வசையும் இசையாகும்! 

எத்தனையோ பாடல்கள் திரைப்படங்களில் வந்துள்ளன? அவற்றில் செருப்பு வந்திருக்கிறதா என்று யோசித்துக் கொண்டிருந்த போது வானொலியில் காதலில் சொதப்புவது எப்படி திரைப்படப் பாடல் ஓடியது.

லவ் லவ் லவ் லவ் லவ்
ஹார்ட் பீட் கூட டம்ப் பீட் ஆகும் லவ்
தெர்மாமீட்டர் தாங்காது இந்த லவ்
………………….
செருப்பைக் கழட்டி வந்தாலும்
தொரத்தித் தொரத்திப் போவோமே
பாடல் – பாலாஜி மோகன்
பாடியவர்கள் – சித்தார்த்
இசை – எஸ்.தமன்
படம் – காதலில் சொதப்புவது எப்படி
பாடலின் சுட்டி – http://youtu.be/M-MtoaKL8eI

செருப்பைக் கழட்டி வந்தாலும் தொரத்திப் போவோம்” பாட்டு. அதாவது அவமானப் பட்டாலும் விடமாட்டோம் என்ற அளவுக்கு காதல் உறுதியாம். செருப்பால் அடித்தால் அவமானம் என்ற அளவுக்காவது புரிதல் இருப்பது மகிழ்ச்சி.

இப்படிப் பட்ட பாட்டில் செருப்பு கிடந்தால் ஒரு குற்றமும் இல்லை. ஆனால் முருகனைப் புகழ்ந்து பாடும் பாட்டில் செருப்பு கிடந்தால்?

புலவர்களைச் சோதிப்பதே சில புலவர்களுக்குப் பிடித்தமான வேலை. இப்படிப் பாடுக அப்படிப் பாடுக என்று துளைத்தெடுத்து விடுவார்கள்.

அப்படி ஒரு புலவர் காளமேகத்திடம் கேட்டார்.

“ஐயா, நீர் பெரிய புலவர் என்று பேசிக் கொள்கிறார்களே. உம்மால் முருகனைப் புகழ்ந்து பாட முடியுமா?”

“முருகன் அருளால் முடியும். வேலில் தொடங்கவா? மயிலில் தொடங்கவா?” என்றார் காளமேகம்.

”வேலிலும் தொடங்க வேண்டாம். மயிலிலும் தொடங்க வேண்டாம். செருப்பில் தொடங்கி விளக்குமாறில் முடித்தால் போதும்” என்று குசும்பாகக் கூறிவிட்டார் போட்டிப் புலவர்.

என்ன கொடுமை? இறைவனை, முத்தமிழ் முதல்வனை, செந்தமிழ் தெய்வத்தை, வெல்வேல் அழகனை, கருணைக் கடவுளை, கண்கவர் காளையை, முருகனைப் பாடும் போது செருப்பு என்று தொடங்கி விளக்குமாறு என்று முடிப்பதா? தகுமா? முறையா?

அதைத் தகும் என்றும் முறை என்றும் மிகமிக அழகாக நிரூபித்தார் காளமேகம்.

செருப்புக்கு வீரர்களை சென்றுழக்கும் வேலன்
பொருப்புக்கு நாயகனை புல்ல- மருப்புக்கு
தண்தேன் பொழிந்த திரு தாமரைமேல் வீற்றிருக்கும்
வண்டே விளக்குமாறே

செரு என்றால் போர்க்களம். செருப்புக்கு என்றால் போர்க்களம் புகும் என்று பொருள்படும்.

அப்படி போர்க்களத்தின் புகுந்த வீரர்களை வெற்றி கொள்ளும் முருகனை அணைத்துக் கொள்ளத் துடிக்கிறது உள்ளம். குளிர்ந்த தேன் நிறைந்த தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் வண்டே, அந்த முருகன் இருக்கும் இடத்தை விளக்குமாறே உன்னைக் கேட்கிறேன்.

விளக்குமாறு என்பதற்கு விளக்கம் சொல்லுமாறு என்றும் பொருள் கொள்ளலாம் அல்லவா.

இப்படி செருப்பில் தொடங்கி விளக்குமாறில் முடிகின்றது இந்த முருகன் பாட்டு.

சரி. மையக் கருத்துக்குத் தொடர்பில்லாமலும் பொதுக்கருத்துக்குத் தொடர்பாகவும் மற்றொரு செய்தி.

இதே போல வடமொழிக் கவி காளதாசரிடம் ஒரு போட்டி. செய்யுள் எழுத வேண்டும். அதன் ஈற்றடி ka kha ga gha என்று முடிக்க வேண்டும். அதாவது வடமொழிக் ககர எழுத்துகள் ஈற்றடியில் வந்து முடிய வேண்டும்.

காளிதாசரும் விரைவாகத்தான் எழுதியிருப்பார் என்று நம்புகிறேன். காளியின் அருள் பெற்றவர் அல்லவா.

கா த்வம் பாலே
காஞ்சனமாலா
கஸ்யா புத்ரி
கனகலதயா:
ஹஸ்தே கிம் தே
தாளீபத்ரம்
காவா ரேக்கா
ka kha ga gha

காளிதாசருக்கும் ஒரு சிறுமிக்கும் நடந்த உரையாடல் போல அமைந்த இந்த வடமொழிப் பாடலை இன்றைய தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன்.

பேர் என்ன பாப்பா?
காஞ்சனமாலா
யாரோட பொண்ணு?
கனகலதயா: (தந்தை பெயர்)
கைல என்னம்மா?
பனையோலை
என்ன எழுதியிருக்கு?
ka kha ga gha

கற்றறிந்த நல்ல புலவர்கள் வாயில் எப்படிப் பட்ட சொல்லும் நற்சொல்லாகி விடும் என்பதற்கு இதெல்லாம் எடுத்துக்காட்டு.

செருப்பு விளக்குமாறு என்று சொல்லியே தமிழ்க் கடவுளைப் பாடுவதற்கு தமிழ் மொழியில் இடமுண்டு என்று நிரூபித்த காளமேகம் போன்றவர்களை வணங்கத்தான் வேண்டும்.

அன்புடன்,
ஜிரா

223/365