Updates from November, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • என். சொக்கன் 9:07 pm on November 2, 2013 Permalink | Reply  

  சின்னஞ்சிறு பெண் போலே! 

  • படம்: வண்ணக்கிளி
  • பாடல்: சித்தாடை கட்டிக்கிட்டு
  • எழுதியவர்: மருதகாசி
  • இசை: கே. வி. மகாதேவன்
  • பாடியவர்கள்: S. C. கிருஷ்ணன், P. சுசீலா
  • Link: http://www.youtube.com/watch?v=zAZfkh7H6PI

  முத்தாத அரும்பெடுத்து,

  முழம்நீள சரம் தொடுத்து,

  வித்தாரக் கள்ளி கழுத்தில்

  முத்தாரம் போட்டானாம்!

  ’முத்தாரம்’ என்ற சொல் எல்லாருக்கும் தெரியும், முத்து + ஆரம், முத்துகளால் ஆன மாலை. இங்கே, முற்றாத (மல்லிகை அல்லது முல்லை) அரும்புகளைத் தொடுத்து முத்து மாலைபோல் காதலியின் கழுத்தில் போடுகிறான் காதலன்.

  அதுவும் எப்படிப்பட்ட காதலி? ’வித்தாரக் கள்ளி’யாம்!

  அதென்ன வித்தாரம்? வித்து + ஆரம்? விதைகளைத் தொகுத்த மாலையா?

  இந்தச் சொல்லை நாம் பேச்சில் அதிகம் பயன்படுத்துவதில்லை. பாடல்களில் கேட்டிருக்கிறேன், ’வித்தாரக் கவி’ என்று சிலரைச் சொல்வார்கள். ‘வித்தாரக் கள்ளி வெறகொடிக்கப் போனாளாம், கத்தாழை முள்ளு கொத்தோட வந்துச்சாம்’ என்று ஒரு பழமொழி உண்டு.

  இதே சொல்லின் வடமொழி வடிவமான ‘விஸ்தாரம்’ நமக்கு நன்றாகத் தெரியும். ஒருவர் விரிவாக எதையாவது பேசினால், ‘நன்கு விஸ்தாரமா விளக்கறார்’ என்போம்.

  இங்கேயும் அதே அர்த்தம்தான், ‘வித்தாரக் கள்ளி’ என்றால், வாயைத் திறந்தால் நிறுத்தமாட்டாள், பேசிக்கொண்டே இருப்பாள் என்று பொருள்.

  மருதகாசி ரொம்பக் குறும்பான மனிதர்தான். புகழ்வதுபோல் காதலியை ‘வாயாடி’ என்று சொல்லிவிட்டாரே!

  ஆனால், காதலில் உள்ளவர்களுக்கு அவள் பேசும் சிறு சொல்லும் இன்பமாகவே இருக்கும். ’Sweet Nothings’ என்று புகழ்வார்கள். ஆகவே, அவள் நிறைய பேசும் வித்தாரக் கள்ளி என்றால் இன்னும் சந்தோஷம்தான்!

  Jokes Apart, ’வித்தாரம்’ என்பது வளவளா என்று வாய்க்கு வந்ததைப் பேசுவதல்ல. ஒரு விஷயத்தைப்பற்றி ஆழமாகவும் விரிவாகவும் பேசுவது. அதனால்தான் ‘வித்தாரக் கவி’ என்பது பெருமையாகச் சொல்லப்படுகிறது. ஆகவே, நாம் ‘வித்தாரக் கள்ளி’யையும் பெருமையான வர்ணனையாகவே எடுத்துக்கொள்ளலாம்!

  ***

  என். சொக்கன் …

  02 11 2013

  335/365

   
  • Uma Chelvan 3:33 am on November 3, 2013 Permalink | Reply

   I thought ’வித்தாரம்’ means clever or very smooth (local slang). Thanks for the clarification. ::))))

  • amas32 8:03 pm on November 4, 2013 Permalink | Reply

   நானும் பெண்ணானதால் அப்படியே எடுத்துக் கொள்வோம் 😉 வித்தகக் கவிஞர் என்று பா.விஜய்க்கு பட்டம் கொடுத்தார் கலைஞர். வித்தாரக் கவிஞர் என்று வேறு யாராவது ஒரு கவிஞருக்குப் பட்டம் கொடுக்கலாம் போல :-))

   amas32

 • G.Ra ஜிரா 1:24 pm on September 29, 2013 Permalink | Reply  

  ஒரு துளி தேன்! 

  ஒரு மிகப்பிரபலாமான கதை. கண்டிப்பாக எல்லாருக்கும் தெரிந்திருக்கும்.

  ஒருவன் காட்டு வழியே சென்றான். திடீரென்று பெண் சிங்கமொன்று துரத்தியது. தப்பிக்க ஓடினான். ஆலமரம் ஒன்று வழியில் வந்தது. அதன் விழுதைப் பிடித்து ஏறினான். பாதி விழுது ஏறும் போதுதான் மரத்திலிருந்த மலைப்பாம்பைக் கவனித்தான். மேலே போனால் பாம்பு. கீழே இறங்கிலாம் பெண் சிங்கம்.

  தப்பிக்க வழியில்லாமல் அந்த விழுதில் தொங்கினான். அப்போது ஆலமரத்திலிருந்த தேன்கூட்டிலிருந்து தேன் சொட்டியது. அந்தத் துளி நாக்கில் விழுந்ததும் அவன் அதை ரசித்து ருசித்தான்.

  அந்த மனிதனின் நிலமைக்குப் பெயர்தான் வாழ்க்கை. பிறப்பும் எளிதில்லை. வாழ்வும் எளிதில்லை.

  ஆனால் அந்த ஒரு துளி தேனைச் சுவைக்கும் போது மலைப்பாம்பையும் பெண்சிங்கத்தையும் அவன் மறந்தது போல சிற்சில இன்பங்களில் வாழ்வியல் துன்பங்களை நாம் மறந்திருக்கிறோம்.

  இந்த உண்மை நமக்குப் புரிந்தால் நாம் அமைதியாவோம். முடிந்தவரை நல்லவராவோம்.

  புரியாதவர்கள் ஆடித் தீர்த்து விடுவார்கள். எதெற்கெடுத்தாலும் பிரச்சனை. எல்லாவற்றிலும் தவறு. அடுத்தவருக்கு முடிந்த வரை நேரடியாகவும் மறைமுகமாகவும் தொல்லை கொடுத்தல். கொள்ளையடித்தல். கொலை செய்தல். அரசியல் பிழைத்தல். வஞ்சகம் செய்தல். இன்னா செய்தல். நாவினால் சுடுதல். அமைதியைக் குலைத்தல். நீர்நிலைகளைக் கெடுத்தல். இயற்கையை அழித்தல். குழந்தைகளைத் துன்புறுத்துதல். இன்னும் எத்தனையெத்தனையோ தவறுகள்.

  ஆடித் தீர்த்துவிடுகிறது மக்கள் கூட்டம். ஆனால் எதுவும் தொடர்வதில்லை. ஒரு நாளில்.. ஒரு நிமிடத்தில்… அல்ல அல்ல. ஒரு நொடியில் அந்த ஆட்டம் அமைதியாகி விடுகிறது.

  ஆடி அடங்கும் வாழ்க்கையடா” என்று எழுதினார் உவமைக் கவிஞர் சுரதா. அத்தனை ஆட்டங்களும் அடங்குவதற்குத் தேவை ஒரேயொரு நொடிதான் என்பது மனிதனின் மிகப்பெரிய பலவீனம்.

  அந்த பலவீனத்தினால் உண்டாவது அச்சம். இறப்பின் மீதான அச்சம். அந்த அச்சம் ஏழைகளுக்கு மட்டும் வருவதல்ல. வேறுபாடே இல்லாமல் அரசன் முதல் ஆண்டி வரைக்கும் வியாபாரி முதல் விவசாயி வரைக்கும் வருவதுதான்.

  யோகிக்கும் உண்டு அந்த அச்சம். அச்சத்தைப் போக்கவும் மறைக்கவும் அவன் செய்வதுதான் யோகம். அதையே போகி வேறுவிதமாகச் செய்கிறான். போகத்தில் தன்னை மறைத்து இறப்பின் அச்சத்தைத் தள்ளிப் போடுகிறான்.

  அந்த அச்சம் இறப்பின் மீது மட்டுமல்ல… அது தொடர்பான அனைத்தின் மீதும் உண்டாகிறது.

  உலகத்திலேயே மிக மிக அமைதியான இடம் ஒன்று உண்டு. அங்கு சண்டை இல்லை. சச்சரவு இல்லை. மேலோர் இல்லை. கீழோர் இல்லை. செல்வந்தன் இல்லை. ஏழை இல்லை. எந்தப் பிரச்சனையுமே இல்லாத அமைதியான இடம் அது.

  ஆம். இடு/சுடுகாடுதான் அது. அங்கு யாரையாவது தனியாகப் போகச் சொல்லுங்கள். போகவே மாட்டார்கள். அந்த இடத்தைப் பற்றி கவிஞர் மருதகாசி அழகாக எழுதினார் ரம்பையின் காதலுக்காக படத்தில். பாடலுக்கு இசையமைத்தவர் டி.ஆர்.பாப்பா.

  சமரசம் உலாவும் இடமே
  நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே

  அமைதியே இல்லாமல் ஓயாமல் சிந்தித்துச் சிந்தித்துக் குழப்பிக் கொண்ட எத்தனையோ உள்ளங்கள் அமைதியானது அங்குதான்.

  ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் தீயோரென்றும் பேதமில்லாது
  எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
  தொல்லையின்றினே தூங்கிடும் வீடு
  ஆண்டி எங்கே அரசனும் எங்கே ஆண்டி எங்கே அரசனும் எங்கே
  அறிஞன் எங்கே அசடனும் எங்கே அறிஞன் எங்கே அசடனும் எங்கே
  ஆவி போன பின் கூடுவார் இங்கே ஆவி போன பின் கூடுவார் இங்கே
  சேவை செய்யும் தியாகி ஸ்ருங்கார போகி
  ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
  எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே
  நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே

  மனித வாழ்வில் இல்லாத அமைதியும் ஒற்றுமையும் பாகுபாடின்மையும் நிலவுவது அந்த ஒரு இடத்தில்தான்.

  சரி. இந்தப் பதிவைப் படிக்கும் போதே மனம் இவ்வளவு அமைதியாகிறதே… ஒரு மெல்லிய சோகம் மனதில் படிகிறதே. அப்படியிருக்க இந்த அச்சத்தை எப்படி வெல்வது? வெற்றி கொள்வது?

  புத்தபிக்குகள் எப்போதும் சோகமாக இருப்பார்களாம். ஏன்? பின்னால் நிகழப் போவதுக்கு முன்னாலேயே சோகம் அனுபவிப்பார்கள். துறவிகள் அனைத்தையும் துறந்து தவம் செய்யப் போய்விடுவார்கள்.

  நாமும் அப்படிச் சோகமாக இருக்கத்தான் வேண்டுமா? துறவு கொள்ளத்தான் வேண்டுமா? வேறுவழியே கிடையாதா? ஆண்டவனுடைய திருவடியைப் பற்ற வேண்டும் என்று எல்லா மதங்களும் சொல்கின்றன.

  காலக்கணக்கை முடிப்பதற்கு காலன் வந்தால் தானே அச்சம் வரும். ஆண்டவனே வந்தால்?

  எத்தனையோ யோகிகளும் சித்தர்களும் முனிவர்களும் காணக்கிடைக்காத அந்த அருட்பெருஞ்சோதியே வந்தால்?

  அப்படி ஒரு வழியைத்தான் அருணகிரியும் சொல்லிக் கொடுக்கிறார்.

  பாதி மதிநதி போது மணிசடை
  நாத ரருளிய குமரேசா
  பாகு கனிமொழி மாது குறமகள்
  பாதம் வருடிய மணவாளா
  காலன் எனை அணுகாமல் உனதிரு
  காலில் வழிபட அருள்வாயே

  அன்புடன்,
  ஜிரா

  302/365

   
  • rajinirams 2:55 pm on September 29, 2013 Permalink | Reply

   வாழ்வியல் தத்துவத்தை எளிமையாகவும் அழகாகவும் எடுத்து “காட்டு”ம் அருமையான பதிவு. “சமரசம் உலாவும் இடமே”-மருதகாசியின் என்ன அறுபுதமான வரிகள்.முகராசி படத்தில் இடம்பெறும் கவியரசரின் வரிகளும் அருமையாக இருக்கும்-பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான்,அந்த பட்டயத்தில் கண்டது போல் வேலி எடுத்தான்,அதில் எட்டடுக்கு மாடி வைத்து கட்டிடத்தை எட்டடி நின்று படுத்தான்,மண்ணை கொட்டியவன் வேலி எடுத்தான்-உண்டாக்கி வெச்சவங்க ரெண்டு பேரு-இங்கே கொண்டு வந்து போட்டவங்க நாலு பேரு. கவிஞர் வைரமுத்துவின் “கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளே தங்கபஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே-இந்த வாழ்க்கை வாழ தான்,கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல”வரிகளும் சிந்தனையை தூண்டுபவை.”இறைவனின் திருவடியை பற்றுவதே சரி”என்ற அருணகிரியாரின் பாடலை சொன்னது முத்தாய்ப்பு.

  • Uma Chelvan 5:06 pm on September 29, 2013 Permalink | Reply

   ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் கீழோர் என்றும் பேதமில்லாது
   எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு…………..எனக்கு மிகவும் பிடித்த பாடல் “பட்தீப்” ராகத்தில் !! மரணம் என்பது எல்லோருக்கும் பொது!! ஆனால் “எங்கே” ” எப்படி” என்பதுதான் பெரிய கேள்விகுறி? அதில் தான் இறைவனும் இருக்கிறான்!!!!! .

  • amas32 4:00 pm on October 1, 2013 Permalink | Reply

   ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா என்ற பாட்டும் வாழ்வு முடிந்ததும் எல்லோருக்கும் ஒரே நிலை தான் என்று சொல்ல வருகிறது. அதற்காக முதலில் இருந்தே வாழ்க்கையை அனுபவிக்காமல் இருக்க முடியாது. தலை கால் புரியாமல் ஆடாமல், நல்ல எண்ணங்களையும் செயல்களையும் செய்து வந்தால் முடிவும் அமைதியானதாக இருக்கும்.

   amas32

 • என். சொக்கன் 7:29 pm on June 20, 2013 Permalink | Reply  

  ஆறு நூறாகும் 

  • படம்: மக்களைப் பெற்ற மகராசி
  • பாடல்: மணப்பாறை மாடு கட்டி
  • எழுதியவர்: மருதகாசி
  • இசை: கே. வி. மகாதேவன்
  • பாடியவர்: டி. எம். சௌந்தர்ராஜன்
  • Link: http://www.youtube.com/watch?v=WQQwUqxBaFg

  ஆத்தூரு கிச்சடிச் சம்பா பாத்து வாங்கி வெத வெதச்சு

  நாத்தப் பறிச்சு நட்டுப்போடு சின்னக்கண்ணு, தண்ணிய

  ஏத்தம் பிடிச்சு எறச்சுப் போடு செல்லக்கண்ணு!

  கருத நல்லா விளையவெச்சு, மருத ஜில்லா ஆள வெச்சு அறுத்துப் போடு!

  சமீபத்தில் சீனாவில் அரிசி விளைச்சல் எப்படி நடக்கிறது என்பதுபற்றி ஒரு காமிக்ஸ் புத்தகம் பார்த்தேன். அந்த ஊர் விவசாயத்தின் ஒவ்வொரு படியையும் கதைபோல, அழகான ஓவியங்களுடன் எளிய ஆங்கிலத்தில் குழந்தைகளுக்குப் புரியும்படி விளக்கியிருந்தார்கள்.

  அந்தப் புத்தகத்தைப் படித்த என் மகள், ‘அப்பா, நாம இப்போ சாப்பிடற அரிசியெல்லாம் சீனாவிலேர்ந்துதான் வருதா?’ என்று கேட்டாள்.

  ‘இல்லை கண்ணு, இதெல்லாம் நம்ம ஊர்ல விளையறதுதான்’ என்றேன்.

  ‘அப்போ நம்ம ஊர்ல விவசாயம் எப்படி நடக்குதுன்னு தெரிஞ்சுக்கணுமே, ஏதாவது புக் இருக்கா?’

  ’தேடிப் பார்க்கறேன்’ என்று அவளிடம் சொன்னேனேதவிர, அப்படி எதுவும் புத்தகம் தமிழில் எழுதப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே. நாம்தான் விவசாயம், ராணுவம் போன்ற அத்தியாவசியமான பணிகளையெல்லாம் ‘taken for granted’ ஆகக் கண்டுகொள்ளாமல் விடுவதில் கைதேர்ந்தவர்களாயிற்றே!

  நேற்றைக்கு, நண்பர் வினோத் அனுப்பிய ஓர் இணைப்பில் இந்த ‘மணப்பாறை மாடு கட்டி’ பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தபோது, அந்த ஆதங்கம் தீர்ந்தது. நம் ஊர் விவசாயத்தின் அத்துணை அம்சங்களையும் எளிமையாக ஒரு பாட்டுக்குள் சொல்லிவிட்டார் மருதகாசி:

  • (ஏரில்) மாட்டைக் கட்டுதல்
  • வயலை உழுதல்
  • (உரமாகப்) பசும் தழையைப் போடுதல்
  • நல்ல விதை நெல்லைத் தேர்ந்தெடுத்து வாங்குதல்
  • விதைத்தல்
  • நாற்றைப் பறித்து வேறு இடத்தில் நடுதல்
  • ஏற்றம் பிடித்துத் தண்ணீர் பாய்ச்சுதல்
  • நெற்கதிர்கள் நன்கு விளைந்தவுடன், அவற்றை அறுவடை செய்தல்
  • அறுத்த நெற்கதிர்களை களத்துமேட்டில்அடித்துத் தூற்றுதல்
  • நெல்மணிகளை அளந்து மூட்டைகளாகக் கட்டுதல்
  • மூட்டைகளை வண்டியில் ஏற்றுதல்
  • சந்தைக்குக் கொண்டுசெல்லுதல்
  • நெல் தேவைப்படும் வியாபாரிகளிடம் விற்பனை செய்தல்
  • நிறைவாக, விற்பனைப் பணத்தை எண்ணுதல்

  மருதகாசி அதோடு நிறுத்துவதில்லை, அந்தப் பணத்தை எப்படிச் செலவு செய்யவேண்டும் என்றும் சொல்லிவிடுகிறார், ‘விவசாயம் செய்யத் தெரிந்த உனக்கு, அதைச் சிக்கனமாகச் செலவழிக்கத் தெரியாது, உங்க அம்மா கையில் கொடுத்துவிடு, அவர்கள் ஆறை நூறாகப் பெருக்குவார்கள்’ என்று நிறைவு செய்கிறார்.

  கேட்பதற்கு எளிமையாகத் தோன்றும் இந்தப் பாடல், எழுதுவதற்கு மிகவும் சிரமமானது. விஷயத்தையும் நிறைவாகச் சொல்லவேண்டும், எதுகை, மோனை, இயைபுக்கும் குறைச்சல் இருக்கக்கூடாது.

  மருதகாசி இந்தப் பாடலை எழுதியபிறகு மெட்டு அமைத்தார்களா, அல்லது ஏற்கெனவே அமைக்கப்பட்ட மெட்டு ஒன்றில் இந்த அம்சங்கள் அனைத்தையும் அவர் கச்சிதமாகப் பொருத்தினாரா என்பது தெரியவில்லை. எதுவானாலும், நிச்சயம் பெரிய சாதனைதான்!

  ***

  என். சொக்கன் …

  20 06 2013

  201/365

   
  • amas32 9:26 pm on June 20, 2013 Permalink | Reply

   கொலுவில் வைக்கப்படும் விவசாய செட்டும் குழந்தைகளுக்கு விவசாய முறைகளை வரிசைப் படுத்திக் காண்பிக்கும். குழந்தைகளுக்கு அவசியமாய் தெரிந்து கொள்ள வேண்டியவைகளை எளிமையாகக் கற்றுக் கொள்ள கொலு வைப்பது இந்த மாதிரி உதவுகிறது.

   அருமையான பாடல். நீங்கள் கேட்டிருப்பது போல் இது மெட்டுக்குப் பாட்டா அல்லது பாட்டுக்கு மெட்டா என்பது முக்கியான கேள்வி தான். மெட்டுக்கு இவ்வளவு அழகா பாடல் எழுதிக் கொடுத்திருந்தார் என்றால் he is certainly a genius!

   amas32

  • vinodh 9:39 pm on June 20, 2013 Permalink | Reply

   Hi,

   Thank you. My thoughts are in words, thrilled.

   Regards,
   G.Vinodh

  • Eswar (@w0ven) 9:24 am on June 21, 2013 Permalink | Reply

   //ஆத்தூரு கிச்சடிச் சம்பா// இது ஊர் பேர் தானா , இல்லை நெல் வகையா ?

   • என். சொக்கன் 10:45 am on June 21, 2013 Permalink | Reply

    Place

  • anuatma 10:41 am on June 21, 2013 Permalink | Reply

   *நிறைவாக விற்பனைப் பணத்தை எண்ணி வீட்டு அம்மணிகளிடம் கொடுத்தல்.

   “சேர்த்த பணத்தைச் சிக்கனமா செலவு பண்ண பக்குவமா அம்மா கையில் கொடுத்துப் போடு சின்ன கண்ணு, அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்ல கண்ணு”

   இப்படி டைட்டிலையே விட்டுட்டீங்களே! 🙂

   இதில் சொல்லியிருக்கும் “மணப்பாறை மாடு, மாயவரம் ஏரு,” இதெல்லாம் அந்தந்த ஊர் சிறப்பா?

   • என். சொக்கன் 10:45 am on June 21, 2013 Permalink | Reply

    It’s not part of vivasayam, so covered separately in next para

  • anuatma 10:44 am on June 21, 2013 Permalink | Reply

   ஸாரிங்க.ஒரு paraவை படிக்கும்போது jump செய்துவிட்டேன் போல. I couldn’t delete the comment also. 🙂

  • rajnirams 4:17 pm on June 21, 2013 Permalink | Reply

   இந்த பாடல் எல்லோருக்கும் தெரிந்த,நானும் ரசித்த ஹிட் பாடல் தான்.ஆனால் நீங்கள் அக்கு வேறு ஆணிவேறாக அதன் பெருமையை சொன்ன விதம் இருக்கிறதே-அடடா, பிரமாதம்.கே.வி.மகாதேவன் பெரும்பாலும் வரிகளுக்கு தான் இசையமைப்பார் என்று படித்திருக்கிறேன்,சமீபத்தில் வைரமுத்து அவர்களும் இதையே சொல்லியிருக்கிறார்.அதனால் இந்த பாடலும் எழுதப்பட்ட பிறகே இசை அமைக்கப் பட்டிருக்கும் என்பது என் அனுமானம். மருதகாசி அவர்கள் “கடவுளெனும் முதலாளி”பாட்டிலும் விவசாயியின் சிறப்புகளை பின்னி பெடல் எடுத்திருப்பார்-

 • G.Ra ஜிரா 1:27 pm on February 16, 2013 Permalink | Reply  

  அழகன் ஆலயங்கள் 

  ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது தற்செயலாக இப்படிக் கேட்டார்.

  “முருகனைக் கும்புடுறிங்களே. ஆறுபடை வீடுகளுக்கும் போயிருக்கிங்களா?”

  “ஆகா! போகாமலா? நல்லா போயிருக்கேனே.”

  “நீங்க போயிருப்பீங்க. இந்த ஆறுபடை வீடுகள் மட்டுந்தான் தமிழ்நாட்டுல முருகன் கோயில்களா? வேற கோயில்கள் எதுவும் இருக்கா? 108 வைணவத்தலங்கள்னு சொல்றாங்க. ஆனா தமிழ்க்கடவுள்னு சொல்ற முருகனுக்கு ஆறு கோயில்தானா?”

  இவருக்கு எப்படி விளக்குவது என்று ஒரு நிமிடம் யோசித்தேன். சங்க இலக்கியங்களில் அதற்குப் பிந்தைய காப்பியங்களில் எல்லாம் இருக்கும் கோயில்களை எடுத்துச் சொன்னால் அடுத்த முறை என்னோடு பேசாமல் போனாலும் போய்விடுவார் என்று புரிந்தது.

  எப்போதும் துணைவரும் சினிமா இப்போது துணைவனாக வந்தது.

  ஆம். தேவரின் துணைவன் என்ற திரைப்படத்தில் ஒரு அழகான பாடல். அந்தப் பாடலில் தமிழகத்திலுள்ள மிகப்பிரபலமான முருகன் கோயில்களை எல்லாம் பட்டியல் போடுவார்கள். கணவனும் மனைவியும் கோயில் கோயிலாகச் சென்று முருகனை வழிபட்டு பிள்ளையின் உடல்நலம் சரியாக வேண்டுவது போல காட்சியமைப்பு.

  திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் இசையில் மருதகாசியும் கண்ணதாசனும் பாதிப்பாதி பாடலை எழுதிக் கொடுக்க டி.எம்.சௌந்தரராஜனும் பி.சுசீலாவும் உள்ளம் உருகப் பாடிய பாடல் இது.

  அந்தப் பாட்டின் மொத்த வரிகளையும் கொடுக்கிறேன். ஆறுபடை வீடுகளையும் சேர்த்து மொத்தம் எத்தனை கோயில்கள் என்று பாருங்கள். இவை மிகப்பிரபலாமன கோயில்கள். இவை போக இன்னும் எத்தனையெத்தனையோ கோயில்கள் ஊரெங்கும் உண்டு. அதை விட அடியவர் உள்ளங்களில் அவன் கொண்டுள்ள கோயில்கள் இன்னும் நிறைய.

  மருதகாசி எழுதிய வரிகள்
  மருதமலை மீதிலே குடி கொண்டிருப்பவனே
  மனதார நினைப்பவர்கள் எண்ணியதை முடிப்பவனே
  வாயாறத் துதிப்பவர்கள் கேட்டதைக் கொடுப்பவனே
  வந்தவர்க்கு அருள் புரியும் மருதமலை ஆண்டவனே

  மருதமலையானே நாங்கள் வணங்கும் பெருமானே
  மருதமலையானே நாங்கள் வணங்கும் பெருமானே
  பிள்ளை முகம் பாரு முருகா
  பிறவிப் பிணி தீரு
  பிள்ளை முகம் பாரு முருகா
  பிறவிப் பிணி தீரு
  மருத மலையானே நாங்கள் வணங்கும் பெருமானே

  உன்னை ஒருபோதும் எண்ண மறவேனே
  சென்னிமலை வாழும் பெருமானே
  அன்னை தந்தையுடன் உன்னை சிவன்மலையில்
  வந்து தொழுவோர்க்கு அருள்வோனே
  வள்ளல் உனை நாடி வள்ளிமலை தேடி
  வருவோர்க்கு இன்பம் தருவோனே
  கள்ளம் அறியாத பிள்ளைப் பெருமானே
  காங்கேய நல்லூர் வளர்வோனே

  திருமுருகன் பூண்டியில் பரமனருள் வேண்டியே
  சிவலிங்கம் தனை வைத்துப் பூஜித்த குமரா
  தென்தேரிமலை கண்டு நெஞ்சாரத் துதிப்போர்க்கு
  அஞ்சாதே ! என அபயம் தருகின்ற அமரா
  திருமுருகன் பூண்டியில் பரமனருள் வேண்டியே
  சிவலிங்கம் தனை வைத்துப் பூஜித்த குமரா
  தென்தேரிமலை கண்டு நெஞ்சாரத் துதிப்போர்க்கு
  அஞ்சாதே ! என அபயம் தருகின்ற அமரா
  வருந்தி வரும் அடியவர்கள் படும் துயரம் தீர்த்தாள
  குருந்தமலை மீதிலே கொஞ்சும் வேலே
  வற்றாத கருணை மலை நற்றாய் எனப் பொழியும்
  வட்ட மலை தெய்வமே வெற்றி வேலே

  அமரர் கூட்டம் ஆடவும் அசுரர் தோற்று ஓடவும்
  சமர் புரிந்த குமரர் கோட்ட தவமணியே
  அண்ணல் ராமலிங்க வள்ளல் நெஞ்சில்
  அருள்பாவின் வெள்ளம் பொங்கச் செய்த
  கந்தக் கோட்ட தமிழ்க்கனியே
  தஞ்சம் என்று வந்து உன்னைக்
  கெஞ்சுகின்ற எங்கள் பிள்ளை
  துன்பம் தீர்க்க வேண்டுமய்யா சுடரொளியே

  வீறிட்டெழுந்த சூரன் போரிட்டழிய
  திருப்போரூரில் வேல் விடுத்து நின்றவா
  ஏறி வரும் மயிலின் பேரும் விளங்க
  ஒரு ஊரை மயிலம் எனக் கொண்டவா
  பக்தர்கள் தேரூர் பவவினை தீருர்
  உத்தரமேரூர் உறைபவனே
  எங்கும் இல்லாத விதத்தினிலே
  பொங்கும் திருமயிலாடியிலே
  வடதிசை நோக்கி அமர்ந்தவனே
  மயிலை ஆடச் செய்தவனே

  வருபவர் பிணி தீர்க்கும் வைத்தீஸ்வரன்
  பெற்ற முருகனே ஷண்முகா முத்துக்குமாரா
  சரவணா எங்களின் சிறுவனைக் காப்பாற்று
  சக்தி வேலாயுதா சூரசம்ஹாரா
  திண்புய சூரனை வென்றதை முனிவர்க்கு
  எண் கண்ணிலே சொன்ன சுப்ரமண்யா
  கந்தன் குடி வாழ்ந்திடும் கந்தனே
  அன்பரின் கண்ணுக்கு விருந்தாக அமர்ந்த புண்யா
  தக்க தருணத்திலே பக்தரின் பக்கம் துணையிருப்பாய்
  சிக்கலைத் தீர்த்து வைப்பாய் ஜெகம் புகழ் சிக்கல் சிங்காரவேலா
  செட்டிமகன் என்னும் இறைவா
  செந்தமிழின் தலைவா
  எட்டிக்குடி தனிலே அகத்தியன் ஏற்ற குருவானவா

  பழகு தமிழ் கொண்டு அருணகிரி அன்று
  திருப்புகழ் பாடிய வயலுரா
  புலவன் நக்கீரன் புனைந்த முருகாற்றுப்படை போற்றும்
  விராலி மலை வீரா
  கொன்றதொரு சூரனைக் கோலமயிலாகவே
  குன்றக்குடியில் கொண்ட குமரய்யா
  கந்தய்யா எங்களின் கவலையைத் தீரய்யா
  கழுகு மலையில் வாழும் வேலய்யா
  கழுகு மலையில் வாழும் வேலய்யா

  கவியரசர் கண்ணதாசன் எழுதிய வரிகள்
  பருவத ராஜகுமாரியின் மகனே
  பாசத்தை உணர்ந்த பாலகனே
  திருமலை முருகா மழலையின் நாவில்
  ஒரு மொழி தருவாய் காவலனே
  தக்கலை குமாரவேலா
  ஒரு தாய் நிலை அறிந்த பாலா
  மக்களைக் காத்திடும் சீலா
  என் மகனைக் காத்திட வா… வா ..வா
  வள்ளியூரிலே குடிகொண்ட வள்ளிமணாளா வழிகாட்டு
  பிள்ளைக்கு உந்தன் அருள் காட்டு
  பிணிகள் விலகிடத் தாலாட்டு

  அலைந்து தவித்தோம் குமரய்யா
  வடபழனிக்கு வந்தோம் முருகய்யா
  நலம் பெற வேண்டும் மகனய்யா
  நம்பிக்கை தருவாய் கந்தய்யா
  தணியாத கோபம் தணிந்த இடம் வந்தும்
  தனித்தனியாக இருப்பவனே
  கனிந்த முகம் காட்டு கலங்கும் எமைத் தேற்று
  தணிகைமலை மீது வசிப்பவனே

  தந்தைக்கு ஓம் எனும் மந்திரப்பொருள் சொன்ன
  ஸ்வாமி மலை வாழும் குருநாதா
  மைந்தன் துயர்தீர வந்த பிணி மாற
  கந்தா கடம்பா வரமே தா
  பூவுதிர் சோலையில் வள்ளியை மணந்து
  பழமுதிர் சோலைக்கு வந்தவனே
  காவல் தெய்வம் நீ என வந்தோம்
  கை கொடுப்பாய் எங்கள் மன்னவனே

  திருப்புகழ் பாடி திருவடி தேடி
  தெண்டனிட்டோம் எங்கள் தென்னவனே
  திருப்பரங்குன்றத்து நாயகனே
  குறை தீர்த்து வைப்பாய் வடிவேலவனே
  வேலவனே .. வேலவனே

  இந்தப் பாடலின் ஒளிவடிவமும் நமக்குக் கிடைக்கிறது. கிட்டத்தட்ட எட்டு நிமிடங்கள் பாடல் ஓடுகிறது. இத்தனை வரிகளையும் தொடர்ந்து பாடிய சுசீலாம்மாவிற்கும் டி.எம்.சௌந்தரராஜனும் முருகனுடைய ஆசி நிச்சயம் கிடைத்திருக்கும்.

  முருகனருள் முன்னிற்கும்.

  பாடலின் சுட்டி – http://youtu.be/aeGUa8rg3nM
  அன்புடன்,
  ஜிரா

  077/365

   
  • amas32 (@amas32) 9:45 pm on February 16, 2013 Permalink | Reply

   என் வடபழனி முருகனைக் காணோமே என்று தேடினேன், இருக்கிறார் இரண்டாவது பாடலில் 🙂 அற்புதமான பாடல்கள். பகிர்ந்தமைக்கு நன்றி. உங்களுக்கும் முருகனுடைய ஆசி நிச்சயம் 🙂

   amas32

   • GiRa ஜிரா 5:03 pm on February 18, 2013 Permalink | Reply

    நன்றி. 🙂 வடபழனி முருகன் இல்லாமையா? வடபழனி முருகன் கோயில் மூலத்தில் இப்போது போல இல்லை. வெறும் படம்தான். பழனிமலையிலிருந்து வாங்கி வந்த படத்தை வைத்து ஒருவர் வணங்கிக் கொண்டிருந்தார். கொஞ்சம் கொஞ்சமாக கால மாற்றத்தில் ஆதி மறைந்து முற்றிலும் புதிதான கோயில் எழுந்து விட்டது.

  • rajinirams 10:01 pm on February 16, 2013 Permalink | Reply

   அருமையான பதிவு.பாடலை எழுதிய இரு கவிஞர்களையும் பாராட்டியே தீரவேண்டும்.இந்த பாடலுக்கு இசையமைத்த கே.வி.மகாதேவன் உண்மையிலேயே திரை இசை திலகம் தான்.பாராட்டுக்கள்.

   • GiRa ஜிரா 5:04 pm on February 18, 2013 Permalink | Reply

    கே.வி.மகாதேவன் ஐயமே இல்லாமல் திரையிசைத் திலகமேதான். 🙂

  • anonymous 9:17 am on March 10, 2013 Permalink | Reply

   மிக எழிலான பாட்டு!
   இணையம் ஏதுமின்றி, ஒதுக்கத்தில் இருப்பதால், இன்னிக்கி தான் இந்தப் பதிவைப் பார்த்தேன்; (அந்தப் பதிவில் இருந்து)

   துணைவன் படம் – என் மனதோடு பேசும் படம்!
   வாரியார் சுவாமிகளும், படத்தில் நடிச்சி இருப்பாரு;

   வாரியார், முருகன் “பெருமை” பேசுவது போல ஆரம்பக் காட்சி;
   அப்போ வாரியார் சொல்வது, “பொய், பொய், யாரும் நம்பாதீங்க” -ன்னு தான் Hero, AVM Rajan உள்ளே நுழைவாரு:))
   வாரியார் நடிப்பும், நல்லாத் தான் இருக்கும்; It will tempt me, everytime I see the movie:)
   ——

   மருதகாசி – கண்ணதாசன் கூட்டுப் பாட்டு (எப்பவோ, முருகனருள் வலைப்பூவில் இட்ட ஞாபகம்)

   எத்தனை பெருங் கவிஞர்கள்; ஆனா ego இன்றி, இயைந்து எழுதிய பாட்டு;
   இன்றைய எழுத்துலகப் பீடாதிபதிகள் -ன்னு சொல்லிக் கொள்கிறவர்களுக்கெல்லாம், இது ஒரு நல்ல பாடம், பயிற்சி;

   இதே படத்தில் KBS என்னும் சுந்தராம்பாள் அம்மா பாடும் பல பாடல்கள், அவர் முருக வாழ்வின் இறுதிப் பாடல்கள்…
   அதில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள்… “கூப்பிட்ட குரலுக்கு யார் வந்தது”?

   • anonymous 11:00 pm on March 10, 2013 Permalink | Reply

    Here’s that link, for Vaariyar acting in thuNaivan movie

    (He has “appeared” in other movies, but not to this big length, I think)

    சிவகவி – he wrote the script/dialogue
    தெய்வம், கந்தர் அலங்காரம், மிருதங்கச் சக்கரவர்த்தி, நவகிரக நாயகி -ன்னு dozen movies…
    ஆனா, துணைவன் படத்தில், வாரியார் காட்சிகள் நீளமானவை:)

  • anonymous 9:36 am on March 10, 2013 Permalink | Reply

   //108 வைணவத்தலங்கள்னு சொல்றாங்க. ஆனா தமிழ்க்கடவுள்னு சொல்ற முருகனுக்கு ஆறு கோயில்தானா?”//

   :)))

   108 திவ்ய தேசத்துக்கும் மேலான ஒரு திவ்ய தேசம் இருக்கு!
   அது 109 ஆம் திவ்ய தேசம்;

   = “மனம்” எனும் திவ்ய தேசம்

   இருப்பது ஒரே “திவ்ய” தேசம் தான்!
   அதுக்குத் தான் “ஆறுதல்” தேவைப்படுது; மனம் ஆற்றும் ஆற்றுப்-படை, ஆறு-படை;
   ——–

   முருகனின் தலங்கள் என்னென்ன -ன்னு ஒரு நூலே இருக்கு;
   = சுப்ரமணிய ஷேத்திரக் கோவை
   = பிள்ளைத் தமிழ் நடையில் அமைஞ்சி இருக்கும்; காஞ்சி சிதம்பர முனிவர் எழுதியது;

   100 பாடல்கள்; 100 தலங்கள்
   கைலாசத்தில் ஆரம்பித்து, கேதாரத்தில் முடிப்பாரு!
   “உன் சன்னிதிக்கு நான் வர நீ, சிறு தேர் உருட்டி அருளே”

  • anonymous 9:49 am on March 10, 2013 Permalink | Reply

   108 திருத்தலம்
   274 சிவ ஸ்தலம்

   இப்படி, ஆழ்வார்கள் – நாயன்மார்கள் போல், தலம் தலமாகச் சென்று பாடிய முருகன் ஆலயங்கள் “குறை”வு தான்;

   ஆனா, அந்தக் “குறை”யை, “நிறை”வு செய்ய வந்த ஒரேயொரு உள்ளம்
   = அதுக்கு, “அருணகிரி” -ன்னு பேரு!

   ஆழ்வார்கள் செய்வித்த “மங்களாசாசனம்” போல்,
   முருகனுக்கு “மங்களாசாசனம்” செய்வித்தவர் = அருணகிரி

   அதுவும் பன்னிருவராய் இல்லாது,
   ஒரே ஒருவராய்… ஒத்த மனுசனாய் நடையாய் நடந்து…
   ——–

   அந்த ஆலயங்கள் = கந்த ஆலயங்கள்
   அவை எவை எவை?-ன்னு, திருப்புகழில் தேடித் தான் பிடிக்கணும்; படிக்கணும்!

   இந்தக் “குறை” எனக்கு ரொம்ப நாளா உண்டு!
   அதான், ஒரு தனிமையில், முருகன் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் குடுத்தான்…
   தனிமையில் வந்த தனி மயில்!

   மொத்த திருப்புகழ்த் தலங்களையும்,
   ஒரே படத்தில் (Map), ஒரு Murugan Atlas போல் செய்து…
   அந்தந்த Point-களில் கிளிக்கினால், அந்தந்தத் தலத்தின் திருப்புகழ் வருவது போல்…

   Murugan Geographic Atlas
   சுட்டி இதோ: http://murugan.org/temples/arunagirinathar_sites.htm
   இதை murugan.org இல் பதிப்பித்தும் உள்ளார்கள்;
   அழகன் ஆலயங்கள்! மனமென்னும் திவ்ய தேசங்கள்!

  • anonymous 10:52 pm on March 10, 2013 Permalink | Reply

   சிவனிரவு (சிவராத்திரி) அதுவுமா, “எண்ணிக்”கிட்டு இருந்தேன்…. இந்தப் பாடல்/ பதிவில் எத்தனை அழகன் ஆலயங்கள் வருது-ன்னு = மொத்தம் 28 ஆலயங்கள் வருது:)

   மருதமலை, சென்னிமலை, சிவன்மலை,

   வள்ளிமலை (எங்கூரு பக்கம்) & காங்கேய நல்லூர் (வாரியார் ஊர்)

   திருமுருகன் பூண்டி, தென் திருமலை, குருந்தமலை

   வட்டமலை, குமர கோட்டம் (காஞ்சி)

   கந்த கோட்டம் (சென்னை), திருப்போரூர், மயிலம்

   உத்திர மேரூர், வைத்தீஸ்வரின் கோயில்

   சிக்கல், எட்டிக்குடி, வயலூர்

   விராலி மலை, குன்றக்குடி

   கழுகுமலை, தக்கலை, வள்ளியூர்

   வடபழனி, தணிகைமலை

   சாமி மலை, பழமுதிர் சோலை, திருப்பரங் குன்றம்

   ——–

   இதுல என் மனசுக்குப் பிடிச்ச ஒரு இடம் = வள்ளி மலை

   எங்கூரில் இருந்து, வேலூர் போயி,
   குப்பு ரெட்டி தாங்கல் (அத்தை-மாமா கொஞ்ச நாள் வாழ்ந்த இடம்) கடந்து, ஆந்திரா Border…

   வள்ளி மலை = கோயில் என்னவோ சிறுசு தான்; அதுனாலேயே ரொம்பப் பிடிக்கும்!
   சடங்கு, பூஜை -ன்னு ஆர்ப்பாட்டம் அதிகம் இருக்காது…

   மலை மேல காலாற உலாத்தலாம்,
   தான் தோன்றியா உலாத்த உலாத்த, நெறைய இடம் வரும்… குகை, சுனை, பொங்கிப் பாறை, திருமால் உச்சி-ன்னு…

   குகை வள்ளி = பட்டு/அலங்காரமெல்லாம் இல்லாம..
   பேரழகியா இல்லாம,
   ரொம்பச் சாதாரணமா இருப்பா – அந்த வடிவமே என்னமோ பண்ணும்;

   மாலவன் மகள்; பொறந்த வீடு-ங்கிறதால, சடாரி/தீர்த்தமும் உண்டு;
   ——–

   வள்ளியைப் “பொங்கி” -ன்னு கூப்புடுறது இங்கிட்டு(வடார்க்காடு) வழக்கம்;
   = அவனே உள்ளத்தில் பொங்குவதால்!
   = அடக்க முடியாமல் பொங்குவதால்!

   மறைக்க முயன்றேன் முடியவில்லை – உன்னை
   மறக்க முயன்றேன் நடக்கவில்லை
   -ன்னு கண்ணதாசன் பாட்டு, with susheelamma & PBS

   அவளை (வள்ளியைப்) போலவே… கால் போன போக்கில், மலை மேல உலாத்த உலாத்த ரொம்ப நல்லா இருக்கும்;
   இப்படி உலாத்தினால் பாதம் வருடுவானோ? பாதம் வருடிய மணவாளா, குறமகள் இங்கித மணவாளா…

   குறவாணர் குன்றில் உறைபேதை கொண்ட
   கொடிதான துன்ப – மயல்தீர
   குறை தீர வந்து குறுகாயோ? -ன்னு பாடல்;

   வள்ளிமலைக்கு, ஒருத்தவங்க கூடவே போகணும்-ன்னு ரொம்ப நாள் ஆழ்மனசு ஆசை!
   பதிவில், “வள்ளிமலை” -ன்னு பார்த்ததும், கப்-ன்னு பிடிச்சிக்கிச்சி!

  • anonymous 8:50 pm on March 24, 2013 Permalink | Reply

   சில இரவுகளா, இந்தத் தனிமையான முகாமில் ஒரே ஞாபகம்…
   கந்த சட்டிக் கவசத்திலும், முருகத் தலங்கள் வரிசை வரும்; ஆனா இங்கு இணையம் இல்லாததால் ஒடனே பார்க்க முடியலை..

   இணையம் இல்லீன்னா வாழ்க்கையே இல்லீயா என்ன?
   இல்லாத போதும் இணைப்பவன் அவனே!

   சட்டிக் கவசம் வாய்விட்டுச் சொல்லிப் பார்த்தேன்; சொல்லும் போதே, அதில் வரும் தலங்களை Paper-இல் குறித்துக் கொண்டேன்; after a long long gap, re-union; re-union with pen & paper:) இதோ..
   —-

   1. சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக! = சிரகிரி (சென்னிமலை)
   2. என்றனை யாளும் ஏரகச் செல்வ! = திருவேரகம் (சுவாமிமலை)
   3. அரிதிரு மருகா அமரா வதியை; = அமராவதி

   4. தணிகா சலனே சங்கரன் புதல்வா! = தணிகை (திருத்தணி)
   5. கதிர் காமத் துறை கதிர்வேல் முருகா! = ஈழம் (கதிர்காமம்)

   6. பழநிப் பதிவாழ் பால குமாரா! = (மலை மேல்) பழநி
   7. ஆவினன் குடிவாழ் அழகிய வேலா! = (மலைக் கீழ்) ஆவி-நன்-குடி

   8. செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா! = செந்தில் (திருச்செந்தூர்)
   9. மா மலையுறும் செங்கல்வ ராயா = திருக்காளத்தி (அது என்ன செங்கல்? ன்னு தோனினா, காளஹஸ்தியில் இருக்கும் முருகன் பேரு = செங்கல்வராயன்)

   10. சமரா புரிவாழ் சண்முகத் தரசே! = சென்னை-திருப்போரூர் (சமராபுரி)

   11. குருபரன் பழநிக் குன்றினில் இருக்கும் = பழநி
   12. உயர்கிரி கனக சபைக்கோர் அரசே! = சிதம்பரம் (தில்லை-கனக சபை; இங்குள்ள முருகன் பேரு = பாண்டிய நாயகன்)

   சட்டிக் கவசத் தலங்கள்!

 • G.Ra ஜிரா 10:23 am on February 13, 2013 Permalink | Reply  

  ஒரு பாடல், இரு கவிஞர்கள் 

  சில நாட்களுக்கு முன்னர் நண்பர் நாகா ஒரே கவிஞர் படத்தின் எல்லாப் பாடல்களையும் எழுதப் போவது பற்றிய பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவிலேயே பலர் விதவிதமான கருத்துகளைத் தெரிவித்திருந்தார்கள்.

  ஒரு படத்தில் எல்லாப் பாடல்களையும் ஒரே கவிஞரே எழுதினால் நன்றாக இருக்கும் என்று எண்ணம் எழுந்தது இருக்க, ஒரே பாடலை இரண்டு கவிஞர்கள் எழுதிய கதையெல்லாம் நடந்திருக்கிறது.

  பொதுவாக இரு மொழிப் பாடல்கள் வருகையில் இரண்டு கவிஞர்கள் எழுதுவார்கள். ஆங்கில வரிகளைப் பெரும்பாலும் ராண்டார் கையும் தமிழ் வரிகளைத் தமிழ்க் கவிஞர் ஒருவரும் எழுதியிருப்பார். அதே போல இந்தி வரிகள் என்றால் பி.பி.ஸ்ரீநிவாசைத்தான் கூப்பிடுவார்கள்.

  தவப்புதல்வன் படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விசுவநாதன் இசையில் வந்த “உலகின் முதலிசை தமிழிசையே” என்ற பாடலின் தமிழ் வரிகளைக் கவிஞர் கண்ணதாசன் எழுதினார், அதே பாடலில் வரும் இந்துஸ்தானி இசைக்கான வரிகளை பர்கத் சைபி எழுதினார்.

  அதே போல வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் ”தூ ஹே ராஜா மே ஹூ ராணி” என்ற இந்திப் பாட்டை பி.பி.ஸ்ரீனிவாஸ் எழுத கடைசியாக நான்கு வரிகளைத் தமிழில் கண்ணதாசன் எழுதினார். நான்கு வரிகளை எழுதுவதா என்றெல்லாம் யோசிக்கவில்லை கண்ணதாசன். அந்த நான்கு வரிகளில் பாட்டையே பிரமிப்பாக்கி விட்டார். நல்ல கவிஞன் ஒரு வரியில் கூடச் சொல்ல வந்ததைச் சொல்லி தன்னையும் நிலை நிறுத்துவான் என்பதே உண்மை.

  சூரியகாந்தி படத்தில் தமிழும் ஆங்கிலமும் கலந்த பாடல் உண்டு. “நான் என்றால் அது நானும் அவளும்” என்று தமிழ் வரிகளை வாலி எழுத, ஆங்கில வரிகளை ராண்டார்கை எழுதினார். இது எஸ்.பி.பாலசுப்ரமணியமும் ஜெயலலிதாவும் இணைந்து பாடிய பாடல்.

  இந்தப் பாடல்கள் எல்லாம் இரு மொழிப் பாடல்கள். இரண்டு கவிஞர்கள் இருவேறு மொழிகளில் எழுதியது இயல்பானது. ஒரே மொழிப்பாடலை இரண்டு கவிஞர்கள் எழுதியிருக்கிறார்களா? எழுதியிருக்கிறார்கள். மூன்று எடுத்துக்காட்டுகளைச் சொல்ல முடியும். ஆனால் மூன்றிலும் கவியரசர் கண்ணதாசனின் பங்கு இருக்கிறது.

  வியட்னாம் வீடு படத்தில் ”உன் கண்ணில் நீர் வழிந்தால்” பாடலின் தொடக்க வரிகள் பாரதியாரால் எழுதப்பட்டவை. அந்த வரிகளை எடுத்துக் கொண்டு சரணத்தை கண்ணதாசனிடம் எழுதச் சொன்னார்களாம். அவரும் எழுதிக் கொடுத்தார். ஆனால் பாடலை எழுதியவர் என்று தன்னுடைய பெயரைப் போடக்கூடாது என்று சொல்லிவிட்டார்.

  இந்த எடுத்துக்காட்டு செல்லாது என்கின்றீர்களா? வாருங்கள். இன்னும் இரண்டு சொல்கிறேன்.

  தேவரின் துணைவன் திரைப்படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் முருகனைப் புகழ்ந்து பாடும் “மருதமலையானே நாங்கள் வணங்கும் பெருமானே” என்ற பாடலின் முதல் பாதியை மருதகாசியும் இரண்டாம் பாதியைக் கண்ணதாசனும் எழுதினார்கள். இருவருமே முழுதாகத் தானே எழுதுவேன் என்று சண்டையிடவில்லை.

  அடுத்த எடுத்துக்காட்டு சிவப்பு ரோஜாக்கள். ”மின்மினிக்குக் கண்ணில் ஒரு மின்னல் வந்தது” அற்புதமான பாடல். அந்தப் பாடலின் பல்லவியை கவியரசர் எழுத சரணங்களை கங்கையமரன் எழுதினாராம். இருவரையும் நம்மால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. கவியரசர் எழுதிய பல்லவிக்குச் சரணம் எழுதி அதைப் பிரபலமாகவும் ஆக்கிய கங்கையமரனையும் பாராட்டியே ஆக வேண்டும்.

  உலகின் முதலிசை தமிழிசையே (தவப்புதல்வன்) – http://youtu.be/pLNYJ7uCyyM
  தூ ஹே ராஜா மே ஹூ ராணி (வறுமையின் நிறம் சிவப்பு) – கிடைக்கவில்லை
  நான் என்றால் அது நானும் அவளும் (சூரியகாந்தி) – http://youtu.be/lWH2aplXjG0
  உன் கண்ணில் நீர் வழிந்தால் (வியட்னாம் வீடு) – http://youtu.be/NC3QQL3cMlg
  மருதமலையானே (தேவரின் துணைவன்) – http://youtu.be/aeGUa8rg3nM
  மின்மினிக்குக் கண்ணில் (சிவப்பு ரோஜாக்கள்) – http://youtu.be/Yoo_WkRIgYU

  அன்புடன்,
  ஜிரா

  074/365

   
  • Rajnirams 10:44 am on February 13, 2013 Permalink | Reply

   தவப்புதல்வன்-உலகின் முதலிசை பாடலை கண்ணதாசனுடன் எழுதியவர் பர்கத் சைபி என்ற இஸ்லாமியர்.அதே படத்தில் love is fine darling பாடலை வாலி-ராண்டார்கை எழுதியுள்ளனர்.அதே போல ஊருக்கு உழைப்பவன் படத்தில் it is easy to fool you பாடலும் அவர்களே எழுதியவை.(தங்கள் முந்தைய பதிப்பில் திருநாள் வந்தது -காக்கும் கரங்கள்
   பாடலும் வாலி எழுதியதே-கண்ணதாசன் அல்ல).நன்றி.

   • GiRa ஜிரா 8:38 am on February 15, 2013 Permalink | Reply

    இந்த மாதிரிப் பிழைகளத் தவிர்க்கப் பாக்கிறோம். ஆனா வந்தா எடுத்துச் சொல்லி நீங்க தொடர்ந்து இப்பிடியே உதவிகளைச் செய்யனும். 🙂

  • ravi_aa 1:00 pm on February 13, 2013 Permalink | Reply

   thanks !

  • amas32 (@amas32) 5:28 pm on February 13, 2013 Permalink | Reply

   How do you get such in depth information! ஒவ்வொரு முறை பதிவைப் படிக்கும் பொழுதும் அசந்து போகிறேன்.

   உண்மையாகவே அகங்காரம் அற்ற ஒரு கலைஞனால் மட்டுமே இப்படி செயல் பட முடியும். மேலும் வெவ்வேறு school of thoughtல் இருக்கும் இரு வேறு கவிஞர்கள் ஒரு எண்ணத்தை அல்லது ஒரு சிச்சுவேஷனைப் பிரதிபலிக்கும் ஒரு பாடலைப் பங்கு போட்டு எழுதுவது எளிதன்று. அதுவும் அவர்களது அசாத்தியத் திறமையை தான் காட்டுகிறது.

   amas32

   • GiRa ஜிரா 8:37 am on February 15, 2013 Permalink | Reply

    உண்மைதானம்மா. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு எண்ணவோட்டம். அது ரெண்டையும் கலக்குறது கடினம். சமைக்கும் போது வேற யாரும் உதவிக்கு வந்தாலே பல பெண்களுக்குக் கஷ்டம். நானே பண்ணிக்கிறேன். அதுதான் வசதின்னு சொல்லிருவாங்க. அப்படியில்லாம சேந்து செய்றதும் ஒரு திறமைதானே.

  • Mohanakrishnan 7:53 pm on February 13, 2013 Permalink | Reply

   மண்ணில் இந்த காதல்’ கங்கை அமரன் எழுதி பாவலர் வரதராசன் பெயரில் வெளிவந்த பாடல் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

   • என். சொக்கன் 12:10 pm on February 14, 2013 Permalink | Reply

    Yes

   • GiRa ஜிரா 8:36 am on February 15, 2013 Permalink | Reply

    பாவலர் எழுதினார் எப்படியிருக்கும் என்று நினைத்து எழுதினாராம். அதனால்தான் பாவலர் பெயர். உன் கண்ணில் நீர் வழிந்தால் பாட்டில் பாரதியைப் போடச்சொன்னது போலத்தான். கங்கையின் மரியாதை அண்ணனுக்கு என்றால் கண்ணதாசனின் மரியாதை பாட்டு மன்னனுக்கு.

 • G.Ra ஜிரா 11:22 am on January 14, 2013 Permalink | Reply
  Tags: பொங்கல், Pongal   

  பொங்கலோ பொங்கல் 

  நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் மற்றும் தைப்புத்தாண்டு வாழ்த்துகள். இந்தத் திருநாள் அனைவருக்கும் நல்ல வாழ்க்கையையும் அறிவையும் அன்பையும் அருளையும் கொடுக்கட்டும்.

  ”ஏன் உழவு செய்கின்றீர்கள்? விட்டுவிட்டு வாருங்கள்” என்று ஒரு பிரதமரே சொல்லும் அவல நிலையில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதும் அதன் பெருமையை புரிந்து கொள்வதும் மிகமிகத் தேவையாகிறது.

  உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார். மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்வார். அந்த உழுதுண்டு வாழ்வோரே தொழுதுண்டு கொண்டாடும் பண்டிகைதான் தைத்திருநாள். தை பிறப்பு என்று சிறப்பாகப் போற்றப்படும் பண்டிகை இது. இந்த நன்னாளில் வேளாண்மை மீண்டும் சிறப்புற ஆண்டவனை வணங்குகிறேன்.

  இந்தப் பொங்கல் பண்டிகையின் பெருமையைச் சொல்லும் பாடல்கள் திரைப்படங்களில் நிறைய உள்ளன. ஆனால் அவைகளில் எல்லாம் ஆகச் சிறந்த பாடலாக நான் கருதுவது மருதகாசி அவர்கள் எழுதிய தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பாடல்தான்.

  தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்
  தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்
  தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
  ஆடியிலே வெதை வெதைச்சோம் தங்கமே தங்கம்
  ஐப்பசியில் களையெடுத்தோம் தங்கமே தங்கம்
  கார்த்திகையில் கதிராச்சு தங்கமே தங்கம்
  கார்த்திகையில் கதிராச்சு தங்கமே தங்கம்
  கழனியெல்லாம் பொன்னாச்சு தங்கமே தங்கம்
  படம் – தை பிறந்தால் வழி பிறக்கும்
  பாடியவர்கள் – டி.எம்.சௌந்தரராஜன் மற்றும் பி.லீலா
  பாடல் – ஏ.மருதகாசி
  இசை – கே.வி.மகாதேவன்

  அன்றன்று வேட்டையாடி அன்றன்று உண்ட மனிதன் நாகரிகம் கொண்டதற்கு அடையாளம் வேளாண்மைதான். ஆறு மாத உழைப்பும் ஆறு மாத ஓய்வுமாய் மனிதனை மாற்றியது வேளாண்மைதான். ஆகையால்தான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று பழமொழியே உண்டானது.

  பொங்கல் என்றாலே கரும்பை மறக்க முடியுமா? நீரை மொடாக் குடியாக குடித்து வளர்ந்து அந்த நீரிலே இனிப்பு கலந்து கொடுக்கும் புல்லே கரும்பு. அந்தக் கரும்புப்புல் காற்றில் லேசாக ஆடுவதைப் பார்க்கிறார் கவியரசர் கண்ணதாசன். கரும்பா பெண் என்னும் அரும்பா என்னும் ஐயத்தில் இப்படியொரு பாட்டை எழுதுகிறார். காதலும் கரும்பும் இனிப்பதால் ஒன்று. இரண்டும் பழசாக ஆக போதை கூட்டும் என்று தெரிந்து எழுதுகிறார்.

  தை மாதப் பொங்கலுக்கு
  தாய் தந்த செங்கரும்பே
  தள்ளாடி வாடி தங்கம் போலே
  மையாடும் பூவிழியில்
  மானாடும் நாடகத்தை
  மயங்கி மயங்கி ரசிக்க வேண்டும் வாடி
  நீ என்னை தேடுவதும்
  காணாமல் வாடுவதும்
  கடவுள் தந்த காதலடி வாடி
  படம் – நிலவே நீ சாட்சி
  பாடியவர் – இசையரசி பி.சுசீலா
  பாடல் – கவியரசர் கண்ணதாசன்
  இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

  தை பிறந்த வேளையில் எல்லோர் வீட்டிலும் புதுப்பானை இருக்கிறதா? எல்லோர் வீட்டிலும் புதுநெல் இருக்கிறதா? புத்தம் புதிதாய் கறந்த பாலும் அந்தப் பாலிலிருந்து எடுத்த நெய்யும் இருக்கிறதா? புதுக்கரும்பை ஆலையில் ஆட்டிச் சாறுபிழிந்து காய்ச்சி எடுத்த வெல்லம் இருக்கிறதா? இவையெல்லாம் இல்லாத ஏழைகளும் நாட்டில் உண்டு. அவர்களுக்குப் பொங்கல் இல்லையா?

  இருக்கிறது என்கிறார் கவியரசர் கண்ணதாசன். குடிசை வீட்டுக் கோமதகமான குழந்தையின் கன்னத்து முத்தத்து இனிப்பை விடவா சர்க்கரைப் பொங்கலும் செங்கரும்பும் இனித்து விடும்?

  பூஞ்சிட்டுக் கன்னங்கள்
  பொன்மணி தீபத்தில்
  பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே
  பொங்கல் பிறந்தாலும்
  தீபம் எரிந்தாலும்
  ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே
  படம் – துலாபாரம்
  பாடியவர் – இசையரசி பி.சுசீலா மற்றும் ஏழிசை வேந்தர் டி.எம்.சௌந்தரராஜன்
  பாடல் – கவியரசர் கண்ணதாசன்
  இசை – டி.தேவராஜன்

  ஏழைகள் கண்ணீரையெல்லாம் துடைக்கும் பொங்கல் பண்டிகைகள் இனிமே ஒவ்வொரு ஆண்டும் வர வேண்டும் என்று வேண்டும்.

  வளமையின் பண்டிகையான பொங்கலின் மற்றொரு வழமை மஞ்சளாகும். கொத்து மஞ்சளை புத்தம் புதிதாய் பறித்து மங்கலப் பொருளாய் வைப்பார்கள். அந்த மஞ்சளையே காய வைத்துப் பொடியாக்கிப் பயன்படுத்துவதும் உண்டு. மஞ்சள் மங்கலமாவது மங்கையில் மனதுக்கினிய வாழ்வில்தானே. அதை நினைத்துதான் காதலில் பொங்கல் வைக்கிறார் வாலி.

  பொங்கலு பொங்கலு வெக்க
  மஞ்சள மஞ்சள எடு
  தங்கச்சி தங்கச்சி தங்கச்சி
  புஞ்சையும் நஞ்சையும் இந்த பூமியும் சாமியும் இனி
  நம் கட்சி நம் கட்சி நம் கட்சி
  பூ பூக்கும் மாசம் தை மாசம்
  ஊரெங்கும் வீசும் பூவாசம்
  படம் – வருஷம் 16
  பாடியவர் – இசையரசி பி.சுசீலா
  பாடல் – வாலிபக் கவிஞர் வாலி
  இசை – இசைஞானி இளையராஜா

  எப்படியான சூழ்நிலையிலும் பொங்கல் கொண்டாட்டம் மகிழ்ச்சியைப் பெருக்கும். அந்த மகிழ்ச்சியை அப்படியே வாலி அவர்கள் வரிகளில் வார்த்துக் கொடுக்க, அத்தோடு இசையைக் கோர்த்துக் கொடுத்திருக்கிறார் இளையராஜா.

  தைப் பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ
  வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியைப் போற்றிச் சொல்லடியோ
  இந்தப் பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் தெய்வமடி
  இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி
  படம் – மகாநதி
  பாடியவர் – கே.எஸ்.சித்ரா
  பாடல் – வாலிபக் கவிஞர் வாலி
  இசை – இசைஞானி இளையராஜா

  இப்படி உழவும் தொழிலும் சிறந்த வேளாண் பெருமக்களின் பொங்கல் திருநாள் இன்றும் இருக்கிறது. எப்படி இருக்கிறது தெரியுமா?

  ஆடுங்கடா என்னச் சுத்தி
  நான் ஐயனாரு வெட்டுகத்தி
  பாடப் போறேன் என்னப் பத்தி
  கேளுங்கடா வாயப் பொத்தி
  கெடா வெட்டிப் பொங்கல் வெச்சா காளியாத்தா பொங்கலடா
  துள்ளிக்கிட்டு பொங்கல் வெச்சா ஜல்லிக்கட்டு பொங்கலடா
  போக்கிரிப் பொங்கல் போக்கிரிப் பொங்கல்
  படம் – போக்கிரி
  பாடியவர் – நவீன்
  பாடல் – கபிலன்
  இசை – மணி சர்மா

  இப்பிடிப் போக்கிரியான பொங்கல் மீண்டும் மறுவாழ்வு பெற்று வேளாண்மை சிறந்து மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று ஆனை கட்டிப் போரடிக்கும் அழகான தமிழகம் உருவாக இறைவனை வேண்டுகிறேன்.

  பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!

  அன்புடன்,
  ஜிரா

  044/365

   
  • kamala chandramani 12:16 pm on January 14, 2013 Permalink | Reply

   அருமையான பதிவு ராகவன். உழவர்கள் வாழ்வு மலர அரசாங்கம் நிறைய செய்யவேண்டும் என்று இறைவனை வணங்குகிறேன். சினிமாப் பாடல்களுடன் இலக்கியத்தைக் கலந்து மிக நல்ல பதிவுகளைத் தரும் உங்களுக்கும், திரு. சொக்கன், மோக்ரீஷ் அனைவருக்கும் நன்றி. பொங்கல் நல் வாழ்த்துகள்.

   • Niranjan 8:07 pm on January 14, 2013 Permalink | Reply

    அருமையான பதிவு 🙂 🙂 பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!

    • GiRa ஜிரா 8:52 pm on January 14, 2013 Permalink

     நன்றி நிரஞ்சன். இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் 🙂

   • amas32 8:38 pm on January 14, 2013 Permalink | Reply

    //பூஞ்சிட்டுக் கன்னங்கள்
    பொன்மணி தீபத்தில்
    பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே
    பொங்கல் பிறந்தாலும்
    தீபம் எரிந்தாலும்
    ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே/

    சாரதா அவர்களின் நடிப்பு அப்படியே கண் முன்னே நிற்கிறது. இதுவே வார்த்தைகள் சிறிது மாறி சோக கீதமாகவும் வரும்.

    வாழ்க்கை ஒரு வட்டம் என்பது உண்மையானால் வேளாண்மை மீண்டும் அதற்குண்டான மேன்மை நிலையை நிச்சயம் அடையும்!

    amas32

    • GiRa ஜிரா 8:53 pm on January 14, 2013 Permalink

     அருமையான பாடல் அது. சாரதாவுக்கு ஊர்வசி பட்டம் வாங்கிக் கொடுத்த படமல்லவா. மலையாளம் தொடங்கி தமிழ், தெலுங்கு என்று இந்தி வரைக்கும் சென்ற படமாயிற்றே.

   • GiRa ஜிரா 8:52 pm on January 14, 2013 Permalink | Reply

    இனிய பொங்கல் வாழ்த்துகள் அம்மா.

    உண்மைதான். உழவருக்கு அரசாங்கம் ஆதரவு தெரிவிக்காமல் போகுமானால் இறைவனே இறங்கி வந்து ஆதரவு தெரிவிக்க வேண்டி வரும். அன்று அரசாங்கமும் அதற்கு ஆதரவாக இருந்தவர்களும் தொழுதுண்டு வாழ வேண்டியவர்கள் ஆவார்கள்.

  • Rajan D. R 11:50 am on January 18, 2013 Permalink | Reply

   மசக்கைக்கு முன்னும் பின்னும் கூட புளிப்பு காரம் இவற்றின் மீது பெண்களுக்கு ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கின்றது. பானிபூரி மீது அவர்கள் கொண்டிருக்கும் மோகத்தை உளவியல் மற்றும் பரினாம வளர்ச்சி பார்வையில் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கின்றது

 • என். சொக்கன் 9:32 am on December 23, 2012 Permalink | Reply  

  கண்ணனின் நிறம் 

  கண்ணனின் நிறம்.

  காதலின் நிறம் பார்த்தோம். கண்ணனின் நிறம் என்ன? பாசுரம் முதல் திரைப்பாடல் வரை கண்ணன் வண்ணம் சொல்லும் வரிகள் ஏராளம். அவன் நீல மேக சியாமள வண்ணன். கருநீலம். கருமை நிறக்கண்ணன். இருட்டின் நிறம். நிலவின்  தேய்கின்ற பருவம் கிருஷ்ண  பட்சம் எனப்படுகிறது.

  தொண்டரடிப்பொடி ஆழ்வாரின், மனதை உருக வைக்கும் பாசுரத்தில்

  காரொளி வண்ணனே

  கண்ணனே கதறுகின்றேன்

  என்று பாடுகிறார். கரிய மேகத்தை போல் வண்ணமா?  கார் முகில் வண்ணன். பாரதியார்  காக்கையின் கரிய நிறம் பார்த்து கண்ணன் நினைவு வந்ததாக பாடுகிறார்.  கண்ணதாசனும் இந்த கரிய நிறத்தையே வழிமொழிகிறார். கோபியர் கொஞ்சும் ரமணனை

  மாபாரதத்தின் கண்ணா மாயக்கலையின் மன்னா

  மாதவா கார்மேக வண்ணா – மதுசூதனா

  வேறு ஒரு பாடலிலும் கரிய நிறத்தையே தொடர்கிறார்

  கண்ணா கருமை நிறக் கண்ணா – உன்னை

  காணாத கண்ணில்லையே
  ஒரு பழைய அழகான தாலாட்டு பாடலில் மருதகாசி நீலத்தை கண்ணன் வண்ணமாக கொள்கிறார். கருப்பு வண்ணம் குழந்தையை மிரளவைக்கும் என்று நினைத்து அவர்  நீலத்தை மட்டும் வைத்துக்கொண்டு மேகத்தை தள்ளிவைக்கிறார்.
  நீல வண்ண கண்ணா வாடா !
  நீ ஒரு முத்தம் தாடா
  வாலி இந்த கருப்பா  நீலமா கருநீலமா என்ற கேள்விக்கு  பட்டிமன்ற நடுவரை போல் ஒரு தீர்ப்பு சொல்கிறார்
  கங்கை கரை மன்னனடி கண்ணன் மலர் கண்ணனடி
  வங்கக்கடல் வண்ணனடி உள்ளம் கவர் கள்வனடி
  வங்கக்கடல் போல் கண்ணன் நிறம் என்றால் வாலி எல்லா தரப்பையும் ஏற்றுக்கொள்கிறார் என்று நினைக்கிறேன்.
  வைரமுத்து கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்பவர். . ஆனாலும் கண்ணன் வண்ணம் பாடாமல் இருக்க முடியுமா? வகையாக கிடைத்தார் ரஜினிகாந்த் – கரு வண்ணம் பற்றி பாடல் எழுத. தில்லானா தில்லானா பாடலில் எழுதிய வரிகள் கண்ணன் நிறம் கூறும்.

  கடல் வண்ணம் வானின் வண்ணம் கருவண்ணம் தானே

  கடல் வானம் காணும்போது உனைக்கண்டேன் நானே

  இன்னொரு பாடலில் அவர் வரிகள்

  வான் போலே வண்ணம் கொண்டு

  வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே

  கடல் வண்ணம், கார்மேக வண்ணம் நீல வண்ணம் என்ற பலரும் சொன்னாலும் வைரமுத்துவின் இன்னொரு கற்பனை அபாரம். கண்ணாமூச்சி ஏனடா என்ற பாடலில்

  பாற்கடலில் ஆடிய பின்னும் உன் வண்ணம் மாறவில்லை இன்னும்

  என் நெஞ்சில் கூடியே நிறம் மாறவா

  என்ற கற்பனை அற்புதம். இதை ராதையும் ஆண்டாளும் மீராவும் பாடிய வரிகளாகவே பார்க்கிறேன்!
  ***
  மோகன கிருஷ்ணன்
  022/365
   
  • தேவா.. 1:40 pm on December 23, 2012 Permalink | Reply

   வண்ணமயாமான ஆராய்ச்சி.

  • niranjanbharathi 3:25 pm on December 23, 2012 Permalink | Reply

   அருமையான பதிவு இது. நம் கவிஞர்களும் எண்ண மயமானவர்கள் மட்டுமல்லர். வண்ணமயமானவர்களும் கூட. ஏனோ இதையெல்லாம் படிக்கும் போது எனக்கு தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ , மனசுல என்ற வாலி அய்யா பாடல் நினைவுக்கு வருகிறது.

  • amas32 (@amas32) 4:53 pm on December 23, 2012 Permalink | Reply

   மோகன கிருஷ்ணன் 🙂 நீங்கள் உங்கள் பெயருக்கு ஏற்ப பாடல் வரிகள் தேர்ந்தெடுத்து அலசி உள்ளீர்கள் 🙂

   கருத்த மேகமே நாடு செழிக்க மழை பொழியும். கார்முகில் வண்ணனே நாம் செழிக்கக் கருணை மழை பொழிவான். கருப்புக்கு நகை போட்டு அழகு பார்க்க வேண்டும் என்பார்கள். அவர்களுக்கு தான் நகை எடுப்பாகத் தெரியும். கருப்பே அழகு காந்தலே ருசி என்ற வசனமும் உண்டு.

   பூணித் தொழுவினில் புக்கு புழுதி அளைந்த பொன்-மேனி என்று பெரியாழ்வார் (நிராட்டல் ) பாடியுள்ளார். மண்ணில் விழுந்து விளையாடி புழுதி படிந்து கண்ணனின் கரிய மேனி தக தகவென மின்னுவது போல தோற்றத்தைத் தருகிறது. அதனால் கருப்புக்கும் ஒரு அழகு உண்டு, நாம் கரிய நிறத்தவரை அன்போடு நோக்கும்பொழுது 🙂

   amas32

  • ஸ்ரீதர் நாராயணன் 8:48 pm on December 27, 2012 Permalink | Reply

   சினிமாப் பாட்டுககளை விடுங்கள். கண்ணன் நிறம் என்று நேரடியாகவே பார்த்துவிடலாம்.

   கருநன் (கருமை நிறத்தவன்) – என்பதே கண்ணனாக மாறியதாக ஒரு வழக்கு உண்டு.

   கிருஷ்ண, ஷ்யாமள, நீளா – எல்லாமே வடமொழியில் கருப்பையே குறிக்கும். குறிப்பாக ‘நீள’ம் என்பது வெளிச்சம் இல்லாமையை, சூண்யத்தைக் கூட உருவகமாக சொல்லலாம்.

   தமிழில் ‘நீளத்தில்’ ள-விற்கு பதிலாக ‘ல’ போலியாக வந்து ‘நீல’மாக மாறி நாம் அதை தனி நிறமாக வழக்கில் கொண்டிருக்கிறோம். உண்மையில் நீலம் என்பது கருமையின் ஒரு கவசம்தான். இன்றும் கூட திரைப்படங்களில் ‘நைட் எஃபெக்ட்’ எடுக்க வேண்டும் என்றால் நீல வடிகட்டிகளைத்தான் (Filters) பயன்படுத்துகிறோம்.

   கதிரவனை வழிபடுவது போலவே நாம் இருளையும் தொடர்ந்து வழிபட்டுக் கொண்டு வந்திருக்கிறோம். கண்ணனும் கருப்பு. இராமனும் கருப்பு. ஏன் நம் தமிழர் பாரம்பரியமான திரௌபதி வழிபாட்டில் கூட திரௌபதி கருப்புதான். மகாபாரதத்தில் அவள் பெயரும் கிருஷ்ணா தான்.

  • Sethuraman 9:16 pm on December 27, 2012 Permalink | Reply

   beautiful 🙂 🙂

  • Kumar tp 9:23 pm on December 27, 2012 Permalink | Reply

   Well written mate. Recent book read abt Kannan is Krishna Key .

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel