக்கும் சென்ற படமாயிற்றே.

      • GiRa ஜிரா 8:52 pm on January 14, 2013 Permalink | Reply

        இனிய பொங்கல் வாழ்த்துகள் அம்மா.

        உண்மைதான். உழவருக்கு அரசாங்கம் ஆதரவு தெரிவிக்காமல் போகுமானால் இறைவனே இறங்கி வந்து ஆதரவு தெரிவிக்க வேண்டி வரும். அன்று அரசாங்கமும் அதற்கு ஆதரவாக இருந்தவர்களும் தொழுதுண்டு வாழ வேண்டியவர்கள் ஆவார்கள்.

    • Rajan D. R 11:50 am on January 18, 2013 Permalink | Reply

      மசக்கைக்கு முன்னும் பின்னும் கூட புளிப்பு காரம் இவற்றின் மீது பெண்களுக்கு ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கின்றது. பானிபூரி மீது அவர்கள் கொண்டிருக்கும் மோகத்தை உளவியல் மற்றும் பரினாம வளர்ச்சி பார்வையில் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கின்றது

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel