Updates from August, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • என். சொக்கன் 11:43 pm on August 25, 2013 Permalink | Reply  

  நெஞ்சை அள்ளும் முன்னுரை 

  • படம்: மகாநதி
  • பாடல்: ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம்
  • எழுதியவர்: வாலி
  • இசை: இளையராஜா
  • பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், உமா ரமணன், ‘மகாநதி’ ஷோபனா
  • Link: http://www.youtube.com/watch?v=itZ1ESboqOk

  அந்நாளில் சோழ மன்னர்கள் ஆக்கிவைத்தனர் ஆலயம்,

  அம்மாடி என்ன சொல்லுவேன், கோயில் கோபுரம் ஆயிரம்,

  தேனாக நெஞ்சை அள்ளுமே தெய்வப் பூந்தமிழ்ப் பாயிரம்

  வாலியின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று இது. சொந்த ஊரைப்பற்றிய பாடல் என்பதாலோ என்னவோ, மனிதர் ரவுண்டு கட்டி விளையாடியிருப்பார். ஒவ்வொரு சொல்லும் அத்துணை அருமையாக வந்து உட்கார்ந்திருக்கும், ஒன்றை எடுத்துவிட்டு இன்னொன்றை வைப்பது சாத்தியமே இல்லை.

  அச்சுப்பிச்சு தங்கிலீஷ் வரிகளுக்காக வாலிமீது குற்றம் சாட்டுபவர்கள் அவருடைய இதுபோன்ற பாடல்களை ஒருமுறையாவது நிதானமாகக் கேட்கவேண்டும். இப்படியும் எழுதக்கூடியவர்தான் அவர். பிறகு அவர் கொட்டிய குப்பைகளுக்குக் கேட்டவர்கள் பொறுப்பா, எழுதியவர் பொறுப்பா?

  அது நிற்க. நாம் குறை சொல்லாமல் நல்லதைத் தேடி ரசிப்போம், இந்தப் பாடலைப்போல.

  ஸ்ரீரங்கத்தில் தொடங்கினாலும், அங்கே நின்றுவிடாமல், பொதுவாகவே சோழ மண்ணின் வர்ணனையாக அமைந்த பாட்டு இது. அன்றைய ஆலயங்களின் கோபுரங்களை வர்ணித்த கையோடு, அவற்றில் நுழையும்போது கேட்கும் தேவாரம், திருவாசகம், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், திருப்புகழ் போன்ற தெய்வப் பூந்தமிழ்ப் பாடல்களைக் குறிப்பிடுகிறார் கவிஞர்.

  கொஞ்சம் பொறுங்கள், அவர் பாடல்கள் என்று சொல்லவில்லை. ‘பாயிரம்’ என்கிறார். அதற்கு என்ன அர்த்தம்?

  இப்போது எல்லாருக்கும் புரியும்படி சொல்லவேண்டுமானால், ‘முன்னுரை’ அல்லது ‘அறிமுக உரை’ என்று சொல்லலாம். அன்றைய கவிஞர்கள் ஒரு நூல் எழுதினால், அதற்குள் என்ன இருக்கிறது என்று விளக்கும்விதமாகப் ‘பாயிரம்’ என்கிற முன்னுரையைப் பாடல் வடிவிலேயே எழுதிச் சேர்ப்பார்கள். இந்தப் பாயிரத்தை நூலின் ஆசிரியரே எழுதலாம், அல்லது, அவருடைய நண்பரோ, சிஷ்யரோ, குருநாதரோகூட எழுதலாம். வாசகர்களுக்கு நூலைச் சரியாக அறிமுகப்படுத்தவேண்டும். அதுதான் நோக்கம். ஆர்வமுள்ளோர் இந்த இலக்கணத்தை முழுமையாகப் படிக்க இங்கே செல்லுங்கள்: http://365paa.wordpress.com/2012/05/07/306/

  ஆனால் ஒன்று, ஒருவர் வெறுமனே பாயிரத்தைப் படித்தால் போதாது. நூலையும் படிக்கவேண்டும்.

  நிலைமை அப்படியிருக்க, இங்கே வாலி ‘பாயிரம்’ என்ற சொல்லை எடுத்துப் பயன்படுத்தவேண்டிய அவசியம் என்ன? அது ‘ஆயிரம்’க்கு எதுகை, இயைபாக இருக்கிறது என்பதால்மட்டுமா?

  இருக்கலாம். ஆனால் எனக்கு இதை எப்படிப் பார்க்கத் தோன்றுகிறது என்றால், கடவுளைப்பற்றி எத்துணை பாடல்கள் பாடப்பட்டாலும் சரி, அவையெல்லாம் வெறும் பாயிரம்தான், அறிமுகம்தான். அவற்றைப் படித்தால் முழு அனுபவம் கிடைக்காது. கோயிலுக்குள் சென்று இறைவன் முன்னே கை கூப்பி நிற்கும்போது நாம் அடையப்போகும் அந்த உணர்வுதான் நிஜமான கவிதை.

  ***

  என். சொக்கன் …

  25 08 2013

  267/365

   
  • uchelvan 1:35 am on August 26, 2013 Permalink | Reply

   நீர் வண்ணம் எங்கும் மேவிட – நஞ்சை புஞ்சைகள் பாரடி
   ஊர் வண்ணம் என்ன கூறுவேன் – தெய்வ லோகமே தானடி
   வேறெங்கு சென்ற போதிலும் – இந்த இன்பங்கள் ஏதடி

  • rajinirams 9:03 pm on August 26, 2013 Permalink | Reply

   “பாயிரம்”என்றால் பா ஆயிரம் என்று நினைத்துகொண்டிருந்தேன்.தங்கள் விளக்கத்திற்கு நன்றி. கவிஞர் வாலியின் அற்புதமான பாடல்களில் இதுவும் ஒன்று.

  • amas32 6:33 pm on September 2, 2013 Permalink | Reply

   //இருக்கலாம். ஆனால் எனக்கு இதை எப்படிப் பார்க்கத் தோன்றுகிறது என்றால், கடவுளைப்பற்றி எத்துணை பாடல்கள் பாடப்பட்டாலும் சரி, அவையெல்லாம் வெறும் பாயிரம்தான், அறிமுகம்தான். அவற்றைப் படித்தால் முழு அனுபவம் கிடைக்காது. கோயிலுக்குள் சென்று இறைவன் முன்னே கை கூப்பி நிற்கும்போது நாம் அடையப்போகும் அந்த உணர்வுதான் நிஜமான கவிதை.//

   நீங்கள் நான் ட்விட்டர் வந்த புதிதில் சில கோயில்கள் போய் அந்ததந்த கோவில்களின் சிறப்புக்களை ட் வீட்டுக்களாகப் போட்டு வந்தீர்கள். அப்போ நான் வேண்டுதல்/பக்தி பற்றிக் கேட்டேன், எனக்குக் கோவிலின் அழகையும் தல புராணத்தையும் தெரிந்து கொள்ளும் ஆர்வமே அதிகம் என்று பதில் சொல்லியிருந்தீர்கள்.

   மேலே நீங்கள் எழுதியுள்ள வரிகள் உங்கள் உள்ளத்தை எனக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது 🙂
   நல்ல பதிவு!

   amas32

 • mokrish 9:01 pm on May 20, 2013 Permalink | Reply  

  ஆத்தோரம் மணலெடுத்து 

  ஒரு விடுமுறை தின ஸ்பெஷல் கொண்டாட்டமாக குடும்பத்துடன்  கடற்கரையில் ஒரு மாலைப்பொழுது. இதமான காற்று, அந்த குச்சி ஐஸ், பாய் / நாற்காலி என்று ஒரு பிக்னிக் போல வந்திருக்கும் குடும்பங்கள், காதலர்கள், சிலைகள், சுண்டல்  மாங்காய். தூரத்தில் கலங்கரை விளக்கம், இவை எல்லாவற்றையும் விட அழகு குழந்தைகள் பெரியவர்கள் என்று எல்லோரும் மணலில் விளையாடுவதுதான் – வீடு கட்டி, படம் வரைந்து , பெயர் எழுதி என்று பல வித விளையாட்டு.

  மணலில் வீடு கட்டுவதைப் பார்த்தவுடன்  ஒரு பழைய பாடல் நினைவுக்கு வந்தது. கண்ணதாசன் எழுதிய ஆத்தோரம் மணலெடுத்து (படம் வாழ்க்கை வாழ்வதற்கே இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர்கள் லதா, ரமாமணி) என்ற பாடல்.  http://www.youtube.com/watch?v=Ik38lU80tMg ஒரு சிறுவனும் சிறுமியும் வீடு கட்டும் கனவோடு பாடும் வரிகள்.

  ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி…

  தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருப்போம்…

  வெய்யிலிலே குளிர்ந்திருக்கும்

  கையகலம் கதவிருக்கும் காற்றுவர வழியிருக்கும்…

  வழி மேலே விழியிருக்கும் வந்தவர்க்கெல்லாம் இடமிருக்கும்…

  எளிமையான வாழ்வுக்கு வகை செய்யும் ஒரு functional வீடு. சுற்றி கொஞ்சம் தோட்டம். வெயிலின் வெளிச்சம் வரும் – வெப்பம் வராமல். காற்று வரும். Guest space is in the hearts என்பது போல் வந்தவர்க்கெல்லாம் இடமிருக்கும். குழந்தைப்பருவத்தின் சிக்கலற்ற மனம் இப்படித்தான் யோசிக்கும். அருமை

  ஆனால் வளர்ந்தபின் வரும் கற்பனை எப்படியிருக்கிறது? கண்ணன் வருவான் என்ற படத்தில் வாலி எழுதிய நிலவுக்கு போவோம் இடமொன்று பார்ப்போம் என்ற பாடல் ( இசை சங்கர்-கணேஷ் பாடியவர்கள் TMS , பி சுசீலா) http://www.youtube.com/watch?v=vIFM4-6yWTU

  நிலவுக்கு போவோம் இடமொன்று பார்ப்போம்

  மாளிகை அமைப்போம் மஞ்சத்தில் இருப்போம்

  நடக்க முடியாத கற்பனை. மனிதன் நிலவில் காலடி வைத்தவுடன் கவிஞருக்கு தோன்றிய வரிகள். காதலர்கள் நிலவில் வாழ்ந்து பூமி பார்க்க இறங்கி வருவார்களாம்.

  மெல்ல பேசுங்கள் என்ற படத்தில் செவ்வந்தி பூக்களில் செய்த வீடு என்ற புலமைப்பித்தனின் பாடலும் காதல் மயக்கத்தில் வரும் கவிதைதான்  (இசை இளையராஜா பாடியவர்கள் தீபன் சக்கரவர்த்தி, உமா ரமணன் )

  https://www.youtube.com/watch?v=w_iKhaN3rLk (

  ‘செவ்வந்திப்பூக்களில் செய்த வீடு

  வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு

  வானவில்லில் அமைப்போம் தோரணம்

  வண்டு வந்து இசைக்கும் நாயனம்

  இதுவும் நடக்காத விஷயம்தான். அழகாக ஒரு கற்பனை. அவ்வளவுதான். குழந்தைகளாக இருக்கும்போது இருக்கும் தெளிவும் எளிமையும் practical சிந்தனையும் வளர்ந்தபின் இருப்பதில்லையோ? மணலில் வீடு கட்டி விளையாடுவது மீண்டும் குழந்தைகளாகும் முயற்சியா? அப்படியாவது இழந்த innocence திரும்ப கிடைக்கும் என்ற நம்பிக்கையா?

  மோகனகிருஷ்ணன்

  171/365

   
  • rajnirams 10:44 am on May 21, 2013 Permalink | Reply

   மிக வித்தியாசமான பதிவும்,பாடல்களும். அருமை.

  • GiRa ஜிரா 9:44 pm on May 21, 2013 Permalink | Reply

   ஆசைகள் எப்படியெல்லாம் மாறுது பாருங்க. மனிதனுக்கு எப்பவும் பொம்மை வெச்சு விளையாட ஆசை இருக்கும்.

   சின்ன வயசுல குட்டிக் குட்டி பொம்மைகளை வெச்சி விளையாட ஆசை வரும்.
   அதுவே கொஞ்சம் வளந்தா தோழன்/தோழி என்னும் பொம்மையை உடன் விளையாடக் கேட்கும்.
   வயது வந்த பிறகு காதலன்/காதலி என்னும் பொம்மையைத் துணையாகக் கேட்கும்.
   அதற்குக் கொஞ்ச நாள் கழிச்சு குழந்தைங்கிற பொம்மை கேட்கும்
   வயதான பிறகும் தெய்வம் என்னும் பொம்மையைக் கேட்கும்.

   அது மாதிரிதான் நீங்க சொல்லியிருக்கிறதும். முதல்ல மணல் வீடு.. போகப் போக நிலவிலேயே வீடு 🙂

  • amas32 10:54 pm on May 22, 2013 Permalink | Reply

   மோகனின் பதிவுக்கு உங்க பொழிப்புரை அருமை gira 🙂

   வயதுக்குத் தகுந்த மாதிரி ஆசைகள் மாறுகின்றன. ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி என்ற பாடலை நான் அன்று கேட்ட பொழுது இவ்வளவு சிந்தித்துப் பார்த்ததிலை. எனக்கு அப்போ தோன்றியது பீச்சில் மணல் வீடு கட்டி விளையாடும் மகிழ்ச்சியான அனுபவம் தான். இன்றும் மனத்தில் தோன்றுவது அது தான் 🙂 என்ன ஒரு இனிமையான காலம் அது! மணல் வீடு கட்டி அதன் மேல் கொடி நட்டு, கிளிஞ்சல்கள் வைத்து அழகு படுத்தி அடித்து வரும் அலைகள் அழித்துவிடாமல் இருக்கவேண்டுமே என்ற கவலையோடு பீச்சை விட்டுக் கிளம்புவது, இதுவே என் நினைவுகள் :-))

   amas32

 • G.Ra ஜிரா 11:17 am on April 10, 2013 Permalink | Reply
  Tags: சிவன், சுந்தரர், திருஞானசம்பந்தர், திருமுறைகள்   

  தேவாரம் 

  தமிழின் பெருமை சொல்லி முடிவதுமல்ல. சொல்லில் முடிவதுமல்ல. ஆனாலும் கோயில்புறா திரைப்படத்துக்காக புலவர் புலமைப்பித்தன் சொல்லெடுத்து பாடலொன்று எழுத வேண்டி வந்தது. மிகமிக அரிய இனிய பாடலாகவும் காலத்தால் நிலைக்கின்றதாகவும் அந்தப் பாடல் உருவெடுத்தது.

  அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
  ………………
  தேனூறும் தேவாரம் இசைப்பாட்டின் ஆதாரம்
  தமிழிசையே தனியிசையே தரணியிலே முதலிசையே
  ஊன் மெழுகாய் உருகும் கரையும் அதிலுலகம் மறந்து போகும்
  படம் – கோயில்புறா
  பாடல் – புலவர் புலமைப்பித்தன்
  பாடியவர்கள் – இசையரசி பி.சுசீலா, உமா ரமணன்
  நாதசுரம் – கே.பி.என்.சேதுராமன், கே.பி.என்.பொன்னுச்சாமி
  இசை – இசைஞானி இளையராஜா
  பாடலின் சுட்டி – http://youtu.be/errR7iLYuuU

  இந்தப் பாட்டில் தேவாரத்தின் பெருமையை உறைக்கு விடும் மோர்த்துளி போல் புலமைப்பித்தன் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார். அந்த மோர்த்துளி விட்டு உறைந்த பெரும்பானைத் தயிராக தேவாரத்தின் பெருமைகளை நாம் இந்தப் பதிவில் காணலாம்.

  பெரும்பாலும் தேவாரம் என்பது சிவனார் மீது பாடப்பட்ட பாடல்கள் என்று தெரிந்திருப்போம். ஆனால் அந்தப் பெயருக்குப் பொருள் என்ன? அதைப் பாடியது யார்? அவை பற்றிய தகவல்கள் என்னென்ன?

  தே + ஆரம் = தேவாரம். தே என்றால் இனிய என்று பொருள் உண்டு. தேநீர் என்று சொல்கிறோமல்லவா. அதே போல தே என்றால் அருள் என்றும் ஒரு பொருள் உண்டு. ஆரம் என்றால் மாலை. ஆண்டவனின் அருளைப் பெற்றுத்தரும் பாமாலை என்று பெயர்க்காரணம் இருக்கிறது. இனிய (பா)மாலை என்று எடுத்துக் கொண்டாலும் பொருத்தமே.

  இன்றைக்கு தேவாரம் என்பது சைவர்கள் மூவர் பாடியவைகளாகக் கருதப்படுகிறது. மூவர் என்றால் யார் யார்? அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர். இவர்கள் பாடியவை தேவாரம் என்று தொகுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் முதன்முதலில் திருநாவுக்கரசர் எனப்படும் அப்பரடிகள் பாடியதே தேவாரம். சம்பந்தர் பாடியது திருக்கடைக்காப்பு. சுந்தரர் பாடியது திருப்பாட்டு.

  அப்பர் பாடிய தேவாரப் பதிகங்கள் மக்களிடம் மிகப்பிரபலமாகி சம்பந்தரும் சுந்தரரும் பாடிய பதிகங்களுக்கும் கூட தேவாரம் என்று பெயர் வந்துவிட்டது.

  இந்தப் பாடல்களைப் பின்னாளில் நம்பியாண்டார் நம்பி திருமுறைகளாகத் தொகுத்தார். சைவ மூவர்களின் பாடல்கள் மொத்தம் ஏழு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. இவை அத்தனைக்கும் பொதுப்பெயராக தேவாரம் நின்று நிலைத்துவிட்டது. இது அப்பரடிகளுக்கே பெருமை.

  முதலாம் திருமுறை = திருஞானசம்பந்தரின் திருக்கடைக்காப்பு = 1469 பாடல்கள்
  இரண்டாம் திருமுறை = திருஞானசம்பந்தரின் திருக்கடைக்காப்பு = 1331 பாடல்கள்
  மூன்றாம் திருமுறை = திருஞானசம்பந்தரின் திருக்கடைக்காப்பு = 1346 பாடல்கள்
  நான்காம் திருமுறை = திருநாவுக்கரசரின் தேவாரம் = 1060 பாடல்கள்
  ஐந்தாம் திருமுறை = திருநாவுக்கரசரின் தேவாரம் = 1015 பாடல்கள்
  ஆறாம் திருமுறை = திருநாவுக்கரசரின் தேவாரம் = 980 பாடல்கள்
  ஏழாம் திருமுறை = சுந்தரரின் திருப்பாட்டு = 1026 பாடல்கள்

  சரி. பதிகம் என்கிறோமே, அப்படியென்றால் என்ன? இறைவனின் புகழைப் பாடும் பத்து பாடல்களின் தொகுப்பு ஒரு பதிகம். ஆனால் திருஞானசம்பந்தரின் பதிகத்தில் மட்டும் பதினோரு பாடல்கள் இருக்கும். ஏன்? பத்து பாடல்களைக் கொண்ட பதிகத்தைப் படிப்பதனால் உண்டாகும் பலனைப் பதினோராம் பாட்டில் வைத்தார் திருஞானசம்பந்தர்.

  இன்னொரு தகவல். இந்தப் பதிகங்கள் தொகுக்கப்பட்டவை என்பது தெரியும். இவைகளைப் பண்முறையாகவும் தலமுறையாகவும் தொகுக்கப்பட்டன? அதென்ன?

  மூவர் பாடிய பதிகங்கள் பலப்பல திருத்தலங்களில் பாடப்பட்டவை. பண் என்பது தமிழிசையைக் குறிப்பது. வடமொழியில் இராகம் என்கிறார்களே, அதுதான் பைந்தமிழில் அதுதான் பண்.

  ஒரே பண்ணில் பாடப்பட்ட பாடல்களாகத் தொகுத்தால் அது பண்முறைத் தொகுப்பு. பாடப்பட்ட தலங்களை வைத்துத் தொகுத்தால் அது தலமுறைத் தொகுப்பு.

  மூவரின் தேவாரங்களில் இருந்து ஒவ்வொரு பாடலைக் கீழே கொடுத்துள்ளேன். இந்தப் பாடல்களை வாயால் பாடி மனதினால் சிந்தித்து அருளின்பம் பெருகட்டும்.

  திருநாவுக்கரசர்
  மாசில் வீணையும் மாலை மதியமும்
  வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
  மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
  ஈசன் எந்தை இணையடி நீழலே

  திருஞானசம்பந்தர்
  தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
  காடுடைய சுடலைப்பொடி பூசி என் உள்ளங்கவர் கள்வன்
  ஏடுடைய மலரான் உனை நான் பணிந்தேத்த அருள் செய்த
  பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே

  சுந்தரர்
  பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா
  எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
  வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்
  அத்தா உனக்காளாயினி அல்லேன் எனலாமே

  இப்படியான சிறப்புடைய பதிகங்களை உள்ளத்தில் நிறுத்தி உதட்டில் உச்சரித்து உயிரோடு சேர்த்து உருக்கிவிட்டால் ஈசனருள் உறுதி. தெய்வத் தமிழ் தேவாரம் போற்றி! போற்றி!

  திருச்சிற்றம்பலம்

  அன்புடன்,
  ஜிரா

  130/365

   
  • சிவா கிருஷ்ணமூர்த்தி 3:12 pm on April 10, 2013 Permalink | Reply

   ஜீராவில் ஊறினால் எதுதான் இனிக்காது? தேவாரமோ ஏற்கனவே குலோஜாமூன்…கேட்கவேண்டுமா?!
   பிரமாதம்…தொடருங்கள்!

   • GiRa ஜிரா 9:16 pm on April 11, 2013 Permalink | Reply

    தீந்தமிழ் மறையாகிய தேவாரப் பண்களைப் பத்திச் சொல்லாம இருக்கத்தான் முடியுமா? இன்னும் நெறையவே சொல்லலாம். இது நாலுவரி நோட்டு. அதுனால அளவான அறிமுகம் 🙂

  • amas32 10:12 pm on April 10, 2013 Permalink | Reply

   /அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே/ அனைத்தையும் ஒரு வரியில் சொல்லிவிடுகிறாரே கவிஞர்!

   /அந்த மோர்த்துளி விட்டு உறைந்த பெரும்பானைத் தயிராக தேவாரத்தின் பெருமைகளை நாம் இந்தப் பதிவில் காணலாம்./ சூப்பர் ஜிரா!

   உங்களை என் நண்பராக அடைந்ததற்கு மிகவும் பெருமைப் படுகிறேன். எவ்வளவு அழகாவும், விவரமாகவும், சுங்கச் சொல்லியும் விளக்குகிறீர்கள். கடவுள் அருளால் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மூன்று பதிகங்களும் நான் அறிந்தவை. அதில் ரொம்ப மகிழ்ச்சி 🙂

   எல்லா வளமும் பெற்று நீங்கள் மகிழ்ச்சியுடன் வாழ என் வாழ்த்துகள்.

   amas32

   • GiRa ஜிரா 9:18 pm on April 11, 2013 Permalink | Reply

    வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அம்மா. 🙂 இது போன்ற வாழ்த்துகள் இன்னும் சிறப்பாக எழுத வேண்டும் என்ற ஊக்கத்தைக் கொடுக்கின்றன.

  • Saba-Thambi 10:55 am on April 14, 2013 Permalink | Reply

   அருமையான கட்டித் தயிர்! வளர்க உங்கள் எழுத்து.

 • என். சொக்கன் 10:33 am on January 10, 2013 Permalink | Reply  

  சுருக்கமான விளக்கம் 

  • படம்: டூயட்
  • பாடல்: என் காதலே, என் காதலி
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
  • பாடியவர்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
  • Link: http://www.youtube.com/watch?v=stBDLmlW5EI

  அமுதென்பதா?

  விஷம் என்பதா? உன்னை

  அமுத விஷம் என்பதா?

  சமீபத்தில் ஒருநாள், மதிய நேரம், சாப்பிட உட்கார்ந்தவனிடம், ‘தாகம் எடுக்குற நேரம்ன்னு ஒரு பாட்டு கேட்டிருக்கியா?’ என்றார் மனைவியார்.

  ’இல்லையே, இப்போ எனக்குப் பசி எடுக்குற நேரம்’ என்றேன்.

  ’எனக்காகக் காத்திருன்னு ஒரு படத்துல அந்தப் பாட்டு வருது, இப்பதான் ஏதோ ஒரு கேஸட்ல கேட்டேன்’ என்றார் அவர். ‘அந்தப் பாட்டை எழுதினது யார்ன்னு கொஞ்சம் கண்டுபிடிச்சுச் சொல்லேன்.’

  ’ஏன்? என்ன விஷயம்?’

  ‘அதை அப்புறமாச் சொல்றேன்’ என்று சஸ்பென்ஸ் வைத்தார். நானும் சாப்பிட்டு முடித்துவிட்டு கூகுளைப் புரட்டி அந்தப் பாடலைப் பிடித்தேன். இளையராஜா இசையில் வைரமுத்து எழுதி உமா ரமணன் பாடியது.

  ’வைரமுத்து’ என்றவுடன் மனைவியார் முகம் வாடிவிட்டது, ‘ச்சே!’ என்றார்.

  ‘எச்சூச்மீ, வைரமுத்துமேல உனக்கு என்ன அப்படி ஒரு கோவம்?’

  ‘கோவமெல்லாம் இல்லை. இந்தப் பாட்டு வேற யாராச்சும் எழுதியிருந்தாங்கன்னா உனக்கு ஒரு சூப்பரான மேட்டர் சொல்லியிருப்பேன்’ என்றார்.

  ’இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகலை, சொல்லு, கேட்கறேன்.’

  ‘தாகம் எடுக்குற நேரம் பாட்டுல ஒரு வரி வருது: காதல் அமுதமா, விஷமுமா, இல்லை அமுத விஷமா?’

  ‘அட, இதே வரி டூயட்ல ஒரு பாட்டுலயும் வருதே.’

  ’அதான் மேட்டர்’ என்றார் மனைவியார், ‘எனக்காகக் காத்திரு பாட்டுல இந்த வரியை எழுதியிருக்கார் வைரமுத்து, அந்தப் பாட்டு அவ்வளவாப் பிரபலமாகலை, யாரும் கவனிக்கலையேங்கற ஆதங்கத்துல, பல வருஷம் காத்திருந்து, மறுபடி அதையே பயன்படுத்தியிருக்கார், இப்போ க்ளிக் ஆகிடிச்சு!’

  அது நிற்க. ’அமுத விஷம்’ என்பது, தமிழ் இலக்கணப் பதமாகிய ‘முரண் தொடை’க்கு மிக நல்ல உதாரணம்.

  உடனே ரம்பாவின் யூட்யூப் வீடியோக்களைத் தேடாதீர்கள், ‘தொடை’ என்றால் தொடுப்பது, அமுதம், விஷம் என ஒன்றுக்கொன்று முரண்பட்ட இரண்டு பதங்களைச் சேர்த்துத் தொடுப்பதால் இது ‘முரண் தொடை’.

  கம்பர்கூட அமுதத்தையும் விஷத்தையும் சேர்த்துத் தொடுத்திருக்கிறார், சீதையின் கண்களுக்கு உவமையாக: ‘நஞ்சினோடு அமுதம் கூட்டி நயனங்கள்’!

  ***

  என். சொக்கன் …

  10 01 2013

  040/365

   
  • Erode Nagaraj 11:37 am on January 10, 2013 Permalink | Reply

   என் அத்திம்பேர் எவரையேனும் வைய, அட மனிதமிருகமே என்பார் 🙂 oxymoron என்று எழுதியிருந்தால் தங்கீளீஷேயர்களுக்கு எளிதில் விளங்கியிருக்குமோ எனத் தோன்றியது. (காளை மாட்டுக்கு பெண் பெயர் வத்தாற்போல் அது என்ன ox-simran?)

   • Erode Nagaraj 11:38 am on January 10, 2013 Permalink | Reply

    என் அத்திம்பேர் எவரையேனும் வைய, அட மனிதமிருகமே என்பார் oxymoron என்று எழுதியிருந்தால் தங்கீளீஷேயர்களுக்கு எளிதில் விளங்கியிருக்குமோ எனத் தோன்றியது. (காளை மாட்டுக்கு பெண் பெயர் வைத்தாற்போல் அது என்ன ox-simran?)

    • என். சொக்கன் 11:40 am on January 10, 2013 Permalink

     எழுதும்போதே ஆக்ஸிமோரன் ஞாபகம் வந்தது, அதைச் சொல்லி இதை விளக்குவது நியாயமாகப் படவில்லை 🙂

  • msathia 12:31 am on January 11, 2013 Permalink | Reply

   கண்களுக்கு அமுத விஷம் உவமை இன்னும் ஓஹோ..

  • amas32 (@amas32) 2:55 pm on January 13, 2013 Permalink | Reply

   கீதையில் சாத்விக செயல்களை (நற்செயல்கள்) நஞ்சு போல தெரியும் ஆனால் முடிவில் அதுவே அமுதமாக இருக்கும் என்று கிருஷ்ண பரமாத்மா சொல்லியிருக்கிறார். ஆனால் ராஜச செயல்களோ முதலில் அமுதைப் போல இருந்தாலும் முடிவில் நச்சுத் தன்மையையே தரும் என்கிறார். இந்தப் பாடலில் வரும் அமுத விஷம் என்பது இரண்டாவது வகையைச் சேர்ந்தது போல தான் எனக்குத் தோன்றுகிறது. 🙂

   amas32

 • என். சொக்கன் 11:13 am on January 7, 2013 Permalink | Reply  

  அன்னமே! 

  • படம்: பாண்டி நாட்டுத் தங்கம்
  • பாடல்: ஏலேலக்குயிலே
  • எழுதியவர்: கங்கை அமரன்
  • இசை: இளையராஜா
  • பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், உமா ரமணன்
  • Link: http://www.youtube.com/watch?v=C3FKJg4qEo8

  ஏலேலக்குயிலே, ஏலமலை வெயிலே,

  ஆலோலம் பாடும் அன்னமே, ஒயிலே,

  வாடாத வாழைக் குருத்தே, மானே,

  வாரேனே மாமன் நானே!

  இந்தப் பாடலின் கதாநாயகியை ’ஆலோலம் பாடும் அன்னம்’ என்று பாராட்டுகிறார் கங்கை அமரன், அவருக்கு முன்னோடி, உண்மையான ‘ஆலோலம் பாடிய அன்னம்’, முருகனின் நாயகி, வள்ளி.

  வயலில் தானியங்கள் விளைந்து நிற்கும் நேரம், அவற்றைத் தின்பதற்காகப் பலவகைப் பறவைகள் வரும். அவற்றை அடித்து விரட்டுவதும் தவறு, அதற்காக அவை அங்கேயே தங்கி நிறையச் சாப்பிடுவதற்கு அனுமதித்தாலும் அறுவடையில் குறைபாடு வரும். ஆகவே, அந்த வயலைக் காவல் காக்கும் பெண்கள் பாட்டுப் பாடி அவற்றை மெல்ல விரட்டுவார்களாம். அந்தப் பாடல் வகைதான் ‘ஆலோலம்’ என்று அழைக்கப்படுகிறது.

  கந்த புராணத்தில் வள்ளியம்மை திருமணப் படலம், தினை வயலில் இருக்கும் வெவ்வேறு பறவைகளை ஆலோலம் பாடி விரட்டுகிறார் வள்ளி. அந்தப் பாடல்:

  ’பூவைகாள், செங்கண் புறவங்காள், ஆலோலம்!

  தூவி மா மஞ்ஞைகாள், சொல் கிளிகாள், ஆலோலம்!

  கூவல் சேர்வுற்ற குயில் இனங்காள், ஆலோலம்!

  சேவல்காள் ஆலோலம்’ என்றாள் திருந்து இழையாள்!

  அதாவது, ‘மைனாக்களே, சிவந்த கண்களைக் கொண்ட புறாக்களே, சிறந்த தோகையைக் கொண்ட மயில்களே, பேசும் கிளிகளே, கூவும் குயில்களே, சேவல்களே, உங்களுக்கெல்லாம் ஆலோலம் பாடுகிறேன், லேசாகக் கொறித்துவிட்டுப் பறந்து செல்லுங்கள்’ என்றாள் திருத்தமான ஆபரணங்களை உடுத்திய வள்ளி.

  அது சரி, ‘ஆலோலம்’ என்றால் என்ன அர்த்தம்?

  ‘அகல ஓலம்’ என்பதுதான் பின்னர் ‘ஆலோலம்’ என்று மாறிவிட்டதாகச் சொல்லிறார்கள். ‘ஓலம்’ என்றால் சத்தமாகக் கத்துதல், அகலம் என்றால்? வயல் முழுவதும் தங்கள் குரல் பரந்து விரிந்து கேட்கும்படி பாடுவதால் அப்படிச் சொல்கிறார்களா? உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.

  ***

  என். சொக்கன் …

  07 01 2013

  037/365

   
  • Saba-Thambi 1:05 pm on January 7, 2013 Permalink | Reply

   ‘ஆலோலம்’ என்பதின் மற்றொரு அர்த்தம் – நீரோடும் ஒலி (murmuring sound of running water)
   (மூலம் – லிப்கோ தமிழ் – தமிழ் -ஆங்கிலப் பேரகராதி)

   • என். சொக்கன் 3:58 pm on January 7, 2013 Permalink | Reply

    நன்றி 🙂

  • amas32 (@amas32) 3:08 pm on January 13, 2013 Permalink | Reply

   Aaahh I love this post 🙂 reminds me of #365paa!

   கிராமத்து வாழ்க்கை வாழ்ந்தவருக்கே இந்த சொல் பிரயோகங்கள் அழகாகப் புகுத்த முடியும். அதற்கு கங்கை அமரனுக்கு நன்றி 🙂

   amas32

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel