விடியாத இரவென்று எதுவுமில்லை! 

  • படம்: இந்திரா
  • பாடல்: அச்சம் அச்சம் இல்லை
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
  • பாடியவர்கள்: அனுராதா ஸ்ரீராம், ஜி. வி. பிரகாஷ்குமார், சுஜாதா, ஸ்வேதா
  • Link: http://www.youtube.com/watch?v=VNcmdzmuTyY

அச்சம் அச்சம் இல்லை, அடிமை எண்ணம் இல்லை,

நம் காலம் இங்கே கூடிப் போச்சு, கண்ணீர் மிச்சமில்லையே!

காலம் மாறிப் போச்சு, நம் கண்ணீர் மாறிப் போச்சு,

நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு!

ராம ராஜ்ஜியத்தைப்பற்றிச் சொல்லும்போது, ‘இல்லை என்ற சொல்லே இல்லை’ என்பார்கள். நாம் இப்போது பேசப்போவது இல்லை என்கிற சொல்லைப்பற்றி.

’நான் மகான் அல்ல’ என்று ஒரு திரைப்படம் வந்தது, ‘நான் அடிமை இல்லை’ என்று இன்னொரு படம் வந்தது. இதில் மகானுக்குப் பதில் அடிமையைப் பொருத்தினால், ’இல்லை’யும் ‘அல்ல’வும் ஒன்றுதானா? ஒரே விஷயத்தைச் சொல்வதற்கு ஏன் இரண்டு சொற்கள்?

மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் எழுதிய ‘கட்டுரைக் கசடறை’ (என்னவொரு அற்புதமான தலைப்பு!) என்ற நூலைப் படிக்கும்போது, இல்லை, அல்ல என்கிற இரு சொற்களுக்கும் இடையே ஒரு முக்கியமான வேறுபாடு இருப்பது புரிந்தது:

  • ஒரு பொருளின் இன்மையைக் குறிக்கும்போது ‘இல்லை’ என்ற சொல்லைப் பயன்படுத்தவேண்டும். உதாரணம், ‘கோயிஞ்சாமியிடம் கெட்ட குணங்கள் இல்லை.’
  • ஒன்றை இன்னொன்றுடன் ஒப்பிட்டு, இதுவும் அதுவும் வெவ்வேறு என்று சொல்லும்போது ‘அல்ல’ என்ற சொல்லைப் பயன்படுத்தவேண்டும். உதாரணம், ’கோயிஞ்சாமி கெட்டவன் அல்ல.’ இன்னும் சரியாகச் சொல்வதென்றால், ’அல்ல’ என்பது அஃறிணைக்குதான், உயர்திணைக்குக் ‘கோயிஞ்சாமி கெட்டவன் அல்லன்’ (அல்லது) ‘கோயிஞ்சாமி கெட்டவர் அல்லர்’ என்று எழுதவேண்டும்

அதாவது, ‘அச்சமில்லை அச்சமில்லை’ என்று பாரதியும், இந்தப் பாடலில் ‘அச்சம் அச்சம் இல்லை’ என்று வைரமுத்துவும் எழுதியதும் மிகச் சரி. ஏனெனில், அவர்கள் அச்சம் என்கிற பொருள் / குணத்தின் இன்மையைக் குறிப்பிடுகிறார்கள். அங்கே ‘அச்சம் அல்ல’ என்று சொல்லமுடியாது.

அப்படியானால், ‘நான் மகான் அல்ல’, ‘நான் அடிமை இல்லை’ என்ற இரு வாசகங்களுள் எது சரி? அல்லது, இரண்டுமே தவறா? நீங்களே யோசித்துத் தீர்மானியுங்கள்.

***

என். சொக்கன் …

06 02 2013

067/365