Updates from December, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • mokrish 10:58 am on December 2, 2013 Permalink | Reply  

    நதிபோல ஓடிக்கொண்டிரு 

    திரைப்படத்தில் பாடல்கள் அவசியமா? இசையும் கவிதையும் திரைக்கதையின் ஓட்டத்திற்கு தேவையற்ற இடையூறா? சுஜாதா ‘டிவியில் பாடல் ஓடிக் கொண்டிருக்கும் போது mute பட்டனை அழுத்தி விட்டுக் கவனியுங்கள். சிரிப்பு வரும் என்று எழுதியிருந்தார்.

    பாடல்கள் எப்படிப் பயன்படுத்தப்படவேண்டும் என்பதே சரியான கேள்வி. ஒரு திறமையான கலைஞன் பாடல்களை கதையில் அழகாக நெய்துவிட முடியும். மகாநதி என்று படத்தின் டைட்டில். கதையின் பாத்திரங்களுக்கு கிருஷ்ணா, காவிரி, யமுனா, பரணி என்று நதிகளின் பெயர். கதை திருநாகேஸ்வரத்தில் தொடங்கி சென்னை, கொல்கத்தா என்று அலைந்து சென்னையில் முடியும். இதில் பாடல்களை எங்கே எப்படி கொண்டு வரவேண்டும்?

    வாலி ஸ்ரீரங்கத்துக்காரர். காவிரி நதியை ஒரு கதாபாத்திரமாகவே உருவாக்குகிறார். படத்தின் பெரும்பான்மையான பாடல்களில் கதையின் ஒட்டத்தோடு காவிரி பற்றிய reference. ராஜா ஒரு அற்புதமான இசை இழை தருகிறார். திரைக்கதையுடன் கைகோத்து வலம் வரும் பாடல்கள்.

    முதலில் மகிழ்ச்சியுடன் பொங்கல் கொண்டாடும் பாடல் கங்கையின் மேலான காவிரியின் பெருமை சொல்லும் பாடல் (பாடியவர்கள் சித்ரா & குழுவினர்)

    http://www.youtube.com/watch?v=wwzL-BhmVMw

    தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ
    வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றி சொல்லடியோ
    இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி
    இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி

    நம்ம சொர்க்கம் என்பது மண்ணில் உள்ளது வானில் இல்லையடி

    நம்ம இன்பம் என்பது கண்ணில் உள்ளது கனவில் இல்லையடி

    அடுத்து விதிவசத்தால் சொந்த மண்ணை விட்டு விலகி சென்னை வந்து புது வாழ்க்கை ஆரம்பிக்கும்போது, பிரிந்து போகும் குழந்தையை ஒரு தாய் வழி அனுப்புவது போல காவிரி நதி நாயகனை வாழ்த்தும் வரிகள் (பாடியவர் எஸ் பி பாலசுப்ரமணியம்)

    http://www.youtube.com/watch?v=D2PyGX_K6IQ

    அன்பான தாயை விட்டு எங்கே நீ போனாலும்

    நீங்காமல் உன்னைச் சுற்றும் எண்ணங்கள் எந்நாளும்

    ஐயா உன்கால்கள் பட்ட பூமித்தாயின் மடி

    எங்கேயும் ஏதும் இல்லை ஈடு சொல்லும் படி

    காவேரி அலைகள் வந்து கரையில் உன்னைத் தேடிடும்

    காணாமல் வருத்தப் பட்டுத் தலை குனிந்து ஓடிடும்

    ஒரு பந்தம் என்பதும் பாசம் என்பதும் வேரு விட்ட இடம்

    இதை விட்டால் உன்னை வாழ வைப்பது வேறு எந்த இடம்

    தன் மண்ணை விட்டொரு குருவிக் குடும்பம் பறந்து போகுதடி

    தான் இந்நாள் வரைக்கும் இருந்த கூட்டை மறந்து போகுதடி

    இந்த நெஞ்சில் இப்படி ஆசை வந்தொரு கோலமிட்டதடி

    இதில் நன்மை கூடட்டும் தீமை ஓடட்டும் காலம் விட்ட வழி

    சென்னையில் அவனுக்கு நிறைய சோதனைகள். செய்யாத குற்றத்துக்கு சிறைவாசம். ஆனால் அவன் தளரவில்லை என்ற வரிகளிலும் காவிரி ! (பாடியவர் கமல்ஹாசன்)

    http://www.youtube.com/watch?v=VAzrswll0oQ

    தன்மானம் உள்ள நெஞ்சம் என்னாளும் தாழாது

    செவ்வானம் மின்னல் வெட்டி மண்மீது வீழாது

    காவேரி தாய் மடியில் வாழ்ந்த பிள்ளையடி

    காற்றாடி போலருந்து வீழ்வதில்லையடி

    அன்பான உறவு கண்டு கூடு கட்டி ஆடுவேன்

    அன்னாளில் நானிருந்த வாழ்க்கையைத் தான் தேடுவேன்

    அன்று சொன்னான் பாரதி சொல்லிய வார்த்தைகள் தோற்றதில்லையடி

    எந்தன் எண்ணம் என்றைக்கும் தோல்வி என்பதை ஏற்றதில்லையடி

    நதியில் விழுந்த இலை போல திக்கு திசை தெரியாமல் ஓடி பல சோகம் கண்டு ஒருவழியாக வெளிவரும் நிலையில் ஒரு அற்புதமான பாடல் (பாடியவர் கமல்ஹாசன்)

    http://www.youtube.com/watch?v=2H6CaBpol80

    எங்கேயோ திக்கு திசை எங்கேயோ திக்கு திசை காணாத தூரம்தான்

    அம்மாடி வந்ததென்ன என் வாழ்கை ஓடம்தான்

    காவேரி தீரம் விட்டு கால்கள் வந்ததடி

    காணாத சோகம் எல்லாம் கண்கள் கண்டதடி

    இரு கண்ணே செந்தமிழ் தேனே தந்தையின் பாசம் வென்றதடி

    பசும் பொன்னே செவ்வந்தி பூவே இத்துடன் சோகம் சென்றதடி

    ஒவ்வொரு பாடலிலும் காவிரி பற்றி ஒரு குறிப்பு. முதல் பாடலில் வளம் தரும் மகாநதி. அடுத்த பாடலில் வாழ்த்தி வழியனுப்பும் தாய் போல என்கிறார். இன்னொரு பாடலில் காவிரி மடியில் வாழ்ந்தவர் வீழ்வதில்லை என்கிறார். காவிரி தீரம் விட்டு வந்து பட்ட சோகம் சொல்கிறார். ஆனால் எல்லா பாடல்களிலும் முடிவில் ஒரு நல்ல வாக்கு. ஒரு பாசிடிவ் கருத்து. கதை சொல்லலில் பாடலையும் இணைக்கும் நயம்.

    நதியிடம் நமக்கு நிறைய பாடங்கள் கிடைக்கும். நதி இலக்கை மறப்பதேயில்லை. கழிவுப் பொருட்களைக் கலந்தாலும், எல்லா தடைகளையும் மீறி ஓடிக்கொண்டேயிருக்கும். In the confrontation between the stream and the rock, the stream always wins, not through strength but by perseverance என்று சொல்வார்கள். வாழ்க்கையும் அப்படியேதான்.

    அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றி சொல்லி நாலு வரி நோட்டிலிருந்து விடை பெறுகிறேன்

    மோகனகிருஷ்ணன்

    365/365

     
    • amas32 6:52 pm on December 2, 2013 Permalink | Reply

      வாழ்த்துகள் மோகனகிருஷ்ணன், ராகவன், சொக்கன். #365 வேள்வியை பிராமாதமாக முடித்ததற்கு பாராட்டுகள் 🙂

      மகாநதி படத்தில் இந்த நதி பற்றிய thread இருப்பது நீங்கள் சுட்டிக் காட்டும் வரை நான் கவனித்தது இல்லை. மிக்க நன்றி. படம் முழுதும் நதியையும் கதையோடு ஓடவிட்டதில் வாலியின் திறமை மிளிர்கிறது. தஞ்சை திருச்சி மாவட்ட மக்களுக்குக் காவேரியைப் பற்றி பேசும்போது பெருமை பிடிபடாது 🙂

      ரிதம் படத்தில் நதியே நதியே காதல் நதியே பாடலும் சிறந்த கருத்தைச் சொல்லும் பாடல்.

      உங்கள் மூவருக்கும் பல்லாண்டு பல்லாண்டு பாடி அமைகிறேன் :-))

      amas32

    • uma chelvan 6:56 pm on December 2, 2013 Permalink | Reply

      excellent post !!!

      தன்மானம் உள்ள நெஞ்சம் என்னாளும் தாழாது

      செவ்வானம் மின்னல் வெட்டி மண்மீது வீழாது

      In the confrontation between the stream and the rock, the stream always wins, not through strength but by perseverance………………………Beautiful Wordings both in Tamil and English.

      Godd Luck !!!!

    • krish 12:32 pm on August 12, 2014 Permalink | Reply

      excellant

  • G.Ra ஜிரா 8:07 pm on December 1, 2013 Permalink | Reply  

    விண்ணெங்கும் காத்தாடிகள் 

    புண்ணாகவராளி இராகத்தில் ஆறுதல் அருள்வாய் ஆறுமுகா என்ற பாடலை ரெக்கார்ட் பிளேட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு உள்ளமுருக முருகனைப் பாடிக் கொண்டிருந்தார் டி.எம்.சௌந்தரராஜன்.

    ஆறுதலைக் கூட ஆறுதலைச்சாமி தான் தர வேண்டுமோ? அதென்ன அவ்வளவு எளிதாகக் கிடைக்காத ஒன்றா?

    யோசித்துப் பார்த்தால் அது உண்மைதான். உழைப்போ அதிர்ஷ்டமோ பணத்தைக் கொடுத்து விடுகிறது. அந்தப் பணம் இருந்தால் உணவு உடை உறைவிடம் என்று பலவற்றை வாங்க முடிகிறது. பணத்தைப் பார்த்து காதலும் கூட வந்துவிடுகிறது. ஆனால் மனதுக்குத் தேவையான ஆறுதல்!!!!!!

    ஆறுதல் எல்லோரிடமும் கிடைப்பதில்லை. ஏனென்றால் ஆறுதலளிக்க எதையும் எதிர்பார்க்காத உண்மையான அன்பு வேண்டும்.

    அப்படி ஆறுதல் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தவர் தான் மலைச்சாமித் தேவர். ஊரிலேயே பெரிய தலைக்கட்டு. மச்சு வீடு. நிலம் நீச்சு. எட்டுப் பட்டிக்கும் பஞ்சாயத்து. பெரிய கவுரவம் தான். ஆனால் நிம்மதி மட்டும் தான் இல்லை.

    பதிவிரதை ஏறுமாறாக இருப்பாளேயாமாகில் கூறாமல் சன்னியாசம் கொள்” என்று ஔவையார் சொன்னது மலைச்சாமித் தேவருக்கு நன்றாகவே பொருந்தும். என்ன செய்வது? கவியரசர் சொன்னது போல இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று.

    சோகத்துக்கு ஒரு இயல்புண்டு. யாரிடமாவது சொல்லிவிட்டால் அது குறைந்துவிடும். ஆனால் ஊரெல்லாம் வந்து நியாயம் கேட்கும் தலைக்கட்டு யாரிடம் போய்ச் சொல்ல முடியும்?

    அதற்கு ஒரே வழி உள்ளத்து உணர்வுகளை பாட்டாக்கி காற்றோடு காற்றாய் கலந்து விடுவதான். அந்த வழியில்தான் மலைச்சாமித் தேவரும் போனார்.

    பூங்காத்து திரும்புமா
    ஏம் பாட்ட விரும்புமா
    தாலாட்ட மடியில் வெச்சுப் பாராட்ட
    எனக்கொரு தாய்மடி கெடைக்குமா

    அவர் பாட்டுக்கும் ஒரு எதிர்ப்பாட்டு வருகிறது. அதுவும் தேடிக் கொண்டிருந்த ஆறுதலைத் தாங்கிக் கொண்டு.

    ராசாவே வருத்தமா
    ஆகாயம் சுருங்குமா
    ஏங்காதே அத ஒலகம் தாங்காதே
    அடுக்குமா சூரியன் கருக்குமா

    பாடியது ஆளோ அசரீரியோ… இப்படியான ஆறுதலைக் கேட்பதற்கு இரண்டு காதுகள் இருந்தால்… இல்லை இல்லை. ஒரு காது இருந்தாலே போதுமே. வேதனைப் பட்ட உள்ளம் உள்ளதையெல்லாம் கொட்டி அழுதிடுமே!

    என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல
    மெத்த வாங்குனேன் தூக்கத்த வாங்கல

    வேதனை இல்லாத மனம் ஏது? வாதை இல்லாத உடல் ஏது? குறையே இல்லாத மனிதர் தான் யார்? அதைப் புரிய வைத்தால் அவர் மனம் தெளியும் என்று நம்பினாள் அவள்.

    இந்த வேதன யாருக்குத்தான் இல்ல
    உன்ன மீறவே ஊருக்குள் ஆளில்ல

    தனக்காகப் பாடும் அந்தக் குரல் யார் குரல் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் உந்துகிறது. அது பாட்டிலேயே கேள்வியாகவும் வருகிறது.

    யாரது போறது?

    ஆனால் அவள் கெட்டிக்காரி. அவளா முகத்தைக் காட்டுவாள்?

    குயில் பாடலாம். தன் முகம் காட்டுமா?

    இப்படி வரிவரியாகச் சோகத்தை அவர் சொல்லவும் ஆறுதலை இவள் சொல்லவும் பாட்டு தொடர்கிறது.

    எப்போதும் இல்லாத ஒரு மகிழ்ச்சி. என்றைக்குமே தோன்றியிருக்காத ஒரு நிம்மதி. அனுபவித்தேயிருக்காத ஒரு இன்பம். மலைச்சாமித் தேவருக்கு மட்டுமல்ல… அவளுக்கும் தான். சுகராகம் சோகம் என்றால் ஆறுதல் ஆனந்தம் தான்.

    மறுபடியும் ஆசை உந்தக் கேட்டு விடுகிறார் தேவர். அந்தப் பெண்ணும் தன்னைக் காட்டிக் கொள்கிறாள். அவள் குரல் மட்டுமல்ல பெயரும் குயில்தான்.

    இந்தச் சின்னப் பெண்ணா பெரிய சோகத்துக்கு மருந்து தடவிய குயில் என்று அவர் உள்ளம் வியக்கிறது. குரலில் என்றுமில்லாத ஒரு மகிழ்ச்சியோடும் நெகிழ்ச்சியோடும் கேட்கிறார்.

    அடி நீதானா அந்தக் குயில்
    யார் வீட்டுச் சொந்தக் குயில்
    ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
    பறந்ததே ஒலகமே மறந்ததே

    எங்கேயோ இருக்கும் எந்தத் தொடர்பும் இல்லாத இரண்டு உள்ளங்களுக்குள் ஒரு இணைப்பு கொண்டு வருவதற்கு எத்தனையெத்தனையோ காட்சிகளும் நிகழ்ச்சிகளும் தேவை. அதிலும் சில தவறாகப் போய்விடுவதும் உண்டு.

    அப்படியெல்லாம் ஆகாமல் சோகத்துக்குத் தேவையான ஆறுதலைக் கொடுத்து மனக்காயங்களை ஆற்றி இரண்டு உள்ளங்களுக்கு இடையே பாலம் போட்ட இந்தப் பாடல் தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று.

    பாடல்கள் அழகிய அபத்தமாம். அப்படிச் சொல்வதுதான் அசிங்கமான அபத்தம். எத்தனையோ பக்கங்களில் பேசியிருக்க வேண்டிய வசனத்தை இருபது வரிகளில் கவிதையாக்கி சோக நெஞ்சங்களுக்கெல்லாம் ஆறுதல் தந்த பாடலுக்கு நன்றி பல. இந்தப் பாடல் இல்லாமல் முதல் மரியாதை என்ற படமே இல்லை.

    நன்றாக யோசித்துப் பார்த்தால் தமிழ் திரைப்படம் தொடங்கிய காலத்திலிருந்து எத்தனையெத்தனை பாடல்கள்! எத்தனையெத்தனை கவிஞர்கள் புலவர்கள் பாடலாசிரியர்கள்! எத்தனையெத்தனை இசையமைப்பாளர்கள்! அவர்கள் உருவாக்கித் தந்த பல பாடல்கள் படத்தோடு காணாமல் போகாமல் நம்மோடு இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்றால் மிகையாகாது.

    தெலுங்கில் “எந்தரோ மகானுபாவுலு.. அந்தரிக்கி வந்தனம்” என்று சொல்வார்கள். நமது தமிழில் சொன்னால், “எத்தனையோ பெரியவர்கள். அவர்கள் அனைவருக்கும் வணக்கம்.” நமக்காக ஆயிரமாயிரம் பாடல்களை உருவாக்கிய அந்தப் பெரியவர்கள் அனைவருக்கும் எனது நன்றி கலந்த வணக்கங்கள்.

    பாடல் – பூங்காற்று திரும்புமா
    வரிகள் – கவிஞர் வைரமுத்து
    பாடியவர்கள் – மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி
    இசை – இசைஞானி இளையராஜா
    படம் – முதல் மரியாதை
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=-9kaLJZhJIE

    அன்புடன்,
    ஜிரா

    364/365

     
    • Uma Chelvan 9:35 pm on December 1, 2013 Permalink | Reply

      மிகவும் நல்ல பதிவு. படிப்பு, பணம், புகழ், வசதி, வாய்ப்புகள் என்று எல்லாம் வந்த பின்பும் மனித மனம் வேண்டுவது அன்பும் ஆறுதலும் தான். அது எந்த வடிவத்தில் இருந்தாலும்…….பக்தியாய் இறைவனிடம், அன்பாய் மனைவியிடம், பாசமாய் மகள், மகனிடம், நேசமாய் உறவுகளிடம், உரிமையாய் நட்பிடம்……… அனைவர்க்கும் அன்பையும் ஆறுதலையும் அந்த ஆறுமுகன் அருளட்டும்.

      அறுமுகனை வேண்டி ஆரதனை செய்தால் அருகினில் ஓடி வருவான் .அன்பு பெருகியே அருள் தருவான்.!!!

    • Uma Chelvan 9:50 pm on December 1, 2013 Permalink | Reply

      மிகவும் நன்றி ” 4 வரி நோட்” குழுவினர்க்கு. ஓர் ” சங்கீத மும்மூர்த்திகள்”. போல நிறைய பாடல்களை பற்றிய அருமையான கருத்துக்கள். நிறைய புது விஷயங்கள் கற்று / தெரிந்து கொண்டேன். “யாம் அறிந்த மொழிகளிலே..தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்றார் பாரதி!!. கம்பனை போல், வள்ளுவனை போல், இளங்கோவை போல், பாரதியை போல்…….. ராஜாவை போல் என்னுமிடத்தில் நிறுத்த விழைகிறேன்/ விரும்புகிறேன்.

    • rajinirams 2:37 am on December 2, 2013 Permalink | Reply

      அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை-கவியரசரின் நெஞ்சை வருடும் வரிகள் போலவே கவிஞர் வைரமுத்துவின் முதல் மரியாதை வரிகள்- ராசாவே வருத்தமா ஆகாயம் சுருங்குமா,ஏங்காதே அத உலகம் தாங்காதே-அடுக்குமா சூரியன் கருக்குமா. அருமையான பாடலின் சிறப்பை விளக்கிய அருமையான பதிவு.

    • Uma Chelvan 8:08 am on December 2, 2013 Permalink | Reply

      காதில் பஞ்சாமிர்தமும், காற்றில் வரும் இசைவிழாவும் ( December Music Season)

      ராகத்தைச் சொல்லி விட்டுப் பாடுவது !!

      இன்னும் கொஞ்சம் இடம் கொடுத்தால், பாடி முடித்ததும், ஒரு வரி அதே ராகத்தில் பிரபலமாகி இருக்கு திரைப்பட இசைப் பாடலை பாடிக் கோடி காட்டி விட்டுத் தொடரலாம். கரகோஷம் அள்ளும்.

      வெகுஜன இசையையும், சம்பிரதாய் இசையையும் இணைத்துப் பாலம் போட்டுக் கொண்டே இருக்கும் இளையராஜா போன்ற இசை மேதைகளுக்கு சபா சங்கீதம் செலுத்தும் மரியாதையாக அது இருக்கும்.

      EraMurukan Ramasami

    • amas32 7:20 pm on December 2, 2013 Permalink | Reply

      பூங்காத்து திரும்புமா அற்புதமான ஒரு பாடல். கேட்டு முடித்த பிறகும் மனதில் ரீங்கரித்துக் கொண்டே இருக்கும்.

      //அடி நீதானா அந்தக் குயில்
      யார் வீட்டுச் சொந்தக் குயில்
      ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
      பறந்ததே ஒலகமே மறந்ததே//

      அருமையான வரிகள்.

      amas32

    • Sudharsan 2:15 pm on December 13, 2013 Permalink | Reply

      Nalla Pathivu. 4varinote arumayana muyarchi.

      Siru Thirutham:
      “பாராட்ட மடியில் வெச்சுத் தாலாட்ட” .

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel