Updates from April, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • mokrish 11:21 am on April 30, 2013 Permalink | Reply
  Tags: புகழேந்தி. கண்ணதாசன்   

  இயற்கை என்னும் இளைய கன்னி 

  கவிதையின் கருப்பொருள் எதுவாக இருந்தாலும் அது நிகழும் இடம் அது சார்ந்த இடம் என்று ஏதோவொரு இயற்கை வர்ணனை இருக்கும். மன்னனை பாடும் பாடல்களிலும்  தலைவன் தலைவி பாடல்களிலும் கவிஞர்களின் கற்பனையில் வி்யப்பளிக்கும் உவமைகளும் இடம்பெறுவதுண்டு.

  நளவெண்பாவில் மல்லிகையே வெண் சங்கா என்ற பாடலில்

  மென் மாலைத் தோள் அசைய மெல்ல நடந்தே

  புன் மாலை அந்திப் பொழுது

  என்ற வரிகள்  படித்தேன் . ‘இந்த அந்திப் பொழுது ஓர் அழகிய பெண்ணைப்போலத் தோன்றுகிறது, முல்லை மலர்களால் ஆன மெல்லிய மாலை ஒன்றை அணிந்தபடி தோள் அசைய மெல்ல நடந்துசெல்கிறது என்கிறார் புகழேந்தி. எவ்வளவு அழகான கற்பனை.(தினம் ஒரு பா http://365paa.wordpress.com/2011/12/30/177/ )

  அட என்ன இது … வழக்கமாக பெண்ணை வர்ணிக்கும்போது  இயற்கையை துணைக்கு அழைப்பது வழக்கம். இங்கே இயற்கையை வர்ணிக்கும்போது பெண் போல் இருப்பதாக சொல்கிறாரே?   திரைப்பாடல்களில் இது போல்  உண்டா? அந்திப்பொழுது பற்றி கண்ணதாசன் கற்பனையில்  சுமதி என் சுந்தரி படத்தில் வரும்

  பொட்டு வைத்த முகமோ

  கட்டிவைத்த குழலோ

  பொன் மணிச்சரமோ

  அந்தி மஞ்சள் நிறமோ

  என்ற பாடலில் மாலை நேரத்து அழகை பெண்ணைப்  போல் என்று சொல்லி வர்ணிக்கிறார். கண்ணதாசன் அருவியை வர்ணிக்கும் ஒரு பாடல் ஒரே வானம் ஒரே பூமி படத்தில்

  மலைராணி முந்தானை சரிய  சரிய

  மண்மாதா வண்ணமடி விரிய விரிய

  என்று மலையில் இருந்து வழியும் அருவியைப் பார்த்தவுடன் கவிதை வருகிறதாம். தொடரும் வர்ணனையைப் பாருங்கள்.

  காதல் விட்ட மூச்சு ஒன்று பெருகிப் பெருகிக் காற்றாகி

  காதலியின் கண்ணீர் தான் உருகி உருகி நீராகி

  மேகமென்னும் தோழி வந்து கனியக் கனிய மொழி பேசி

  தாயை விட்டு ஓடிச்செல்லும் பெண்ணைப் போல நழுவி

  மேடை விட்டு ஆடித்துள்ளும் மென்மை தானோ அருவி

  என்று எல்லா வரிகளிலும் பெண் போல என்று ஒரு அடையாளம் காட்டுகிறார். முள்ளும் மலரும் படத்தில் வரும் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் பாடலும் இதே இயற்கையை பெண் போல வர்ணிக்கும் பாடல்

  செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்

  என் மீது மோதுதம்மா

  பூ வாசம் மேடை போடுதம்மா

  பெண்போல ஜாடை பேசுதம்மா

  தென்றல் இவரிடம் பெண் போல  ஜாடை பேசுகிறதாம். அந்த பாடலில் மலைப்பாதையில் செல்லும்போது விரியும் காட்சிகளுக்கு ஒரு நேர்முக வர்ணனை அளிக்கிறார் . .

  வளைந்து நெளிந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ?

  மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ?

  அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாகப் போகிறாள்

  ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்க்கிறாள்

  என்று மறக்க முடியாத அந்த அற்புதக்காட்சியை  பாடுகிறார்.

  தமிழ்க்கவிதைகளில் இயற்கைக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. அதை பெண்ணின் அழகோடு சேர்த்து நயமாக சொன்ன பாடல்கள் வேறு ஏதாவது உண்டா?

  மோகனகிருஷ்ணன்

  150/365

   
  • Kalees 11:46 am on April 30, 2013 Permalink | Reply

   எல்லாருக்கும் தெரிந்தப் பாடல்

   நதியே நதியே காதல் நதியே
   நீயும் பெண்தானோ

   இந்தப்பாடல் முழுக்க நதியையும் பெண்ணையும் கம்பெர் பண்ணி எழுதியிருப்பார்.

   இந்தப் படத்தில் 5 பாடல்கள்.ஒவ்வொன்றும் பஞ்ச பூதங்களைக் கொண்டு எழுதியிருப்பார்.

   2)காற்றே என் வாசல் வந்தாய்
   3)அய்யோ பத்திக்கிச்சி
   4)நிலமே பொறு நிலமே
   5)அன்பே நிஜம்தானா என்வானில் விண்மீனா

   • amas32 8:06 pm on April 30, 2013 Permalink | Reply

    இதை நான் கவனித்ததே இல்லை , சுட்டிக் காட்டியதற்கு நன்றி 🙂

    amas32

  • Sharmmi Jeganmogan 12:06 pm on April 30, 2013 Permalink | Reply

   பொட்டு வைத்த முகமோ பாடலில்.. “அந்தி மஞ்சள் நிறமோ” என்று தானே வரும்..

  • amas32 8:15 pm on April 30, 2013 Permalink | Reply

   இயற்கையும் பெண் தானே. அழகும், மணமும், குணமும் நிறைந்த எந்தப் பொருளும் பெண்மையைக் கொண்டாடுவதாகவே அமைந்து விடுகிறது. அதனால் தான் கவிஞர்கள் பெண்ணையும் இயற்கையையும் ஒன்றாகவே பார்த்தனர்.
   amas32

  • rajnirams 11:05 pm on April 30, 2013 Permalink | Reply

   இயற்கை பற்றிய தங்கள் விளக்கம் அருமை.kalees அவர்கள் குறிப்பிட்டது போல ரிதம் படத்தில் பஞ்ச பூதங்கள் பற்றிய 5 பாடல்களும் அருமையாக இருக்கும். அன்பே வா படத்தில் “புதிய வானம் புதிய பூமி”பாடல் இயற்கை பற்றிய அருமையான பாடல்.(பல வருடங்களுக்கு முன் விவிதபாரதியில் “ஒரே ஒரு பாட்டு”நிகழ்ச்சியில் இந்த பாடலோடு நான் உரை நிகழ்த்தியிருக்கிறேன்).நண்டு படத்தில் அள்ளி தந்த பூமி அன்னையல்லவா என்ற மதுக்கூர் கண்ணன் பாடலும் இதில் அடக்கம். நன்றி.

  • rajnirams 8:47 am on May 1, 2013 Permalink | Reply

   அருமை.அதே போல கலீஸ் அவர்கள் குறிப்பிட்டபடி ரிதம் படத்தில் பஞ்ச பூதங்கள் குறித்த ஐந்து பாடல்களையும் சொல்லலாம்.ஆனால் இயற்கை என்றதும் முதலில் நினைவுக்கு வருவது வாலியின் “புதிய வானம் புதிய பூமி”தான்.நண்டு படத்தில் மதுக்கூர் கண்ணன் எழுதிய அள்ளி தந்த பூமி அன்னை அல்லவா,ராஜாதி ராஜாவில் மலையாளக் கரையோரம்,அக்கரை சீமை அழகினிலே போன்ற பாடல்களையும் சொல்லலாம்.நன்றி.

  • rajnirams 9:43 am on May 1, 2013 Permalink | Reply

   பதிவு அருமை.கலீஸ் அவர்கள் குறிப்பிட்டபடி ரிதம் படத்தில் பஞ்சபூதங்கள் பற்றிய ஐந்து பாடல்களையும் சொல்லலாம்.இயற்கை என்றவுடன் நினைவுக்கு வருவது-புதியவானம் புதிய பூமி பாடல் தான்.நண்டு படத்தில் மதுக்கூர் கண்ணன் எழுதிய அள்ளி தந்த பூமி அன்னையல்லவா,ராஜாதிராஜாவில் வரும் மலையாளக் கரையோரம்,பிரியாவில் வரும் அக்கரை சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே போன்ற பாடல்களையும் கூறலாம்.நன்றி.

  • rajnirams 9:58 am on May 1, 2013 Permalink | Reply

   பதிவு அருமை.காலிஸ் அவர்கள் குறிப்பிட்ட படி ரிதம் படத்தில் பஞ்ச பூதங்கள் பற்றிய 5 பாடல்களையும் கூறலாம்.இயற்கை என்றவுடன் முதலில் நினைவுக்கு வரும் பாடல் புதியவானம் புதிய பூமி தான்.மேலும் நண்டு படத்தில் மதுக்கூர் கண்ணன் எழுதிய அள்ளி தந்த பூமி அன்னை அல்லவா,ராஜாதிரஜாவில் வரும் மலையாளக்கரையோரம்,பிரியாவில் வரும்
   அக்கரை சீமை அழகினிலே போன்றவையும் கூறலாம்.நன்றி.

 • என். சொக்கன் 1:48 pm on April 29, 2013 Permalink | Reply  

  சீமை 

  • படம்: பதினாறு வயதினிலே
  • பாடல்: ஆட்டுக்குட்டி முட்டையிட்டு
  • எழுதியவர்: கண்ணதாசன்
  • இசை: இளையராஜா
  • பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி
  • Link: http://www.youtube.com/watch?v=EXVPl2aLQbc

  காக்கையில்லா சீமையிலே,

  காட்டெருமை மேய்க்கையிலே,

  பாட்டெடுத்துப் பாடிப்புட்டு,

  ஓட்டமிட்ட சின்னப் பொண்ணு!

  ’சீமை’ என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்?

  பொதுவாக வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை ‘சீமைத்துரை’ என்பது வழக்கம். ஆனால் வெளிநாடு என்பதுதான் ‘சீமை’க்கு உண்மையான பொருளா? ‘தென்பாண்டிச் சீமை’, ‘தென்மதுரைச் சீமை’, ‘சிவகங்கைச் சீமை’ என்று உள்நாட்டிலும் சீமைகள் உள்ளனவே.

  ‘சீமைக் கத்தரிக்காய்’ என்று ஒரு காய் உள்ளது, ‘சீமைப் பசு’ என்று ஒரு விலங்கு உள்ளது. அவையெல்லாம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகிறதா?

  அப்படியானால், சீமை என்பதன் அர்த்தம் ‘வெளியூர்’ என்பதாக இருக்குமோ?

  இலங்கை மலையகப் பாடல்களில் “நம்ம சீமை” என்ற பயன்பாட்டைப் பார்க்கிறோம். இதன் அர்த்தம் என்ன? வெளிநாட்டை எப்படி “நம்ம” என்ற அடைமொழியோடு குறிப்பிடமுடியும்?

  இந்தக் கேள்விகளைத் தொகுத்துப் பார்த்தால் ஒரு விஷயம் தெளிவாகப் புரியும், ‘சீமை’ என்பது வெளிநாடு அல்ல, வெளியூர்கூட இல்லை, அது ஒரு பகுதி, அவ்வளவுதான், ஊர், நகரம், மாவட்டம், மாநிலம், நாடு என்பதுபோல, நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்.

  மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் ‘பழந்தமிழ் ஆட்சி’ என்று ஒரு நூல் எழுதியுள்ளார். இதில் அவர் நான்குவிதமான ‘சீமை’களைக் குறிப்பிடுகிறார்:

  • நகரச் சீமை (City)
  • இனச் சீமை (ஓர் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக வாழும் பகுதி)
  • தேயச் சீமை (Country)
  • கூட்டுச் சீமை (“United” States Of Americaபோல, பல நாடுகள் / சீமைகள் கூடி ஒரே சீமையாக வாழ்வது, Federal State)

  அது சரி, கண்ணதாசன் சொல்லும் ‘காக்கையில்லா சீமை’ நிஜமாகவே இந்த உலகத்தில் உள்ளதா? அல்லது ஆட்டுக்குட்டி முட்டையிட்டுக் கோழிக் குஞ்சு வந்ததுபோல் அதுவும் கற்பனையா?

  ***

  என். சொக்கன் …

  29 04 2013

  149/365

   
  • anonymous 2:33 pm on April 29, 2013 Permalink | Reply

   சீமை = அழகான நாட்டுப்புற இலக்கியச் சொல்
   சீர்மை -> சீமை ஆகும்!

   எப்படிச், சேர்வை -> சேவை ஆகின்றதோ,
   கண்ணின் பார்வை -> பாவை (eye pupil) ஆகின்றதோ,
   அதே போல் சீர்மை = சீமை…

   நல்ல வளம்/ பெருமை/ சிறப்போடு இருக்கும் ஊரு = சீர்மை;
   அது உள் நாடோ/ வெளி நாடோ… எதுவாயினும் சீர்மையுள்ள ஊரு = சீமை!

   • anonymous 2:48 pm on April 29, 2013 Permalink | Reply

    சீர்மை = சீமை
    என்பதை, அதே நூலில் பாவாணர் விளக்குவாரு;

    மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர், தமிழுக்கு வந்து வாய்த்த ஒரு கலங்கரை விளக்கம்;
    Media செல்வாக்கு அற்ற Pedia அவர்!
    அவர் வாழ்ந்த காலத்தில், அவரை ரொம்பவே மட்டம் தட்டீட்டோம்; 80களில் மிகவும் நொந்து தான் மாண்டு போனார்;

    ஆனால், இன்னிக்கி
    மொழி இயல்/ வேர்ச்சொல் -ன்னு நடுக்கடலில் தத்தளித்தால்,
    ஒடனே உதவிக்கு வரும் ஒரே கலங்கரை விளக்கம் = “பாவாணர்” அவர்களே!
    —-

    *தென்பாண்டிச் சீமையிலே, தேரோடும் வீதியிலே…
    *அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆடக் கண்டேனே

    வாக்கப்பட்ட சீமை,
    கிழக்குச் சீமையிலே

    -ன்னு சினிமாவில் தான் எத்தனை எத்தனை சீமைகள்!

    தெக்கத்திக் காரவுகளுக்கெல்லாம் ஒரே பெருமை! = தெற்கைத் தான் சீமை -ன்னு அதிகமாச் சொல்லுறது;
    தமிழ்நாட்டு வடபகுதி மாவட்டங்கள் (எங்கூரு திருவண்ணாமலை உட்பட) = சீமை -ன்னு யாரும் சொல்லுறதில்ல:)

    திருநெல்வேலிச் சீமை, சிவகங்கைச் சீமை… ன்னு இப்பிடி எல்லாமே “தெற்கு” தான்;
    “தெக்கு” வாழ்கிறது; “வடக்கு” தேய்கிறது:)

  • anonymous 3:07 pm on April 29, 2013 Permalink | Reply

   “சீமை”ச் சரக்கு = சீர்மையான சரக்கா? -ன்னு மட்டும் கேட்டுறாதீக:)
   இராகவன் இட்ட “சரக்கு”ப் பதிவில் தான் அடைக்கலம் ஆகணும்;

   சீமை (சீர்மை) = மருத நிலம்
   வேளாண்மை + “வியாபாரம்” = இரண்டுமே கொழிக்கும் ஊர்;
   “சீர்மை” புக்கார்-ன்னு தமிழ் இலக்கியம், இது போன்ற ஊர்களைக் காட்டும்!

   இம்புட்டு ஏன்?
   ஊரு பேரை வைச்சே = குறிஞ்சியா? முல்லையா? மருதமா? -ன்னு கூடச் சொல்லீறலாம்!

   *பட்டி, பாடி, காடு -ன்னு முடிஞ்சா = முல்லை
   (கோயில்பட்டி, தி.கல்லுப்பட்டி,
   வேலப்பாடி, ஆர்க்காடு)

   *கோடு, பாறை, கல் -ன்னு முடிஞ்சா = குறிஞ்சி
   (திருச்செங்கோடு, வால்பாறை, திண்டுக்கல்)

   *துறை, குளம், ஓடை, ஏரி, சீமை -ன்னு முடிஞ்சா = மருதம்
   (காங்கேசன் துறை, பெரிய குளம், காரனோடை, நாங்குநேரி)
   —–

   முன்பு எப்பவோ இட்ட, “தமிழ் ஊர்-பேர் விகுதிகள்” ஞாபகத்துக்கு வருது;
   http://madhavipanthal.blogspot.com/2012/06/tamiloor.html

   • amas32 8:25 pm on April 30, 2013 Permalink | Reply

    அனானி நல்ல விளக்கம் அளித்துள்ளார். இதுவரை சீமை என்றால் வெளிநாடு என்ற பொருளில் தான் நான் அறிந்திருக்கிறேன். என் தந்தை முதல் முறை லண்டன் போய்விட்டு வந்தவுடன் என் பாட்டி என்னிடம் எம்புள்ள சீமைக்குப் போயிட்டு வந்திருக்கிறான் என்று பெருமையாக சொன்னது இன்னும் நினைவில் உள்ளது 🙂

    amas32

  • rajinirams 8:33 pm on April 29, 2013 Permalink | Reply

   நீங்கள் சொன்னது மாதிரி சீமை என்றால் பொதுவாக மேலைநாடு என்றே பொருள்.ஆப்பிளைக்கூட சீமை இலந்தை என்று சொல்ல கேட்டிருக்கிறேன்.ப்ரியாவில் “அக்கரை சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே என்ற சூப்பர் பாடல் உள்ளது.நன்றி.

 • G.Ra ஜிரா 9:50 am on April 28, 2013 Permalink | Reply
  Tags: Lata Mangeshkar   

  கிளகிளவி 

  இளையராஜா பாட்டுக்கு மெட்டு போட்டாரா? மெட்டுக்குப் பாட்டெழுதி வாங்குனாரான்னு தெரியலையே” என்று எத்தனையெத்தனையோ படங்களுக்கு இசையமைத்த மெல்லிசை மன்னரே வியந்து பாராட்டிய பாடல் இது.

  வளையோசை கலகலகலவெனக் கவிதைகள் படிக்குது
  குளுகுளு தென்றல் காற்றும் வீசுது
  சில நேரம் சிலுசிலுசிலு எனச் சிறகுகள் படபட துடிக்குது
  எங்கும் தேகம் கூசுது
  சின்னப் பெண் பெண்ணல்ல வண்ணப் பூந்தோட்டம்
  கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம்
  படம் – சத்யா
  பாடல் – வாலி
  பாடியவர்கள் – எஸ்.பி.பாலசுப்ரமணியம், லதா மங்கேஷ்கர்
  இசை – இசைஞானி இளையராஜா
  பாடலின் சுட்டி – http://youtu.be/DDyA2_Grjp4

  அருமையான இந்தப் பாடலை வைத்து ஒரு இலக்கண வகுப்பே நடத்தி விடலாம். அப்படிக் கிடைத்த வாய்ப்பை நழுவ விடலாமா?

  இந்தப் பாட்டின் பல்லவியில் நிறைந்திருப்பது இரட்டைக் கிளவிகள். முதலில் என்னென்ன சொற்கள் இரட்டைக்கிளவியாக வந்திருக்கின்றன என்று பார்க்கலாம்.

  கலகலகலவென
  குளுகுளு
  சிலுசிலுசிலு

  வரிக்கு ஒன்றாக பல்லவியில் மூன்று இரட்டைக் கிளவிகள் வந்துள்ளன.

  கிளவி என்பதற்குச் சொல் என்ற பொருள் உண்டு. கிளைத்து வருவதால் கிளவி. இரண்டிரண்டு சொற்களாகக் கிளைத்து வருவதால் அது இரட்டைக் கிளவி.

  இந்த இரட்டைக் கிளவிக்கு இலக்கணம் என்னவென்று தொல்காப்பியம் தெளிவாகச் சொல்கிறது.

  இரட்டைக் கிளவி இரட்டிற்பிரிந் திசையா
  அதிகாரம் – சொல்லதிகாரத்தில் கிளவியாக்கம்
  நூல் – தொல்காப்பியம்

  பொருள் இல்லாத சொல் இரட்டையாகக் கிளைத்து வந்து பொருள் கொடுப்பதுதான் இரட்டைக்கிளவி. அவைகளைப் பிரித்தால் பொருள் கிடைக்காது.

  குளுகுளு தென்றல் காற்று” என்ற வரியை எடுத்துக் கொண்டால், குளுகுளு என்ற இரட்டைக் கிளவி தென்றலின் குளுமையைப் பற்றிச் சொல்கிறது.

  அதையே ”குளு தென்றல் காற்று” என்று சொன்னால் அதே பொருள் வராது. ”குளுமையான தென்றல் காற்று” என்று சொல்ல வேண்டும். ஆனால் குளுமையான தென்றல் காற்றை விட குளுகுளு தென்றல் காற்று மிகப் பொருத்தமாக இருக்கிறது.

  அதனால்தான் இரட்டைக் கிளவியை இலக்கணப்படுத்தி வைத்திருக்கிறது தமிழ். சொல்ல வந்த கருத்தை எளிமையாகச் சொல்ல இரட்டைக் கிளவி மிகவும் பயன்படும். கீழே ஒரே பொருளைத் தரும் இரண்டு விதமான வரிகளைக் கீழே கொடுத்துள்ளேன். நீங்களே பார்த்துப் படித்து எது சொல்ல வந்த பொருளை அழுத்தமாகச் சொல்லிப் புரியவைக்கிறது என்று முடிவு செய்யுங்கள்.

  வேகமாக ஓடினான் – விடுவிடுவென ஓடினான்
  அளவுக்கு அதிகமாகப் பேசினான் – வளவளவெனப் பேசினான்
  அவளுக்கு நிறைய கோவம் வந்தது – கடுகடுவென கோவப்பட்டாள்
  அழகாகச் சிரித்தாள் – கலகலவெனச் சிரித்தாள்
  அறை சூடாக இருந்தது – அறை கதகதப்பாக இருந்தது

  இப்போது இரட்டைக் கிளவியின் அருமையைப் பற்றி நீங்களே முடிவுக்கு வந்திருப்பீர்கள் என நம்புகிறேன். இப்படி நாம் பேசும் ஒவ்வொரு சொல்லுக்கும் பின்னால் ஒரு இலக்கணம் இருக்கிறது என்பது நாம் பேசும் தமிழுக்குப் பெருமைதான்.

  சரி. வேறெந்த பாடல்களில் எல்லாம் இப்படி இரட்டைக் கிளவிகள் வருகின்றன? உங்களுக்குத் தெரிந்த பாடல்களைப் பட்டியல் இடுங்களேன்.

  அன்புடன்,
  ஜிரா

  148/365

   
  • Arun Rajendran 10:17 am on April 28, 2013 Permalink | Reply

   ”இசைவழி இலக்கணம்” பதிவுல கோடிட்டு காட்டியிருந்தார் நிரஞ்சன் பாரதி.

   1) கண்ணோடுக் காண்பதெல்லாம் -ஜீன்ஸ்
   2) நதியே நதியே காதல் நதியே நீயும் – ரிதம்
   3) மன்னார்குடி கலகலக்க – சிவப்பதிகாரம்

   • GiRa ஜிரா 10:44 pm on April 29, 2013 Permalink | Reply

    மூன்றுமே நல்ல பாட்டுகள். சரியா எடுத்துக் குடுத்திங்க

  • கிரி ராமசுப்ரமணியன் (@rsGiri) 11:23 am on April 28, 2013 Permalink | Reply

   பளபளக்குற பகலா நீ
   படபடக்குற அகலா நீ
   அனலடிக்கிற துகளா நீ
   நகலின் நகலா நீ
   மழையடிக்கிற முகிலா நீ
   திணறடிக்கிற திகிலா நீ
   மணமணக்குற அகிலா

   🙂

  • கிரி ராமசுப்ரமணியன் (@rsGiri) 11:50 am on April 28, 2013 Permalink | Reply

   இந்தாங்கோ https://soundcloud.com/rsgiri/5i3kax0sigvt :)) (ஏதோ நம்மாலான இன்ஸ்டண்ட் முயற்சி)

   • GiRa ஜிரா 10:42 pm on April 29, 2013 Permalink | Reply

    பாட்டுக்குப் பாட்டு எடுக்கவான்னு கலக்கிட்டிங்க. 🙂 உங்க பாட்டுத் திறமை இன்னும் சிறந்து பெருமை கொள்ள எனது வாழ்த்துகள்.

  • பாண்டியன் 1:55 pm on April 28, 2013 Permalink | Reply

   படபடவென பொறிந்து தள்ளிட்டீங்க போங்க.
   பாட்டும் சும்மா கிடுகிடுத்துப்போகிற பாட்டு.
   கேட்டா இதயமே அதில் ஊறி மறமறத்துப்போய்விடும்.
   இதை வைத்து இலக்கணத்தை கடகடவென நடத்தலாம் என்கிற உமது எண்ணம் அடஅட

   • GiRa ஜிரா 10:44 pm on April 29, 2013 Permalink | Reply

    அடடடடா! இப்பிடி கொளுத்திப்பிட்டிகளே பாண்டியரே 🙂

  • amas32 8:51 pm on April 28, 2013 Permalink | Reply

   சூப்பர் பாட்டு ஜிரா! இந்தப் பாடலை பிடிக்காதவர்களே இருக்க முடியாது. இந்தப் பாட்டில் உள்ள சொற்களுக்கு இணையாக இசையும் நல்ல ஸ்பீட். நல்ல வெயில் காலத்தில் இந்தப் பாடலைக் கேட்டாலே உடலும் மனமும் குளிர்ந்து விடும் 🙂

   amas32

   • GiRa ஜிரா 10:43 pm on April 29, 2013 Permalink | Reply

    செம பாட்டு. இளையராஜா ஊட்டியில் உக்காந்துக்கிட்டு டியூன் போட்டிருப்பாரு. லாலாலான்னு லதா பாடுறது நல்லாருக்கும். அதை விடத் தெலுங்கில் இன்னும் நல்லாருக்கும். பாடியது பி.சுசீலா.

  • anonymous 10:50 am on April 29, 2013 Permalink | Reply

   இரட்டைக்கொரு பாடல் இஃதே! என்ன அழகு!

   *பாடிய பெண்ணும் இரட்டையே! = “லதா” (எ) ஈரெழுத்து;
   *எழுதிய ஆணும் இரட்டையே! = “வாலி” (எ) ஈரெழுத்து;

   “குளுகுளுகுளுவென, கலகலகலவென” – இதையே மூனு முறை வேகமாச் சொல்லிப் பாருங்க; திணறும்:)

   பாடுற பெண்ணோ, வேற்று மொழி இசை-அரசி;
   அவங்க வாயில் பிடி குடுக்குற மாதிரி easy பாட்டா எழுதாம, “குளுகுளுகுளுவென, கலகலகலவென” -ன்னு எழுதினா, பாவம் அவுங்க திணற மாட்டாங்களா?:)
   —-

   தமிழின் சொற் சிலம்பங்களையெல்லாம்,
   “வாலி” கொண்டு வந்தது போல்,
   திரையிசையில் வேறு எவரும் செய்துள்ளனரா? -என்பதைத் தேடித் தான் பாக்கணும்;
   எதுகை-மோனை-இயைபு (Rhyming) இல்லாத வாலியின் பாட்டே அரிது;

   *கண்ணதாசன் = கருத்துச் சிலம்பம்
   *வாலி = சொற் சிலம்பம்

   வாலியின் தனிப்பட்ட துதிப் போக்கு எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், அவர் தம் தமிழ்ப் போக்குக்குக் கட்டாயம் தலை வணங்கியே ஆக வேண்டும்;

  • anonymous 10:56 am on April 29, 2013 Permalink | Reply

   ஓர் ஐயம்!

   //கலகலகல-வென
   குளுகுளு தென்றல்
   சிலுசிலுசிலு-வென
   வரிக்கு ஒன்றாக பல்லவியில் மூன்று இரட்டைக் கிளவிகள் வந்துள்ளன//

   இவை “இரட்டைக் கிளவி” தானா?
   —–

   குளுகுளு = இரட்டைக் கிளவி தான்; இரண்டு முறை கிளந்து வந்திருக்கு;

   ஆனா, கலகலகல-வென =?
   மூன்று முறை வந்திருக்கே! “இரட்டை”க் கிளவி எனல் எப்படி?:)

   • anonymous 11:17 am on April 29, 2013 Permalink | Reply

    Jokes apart,

    தமிழ் = “உணர்ச்சி” -க்கு, ரொம்ப மதிப்பு குடுக்கும் மொழி;

    மனசுல முதலில் தோன்றுவது = “உணர்ச்சி” தானே?
    அப்பறம் தான் அது “சொல்லா” வாயில் வருது; “எழுத்தா” கையில் வருது; அப்படியே கவிதை, இலக்கியம் -ன்னு என்னென்னமோ ஆகுது;

    அது காமமோ/ காதலோ/ பக்தியோ/ வீரமோ… எது-ன்னாலும் = “உணர்வே” தலை!

    நெஞ்சு “படபட” -ன்னு அடிச்சிக்குது = இது “உணர்வு”
    *”படபட” தான் முதலில் தோன்றுவது (உள்ளுக்குள்)
    *அதை, “நெஞ்சு அடிச்சிக்குது” -ன்னு we end up translating the feeling;

    But translation never translates the wholesome heart;
    அந்தக் குறையை நிறை செய்தது தமிழ் மொழி = “உணர்ச்சி”யை, அப்படியே மொழிக்குள்ளும் கொண்டு வந்தது;
    Very few languages have this “heart talk”
    —–

    படபட = “உணர்வொலிக் கிளவி”
    படபடபட = “உணர்வொலிக் கிளவி”

    இது இரட்டையா வரும் போது = “இரட்டைக் கிளவி” என்கிறோம்

   • anonymous 11:41 am on April 29, 2013 Permalink | Reply

    The beauty of Tamizh is:
    பிரிச்சாப் பொருள் தராத இந்தக் கிளவியை வச்சிக்கிட்டே, பலப்பல புதுச் சொல்லும் உருவாக்கும் “அக நேர்மை”

    For example:
    “நெஞ்சு அடிச்சிக்குச்சி” -ன்னு simpleஆச் சொல்லிட்டுப் போயீறலாம்;
    சரிப்பா, ஏதோ உணர்ச்சிக்கு மதிப்பு குடுக்குற மொழியாம்; சொல்லுறானுங்க; “நெஞ்சு படபட-ன்னு அடிச்சிக்குச்சி” -ன்னு மாத்திச் சொல்லலாம்;

    But Tamizh doesn’t stop here; It even goes beyond
    படபடப்பு
    படபடத்தான்
    படபடக்கின்றது
    ….ன்னு புதுப்புதுச் சொல்லே உருவாக்கி விடுகிறது, அகமொழிகளை வைத்துக் கொண்டு! இதான் “அக நேர்மை”-க்கு மதிப்பு குடுக்கும் போக்கு!

    வெறுமனே “பட” = பொருள் ஒன்னும் இல்ல;
    பிரிச்சாப் பொருள் தராத ஒன்னை…
    பொருளே இல்லீன்னாலும், “அகமொழி” என்பதால் மதிப்பு; அதையே சொல்லாக்கி வைக்கும் தமிழ்த் தொல்காப்பியம்!

    காதல் “படபடப்பு” = பெயர்ச்சொல்
    இராகவன் “படபடத்தான்” = வினைச்சொல்
    “படபடக்கின்ற” முருகன் சேவற்கொடி = வினையெச்சம்
    —-

    “உணர்வு-ஒலிக்-கிளவி” = தமிழின் பெருமை!

    “வெடுக்” என்று பேசினான் = ஒற்றை
    “குளுகுளு” = இரட்டை = இரட்டைக் கிளவி -ன்னு சிறப்புப் பெயர்

    வளையோசை “கலகலகல” என = மூன்று; “மூட்டைக் கிளவி” -ன்னு சிறப்புப் பெயர் இல்ல:) அவ்ளோ தான்:)

  • anonymous 11:52 am on April 29, 2013 Permalink | Reply

   “இரட்டைக் கிளவி” என்ற பேச்சு வந்துட்டதால,
   “அடுக்குத் தொடர்” பத்தியும் just two lines….

   “வாழ்க வாழ்க” = இது அடுக்குத் தொடர்; பிரிச்சாப் பொருள் தரும்;
   ஆனா ரெட்டையாத் தான் வரணும்-ன்னு இல்ல;

   தமிழ்த் தாய் வாழ்த்தை எடுத்துக்குங்க;
   “வாழ்த்துதுமே, வாழ்த்துதுமே; வாழ்த்துதுமே……” = இதுவும் அடுக்குத் தொடர் தான்!

   (விருதே “வாங்காத” MSV-க்கு அழியாப் பெருமை குடுத்த அடுக்குத் தொடர்!

   மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை, “செயல் மறந்து வாழ்த்துதுமே” -ன்னு ஒற்றையாத் தான் பாட்டை எழுதுனாரு;
   ஆனா, அந்த “வாழ்த்துதுமே”வை, அடுக்கி வைத்த அடுக்குத் தொடர்ப் பெருமை = MSV-க்கே போய்ச் சேர வேண்டிய தமிழ்த் தாய்ச் சிறப்பு)

   • anonymous 12:03 pm on April 29, 2013 Permalink | Reply

    ஒரே சொல்லு, அடுக்குத் தொடராவும் வந்து, இரட்டைக் கிளவியாவும் வருமா?
    Just Guess:)

    “திருதிரு”-ன்னு முழிச்சான்
    “திருத்திரு” குன்றக்குடி அடிகளார்

    இதான் வேறுபாடு;

    தமிழ் அறிஞரான அடிகளார், “திருதிரு”-ன்னு முழிப்பாரா?:)
    அதனால் அடுக்குத் தொடரில் எப்பமே = வலி மிகும் = “திருத்திரு”
    (வல்லினம் மிகும்)
    ———

    வல்லினம் மிகாத அடுக்குத் தொடரும் உண்டு = “விடு விடு” (டேய் விடுறா விடுறா, கோச்சிக்காத என்னும் பொருளில்)
    இதுவே இரட்டைக் கிளவியாவும் வரும் = “விடுவிடு” -ன்னு நடந்தான்! (பொருள் வேற; வேகம் என்னும் பொருளில்)

    “உணர்வொலிக் கிளவி” (அதிலும் குறிப்பா இரட்டைக் கிளவி)
    = தமிழின் அகமொழி
    என்று சொல்ல வாய்ப்பளித்த இந்தச் “சுறுசுறு” பதிவுக்கு மிக்க நன்றி!

 • mokrish 10:57 am on April 27, 2013 Permalink | Reply
  Tags: , , வள்ளுவர்,   

  துயிலாத பெண் ஒன்று 

  காதலர்கள் நிறைய பேசுவார்கள். ஒருவரை மற்றவர் புகழ்ந்து, வர்ணித்து என்று ஆயிரம் இருக்கும். கூடவே சண்டையும் இருக்கும். கொஞ்சம் நிஜம் கொஞ்சம் பொய் என்று சண்டையிலும் பல வகைகள் உண்டு. இருவரில் யாருடைய அன்பு உயர்வானது என்று விவாதிக்கலாம். காதலில் யாருக்கு அவஸ்தை அதிகம் என்றும் விவாதிக்கலாம் ஒரு திரைப்படத்தில் நடிகர் கருணாஸ் காதலனும் காதலியும் பேசிக்கொள்ளும் ‘ம்ம் அப்புறம் ‘ என்ற sweet nothings ஐ கிண்டல் செய்வார்.  அழகன் படத்தில் நாயகனும் நாயகியும் விடிய விடிய பேசுவது ஒரு பாடல் காட்சியாக வரும்.

  புதுமைப்பெண் படத்தில் வைரமுத்து எழுதிய  காதல் மயக்கம் என்ற பாடல் வரிகள்  http://www.youtube.com/watch?v=7Qd2Hy2kpFs

   ஆண் : நான் தூங்கும் வேளை கனவுகள் தொல்லை

  பெண் : நான் தூங்கவில்லை கனவுகள் இல்லை

  இந்த பாடலில் வரும் மற்ற வரிகள் வழக்கமான தேகம் சிலிர்க்க மேகம் மிதக்க, உன் பாதமே வேதம்  போன்ற Cliche வரிகள். ஆனல் இந்த தூக்கம் கனவு பற்றிய வரிகள் முதல் முறை கேட்கும்போதே பிடித்த வரிகள்.  ஆண் பெண் இருவரும் தூக்கம் பற்றியும் கனவு பற்றியும்  அவரவர் நிலை சொல்வது போல்.ஆண் சொல்வதென்ன? அவன் தூங்கும்போது நிறைய கனவுகள் வருகிறதாம். அதனால் தொல்லையாம். இதற்கு பெண் சொல்லும் பதில்தான் சுவாரஸ்யம்.

   நான் தூங்கவில்லை கனவுகள் இல்லை

  மெய்யா…பொய்யா.. மெய்தான் ஐய்யா

  நான் தூங்கவில்லை கனவுகள் இல்லை 

  என்று சொல்கிறாள். ‘அடப்பாவி உன்னால் தூங்க முடிகிறது அதில் கனவு வருகிறது, வேறென்ன வேண்டும்? என்னைப்பார் எப்போதும் உன் நினைவில் இருக்கும் என்னால் தூங்கவே முடியவில்லை. அதனால் எனக்கு கனவே இல்லை என்று அவள் அனுபவிக்கும் வேதனை  சொல்கிறாள் இந்த வரிகளில் கொஞ்சம் இலக்கிய வாசம் .தேடினால் கம்பனிடம் போய் நிற்கிறது.

   துயில் எனக் கண்கள் இமைத்தலும் முகிழ்த்தலும்  துறந்தாள்;

  வெயிலிடைத்தந்த விளக்கு என ஒளி இலா  மெய்யாள்;

  சீதை அசோகவனத்தில்  உறங்கவேயில்லை. தூக்கம் என்று இமைகளை மூடுவதையும் திறப்பதையும் மறந்துவிட்டாள் என்ற கற்பனை. ஏன் இதை மறந்தாள்? வள்ளுவன் சொல்லும் விளக்கம் பாருங்கள்

  இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே

  ஏதிலர் என்னும் இவ்வூர் 

  என் கண்கள் இமைத்தால் உள்ளிருக்கும் என்னவர் மறைவதை அறிந்து நான் கண்களை இமைப்பதில்லை என்று சாலமன் பாப்பையா உரையில் சொல்கிறார்.கம்பன் வேறு ஒரு இடத்திலும் இந்த தூங்காத நிலைப்பற்றி சொல்லும் வரிகள்

   துயில்இலை ஆதலின் கனவு தோன்றல

  அயல்விழி ஒரு கனவு அமைய நோக்கினேன்

  திரிசடை சீதையிடம் கூறுவது  – நீதான் தூங்குவதே இல்லையே அதனால்தான் உனக்கு கனவுகளே இல்லை. நான் கண்ட கனவை சொல்கிறேன் கேள் என்கிறாள். வைரமுத்துவின் புதுமைப்பெண் நாயகியும் தான் இதே நிலையில் இருப்பதை காதலனிடம் சொல்கிறாள்.

   உறவோடு விளையாட எண்ணும்

  கண்கள் உறங்காது உறங்காது கண்ணே

   என்று கண்ணதாசன் சொல்வதும் துயிலாத ஒரு பெண்தான். 

  மோகனகிருஷ்ணன்

  147/365

   
  • Arun Rajendran 12:05 pm on April 27, 2013 Permalink | Reply

   ”அவள் அனுபவிக்கும் வேதனை சொல்கிறாள்” -> வேதனை அல்லவே…பரிதவிப்பு / மோகம் நு சொல்லலாமா? இதுக்கு இணையா கம்ப இராமாயணத்துல
   ‘பண்ணே ஒழியா, பகலோ புகுதாது,
   எண் ஏ தவிரா, இரேவா விடியாது,
   உள் நோ ஒழியா, உயிர் ஓ அகலா,
   கண்ணே துயிலா; இதுவோ கடன் ஏ?’ பொருந்தி வருதுங்களா…

  • amas32 8:43 pm on April 28, 2013 Permalink | Reply

   Men are from Mars and Women are from Venus 😉 அதனால் காதல் வயப்படும் போது ஒருவர் உறஙுவதில்லை, கனவும் இல்லை. மற்றவர் உறங்கிக் கனவும் காண்கிறார். இதில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை.

   amas32

  • Saba-Thambi 9:41 pm on April 29, 2013 Permalink | Reply

   இன்னொரு பாடல்…
   துயில்லாத பெண்ணொன்று கண்டேன்… (மீண்ட சொர்க்கம்)
   (http://www.youtube.com/watch?v=OvSf2xV2rjo)

 • என். சொக்கன் 12:22 pm on April 26, 2013 Permalink | Reply  

  அணைகள் 

  • படம்: ஆறிலிருந்து அறுபதுவரை
  • பாடல்: கண்மணியே, காதல் என்பது
  • எழுதியவர்: பஞ்சு அருணாசலம்
  • இசை: இளையராஜா
  • பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி
  • Link: http://www.youtube.com/watch?v=7Bjq3XnRxWQ

  பாலும் கசந்தது, பஞ்சணை நொந்தது,

  காரணம் நீ அறிவாய், தேவையை நான் அறிவேன்!

  நாளொரு தேகமும், மோகமும், தாபமும் வாலிபம் தந்த சுகம்,

  இளம் வயதினில் வந்த சுகம்!

  அணைகள் வீட்டுக்குள்ளும் உண்டு, வெளியிலும் உண்டு.

  இந்தப் பாடலில் வருவது, வீட்டுக்குள் உள்ள அணை, பஞ்சு + அணை = பஞ்சணை, பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கை, அதன்மீது தலை + அணை = தலையணை, தலைக்கென்று வைத்துக்கொள்ளும் (சிறு) படுக்கை.

  வீட்டுக்கு வெளியே உள்ள அணை, ஆற்றில் வருகிற தண்ணீரைத் தேக்கிவைக்கிறது, பின் அதனை விவசாயத்துக்கோ மின்சாரம் எடுப்பதற்கோ பயன்படுத்த உதவுகிறது, இதனை ‘நீர்த்தேக்கம்’ என்றும் குறிப்பிடுவார்கள்.

  இவை பெயர்ச்சொல் (Noun) அணைகள், இதுவே வினைச்சொல்(Verb)லாக வரும்போது ‘அணை’த்துக்கொள், தழுவிக்கொள் என்று கட்டளை வாசகமாகிவிடுகிறது.

  இப்படி விதவிதமான பொருள்கள் அமைவதால்தானோ என்னவோ, கம்பனுக்கும் இந்த வார்த்தைமீது தனிக் காதல். ஓர் அற்புதமான பாட்டில் நான்கு அணைகளை ஒன்றன்கீழ் ஒன்றாக நிறுத்திவைத்திருக்கிறான்:

  மிகவும் உணர்ச்சிமயமான காட்சி அது. வாலி வதைக்குப்பிறகு கிஷ்கிந்தைக்கு அரசனாகிவிட்ட சுக்ரீவனைச் சந்திக்கச் செல்கிறான் லட்சுமணன். அவனை வரவேற்கிறான் சுக்ரீவன், ‘ரொம்ப தூரம் நடந்து வந்திருப்பீங்க, கொஞ்சம் உட்கார்ந்து காபி, கீபி சாப்பிடுங்களேன்!’

  லட்சுமணன் சுக்ரீவனைக் கோபமாகப் பார்க்கிறான், ’அங்கே காட்டில் என் அண்ணன் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறான், நான் இங்கே நாட்டில் சவுகர்யமாக உட்கார்ந்து காப்பி சாப்பிடுவேனா? என்னையும் உன்னைப்போல சொகுசுக்கு அடிமை என்று நினைத்துவிட்டாயா?’ என்று மனத்துக்குள் நினைத்துக்கொள்கிறான். அங்கே வரும் பாட்டு:

  ’கல் அணை மனத்தினை உடைக் கைகேசியால்,

  எல் அணை மணி முடி துறந்த எம்பிரான்,

  புல் அணை வைக, யான் பொன் செய் பூத் தொடர்

  மெல் அணை வைகவும் வேண்டுமோ?’ என்றான்.

  முதல் வரியில் வரும் ‘கல் அணை’, கரிகாலன் கட்டியது அல்ல, கல் அணைய, கல் அனைய, கல்லைப் போன்ற மனத்தினைக் கொண்ட கைகேயி, அவள் வாங்கிய வரத்தால் …

  இரண்டாவது வரியில் வரும் ‘எல் அணை மணி முடி’க்கு அர்த்தம், ‘ஒளி பொருந்திய கிரீடம்’, அதனைத் துறந்துவிட்டான் என் அண்ணன், ராமன்!

  மூன்றாவது வரியில் வரும் ‘புல் அணை’ என்பது, நாம் மேலே பார்த்த ‘பஞ்சணை’க்கு எதிர்ப்பதம், அதாவது, புல்லால் ஆன படுக்கை, பஞ்சணைபோல் அது மெத்மெத் என்று இருக்காது, உறுத்தும், அதில்தான் ராமன் படுத்திருக்கிறான்.

  அண்ணன் நிலைமை அப்படியிருக்க, பொன்னால் செய்து பூக்களைத் தூவிய இந்த ‘மெல் அணை’, அதாவது, மெல்லிய படுக்கையில், அல்லது அலங்காரமான இருக்கை(Guest Chair)யில் நான் உட்கார்வேனா?

  அட! வரிசையாக நான்கு அணைகள் வைத்துக்கூட, லட்சுமணனின் அன்பு வெள்ளத்தைக் கட்டுப்படுத்தமுடியவில்லையே!

  ***

  என். சொக்கன் …

  26 04 2013

  146/365

   
  • amas32 12:29 am on April 27, 2013 Permalink | Reply

   கண்மணியே, காதல் என்பது கற்பனையோ, காவியமோ, கண் வறைந்த ஓவியமோ… எநக்கு மிகவும் பிடித்தரு பாடல்.

   இராமேஸ்வரம் அருகில் உள்ள திருபுல்லாணியில் இராமன் ஆதிசேஷன் மேல் பள்ளிக்கொண்டிருக்க மாட்டார். தர்ப சயனப் பெருமாளாகக் காட்சித் தருவார். அதாவது புல்லின் மேல் படுத்திருப்பார். இராமாவதாரத்தின் மேன்மையே அவர் முழுக்க முழுக்க மானிடனாக வலம் வருவது தான். காட்டில் பஞ்சு மெத்தைக்கு எங்கு போவது? புல்லணை தான் பஞ்சணை.

   amas32

 • G.Ra ஜிரா 1:31 pm on April 25, 2013 Permalink | Reply
  Tags: கே.பி.அறிவானந்தம், கோவை கமலா, ஸ்ரீபதி   

  நவ(ல)க் கிரகம் 

  ஒரு நண்பரோடு பேசிக் கொண்டிருந்த போது, அவருக்கு ஜாதகத்தில் ஏதோ தோஷம் இருப்பதாகவும் அதனால் குறிப்பிட்ட கோயிலுக்குச் சென்று ஏதோ பரிகாரங்களைச் செய்ய வேண்டுமென்றும் கூறினார்.

  நான் பொதுவாகவே ஜாதகங்களை பொருட்படுத்துவதில்லை. ஆண்டவன் அருள் இருந்தால் எல்லாம் நலமே என்பது என் கருத்து. அது சரி, என் கருத்தைப் பேசுவதற்கா இந்தப் பதிவு? இல்லவே இல்லை.

  அறுபடை வீடுகள், முருகன் கோயில்கள், திருமால் ஆலயங்கள் என்று எல்லாம் வரிசைப் படுத்திய திரைப்படங்கள் நவகிரகங்களைப் பற்றி ஏதேனும் பாடல் எழுதியிருக்கிறதா என்று யோசித்ததன் விளைவே இந்தப் பதிவு.

  நவக்கிரக நாயகி என்றொரு படம் கே.சங்கர் அவர்கள் இயக்கத்தில் வெளிவந்தது. நவகிரகங்களினால் உண்டாகும் பலன்களை வைத்து கதைகளை உருவாக்கி அந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. வெற்றிப்படமாக அமைந்த அந்தப் படத்தில் மெல்லிசை மன்னர் இசையில் கே.பி.அறிவானந்தம் எழுதிய பாடலொன்று நவகிரகங்களையும் அவைகளுக்குரிய அதிதேவதைகளின் கோயில்களையும் பட்டியல் இட்டது.

  கிட்டத்தட்ட ஆறு நிமிடங்கள் ஓடும் இந்தப் பாடலை டி.எம்.சௌந்தரராஜன், பி.எஸ்.சசிரேகா, கோவை கமலா மற்றும் ஸ்ரீபதி ஆகியோர் பாடியிருந்தார்கள். வாருங்கள் பாடல் சொல்லும் தகவல்களைப் பார்க்கலாம். பாடலுக்கான ஒளிச்சுட்டி – http://youtu.be/GAE8cQ2dnoU

  பாடல் வரிகளில் புலவர் கே.பி.அறிவானந்தம் கொடுத்த தகவல்களை நவகிரகங்களையும் சோதிடம் பற்றியும் அறிந்தவர்கள் விளக்கலாம். பாடல் வரிகள் எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளன. இந்தப் பாடலின் மற்றொரு சிறப்பு ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு விதமாக இசையமைத்திருக்கிறார் மெல்லிசை மன்னர். பாடல் வரிகள் மாற மாற ராகமும் தாளமும் மாறுவதைக் கேட்கலாம்.

  உதயத்தில் ஒளி தந்து
  உலகத்தை வாழ்விக்கும்
  ஒப்பற்ற செஞ்சுடரைப் போற்றுவோம்
  சிவமாகி திருமாலின் வடிவான நவகிரக தேவனை நாம் வாழ்த்துவோம்
  ஆடுதுறை தனையின்று நாடுவோம்
  அந்த சூரியனார் கோயிலிலே காணுவோம்
  சந்ததமும் புகழ் தரும் வாழ்விலே
  என்றும் செந்தாமரை மலர் கொண்டே வணங்குவோம்

  சந்திர தேவனை சிந்தையில் நினைத்தால்
  இந்த உலகினில் எந்தக் குறையுமில்லை
  திருப்பதி மலை சென்று திருமாலின் பாதத்தில்
  வெள்ளை மலர் தூவினால் துயரமில்லை
  அதில் சந்திரனின் அருள் கிடைக்கும் ஐயமில்லை

  ருத்ரமூர்த்தியின் வியர்வையில் வந்த
  யுத்தபூமியின் தலைவனாம்
  உக்ரமூர்த்தியாம் செவ்வாய் குகனுடன் பழனியில் இருப்பான் திடம் தரவே
  செண்பக மலரால் வணங்குவோம் அவனருள் பெறவே
  செவ்வாய் தோஷம் நீங்கிடும் மங்கையர் நலம் பெறவே

  ஆயகலைகள் யாவும் அருள்பவன் புதனன்றோ
  அவனருள் பெற்றார்க்கு வித்தையில் குறைவுண்டோ
  தூய சொக்கநாதருடன் மதுரையில் அமர்ந்திட்டான்
  துலங்கும் வெண்காந்தள் மலர் தந்தாள் அருள் புரிவான்

  தேவரெல்லாம் துதிக்கும் பிரஹஸ்பதி
  உன் திருவிழி பட்டாலே மாறும் தலைவிதி
  ஸ்ருதியும் ஸ்ம்ருதியும் நீ தரும் வரமன்றோ
  சொல்லிய ஞானமெல்லாம் நீ தரும் அறமன்றோ
  திருச்செந்தூரிலே உன்னை தரிசித்தாலே போதும்
  முல்லை மலர் கொண்டு பூஜித்தால் அருள் மேவும்

  சுக்ரதிசையது முறையாய் வந்தால் செல்வம் குவிந்திடுமே
  தக்க களத்திரம் பொன் பொருள் நவநிதி சேர்ந்து கிடைத்திடுமே
  சீரங்கத்தில் திருவருள் செய்யும் தேவனை அனுதினமே
  சீதள வெண்டாமரை மலரால் பணிந்தால் நலம் வருமே

  வினைகளின் விளைவிங்கு விதியென்று பெயர் கொண்டு
  சனிபகவான் வடிவாக வருமல்லவோ
  சிறிய காகம் ஏறி பெரிய வாழை தந்த அனுபவம் புவிவாழ்வின் கதையல்லவோ
  வருவோற்கு அருள் செய்யும் நள்ளாறிலே திருநள்ளாறிலே
  குறை தீர்த்து அருளுவான் தீர்க்காயுளே
  கருங்குவளை மலரோடு எள் தீபம் ஏற்றி
  கழல் பணியலாம் என்றும் ஈஸ்வரனையே சனீஸ்வரனையே

  ராகு கேது இரு தேவர் சென்றமரும் வீடு அவருடைய ?!?தியே
  யோக காரகனும் மோட்ச காரகனும் நாகராஜன் வடிவாகுமே
  நாகதோஷமது சூழும் போது அதை நீக்கி வைக்கும் திருகாளஹஸ்தி
  கருமந்தாரை செவ்வல்லியோடு பணிந்தால் அருள்வாள் சிவசக்தி
  பணிந்தால் அருள்வாள் சிவசக்தி பணிந்தால் அருள்வாள் சிவசக்தி

  ஒன்பது கோள்களும் பலவித நல்வினைகளையும் தீவினைகளையும் நம் வினைப்பயன்களுக்கேற்ப கொடுக்குமானால் அதிலிருந்து தப்பிப்பது எப்படி? எந்தக் கோள் நம்மைக் கோவிக்கிறது எந்தக் கோள் நம்மை அரவணைக்கிறது என்பதெல்லாம் எப்படித் தெரிந்து கொள்வது? எதைச் செய்தால் எந்தப் பலன் கிட்டும்? எதைச் செய்யாவிட்டால் எந்தப் பாவம் தீண்டும்? இப்படிக் குழப்பும் கேள்விகளுக்கெல்லாம் என்ன விடை?

  திருஞானசம்பந்தர் அதற்கும் நல்ல விடை சொல்லியிருக்கிறார். இதற்காக கோளறுபதிகம் என்றே ஒரு பதிகம் பாடியிருக்கிறார்.

  வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
  மிகநல்ல வீணை தடவி
  மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
  உளமே புகுந்த அதனால்
  ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
  சனிபாம் பிரண்டும் உடனே
  ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
  அடியாரவர்க்கு மிகவே

  இதற்கு என்ன பொருள்?
  மூங்கில் போன்ற தோளினை உடைய உமையவளை உடையனை
  நீலகண்டத்து ஈசனை வீணைக் கலைஞனை
  திங்களையும் கங்கையும் முடியில் சூடியவனை
  நெஞ்சத்தில் அன்போடு வைத்த காரணத்தால்
  ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி ராகு கேது
  ஆகிய கோள்கள் நல்ல பயன்களையே தரும்

  இதே கருத்தை அருணகிரிநாதரும் கந்தர் அலங்காரத்தில் எடுத்துச் சொல்கிறார். முருகன் திருவடியைப் பணிந்தாரை “நாள் என் செயும்? வினைதான் என் செயும்? கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்?” என்று கேட்கிறார்.

  உள்ளத்தில் அன்பும் அருளும் நிறைந்தால் எல்லாம் இன்பமயம் என்பது அருளாளர்கள் கருத்து.

  அன்புடன்,
  ஜிரா

  145/365

   
  • n_shekar 2:03 pm on April 25, 2013 Permalink | Reply

   சரணாகதி தத்துவம் – உள்ளத்தில் அன்பும் அருளும் நிறைந்தால் எல்லாம் நல்ல பயன்களையே தரும் – அருமையான பதிப்பு 🙂

  • amas32 9:37 pm on April 25, 2013 Permalink | Reply

   என்ன ஒரு அருமையான பாடல்! இசைக் கடலில் மூழ்கி நல் முத்தை எடுத்து எங்களுக்குக் கொடுக்கிறீர்கள்.

   பாடலாசிரியர் கே.பி.அறிவானந்தம் ஒவ்வொரு கிரகத்தின் குணாதிசயங்களையும், பரிகார தலங்களையும், எந்த மலர் கொண்டு பூஜிக்க வேண்டும் என்பதையும் கோவையாகக் கொடுத்துள்ளார்.

   ஆனால் கிரகங்களூக்கும் அதிபதியான ஒருவன் காலைப் பற்றினால் பின் நமக்கு வேறு என்ன கவலை!

   amas32

 • mokrish 11:48 am on April 24, 2013 Permalink | Reply
  Tags: , காந்தர்வ மணம்,   

  காந்தர்வ மணம் 

  விட்டலாச்சார்யா படங்கள் பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் மனம் ஈடுபட்டு அவர்களே தீர்மானித்து செய்துகொள்வது காந்தர்வ மணம். இதில் பெரியவர்கள் சம்மதமோ துணையோ இருக்காது. நிலம் காற்று வானம் என்று இயற்கை மட்டும் சாட்சியாக நிற்கும் நிகழ்வு.

  காந்தர்வ மணம் என்று கேட்டவுடன் துஷ்யந்தன் (ஷார்ட் நேம் துஷ்டன்) சகுந்தலையை மணந்து பின் மறந்த காளிதாசன் காவியம் ராஜா ரவி வர்மா ஓவியங்களோடு காட்சியாக விரிகிறது. அலைபாயுதே மாதவனும் ஷாலினியும் நினைவுக்கு வருகிறார்கள். இன்றைய ‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா’ எல்லாம் இந்த வகைதானோ என்று ஒரு சந்தேகம்.

  திருமணம் பற்றி நிறைய திரைப்பாடல்கள் உண்டு. காந்தர்வ மணம் சொல்லும் பாடல்கள் தேடியதில் கிடைத்த இரண்டு பாடல்கள்.

  குடியிருந்த கோயில் படத்தில் வரும் வாலி எழுதிய நீயேதான் எனக்கு மணவாட்டி பாடலில் ஆண் பாடும் வரிகள் http://www.youtube.com/watch?v=dSs1Q_MAN40

  கண்கள் இருக்க தோரணம் ஏனோ

  கைகள் இருக்க மாலைகள் ஏனோ

  உள்ளம் இருக்க மணவறை ஏனோ

  ஒரு மனதானால் திருமணம் ஏனோ

  தோரணம் இல்லை மாலைகள் இல்லை மணவறை இல்லை. ஆனால் ஒரு மனதாகியதால் திருமணம் என்ற சடங்கே தேவையில்லை என்ற தொனி. அவளுக்கும் சம்மதம்தான். பல பிறவியில் சேர்ந்து வாழ்ந்தவர்கள்தானே, இறைவன் எழுதி வைத்ததுதானே என்று சரணடைகிறாள். இதற்கு சாட்சி ? அடுத்த சரணத்தில் கவிஞர் சொல்லும் அல்லி, சந்திரன், தாமரை, சூரியன் என்று பட்டியல். ஒரு இரவில் தொடங்கி விடியல் வரை… நிச்சயமாக இது காந்தர்வ விவாகம்தான்.

  பாட்டும் பரதமும் என்ற படத்தில் கண்ணதாசன் எழுதிய மாந்தோரண வீதியில் என்ற பாடல் http://www.youtube.com/watch?v=UqnNOMbt-nM

  மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம்

  மாப்பிள்ளை பெண்ணுக்கு ஏனிந்த மோகம்

  மாப்பிள்ளை பெண் இருவரையும் அடையாளம் காட்டி தோரணம் கட்டி ஒரு காட்சியை விவரிக்கிறார். முதல் சரணத்தில் ஒரு பொடி வைத்தது போல் இருக்கிறது

  பூவைக்கும் எனக்கும் நிச்சயதார்த்தம்

  பூவினில் தேனீ சாந்தி முகூர்த்தம்

  அட நிச்சயம் செய்தபின் நடக்கும் கல்யாணம் சொல்லவேயில்லையே? கதையில் வரும் காட்சிக்கு ஏற்ற கற்பனை.

  ஆதித்யன் மேனியை மேகங்கள் மூட

  ஆனந்த பூந்தென்றல் மோகனம் பாட

  வசந்தத்தில் பாற்குடம் ஊர்வலம் போக

  வந்து விட்டேன் கண்ணா மணமகளாக

  என்று சரணத்தில் சூரியன், மேகங்கள் பூந்தென்றல் சாட்சியாக மணமகளாகிறாள். நிச்சயம் இதுவும் காந்தர்வ விவாகம்தான். சந்தேகம் இருந்தால் தொடர்ந்து கேளுங்கள்

  ஆவியில் ஆவியை ஆண்டவன் சேர்க்க,

  ஆனந்தம் நான் கொள்ள யாரிடம் கேட்க

  நாங்கள் இருவரும் மனதால் இணைந்தபின் யார் அனுமதி தேவை என்ற கேள்வி. இன்றும் நம் எதிர்கொள்ளும் கேள்வி.

  இதுபோல வேறு பாடல்கள் உண்டா? நீங்களும் சொல்லுங்கள்


  மோகனகிருஷ்ணன்

  144/365

   
  • GiRa ஜிரா 9:30 am on April 25, 2013 Permalink | Reply

   பாட்டும் பரதமும் படத்தைப் பார்த்திருக்கிறேன். கதைப்படி அது காந்தர்வ மனம். அதாவது களவு மணம். அதற்குப் பின்னால் ஒரு பிரிவு. அந்த பிரிவுக்குப் பின் துயரம். அந்தத் துயரத்துக்குப் பின் சந்திப்பு. சந்திப்புக்குப் பின் சுபம் என்று திரைப்படம் முடியும்.

  • amas32 9:15 pm on April 25, 2013 Permalink | Reply

   You select exceptionally unique songs and excellent melodies too :-))

   அன்றும் இன்றும் என்றும் காந்தர்வ மணம் மட்டும் வழக்கொழிந்து போகாது என்பது என் எண்ணம் 🙂

   amas32

 • என். சொக்கன் 5:46 pm on April 23, 2013 Permalink | Reply  

  மொட்டுக்கள் எத்தனை? 

  • படம் : அலைகள் ஓய்வதில்லை
  • பாடல் : ஆயிரம் தாமரை மொட்டுக்களே
  • எழுதியவர் : வைரமுத்து
  • இசை : இளையராஜா
  • பாடியவர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி
  • Link : http://www.youtube.com/watch?v=BjDNaKe5Yoc

  ஆயிரம் தாமரை மொட்டுக்களே, வந்து
  ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களேன்!

  அதென்ன ஆயிரம் தாமரை மொட்டுக்கள்? இரண்டாயிரமாக இருக்கக்கூடாதா? பத்தாயிரம் என்று சொல்லக்கூடாதா? லட்சம், கோடி என்று எண்கள் இல்லையா? இங்கே ஏன் குறிப்பாக ஆயிரத்தைச் சொல்கிறார் கவிஞர்?

  ’ஆயிரம்’ என்பது மெட்டுக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது. ஆனால் அதைக்காட்டிலும் முக்கியமான ஒரு காரணம் உண்டு.

  பொதுவாக நம்முடைய தினசரிப் பயன்பாட்டில் வரும் ‘ஆயிரம்’ என்பது, 999க்குப்பிறகு வரும் ஓர் எண். அதைத் தாண்டி அதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை.

  ஆனால், அதே ஆயிரம் தமிழ்க் கவிதைகளில் வரும்போது, ‘பல’ என்கிற அர்த்தத்தைப் பெறுகிறது. அதாவது, இருபதும் ஆயிரம்தான், இருநூறும் ஆயிரம்தான், இரண்டாயிரம் கோடியும் ஆயிரம்தான்.

  சாட்சி வேண்டுமா? அப்பர் சொன்னால் ஒப்புக்கொள்வீர்களா? இதே ‘ஆயிரம் தாமரை’ என்ற வரிகளோடு தொடங்கும் அவரது பாடல் ஒன்று இங்கே:

  ஆயிரம் தாமரை போலும்
  ஆயிரம் சேவடியானும்!
  ஆயிரம் பொன்வரை போலும்
  ஆயிரம் தோள் உடையானும்!
  ஆயிரம் ஞாயிறு போலும்
  ஆயிரம் நீள்முடியானும்!
  ஆயிரம் பேர் உகந்தானும்
  ஆரூர் அமர்ந்த அம்மானே!

  திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே,

  உனக்கு ஏகப்பட்ட திருவடிகள் உண்டு, அவை அனைத்தும் ஆயிரக்கணக்கான தாமரைகளைப்போலச் சிவந்துள்ளன.

  அதேபோல், உனக்கு ஏராளமான தோள்கள் உண்டு, அவை ஆயிரக்கணக்கான பொன் மலைகளைப்போல் வலுவோடு மின்னுகின்றன.

  உனக்கு ஏராளமான திருமுடிகள் உண்டு, அவை அனைத்தும் ஆயிரக்கணக்கான சூரியன்களைப்போல் பிரகாசிக்கின்றன.

  திருவடிகள், தோள்கள், திருமுடிகளைப்போலவே, உனக்குப் பல பெயர்களும் உண்டு, அவற்றை நாங்கள் பாடித் துதிக்கிறோம்.

  ’சிவனுக்கு ஒரு தலை, இரண்டு தோள்கள், இரண்டு கால்கள்தானே உண்டு, அப்புறம் எப்படி ஆயிரம் வந்தது?’ என்று கால்குலேட்டரும் கையுமாகக் கேள்வி கேட்காதீர்கள், இங்கே ஆயிரம் என்பது 999க்குப்பின் வரும் எண் அல்ல.

  சந்தேகமிருந்தால் ‘ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணம் செய்’ என்று சொல்கிறவர்களிடம் கேளுங்கள், ‘உங்க கல்யாணத்துக்கு எத்தனை பொய் சொன்னீங்க?’

  நிச்சயம் ஆயிரமாக இருக்காது. நூற்று இருபத்தைந்துக்குள்தான் இருக்கும்!

  ***

  என். சொக்கன் …
  23 04 2013

  143/365

   
  • amas32 9:57 pm on April 23, 2013 Permalink | Reply

   also வாரணம் ஆயிரம் 🙂

   amas32

  • Rajan 6:27 am on April 24, 2013 Permalink | Reply

   ஆயிரம் மலர்களே மலருங்கள்…

   ஆயிரத்தில் நான் ஒருவன்…

  • GiRa ஜிரா 9:26 am on April 25, 2013 Permalink | Reply

   இத ஒத்துக்க முடியாது. எழுது நெனச்சிருந்தத நீங்களே எழுதிட்டிங்க. 🙂

   நல்லா அழகா எழுதியிருக்கிங்க.

   ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி – கண்ணதாசன் – கர்ணன்
   ஆயிரம் மலர்களே மலருங்கள் – கண்ணதாசன் – நிறம் மாறாத பூக்கள்
   ஆயிரம் இரவுகள் வருவதுண்டு – வாலி – கற்பகம்

   சுலோகத்தில் கூட கோடி சூர்ய சமப்பிரப என்று வரும். அப்போ கோடி+1 அளவுக்கு பிள்ளையாருக்கு பிரபை இல்லையான்னு கேக்கக்கூடாது. நீங்க சொன்ன அதே விளக்கம் இங்கும் பொருந்துமல்லவா.

 • G.Ra ஜிரா 10:33 pm on April 22, 2013 Permalink | Reply  

  மனக்கோயில் 

  மீனவ நண்பன் படம் வெளியாகும் நேரத்தில் எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டின் முதல்வராகவே ஆகியிருந்தார். இத் திரைப்படத்தில் எல்லாப் பாடல்களுமே இனிமையானவை. அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது “தங்கத்தில் முகமெடுத்து” என்று தொடங்கும் காதற்பாடல்.

  தங்கத்தில் முகமெடுத்து
  சந்தனத்தில் உடலெடுத்து
  மங்கையென்று வந்திருக்கும் மலரோ
  நீ மாலை நேரப் பொன்மஞ்சள் நிலவோ
  பாடல் – கவிஞர் முத்துலிங்கம்
  பாடியவர்கள் – வாணி ஜெயராம், கே.ஜே.ஏசுதாஸ்
  இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
  படம் – மீனவ நண்பன்
  பாடலின் சுட்டி – http://youtu.be/LUF4NzXhMbk

  இந்தப் பாடலில் காதலி பாடுவதாக வரும் ஒரு வரி என்னுடைய கவனத்தை ஈர்த்தது.

  எந்தன் மனக்கோயிலில் தெய்வம் உனைக் காண்கிறேன்
  உந்தன் நிழல் போலவே வரும் வரம் கேட்கிறேன்

  அதாவது காதலியின் உள்ளமே கோயிலாம். அந்தக் கோயிலிலே குடியிருக்கும் கடவுள் காதலனாம். அந்தக் காதலின் நிழலாய்த் தொடர்ந்து வருவதற்கு அந்தக் காதலன் என்னும் கடவுள் அருள் செய்ய வேண்டும்.

  அடிமைத்தனமான காதல் போலத் தெரிகின்றதா? என்ன செய்வது? ஒவ்வொரு காதலும் ஒவ்வொரு வகை.

  கவிஞர் முத்துலிங்கம் இப்படி எழுவதற்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கும் முன்னார் ஒருவர் எழுதினார். அவரும் காதலினால்தான் எழுதினார். ஆனால் அது மனிதர் உணர்ந்துகொள்ள மனிதக் காதல் அல்ல. ஆம். கடவுள் மேல் கொண்ட அன்பு.

  ஆம். அவர் தான் தாயுமானவ சுவாமிகள். ”எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே” என்று பாடிய அன்புள்ளமே தாயுமானவ சுவாமிகள்.

  இவர் இறைவன் மீது கண்ணிகள் அமைத்துப் பாடினார். அதாவது இரண்டிரண்டு அடிகளாக அமையும் பாடல்கள். ஈசனாரைப் பராபரமே என்று அழைத்துப் பாடிய கண்ணிகளுக்குப் பராபரக் கண்ணிகள் என்றே பெயர் அமைந்தது.

  இவர் காலத்தில் மதங்களுக்கிடையே நிறைய பிணக்குகள் இருந்தன. குறிப்பாக வைணவ-சைவப் பிணக்குகள். அவைகளை மிகவும் வெறுத்திருக்கிறார். அதனால்தான் இறைவன் பெயரைக் கூடப் பொதுவாகக் குறிப்பிடாமல் பராபரமே என்று குறிப்பிட்டு பாடியுள்ளார். இவர் பாடல்களில் சித்தர் பாடல்களின் தாக்கம் தெரியும்.

  அப்படிப் பட்ட தாயுமானவ சுவாமிகளிடம் பொன்னும் பொருளும் இல்லை. மண்ணும் கல்லும் சுண்ணாம்பும் இல்லை. அதற்காக இறைவனுக்குக் கோயில் கட்டாமல் இருக்க முடியுமா?

  கட்டினார் ஒரு கோயில். அதில் நடத்திக் காட்டினார் ஒரு பூசை.

  நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே
  மஞ்சன நீர் பூசைகொள்ள வாராய் பராபரமே

  நெஞ்சமே கோயில். அந்த நெஞ்சில் எழும் இறைவனைப் பற்றிய நினைவுகளே சுகந்தம். ஆண்டவன் மீதுள்ள அன்பே மஞ்சன நீர். இவைகளை வைத்துச் செய்யப்படும் வழிபாட்டை ஏற்க வருவாய் இறைவா!

  அங்கு காதலியும் நெஞ்சமாகிய கோயிலில் ஒரு கடவுளைக் கண்டாள். ஒரு துறவியும் நெஞ்சத்தில் கடவுளைக் கண்டார். காதலிக்குக் அன்பனே கடவுள். துறவிக்கு கடவுளே அன்பன்.

  அன்புடன்,
  ஜிரா

  278/365

   
  • uma chelvan 8:35 pm on September 5, 2013 Permalink | Reply

   விழி வாசல் தனை கடந்து வழி முழுதும் தெரிந்தவர் போல் குழைவாக மன கோயில் குடி புகுந்தாரே!!………….. . எங்கோ பிறந்த வராம் எங்கோ வளந்த வராம், எப்படியோ என் மனதை கவர்ந்தவராம் . very very beautiful song in the movie Bommai. Please listen and enjoy the honey suckle voice of P.Susheela in Ragam “Sahana”

  • Rajan 6:40 am on September 6, 2013 Permalink | Reply

   எந்தன் மனக்கோயில் சிலையாக அமர்ந்தாளம்மா
   மலரோடு மலராக மலர்ந்தாளம்மா
   கனவென்னும் தேர் ஏறி பறந்தாளம்மா
   காற்றோடு காற்றாக கலந்தாளம்மா

   பாலும்பழமும் கண்ணதாசன்

 • G.Ra ஜிரா 10:02 pm on April 22, 2013 Permalink | Reply
  Tags: எம்.எஸ்.ராஜேஸ்வரி, வி.ஜே.சர்மா   

  யாழிசை உந்தன் மொழி 

  துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
  இன்பம் சேர்க்க மாட்டாயா
  எமக்கின்பம் சேர்க்க மாட்டாயா
  அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
  அல்லல் நீக்க மாட்டாயா
  பாடல் – பாவேந்தர் பாரதிதாசன்
  இசை – ஆர்.சுதர்சனம்
  பாடியவர்கள் – எம்.எஸ்.ராஜேஸ்வரி, வி.ஜே.சர்மா
  படம் – ஓர் இரவு
  நடிகர்கள் – லலிதா, அக்கினேனி நாகேஸ்வரராவ்
  பாடலின் சுட்டி – http://youtu.be/MW4Rm1YkVuo

  திரைப்படப் பாடல்கள் இலக்கியம் ஆகுமா என்று விவாதிக்கும் நேரத்தில் இலக்கியங்களும் திரைப்படப் பாடல்கள் ஆனதுக்கு இந்தப் பாடல் ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

  பாவேந்தரின் கவிதையில் நிறைந்து ததும்பும் தீந்தமிழானது யாழிசையாய் நெஞ்சில் கலந்து அல்லல் நீக்கி இன்பம் சேர்ப்பது உண்மைதான்.

  ஆனால் யாழ் பாரம்பரிய இசை மேடைகளில் இன்று இல்லை. ஆனாலும் சங்க இலக்கியங்களிலும் சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்களின் வழியாகவும் யாழ் பற்றி நாம் நிறைய தெரிந்து கொள்ளலாம்.

  அதையும் விட இன்னொரு எளிய வழி இருக்கிறது. அதுதான் விபுலானந்த அடிகளார் எழுதிய யாழ்நூல் என்ற நூலைப் படிப்பது. இலங்கை யாழ்பாணத்து மட்டக்களப்பில் பிறந்த மயில்வாகனன் என்னும் விபுலானந்த அடிகள் சிலப்பதிகாரம் முதலான இலக்கியங்களை பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சி செய்து உருவாக்கிய செறிவான நூல்தான் “யாழ்நூல்

  யாழ்நூல் 1947ம் ஆண்டு ஜூலை ஐந்தாம் தேதி இலங்கையின் திருக்கொள்ளம் புதூர் கோயிலில் வெளியிடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் சுவாமி விபுலானந்தரின் குறிப்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட யாழ்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தனவாம். அந்த யாழ்களை இசைப் பேரறிஞர் க.பொ.சிவானந்தம் அடிகளார் மீட்டி இன்னிசை பொழிந்தாராம். அந்த யாழ்களுக்கும் பின்னாளில் என்ன ஆயிற்றோ தெரியவில்லை.

  சரி. யாழின் வகைகளைப் பார்க்கலாம். பொதுவாக யாழ் மூன்று விதங்களில் வகைப்படுத்தபடும்.
  1. யாழின் வடிவம்
  2. யாழ் பயன்படுத்தப்பட நிலம்
  3. வாசிக்கப்படும் பண்கள் மற்றும் இசைமுறைகள்

  வடிவத்தை வைத்து வகைப்படுத்தப்பட்ட சில யாழ்களைப் பார்க்கலாம்
  வில்யாழ் – வில்லின் வடிவில் இருப்பது
  சீறியாழ் – சிறிய யாழ்
  பேரியாழ் – பெரிய யாழ். இதில் 21 நரம்புகள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

  ஐவகை நிலங்கள் நாம் அறிந்ததே. அந்த நிலங்களின் அடிப்படையில் கீழ்க்கண்ட யாழ்களும் பழக்கத்தில் இருந்திருக்கின்றன. அந்தந்த நிலப்பகுதிகள் இந்த யாழ்கள் வாசிக்கப்பட்டிருக்கின்றன.
  குறிஞ்சியாழ்
  முல்லையாழ்
  மருதயாழ்
  நெய்தல்யாழ்
  பாலையாழ்

  இசை வளர்ச்சியின் அடிப்படையிலும் வாசிக்கப்படும் பண்களின் அடிப்படையிலும் வகைப்படுத்தப்பட்ட சில யாழ்களைப் பார்க்கலாம்.
  மகர யாழ்
  செங்கோட்டு யாழ்
  பேரியாழ்
  சகோடயாழ்
  மருத்துவயாழ்

  யாழ் வாசிக்கின்றவருக்குப் பண்ணறிவும் பாட்டறிவும் யாழிலக்கண அறிவும் நிறைந்திருக்க வேண்டும். யாழ் வாசிக்கின்றவரை யாழாசிரியர் என்றே அழைத்தார்கள்.

  யாழ் வாசிப்பதில் மிகச்சிறந்த திறம் பெற்றவர்களில் திரூநிலகண்ட யாழ்ப்பாணரும் ஒருவர். இவர் பக்தி இலக்கிய காலத்தவர். பாணர் குலத்தில் பிறந்திருந்ததால் திறமை இருந்தும் கோயிலின் வாயிலில் நின்றே யாழ் வாசிக்க வேண்டிய நிலைக்கும் ஆளானவர். இவரால் வாசிக்க முடியாதவாறு ஒரு பண்ணை திருஞானசம்பந்தர் பாடியதாகவும் சொல்வார்கள். அந்தப் பண் யாழ்முறிப்பண் என்றே அழைக்கப்பட்டது.

  தாம் பெற்ற மக்களின் மழகைக் குரலுக்கு அடுத்த படியாக குழலும் யாழும் இனிமை என்று திருவள்ளுவரும் தெள்ளத்தெளிவாகக் கூறியிருக்கின்றார்.

  குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
  மழலை சொல் கேளாதவர்

  அன்புடன்,
  ஜிரா
  142/365

   
  • amas32 2:52 am on April 23, 2013 Permalink | Reply

   I think Yaazh is very close to what we call Lute in English.
   துன்பம் நேர்கையில் மனத்துக்கு இதம் அளிப்பது நமக்கு நெருக்கமானவர்களின் ஆறுதல் வார்த்தைகளும் இனிமையான இசையும் தான். நமக்கு நெருக்கமானவர்களே இசைத்தார்கள் என்றால் துன்பம் நொடியில் விலகிவிடும் இல்லையா?

   /அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
   அல்லல் நீக்க மாட்டாயா/
   இந்த வரிகளும் அருமையாக உள்ளன!

   யாழைப் பற்றி நிறைய தெரிந்துகொண்டேன் ஜிரா, நன்றி.

   amas32

  • GiRa ஜிரா 9:20 am on April 25, 2013 Permalink | Reply

   Lute, Harp and guitars are different types of யாழ்கள்.

   உண்மைதான். நெருக்கமானவர்களின் பேச்சு கூட பாடலாகுமென்று சொல்வார்களே.

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel